தூரம் போகாதே என் மழை மேகமே!! - 58

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


“மழைமேகம் பற்றி உங்களுக்கும் தெரியுமா தாத்தா? அது என்ன சித்தரின் மழை மேகம் என்கிறீர்கள்” என்று ஆர்வமாகக் கேட்டாள் ஆதிரை.

“ம்ம்.. சொல்கிறேன் தங்கமே. இன்னும் கதையின் சிறு பகுதியை நான் சொல்லவில்லை. அந்த சித்தர் திகேந்திரர் தன் உயிர் நீர்த்து ரேவதிக்குப் பிள்ளை வரம் கொடுத்தாரம்மா. அந்த ஒரு விஷயத்தை மட்டும் கந்தர்வன் மற்றும் ரேவதியின் திருமணத்திற்கு முன் அவர் சொல்லவில்லை” என்றார் சிவராமன்.

“உயிர் நீங்கியா? ஏன் தாத்தா. அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரியுமா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

அவளின் அவசரமும் ஆர்வமும் புரிபட்ட போதும் சிவராமன் நிதானித்து பதிலுருத்தினார். “பொறுமை தங்கமே. எனக்கு தெரிந்த எல்லாமும் உன்னிடம் சொல்லத்தானே வந்திருக்கிறேன்.” என்றார் சிவராமன்.

அவரின் சொல்லின் உண்மை புரிய ,” sorry தாத்தா. ஏனோ எனக்குள் இனம் புரியாத கவலையாகிப் போனது. நீங்க சொல்லுங்க. முழு கதையும் கேட்டதும் என் கேள்விகளைச் சொல்கிறேன். சரிங்களா?” என்று சின்னப் பிள்ளைப் போலக் கைக்கட்டி தன் வலதுகையினை வாய் மீது வைத்து கொண்டு கேட்டாள் ஆதிரை.

அதனைப் பார்த்ததும், “அது சரி” என்று ஏதோ விட்டடித்தது போலச் சிரித்த சிவராமன் மேலும் பேசினார். “கந்தர்வனின் திருமணத்திற்குப் பின் முல்லை நிலம் சென்றதும், கந்தர்வனும் ரேவதியும் மகிழ்வுடன் வாழ்ந்தனர். அவர்களுக்குத் திருமணம் ஆகி 45 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் திகேந்திரர், அவர்கள் வீடு தேடி வந்தார். அதுவரை பார்வதியின் சிலையைப் பாதுகாக்கக் குகையினை உருவாக்கி கொண்டிருந்திருப்பார் போல. அவர்களை முல்லை நிலம் விட்டு விட்டுச் சென்ற பின் பிறகு அப்போதுதான் அவர் அங்கு வந்தார். வந்தவர், கந்தர்வன் மற்றும் ரேவதி இருவரையும் உடன் அழைத்துச் சென்றார். சென்றவர் ஒரு குகையையும் காட்டினார். அந்த குகை இப்போதும் இந்திரபிரதேஷில் இருக்கிறது. அந்த பார்வதி அம்மனும் அங்கு தான் இருக்கிறாள். அந்த குகை கோவிலின் பெயர் சந்திரகுளிர் ”என்றார் சிவராமன்.

“ஓ…. அந்த சந்திர குளிர் குகையை இப்போதும் அர்ஜுனின் குடும்பம் பராமரிக்கிறதா தாத்தா? அது தான் என் அண்ணி பிறந்ததும் சாபம் விடுப்பெற்றாகிவிட்டதே!. பிறகென்ன? எல்லோரும் ஊரை காலிச் செய்து கொண்டு வெளியுலக சுகங்களை அனுபவிக்கலாமே!” என்றாள் ஆதிரை.

“புரியாமல் பேசுகிறாய்ஆதிரை. அந்த சிலை உரிய இடம் சேரும் வரையோ, அல்லது அந்த குகை அல்லாமல் போகும் வரையோ அதைப் பராமரிப்பது அவர்களின் கடமையம்மா.. அதனோடு அது காடே என்றாலும் பலகாலம் வாழ்ந்த இடத்தைவிட்டு வருவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அதுவசதியற்றதாக என்றாலும். வேறு ஏதோ சொன்னாயே, ஆ…வெளியுலக சுகம். அதெல்லாம் அம்மக்களுக்குத் தேவையே இல்லையம்மா. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கேட்டுண்டதில்லை. அதுப் போலத்தான். அவ்வூர் மக்கள் குறையாது 100 வயது வாழ்வர். எந்த வித கஷ்டமும் உணராமல் சுகமாகவே இறப்பர். அதுப் போதாதா?” என்று அவளுக்குப் பதிலாகக் கேட்டார்.

“ம்ம்… நீங்க சொன்னதும் புரிகிறது தாத்தா.. அந்த ஊரைவிட்டு வரவும் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஊரில் 6 மாதத்தில் வெள்ளம் வருவதாக மழை மேகம் சொன்னதாக சொன்னீங்களே. அந்த மழை மேகம் எப்படி சொன்னது. கனவுகளை தோற்றுவித்தா” என்று தன் அனுபவத்தையே எதிர்பார்த்துக் கேட்டாள் ஆதிரை.

“ம்ம்.. அந்த மழை மேகம் கனவுகளை தோற்றுவிக்காதம்மா.. ஒவ்வொருமுறை அந்த குகைக்குள் போகும் போதும் அந்த மழை மேகம் ஒரு மின்னலின் மூலமாக ஒரு ஓலைச் சுவடியைத் தருவிக்கும் என்று என் மாமா ராஜேந்திர ராஜா சொல்லிக் கேட்டிருக்கிறேன் தங்கமே!. அந்த குகைக்கு நீயும்தானே போகப் போகிறாய். தெரிந்து கொள்வாய். அந்த குகைக்குள் மட்டும்தான் அந்த மழை மேகம் இருக்குமாம். ராஜேந்திரரின் கூற்றுப் படி அந்த மழைமேகம் திகேந்திரரின் சித்து வேளை என்கிறார். திகேந்திரர் இறக்குமுன் அவர் உருவாக்கிய அந்த மழை மேகம் அந்தசந்திரகுளிர் குகைக்குப் பாதுகாப்பு வளையம் போல இருக்கிறதாம். உரியவர் வரும் வரை அது உயிர்ப்புடன் இருக்குமென்று ஒரு ஓலைச் சுவடி மூலமாக அறிந்ததாகச் சொன்னார் ராஜேந்திரர். அது போன்றே ஒரு அதிசய மழை மேகத்தையும் ஒரு புதிரான கரடியையும் நீங்க மறைந்துப்போ ன தீவில் கண்டதாக அர்ஜூன் சொல்லக்கேட்டேன். அதனால்தான் நீயும் ஆர்வமாக அதைப் பற்றிக் கேட்கிறாய். சரி தானே” என்று சிரித்தார் சிவராமன்.

அவர் சொல்லச் சொல்ல வியப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை., “ ஆமாம் தாத்தா” என்று வெட்கித்து புன்னகித்தாள். “ இருந்தும், அந்த மழை மேகத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமா என்று தெரியவில்லை. அதை விடுங்க தாத்தா. நீங்க சொல்லுங்க தாத்தா. அந்த கந்தர்வனையும் ரேவதியையும் அழைத்து சென்ற திகேந்திரர் என்ன சொன்னார்” என்றாள்.

“ம்ம் தொடர்பு இருக்கலாம் தங்கமே. நீயே அதையும் தெரிந்து கொள்வாய். இப்போது கந்தர்வனின் கதைக்கு வரலாம். திகேந்திரர் அவர்களுக்கு அந்த குகையைக் காண்பித்து, தான் இப்போது இறக்கப் போவதாகவும் . என் உயிர் தியாகத்தால் உன் கருப்பை ஒரு உயிரை சுமக்க வலிமை பெரும். எனக்குச் செய்து கொடுத்த சத்திய கடமைகளைக் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அந்த குழந்தையின் பெயரை இந்த மழை மேகம் தரும் ஓலைச் சுவடி மூலம் அறிவீர்கள். என் கடமை இந்த உடலால் இன்றோடு முடிகிறது. இதன் பிறகு உங்கள் கடமை மட்டுமே. அதனோடு ஒரு முக்கிய உண்மை நான் தானாக உங்கள் ஊருக்கு வரவில்லை. உங்கள் கஷ்டம் தீர்க்கவில்லை. எனக்கு அந்த பார்வதி தேவியின் கட்டலை. அதனை நான் நிறைவேற்றினேன். இதை என் கையிலிருந்து வாங்கிக் கொள்ளமா” என்று ஒருசேர சொல்லிக் கொண்டு அவர் கையிலிருந்த ஒரு நீலக்கல் பதித்த கழுத்தாரத்தை ரேவதியிடம் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட போதும் , “ சாமி…உங்கள் உயிர் போய் எங்க குலம் தழைக்க வேண்டுமா.. எங்களுக்கு எங்கள் வாழ்க்கை போதும். உங்க உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டாம்” என்று பெண்மையின் பரிதவிப்பில் சொன்னாள் ரேவதி. கந்தர்வனோ, என்ன சொல்வதென்று புரியாமல் ஸ்தம்பித்து நின்றான்.

“இவ்வாறு நீங்க சொல்ல நேரிடும் என்று நான் அறிவேன் அம்மா. என் பிறவியின் மீதி இருக்கும் ஒரே கடமையான என் அம்மன் பார்வதியை காப்பதைத்தான் உங்களிடம் ஒப்புவித்துவிட்டேனே. அதனோடு 1000 வருடங்களுக்கு என்னால் உயிர் வாழ முடியுமா என்ன? இதில் என் சுயநலனும் இருக்கிறது. என் உயிர் பற்றி கவலை வேண்டாம். நான் இந்த மழை மேகத்தின் மூலமாக உங்களுக்கு அவசியபடும் போது ஓலைச் சுவடியால் பேசுவேன். நான் சித்தன். அதனால் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அம்மா. கந்தர்வா.. மகிழ்வோடு வாழ்வீர்கள்.” என்று ஆசி வழங்கினார்.

கண்ணில் கண்ணிர் தளும்ப, அவர் பாதம் தொட்டு வணங்கினர் இருவரும். அப்போது அவள் கையில் மின்னிய கழுத்தாரத்தைப் பார்த்து, “ இது என்ன சாமி.கழுத்தாரம் போலத் தெரிகிறதே.” என்று கேட்டான் கந்தர்வன்.

“ம்ம்… முக்கியமான ஒன்று. இந்த கழுத்தாரத்தை உன்னைப் பார்க்க வரும் உன் அண்ணன் ரஞ்சிதனிடம் கொடுத்துவிடு. அவன் வீட்டுப் பெண் இந்த கழுத்தாரத்தை அணிந்து கொண்டு தான் இந்த தீவுக்குள் வர வேண்டும். என் உயிர் நீங்கும் போது என் முழு சக்தியும் இந்த கழுத்தாரத்தில்அடங்கிவிடும். அதனால் அவர்கள் குழந்தை உண்டாக என்னைப் போல் யாரும் உயிர் துறக்க வேண்டாம். இந்த கழுத்தாரத்தை உன் அண்ணன் வரும் வரை நீ அணிந்து கொள்ள வேண்டும். இதை முக்கிய கடமையாக மற்ற கடமைகளுடன்சேர்ந்து செய்ய வேண்டும். இப்போது நான் கிளம்புகிறேன். என் உடலை இந்த குகையின் அருகிலே புதைத்துவிட வேண்டும். எந்த அம்மாவாசையன்றும் இந்த தீவுக்கு நீங்க வரலாம். ஆனால் தை மாதம் மட்டும் கட்டாயம் வர வேண்டும். அமாவாசையல்லாத நாட்களில் இந்த தீவினை அடைய வாய்ப்பில்லை. உரியவர் வரும் போது. அவர் மட்டுமே எல்லா நாட்களிலும் இங்கு வரமுடியும். நான் கிளம்புகிறேன்” என்று சொல்லி உயிர் நீக்கிக் கொண்டார் திகேந்திரர்.

“அப்படியே செய்கிறோம். சாமி” என்றனர் கணவன் மனைவி இருவரும்.

அவ்வளவுதான்ம்மா. எனக்குத் தெரிந்த வரை. உன்னிடம் இப்போது ஒரு ஓலைச் சுவடிக் கொடுத்தேனே. அது ராஜேந்திர ராஜா. இறக்கும் தருவாயில் உன்னிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதனை வேறு யாரும் படிக்க அனுமதியில்லை என்றும். நீதான் அந்த திகேந்திரர் சொன்ன உரியவர் என்றும், உன்னால்தான் அந்த பார்வதி உரிய இடம் சேர்வாள் என்றும் சொன்னார். அதனாலே நாங்க எல்லோரும் உன்னை பொக்கிஷமாகக் காக்கிறோம்” என்றார் சிவராமன்.

அவர் சொன்ன ஒவ்வொன்றையும் உள்வாங்கிக் கொண்ட ஆதிரை சில நொடி புல்லரித்து நின்றாள். “ம்ம் புரிகிறது தாத்தா. ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமாக என்னிடம் இருக்கும் அந்த நீலக்கல் கழுத்தாரத்தைதான் அந்த திகேந்திர சித்தர் ரேவதியிடம் கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறது “ என்றாள் ஆதிரை.

“ஆமாமா. அரவிந்த் கூடச் சொன்னான். அதை அணிந்து கொண்டுதான் நீ அந்த இந்திரபிரதேஷுக்கு செல்ல வேண்டும்” என்று முடித்தார்.

“ம்ம்ம்… அதை நீங்க சொல்லாமலே உணர்ந்தேன் தாத்தா. அது இப்போது ஏலகிரி மலைக்கிராமத்தில் அல்லவா இருக்கிறது.” அந்த கழுத்தாரத்தை தன் அம்மா எனக்குக் கொடுக்கச் சொன்னதாக தன் அண்ணன் அரவிந்த் சொன்னது நினைவு வர ஆதிரைக்கு வேறொரு கேள்வி உதித்தது. அதை கேட்கு முன்னரே.

“அந்தகழுத்தாரத்தை போய் எடுத்து வரவேண்டும்” என்றார் சிவராமன்.

“ம்ம் சரி தாத்தா. எனக்கு இன்னும் ஒன்று புரியவில்லை தாத்தா. நீங்க என் அப்பா வழித் தாத்தா என்றீர்கள். எங்களைப் பார்க்க ஒருமுறை கூட வரவில்லை. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.” என்று கேட்டாள் ஆதிரை.

“ அது என்னால் நடந்த பிழையம்மா. அர்ஜுனின் அம்மா சுமத்ராவிற்கு அவள் என் மகள் என்ற விஷயமும் இன்னும் தெரியாது. என் தங்கை சிவசக்திக்கும் ராஜேந்திர ராஜாவிற்கு மட்டும்தான் தெரியும். அந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன். இப்போது வெகு நேரம் ஆகிவிட்டது. பார் சுற்றி யாருமில்லை. கும்மிருட்டு ஆகிவிட்டது. “ என்று சைகையில் சொல்லி கிளம்பினார் சிவராமன்.

அவர் சொன்னதும் தான் சுற்றுமுற்றும் பார்த்த ஆதிரைக்குத் திக்கென்று இருந்தது. ஏனோ அந்த இருட்டு ஆதிரையின் உள்ளத்தில் பயத்தினால் உண்டான குளிர் பரப்பியது. “ஆ… ஆமாம் தாத்தா.. வாங்கப்போகலாம்” என்று விரைவாக நடந்தாள்.

அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல, அர்ஜுன் அவள் அறைக்கு வந்து இருப்புக் கொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். தன் அறைப் பக்கமே வாராமல் இருந்த அர்ஜுன், இந்த இரவில் அவள் அறையில் எதிர்பாராமல் ஒரு நொடி விக்கித்து நின்றாள்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top