துளி - 9

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1

9.jpg

அன்று மாலை தொலைகாட்சியில் பார்த்த புது விதமான இனிப்பை செய்தவள் மகிழ்ச்சியுடன் மித்ரஜித்திடமும் ஆனந்தியிடமும் கொடுத்தாள். அவன் ஒரு வாய் உண்டதும், அவள் ஆவலுடன், “எப்படி இருக்கிறது?” என்று வினவினாள்.

அவன் அலட்டிக்கொள்ளாமல், “ஹ்ம்ம்.. உப்பு மட்டும் கொஞ்சம் கம்மியா இருக்கிறது” என்றதும் அவள் அவனை முறைத்துவிட்டு சமையலறைக்கு செல்ல, அவன் மென்னகையுடன் அதை ரசித்து உண்ணத் தொடங்கினான்.

இவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தி மகனின் மனமாற்றத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் இனிப்பை உட்கொண்டார்.

அப்பொழுது அவனது கைபேசி சிணுங்கவும் எழுந்து சென்று பேசிவிட்டு வந்தவன் இனிப்பை வாயில் வைத்ததும் அவசரமாக துப்பினான். அவன் எதிரில் வந்து நின்ற கவிப்ரியா அலட்டிக்கொள்ளாமல், “இப்போ உப்பு சரியா இருக்கிறதா?” என்று வினவினாள்.

அவன் திருதிருவென்று முழிக்க, ஆனந்தி வாய்விட்டு சிரித்தார். அவன் அன்னையை பார்த்து, “நீங்களாவது சொல்லியிருக்கலாமே மா” என்று கூற, அவர் புன்னகையுடன், “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்றார்.

அவன் கையில் இருந்த கிண்ணத்தையும் கவிப்ரியாவையும் மாற்றி மாற்றி பார்க்க, அவள் அதை வாங்கிக் கொண்டு வேறு கிண்ணத்தை அவன் கையில் வைத்து அழகு காட்டிவிட்டு சென்றாள். அந்த நொடியில் அவன் மனதை முழுமையாக அவள் ஆக்கிரமித்தாள்.அன்று நள்ளிரவில் உறக்கத்தின் நடுவில் பலத்த சத்தம் கேட்டு கண் விழித்தவள், நாற்காலி சரிந்து கிடந்ததை பார்த்தாள். அறையினுள் மித்ரஜித்தை தேடினாள். சோபாவில் அவனது மடிக்கணினி திறந்திருக்க, அவனோ பால்கனியில் இருந்தான்.

மெல்ல எழுந்து பால்கனியை நோக்கி சென்றாள். ஒரு சிகரெட்டை கையில் எடுத்தவன் முன்பு அவள் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வரவும் அதை எரிச்சலுடன் சட்டை பையினுள் போட்டான். அவள் மெல்லிய புன்னகையுடன் அவன் மடிக்கணினியை போய் பார்த்தாள். திரையில் இருந்ததை தீவிர யோசனையுடன் சிறிது நேரம் பார்த்தவள் முகமலர்ச்சியுடன் சோபாவில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ செய்யத் தொடங்கினாள்.

பத்து நிமிடங்கள் கழித்து அறையினுள்ளே வந்தவன் கோபமாக, “நீ என்ன செஞ்சிட்டு இருக்க?” என்று கேட்டான்.

மடிகணினியில் வேலை செய்தபடி கையை உயர்த்தி அவனை தடுத்தவள் ஒரு நிமிடம் கழித்து, திருப்த்தியுடன் மடிக்கணினியை அவன் பக்கம் திருப்பினாள்.

மடிக்கணினியை வாங்கி சில நொடிகள் சோதித்தவன் பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவளை பார்த்தான்.

அவள் புன்னகையுடன் சிறிது தலை சரித்து, “என்ன பாஸ்.. இவ்வளவு ஷாக் ஆகுறீங்க!!! உங்களுக்கு நிறைய தெரியும் ஆனால் எனக்கு தெரிந்தது இது மட்டும் தான் அதான் இந்த சின்ன தவறை நான் சரி செய்தேன்” என்றாள்.

அவன் மீளாத அதிர்ச்சியுடன், “நீ என்ன படிக்கிற?”

“ஏன் உங்களுக்கு தெரியாதா?”

“தெரிந்ததால் தான் இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும்.. நாள் முழுவதும் நான் போராடிக் கொண்டிருக்க நீயோ பத்து நிமிடத்தில் சரி செய்துவிட்டாய்.. Microbiologyக்கும் JAVAவிற்கும் என்ன சம்பந்தம்?”

“Microbiology என் படிப்பு, JAVA நான் கற்றுக் கொண்டது”

“இன்னமும் எனக்கு புரியவில்லை.. இரண்டிற்கும் என்ன சம்பந்தம்? எப்படி இதை படித்தாய்?”

“அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.. கி... என் பிரெண்ட் வைத்த பெட்டில் ஜெய்ப்பதற்காக, என்னால் எதையும் படிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக JAVA படித்தேன்”

“உண்மையில் நீ ரொம்ப வித்தியாசமானவள் தான்” என்று அவன் கூற அவள் விரிந்த புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள். பிறகு, “நிம்மதியா தூங்குங்க.. குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி படுக்கைக்கு சென்று படுத்தாள்.

இன்னமும் அவளை பற்றிய ஆச்சரியத்துடன் மடிக்கணினியை அனைத்து பையினுள் வைத்துவிட்டு சோபாவில் படுத்தவன் அவளை பார்த்து “தேங்க்ஸ்” என்றான்.

சிறு புன்னகையுடன் அவள் அதை பெற்றுக் கொண்ட பிறகு, அவன், “உன்னை கிரியிடம் பேச வேண்டாம் என்று சொன்னேனே தவிர அவனை பற்றி என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை” என்றான்.

சட்டென்று புன்னகை மறைய உதட்டை கடித்துக் கொண்டு தவிப்புடன் அவள் அவனை பார்க்க, அவன் சிறு புன்னகையுடன், “நான் எதுவும் தப்பாக நினைக்கவில்லை.. நிம்மதியாக தூங்கு.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி அவன் கண்களை மூடிக் கொண்டான்.

‘முழு மனதுடன் என்னை எப்பொழுது ஏற்றுக் கொள்வான்? இவனை தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை என்பதை புரிந்துக் கொள்வானா?’ என்ற கேள்விகளுக்கு விடையை தேடியபடி அவள் உறக்கத்தை துறக்க, அவனோ அலுவலக வேலை முடிந்த மகிழ்ச்சியில் அவளை பற்றிய சிந்தனையுடன் இனிதாக உறங்கினான்.இந்த சம்பவத்திற்கு பிறகு மித்ரஜித் கவிப்ரியாவை பார்க்கும் பார்வையில் சில நேரங்களில் ரசனை குடிபுகுந்திருந்தது. அதை அவள் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தாள். அவள் தன்னை கண்டு கொண்டாள் என்பதை அறிந்திருந்தும் அவன் தனது பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை.அந்த வார இறுதியில் கல்லூரியில் எரிச்சலுடன் அமர்ந்திருந்த கவிப்ரியாவை பார்த்த கார்த்திகா, “என்ன ஆச்சு? அண்ணா மனம் மாறிக்கொண்டிருப்பதாக சொன்ன! இப்போது என்ன பிரச்சனை?”

“ச்ச்.. அவர் கூட பிரச்சனை என்றால் வருத்தமாக தானே இருப்பேன்.. எரிச்சலாகவா இருப்பேன்?”

“அதானே! என்ன பிரச்சனை? எங்க சங்கத்து தலைவியுடன் பிரச்சனை பண்ணது யாரு? ம்ம் னு ஒரு வார்த்தை சொல்லு தல.. அந்த ஆளோட....................” என்று ‘வின்னர்’ திரைப்படத்தில் வருவது போல் அவள் பேசிக் கொண்டு போக, அவளை இடையில் தடுத்த கவிப்ரியா, “போ.. போய் அந்த விக்ரம் தலையை கொண்டு வா”

கார்த்திகா வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருக்க, கவிப்ரியா, “முடியாதில்ல.. அப்போ மூடிட்டு உட்காரு” என்றாள் எரிச்சலுடன்.

சில நொடிகள் கழித்து கார்த்திகா மெல்ல, “என்ன பிரச்சனை ப்ரியா? அவன் என்ன சொன்னான்?”

“ஹ்ம்ம்.. நொன்ன சொன்னான்” என்று அவள் எரிந்து விழ, கார்த்திகா, “ஏன்டி என்னிடம் கோபப்படுற.. என்னன்னு விசயத்தை சொன்னால் நானும் யோசிப்பேனே”

“வேற என்ன அதே பிரச்சனை தான்.. அவனுக்கு நான் வேணுமாம்.. நான் என்ன பொம்மையாடி? அவன் கேட்டதும் கொடுப்பதற்கு?”

கார்த்திகா அதிர்ச்சியுடன், “இன்னுமா அவன் இந்த பேச்சை விடவில்லை? உனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சுமா?”

“நீ வேற.. அவன் அதை நம்பவே இல்லை.. அவனை தவிர்க்க தான் சும்மா ஒரு தாலியை கழுத்தில் போட்டிருக்கிறேன் என்று சொல்கிறான்.. அவனை ஏமாற்ற நினைத்தால் என்னை கொன்று விடுவானாம்”

“நம்ம கிளாஸ்க்கு வந்தானா?”

“இல்லை.. வர வழியில் பார்த்து கத்தினான்.. என்னவோ அவனை காதலித்து ஏமாற்றியது போல் கத்திட்டு போறான்.. எல்லோரும் என்னை ஒருமாதிரி பார்த்த மாதிரி இருந்தது”

“லூசு.. அவனை பற்றி எல்லோருக்கும் தெரியும்.. உன்னை பற்றியும் தெரியும்.. யாரும் தப்பாக நினைக்க மாட்டாங்க”

“மித்திரன் முன்னாடி இப்படி கத்தினா போதுமே! என் லைஃப் அவ்ளோ தான்..”

“லூசு மாதிரி பேசாதே”

“இப்போ தான் அவரே மனசு மாறிட்டு வரார்.. இதுல இவன் வேற குட்டையை குழப்பாம இருந்தா சரி”

“அதுலாம் ஒன்றும் நடக்காது ஆனால் எனக்கு என்னவோ நீ விக்ரம் பற்றி அண்ணாவிடம் சொல்வது நல்லது என்று தோணுது”

“சொந்த காசில் சூன்யம் வைக்க சொல்றியா?”

“இல்லை டா.. நான் சிரியஸாக தான் சொல்கிறேன்.. விக்ரமோ ரௌடி போல் தான் நடந்துப்பான்.. போதாததுக்கு பிரின்சிபால் பையன்.. எதுக்கும் அண்ணாவிடம் சொல்வது நல்லது”

“வேற ஏதாவது நல்ல யோசனையா சொல்லு”

“நம்ம பசங்களிடம் உதவி கேட்கலாமா?”

“நானும் யோசித்தேன்.. முதலில் எனக்கு கல்யாணம் ஆனது யாருக்கும் தெரியாது.. கல்யாணத்தை பற்றி கூறி உதவி கேட்கலாம் தான் ஆனால்.. அது காலேஜ் பிரச்சனையா மாறிட கூடாது.. இப்பலாம் ஹாட் நியூஸ்-யே காலேஜ் பசங்க காலேஜ் வெளிய வெட்டு குத்து னு அலையுறது தான்.. பின்னணியில் ஒரு பொண்ணு தான் இருப்பாள்.. அப்படி ஒரு பொண்ணாக இருக்க நான் விரும்பலை”

“நீ அதிகமா யோசிக்கிற?”

“இப்பலாம் பேப்பரில் அப்படி தானே நியூஸ் வருகிறது”

“பேசாம உனக்கு கல்யாணம் ஆனதை நோட்டீஸ் போர்டில் போட்டிரலாமா”

கவிப்ரியா முறைக்கவும், கார்த்திகா, “சரி வேற ஏதாவது யோசிப்போம்” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது ஆசிரியர் வகுப்பினுள் நுழைய அவர்களது பேச்சு நின்றது. அன்று மாலை பேருந்தில் மீண்டும் கார்த்திகா விக்ரம் பற்றி மித்ரஜித்திடம் கூறும் படி சொல்ல, இவள் யோசிப்பதாக கூறினாள்.
விக்ரம் பற்றி அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் அவள் நாட்களை நகர்ந்த, விக்ரம் மீண்டும் இவளிடம் தவறாக பேசவும், அவனை பற்றி மித்ரஜித்திடம் சொல்லிவிட முடிவெடுத்தாள்.மித்ரஜித் கூறிய நண்பனின் திருமண வரவேற்பு நாள் வந்தது. அன்று அலுவலகத்தில் சக பணியாளர் ஒருவன் அவனது மனைவி அவளது முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருப்பதை பற்றி கோபமாக கூறியதை கேட்டதும் மித்ரஜித்திற்கு கிரிதரின் ஞாபகம் தான் வந்தது. ஆனால் இந்த முறை கவிப்ரியா மீது கோபம் எழவில்லை மாறாக தனது பேச்சிற்கு மதிப்பு கொடுத்து அவள் கிரிதருடன் தொடர்பை துண்டித்ததை பெருமையாக நினைத்தான். கவிப்ரியாவை பற்றி பெருமையாக நினைக்கத் தொடங்கியவனின் மனம் அவளது குறும்புகளை சிந்தித்து புன்னகைத்தது, அவனுள் இனம் புரியாத மகிழ்ச்சி பூத்தது.

அன்று முழுவதும் அவளை பற்றியே சிந்தித்தவனின் உள்ளம் அன்றே அவனது காதலை அவளிடம் சொல்லத் துடித்தது. திருமண வரவேற்பு விழா முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு தன் காதலை அவளிடம் சொல்ல நினைத்தான்.

அவன் அலுவலகத்தில் இருந்து வந்த பொழுது அவள் அழகிய பச்சை நிற பூத்தையல் செய்யப்பட சில்க் காட்டன் புடவையில் தயாராக இருந்தாள். அவளை பார்த்ததும் தன்னை மறந்து வாயிலில் நின்றவன், “ரஞ்சித்துக்கு போன் போட்டு கிளம்பிட்டானா னு கேளு ப்ரியா?” என்ற ஆனந்தியின் குரலில் தன்னை சுதாரித்துக் கொண்டு அவசரமாக மாடிக்கு சென்றான்.

கையில் மல்லிப்பூவுடன் வந்த ஆனந்தி அதை அவளிடம் கொடுத்தபடி, “நீ கிளம்பிட்டு இருந்த போது வெளியே சத்தம் கேட்டு வாங்கினேன்.. இதை வச்சுக்கோ இன்னும் அழகா இருப்ப” என்று புன்னகையுடன் கூறினார்.

கடைசி படியில் எரிக்கொண்டிருந்தவனை பார்த்தபடி, “அழகா இருக்கிறேன்னு நீங்க தான் சொல்றீங்க.. உங்க மகன் ஒரு நாளும் சொன்னதில்லை..” என்றாள்.

“அவன் மனதில் இருப்பதை அதிகம் வெளியே சொல்ல மாட்டான்..” என்று சிறு புன்னகையுடன் அவர் கூற,

“ஒருவேளை அவர் கண்ணுக்கு நான் அழகாக தெரியலையோ என்னவோ!”

அவளது மனதை திசை திருப்பும் முயற்சியுடன், “இன்னைக்கு வினோத் சைக்கோ கிட்ட மாட்டினானா னு சொல்லவே இல்லையே” என்று அவளது கல்லூரி கதையை பற்றி கேட்கவும், அவர் எதிர்பார்த்தது போல் அவள் உற்சாகத்துடன் அதை பற்றி பேசத் தொடங்கினாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, “ரஞ்சித்துக்கு போன் பண்ணியா?” என்று அவர் வினவ, அவள் சிறு ஆச்சரியத்துடன், “அவர் வந்துட்டாரே! நீங்க பார்க்கலையா? நேரா மாடிக்கு போய்ட்டார்”

“அப்படியா! அவன் கிளம்பிட்டு இருப்பான்.. சீக்கிரம் கிளம்பிடுவான்.. இந்த பூவை தலையில் வைச்சிட்டு நீயும் கிளம்பு” என்று அவளை விரட்ட, அவள் பூவை வாங்கிக் கொண்டு உற்சாகத்துடன் தங்கள் அறையை நோக்கிச் சென்றாள்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#2
அவள் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையவும் அவன் குளியலறையில் இருந்து வெளியே வந்தான். மேலாடையின்றி இடுப்பில் துண்டுடன் இருந்தான். ஈரத்துளிகள் நிறைந்த வெற்று மார்பை முதல் முறை பார்த்ததும் அவளது மனம் தடம் புரண்டது. அவன் முகத்தை பார்க்க கூச்சமாக இருக்க, ஒரு நொடி அவன் மார்பை பார்ப்பதும் அடுத்த நொடி தரையை பார்ப்பதுமாக அவள் நின்றுக் கொண்டிருந்தாள். அவளது வரவை எதிர்பார்த்திராத அவனுக்கும் முதலில் அதிர்ச்சி தான் என்றாலும் நொடி பொழுதில் தன்னை சுதாரித்துக் கொண்டவனுக்கு அவளது தடுமாற்றத்தை பார்க்க பிடித்திருந்தது. இரு கைகளையும் மார்பிற்கு குறுக்கே கட்டியபடி அவன் அவளை ரசித்துக் கொண்டிருக்க, அவள் அவன் முகத்தை பார்க்காமல், “அது.. வந்து.. அத்தை.. அத்தை ஹர்பின் குடுத்தாங்க.. பூ எடுக்க வந்தேன்.. நீங்க.. நீங்க.. இந்த நேரத்தில்.. இப்படி.. குளிப்பீங்க.. இப்படி னு எதிர்பார்க்கலை.. சாரி” என்று உளறிவிட்டு அவசரமாக வெளியேறினாள்.

அவன் மனம் நிறைந்த புன்னகையுடன் கிளம்பத் தொடங்கினான். படபடத்த இதயத்துடன் கீழே சென்றவளை, “என்ன ப்ரியா! பூ வைக்கலையா?” என்ற ஆனந்தியின் குரல் தடுத்து நிறுத்தியது.

அவரிடம் பதில் சொல்ல திணறியவள், “அது.. வந்து.. அத்தை.. காலையில் எல்லோ ரோஸ் பூத்திருந்ததை பார்த்தேன்.. அதை பறிக்க வந்தேன்” என்று கூறிவிட்டு அவசரமாக தோட்டத்திற்கு சென்றாள். சில நொடிகளில் தன் மனதை இயல்பிற்கு கொண்டு வந்தவள் மஞ்சள் நிற ரோஜாவை பறித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

ஆனந்தி, “சீக்கிரம் தலையில் வச்சிட்டு கிளம்பு” என்று விரட்ட, தங்கள் அறையை நோக்கி செல்ல தொடங்கியவளை மீண்டும் பதற்றம் பற்றிக் கொண்டது.

இந்த முறை நேராக உள்ளே செல்லாமல் அவள் கதவை தட்டவும், அவன் மனதினுள் புன்னகைத்துவிட்டு, “கதவு திறந்து தான் இருக்கிறது” என்றான்.

படபடத்த இதயத்துடன் உள்ளே நுழைந்தவள் அவனை பார்க்காமல் தனது ஒப்பனை மேசை முன் அமர்ந்தாள். ஒருவழியாக ஐந்து நிமிடங்கள் கழித்து ஹர்பின்னை கண்டு பிடித்தவள் தலை குனிந்தபடி பூவை தலையில் வைத்துக் கொண்டிருந்த போது, “என் கண்களுக்கு நீ அழகாக தெரியவில்லை என்று நான் எப்போது சொன்னேன்?” என்ற அவனது கிசுகிசுப்பான குரல் காதின் மிக அருகில் கேட்கவும் திடுக்கிடலுடன் எழுந்தவள் தடுமாறி கீழ விழ போக அவளது தோளை பற்றி நிறுத்தினான். அவனது தொடுகை தன்னுள் மின்சாரம் தாக்கியது போல் இருக்க, உணர்ச்சிகளுடன் போராடியபடி மெல்ல பார்வையை உயர்த்தி கண்ணாடியை பார்த்தவள், அவள் பின்னால் நின்று கொண்டிருந்தவனின் முகம் அவளது முகத்திற்கு மிக அருகில் இருக்கவும் அதிர்ச்சியுடன் கண்ணாடியையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் அதை ரசித்தபடி கையை எடுக்காமல் பிடியை மற்றும் சிறிது தளர்த்தியபடி, இதழில் மெல்லிய புன்னகையுடன் பேச்சை தொடர்ந்தான்.

“இந்த புடவையில் உன்னை பார்க்கும் போது ‘பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே’ னு பாட தோணுது” என்று கூற அவளது விழிகள் மேலும் விரிந்தது.

அவன் விரிந்த புன்னகையுடன், “உன் முகத்தில் எனக்கு ரொம்ப பிடித்தது என்ன தெரியுமா?” என்று கேட்டு கண்ணாடி வழியாக பார்க்க, அவள் முற்றிலும் வாயடைத்துப் போனாள். அவள் தான் காண்பது நிஜமா என்ற சந்தேகத்தில் கண்களை இரண்டுமுறை சிமிட்ட, அவன் சத்தமின்றி உல்லாசமாக சிரித்தபடி வலது கை ஆள் காட்டி விரலால் அவள் கண்களை சுட்டி காட்டியபடி, “உன் வாயை விட அதிகமாக காவியம் பேசும் உன் விழிகளை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் பட்டாம்பூச்சி போல் படபடக்கும் நேரங்களில் இந்த விழிகளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..” என்றபடி அவளை மெல்ல தன் பக்கம் திருப்பினான்.

அவன் சொன்னதினாலோ அல்லது நெஞ்சின் படபடப்பு காரணமாகவோ அவளது விழிகள் நொடிக்கொரு முறை சிமிட்டிக்கொள்ள, அவன் முற்றிலும் தன் வசம் இழக்கத் தொடங்கினான்.

இன்னும் கிசுகிசுப்பான குரலில், “உன் இதழ்களையும் பிடிக்கும் ஆனால் பார்ப்பதற்கு அல்ல” என்றபடி வலது கையை அவள் இடது கன்னத்தில் மென்மையாக வைக்கவும் அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

மென்னகையுடன் சுருங்கிய அவளது புருவங்களை நீவிவிட்டவன் அடுத்து என்ன செய்திருப்பானோ, பூஜை வேளை கரடியாக அவனது கைபேசி ஒலிக்கவும் எரிச்சலுடன் அதை எடுத்து பார்த்தவன் அலுவலகத்தில் இருந்து முக்கியமான அழைப்பு என்றதும் பால்கனி சென்று அவளை திரும்பிப் பார்த்தபடி பேசத் தொடங்கினான்.

அவள் நடந்தது கனவா நிஜமா என்பதை உறுதி செய்துக் கொள்ள தன் கைகளை கிள்ளி கொண்டிருந்தாள். இதை பார்த்ததும் மனதின் எரிச்சல் மறைய, புன்னகையுடன் பேசிவிட்டு உள்ளே வந்தவன் எதுவும் நடக்காதது போல், “கிளம்பலாமா?” என்றான்.

மனதினுள் எழுந்த ஏமாற்றத்தை மறைத்து, “ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டினாள்.

விழாவிற்கு செல்லும் வழியில் அவள் அவனை பார்ப்பதும், அவன் அவளை பார்க்கும் முன் சாலையை பார்ப்பதுமாக வர, சாலை நெருக்கடி இல்லாத ஆள் அரவம் சற்று குறைவாக இருந்த ஒரு இடத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

அவள் ‘என்ன’ என்பது போல் பார்க்க, அவன், “என்ன கேட்கணும்?” என்று வினவ, அவள் சொல்வதறியாது கண்களை விரித்தாள்.

அவன் புன்னகையுடன், “உனக்கு என்னிடம் என்ன கேட்கணும்?”

மனதினுள், ‘வீட்டில் போன் வருவதற்கு முன் என்ன சொல்ல வந்தீங்க?’ என்ற கேள்வி எழுந்தாலும் அதை வெளியே கேட்க முடியாமல், கண்களை சிமிட்டியபடி, ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.

அவன் அவளது கன்னத்தை லேசாக தட்டியபடி மென்னகையுடன், “நீ வாய் திறந்து சொல்லாததை உன் விழிகள் சொல்லிவிட்டது” என்றதும் அவள் எழும்பாத குரலில், “நிஜமாவே ஒன்றுமில்லை” என்றாள்.

அவன் உல்லாசமாக வாய்விட்டு சிரித்தபடி வண்டியை கிளப்பினான். அவள் அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவள் மனதின் அலைப்புருதலை அவளது கண்கள் தெளிவாக வெளிபடுத்த அவன் தன்னுள் புன்னகைத்துக் கொண்டான். சில நிமிடங்கள் அவளது அவஸ்த்தையை ரசித்தவன் சாலையில் பார்வையை பதித்தபடி, “இப்ப என்ன! வீட்டில் வைத்து நான் என்ன சொல்ல வந்தேன் என்று தெரிஞ்சிக்கனுமா?”

சட்டென்று தனது சிந்தனையிலிருந்து விடுபட்டவள், “ஹ்ம்ம்.. என்ன கேட்டீங்க?”

இப்பொழுது அவளை நன்றாக பார்த்தபடி, “போன் வந்ததுக்கு முன் என்ன சொல்ல வந்தேன்னு தெரியனுமா?”

அவள் ஆம் என்றும் இல்லை என்றும் அவசரமாக தலையை ஆட்ட, அவன் சாலையில் கவனத்தை பதித்து அவளை ஓரப்பார்வை பார்த்தபடி சிறு புன்னகையுடன், “தெரிந்துக் கொள்ள வேண்டுமா வேண்டாமா?”

அவள் சிறு வெக்கத்துடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட, அதை ரசித்தபடி அவன், “வாயை திறந்து பதில் சொல்லு” என்றான்.

“....”

“என்ன பதிலை காணும்!” என்று அவன் சிரிக்கவும், அவள் கண்ணில் குறும்புடன், “நான் வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும் என் கண்கள் சொல்லிவிடும் னு சொன்னீங்களே” என்றாள்.

அவன் கண்ணில் மின்னனுலடன் அவளை திரும்பி பார்க்க, அவள் இதழில் புன்னகையுடன் புருவம் உயர்த்தினாள். அவளது இந்த செய்கையில் அவன் தன்வசமிழக்க தொடங்க அவனது மனம் வீட்டிற்கு திரும்பிவிடலாமா என்று யோசித்தது. அவனது எண்ண ஓட்டத்தை அறியாதவள் “என்ன பதிலை காணும்!” என்று அவனை போலவே சொல்லிக்காட்டி கண்சிமிட்டி சிரிக்கவும் அவனது மனம் முற்றிலும் அவளிடத்து சரணடைந்தது. மற்ற வாகனங்களின் ஒலியில் தன் மனதை ஒருவாறு ஒருநிலைப் படுத்தியவன் சாலையில் கவனத்தை செலுத்தினான்.

அவன் சட்டென்னு அமைதியாகிவிடவும் அவள் ஏமாற்றத்துடன் குழம்பினாள். சில நொடிகள் மௌனத்தில் கழிய அவளது ஏமாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் மெல்லிய குரலில், “இதை பற்றி நாம வீட்டிற்கு போய் பேசலாமா?” என்று வினவினான்.

அவள் மெல்லிய கோபத்துடன், “நீங்க தானே தெரிஞ்சிக்கனுமா னு கேட்டீங்க! எனக்கு இப்பவே தெரிஞ்சிக்கணும்” என்று சிறு குழந்தை போல் அடம்பிடிக்கவும், அவனது அனுமதியின்றி அவனது இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.

“வீட்டில் அந்த நேரத்தில் நான் எதையும் சொல்ல வரலை”

அவள் அவனை முறைக்கவும், அவன் விரிந்த புன்னகையுடன், “நிஜமா தான் சொல்றேன்”

அவள் முறைப்புடன், “அப்புறம் ஏன் என்ன சொல்லவந்தேன்னு தெரிஞ்சுக்கனுமா னு கேட்டீங்க”

ஏதோ சொல்லவந்தவன் மென்னகையுடன் நிறுத்திக் கொள்ளவும் அவள், “சொல்லுங்க” என்றாள்.

அவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளது விழிகளை காதலுடன் பார்த்தபடி, “உண்மையாகவே நான் எதையும் சொல்ல வரலை.. ஆனா..” என்று கூறி நிறுத்தியவன், “கொஞ்சம் யோசித்தால் உனக்கே புரியும்” என்று கூறிவிட்டு வண்டியை கிளப்பினான்.

அவளுக்கு புரிந்தாலும் அதை அவன் வாய் மொழியாக கேட்க விரும்பினாள். சில நொடிகள் அமைதியாக இருந்தவள், அவனை ஓரப்பார்வை பார்த்தபடி, “எனக்கு புரிகிறது இருக்கட்டும்.. அதை உங்கள் வாயால் சொல்லலாமே” என்றாள்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#3
அவளை திரும்பி பார்த்தவன், பதில் கூறாமல் CD ப்ளேயரை இயக்கினான். அதில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல் ஒலித்தது.

“இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இது போலே நானும் இல்லையே


“இந்த பாட்டை கேட்டிருக்கியா?” என்று அவன் வினவ அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள். அவன் சிறு புன்னகையுடன், “நீ கேட்ட பதில் இதில் இருக்கிறது” என்று கூறிவிட்டு சாலையில் மிகவும் கனமாக இருப்பது போல் நடித்தான். முன்பு இந்த பாடலை கேட்டிருந்தாலும் இப்பொழுது மிகவும் உன்னிப்பாக கேட்கத் தொடங்கினாள்.

“கடலலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னை விட்டு மெதுவாய் அது போக கண்டேனே ”


இருவரின் மனமும் ஒருநிலையின்றி தவித்தது. அது ஒரு சுகமான இம்சை. அவர்கள் திருமண மண்டபத்தை அடைந்திருந்தார்கள். அவன் வண்டியை வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு செலுத்தினான்.

“இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்பவில்லை
கனவுக்குள் கனவாய்
என்னை நானே கண்டேனே”


உண்மையில் அவர்கள் இருவரும் அப்பொழுது கலைக்க விரும்பாத கனவு உலகில் தான் இருந்தனர்.

“எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று”


அவன் அவளை சட்டென்று திரும்பி பார்க்க, அவளும் அப்பொழுது அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடிகள் அவர்கள் தனி உலகில் மிதந்தார்கள். வார்த்தைகள் இன்றி உணர்வுகளால் பேசிக்கொள்ளும் அழகான தனி உலகம் அது. பாடல் தொடர்ந்து ஒலித்தது ஆனால் அது அவர்கள் செவியை எட்டவில்லை. அந்த இடத்தின் பாதுகாவலர் மூடிய ஜன்னலை தட்டவும், சுயநினைவிற்கு வந்தவன் கண்ணாடியை இறக்கி என்னவென்று கேட்டான். அவர் வண்டியை மற்றொரு இடத்தில் நிறுத்த சொல்லவும், அமைதியாக நிறுத்திவிட்டு எதுவும் நடக்காதது போல், “வா போகலாம்” என்று கூறி கதவை திறந்து இறங்கினான்.

‘ஏன் திடீர் திடீர் னு இப்படி சட்டென்று மாறிவிடுகிறான்?’ என்ற குழப்பத்துடன் அவளும் அமைதியாக அவனை பின் தொடர்ந்தாள்.

உள்ளே சென்றவன் பத்து நிமிடங்கள் பழைய கல்லூரி தோழர்களுடன் சிரித்து பேசிவிட்டு, கண்ணசைவில் அவளை அழைத்துக் கொண்டு மேடையேறி பரிசை நண்பனிடம் கொடுத்தான்.

புன்னகையுடன் மித்ரஜித்தை தழுவியபடி பரிசை பெற்றுக்கொண்ட மணமகன் கவிப்ரியாவை பார்த்து, “என்ன சிஸ்டர் வாழ்க்கை சுவாரசியமா போகுதா இல்லை போர் அடிக்குதா?” என்று வினவினான்.

கவிப்ரியா புரியாமல் பார்க்கவும் மணமகன், “கல்லூரியில் இவனுக்கு என்ன பட்டபெயர் என்று சொல்லியிருக்கானா?”

மனதினுள் ‘சாமியார் னு வச்சிருப்பாங்களோ’ என்று நினைத்தவள் அதை வெளியே சொல்லாமல் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

மணமகன், “இவன் பொண்ணுங்க இருக்கிற பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.. அதனால் சாமியார் என்று சொல்லுவோம்.. இப்போ என் கேள்வி புரியும் என்று நினைக்கிறேன்”

அவள் தான் நினைத்தது சரியாக இருக்கவும் புன்னகையுடன், “கொஞ்சம் போர் தான்” என்றாள். மித்ரஜித்தை சாமியார் கோலத்தில் கற்பனை செய்து பார்த்தவள் குறும்புடன் தன்னவனை பார்க்கவும். அவள் கண்கள் சொன்ன செய்தியில் அவளது குறும்பை புரிந்து கொண்டவன் நண்பனின் முதுகை தட்டி, “போதும் டா” என்றான்.

மணமகன், “ஸ்ரீதர் எப்படி இருக்கிறான் டா? நீயும் அவனும் சேர்ந்து வருவீங்க என்று நினைத்தேன்”

ஸ்ரீதர் பெயரை கேட்டதும் கவிப்ரியாவின் மனதில் சிறு அதிர்வு ஏற்பட்டது, ஆனால் மித்ரஜித்தோ புன்னகையுடன், “நீ உன் மனைவியுடன் வெளியே போகும் போது சொல்லு நானும் கூட வரேன்” என்றான்.

மணமகன் சிரிப்புடன், “ஸ்ரீதரை கரடி என்கிறாயா!!! ஹ்ம்ம்.. தேறிட்ட டா.. சிஸ்டர் ட்ரயின்னிங் போல” என்றான்.

மணமகள், “இவர் எப்படி அண்ணா?” என்று வினவ மணமகன் நண்பனை கண்களால் கெஞ்சினான். ஆனால் அதை பொருட்படுத்தாத மித்ரஜித், “ப்ளே பாய் இல்லை என்றாலும் சாமியாரும் கிடையாது” என்றான்.

மணமகன் பீதியுடன், “ஏன் டா முதல் நாளே கொளுத்திப் போடுற?”

மித்ரஜித் சிரிப்புடன், “அப்போ ஒரு வாரம் கழித்து வந்து உன் வண்டவாளங்களை பற்றி சொல்லவா?”

“ஏன் டா!! உன்னை பற்றி நல்ல விதமாக தானே சொன்னேன்”

“நான் நடந்துக் கொண்ட விதம் அப்படி.. ஆனால் நீ” என்று அவன் வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தவும், மணமகன் அழுதுவிடுபவன் போல், “டேய்” என்று அலற, அவன், “சரி.. சரி.. கலவரப்படாத” என்று கூறிவிட்டு மணமகளை பார்த்து, “சும்மா தான் கலாட்டா செய்தேன்.. கவலை வேண்டாம்.. இவன் காதலிக்கும் முதல் பெண் நீங்கள் தான்” என்றதும் மணப்பெண் காதலுடன் தன்னவனை பார்க்க, அவனும் காதலுடன் தன்னவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். மணமக்களின் மோன நிலை அழகிய புகைப்படமாக மாறியது.


மித்ரஜித்தின் புன்னகை ததும்பிய முகத்தையும் அவனது இந்த கலாட்டாவை இதழில் புன்னகையுடன் கவிப்ரியா ரசித்துக் கொண்டிருந்தாள். விதியின் விளையாட்டை அறியாதவளின் மனம் இனி தன் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும் என்று ஆனந்தத்துடன் சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தது.

இருவரும் கீழே இறங்கி உணவுண்ண சென்றனர். உணவின் நடுவில் அவள் அவனை ஓரப்பார்வை பார்த்தபடி புன்னகைக்கவும், அவன் இலையில் பார்வையை பதித்தபடி, “இன்னும் எவ்வளவு நேரம் என்னை சாமியார் கோலத்தில் கற்பனை செய்வ?” என்றதும் அவள் சிறு அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவன் புன்னகையுடன் அவளை பார்த்து, “சாப்பிடு” என்றான். அவள் சிறு தலையசைவுடன் உண்பதை தொடர்ந்தாள்.

சில நொடிகளில் அவன் கற்பனையில் புன்னகைக்கவும், சிறிது யோசித்தவள், “என்ன என்னை மேனகையாக நீங்க கற்பனை செய்தீர்களாக்கும்?” என்றதும் இப்பொழுது சிறு அதிர்ச்சியுடன் பார்ப்பது அவன் முறையாயிற்று.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக புன்னகைத்தனர். இதை பொறாமையுடன் இரு விழிகள் பார்த்தது.

இருவரும் கை கழுவ சென்ற இடத்தில ஒரு பெண் இதழில் செயற்கை புன்னகையுடன், “ஹாய் ரஞ்சி.. சாரி ரஞ்சித்” என்றாள்.

அவளை பார்த்ததும் அவன் எரிச்சலுடன் புருவம் சுழிக்க, அவளோ கவிப்ரியாவின் முகத்தை ஓரப்பார்வையில் அளவெடுத்தாள். [சந்தேகமே வேண்டாம் பொறாமையுடன் பார்த்த விழிகளுக்கு சொந்தக்காரி இந்த பெண் தான்]

கணவனின் எரிச்சலை கவனித்த கவிப்ரியா அந்த பெண்ணை சாதரணமாக பார்த்தாள். கவிப்ரியாவின் முகம் தெளிவாக இருக்கவும் தனது எரிச்சலை மறைத்து, புன்னகையுடன், “இவங்க தான் உன் மனைவியா? ரொம்ப அழகா இருக்காங்க.. பெயரென்ன?” என்று கேட்டவள் அடுத்த நொடியே, “ஹ்ம்ம்.. ஞாபகம் வந்திருச்சு.. தர்ஷினி தானே” என்றாள்.

மித்ரஜித் தனது உணர்வுகளை கட்டுபடுத்த கை முஷ்டியை இறுக்கமாக மூடினான். அதை கண்டு கவிப்ரியா கலவரமடைய, அந்த பெண்ணோ திருப்த்தியுடன் புன்னகைத்தாள்.

கவிப்ரியா மனதின் கலவரத்தை வெளிக்காட்டாமல் அந்த பெண்ணை பார்த்து, “என் பெயரை நல்ல ஞாபகம் வச்சிருக்கீங்களே.. ஆனா எனக்கு தான் உங்களை எங்கள் திருமணத்தில் பார்த்த ஞாபகம் இல்லை” என்றாள்.

‘இவள் பெயர் தர்ஷினியா? அவள் தான் ஓடி போய்விட்டாள் னு சொன்னாங்களே’ என்று மனதினுள் பேசியவள் குழப்பமும் அதிர்ச்சியுமாக கவிப்ரியாவை பார்க்க, அவளோ கணவன் தன்னை முறைத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தும் அவன் பக்கம் திரும்பாமல் இவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த பெண் அடுத்த கேள்வியை கேட்கும் முன் மித்ரஜித் உணர்ச்சியற்ற குரலில், “கிளம்பலாம்” என்று கூறிவிட்டு நகர, கவிப்ரியாவும் அவனுடன் நகர்ந்தாள். அந்த பெண்ணின் முகத்தை திரும்பிப் பார்த்தவள் மனதினுள் புன்னகைத்துக் கொண்டாள்.

காதல் துளிரும்♥♥♥
 
Advertisement

Sponsored