தூரம் போகாதே என் மழை மேகமே!! - 50

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
சிவசக்தி ஊரை விட்டு எல்லோரும் கிளம்ப வேண்டுமென்று சொன்ன போது உண்டான சலசலப்பு அதிகரித்து அங்கிருந்த மக்கள் நேரிடையாகவே சிவசக்தியிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

“என்னமா சொல்றீங்க. பிறந்து வளர்ந்த இடத்தவிட்டு சுற்றி இருக்கும் நம் மரங்களைவிட்டு நம் இடத்திற்கு வந்து வந்து போகும் காட்டு உயிர்களையெல்லாம் விட்டு எங்கு போவதம்மா?” என்றார் ருக்மணி பாட்டியமா.

“கவலை வேண்டாம் ருக்கு. இவ்வளவு நாள் நாம்தான் இந்த இடத்தை கட்டிக் காத்திருப்பதாக எண்ணியிருந்தது நீங்க மட்டுமல்ல. நானும்தான். ஆனால் உண்மையில் சந்திரகுளிர்தான் நம்மை காத்துக் கொண்டிருந்தது. அந்த சந்திர குளிர் குகை இன்னும் 9 மாதங்களுக்குள் மறையப் போவதாக அறிய நேர்ந்தது. அந்த குகை மண்ணுள் மறைந்துவிட்டால் இந்த இடத்தில் நமக்குப் பாதுகாப்பு கண்டிப்பாக இல்லை. அதனால்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மற்றொருவன் பேசலானான்.

“சந்திரகுளிர் என்ற வார்த்தையே புதிதாக இருக்கிறது இப்படி இருக்க அது எப்படி நம் ஊரைக் காக்கக் கூடியதாக இருக்கக் கூடும். எங்களுக்கு புரியலையே மா" என்றார் கூட்டத்தில் ஒருவர்.

“சந்திரகுளிர் என்பது ஒரு குகை கோவில். அந்த குகையினால் பலர் பித்துப் பிடித்திருக்கிறார்கள். அதனைத் தேடிச் சென்றவர்களுள் சிலர் விலங்குகளால் மிரட்டப்பட்டுப் பயந்து பாய்ந்து ஊரை விட்டே ஓடிச் சென்றிருக்கிறார்கள். அந்த குகையில் ஏராளமான நவரத்தினங்கள் இருப்பதாக யாரோ உண்டாக்கிய வதந்தியால் உண்டான வினை. அதனால் எங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் சந்திரகுளிர் குகைபற்றி அடுத்த சந்ததிக்கு ஊர் மக்கள் யாரும் சொல்லக் கூடாது என்று அக்னி மேல் சத்தியம் கேட்டுப் பெற்றுக் கொண்டோம். அது நடந்து கிட்டத்தட்ட 80 வருடங்களாவது ஆகியிருக்கும் என்று என் கணவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனால் அது பற்றிய உண்மை உங்கள் யாருக்கும் தெரியாது. இனி மறைப்பதற்கு ஏதுமில்லையென்பதால் இன்று உங்கள் எல்லோரிடமும் சொல்லி எல்லோரையும் காஞ்சிபுரம் அனுப்புவதே எனக்கு இப்போதிருக்கும் முதல் கடமை. என்னால் உங்களில் ஒருவரையும் இழக்க முடியாது” என்று கோர்வையாகச் சொல்லி ஒரு பெருமூச்சு எடுத்துவிட்டார் சிவசக்தி.

“உண்மையாங்களாமா? அந்த குளிர் குகையில் அப்படி என்னதான் இருக்கிறதம்மா? அது எப்படி நம்மைக் காக்கிறது. எங்களுக்கு ஒன்றும் புரியலையே 6 மாதத்தில் இந்த இடத்திலிருந்து போகவில்லையென்றால் என்ன நடக்கும். இந்த இடத்தை விட்டு போவதை நினைத்தாலே கவலையாக இருக்கிறதே?” என்றாள் ருக்குமணி பாட்டி..

“6 மாதத்தில் எதுவும் நடக்காது ருக்கு. ஆனால் 9 மாதத்தில் இந்த இடத்தில் பெரு வெள்ளம் வரவிருக்கிறது என்பதை இந்த ஆருட ஓலை சுவடியில் சொல்லியிருக்கிறது. சந்திரகுளிர் குகையினுள் ஒரு சிறிய பால் வண்ண ஓடை இருக்கிறது. அந்த ஓடையில் ஒவ்வொரு வருடம் தை மாதமும் அமாவாசை நாளன்று எங்கள் குடும்பத்தில் அந்த சந்திரகுளிர் குகை மேல் நம்பிக்கை உள்ளவர்களால் அங்குச் செல்ல முடியும். அப்படிச் செல்லும் போது ஒவ்வொரு வருடமும், தவறாமல் ஒரு ஓலைச் சுவடி மிதந்து வந்து எங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவருடைய கையில் சேரும். ஒவ்வொரு ஓலை பிம்பத்தையும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நாங்க படித்து அந்த ஓலைப்படி நடக்கவிருப்பதை முன்பே அறிந்து அதற்கேற்ப நடந்து ஊர் மக்களின் நலனுக்காக அடுத்த ஏற்பாடுகள் செய்வோம். அதன்படி நான் மூன்று நாட்களுக்கு முன் இந்த ஓலைச் சுவடியின் 8வது ஓலையைப் படித்தேன். அதன்படி ‘இந்த ஊரைவிட்டு செல்ல ஆய்தமாக வேண்டும் இல்லையேல் பெருவெள்ளம் கொண்டு ஊர் மூழ்கிப் போக உயிர்களும் மூழ்கி போகும்’ என்றிருந்தது. இது நாள் வரை இந்த ஓலைச் சுவடியில் சொல்லப்பட்ட எதுவும் நடக்காமல் இருந்தது இல்லை. அதனால் இதைப் பற்றி மறுபரிசீலனைக்கு வாய்ப்பே இல்லை.” என்று சொல்லிவிட்டு வேறு யாரும் கேள்விகள் கேட்கும் முன்னரே , சிவசக்தி தொடர்ந்து பேசினார்.

“காதம் அந்த பத்திர கட்டுகளைப் பிரித்து ஒவ்வொன்றாக அவரவர் குடும்பத் தலைவர்களிடம் கொடு. “ என்று யாரும் மறு பேச்சு ஆரம்பிக்கும் முன் காஞ்சிபுரத்தில் ராஜேந்திர ராஜா வாங்கி வைத்திருந்த இடத்தின் பத்திரத்தினை பிரித்து கொடுத்தார் காதம்பரன்.

“இது என்னம்மா. காகிதம் போல இருக்கு. இதை வைத்துக் கொண்டு நாங்க என்ன செய்ய? “ என்று ஒருவர் கேட்க, “ இதுதான் வெளி உலகில் நீங்க வாழ்வதற்கான ஒரு ஆதாரம். உங்களுக்கான இடத்தின் பட்டயம் என்று சொல்லலாம். . உங்களுக்கான வீடு கட்டும் பணி தொடங்க ஒரு வாரத்தில் நான் கிளம்பப் போகிறேன். வீடுகள் கட்டியப்பின் நாம் அனைவரும் காஞ்சிபுரம் போக வேண்டும் காஞ்சிபுரத்தில் இருக்கும் நிலத்தின் பத்திரங்கள் இவை” என்று கோர்வையாகச் சொல்லிக் கொண்டே பத்திரங்களை அனைவரிடமும் கொடுத்தார் காதம்பரன்.

மக்களிடையே மீண்டும் லேசான சலசலப்பு மேலோங்கியது.

அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்து கொண்டிருந்த கஜேந்திரன், “சந்திரகுளிர். சந்திரகுளிர் சந்திரகுளிர். ஏன் அந்த குகை நம் வாழ்வில் இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்துகிறது அம்மா. அன்று என் மகளை இழந்தேன். இன்று என் மகனின் நிலை தெரியவில்லை. நீங்க என்னவென்றால் குகை ,குளிர் வெள்ளமென்று என்னென்னமோ பிதற்றுகிறீர்கள். அந்த சந்திரகுளிர் குகையின் கதை தான் என்னம்மா.. புரியும்படி கொல்லுங்க. என் அர்ஜுன் எப்போது வருவான்” என்று கதறிய வண்ணம் கேட்டார்.

கஜேந்திரன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் அருகில் வந்த சிவசக்தி அவருடைய தலையை மெதுவாக வருடி, “கவலைப்படாதே கஜா. எல்லாம் நல்லவிதமாகவே முடியும்” என்று சொன்ன சிவசக்தியின் குரல் நேற்றைப் போல பலத்துடன் இல்லாமல் கலங்கி இருப்பதை உணர்ந்த சுமித்திரை, “ என்ன அத்தை சொல்ல்றீங்க என் மகனுக்கு ஏதுமில்லையென்று நேற்றுதானே சொன்னீங்க இன்று கவலையாகப் பேசிவதை பார்த்தால் மனம் பதறுகிறது” என்றாள்

“ஓலையின் படி மாண்டதாக எண்ணியவர் உண்மையில் மீண்டு வருவார் என்று இருந்ததம்மா. ஆனால் நான் மாண்டதாக என் அண்ணாவையும் அல்லவா நினைத்திருந்தேன். அதனால் எனக்குமே அர்ஜுனை நினைத்து கலக்கமாக இருக்கிறதே!” என்று கண்களில் ஈரம் பணிக்கச் சொன்னார் சிவசக்தி.

“அய்யோ! அர்ஜுன்” என்று கதறினாள் சுமித்ரா.

ஊர் மக்களும், “என்ன அர்ஜுன் தம்பிக்கு என்ன ஆச்சி. முத்தெடுக்கும் தொழிலுக்கு போயிருப்பதாகத்தானே சொன்னீங்க.. அப்படி இல்லையா?” என்று மாறி மாறி கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சிவசக்தியின் உதவிக்கு வந்தார் சிவராமன்.

“சக்திம்மா.. ஏன் இப்படி சொல்கிறாய். பார் எல்லோரும் பதறுகிறார்கள். அர்ஜுன் மாண்டதாக நீ நினைக்கவே இல்லையே. அதனால் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி நீயும் குழம்பி இங்கிருப்பவர்களையும் குழப்பிவிட்டாயே! மனதை அமைதி படுத்திக் கொள்ளமா.. “ என்று சிவசக்தியை அமைதி படுத்திவிட்டு, “ யாரும் கவலைப்பட வேண்டாம் , அர்ஜூன் விரையில் வீடு வந்து சேருவான்” என்று நடுங்கிய குரலில் சொன்னார் அவர்.

அவரது குரல் மந்திரம் போல அங்கிருந்தவர்களின் மனதில் கலக்கம் மறைந்து நிம்மதிக் கொள்ளச் செய்தது.

“சக்தியம்மாக்கும் தெரியாத சந்திரகுளிர் குகை பற்றி கதையை நான் இப்போது உங்களிடம் சொல்லப் போகிறேன். இதனை நீங்களும் தெரிந்தும் கொள்ள வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறது. இந்த கதையை ராஜேந்திர ராஜ கஜேந்திரனிடம் மட்டும் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் காலம் கடந்து நான் வந்ததாதல் எல்லாம் மாறிவிட்டதோ. என் மகளுக்கும் என்னை அறியாமல் திருமணமாகிவிட்டது. அவளை அழைத்து கொண்டு என்னால் உரியக் காலத்திற்குள் வர முடியாமல் போய்விட்டது. இப்போது அவளுக்கும் நான் யாரென்றும் தெரிய வாய்ப்பில்லை. “ என்று சுமித்திரையை ஒரு பார்வை பார்த்து வீழி மாற்றினார் சிவராமன்.

அதன் பொருள் புரிந்தும் புரியாமலும் ஏதோ இனம் புரியாத உணர்வில் அவரை விழி நிமிர்த்திப் பார்த்தார் சுமித்ரை.

“ம்ம்.. இப்போது முடிந்ததைப் பேசி என்ன பயன். அதனால் உங்களுக்கு ராஜேந்திர ராஜாவின் பூர்வீக கதையும் இந்திரபிரதேஷின் காரணத்தையும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லவே நான் வந்தேன். சொல்லி முடிக்கும் வரை அனைவரும் அமைதியாகக் கேட்க வேண்டும்” என்று அனைவரையும் கை அமர்த்திவிட்டுத் தள்ளாடிய குரலில் பேச ஆரம்பித்தார்.

சுமார் 1000 வருடத்திற்கு முன்..


************************
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top