தூரம் போகாதே என் மழை மேகமே!! - 56

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
“அ…அர்ஜுன்… நீ… நீ… எ ” என்று விஸ்வா பயத்தில் திக்கி அர்ஜுனிடம் கேட்குமுன்னே தரையில் விழுந்திருந்தான்.

சப்தம் கேட்டு நிமிர்ந்த ஆதிரை திரும்பிப் பார்த்தாள். அர்ஜுனின் கை விரல்கள் விஸ்வாவின் கன்னத்தில் பட்டு அதன் நகலை உருவாக்கியிருந்தது. கன்னத்தில் விழுந்த அறையால் தடுமாறி விஸ்வா கீழே விழுந்திருந்தான்.

விஸ்வாவின் மீது வருத்தம் இருந்த போதும் ஏதோ குழப்பத்தில் அவன் அப்படி நடந்து கொண்டதாகவே ஆதிரை எண்ணினாள். அதனால் அர்ஜுன் விஸ்வாவை வேறேதும் செய்துவிடு முன் விஸ்வாவிடம் சமாதானமாக பேசி இந்த அறையைவிட்டு வெளியில் அனுப்பிட நினைத்து, “விஸ்வா…” என்று அவன் அருகில் சென்றிட அர்ஜுனிடமிருந்து விலகி விஸ்வாவை நோக்கிச் சென்றிட முயன்றாள் ஆதிரை. ஆனால் அர்ஜுன் , அவள் எண்ணத்தை ஏற்கனவே படித்தவனாக ஆதிரையை அவன் கை வளைவிலிருந்து விடுவித்தான் இல்லை.

அர்ஜுன் அவளைத் தடுப்பதுஆதிரைக்குப் புரியாமல் இல்லை. அவனை மீறி எதுவும் செய்ய முடியாமல் திரும்பி அர்ஜுனை பார்த்தாள். அவனது பார்வை மறந்தும் ஆதிரையின் மீது விழவில்லை. கொன்று விடுவது போல விஸ்வாவின் மீதே இருந்தது. அவனது அந்த நிலை ஆதிரையை மேலும் எதுவும் பேசவிடாமல் தயங்கிட வைத்தது.

அப்போது “ஹப்பப்பா ஒரு தேநீர் கொடுக்க இவ்வளவு நேரம் பன்னிட்டாங்க.. வெளி hotel-க்கே சென்றிருந்தால் இந்த நேரத்திற்குச் சிற்றுண்டியையே முடித்துவிட்டு வந்திருப்பேன் “ என்று சொல்லிய வண்ணம் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ள வந்தார் சிவராமன். உள்ளே நுழைந்தவர், ஒரு நொடி ஒன்றும் புரியாமல் அங்கிருந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

சிவராமனைப் பார்த்ததும் அர்ஜுன் ஆதிரையை தன் கை வளைவிலிருந்து விடுவித்தான். “தாத்தா இவனை முதலில் இங்கிருந்து வெளியில் போக சொல்லுங்க. இன்னும் ஒரு நிமிடம் என் கண் முன் இருந்தால் என்னால் என் கோபத்தை அடக்க முடியாமல் இவனைக் கொன்றே விடுவேன் போலத் தோன்றுகிறது” என்று சொல்லிய வண்ணம் மூடியிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்திடச் சென்றான் அர்ஜுன்.

ஏதோ விபரீதமாக நடந்திருப்பதை யாரும் சொல்லாமலே அறிந்த சிவராமன், தேவையில்லாமல் கேள்விகள் கேட்காமல், “சரி அர்ஜுன். கொஞ்சம் பொறு.” என்று சொல்லிய வண்ணம் கீழே விழுந்திருந்த விஸ்வாவை தூக்கிவிட்டு , “தம்பி நீ யாரோ என்னமோ. இங்கு எதற்கு வந்தாய். எது எப்படி இருந்தாலும் இங்கிருந்து முதலில் வெளியில் செல். பிறகு எதுவானாலும் பேசிக் கொள்ளலாம்” என்று அவனை வெளியில் தள்ளி கதவை தாழிட்டார். விஸ்வாவும் ஆதிரையை பார்த்த வண்ணம் எதுவும் பேசாமலே வெளியேறினான்.

அங்கு சில நிமிடம் அமைதி நிலவியது. அந்த அமைதியை அனைவருக்கும் தேவைப்பட்டதும் கூட. பின் சிவராமன் ,“சரி இப்படி இருவரும் இரு மூலையில் நின்று கொண்டிருந்தால் எப்படி , முதலில் இந்த தேநீரை குடிப்போம் பிறகு மற்றது பேசலாம்” என்று சொல்லிக் கொண்டு அவரே மூவருக்குமாக இருக்கும் தேநீரைப் பகிர்ந்து ஊற்றிக் கொடுத்துவிட்டு அவருக்கான கட்டிலில் அமர்ந்தார்.

“அர்ஜுன்… யாரந்த பையன்? ஏன் இவ்வளவு கோபம். பார்த்தால் ஏற்கனவே அடித்திருப்பாய் போலத் தெரிகிறது. ஆதிரையிடமும் பயமுற்ற மிரட்சி தெரிகிறது. என்ன நடந்தது?” என்று பொறுமையாகக் கேட்டார் சிவராமன்.

“தாத்தா…. இவன்தான் நான் சொன்ன விஸ்வநாதன்… ஆதிரையிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றான். நல்ல வேளை இந்த அறைக்கதவின் முன் இருக்கும் camera –வுடன் என் mobile phone –ஐ இணைத்து வைத்திருந்தேன். கதவு திறக்கப்படும் போதெல்லாம் எனக்கு photo எடுத்து அனுப்பியது. நீங்க வெளியில் சென்ற இரண்டு நிமிடத்திலே இவன் உள் நுழைவது தெரிந்தது. நானும் நல்ல வேளையாக இங்குதான் வந்து கொண்டிருந்தேன். என் locker key - ஐ மறந்து வைத்துவிட்டதை எடுப்பதற்காக. இவனை கண்டதும் இன்னும் கொஞ்சம் வேகமாக வந்து சேர்ந்தேன்.” என்று இன்னும் கோபம் குறையாதவனாய் பற்களை அழுந்த கடித்த வண்ணம் நடந்ததைச் சொன்னான் அர்ஜுன்.

“என்ன விஸ்வநாதனா? “ என்றுஅர்ஜுனிடம் மற்றொருமுறை கேட்டுவிட்டு, ஆதிரையிடம் திரும்பி, “ஆதிம்மா.. உன்னிடம் அந்த பையனிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னேன் தானே. இவன் நாம் முன்பு பேசிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் அருகில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தான். அப்போதே சந்தேகப்பட்டேன். அதனால்தான் ஜன்னலை அடைத்தேன். எல்லாம் என்னுடைய தவறு. அர்ஜுன் எச்சரித்திருந்த போதும் உன்னை இப்படி தனியேவிட்டு விட்டு canteen போய்விட்டேன்.” என்று ஆதிரையைக் கேள்விகேட்டு தன்னையும் நொந்து கொண்டு பேசினார் சிவராமன்.

“sorry தாத்தா.. அவன் என்னோட தோழன். அவனால் என்ன துன்பம் வந்துவிடப் போகுது என்று எண்ணினேன். அவன் பேச்சில் மாற்றம் தெரிந்ததும் , அவனை எப்படியாவது பேசி வெளியில் அனுப்பிவிடத்தான் முயன்றேன். ஆனால் அ.. அதற்குள் அவன் எல்லை மீற முயன்றுவிட்டான். இனி அவனிடம் பேச மாட்டேன் தாத்தா” என்று அப்போதுதான் நடந்தது போலக் குரல் நடுங்கச் சொன்னாள் ஆதிரை.

அதனைக் கேட்ட அர்ஜூன், “ஆமாம். அவளுக்கு அவள் நண்பன்தானே முக்கியம். நம்மைப் பற்றியும் நாம் செயல், விருப்பம் பற்றித்தான் என்ன கவலை.இவளைக் காப்பதற்கு நாம் எவ்வளவு யோசித்து யோசித்து எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம். இவளானால் எவ்வளவு அசட்டை. நண்பன் என்று உள்ளே விட்டாளாம். அவனுக்கு அடிப்பட்டதும் துடிதுடித்துப் போகிறாள்” என்று விஸ்வாவின் மீதிருந்த கோபமெல்லாம் ஆதிரையின் மீது திருப்பி கத்தினான்., ஒரு ஓரத்தில் விஸ்வா அர்ஜுனிடம் சொன்னது போல, ‘ஆதிரையும் விஸ்வாவும் ஒருவரை ஒருவர் விரும்பியிருக்க வாய்ப்பிருக்குமோ என்று ஒரு நூலிழை சந்தேகத்தாலும் ,வரம்புமீறியவன் என்ற போதும் விஸ்வாவை அடித்ததும் அவன் மீது அக்கறையாக விஸ்வாவென்று ஓடியதாலும் ஆதிரையின் மீது அப்போதே கடுங்கோப முற்றிருந்தான் அர்ஜூன். இப்போது இவளது இந்த பேச்சு இன்னும் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போலஅர்ஜூனின் கோபத்தை இருமடங்காக்கியது.

‘நான் ஒன்றும் உங்களை அப்படி என்னைக் காத்திட அழைக்கவில்லை’ என்று சொல்லிடத் துடித்த ஆதிரையின் உதடுகள் வார்த்தை வராமல் துடிதுடித்தது. ‘இவன் மட்டும் தகுந்த நேரத்தில் வரவில்லையென்றால் இந்நேரம் மானமிழந்து இறந்துதானே போயிருப்போம்.’ என்ற உண்மை ஆதிரையைத் தேவையில்லாமல் அர்ஜுனிடம் விவாதம் செய்யவிடாமல் தடுத்து முகம் தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.

அவள் முக வாட்டம் தாங்காமல், “அட ஏனடா அர்ஜூன், அவளிடம் காய்கிறாய். பிள்ளை ஏற்கனவே வருந்துவது தெரியவில்லை. நீ வேறு அவளை ஏசுகிறாய். அவள்தான் இனி எச்சரிக்கையாய் இருப்பதாக சொல்கிறாளே. நீ கொஞ்சம் நேரம் அமைதியாக உட்காரு. நீ இங்கு வா தங்கமே. அவன் சொல்வதையெல்லாம் அசட்டை செய்யாதே. உனக்கு எது பேச வேண்டுமென்றாலும் தாத்தாவிடம் சொல்ல வேண்டும்” என்று ஆதிரையை அவர் அருகில் கட்டிலில் அமர வைத்து , அவளது தலையை வருடினார். ஏனோ ஆதிரையின் சோர்ந்த முகம் அர்ஜுனுக்கும் வலியை உண்டாக்கியது. மேலும் ஏதும் பேசி அவளை வருத்தாமல், சிவராமன் சொன்னது போல ஜன்னல் அருகில் கைகளைக் கட்டிய வண்ணம் ஆதிரையையும் சிவராமனையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

சில நிமிடங்கள் கழித்து, “அர்ஜூன். இனி இங்கு நாம் இருப்பது சரியாகாது. எனக்கு என்னமோ இந்த பையலுக்கு இந்த hospital –ல் அதிக சலுகை இருப்பதாகத் தோன்றுகிறது. அதனால், எந்த நேரமும் ஆதிரையிடம் அவன் நெருங்கலாம். ஆதிரைக்கு உடல் மிகவும் தேறியிருப்பதாக தெரிகிறது. அதனோடு அவளுமே டாக்டர்தானே. அவளாலே அவளை இனி பார்த்துக் கொள்ள முடியும். பற்றாக் குறைக்கு என்னிடம் சித்தமிருக்கிறது. அதனால் இனி தாமதிக்காமல் discharge செய்ய ஏற்பாடு செய். நாம் இங்கிருந்து கிளம்புவோம்” என்று அர்ஜூனிடம் சொன்னார் சிவராமன். ஆதிரை எதுவும் பேசாமல், சிவராமனின் மடியிலே தலையை வைத்து கொண்டு படுத்திருந்தாள். ஆதிரைக்கும் இங்கிருந்து கிளம்பினால் பரவாயில்லைப் போல தெரிந்தது.

“சரிங்க தாத்தா.. நானுமே அதுப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் இப்போதே பெரிய டாக்டரிடம் பேசிவிட்டு காரைக் கொண்டு வருகிறேன். நீங்களும் தயாராக இருங்க” என்று பொதுவாக சொல்லிவிட்டு ஆதிரையிடம் ஒருபார்வையை செலுத்திவிட்டு சென்றான் அர்ஜூன். அவனை பார்த்திருந்த போதும் ஆதிரை எந்த வித உணர்வையும் காண்பித்து விடாதப்படி அவன் பார்த்ததும் கண்களை மூடிக் கொண்டாள்.

சிவராமனிடம் சொல்லியப்படி அர்ஜூன் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஆதிரையையும் சிவராமனையும் அழைத்துக் கொண்டு இந்திரா enterprise –க்குஅழைத்துச் சென்றான். ஆதிரைக்கென்று தனி அறை ஏற்பாடு செய்து. அவளை பார்த்துக் கொள்ளவென்று ஒரு செவிலியையும் ஏற்பாடு செய்திருந்தான் அர்ஜூன்.

இந்திரா enterprise –க்கு வந்ததும் சிவராமன் எங்கோ அவசர வேலையாகச் செல்வதாகச் சென்று விட்டார். அதனால் ஆதிரைக்கு மீண்டும் இரண்டு நாட்கள் முன்பு போலவே தனிமை வாட்டிடக் கடந்து சென்றது. ஆனால் திகேந்திரர் பற்றி பலகதைகள் சித்தரித்து பார்த்தாயிற்று. எப்போது தாத்தா வந்தால் அவரிடம் திகேந்திரர் பற்றிக் கேட்க வேண்டுமென்று அவள் உள்ளம் துடிதுடித்தது. அர்ஜுனும் ஏனோ ஆதிரையின் அறைக்கு வருவதை தவிர்ப்பது போல ஒரு நாளுக்கு ஒருமுறைக்கு மேல் வரவில்லை.

அது ஆதிரைக்கும் வசதியாகிப் போனது. அவள் எண்ணங்களுக்குக் கடிவாளம் போடாமல் பலதும் யோசித்து கொண்டிருந்தாள் ஆதிரை. ‘முன்பு தாத்தா சொன்னபடி பார்த்தால் நாளை அண்ணாவையும் ,அண்ணியையும் குட்டி ராஜாவையும் பார்க்கப் போகிறோம்’ என்று எண்ணிக் கொண்டு , ‘எந்த ஆடை அணிந்து கொண்டு போகலாம்’ என்று ஆதிரை யோசித்த வண்ணம் தன்னிடமிருந்த ஆடைகளில் ஒன்றைத்தேர்வு செய்தாள்.

இரண்டு நாட்களுக்கு பின் மாலை வேளையில் ஒரு மஞ்சள் பையைக்கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து சேர்ந்தார் சிவராமன். வந்தவர் நேரே ஆதிரையின் அறைக்குச் சென்று “ஆதிம்மா… எப்படி இருக்க… நா அவசர வேலையாக என் நண்பர் ஒருவரைப் பார்க்கச் செல்ல கொண்டிருந்தது. உன்னுடனிருக்க முடியவில்லை. .” என்றார் சிவராமன் .


“பரவாயில்லை தாத்தா. போன வேலை நல்ல படியாக முடிந்ததா?” என்றாள் ஆதிரை.

“முடிந்தம்மா.. இந்தா இது உன்னுடையது. இதை நீ இந்திர பிரதேஷ் போனதும் படிக்க வேண்டுமென்று ஒரு பெரிய ஓலைச் சுவடியுடன் கூடிய அந்த மஞ்சள் பையை ஆதிரையிடம் கொடுத்தார் சிவராமன்.

அதனை வாங்கியவள், “எ.. என்ன தாத்தா இது..?”என்று அதனைத் தொட்டுப் பார்த்த வண்ணம் கேட்டாள்.

“ம்ம். இது உன் திகேந்திரரின் கதை. உன் பிறவி பலன் பற்றியதும் கூட” என்றார் சிவராமன்.

ஆதிரைக்கு ஆர்வம் மேலிட, “அப்போ! நீங்க எனக்கு திகேந்திரர் பற்றிச் சொல்லப் போவதில்லையா தாத்தா? “ என்றாள் ஆதிரை.

“ம்ம்.. இல்லையம்மா. எனக்கு அந்த கதை தெரியாது. அர்ஜுன் வம்ச முன்னோர்கள் எப்படி திகேந்திரர் மூலமாக புத்திர பாக்கியம் பெற்றனர் என்பதுதான் தெரியும். அதை நான் உனக்கு இப்போது சொல்கிறேன் கேள்” என்று அன்று விட்ட திகேந்திர சித்தர் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் சிவராமன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top