தூரம் போகாதே என் மழை மேகமே!! - 57

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1

“ஓ.. சரிங்க தாத்தா..” என்று வசதியாக sofa -வில் அமர்ந்து கொண்டு கேட்டாள் ஆதிரை.

“ம்ம்.. சொல்கிறேன். இங்கு இல்லை. கடற்கரையில். நீ அறையிலே அடைந்திருப்பது உனக்கும் சலிப்பாக இருக்குமல்லவா. அதனால் வா அப்படியே கடற்கரைக்குச் சென்று கொண்டே பேசலாம்.” என்று அவளை அழைத்தார்.

“ஆ… ஆனால் தாத்தா.. அவர் வெளியில் எங்கும் செல்லக் கூடாது என்று உறுதியாகச் சொல்லிருக்கிறாரே. ஏற்கனவே விஸ்வாவின் விஷயமாகக் கோபமாக இருக்கிறாரோ என்னமோ. என்னைப் பார்க்கக் கூட கஞ்சம் பண்ணிக் கொண்டு இங்கு வராமல் ஒதுக்குகிறார்.அவருக்குத் தெரியாமல் சென்றால் எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது . அதுதான் யோசித்தேன்.” என்றாள் ஆதிரை.

“ஓ… ஓ.. அப்படியா சங்கதி. உன்னைப் பார்க்கக் கூட வராமல் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு. வெதுவெதுப்பாக இருக்கிற இந்த மாலை நேரத்தில் கடல்நோக்கி கொஞ்சம் நேரம் நடந்து விட்டுவரதுல என்ன இருக்கப் போகிறது. நான் தான் உடன் இருக்கிறேனே. நான் அர்ஜுனிடம் பேசிக் கொள்கிறேன். நீ தயாராகு. இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டுச் சென்றார் சிவராமன்.

“ஐ.. சரி தாத்தா… 10 நிமிடம்” என்று துள்ளிக் குதித்துக் கொண்டு முகம் கழுவிவிட்டு தயாரானாள் ஆதிரை.

விரைவிலே மீண்டும் வந்த சிவராமன், “ வாமா போகலாம்” என்று சொல்லிய வண்ணம் உடன் நடந்தார்.

கடல் மணலை அடையும் வரை பேசாமல், போகும் வழியிலும், சாலை நெரிசலிலும் கவனமுடன் நடந்து சென்றனர்.

பின் சிவராமன் சொல்ல தொடங்கினார். “எதுவரை சொல்லியிருந்தேன் தங்கமே. சித்தர் திகேந்திரர், கந்தர்வனின் ஊருக்கு வந்த வரை சொல்லிவிட்டேன் தானே” என்று கேட்டார் சிவராமன்.

“ ஆமாம் தாத்தா, ரேவதியின் அண்ணன் ரஞ்சிதன் கந்தர்வனுக்கு அவன் தங்கையை மணம் முடிந்து வைக்க விரும்பாமல் இருந்ததும். ரேவதி பிடிவாதமாக அவரை மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றது வரையும் சொல்லியிருந்தீர்கள்.அப்பறம் என்ன ஆனது தாத்தா” என்று ஆர்வம் மேலிடக் கதையிலே கவனமாகக் கேட்டாள் ஆதிரை.

“ம்ம்… பரவாயில்லையே. எல்லாம் நினைவில் வைத்திருக்கிறாய். அதன் பிறகு சொல்கிறேன் கேள். முதலில் இங்கு உட்காரலாம். சில்லென்று அடிக்கும் இயற்கையான காற்று இதமாக இருக்கிறது.” என்று சொல்ல ஆரம்பித்தார்.

“ஆமாம் தாத்தா.. இவ்வளவு நாள் மூச்சு முட்டுவது போல இருந்தது. இப்போது நன்றாக இருக்கிறது” என்று உடன் சேர்ந்து அமர்ந்தாள் ஆதிரை.

புன்னகித்த சிவராமன் “ம்ம்… சரி நாம் சித்தரைப் பற்றிப் பேசுவோம்.

சித்தரைப் பற்றி கேள்வியுற்று, ரஞ்சதன் கந்தர்வனையும் ,ரேவதியையும் மற்றும் கந்தர்வனின் தந்தையான அப்போதைய அரசரையும் , சில அரசவை புலவர்களையும் அழைத்துக் கொண்டு திகேந்திரரைப் பார்க்கச் சென்றனர். இந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊர் மக்களும் ‘எதாவது நல்லது நம் அரசர் வம்சத்துக்கு நிகழ்ந்து விடாதா’ என்று பரிதவித்து ஆர்வமுடன் புடை சூழ அரசவை மக்களுடன் திகேந்திரரைப் பார்க்கச் சென்றனர்.

ரஞ்சதன் சொல்லாமலே திகேந்திரர் பேச ஆரம்பித்தார். “என்ன.. பிள்ளை வரம் வேண்டுமா?” என்று ரேவதியையும் கந்தர்வனையும் பார்த்துக் கேட்டார்.

திகைத்த மக்கள், அவர்களுக்குள் சலசலக்கப் பேசிக் கொண்டனர். ‘ஆம்’என்பது போலத் தலையைத் தாழ்த்தி வணங்கிவிட்டு தலை அசைத்தனர்.

அதற்கு புன்னகித்த திகேந்திரர் தொடர்ந்து பேசினார். “ம்ம்.. ஒரு பெண்ணின் சாபம் இவரது முகத்திலும் இவரது மகன் முகத்திலும் தெரிகிறது. அது போக இன்னும் குறைந்தது 20 வம்சங்கள் நீங்கள் தத்தெடுத்துத் தலையெடுக்க வேண்டும். இடையில் விட்டால் உங்கள் வம்சம் வாழ வழியில்லை. அதனோடு உங்கவம்சம் அழிந்தால் இந்த ஊர் மக்கள் அடிமைகள் ஆக்கப்பட வாய்ப்பிருப்பது தெரிகிறது” என்று புதிராகப் பேசினார் சித்தர்.

“ஐயோ.. என்ன சொல்கிறீர்கள் சாமி..எங்க முன்னவர் அறியாமல் செய்த தவற்றுக்கு எங்களைத் தண்டித்தது போதாதென்று, என் ஊர் மக்களையும் தண்டிப்பது சாத்தியமாகுமா? ” என்று கதறிவிட்டார் கந்தர்வனின் தந்தை.

“ம்ம்.. விதி வலிமையானது அரசரே. சில சமயங்களில் என்ன தான் நாம் கனித்து சில செயல்களைச் செயல் படுத்தினாலும் நினைப்பது போல நடப்பதற்கில்லையே. சிலர் சிலவற்றைத் தியாகம் செய்து சில கடமைகளை சிலகாலங்களுக்குக் கடைப் பிடித்து வந்தால் எல்லாம் சரியாக வாய்பிருக்கு. கடமைகள் ஒவ்வொருவருடைய தேவைக்கு ஏற்ப மாறக்கூடியதும் கூட ” என்று பொறுமையாகச் சொன்னார் திகேந்திரர்.

“என்ன சாமி. என் ராஜாவுக்காக நாங்க எதுவேண்டுமானாலும் செய்வோம். என்ன கடமை செய்ய வேண்டும். என்ன தியாக செய்ய வேண்டுமென்று மாறி மாறி ஊர் மக்கள் கேள்விக் கேட்டனர்.

இவை எல்லாவற்றிருக்கும் மாறாக தன் தங்கையை மட்டுமே கவலையாக ரஞ்சிதன் திகேந்திரரிடம் வேறு பேசினார். “ ஒரு நிமிடம் எல்லோரும் அமைதியாக இருங்க. நான் ஒன்றுமட்டும் கேட்க வேண்டும். ” என்று இடைவெட்டி ரஞ்சிதன், “சாமி. இவள் என் தங்கை ரேவதி.” என்று சொல்ல ரேவதி திகேந்திரரின் காலில் விழுந்து வணங்கச் சென்றார்.

அவளைத் தடுத்து நிறுத்தி, ‘தன் கையிலிருந்த பார்வதியின் சிலையை மட்டும் தொட்டு வணங்கிவிட்டு விளக்கின் ஒளியை தொட்டு வணங்கிக் கொள்ளமா’ என்றார் திகேந்திரர். அவளும் அதையே செய்தார்.

“இவள் இந்த ராஜா வம்சத்தின் சாபம் அறியாமல் இந்த இளவரசரை விரும்பிவிட்டாள். வேறு யாரையும் மணக்க மனமற்று நிற்கிறாள். ஆனால் எனக்கு இருப்பது இவள் மட்டும்தான்.நாங்க ஊர் ஊராக சென்று நடனமும் கலை நிகழ்ச்சிகளும் செய்து மக்களை மகிழ்விப்பவர்கள்.எங்க தாய் தந்தையர் வேறொரு ஊரில் கலை நிகழ்ச்சியின் போது தீ விபத்தில் எதிர் பாராத விதமாக இறந்து போயினர். எனக்கு இருக்கும் ஒரே சொந்தமான என் தங்கைக்கு தொப்புள்கொடி உறவாக ஒரு குழந்தையாவது வேண்டும். அவள் எந்தவித ஆடம்பரமோ, சுகமோ விரும்பக்கூடிய பெண்ணல்ல. கந்தர்வன் இளவரசன் என்று அறியும்ன்னரே விரும்பிவிட்டாள். அவளுக்கு அன்பான கணவனும், ஒன்றே ஒன்று என்றாலும் ஒரு குழந்தையும் பிறக்க வேண்டும் என் ஆசை. 18 வயதுகொண்ட போதும் அவள் ஒரு சிறுப் பிள்ளை. பிடிவாதமும் அதிகம் கொண்டு கந்தர்வ இளவரசரையே மணப்பேன் என்கிறாள். என் ஆசையும் அவள் ஆசையும் நிறைவேற எதாவது வழிசெய்யுங்கள் சாமி. அதற்கு பிரதிகடனாக நான் எதுவும் செய்யக் கடமைப் பட்டிருப்பேன். அதற்கும் சேர்த்து வழி வகைச் சொல்லுங்க சாமி” என்று உணர்ச்சி தளும்பப் பேசினார் ரஞ்சிதன்.

“அண்ணா…” என்று சிறிதே நெகிழ்வுற்று ரஞ்சதனின் கைகளைப் பற்றிக் கொண்டு உணர்ச்சி வசப்பட்டாள் ரேவதி. இவர்களின் பாசத்தைக் கண்ணுற்ற ஊர் மக்களின் உள்ளத்திலும் ஈரம் பிறந்தது போல உணர்ச்சி வசப்பட்டனர்.

இதனை அமைதியான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த திகேந்திரர், “ம்ம்… புரிகிறது. எனக்கு சில நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள். என்ன செய்தால் இதனை மாற்றி அமைக்க முடியுமென்று சித்திக்கிறேன்” என்று கண்களை மூடி அமர்ந்திருந்தார் திகேந்திரர்.

சில நொடிகள் என்று தொடங்கி, சில மணி நேரங்கள் கழித்து கண்விழித்துப் பார்த்தார் திகேந்திரர். மக்கள் கூட்டம் நேரம் ஆகுவதை உணர்ந்து எல்லோரும் அந்த மரத்தின் அடியே அமர்ந்து கொண்டிருந்தனர். திகேந்திரர் கண்விழித்ததைப் பார்த்ததும், எல்லோரும் ஆர்ப்பரித்து எழுந்து நின்றனர். “மகனே இங்கு வா” என்று மக்கள் கூட்டத்திலிருந்த ஒருவரை அழைத்து, அரசரின் முன் நிறுத்தினார் திகேந்திரசித்தர்.

“அரசே! ஆழ்ந்த தியானத்தின் பின் நடந்ததை ஓரளவு சரிசெய்ய ஒரு வழி இருக்கு. நீங்களும், இவர்களும் சில கடமைகளைச் செய்ய நேரிடும். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு உங்களால் செய்ய முடியும் என்றால் சொல்லுங்க.. மேலும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்” என்று கந்தர்வனின் தந்தையையும், ரேவதி,ரஞ்சிதன் மற்றும் கந்தர்வனைப் பார்த்துப் பேசலானார் திகேந்திரர்.

“சரிங்க சாமி. எனக்கு என் மகனும் இந்த ஊர் மக்களும் நலமுடன் இருந்தால் அதுவே போதும் எதுவேண்டுமென்றாலும் நான் செய்யத் தயார்.” என்று ஆர்வமுடன் கேட்டார் அரசர்.

அதற்கு புன்னகித்த சித்தர், “அரசே.. முதலில் நீங்க ராஜ்ஜியம் துறக்க வேண்டும்.” என்றார் .

ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றது அரசர் மட்டுமல்ல அந்த ஊர் மக்களும்தான். பேசும் எண்ணமற்று அங்கு அமைதி நிலவியது ஒரு நொடியே பின் ஊர் மக்கள் அவர்களுக்குள் சலசலந்தனர்.

அதனைக் கேட்ட அரசர் தனக்குப் பின் நின்றிருந்த ஊர்மக்களைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தார், தன் மகனையும் ஒரு பார்வை பார்த்தார். பின் , “ம்ம். ஆனால் என் மக்களை நான் ராஜ்ஜியம் துறந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்” என்று கவலையுடன் கேட்டார்.

“ம்ம்.. இதோ இவரிடம்தான் நீங்க ராஜ்ஜியத்தைத் தானமாகக் கொடுத்துவிட்டுச் செல்லப் போகிறீர்கள்” என்று முன்பு மக்களுள் ஒருவனாக இருந்த அந்த மனிதனைக் காண்பித்துச் சொன்னார் சித்தர்.

மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. புரியாமல் விழித்த போது, “சாமி எல்லாம் இருக்கட்டும். அது ஏன் என் மகனை அரசராக்க வேண்டும்?” என்று கேட்டார் கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர்.

அதற்கு மீண்டும் சாந்தமான அந்த புன்னகையை உதிர்த்துச் சொன்னார் திகேந்திரர், “ நீங்கதான் கந்தர்வனின் முன்னோர்களுக்குச் சாபமிட்ட பெண்வம்சத்தைச் சேர்ந்தவர்கள். உங்களுக்கு ராஜ்ஜியத்தை தானமாகக் கொடுப்பதன் மூலம் சாபத்தின் வலிமையைப் பாதியாகக் குறைக்கலாம். அதனால் அரசரே உங்களுக்குச் சம்மதமா என்று நீங்க சொன்னால் அடுத்ததைப் பற்றிப் பேசலாம்” என்று அமர்த்தலாகச் சொன்னார்.

அதனைக் கேட்ட மக்கள். “ஆமாம்.. ஆமாம். இவர்கள் வம்சம்தான்..எனக்குகூட மறந்திருந்தது. இந்த சித்தர் சரியாக சொல்லி விட்டாரே” என்று வியப்புற்றார் கூட்டத்தில் முதியவர்.

சித்தர் தனது பதிலாக காத்திருப்பது புரிய ஒரு பார்வை கந்தர்வனைப் பார்த்தார். கந்தர்வன் ரேவதியை ஒருமுறை பார்த்துவிட்டு, தன் தந்தைக்கு இசைவாக ஒரு தலை அசைத்தார். உடனே, “சம்மதம் சாமி. ஒரே ஒரு நிபந்தனை. இவரும் இவர் வம்சத்தவர்களும் எனக்கு என் மக்களை மகிழ்வுடன் பார்த்துக் கொள்வார்கள் என்று சத்தியம் செய்ய வேண்டும். அதன் பின் நீங்க சொல்லும் நேரத்தில் அவருக்கு இந்த ராஜ்ஜியத்தை தானமாகத் தர எனக்கு எந்த வித தடையுமில்லை” என்று கம்பீரம் குறையாத குரலில் சொல்லி முடித்தார் அரசர்.

“ம்ம்.. நல்லது. அடுத்து , அரசே நீங்களும் உங்களுடன் வர விரும்புபவர்களும் , கந்தர்வனும் , ரேவதியும் மற்றும் ரஞ்சிதனும் இந்த மருத நிலத்தை விட்டு ,, முல்லை நிலத்துக்கு என்னுடன் வர வேண்டும். காட்டு வாழ்க்கை கடினமாக இருக்கலாம். ஆனால் அதுவும் சாபவிமோசனத்தில் ஒரு பகுதியே… அதனோடு அந்த காட்டிற்குள் சென்ற பின் ,ரஞ்சிதத்தைத் தவிர வேறு யாரும் காலம் கனியும் வரை வெளியில் செல்லகூடாது. “என்று பூடகமாகச் சொன்னார் சித்தர்.

ஒருவருக் கொருவர் பார்த்துக் கொண்டு சம்மதம் என்று ஒரு மிதமாக சொன்னர்.

“ம்ம்… அடுத்து ரேவதியின் கடமை. இங்கேவாமா” என்று ரேவதியை அழைத்தார். அருகில் சென்ற ரேவதி பணிவுடன் மீண்டும் ஒருமுறை வணங்கி நின்றாள். அதுவரை அமர்ந்திருந்த சித்தர், “எழுந்து நின்று , இந்த சிலையை என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளமா” என்றார்.

தயக்கமேதுமின்றி கையில் அதை வாங்கினாள் ரேவதி. அதனை ஒரு வித கூர்மையான பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த சித்தர். அவளது வலதுக் கையை நீட்டச் செய்து அதில் தன் கையிலிருந்த விளக்கினை கொடுத்தார். அதை ஏந்திய வண்ணம் நின்ற ரேவதியைப் பார்த்து பெருமிதமுற்றார் சித்தர்.

“நல்ல வேளையாகப் பார்வதி தேவியின் கருணை இந்தப் பெண்ணுக்கு இருக்கிறது. இந்த பார்வதி சிலை. அபூர்வமான உலோகத்தால் செய்தது. மிக ஒரு சிலரால் மட்டுமே தொடக்கூடிய சக்தி இருக்கும். அவர்கள் உடலில் அதற்கான ஆக்கப்பூர்வமான மின்னலைகள் இருக்க வேண்டும். அது இவளிடம் இருக்கிறது. இவள் வம்சத்திலிருந்தவர்களுக்கும், பிறப்பவர்களுக்கும் இந்த மின்னலை இருக்கும் அதனால் இந்த பார்வதியின் அனுக்கிரகம் உன் வம்ச பெண் பிள்ளைகளுக்கு இருக்கும். அதனால் குழந்தை பாக்கியம் பெறுவாய். “ என்று மகிழ்வுடன் ரேவதியின் தலையில் கையினை வைத்தார் சித்தர்.

பின் “இவள் திருமணம் முடிந்தபின், அரசரே நீங்க ராஜ்ஜியத்தை இவருக்கு தானம் செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளை நான் உடன் இருந்து செய்து கொடுக்கிறேன். திருமணம் முடிந்ததும் ரேவதி , பார்வதியம்மனை இவ்வாறு கையில் ஏந்திய வண்ணம் ரேவதியும் ,கந்தர்வனும் மற்றும் முல்லை நிலத்திற்கு வர விரும்புபவர்களும் என்னுடன் வர வேண்டும். இதில் ரஞ்சிதன் தன் தங்கையை முல்லையில் விட்டுவிட்டு அவன் மருத நிலத்திற்கு வந்துவிட வேண்டும். இவள் திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குப் பின் ரஞ்சிதன் மீண்டும் தன் தங்கையைப் பார்க்க இங்கு வேண்டும். ரேவதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கும். அவனுக்கு இந்திரன் என முடியும்படி பேரிட வேண்டும். பின் மீண்டும் ரஞ்சிதன் மருதநிலப்பக்கம் வந்து விரும்பும் பெண்ணை மணந்து மகிழ்வுடன் வாழலாம். இதில் ஒரு முக்கிய விசயம்,ரஞ்சிதனின் வம்ச பெண்களை மட்டுமே ரேவதியின் வம்ச ஆண் வாரிசுகளுக்கு மணம் முடிக்க வேண்டும். அதாவது ரஞ்சிததின் மகளைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே ரேவதியின் மகனுக்கு வம்சம் தழைக்கும். “ என்று கண்ணுற்றது போல ஆருடம் சொல்லி முடித்தார் திகேந்திரர்.

இதனைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர். “எனக்கு இதில் சம்மதம் சாமி. என் தங்கையின் வாழ்க்கை அன்பும் , கனிவும் நிறைந்ததாக மகிழ்வுடன் இருக்க வேண்டும். காட்டு வாழ்க்கை அவளுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் அவள் கந்தர்வனின் மீது வைத்திருக்கும் அன்பு அனைத்தையும் மாற்றி அவளுக்கு ஏற்ப இருக்கும் சூழலையும் மகிழ்வாக்கிக் கொள்வாள் என்று எனக்குத் தெரியும். அதனால் தொடர்ந்து ஏற்பாடுகள் செய்யுங்க. அரசே நீங்களும் கந்தர்வனும்தான் மேலும் என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க வேண்டும்” என்று பொதுவாகப் பேசி முடித்தான் ரஞ்சதன்.

“புரிகிறது தம்பி. சாமி இனி நீங்க தான் சொல்ல வேண்டும். நீங்க சொல்லும்படி செய்கிறோம்.”அடுத்துச் செய்வதற்கு விரைவு படுத்தினார் அரசர்.

“இன்னும் ஒன்று இருக்கிறது.கந்தர்வா இது உன்னுடைய கடமை. இந்த பார்வதியின் சிலையையும் விளக்கினையும் நான் உடன் வந்து ஒரு குகையில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு வருவேன்.உரியக்காலம் வரும் போது உங்க குடும்பம் என் பார்வதி அம்மனையும் இந்த விளக்கினையும் பராமரிக்க வேண்டும். அதுவரை ஒவ்வொரு தை மாதமும் அமாவாசை நாளன்று பார்வதி அம்மனுக்கு உன் குடும்பத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாகப் பூஜை செய்ய வேண்டும்.உங்கவம்சத்தில் ஒவ்வொரு திருமணமும் , இந்த பார்வதியின் சிலையையும் விளக்கினையும் மணமகளின் கைகளில் ஏந்திய வண்ணமுமே நிகழ வேண்டும்.இதனைக் கவனமாகக் கடைப்பிடிக்கச் செய்வது உன்னுடைய கடமை. எப்போது உங்கவம்சத்தில் முதலில் ஆண் அல்லாமல் பெண் குழந்தை பிறக்கிறதோ, அதனோடு உங்களின் சாபம் முழுதும் விமோசனம் அடையப் பெற்றது. அடுத்த தலைமுறையிலிருந்து இந்த பார்வதியினை உரிய இடம் சேர்க்க கூடியவர்கள் பிறந்து விரைவிலே வந்து இதனை உரிய இடம் சேர்ப்பர். அதுவரை இதனைப் பாதுகாப்பது உ்ங்கள் கடமை” என்று கோர்வையாகச் சொல்லி முடித்தார்.

அவர் சொல்வதை ஒன்றுவிடாமல் உள் வாங்கிய கந்தர்வன், “அப்படியே ஆகட்டும் சாமி” என்று விடிவுகாலம் பிறக்க இருப்பதாக எண்ணி லேசாக மகிழ்வுற்றான் கந்தர்வன். அவனது மகிழ்ச்சி உடன் இருந்த ரேவதியையும் தொற்றிக் கொள்ள அவளும் கைகளில் விளக்கை ஏந்திய வண்ணமே கந்தர்வனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெட்கித்தாள்.

அதன்பின் திகேந்திரர் சொன்னபடி எல்லாம் இனிதே நடந்து முடிந்து ரேவதியும் கந்தர்வனும் இன்னும் உடன் விரும்பிய ஊர் மக்களுள் சிலரும் காட்டுக்குச் சென்றனர். அந்த காடுதான் இந்திர பிரதேஷ் என்று அர்ஜுன் சொன்னது ஆதிரை.” என்று அவர் ராஜேந்திர ராஜாவிடம் கேள்வியுற்ற கதையைச் சொல்லி முடித்தார் சிவராமன்.

“ஓ… கேட்பதற்கே அற்புதமாக இருக்கிறது தாத்தா. அப்போ.. அந்த முதல் பெண் குழந்தைதான் என் அண்ணி. அதனால் அவர்கள் வம்சம் இனி எங்கு வேண்டுமென்றாலும் போகலாம்.. இனி அந்த காட்டுக்குள் இருக்க வேண்டியதில்லை. இல்லையா தாத்தா” என்று ஏற்கனவே அமர்ந்திருந்த மணல் பரப்பில் கைகளை துழாவிய வண்ணம் கேட்டாள் ஆதிரை.

“ம்ம்.. உண்மைதான் தங்கமே.. இருக்க நினைத்தாலும் அந்த காட்டுக்குள் அடுத்த தைமாதத்திற்குப் பிறகு இருக்க முடியாது. ஏனென்றால் இன்னும் 6 மாதத்திற்குள் வெள்ளம் வரவிருக்கிறது. அதற்குள் ஊர் மக்களை வெளியேற்ற என் தங்கை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி முடித்தார்.

“என்ன? வெள்ளமா… இது எப்படி உங்களுக்கு முன் கூட்டியே தெரியும் தாத்தா.? இதுவும் அந்த சித்தரின் ஆருடமா” என்று ஆர்வம் மேலிடக் கேட்டாள்.

“அது சித்தரின் மழையின் மேகத்தால் தங்கமே. ” என்றார் சிவராமன்.

“மழை மேகமென்றதும் தீவிலும் மழை மேகம்தான் அவர்களை அவ்வளவுக்கும் பாடுபடுத்தியது. ‘இறுதியாக அவளுக்கு நினைவிருந்தது கூட அந்த மழைமேகம் அவள் அருகில் வருவதற்கு முன்தானே. ‘ என்று நினைத்தாள்.

“மழைமேகம் பற்றி உங்களுக்கும் தெரியுமா தாத்தா?” என்று கேட்டாள் ஆதிரை.