துளி - 12

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1

Epi12.png


மேஜை பணியாளர் வரவும் அவன் தேவையான உணவுகளை கூறினான். கார்த்திகாவிடம் அவளுக்கு வேண்டியதை கேட்டு சொன்னவன் கவிப்ரியாவிற்கு பிடித்தமான உணவை அவளிடம் கேட்காமலேயே அவன் சொன்னதில் அவள் ஆச்சிரியம் கொண்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கோபமான முகத்திரையுடன், “எனக்கு அது பிடிக்காது” என்றாள்.

மேஜை பணியாளரிடம், “நீங்க கொண்டுவாங்க” என்று கூறி அனுப்பியவன் அமைதியாக அவளை பார்க்க, கார்த்திகா ஒன்றும் அறியாதவள் போல், “உனக்கு தான் இது ரொம்ப பிடிக்குமே! எப்போதும் இதை தானே ஆர்டர் பண்ணுவ!”

அவன் புருவம் உயர்த்த, அவள் சட்டென்று முகத்தை திருப்பி கார்த்திகாவை கடுமையாக முறைத்தபடி, “ரொம்ப நடிக்காத.. எங்களுக்குள் பிரச்சனை என்பது உனக்கு தெரியும் னு எனக்கு தெரியும்.. என்ன பார்க்கிற.. உள்ளே வந்ததும் இவர் உன்னிடம் கண் ஜாடை காட்டியதையும் பார்த்தேன், நீ உடனே கை கழுவுற மாதிரி எழுந்து போனதையும் பார்த்தேன்”

கார்த்திகா, “இல்ல ப்ரீ.. அது...”

“இவர் சொன்னதும் ரொம்ப உருகிட்டீங்களோ! பெருசா சேர்த்து வைக்க கிளம்பிட்டீங்களோ! என்ன மாமி வேலை பார்க்கிறியா?”

அவள் கூறியதை சில நொடிகள் கழித்து புரிந்துக் கொண்ட மித்ரஜித் கடுமையான குரலில், “கவி என்ன பேச்சு இது?” என்று கூற அவளும் கடுமையான குரலில், “நான் என் தோழியிடம் தான் பேசிட்டு இருக்கிறேன்.. நீங்கள் நடுவில் வராதீங்க..” என்றாள். [மித்ரஜித்தின் கவி என்ற அழைப்பை அவனும் உணரவில்லை அவளும் கவனிக்கவில்லை]

அவன் ஏதோ கூற வர, அவள் மேலும் கடுமையான குரலில், “நான் பேசியதிற்கு காரணம் நீங்கள் தான்.. இவளை எதற்கு உங்களுடன் கூட்டு சேர்க்கிறீங்க?” என்றவள் சிறிது உடைந்த குரலில், “இப்போதைக்கு இவளது நட்பு மட்டும் தான் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.. அதையும் கெடுத்துறாதீங்க” என்றதும் அவளை அடிபட்ட வலியுடன் பார்த்தவன் இறங்கிய குரலில், “சாரி” என்றான்.

இருவரும் மெளனமாக மேஜையை பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திகா இருவரையும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உணவுகள் வந்ததும் மனதை கடினப்படுத்திக் கொண்டு கார்த்திகா சொன்னதை கவிப்ரியா எடுத்து உண்ண தொடங்க, கார்த்திகா இயலாமையுடன் மித்ரஜித்தை பார்க்க, அவன் மெலிதாக புன்னகைத்து கண்ணசைவில் உண்ண சொன்னதும் கவிப்ரியாவின் உணவை உண்ண தொடங்கினாள்.

உணவின் நடுவில் மித்ரஜித்திற்கு புரையேற ஒரு நொடி கூட தாமதிக்காமல் கவிப்ரியாவின் கை அவளது அனுமதியின்றி தண்ணீரை அவன் அருகில் வைத்தது. அவன் அமைதியாக மனம் குளிர அந்த நீரை பருகினான். தனது செயலை தாமதமாக உணர்ந்தவள் உதட்டை கடித்தபடி அமர்ந்திருக்க, அவன், “இதனால் நீ என்னை மன்னித்துவிட்டதாக நினைக்க மாட்டேன்.. சாப்பிடு” என்று கூற, அவனது கரிசனத்தில் தன் மீது கோபம் அதிகரிக்க செய்வதறியாது பாதி உணவில் கையை கழுவினாள்.

கார்த்திகா ஏதோ கூற வர அவளை கண்ணசைவில் மித்ரஜித் தடுத்தான்.

“ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்று தெளிவில்லாமல் முணுமுணுத்துவிட்டு எழுந்து சென்றாள்.


அவள் சென்றதும் அவன் கார்த்திகாவிடம் மன்னிப்பு கேட்க, கார்த்திகா, “நீங்க பீல் பண்ற அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை.. இந்த வார்த்தை நாங்கள் கிண்டலாக சொல்லும் வார்த்தை தான்.. நாங்க இதற்கு முன் கோபத்தில் இதை விட கேவலமா எவ்வளவோ பேசியிருக்கோம்” என்று கூறி புன்னகைக்க, அவளது முயற்சிக்காக அவனும் சிறிது புன்னகைத்தான்.

அப்பொழுது மேஜை பணியாளர் அவர்கள் அருகில் வரவும் கார்த்திகாவிற்கு வேற எதுவும் வேண்டுமா என்று கேட்டவன், அவள் வேண்டாம் என்றதும் கவிப்ரியாவின் தட்டையும் தனது தட்டையும் எடுத்துச் செல்ல கூறினான்.

கார்த்திகா அமைதியாக அமர்ந்திருக்க, அவன், “எங்கள் பிரச்சனையில் நீ ஏன் சாப்பிடாம இருக்க? சாப்பிடு” என்றான்.

மனமின்றி அவனது வற்புறுத்தலுக்காக அவள் உண்ண தொடங்கவும் கவிப்ரியா வந்தாள். அவள் முகத்தில் இருந்தே அவள் அழுதிருப்பது தெரிய கார்த்திகா அவசர அவசரமாக உணவை முடித்துவிட்டு கையை தட்டில் கழுவினாள். பிறகு மித்ரஜித்தை பார்த்து, “நாங்க காரில் இருக்கிறோம் அண்ணா.. பில் கட்டிட்டு வாங்க” என்று கூற அவனும் மறுபேச்சின்றி வண்டி சாவியை நீட்டினான்.


வண்டியினுள் அமர்ந்ததும் கார்த்திகா தோழியின் தலையை வருட, அவள் மெல்லிய குரலில், “சாரி டி” என்றாள்.

“ஹே லூசு.. இதை விட அதிகமா நாம சண்டை போட்டதே இல்லையா! எதுக்கு இப்படி பீல் பண்ற?”

கவிப்ரியா தோழியின் மடியில் தலை வைத்து கண்கலங்கவும், அவளது தலையை மென்மையாக வருடிய கார்த்திகா, “ப்ரீ அண்ணா ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறார் என்று புரியுது.. ஆனால் அவர் இப்போ ரொம்ப வருத்தப்படுகிறார்.. உன்னை சந்தோசமா வச்சிக்கணும்னு நினைக்கிறார்.. அவருக்கு உன் மீது பாசமும் அன்பும் காதலும் அதிகமாக இருக்கிறது.. உன்னை சமாதனப்படுத்த தெரியாமல் தவிக்கிறார்.. நீயும் அவர் மேல் அளவுகடந்த காதலை வைத்திருக்கிறாய்.. அவரை மன்னிக்க முயற்சிக்கலாமே”

இரண்டு நொடிகள் மௌனத்திற்கு பிறகு கவிப்ரியா, “அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியலையேடி” என்று இயலாமையுடன் கூற, கார்த்திகா பெருமூச்சொன்றை வெளியிட்டபடி, “ஹ்ம்ம்.. காலம் உன் மனதை மாற்றட்டும்” என்றாள்.

அதன் பிறகு அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. மித்ரஜித் வந்து அமைதியாக வண்டியை கிளப்பினான். வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் பொதுவாக, “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

கார்த்திகா மித்ரஜித் பற்றி எதுவும் பேசாமல் கல்லூரி விஷயகளை பற்றி பேசி தோழியை சிரிக்க வைத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள். அவள் கிளம்பிய பிறகு தனிமையில் யோசித்த கவிப்ரியா தனது செய்கையில் தன்னையே நொந்துக் கொண்டாள்.

வீட்டில் இருந்து நேராக கடற்கரைக்கு சென்ற மித்ரஜித் சீறிப் பாய்ந்த அலைகளை வெறித்து பார்த்தபடி ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தான். பிறகு மணியை பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிச் சென்றான். அவன் சென்றபோது அவள் உறங்கியிருந்தாள். அதாவது உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தாள். அதை அறிந்த அவனும் அவளை தொந்தரவு செய்யாமல் சோபாவில் படுத்துக் கொண்டான். தன் சிந்தனையில் சுழன்ற இருவரும் எப்பொழுது தூங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் பழையபடி இருவருக்குமிடையே பேச்சு வார்த்தை இன்றி கழிய, மூன்றாவது நாள் காலையில் தாமதமாக எழுந்ததால் பரபரப்பாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவள் அவன் விழித்ததும், அவன் முகத்தை பார்க்காமல் “இன்னைக்கு ஒரு நாள் மதியம் வெளியே சாப்பிட்டுக்கோங்க” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் கல்லூரிக்கு கொண்டு செல்லும் பையினுள் புத்தகங்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.

அவன், “உன்னுடன் பேசணும்” என்றான்.

அவள் அதை கண்டு கொள்ளாமல் கிளம்பிக் கொண்டிருக்கவும் அவன் சத்தமின்றி பெருமூச்சொன்றை வெளியிட்டுவிட்டு, “இன்னைக்கு நைட் நான் பெங்களூர் கிளம்புறேன்.. திரும்பி வருவதற்கு ஒரு வாரம் ஆகும்.. நீ இங்கே தனியா இருக்க வேண்டாம்.. உன் அப்பா வீட்டிற்கு போகிறாயா?” என்று அவன் வாக்கியத்தை முடிப்பதற்குள், “வேண்டாம்” என்ற பதில் அவளிடமிருந்து வந்தது.

“தனியா இங்க...................”

“எனக்கு யார் துணையும் தேவை இல்லை” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினாள்.

“அப்படி என்னால் விட முடியாது.. நான் உன் அப்பாவிடம் பேசுகிறேன்.. உனக்கு அங்க போக விருப்பம் இல்லை என்றால், உன் அம்மா இங்கே வந்து இருப்பார்கள்”

அவனை கோபத்துடன் பார்த்தவள், “எனக்காக முடிவெடுக்க நீங்கள் யார்?” என்று சீறினாள்.

ஏதோ கூற வாய் திறந்தவன் தனது உணர்ச்சியை கட்டுபடுத்திக் கொண்டு அவளை அமைதியாக பார்த்தபடி தனது கைபேசியை எடுக்கவும், அவள், “அவங்க இங்க வந்தால் நான் இந்த வீட்டை விட்டு போய்விடுவேன்” என்றாள்.

அவன் கோபத்துடன், “என்ன பேச்சு இது? உன் அம்மாவை தானே வர சொல்கிறேன்”

“நான் தனியாக இருந்துப்பேன்”

“உன் அம்மா அப்பா கூட தானே இருக்க சொல்கிறேன்.. ‘நீ என்ன சொல்றது! நான் அதை கேட்பதா?’ னு நினைப்பதுற்கு இது நேரம் இல்லை”

அவனை கண்டுக் கொள்ளாமல் அவள் அறையை விட்டு வெளியேற முயற்சிக்கவும் அவன் அவள் கையை பற்றி நிறுத்தினான்.

அவள் கையை விடுவிக்க முயற்சித்து முடியாமல் கோபத்துடன், “கையை விடுங்க” என்றாள்.

அவன் பிடியை தளர்த்தாமல் அவளை தீர்க்கமாக பார்க்கவும், அவள், “நீங்கள் தொடுவது எனக்கு பிடிக்கவில்லை”

அவன் பார்வையை விலக்காமல் அழுத்தமான குரலில், “ஏன் கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கிறதோ! மௌனராகம் ரேவதி னு நினைப்பா!”

அவள் முறைப்புடன், “எனக்கு எந்த நினைப்பும் இல்லை.. எனக்கு பிடிக்கலை.. வெறுப்பா இருக்குது.. அவ்ளோ தான்.. கையை எடுங்க” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறவும், அவள் கையை பிடித்து இழுத்து, “என்ன பிடிக்கலை?” என்று கோபமாக கேட்டவன், “இது வெறுப்பா இருக்குதா?” என்று கோபமாக ஆரம்பித்து இறுதியில் மென்மையான குரலில் கேட்டபடி மென்மையாக அணைக்கவும் அவள் ஒரு நொடி செய்வதறியாது தடுமாறினாள். ஆனால் அடுத்த நொடியே அவள் விடுபடும் முயற்சியுடன் திமிரவும், அவன் அவளை மெல்ல விடுவித்து கையை மட்டும் மென்மையாக பற்றியபடி, “சூடு கண்ட பூனையின் நிலையில் இருந்த நான் செய்த தப்பை மன்னிக்க மாட்டியா?” என்று இறங்கிய குரலில் சிறு கெஞ்சலுடன் வினவினான்.

அவள் மெளனமாக இருக்கவும், அவன், “உன் நம்பிக்கையை உடைத்தேன் என்று இனி என்னை நம்ப முடியாதென்று சொல்றியே.. அதை போல் தானே நானும்.............................”

அவள் கடும் கோபத்துடன், “ஹலோ மிஸ்டர்.. நான் ஒன்றும் யாரோ செய்த நம்பிக்கை துரோகத்திற்காக உங்களை நம்ப மறுக்கவில்லை.. நீங்கள் செய்த..................”

அவன் பிடியை இறுக்கியபடி, “அப்படி என்னடி நம்பிக்கை துரோகம் செய்தேன்! நீ இருக்கையில் இன்னொரு பெண்ணுடன் படுத்தேனா?”

கையை பலமாக ஆட்டி விடுவிக்க முயற்சித்தபடி கண்ணில் பெரும் சீற்றத்துடன், “துரைக்கு அப்படி வேற ஆசை இருக்குதோ!!! அப்படி மட்டும் ஏதேனும் நடந்துது உங்களை கொன்னுறுவேன்”

சட்டென்று கோபம் மறைந்து அவன் சிறு புன்னகையுடன், “இப்போது நீ சொன்னதின் அர்த்தம் என்ன?” என்று வினவ, அவள் எரிச்சலுடன், “என்ன?” என்றாள்.

“நீயே என்னை வெறுக்க நினைத்தாலும் அது உன்னால் முடியாது”

ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்.. போய் வேலையை பாருங்க.. எனக்கு நேரமாச்சு” என்று கூறியபடி கையை உருவிக் கொண்டு வேகமாக நகர்ந்தவள், அவன் வாய்விட்டு சிரிக்கவும், அறை வாசலில் நின்று திரும்பி பார்த்து, “இந்த பெங்களூர் பயணம் அலுவலக வேலையா அல்லது” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டு நிறுத்தவும், அவன் முகத்தில் புன்னகை மறைய உணர்ச்சியற்ற குரலில், “என்னை காயபடுத்துவதாக நினைத்து உன்னை நீயே தாழ்த்திக்காதே” என்று கூறவும் அவள் தோளை குலுக்கிவிட்டு கீழே சென்றாள்.

அப்பொழுது அவனது கைபேசிக்கு குறுஞ்செய்தி வரவும் அதை பார்த்தான். அனுப்பியது கவிப்ரியா தான். தான் தனியாகவே இருந்துக் கொள்வதாக குறுஞ்செய்தி அனுபியிருந்தாள். அவன் யோசனையுடன் கார்த்திகாவை அழைத்தான்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#2
குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு வீட்டை விட்டு இயந்திரத்தை போல் கிளம்பி சென்றவளின் மனதில் கோபமும் சிறு குழப்பமும் சிறு பயமும் எழுந்தது. இரண்டு நாட்கள் முன்பு கல்லூரிக்கு வந்தவனின் பார்வையில் கண்ட காதலில் சிறிது தடுமாறியவள் அவளது இந்த தடுமாற்றத்தை மறைக்க அவன் மீதே கோபம் கொண்டாள். தன்னை தானே சமாதானம் செய்வது போல் அவனது பேச்சை மனதில் நிறுத்தி அவன் மீது கடும் கோபம் காட்டினாள். என்ன தான் அவனிடம் கோபம் கொண்டாலும் அவளது ஆழ்மனம் அவனது காதல் பார்வையை ரசித்தது மட்டுமின்றி அதற்கு ஏங்கவும் செய்தது. ஆனால் அவன் அடுத்த இரண்டு நாட்கள் பழையபடி அமைதியாக இருக்கவும் அவள் மனதினுள் எழுந்த ஏக்கமும் ஏமாற்றமும் அவன் மீது கோபமாக மாறியிருக்க, அவன் அவளை விட்டுவிட்டு ஒரு வாரம் பெங்களூர் போவதாக சொன்னது அவளது கோபத்தை அதிகரித்தது.

இன்று அவனது அணைப்பும் பேச்சும் அவளை சிறிது குழம்பச் செய்தது. என்ன தான் அவளது ஆழ்மனம் அவனது காதலிற்காக எப்பொழுதும் ஏங்கினாலும் அவனது வார்த்தைகளை முழுமையாக மறக்கவும் முடியாமல் அவனை மன்னிக்கவும் முடியாமல் தவித்தவளுக்கு இன்றைய குழப்பமும் சேர்ந்துக் கொள்ள தான் அடுத்து என்ன செய்வது? அவனது அணைப்பில் உருகும் மனதை மறைத்து அவனிடம் எப்படி நடந்துக் கொள்வது என்று சிறு பயமும் எழ, பெரிதும் குழம்பினாள். அவன் தன்னை மென்மையாக அணைத்தது அந்த நொடியில் பிடித்திருந்தாலும் தற்போதைய குழப்பமான நிலையில், ‘ஏன் இன்று என்னை அணைத்தான்? எனக்காக, என் மன மாற்றத்திற்காக காத்திருக்க முடியாதா!!! அவனுக்கு என் மனம் முக்கியமில்லையா? உடம்பால் என்னை வென்றுவிட நினைக்கிறானா?’ என்றெல்லாம் யோசித்து மேலும் தவித்தாள்.

கவிப்ரியா குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் மித்ரஜித் கார்த்திகாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

கார்த்திகா, “ஹலோ.. குட் மார்னிங் அண்ணா.. என்ன காலையிலேயே போன்?”

“பஸ்ஸுக்கு நேரமாச்சாமா?”

“இல்லை அண்ணா.. நான் பஸ் ஸ்டாப்-பில் தான் இருக்கிறேன்.. பஸ் வர இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கிறது.. சொல்லுங்க அண்ணா”

அவன் கவிப்ரியாவுடன் நிகழ்ந்த உரையாடலில் பெற்றோர் பேச்சை மட்டும் கூறி, “என்ன பிரச்சனை னு உனக்கு தெரியுமா?” என்று வினவினான்.

“ஹ்ம்ம்.. அது ஒன்றுமில்லை அண்ணா.. திருமணம் நடந்த அன்று ஏதோ கோபத்தில் எல்லாம் சரியாகாமல் இனி வீட்டிற்கு வரமாட்டேன்னு சொல்லியிருக்கிறாள்.. அதை இன்னமும் வறட்டு பிடிவாதத்துடன் கடைபிடிச்சிட்டு இருக்கிறாள்.. அது மட்டுமில்லை, அங்கிள் ஆன்ட்டி கூட பேசுறது கூட இல்லை.. பாவம் அவங்க.. அதுவும் அங்கிள் தான் ரொம்ப பாவம்.. அங்கிளுக்கு இவள் மேல் பாசம் அதிகம்.. இவளும் அப்படி தான்.. ஆனால் இப்போ.. ஹ்ம்ம்.. ரெண்டு நாள் முன்னாடி அங்கிளை பார்த்தேன்.. இவளது புறக்கணிப்பில் மனம் உடைந்து மெலிந்து போய் பார்க்கவே பாவமாக இருந்தாங்க..”

“இதை ப்ரியாவிடம் சொன்னியா?”

“இல்லை அண்ணா.. என்ன தான் அங்கிளிடம் பேசாமல் இருந்தாலும் அவளும் மனதினுள் பெரிதும் வருந்திக் கொண்டு தான் இருப்பாள்.. அங்கிள் இருக்கும் நிலைமையை சொன்னால் அவள் தாங்க மாட்டாள்..”

“ஹ்ம்ம்.. நானும் மாமா மேல் கோபத்தில் இருந்தேன் தான் ஆனால் இப்போது இல்லை”

“பின்ன உங்கள் கவி கிடைக்க அங்கிள் தானே காரணம்”

“கவி யா!!!”

கார்த்திகா புன்னகையுடன், “அதான் ஹோட்டலில் கூப்பிட்டீங்களே!!!”

“அப்படியா! ஹ்ம்ம்.. யாரு கவனிக்கணுமோ அவள் கவனிக்கவில்லை.. மற்ற எல்லோரும் கவனிக்கிறீங்க” என்று அவன் சோகமாக கூற, கார்த்திகா, “வேற யார்கிட்ட மாட்டுனீங்க?”

“அதை இன்னொரு நாள் சொல்கிறேன்.. இப்போ இன்றைய பிரச்னைக்கு வா”

“கண்டிப்பா இன்னொரு நாள் கேட்பேன்.. சரி.. இப்போ என்ன பண்ணலாம்.. நான் வேணும்னா அவளுக்கு துணையா..........”

“ஆமா நீ பெரிய ராணுவ வீராங்கனை”

“அண்ணா!”

“பின்ன! அவளுக்கு துணைக்கு நீ.. உனக்கு துணைக்கு யாரை சொல்வது”

“இல்லை அண்ணா..................”

“இல்லை கார்த்தி.. அது சரிவராது.. வேற யோசிக்கணும்.. பஸ் வந்திருச்சா?”

“இல்லை அண்ணா.. இன்னைக்கு என்னவோ லேட் போல.. அண்ணா! உங்கள் தங்கை...”

“அது கஷ்டம் மா.. ஷிவானி ஸ்கூலுக்கு இங்கிருந்து போக முடியாது அதை போல் அங்கிருந்து கவி காலேஜுக்கு வர முடியாது”

“ச்ச்.. என்ன பண்ணலாம்?”

“கவி பெரியப்பா வீட்டிற்கு போக சொல்லலாமா?”

“அங்கே போனால் அங்கிள் ஆன்ட்டி அங்கே வந்துருவாங்க னு போக மாட்டாள்.. அண்ணா! எங்கள் வீட்டில் இருக்க சொல்லலாமா?”

“அது எப்படி மா” என்று அவன் தயங்க, அவள் உற்சாகத்துடன், “கவலையை விடுங்க அண்ணா.. அவள் எங்கள் வீட்டில் பத்திரமாக இருப்பாள்”

“இதில் சில சிக்கல்கள் இருக்கிறதே”

“என்ன அண்ணா!” என்று அவள் சிறிது சுருதி இறங்கி கேட்டாள்.

“உன் பெற்றோர் சம்மதிக்கணும்.. அது கூட நீ சம்மதிக்க வச்சிருவ என்றாலும்.. நீ என்னுடன் சேர்ந்து செயல் படுவது அவளுக்கு கோபத்தை................”

“இரண்டு நாட்கள் முன்பு யாரோ அவள் கோபத்தை பற்றி கவலைப்படாம செயல்பட்டாங்க!”

“என்ன பண்றது மா.. என்னுடன் சேர்த்து அவள் உன்னையும் வெறுத்திட கூடாதே!”

“அவளே நினைத்தாலும் உங்களை அவளால் வெறுக்க முடியாது அண்ணா.. இந்த விஷயத்திற்கெல்லாம் என்னை வெறுக்க மாட்டாள்”

“இருந்தாலும் அவளது மனநிலை எனக்கு ரொம்ப முக்கியம் மா”

“உங்களை பிரிந்திருக்க போற வருத்தத்தை விட வேற எதுவும் கஷ்டமாக அவளுக்கு இருக்காது.. சரி அண்ணா பஸ் வந்திருச்சு.. அப்பாவிடம் பேசிட்டு உங்களுக்கு அப்பறமா போன் பண்றேன்.. பை.. பை” என்று அவசரமாக அழைப்பை துண்டித்து பேருந்தில் ஏறினாள்.


அடுத்த சில நிமிடத்தில் பேருந்தில் ஏறிய கவிப்ரியா தனது சிந்தனையில் சுழன்றபடியே தோழியின் அருகில் அமர்ந்தாள். அவள் சிந்தனையில் இருப்பதை கவனித்த கார்த்திகா அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தாள். கல்லூரி வந்தபிறகும் அவள் அசையாமல் அமர்ந்திருக்கவும், அவளை சிறிது உலுக்கிய கார்த்திகா சிறு புன்னகையுடன், “என்னடி அப்படி ஒரு யோசனை! அண்ணாவை எப்படி பிரிந்து இருப்பது என்று யோசிக்கிறியா?” என்று வினவினாள்.

சட்டென்று தோழி பக்கம் திரும்பி, “நீயும் அவர் பக்கம் சேர்ந்துட்டல?” என்று கோபமாக கேட்டுவிட்டு இறங்கியவள் அவளை ஒரு கை மறிக்கவும் நிமிர்ந்துப் பார்த்தாள். சுயமாக நிற்க முடியாமல் தோழனின் தோளில் சற்று சாய்ந்தபடி தனது கையை நீட்டி அவளது வழியை மறைத்தபடி விக்ரம் நின்றுக் கொண்டிருந்தான்.


அவள் கோபமும் வெறுப்புமாக அவனை முறைத்துவிட்டு நகர முயற்சிக்க, அவளுக்கு வழி விடாமல் இறுகிய குரலில், “ஒரு நிமிஷம்” என்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்ததும், “நிஜமா உனக்கு திருமணம் முடிந்துவிட்டதா?”

அவள் கோபத்தையும் வெறுப்பையும் எரிச்சலையும் மறைத்து கஷ்டப்பட்டு பொறுமையுடன், “ஆமாம்” என்றாள்.

அவன் அலட்டிக்கொள்ளாமல், “பரவா இல்லை.. ஒரு நாள் என்னுடன் இருந்துட்டு போ” என்று வாக்கியத்தை முடிக்கவும் அவன் கன்னத்தில் பலமாக அறைந்து அவனது கையை தட்டிவிட்டு வகுப்பறையை நோக்கி செல்ல தொடங்கினாள். பெரும் அதிர்ச்சியும் பயமுமாக கார்த்திகா தோழியை பின் தொடர்ந்தாள்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#3
இவளது அதிரடி செயலில் சற்று தடுமாறி நிமிர்ந்த விக்ரம் சுற்றிப் பார்த்தான். சுற்றிலும் பெரும் அமைதி நிலவியது. அங்கே இருந்த அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சில ஆசிரியர்கள் கூட சிறு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக நின்றுக் கொண்டிருந்தனர்.

இரண்டே நொடியில் அனைவரும் தங்கள் வேலையை பார்க்க தொடங்கினர்.

கவிப்ரியா முன் வந்த அவளது வகுப்பு மாணவர்கள் இருவர், “என்ன ப்ரியா இப்படி பண்ணிட்ட?”

“பின்ன அவன் சொன்னதை செய்ய சொல்றியா?”

சகமானவர்களுள் ஒருவனான வினோத், “சரி சரி.. அப்பறம் பேசிக்கலாம்.. நீ முதல்ல கிளாஸ்க்கு போ.. எக்காரணம் கொண்டும் வெளியே வராதே” என்றவன் கார்த்திகாவிடம், “நீ இவள் கூடவே இரு” என்றான். அடுத்து கூட இருந்த தோழனிடம், “நீ உடனே போய் நம்ம பசங்க எல்லோரையும் கிளாஸ்க்கு கூட்டிட்டு வா” என்று விரட்டியவன் வழியில் கண்ட தோழர்களை அழைத்துக் கொண்டு கவிப்ரியாவுடன் வகுப்பறைக்கு சென்றான்.

அதே நேரத்தில் கோபத்துடன் நண்பனின் உதவியுடன் வேகமாக கவிப்ரியாவை தொடர்ந்த விக்ரம்மை, கவிப்ரியாவின் செயலை கவனித்த ஒரு ஆசிரியர் அவசரமாக வழி மறித்து, “இப்போ உடம்பு எப்படி இருக்குது விக்ரம்?” என்று விசாரித்தார்.

அவன் கோபத்துடன், “உன் வேலையை பார்த்துட்டு போ” என்று கூறிவிட்டு முடிந்தளவு வேகமாக கவிப்ரியா வகுப்பறை நோக்கிச் சென்றான்.

அவன் செல்லும் வழியில் கவிப்ரியாவின் தோழர்கள் வேண்டுமென்றே பேச்சு கொடுத்து நேரத்தை வீணாக்க, அவன் அவர்கள் வகுப்பறை அருகே செல்லும் முன்பே அவள் வகுப்பறையினுள் நுழைந்திருந்தாள். அவன் அவள் பெயரை அழைத்தபடி வகுப்பினுள் செல்ல முயற்சிக்க அவளது தோழர்கள் அவனை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

கார்த்திகா தனது கைபேசியில் மித்ரஜித்தை அழைத்தாள்.

மித்ரஜித், “ஹலோ”

“அண்ணா இங்கே ஒரு சின்ன பிரச்.......................” கவிப்ரியா அவசரமாக கைபேசியை பிடுங்கியபடி, “இப்போ எதுக்கு அவருக்கு போன் பண்ற?” என்று கோபமாக கத்திவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

மித்ரஜித் கார்த்திகாவின் கைபேசியை அழைக்கவும் அவள் தோழியை கடுமையாக முறைக்க, கார்த்திகாவும் கோபத்துடன், “இந்த விஷயத்தை இனியும் அண்ணாவிடம் மறைப்பது நல்லதல்ல”

ஒன்றும் தேவை இல்லை.. என் பிரச்னையை சமாளிக்க எனக்கு தெரியும்”

“ஓ அப்படியா.. எங்க கொஞ்சம் வெளிய போய் சமாளி பார்ப்போம்”

“ச்ச்”

“முடியாதுல அப்போ நான் சொல்றதை செய்”

“..”

“இப்போ நீ சொல்றியா இல்லை நான் சொல்லட்டுமா?”

“சொல்லித் தொலைக்கிறேன்” என்று எரிச்சலும் கோபமுமாக கூறியவள் மித்ரஜித்தின் அழைப்பை எடுத்தாள்.

மித்ரஜித் பதற்றத்துடன், “ஹலோ.. கார்த்தி என்ன பிரச்சனை? கவிக்கு..................”

“என்ன பிரச்சனையா! உங்கள் மேல் உள்ள கோபத்தை இங்க ஒரு பொறுக்கியிடம் காட்டிவிட்டேன்”

கவிப்ரியாவின் குரலை கேட்டதும் பதற்றம் சிறிது குறைய, “அங்க என்ன பிரச்சனை?” என்று வினவினான்.

“அதான் சொல்றேன்ல.. உங்கள் மேல் உள்ள கோபத்தில் ஒரு சீனியர் பையனை அடிச்சிட்டேன்”

“அடிச்சிட்டியா!!! ஏன்?”

“உங்களை அடிக்க முடியலையே! அதான் அவனை அடிச்சிட்டேன்”

“கார்த்திகா கிட்ட போனை குடு”

“ஏன் என்னிடம் பேசமாட்டீங்களோ?”

அவளின் கோபத்தின் காரணம் புரியாமல் ஒரு நொடி தடுமாறினாலும் தன்னை சமாளித்துக் கொண்டு, “சரி.. நீயே விஷயத்தை சொல்லு” என்றான்.

“உங்கள் ஆண் இனத்திற்கு பெண் என்றால் அவள் உடம்பு மட்டும் தான் கண்ணிற்கு தெரியுமா? அவளுக்கு ஒரு மனசு உண்டு னு தோணுதா.. சை..” என்று கூற,

அவன் என்ன பிரச்சனையோ என்ற பதற்றத்தில், “கவி என்ன சொல்ற?” என்று வினவ,

அதை தவறாக புரிந்துக் கொண்டவள், “ஏன் இவ்வளவு அதிர்ச்சி! உங்களையும் இந்த கூட்டத்தில் சேர்த்துக் கொண்டதில் என்ன தவறு?” என்று வினவ, இப்பொழுது பெரிதும் அதிர்ந்தவன், “கவி நான்............” என்று தொடங்கியதை கவனிக்காமல் ஆவேசமாக மேலே பேசினாள். “காலையில் என் கையை பிடித்து இழுத்து அணைத்ததிற்கு என்ன காரணம் சொல்லுவீங்க? நீங்கள் பேசிய பேச்சை பற்றிய குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி எப்படி அப்படி நடந்துகிட்டீங்க? என் மனம் உங்களுக்கு முக்கியமாக தோன்றவில்லையே!!!” என்று இறங்கிய குரலில் வருத்ததுடன் முடித்தாள்.

அவன் பேச்சின்றி மெளனமாக இருக்க அவள் அழைப்பை துண்டித்தாள்.

கார்த்திகா, “உன் பேச்சு தப்பு ப்ரியா.. அண்ணா என்ன தான் பெரிய தவறே செய்திருந்தாலும் அவரை இந்த பொறுக்கியுடன் ஒப்பிட்டு பேசியது ரொம்ப தப்பு..”

“..”

“ப்ரீ.......” என்று கார்த்திகா பேச்சை ஆரம்பிக்கும் போதே அவள் கோபத்துடன், “ச்ச்.. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறியா?” என்று கத்தினாள்.

அவளது கத்தலில் சக மாணவிகள் திரும்பி பார்க்க கார்த்திகா உள்ளே பொருமியபடி அமைதியாக இருந்தாள். கோபத்தில் ஆவேசமாக மித்ரஜித்திடம் பேசி முடித்த பிறகே தான் அதிகாமாக பேசிவிட்டோமோ என்று அவளுக்கு தோன்றியது ஆனால் தற்போது இருந்த மனநிலையில் அதை முழுமையாக ஏற்கவோ அதை பற்றி யோசிக்கவோ அவளது மூளை மறுத்தது.

அதே நேரத்தில் வெளியே விக்ரமின் தோழர்களும் வந்து சேர வகுப்பறை வாசல் சிறு போர்க்களம் போல் காட்சியளிக்க வகுப்பறையினுள் மாணவிகள் பதற்றத்துடன் அமர்ந்திருந்தனர். சற்று நேரத்தில் ஆசிரியர்களும் தலைமை-ஆசிரியர்களும் வந்து சண்டையை நிறுத்த முயற்சிக்க, சீனியர் மாணவர்கள் கவிப்ரியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூற, அவளது தோழர்களோ தப்பே செய்யாமல் அவள் மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று உறுதியுடன் கூறினார்கள். ஆசிரியர்களால் சமாளிக்க முடியாமல் போனதாலோ விக்ரம் இதில் சம்பந்தப் பட்டதினாலோ சிறிது நேரத்தில் கல்லூரி முதல்வர் அங்கே வந்தார்.

அவரிடமும் சிறிதும் தயக்கமின்றி அவளது தோழர்கள் அவளுக்காக பரிந்து பேசவும், தோழிகள் பதற்றத்துடன் தடுத்ததை பொருட்படுத்தாமல் ஒரு முடிவிற்கு வந்தவளாக கவிப்ரியா எழுந்து சென்றாள்.

காதல் துளிரும்♥♥♥
 
Advertisement

Sponsored