தூரம் போகாதே என் மழை மேகமே!! - 59

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



“சரி தங்கமே! நீ போய் சாப்பிட்டு ஓய்வெடு. நான் இதோ வந்து விடுகிறேன். அர்ஜுனைப் பார்த்துவிட்டு வந்துட்ரேன்“ என்று சொல்லிக் கொண்டு அர்ஜுனின் அறைக்குச் சென்றார் சிவராமன்.

“சரிங்க தாத்தா.” என்று சொன்னவள், “நீ தானே… நீ தானே என் நெஞ்சைத் தட்டும் சப்தம்” என்று பாட்டுப் பாடிய வண்ணம் ‘குளிக்கலாமா, இல்லை முகம் மட்டும் கழுவலாமா?’ என்று எண்ணி தன் அறைக்குச் சென்று கதவை மூடி தாளிட்டாள் ஆதிரை.

“மிகவும் உற்சாகமாக இருப்பது போலத் தெரிகிறது” என்று அந்த அறையிலிருந்த மேஜையின் மீது சாய்ந்த வண்ணம் தன் கைகளை தன் உடலுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நின்றவாறு சொல்லி கொண்டு ஆதிரையைக் கூர்மையாகப் பார்த்தான்.

எதிர் பாராமல் அர்ஜுனை பார்த்த ஆதிரை விக்கித்து, “அ…அர்ஜுன்… நீ… நீங்க…. இ..ப்போது இங்க என்ன செய்றீங்க..” என்று திக்கிய வண்ணம் கேட்டவள் ஏனோ அவனை விழி நிமிர்ந்து பார்த்து பேச முடியவில்லை. ஏன் கோமாவிலிருந்து கண் விழித்த நாளிலிருந்தே , அவன் அவளது கணவன் என்பதை அறிந்ததிலிருந்தே அவளுள் அந்த தாக்கம் இருந்தது.

அவளது மனநிலையை அர்ஜுன் அறியாமல், “நான் பல நிமிடங்களாகவே இங்கு தான் இருக்கிறேன்.. அம்மையாரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென்று. தாங்கள்தான் வெகு நேரமாக ஆளே இல்லை.. உற்சாகமாக எங்கோ அலைந்து விட்டு வந்தது போலத் தெரிகிறது. அதுவும் சந்தோஷமாக!” என்று குத்தலான பார்வையுடன் குதர்தமாகவும் கேள்வி கேட்டான் அர்ஜுன். நிமிர்ந்து அவனை பாராததால் ஆதிரைக்கு அவனது மனநிலை புரியாமல் , ‘தாத்தா சொன்னது உண்மையோ பொய்யோ அந்த கதையில் வந்தவையும் ஆதிரையின் பிறவி பலன் பற்றி யோசித்த வண்ணமும் இருந்த ஆதிரையின் உள்ளம் உண்மையிலே உற்சாகமுடன்தான் இருந்தது. அந்த மன நிலையிலே அவனுக்குப் பதிலளித்திட எத்தனித்தாள். அதற்குள் அவள் அருகில் வந்துவிட்டிருந்தான் அர்ஜுன்.

தாத்தா அவனிடம் பீச் சென்றதை ஏற்கனவே சொல்லியிருக்கக் கூடும் என்று எண்ணி, “ஆமாம். நாங்க ஜாலியா பீச் பக்கமா…?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்து விட்டிருந்த அர்ஜுன், ஆதிரையின் கைகள் இரண்டையும் இறுக்கப் பற்றி அவளை உலுக்கிய வண்ணம் “என்னடி சொன்ன. பீச் பக்கமாகவா? அவ்வளவுக்கும் அந்த விஸ்வாவை பிடிக்கு மென்றால் அன்றேஅவனுடன் ஓடிப் போயிருக்க வேண்டியது தானே. ஏன் இந்த பத்னி வேஷம். இப்படி யாருக்கும் தெரியாமல் அவனுடன் ஊர் சுற்றுவதற்கு, நீ அவனுடன் ஓடிப் போயிருப்பதே மேல். எதற்காக இன்னும் என்னிடம் நடிக்கிறாய். எல்லாம் இந்த செவிலிப் பெண் என்னிடம் சொல்லிவிட்டாள். நாளை ஊருக்குப் போவது பற்றிச் சொல்ல உன் அறைக்கு வந்தால், நீ அவனுடன் ஊர் சுற்றப் போயிருக்கிறாய். தினமும் இப்படிதான் செவிலி சொல்லச் சொல்ல கேட்காமல் அவனுடன் வெளியில் போவியாமே.. முன் பிறவியில் என்னை ஏமாற்றியது போதாதென்று இந்த பிறவி எடுத்து வந்தும் என் உயிரை வாங்குகிறாயே. அப்போதாவது திருமணத்திற்கு முன்பே ஏமாற்றினாய். இந்த பிறவியிலோ நமக்குத் திருமணம் ஆன பிறகும் அவனுடன் சுற்றுகிறாய். ஏன் இப்படி என் வாழ்க்கையில் வந்து சித்திரவதை செய்கிறாய்” என்று கத்திய வண்ணம் அவளை கையினால் அடிக்காமலே, வார்த்தைகளால் அடித்து முடிந்த அளவு அவள் மனம் வலிக்கச் செய்தான்.

‘விஸ்வாவா. அவன் எங்கு இங்கு வந்தான். இந்த செவிலிப் பெண் ஏன் இப்படிப் பொய் சொல்ல வேண்டும். இவளும் விஸ்வாவின் ஆளா… என்னையும் அர்ஜுனையும் பிரிக்க என்று எவ்வளவுக்கு கீழிறங்கிச் செயல்பட்டிருக்கிறானா அந்த விஸ்வா. சே… ’ என்று மனதில் ஆதிரை எண்ணி முடிக்கு முன்னரே அர்ஜுனின் ஒவ்வொரு வார்த்தைகளும் செவியில் இடி விழுந்ததுபோல விழுந்து மறைந்தது. ‘யாரென்று தெரியுமுன்னரே என்னைச் சந்தேகித்தவன் தானே இப்போது சந்தேகிப்பதில் என்ன வித்தியாசம். ஏதோ முன் ஜன்மத்தில் ஏமாற்றினேனாமே!, உண்மையில் அப்படி நடந்திருக்குமோ! அதனால்தான் இவன் இந்த பிறவியில் என்னை வதைக்கிறானோ! என்னமோ இனி அர்ஜுனுடன் வாழ்வதென்பது பாகற்காயாய் கசக்கப் போவது நிச்சயம். யாரென்றே தெரியாத அந்த ஊர் மக்களுக்காக என் உணர்வுகளை இறக்கச் செய்வதுதான் வழியோ! தாத்தாவும் சொல்லாமல் சொன்னாரே! என்னால்தான் அந்த ஊருக்கு விடிவு என்று’ எனப்பலவாறு எண்ணிய ஆதிரையின் உதட்டில் விரக்தியினால் உண்டான புன்னகையே அரும்பியது.

அவ்வளவு கத்தியும் பதிலேதும் சொல்லாமல் அவள் புன்னகைப்பது எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல அர்ஜுனின்கோ பத்தை அதிகரித்தது. “என்ன திமிர் உனக்கு!” என்று அவளை அடிக்க கையினை ஓங்கினான். அதற்குள் கதவு தட்டும் சப்தம் கேட்க ஆதிரையை அப்படியே தள்ளிவிட்டு கதவினை நோக்கிச் சென்றான் அர்ஜுன்.

தடுமாறி கீழே விழுந்த ஆதிரையின் கை அங்குப் பழம் நறுக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தி மீது விழுந்து வெட்டுப் பட்டது. வலி தாங்காமல் “ஸ்…” என்று கத்தியவளை ‘அவள் பாசாங்கு செய்கிறாள்’ என்று எண்ணி அர்ஜுன் அவளைத் திரும்பியும் பாராமல் கதவினை திறந்தான்.

கதவைத் தட்டுவது யாரென்று ஏற்கனவே யூகித்திருந்த ஆதிரை, அவசரமாக அறையின் ஓரத்திலிருந்த குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

“அட… அர்ஜுன்… நீ இங்குதான் இருக்கியா? இது தெரியாமல் உன் அறைச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்.” என்று சொல்லிய வண்ணம் அறையினுள் வந்து அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார் சிவராமன்.

அவரை அர்ஜுன் எதிர்பார்க்கவில்லை போலும் “ஆ… ஆமாம் தாத்தா.. ஆதிரையைப் பார்த்துவிட்டுப் போக வந்தேன். அந்த செவிலிப் பெண்ணிற்குப் பணம் கொடுத்து அனுப்பிட்டேன். இனி அவள் அவசியமில்லை அல்லவா! நாளை ஆதிரையை அழைத்துச் செல்ல flight பதிவு செய்துவிட்டேன். நாளை மாலை போலக் கிளம்ப வேண்டும் தாத்தா” என்று எதுவுமே நடக்காததுப் போல கோர்வையாக சொன்னான்.

“ம்ம்… ஆனால் அந்த கழுத்தாரம்…” என்று ஆரம்பித்தவர், ஆதிரையை அந்த அறையில் காணாததைப் பார்த்து ,” ஆமாம் ஆதிரை எங்கே…நாங்க இரண்டுபேரும் கொஞ்ச நேரம் பீச் போயிருந்தோம் . அவள் என்னடா உன்னைப் பார்த்து அப்படி பயப்படுகிறாள். என்னுடன் வெளியில் வரக் கூட இவ்வளவு பயப்படுகிறாள். நான் உன்னிடம் சொல்லிக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகே என்னுடன் வந்தாள். அவளிடம் சந்திர குளிர் குகை பற்றி முழுதும் சொல்லிவிட்டேன். அதனை கேட்டதற்குப் பின் ஆதிரையின் முகத்தில் ஒரு புதுவித உற்சாகம் தெரிந்தது. “ என்று அர்ஜுனின் மனநிலை அறியாமல் சிவராமன் சொல்லிக் கொண்டே போனார் சிவராமன்.

‘என் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கும் ஆதிரையை’ இப்படி தவறாகப் பேசியதை எண்ணிஅர்ஜுன்மனதுள் துவண்டான், அப்படியே “நீங்க இரண்டு பேருமா பீச் போ…போனீங்க” என்று திக்கிக் கேட்டான்அர்ஜுன்.

“ஆமாம்டா.. அந்த செவிலிப் பெண் உன்னிடம் சொல்லவில்லை. அவளிடம் சொல்லி விட்டுத்தானே சென்றோம்” என்று சேர்த்துச் சொன்னார் சிவராமன்.

“செவிலியா..அ.. அது…” என்று அவன் திக்கிக் கொண்டிருக்கும் போதே, ஆதிரை, குளியல் அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

“வாங்க தாத்தா! முகம் கழுவிக் கொண்டிருந்தேன்.” என்று சொல்லிய வண்ணம் தன் தோள் மீது போட்டிருந்த பூத்தூவலைத் துணியினால் முகத்தினை அழுந்த துடைத்த வண்ணம் வந்தாள். அர்ஜுனை மறந்தும் பார்த்தாள் இல்லை. மாறாக அர்ஜுன் ஆதிரையை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

“ஆ… இதோ ஆதிரையே வந்துவிட்டாளே!. வா தங்கமே… இப்படி உட்கார். என்று ஏற்கனவே அர்ஜுன் அமர்ந்திருந்த கட்டிலில் அவன் அருகில் அமரச் சொன்னார். ஒரு நொடி தயங்கிய போதும் ஆதிரை எதுவுமே நடவாததுப் போல அவன் அருகில் அமர்ந்தாள்.

“நாளையே போய் அந்த கழுத்தாரத்தை எடுத்து வந்து விடுகிறீர்களா? அதன் பிறகு இந்திர பிரதேஷ் போவிங்க” என்று கேட்டார் சிவராமன்.

“சரிங்க தாத்தா… நான் போய் எடுத்து வந்துவிடுகிறேன். அப்படியே அங்கு இரு இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டு வரலாம் என்று இருக்கிறேன் தாத்தா.. என் கந்தனையும் ஊர் மக்களையும் பார்த்து பேசிவிட்டு வர வேண்டும்” என்று அர்ஜுனை ஒதுக்கிச் சொன்னாள் ஆதிரை.

“என்னமா.. ஒருமையில பேசுர.. அர்ஜுனும் உன்னுடன் வரட்டும். அவ்வளவு தூரம் உன்னைத் தனியாக அனுப்புவதற்கு இல்லை.” என்று ஆதிரையின் எதிர்ப்பான தலையசைப்பைச் சட்டை செய்யாமல், “அர்ஜுன், ஒரு இரண்டு நாள் அவளுடன் போய்விட்டு வாப்பா.. அந்த கழுத்தாரமுடன் போவது இன்னும் சிறப்பு…. அதனுடன் ஆதிரைக்கும் நீ உடன் இருப்பது அவசியம்.” என்று எதிர்ப்பு சொல்ல முடியாத படி சொல்லி முடித்தார்.

“தாத்தா… அது.. வந்து… “ என்று தயக்கமாகக் குரல் கொடுத்த இருவரையும் ஒதுக்கி காதுகேளாதவர் போல, “சரி எனக்குத் தூக்கம் வருகிறது. எனக்கு ஒதுக்கிய அறையில் சாப்பாடு வரச் சொல்லிவிடு அர்ஜுன். இரண்டு இட்லி போதும்.” என்று சொல்லிய வண்ணம், ‘ என்ன களைப்பு… நம்பி மலையிலிருந்து வருவதற்குள் இடுப்பு போனது..” என்று சொல்லிய வண்ணம் வெளியேறினார்.

அவர் போவதையே பார்த்திருந்த இருவரும் அதற்கு மேல் பேச முடியாமல் ஆதிரை அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். கையில் பட்ட காயத்தை சிவராமனிடம் மறைத்துக் கொண்டு இறுக்கத்துடன் அமர்ந்திருந்த ஆதிரை, அவர் அந்த அறையைவிட்டுச் சென்றதும் வலிதாங்க முடியாமல், கண்ணில் நீர் வழிய தன் காயத்தின் மீதிருந்த துணியினை எடுத்துவிட்டாள். இரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருந்தது. எவ்வளவு இரத்தம் சென்றிருக்குமோ தெரியவில்லை. அதனைத் துடைத்து, அவசரமாகப் போடப்பட்ட துணியினால் ஆன கட்டையும் மீறி இரத்தம் தெரிந்தது. அதனைப் பார்த்த அர்ஜுன் அவசரமாக அவளிடம் ஓடினான்.

ஏற்கனவே ஆதிரையைத் தவறாக எண்ணியதால் ஏற்பட்ட குற்ற உணர்வில் துடிதுடித்துக் கொண்டிருந்த அர்ஜுன், ஆதிரையின் கண்ணீரும் ,முனங்கலும் அவனால் அவள் கையில் ஏற்பட்ட காயமும் மேலும் வேதனை யுண்டாக்கியது. “சாரி… ஆதிரை… உண்மை அறியாமல் என்னென்னமோ பேசிவிட்டேன். அங்கு கத்தி இருந்ததையும் நான் பார்க்கவில்லை. என்னிடம் தாத்தாவுடன் தான் பீச் சென்றேன் என்று ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. பெரிய காயம் போலத் தெரிகிறதே… எல்லாம் என்னால்தான்” என்று அவன் வேதனைப் பட்டான்.

என்னவென்றே தெரியவில்லை, அர்ஜூன் வேதனைப் படுவதும் ஆதிரையால் பொறுக்க முடியவில்லை. தன் வலியை மறைத்து ,” பரவாயில்லை அர்ஜுன். இது எனக்குப் புதிதல்ல. உங்களை வேதனைக்குள்ளாகி கொள்ள வேண்டாம். அதனோடு உங்களுக்கு என்னுடன் ஏலகிரி கிராமத்திற்கு வர விருப்பமில்லை யென்றால் பரவாயில்லை. நானே போய்க் கொள்வேன். எனக்கு train ticket மட்டும் பதிவு செஞ்சி தாங்க. தனித்துப் போவது ஒன்றும் கஷ்டமில்லை. தாத்தாவிற்காக நீங்க வர வேண்டிய அவசியமில்லை” என்று சொல்லி, தன் தனிமை பேயிலிருந்து இத்தனை காலம் காத்திருந்த தன் அண்ணன் மகன் ராஜாவின் நினைவு வந்தது ஆதிரைக்கு.

“எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. நாம் இருவருமே போவோம். நாளையில்லை. ஒரு வாரம்கழித்துசெல்லலாம். உன் கையில் இருக்கும் காயம் சரியாகும் வரை எங்கும் செல்வதற்கில்லை. அதுவரை வேறு செவிலி ஏற்பாடுச் செய்கிறேன்.” என்று எழுந்தான்அர்ஜுன்.

என்னவென்று தெரியாத இனம் புரியாத பயம் சில நாட்களாகவே அவளுள் குடியிருப்பது ஆதிரைக்குத் தெரிந்தது. அதனால் அர்ஜுன் உடன் வருகிறேன் என்பதை வேண்டாம் என்று சொல்லவும் ஆதிரைக்குத் தயக்கமாக இருந்தது. அதனோடு அவளுக்கும் நாளையே செல்ல உடல் ஒத்துழைக்குமென்று தோன்றவில்லை. அதனால் மறுத்துப்பேசாமல் அமைதியாக இருந்தாள்.

ஏற்கனவே ஏற்பட்ட கெட்ட அனுபவத்தால் இனி எந்த செவிலியும் வேண்டாம் என்று நினைத்த ஆதிரை அதற்கு மட்டும் பதிலளிக்கும் வண்ணமாக, “அ..அர்ஜுன். வேறு செவிலி யாரும் வேண்டாம். நானே என்னைபார்த்து கொள்வேன்” என்றாள்.

அவள் சொன்னதன் அர்த்தம் உணர்ந்த அர்ஜுனும் அவளை வற்புறுத்தாமல், “சரி உன் இஷ்டம். “ என்றுவிட்டு அந்த அறையைவிட்டுச் செல்ல எழுந்தான்.

“நான் கொஞ்சம் தூங்க வேண்டும். எனக்கும் இரண்டு இட்லிக்குச் சொல்ல முடியுமா? அதனோடு இந்த மருந்துகளையும் வாங்கி வர முடியுமா? நான் போக முடியும்தான். இருந்தாலும் நீங்க அதற்கும் வேறு அர்த்தம் சொன்னால் என்ன செய்ய முடியும். என் கடமையென்று ஒன்று இருப்பதாகத் தாத்தா சொன்னாரே. அதுவரை என்னை நான் பார்த்துக் கொள்ள வேண்டுமே!. என் கடமை முடிந்ததும் உங்களை விட்டு நான் போய்விடுவேன். அதனால் உங்களுக்கு என்னுடன் இருப்பது ஒரு கட்டாயமில்லை. நீங்களும் இதுபோல மன உலைச்சலுக்கு ஆளாக வேண்டி இருக்காது” என்று சொல்லிய வண்ணம் அவளையும் அறியாமல் கண்ணிலிருந்து நீர் கசிந்து கன்னத்தைக் கடக்க எங்கோ பார்த்த வண்ணம் சொன்னாள் ஆதிரை.

அதற்குப் பதிலாக எதுவும் சொல்லாமல் அவளை ஒரு கூர்மையான பார்வை மட்டுமே பார்த்துவிட்டு அவளிடமிருந்து மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு அறையைவிட்டுச் சென்றுவிட்டான். பிறகு ஆதிரை கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, அவள் கேட்ட மருந்தும் உணவும் அவள் அறைக்கு ஒரு நடுத்தர வயது தக்க பெண் வந்து கொடுத்துவிட்டுச் சென்றாள். அதன் பின் ஆதிரை தூங்கும் வரையும் அர்ஜுன் அந்த அறைக்கு வரவில்லை.

இப்படியே போக ஒரு வாரம் ஓடியது. ஒரு வாரமாக அர்ஜுன் அந்த அறைப் பக்கமே வரவில்லை. மாறாக அந்த புதிய நடுத்தர வயதுப் பெண் ஆதிரைக்குத் தேவையான வற்றைக் கேட்டு உதவினாள். ஓரிரு முறை தாத்தா அறைக்கு வந்துவிட்டு, கையினை பார்த்துவிட்டு, “பார்த்து பழங்களை நறுக்கக் கூடாதாமா.. பார் எவ்வளவு ஆழமான காயம்.” என்று வருத்தப்பட்டுச் சொல்லிவிட்டு, “நான் இந்திர பிரதேஷ் கிளம்பிரேன்மா.. நீங்க அடுத்த வாரம் அமாவாசை நாளுக்குள் வந்து விட பாருங்க.. அர்ஜுனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். நீயும் கவனமுடன் இருமா.. “ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் சிவராமன்.
 
Last edited:
D

[Deleted] admin 4

Guest
neraya vishayangal... atha korvaiya sollanum...athula ella charskum ellam theriyrathu illa... plots are getting unfolded via different characters... atha manasula vachu scenes ezhuthanum... atha proper flowla kondu varanum..

appreciable effort... good going too!! nice! :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top