தூரம் போகாதே என் மழை மேகமே!! - 17

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 17
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpeg
அதிக பழக்கமற்று படகு செலுத்தியதால் கொஞ்ச தூரத்திலே அர்ஜூனின் கைகள் வலிக்கத் தொடங்கியது. படகு Motor மூலமாக இயங்கக் கூடியதாக இருந்தாலும் , படகினை வளைக்க அவன் கைகளையே பயன்படுத்த வேண்டி இருந்தது. தொலைந்தவரைத் தேடுவதற்காக சென்றதால் , படகில் சில முதலுதவி பொருட்களும் , life jacket, மற்றும் முழுதும் மூடப்பட்ட அறை போன்ற ஒரு சிறு அமைப்பும் இருந்தது. இவை சில சமயங்களில் முத்தெடுக்கக் காத்திருக்க ஆள் கடலில் காத்திருக்க வேண்டி இருக்கும் சூழலில் உதவுவதற்காக தகவமைக்கப்பட்ட படகு வகை. . அதனால் , சிறிது எடை அதிகமாகவும் , வளைக்கும் தருவாயில் மிகுந்த அக்கறையுடனும் வளைக்க வேண்டி இருந்தது. இதனால் அர்ஜூனின் சில நிமிடங்களில் கைகள் சோர்ந்து அவன் தேடுதல் வேகத்தை வெகுவா குறைத்தது. ஏதோ உள் நெஞ்சில் பிசைய, 'விரைந்து செல்ல கண்டிப்பாக ஓட்டுநர் வேண்டும்' என்று உணர்ந்தான். இன்னும் எவ்வளவு தூரம் கப்பல் நோக்கிச் செல்ல இருக்கிறது என்று captan அனுப்பிய GPS location -ஐ பார்த்தான், மிக அருகில்தான் என்று தெரிந்ததும் வேகமாகப் படகினை செலுத்த முனைந்தான்.


சேகரும் காதம்பரனும் கடல் நீரில் இங்கும் அங்கும் பார்த்த வண்ணம் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.


“என்ன காதம் இப்படி ஆகிவிட்டது. நாம் ஒன்று நினைக்க நடப்பது வேறொன்றாக இருக்கிறதே! “ என்றார் சேகர்.


“எனக்கும் அதுதான் புரியவில்லை சேகர். அர்ஜூனின் குடும்பத்தின் சாபம் நீக்க வந்த பெண் இவள்தான் என்று ராஜாவைப் பார்த்ததும் எனக்குப் புரிந்துவிட்டது. ஆனால் இப்போது அவள் உயிருடன் இருக்கிறாளா என்றே தெரியவில்லை" என கவலையுடன் சொன்னார் காதம்பரன்.


“அப்படிச் சொல்லாதே காதம். உனக்கு அவளை நேற்றிலிருந்துதான் தெரியும். ஆனால் எனக்கு அவளை மூன்று வருடங்களாக தெரியும். எவ்வளவு பிடிவாதம் அவளுக்கு இருக்கிறது தெரியுமா? 'ராஜாவை என்னிடம் கொடுத்துவிட்டு , நீ திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இரும்மா.’ என்றேன். அதற்கு அவள் , 'நான் தான் தாய் தந்தையற்று வளர்ந்தேன். பெற்றோர் இல்லாமல் எல்லாத் தேவைகளையும் நாமே பார்த்துக் கொள்வது எவ்வளவு வேதனையானது தெரியுமா அங்கிள். அந்த ஒரு துன்பத்தை ஒரு நாளும் என் ராஜாவிற்கு நான் தர மாட்டேன்.’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள் அந்த உறுதியே அவளை இவ்வுலகை விட்டு அவ்வளவு எளிதில் இழுத்துச் செல்லாது. அந்த நம்பிக்கையில்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். “ என்று பெருமூச்சுவிட்டு சொன்னார் சேகர்.


“ம்ம்… புரிகிறது. ஆனால் ராஜாவின் செயல்தான் எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'அம்மா அம்மா' என்று இரண்டு மணி நேரத்தில் அரற்றியவன் , எப்படிச் சட்டென அமைதியானான். யாரோ தெரியாத பெண்ணிடமும் எந்த வித சுட்டித்தனமும் செய்யாமல் எப்படிச் சென்றான். எல்லாம் மாயமாகத் தெரிகிறது.” என்றார் காதம்பரன்.


“எனக்கும் குழப்பம்தான் காதம். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அதுவே பெரும் உதவியாகவும் , நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் சிவசக்தி அம்மா, எப்படி இந்தப் பெண்ணை பற்றி முன் கூட்டியே உன்னிடம் சொன்னார். ஏதேனும் சோதிட முறையா? ஆருடம் சொல்பவர் ஏதேனும் குறி கூறினாரா!” என்று கேட்டார் சேகர்.


“அது… அவர்கள் குடும்ப ரகசியமப்பா! இது போலத்தான் ராஜேந்திர ஐயாவும் திடீர் திடீரென்று ஏதேனும் சொல்வார். அது போலவே நடக்கும். கடலினால் ஒரு பெண் அறிமுகமாவாள் , அவளுடன் நம் வீட்டுக் குழந்தையும் இருக்கும் என்றார் சிவசக்தி அம்மா. முதலில் ஆதிரையை நான் அந்தப் பெண்ணாக எண்ணவில்லை. ஆனால் ராஜாவைப் பார்த்ததும் அனைத்தும் புரிந்துவிட்டது. “ என்றார் காதம்பரன்.


“என்னவோ காதம். அந்தப் பெண்ணுக்கு உங்கள் ஊரில் வேலையெல்லாம் எனக்கு இப்போது சரிப்படுமென்று தோன்றவில்லை. அர்ஜூனும் அவளும் எலியும் , பூனையுமாக அல்லவா தோன்றுகிறார்கள். எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. அவள் நிம்மதியாகவும் , பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து அவள் மனம் கலங்கினால், என்னையே என்னால் மன்னிக்க முடியாது.” என்று கவலையுடன் கூறினார் சேகர்.


“அந்தக் கவலையை இப்போது விடு சேகர். முதலில் ஆதிரை கிடைக்க வேண்டுமே! இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும் எனக்கு அதுவே கவலையாக இருக்கிறது. அதற்குள் ஏதேனும் அதிசயம் நடந்தால் நன்றாக இருக்கும் " என்றார் காதம்பரன். இவ்வாறு பேசிக்கொண்டே தொடர்ந்து ஆதிரையின் தேடுதலில் ஈடுபட்டனர்.


ஆம். காதம்பரன் சொன்ன அந்த அதிசயம் நடந்தது. வேகமாகப் படகினை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜூனின் கால்களின் மீது எதோ திடீரென்று விழுந்தது. அதனை எடுத்துப் பார்த்தவன் , சில வினாடிகளில் 'அது ஆதிரையின் வளையல் . அது…. எப்படி இங்கே வந்தது. வானிலிருந்து விழுந்தது போல இருந்ததே! ‘ என்று வானத்தை நோக்கிப் பார்த்தான். வெள்ளை வெள்ளையாக மேகங்களைத் தவிர வேறேதும் தெரியவில்லை.


'என்ன முட்டாளைப் போல வானத்தைப் பார்க்கிறோம். ‘ என்று அவனுக்குத் தோற்றியது . இருந்தும் எங்கிருந்து இந்த வளையல் வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தால் அங்கே ஒரு டால்பின் அவனின் கவனத்தை கவரும் வண்ணம் கடல் நீரைவிட்டு எம்பி எம்பிக் குதித்தது. அச்சமயம் அர்ஜூனுக்கு ‘discovery channel -ல் பார்த்தது நினைவு வர , ஒரு வேளை ஆதிரையை இந்த டால்பின் காப்பாற்றி இருக்குமோ!.’ என்று நினைத்து அதனை நோக்கி அருகில் செல்ல முயன்றான். ‘ ஆம் என்பது போல அர்ஜூன் அந்த வளையல்களைக் காட்டியதும் , அந்த டால்பின் இசைவாக உடலை வளைத்து வளைத்து அசைந்து காட்டியது. ‘ எங்கே இழந்துவிடப் போவதாக ஆழ்மனதில் துடிதுடித்துக் கொண்டிருந்த உயிர் மீண்டதைப் போல' உணர்ந்தான் அர்ஜூன்.


உடனே படகினை டால்பின் பின் செலுத்தினான். அவனுள் இருந்த கை வலியெல்லாம் எங்கே சென்றது என்பது போல வேகமாக அந்த டால்பினை தொடர்ந்தான். சில பல கிலோ மீட்டர்கள் நகர்ந்தன. பின் தூரத்தில் ஒரு தீவு போலச் சிறு நிலப் பரப்பு தெரிந்ததும் அந்த டால்பின் காணாமல் போனது. வியப்புடன் இங்கும் அங்கும் அதனைத் தேடியவன் அப்போதுதான் சென்னை கடற்கரையை விட்டு மிகத் தூரத்தில் வந்திருப்பது தெரிந்தது.


அதனோடு இந்தக் கரை கண்டிப்பாகத் தீவின் கரை தான் என்பதை ஆள் அரவமற்ற சூழலையும் அது வளைந்து இருந்த விதத்திலும் அர்ஜூனுக்கு புரிந்தது. அதுவரை அப்படி ஒரு தீவினை சென்னை கடற்கரையின் அருகில் அவன் ஒரு போதும் அறிந்ததோ , கேள்வியுற்றதோ இல்லை. அதுவே அவனுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.


மெதுவாக அந்தத் தீவினில் இறங்கியவன் தன் படகின் சிறு நங்கூரத்தைப் போட்டு நிறுத்திவிட்டு அந்தச் சின்ன தீவில் காலடியெடுத்து வைத்தான். உடலெல்லாம் ஒருவித சிலிர்ப்பினை உணர்ந்தவன், சில வினாடிகளில் சுயனிலைக்கு வந்தான்.


“ஆதிரை… ஆதிரை...” என்று சத்தமிட்டு கத்திக் கொண்டே இங்கும் அங்கும் அவளை தேடிக் கொண்டே போனான். அவள் உருவம் கண்ணில் படும் முன்னரே, ‘ அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பதை அவனுள் ஏற்பட்ட உள்ளுணர்வு சொல்லியது.


அவன் எண்ணம் வீண் போகாமல் , அவள், ஆதிரை ஒரு மரத்தினடியில் மயங்கிய நிலையில் கிடந்தாள். அவளைக் கண்டதும் சூரியனைக் கண்ட சூரியகாந்தி மலர் போல முகம் மலர்ந்து அர்ஜூன் அவளை நோக்கி ஓடிச் சென்றான். அவன் மடியில் அவளை சாய்த்துக் கொண்டு " ஆதிரை… ஆதிரை..” என்று அவளது கன்னத்தை தட்டினான்.


அவன் குரலில் விழித்த ஆதிரை அர்ஜூனின் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள். பின், அவன் மார்பிலே சாய்ந்து அழுக ஆரம்பித்தாள். ஒன்றும் புரியாமல் இருந்த அர்ஜூன், 'ஒரு வேளை ஏதேனும் பார்த்து பயந்திருப்பாளோ' என்று இரக்கம் கொண்டு, “ ஒன்னுமில்ல ஆதிரை. பயபடாத. நா தான் வந்துட்டேன்ல்ல. நாம இங்கிருந்து கிளம்பிடலாம்" என்று குழந்தையை அரவணைப்பது போல அவளது தலையை வருடிக் கொடுத்தான்.


ஆனால் அதற்கு சமாதானம் அடையாத ஆதிரை, “திகேந்திரா…!! திகேந்திரா!" என்று தேம்பியவள் "என்னை வீட்டு போய்விடாதே" என்று பெரிய மூச்சினை எடுத்தாள். அவனை யாரோ அவளிடமிருந்து பிரிக்க முயல்வதைப் போல அவனைப் பிடித்திருக்கும் பிடியை நடுங்கிய தன் கைகளால் இறுக்கமாகப் பிடித்தாள். அவளது பயத்தினை அர்ஜூனால் அவள் சொல்லாமலே உணர முடிந்தது.


பின் தேம்பளின் நடுவே, “ நீ இல்லாம நா உயிர் வாழவே மாட்டேன். என்னை விட்டுப் போகமாட்டேன் என்று என் மீது சத்தியம் செய் திகேந்திரா!" என்று பிதற்றினாள் ஆதிரை. அழுகையினூடே கேட்ட அவளது வார்த்தைகள் அர்ஜூனை உறையச் செய்தது.


அப்போதுதான் 'ஆதிரைக்குக் குடும்ப வழக்கபடியான தன் பெயர் தெரிந்திருக்கிறதே!. திகேந்திரன்’ என்று அர்ஜூன் கவனித்தான். 'எப்படி? எனக்கே இரண்டு வருடத்திற்குமுன் ராஜேந்திர ராஜா தாத்தா செல்லிதானே தெரியும். அப்படி இருக்க இவளுக்கு எப்படித் தெரிந்தது.’ சில வினாடிகள் முகமெல்லாம் அர்ஜூனுக்கு வியர்த்து.


ஆதிரை அர்ஜூனை பிடித்திருக்கும் பிடியை விட்டாளில்லை. ‘எங்கே அவளை விட்டு அவன் சென்று விடுவானோ என்ற பயத்தினால் ஏற்பட்ட செயல்' என்று அர்ஜூன் அறியாமல் இல்லை. 'ஆனால். ஏன்.? இந்தப் பெண்ணை எனக்கு நேற்றுதானே முதலில் பார்த்தது. இவளுக்கு ஒன்று என்றதும் ஏன் உள்ளமும் பரிதவித்தது. என்ன நடக்கிறது!’


அர்ஜூனின் இந்த மனப் போக்கை உணர வாய்ப்பில்லாமல் ஆதிரை மீண்டும் மீண்டும் "என்னை விட்டுப் பிரிந்துவிடாதே திகேந்திரா! “ என்று பிதற்றினாள்.


அவளது வார்த்தைகளில் சுய நினைவுக்கு வந்த “ஆதிரை.. ஆதிரை.. இங்கே பார். நான் சொல்வதை கேள்" என்று அவளிடம் பேச முயன்றான். அதற்கு வழி கொடுக்காமல் ஆதிரை அவளது தலையின் மீது கைகளை வைத்துக் கொண்டு அவன் மீதே சரிந்தாள். என்ன செய்வதென்றே புரியாமல் தவித்த அர்ஜூன் முதலதவி பெட்டியை எடுத்து வர எழுந்தான். ஆனால் அவன் எழுவதற்கு வழியே இல்லாமல் , அவனது சட்டையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள் ஆதிரை.


அவள் கையிலிருந்து தன் சட்டையை விடுவித்துக் கொண்டிருக்கும் போதே ஆதிரை மீண்டும் கண் விழித்தாள். இம்முறை தீ பட்ட விட்டில் பூச்சினை போல அவள் இருக்கும் நிலையைப் பார்த்து தாவிக் குதித்து அர்ஜூனை விட்டுத் தள்ளி நின்றாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா ஆதிரை கிடைத்து விட்டாள்

சேகர் ஒரு நல்ல மனிதர்
காதம்பரனும் நல்லவர்தான்
ஆனால் அர்ஜுன் குடும்பத்தின்
விசுவாசி

அதானே
அம்மாவைக் கேட்காமல் எப்படி
ராஜா அமைதியாக இருக்கிறான்?
எனக்கும் இதே சந்தேகம்தான்,
Yogi டியர்

ஹா ஹா ஹா
நான் சொன்ன மாதிரியே அர்ஜுனின் இன்னொரு பெயர்தான் திகேந்திரன்
அதே போல ராஜா அர்ஜுனின் வீட்டுப் பிள்ளை
சூப்பர்
அப்போ ராஜா ரித்திகா அரவிந்த்தின் மகனா?

இவங்க வீட்டுக் குழந்தையுடன்
ஆதிரை வருவாள்ன்னு சிவசக்தி
அம்மாவுக்கு எப்படி தெரியும்?

ஆதிரையைத் தேடி அர்ஜுன் திணறும் பொழுது எப்படி டால்பின் கரெக்ட்டா அவனுக்கு அடையாளம் காட்டுது?

எல்லாமே ஒரே மர்மமாக இருக்குப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top