தூரம் போகாதே என் மழை மேகமே!! - 54

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


“என்ன தாத்தா சொல்றீங்க, அ.. அர்ஜூன் . என் அத்தை மகனா? இது எப்படி சாத்தியம். நம்பும்படியாக இல்லையே? “ என்று ஆச்சரியத்துடன் மனதில் தோன்றிய இனம்புரியாத மகிழ்வுடன் கேட்டாள் ஆதிரை.
“ம்ம்.. ஆமாம் அம்மா. நீங்க முன்னரே உறவினர்கள். என்னதான் சில நிகழ்வுகள் காலம் மாறியும், முறை மாறியும் நடந்திருந்தாலும் தீர்க்க தரிசனத்தை மாற்றி எழுதிட முடியுமா? “ என்று கஜேந்திரனுக்கும் சுமத்ராவிற்கும் நடந்த திருமணத்தை எண்ணி ஆதிரையுடன் புதிருடன் பேசினார் சிவராமன்.

“என்ன சொல்றீங்கனு புரியவே இல்லை தாத்தா.. எனக்குக் குழப்பமா இருக்கு. ஆனாலும் என் அண்ணா அண்ணி மீறி எனக்கு நிறையச் சொந்தங்கள் இருப்பதை எண்ணும் போது மனதுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு “ என்று மனதில் தோன்றிய மகிழ்வுடன் கூறினாள் ஆதிரை.

அதற்கு புன்னகித்தவர் ,“தங்கமே.. உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அர்ஜூனுக்கு ஏற்கனவே இவையெல்லாம் தெரியும். ஆனால் அவனுக்குள் இன்னும் வேரேதோ உண்மைகளும் இருப்பதாக நான் உணர்கிறேன். அதனை நீ தான் பேசி தெரிந்து கொள்ள வேண்டும். நான் கேட்டுப் பார்த்தேன். ஆனால் அவன் நெற்றி முடிச்சு விழ யோசனையில் சில வினாடிகள் இருந்த போதும் ஒன்றுமில்லை தாத்தாவென்று மழுப்பி விட்டான்” என்று பூடகமாகத் தான் பேச வந்ததை பேச அடித்தளமிட்டார் சிவராமன்.

“ஓ… என்ன சொல்ல போகிறீர்கள் தாத்தா.. அதை பொறுத்துத்தானே நான் அர்ஜுனிடம் கேட்க முடியும் ..” என்று பொதுவாகப் பேசிய போதும் , ‘சிவராமன் தாத்தா , நானும் அர்ஜுனும் ஏதோ அன்னியோனியமாக இருப்பதாக எண்ணி அவனிடம் நான் உண்மையை தெரிந்து சொல்ல வேண்டுமென்கிறார். ஆனால் அவனைக் கண்டாலே எனக்குக் கோபமாக வருவதும் , அவன் என்னை அலட்சியமாகப் பார்ப்பதும் நிச்சயமாக இவருக்குத் தெரிய வாய்ப்பில்லை’ என்று மனதுள் புன்னகித்த போதும் சிவராமனை மேலும் பேச ஊக்கினார்.

“ம்ம்.. சொல்கிறேன். உனக்கு ஒன்றும் அசதியாக இல்லையே. அசதி என்றால் உன் ஓய்வுக்குப்பின் பேசலாம்.” என்று கேட்ட வண்ணம் தரை தலத்திலிருந்த அந்த அறையின் ஜன்னல் பக்கமாகச் சென்றார் சிவராமன்.

“இல்லை தாத்தா. சொல்லப் போனால் பேச ஆரம்பித்தபின் தான் கொஞ்சம் உடல் கலகலப்பது போல ஆரோக்கியமாக இருக்கு” என்று உண்மையைச் சொன்னாள் ஆதிரை.

“ம்ம்.. நல்லது தங்கமே. ஒரு நிமிடம்” என்று சொல்லிய வண்ணம் அந்த அறையின் ஜன்னலை இழுத்து மூடிவிட்டு அவள் அருகில் மீண்டும் வந்து அமர்ந்தார்.

“ஆதிரை… இப்போ நான் சொல்லும் கதை அர்ஜுனின் வம்ச கதை. இதை முன்பின் தெரியாத யாரிடமும் நீ சொல்ல கூடாது. குறைந்த பட்சம் வரும் தை மாதம் முடியும் வரையாவது எவரிடமும் சொல்லக்கூடாது. புரிகிறதா” என்று மேலும் பேசினார்.

“ம்ம்.. சரிங்க தாத்தா.. நீங்க சொல்லுங்க. எனக்கு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.” என்று சொல்லிய வண்ணம் வசதியாகக் கட்டிலின் மேலே சமனமிட்டு அமர்ந்து கொண்டு கேட்டாள் ஆதிரை.

அதற்கு புன்னகித்த சிவராமன் சொல்லத் தொடங்கினார். “தங்கமே.. இது நடந்து சுமார் 1000 வருடத்திற்கும் மேலாக இருக்குமம்மா.. எனக்கு இந்த கதையை ராஜேந்திர ராஜா, என் தங்கையின் கணவர் சொன்னார் அம்மா. அர்ஜுனின் வம்சம் ஒரு ராஜா பரம்பரையைச் சேர்ந்தது.

ஒரு நாள் அவர் வம்சத்தைச் சேர்ந்த ஒரு ராஜா மாறு வேடத்தில் ஊர் மக்களின் நலன் அறிய ஒற்றர் போல ஊருக்குள் தன்னுடைய குதிரையில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் ஏறிச் சென்ற குதிரை திடீரென்று வெறிபிடித்துப் போல கடிவாளப்பிடிக்கு அடங்காமல் இங்கும் அங்குத்தாக தெருவெங்கும் ஓடியது. அந்த குதிரை ஓடிய அந்த தெருவில் சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குதிரையின் வெறியாட்டம் உணராமல் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தைகளை ஒரு திண்ணையின் மீது அமர்ந்து கொண்டு ஒரு இளம் பெண் ‘தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் இப்படித்தானே விளையாடுவான்.’ என்று பலதும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று குதிரையின் கனைப்பை உணர்ந்த அவள் குதிரையையும் குழந்தைகளையும் மாறி மாறி பார்த்தவள், அவசரமாக ‘ பிள்ளைகளா.. குதிரை தறிகெட்டு ஓடி வருகிறது. வழியை விட்டு விலகி ஓரமாகச் செல்லுங்க’ என்று கத்தினாள். எல்லா குழந்தைகளும் விலகிய போதும் இரு வயதே ஆன ஒரே ஒரு சிறு குழந்தை மட்டும் ஒன்றும் புரியாமல் குதிரை வரும் பாதையில் அமர்ந்து கொண்டிருந்தது. அந்த குழந்தையை காப்பாற்ற வென்று ஓடிச்சென்ற அந்த பெண் குதிரையின் வழித்தடத்திலிருந்து குழந்தையை விரைந்து தள்ளிய போது தடுமாறி கீழே விழுந்துவிட்டாள். அப்படி விழுந்த அந்த பெண்ணின் வயிற்றின் மீதே தறிகெட்டு ஓடிவந்த அந்த குதிரை மிதித்து சென்றுவிட்டது. அதன்பின் சுருண்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்தாள் அந்த பெண். 45 நாட்களே ஆன, பிறக்காத சிசு அவள் வயிற்றிலே இறக்க காரணமாகிப் போனார் அந்த நேரத்திலிருந்த அந்த ராஜா.

அந்த பெண்ணிற்குத் திருமணமாகி மூன்று வருடத்திற்குப் பின் உண்டான அந்த வயிற்றுக் குழந்தை எதிர்பாராத விதமாக அழிந்து போயிற்று. ஒருவாறு குதிரையை இழுத்து கட்டுக்குள் கொண்டு வந்த ராஜா, அந்த குதிரைக்கு யாரோ மது அருந்தச் செய்திருப்பதை அறிந்து அதனை இழுத்துப்பிடித்து ஒரு மரத்தில் கட்டினார். பின் அந்தப் பெண்ணை பார்க்கவென்று ஓடிவந்தார் அப்போதைய ராஜா. அதற்குள் வைத்தியத்திற்காக அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் அவளை வைத்திய சாலைக்குத் தூக்கிச் சென்றுவிட்டனர். சில கசாயத்தை செய்து கொடுக்கச் சொல்லி மூலிகை இலைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார் வைத்தியர். ஒற்றர் வேடத்திலே அங்கு ஓடி வந்த ராஜா மயக்க நிலையிலிருந்த அந்த பெண்ணின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்பதை அறிந்த நிம்மதியாக அரண்மனைச் சென்று குதிரையின் நிலை குறித்து ஆராய்ந்து கவனக் குறைவாக இருந்த காவலர்களுக்குத் தக்க தண்டனை அளித்தார். அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ராஜாவாக நலன் விசாரிக்க அந்த பெண்ணை பார்க்க சென்றார் ராஜா.

அப்போது வைத்தியர் ‘ அவள் நலமுடன் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு இனி குழந்தை உண்டாவது கடினமெ’ன்று அந்த பெண்ணின் முன்பும் ராஜாவாகச் சென்றவர் முன்பும் சொன்னார்.. அதனால் குழந்தை பாக்கியமற்று துவண்ட குழந்தையை இழந்த அந்த பெண், ‘தன் வம்சம் தழைக்க முடியாமல் செய்த அந்த குதிரையை ஓட்டிச்சென்றவனும் தன்னைப் போல வம்சமற்று போவான் மன்னா’ என்று நலன் விசாரிக்கவென்று வந்த ராஜாவிடமே உண்மை அறியாமல் அவருக்கே சாபம் விட்டுவிட்டாள் அந்த பெண். ஆருதல் கூடச் சொல்ல முடியாமல் தவித்துப் போனார் அந்த ராஜா.

“ஐயோ.. பாவம் தாத்தா அந்த பெண்.. இருந்த போதும் தான் கஷ்டப்படுகிறோம் என்பதற்காக அறியாமல் நடந்த தவற்றுக்கு அப்படி பதிலுக்கெல்லாம் யாரேனும் சாபம் விடுவார்களா? அப்படி சாபம் விட்டாலும் அதெல்லாம் அப்படியே நடந்துவிடுமா என்ன? “ என்று இப்போதைய உலகம் போல அப்போதையதையும் எண்ணி சொன்னாள் ஆதிரை.

அதற்கு புன்னகித்த சிவராமன், “பாவம்தானம்மா. எந்தப் பெண்ணால்தான் அந்த வலியை ஏற்றுக் கொள்ள முடியும்.. இந்த காலம் போலல்ல அந்த காலம்மம்மா. எந்த சாபமும் உரியவர் வாயிலிருந்து வரும் போது பலித்தே தீரும் அம்மா. அந்த சாபமும் பலிக்க செய்தது. அந்த பெண் பத்தினிப் பெண்ணம்மா “ என்றார்.

“ஆ.. அது எப்படி தாத்தா சாத்தியம். அவர்கள் வம்சம் தளைத்ததன் விளைவுதானே இன்று அர்ஜுன் இருப்பது. எனக்குப் புரியவில்லையே” என்றாள் ஆதிரை. கதையாக கேட்டதாலோ என்னமோ ஆதிரைக்கு அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பில்லையென்பது போன்ற உணர்வு ஏறப்பட்டிருந்தது.

“சொல்கிறேன். அதன்பின் அந்தப் பெண் 5 வருடத்திற்குப் பின் மீண்டும் கருவுற்றாள். நல்ல முறையில் குழந்தையையும் பெற்றெடுத்தாள். குழந்தையை பார்த்துவிட்டுப் போகச் சென்ற அந்த ராஜா அந்த பெண்ணிடம் குதிரை ஓட்டிச் சென்ற அந்த மனிதன் தான்தான் என்ற உண்மையைச் சொன்னார்.

“ஐயோ மன்னா.. நீங்கவென்று அறியாமல் நானும் சாபமிட்டுவிட்டேனே. அந்த சாபம் பலித்துவிட்டால் எங்க ஊர் மக்களின் நிலை. என்னால்தான் இப்படி ஆக வேண்டுமா? இதுவரை குழந்தையில்லாமல் நீங்க இருப்பது என்னால்தானா” என்று வருந்தும் குரலில் கேட்க, “ஆமாம்” என்பது போலச் சொன்னார் அந்த ராஜா. இந்த செய்தி ஊர் முழுதும் பரவ அந்த பெண்ணை ஊர் மக்களும் ‘சாபத்தைப் பொய்க்கச் செய்ய ஏதேனும் செய்யம்மா. நம் ராஜா எவ்வளவு நல்லவர் அவருக்குப் போய் இப்படிச் சாபமிட்டுவிட்டாயே’ என்றனர்.

ஏற்கனவே செய்வதறியாது தவித்திருந்த அந்த பெண், அரசவைக்குச் சென்று அரச குருவிடம் பேசினார். அவர் முனிவரும் கூட என்பதால் அவருக்கு பலதும் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கேட்டாள். அவர் ‘ஒரு பெண்ணின் கண்ணீரினால் உண்டான சாபம் அவ்வளவு எளிதில் விமோசனம் அடைய வாய்ப்பில்லையம்மா. இருந்த போதும் நீ பார்வதி அம்மனை நோக்கி உன் விரதம் இரு. இப்போதியில்லையென்றாலும் பின்னொரு காலத்தில் இந்த சாபம் விமோசனம் அடையக் கூடும்” என்றார். அவளும், பார்வதி அம்மனை நோக்கி நோன்பிருந்து தன் சாபம் இல்லாமல் போக வேண்டிக் கொண்டாள். ஆனால் இட்ட சாபம் வலியைத் தந்திடாமல் விமோசனம் அடைய வாய்ப்பில்லையே. அதுபோல அந்த நோன்பு அந்த ராஜாவிற்கு வலியைத் தராமல் சாப விமோசன பலனை உடனே அளிக்கவில்லை.

அதனால் அவளுடன் சேர்ந்து அரசவை குருவும் வைத்தியரும் பலவற்றை ஆராய்ந்து மேற் கொண்ட போதும் அந்த ராஜாவிற்குக் குழந்தை உண்டாகவில்லை. இறுதியாக ஒருமித்தமாக அவரது சொந்த தம்பியின் மகனையே தத்தெடுத்து பிள்ளையெனவும் பித்திரு கடன் செய்யவும் அரசாளவும் ஒருமித்தமாக எல்லோர் முன்னிலையிலும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஊர் மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்வுடன் வாழ ஆரம்பித்தனர். ஆனால் அந்த கர்பிணிப் பெண்ணின் சாபம் தத்தெடுத்த அந்த ராஜாவின் தம்பி மகன் மூலமாகவும் வம்சம் தழைக்கவிடாமல் அவனுக்கும் குழந்தை பிறக்காமல் அவனும் வேறொருவருடைய பிள்ளையை தத்தெடுக்கும்படி ஆகிவிட்டது. அப்படி தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் குழந்தை பாக்கியமற்று போனது. இவ்வாறு ஐந்து தலைமுறைகள் தத்தெடுத்த பிள்ளைகள் மூலமாகவே வம்சம் தொடர்ந்ததால் அடுத்த தலைமுறைக்கு தத்துப்பிள்ளையாக தன் பிள்ளைகளைக் கொடுக்க எந்த உறவும் முன் வரவில்லை.

அப்போது கடைசியாகத் தத்தெடுக்கப்பட்ட இளவரசர் கந்தவர். அவருக்குப் பெண் கொடுக்க பலரிடம் கேட்டு ஓலை அனுப்பிய போதும் எந்த அரசரும் தன் பெண்ணை கந்தர்வனுக்கு மனம் செய்து வைக்க முன் வரவில்லை என்று மனம் கலங்கியிருந்த கந்தர்வனின் தந்தையிடம் ‘எனக்குத் திருமணமே வேண்டாமென்று’ முடிவெடுத்துச் சொன்னார் கந்தர்வன். ஆனால் ஐந்து தலைமுறைக்குமுன் தன் சாபம் முறிய நோன்பிருந்த அந்த கர்பிணிப் பெண்ணின் விரதம் இந்த தலைமுறையில் பலன் கொடுக்க அந்த பார்வதியே அந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

ஒரு நாள் அரசவையில் நடனம் புரிய வெளி ஊரிலிருந்து வந்த ரேவதி என்ற பெண்ணின் மீது அவரையும் அறியாமல் காதல் கொண்டுவிட்டார் கந்தர்வர். பரம்பரையின் சாபம் அறிந்திருந்ததால் ‘ரேவதியும் தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டாள்’ என்று எண்ணி அவரது காதலையும் யாரிடமும் சொல்லாமல் மறைத்தார். ஆனால் அந்த கந்தர்வரைப் போல ரேவதிக்கும் அவர் மீது காதல் உண்டானது. எதிர்பாராதவிதமாக இரண்டு மூன்று முறை காண நேர்ந்த போது ரேவதியின் காதல் அவளுக்கு முழுவதுமாக புரிந்துவிட்டது. தன் ஆசையை தன் அண்ணன் ரஞ்சிதனிடம் சொன்னாள் ரேவதி. அந்த ரேவதியும் ரஞ்சிதனும் நம் வம்ச முன்னோர்கள் ஆதிரை.” என்று நிறுத்தினார் சிவராமன்.

“ஓ… ஏதோ வரலாற்றுக் கதை கேட்பது போல இருக்கிறது தாத்தா. அப்புறம் எப்படி சாபம் முறிந்தது. முறிந்திருக்கத்தான் வேண்டும். அதனால்தானே இன்று அர்ஜுனும் , ஏன் என் குட்டி ராஜாவும் , அஸ்மி குட்டியும் கூட இருக்க வாய்ப்பிருக்கு. அவர்கள் தத்து பிள்ளைகளில்லையே” என்று ஆர்வம் குறையாமல் கேட்டாள்.

“ம்ம் ரஞ்சிதனுக்கு கந்தர்வனின் வம்சம் சாபம் அறிந்ததால் அவன் அரசன் என்ற போதும் ரேவதியின் காதலுக்குச் சம்மதம் சொல்லவில்லை. ஆனால் ரேவதி மிகவும் பிடிவாதத்துடன் அவரை மணந்தால் எனக்கு மணவாழ்க்கை இல்லையேல் நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்’ என்றுவிட்டாள். என்ன செய்வதென்று குழம்பித் தவித்த போது ஒரு சித்தர் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.

ஒரு ஆலமரத்தின் அடியில் சமனமிட்டு அமர்ந்திருந்த அவரை பார்க்க பலரும் வந்தனர். அவரது வலது கையில் ஒரு அகல்விளக்கை ஏந்திக் கொண்டிருந்தார். அந்த விளக்கு எப்போதும் எறிந்து கொண்டிருந்தது. அதன் சூட்டையும் உணராமல் அதனைக் கையில் ஏந்திய வண்ணம் அமர்ந்திருந்தார். அவரது இடதுகையில் ஒரு அம்மன் சிலை. அந்த சிலையை தன் மார்போடு அணைத்த வண்ணம் இடதுகையால் பிடித்திருந்தார். சமனமிட்டு அமர்ந்திருந்த அவரை தெய்வீக உணர்வுடன் பலரும் தங்கள் குறைகளைச் சொல்லித் தீர்வு கண்டவர்களாகச் சென்றனர்..

அப்படி வந்த அந்த சித்தரின் பெயர்தான் திகேந்திரர் தங்கமே “ என்று ஆதிரையை ஊடுருவும் பார்வை பார்த்தார் சிவராமன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top