சின்னஞ்சிறு இரகசியமே 1 அத்தியாயம் 4

Advertisement

Vanathi

New Member
ஒருவழியாக விஜய்யை " அம்மா தாயே தர்மம் பண்ணுங்கம்மா " என்று கூவ வைத்துவிட்ட பிறகே மற்ற மூவரும் ஓய்ந்தார்கள்.

வீட்டிற்கு சென்ற பின் நண்பர்கள் செய்த கலாட்டாவை எண்ணி சிரித்துக் கொண்டாலும் நித்யாவின் நினைவுகளும் விஜய்யை இம்சித்தன. அவனுக்கு மட்டும்தான் இப்படி ஆனால் நித்யாவிடம் எந்த மாற்றமும் இல்லை என்பது அவனுக்கே நன்றாகத் தெரியும். இது காதல் என்றும் விளங்கி விட்டது.

இப்போதே அவளிடம் சொன்னால் இதை ஒரு விஷயமாகக் கூட கருத மாட்டாள். இன்றுவரை அவள் பார்வையில் சரவணன் எப்படியோ அப்படித்தான் விஜய்யும். இருவரிடத்தில் எந்த வேறுபாடையும் கண்டதில்லை.

எனில் முதலில் நித்யாவை அவளே அறிந்தும் அறியாமல் தன் புறம் இழுக்க வேண்டும். அவள் தன்னை நண்பன் என்ற பார்வையிலிருந்து மாறி அவளுக்கான ஆண்மகனாகப் பார்க்க வேண்டும். பிறகு காதலை வெளிப்படுத்துவதுதான் சரி என முடிவு செய்தான்.

தமிழுக்கும் சரவணனுக்கும் விஜய் மேல் எந்த சந்தேகமும் இல்லை. அவனுக்குள் காதல் வந்திருக்கும் என்ற நினைப்பு கூட இல்லை. அதிலும் நித்யாவின் மேல். வேறு ஏதோ விஷயமாக இருக்கும். தோன்றும் போது அவனே சொல்வான் என்றுதான் ஓரளவுக்கு மேல் அவனை நோண்டாமல் விட்டுவிட்டனர். அவனிடம் வம்பிழுத்தது கூட அவன் இவர்களிடம் பொய் சொன்ன காண்டில்தான்.

அடுத்த நாள் விஜய் வகுப்பில் குறிப்பு எடுக்காமல் என்னவோ சன்னி லியோன் தற்கொலை செய்து கொண்டது போல கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்திருந்தான்.

அருகில் அமர்ந்திருந்த நண்பன் " டேய் எதுக்கு மூஞ்ச எதையோ திண்ண ஏதோ மாதிரி வச்சிட்டு இருக்க? " என குசுகுசுவென்று கேட்டான்.

" ப்ச் மனசே சரியில்ல மச்சான் "

" ஏன்? " மற்றொரு நண்பன்.

" பொய் சொல்லிட்டேன். "

" யாருகிட்ட? "

" நித்யா, தமிழ், சரவணன். "

" என்னது???? " என்று அதிர்ந்தார்கள். அவர்களின் நட்பை பற்றி இவர்களுக்கும் தெரியும். நால்வருக்குள் ஒளிவு மறைவு இருந்ததில்லை என விஜய்யே சொல்வான். இப்போது இவனே பொய் சொல்லியிருக்கிறானா என்ற அதிர்வு.

" ம்ம்... அதான் கஷ்டமா இருக்கு. "

" என்னன்னு பொய் சொன்ன? "

" அத அப்பறமா சொல்றேன் " என்க, அவர்களும் வற்புறுத்தி கேட்கவில்லை.

" நான் பொய் சொல்லிட்டேன்னு சாரி கேட்ருடா சரியா போயிடும் "

" அது பிரச்சனை இல்ல. உண்மைய மறைக்கறமேன்னுதான் ஃபீலிங்கா இருக்கு. "

" அப்ப உண்மையை சொல்லிடு. " நண்பன் பட்டென்று சொல்ல விஜய் திகைத்து அவனைப் பார்த்தான்.

" அவ்ளோதான் சிம்பிள் மச்சான். " என்க, விஜய்க்கும் "ஆமால்ல... "என்றிருந்தது. சரியான முட்டா பீசு.

உடனே மொபைலை எடுத்து சரவணனுக்கும் தமிழுக்கும் அவன் நித்யாவை விரும்புவதாகவும் அவளிடம் எதுவும் கேட்க வேண்டாம் அவளுக்கே தெரியாது எனவும் மாலை இது பற்றி பேசலாம் என்றும் குறுஞ்செய்தி அனுப்பினான்.

இப்போதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த இரண்டு நண்பர்களிடமும் " டேய்ஸ் நான் நித்யாவ லவ் பண்றேன் " என்று வெட்கப்பட,

இருவரும் " என்ன்னனதுது... " என்று அதிர்ச்சியில் சத்தமாகக் கத்திவிட்டார்கள். பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் திரும்பிப் பார்க்க, விஜய் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான். அவனுக்கு இரு புறமும் அமர்ந்திருந்த இருவரும் அவனைத்தான் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, மொத்த வகுப்பும் அந்த பெஞ்சைத்தான் பார்த்தார்கள். விஜய் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டான்.

பேராசிரியர் " இடியட்ஸ். எவ்ளோ இம்பார்டன்டான க்ளாஸ். இப்படியா டிஸ்டர்ப் பண்ணுவீங்க? விஜய்யும் உங்களோடதான உட்கார்ந்திருக்கான்... அவன் பாட்டுக்கு அவன் வேலைய சின்சியரா பாரக்கல? யூஸ்லஸ்... கெட் ஔட் " என்று கத்தினார்.

இருவரில் ஒருவன் விஜய்யிடம் " உன் கூட குப்ப கொட்றதுக்கு நான் போய் கார்பரேஷன் கக்கூசயே கழுவலாம்டா. எங்க அம்மா அப்பவே சொல்லுச்சு. "

" என்னன்னு? கக்கூஸ் கழுவவா? " விஜய்

மற்றொருவன் சிரித்தான்.

விஜய்யின் தலையில் தட்டி " காமெடி... வெளியா வா வெட்டிடுறேன். " என்றுவிட்டு பேகை எடுத்தான்.

கெட்டதிலும் ஒரு நல்லது என உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டே இருவரும் வகுப்பை விட்டு வெளியே சென்றார்கள்.

தமிழரசி தீவிரமாக வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அவளின் மொபைல் அதிர்ந்தது. என்னடாவென்று யாருக்கும் தெரியாமல் மடியில் வைத்துப் பார்க்க, விஜய்யிடமிருந்து குறுஞ்செய்தி.

திறந்து பார்த்தாள். " Na nithyava love pandren. Ava kita kekatha. Avaluku ethuvum theriyathu. Enna ethunnu evng ithu pathi pesalam " என்றிருந்தது.

தமிழுக்கு மூச்சடைத்தது. சில நொடிகள் ஒன்றுமே புரியவில்லை. விஜய் விளையாடுகிறானோ என்று கூட யோசித்தாள். ஆனால் நேற்று நடந்த நிகழ்வைகளை சிந்தித்துப் பார்க்க, இது உண்மை என்று புரிந்தது.
மூவரிடமும் பொய் சொல்லிவிட்டு நித்யாவை மட்டும் மாலுக்கு அழைத்து ஒன்றாக சுற்றியிருக்கிறான். அவளிடமே கேட்கவா என்றபோது கூட அப்படி பயந்தான். எனில் விஜய் அவளை காதலிப்பது உண்மைதான் போல என புரிந்து கொண்டாள். மனது உறுத்தியது.

உடனே இதுபற்றி சரவணனிடம் பேச வேண்டுமே. அதற்கு முதலில் இங்கிருந்து கழல வேண்டுமே. சட்டென்று யோசித்தாள்.

அருகில் இருந்த ஷாலினியை அழைத்து தனக்கு வாந்தி வருவது போல செய்கை செய்ய, அவள் உடனே " மேம் தமிழுக்கு வாமிட் வருதாம் மேம். " என்றாள்.

அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த மனிஷ் " அப்படில்லாம் இருக்காதே... " என்று முணுமுணுத்தவாறே திரும்ப மற்ற ஆண் நண்பர்களும் தோழியை திரும்பிப் பார்க்க, அவள் அந்த குறுஞ்செய்தியை இரகசியமாக அவர்களிடம் காண்பித்தாள். புரிந்து கொண்டார்கள்.

அந்த பேராசிரியர் " வாமிட் வருதா? " என்று கேட்க, அதுவரை வாந்தி முட்டிக்கொண்டு வருவதுபோல வாயைப் பொத்தியிருந்த தமிழ் கையை விலக்கிவிட்டு " ஆமா மேம் " என்றுவிட்டு மீண்டும் வாயை பொத்திக் கொள்ள மற்ற நண்பர்களுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார்கள்.

அந்த பேராசிரியருக்கு தமிழ் செய்யும் திருட்டுத்தனம் புரியவில்லை பாவம். அனுமதி கொடுத்துவிட, அவள் மொபைலை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்கு ஓடினாள்.

உள்ளே சென்று கதவை தாழிட்டு கொண்டவள் சரவணனை அழைத்தாள்.

அங்கே சரவணனின் வகுப்பில் புதிதாக வந்த பேராசிரியர் தன்னைப் பற்றியும் தன் அருமை பெருமைகளை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

" நான் இந்த காலேஜ்லதான் படிச்சேன். பிஇல யூனிவர்ஸிடி கோல்ட் மெடலிஸ்ட். எம்ஈல காலேஜ் ஃபர்ஸ் " என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, சரியான நேரம் பார்த்து சரவணனின் மொபைல் சத்தமாக ஒலித்தது.

" பீலா பீலா பீலா பீலா பீலா உடாத... ரீலா ரீலா ரீலா ரீலா ரீலா சுத்தாத... "

மொத்த க்ளாஸும் விழுந்து விழுந்து சிரித்தது. சரவணன் யாரென்று பார்க்க " பைத்தியம் 1 " என்றிருந்தது.

பேராசிரியர் கோபத்தில் " ஹலோ க்ளாஸ் அவர்ஸ்ல மொபைல ஆஃப் பண்ணி வைக்கனும்னு தெரியாதா. கட் பண்ணுங்க " என்று கத்த,

கட் செய்யப் போனவன் கை தவறி அதை அட்டென்ட் செய்ய மொபைல் ஹேங் ஆகி ஸ்பீக்கர் ஆன் செய்யப்பட்டது. கையோடு மொபைலும் வழுக்கி மேசையில் விழுந்து விட்டது.

" டேய் நாசமா போற நாயே... உன் பாட்ட கேக்கறதுக்குதான் ஃபோன் பண்ணனா? எவ்ளோ நேரம்தான்டா அந்த அறுவைய கேக்கறது... காது பிஞ்சி ரத்தம் வருது. பெரிய வெண்ண வெட்டி இவரு... இவரோட புகழ பாடி நாங்க கேட்டு அப்படியே நரம்பு பொடச்சு சாதிச்சு கிழிச்சிருவோமாம்... " என்று தமிழின் குரல் வகுப்பறை எங்கும் கேட்டு சிரிப்பு சத்தத்தை அதிகரித்தது.

தமிழ் சொன்னது சரவணன் வைத்திருந்த காலர் டியூனை. ஆனால் இங்கு வகுப்பில் இருந்த மாணவர்கள் அதை அந்த பேராசிரியரின் பெருமை பீதாம்பரத்துடன் ஒப்பிட்டு பார்த்து சிரித்தார்கள். சரவணனுக்குமே சிரிப்பு வர, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

பின்னால் ஒருவன் " யாரு பெத்த புள்ளையோ... என் மனசுல இருக்கறதெல்லாம் அப்படியே கொட்டிட்டா. மகராசி நல்லா இருக்கனும். " என்று முணுமுணுத்தான்.

தமிழும் மற்றவர்களின் சிரிப்பு சத்தத்தை கேட்டு அடுத்த வார்த்தை பேசாமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.

பேராசிரியருக்கு முதல் நாள் வகுப்பிலேயே இப்படியொரு பல்ப் வாங்கிவிட்டதை எண்ணி கோபம். சரவணனைப் பார்த்து " கெட் ஔட். க்ளாஸ் முடிஞ்சதும் எச்ஓடிய வந்து பாருங்க " என்றார்.

சரவணன் தமிழை மனதில் திட்டிக் கொண்டே வெளியே வந்தான். இப்போது அவனே அவளுக்கு அழைக்க, எடுத்தாள்.

" என்னாச்சு சரவணா? எதாவது பிரச்சனையா? " பச்சைப்பிள்ளை போல கேட்டாள் தமிழ்.

" ஆ... நொச்சனை. அடியே ஃபோன் எடுத்தா மொதல்ல ஹலோன்னு சொல்லி பழகு. " என்றான்.

" சரி அது கெடக்குது. விஜி எனக்கு மெசேஜ் பண்ணியிருந்தான்டா. "

" இத சொல்றதுக்கா ஃபோன் பண்ண? "

" அட அவசரத்துக்கு பொறந்தவனே முழுசா கேட்டுத் தொல. "

" சொல்லு "

" விஜி நித்யாவ லவ் பண்றானாம். "

" அடி செருப்பால. அவன்தான் நேரங்கெட்ட நேரத்துல காமெடி பண்ணிட்டு திரியுறான்னா... நீயும் அத நம்பி இது ஒரு விஷயம்னு ஃபோன் பண்ணி ஏன்டி என் உயிர வாங்குற? "

" டேய் கேனக்கூமுட்ட மாதிரி பேசாத. நேத்து நம்ம மூனு பேர்கிட்டயும் பொய் சொல்லிட்டு நித்யாவ தனியா தள்ளிட்டு போனவன்தான அவன். " தமிழ் சொல்லவும் சரவணனுக்கு அப்போதுதான் உரைத்தது.

" அப்போ நெஜமாவா? " திகைப்புடன் கேட்டான்.

" அப்படித்தான் போலடா. ஈவ்னிங் நேர்ல பேசலாம்னு சொல்லியிருக்கான். " என்று கடுப்பில் சிணுங்கினாள்.

" சரி டென்ஷன் ஆகாத. ஈவ்னிங் பார்ப்போம். " என அவளை எப்படியோ சமாதானப்படுத்தி அழைப்பை துண்டித்தான். தமிழின் உறுத்தல் இப்போது சரவணனையும் தொற்றிக் கொண்டது.

மாலைநேரம் கல்லூரி முடிந்ததும் நால்வரும் வழக்கமாக சந்தித்துக் கொள்ளும் காஃபி ஷாப்பிற்கு வந்தார்கள். நித்யாவிற்கு மட்டும் யாரும் சொல்லவில்லை.

விஜய் முன்பே வந்துவிட்டு மற்ற இருவருக்காக காத்திருந்தான். உள்ளுக்குள் லேசான பதற்றம். தமிழும் சரவணனும் வந்தார்கள்.

" டேய் நீ சொன்னது உண்மையா? " சரவணன்.

" ம்ம்... " விஜய்.

"என்னடா இவ்ளோ பெரிய பாம தூக்கி போடுற? " தமிழ்

" இதுல என்னடி இருக்கு? " விஜய்.

" நித்யா நம்ம ஃப்ரெண்டுடா " தமிழ்.

" யாரு இல்லைன்னா? எனக்கு எப்பவும் அவ ஃப்ரெண்ட். இப்ப அதோட சேர்த்து காதலி. அவ்ளோதான். " விஜய்

" என்ன இவ்ளோ சிம்பிளா சொல்ற? " சரவணன்.

" விஷயமே அவ்ளோ சிம்பிள் தானடா. " விஜய்.

" ப்ச் இவ்ளோ வருஷமா இருக்க ஃப்ரெண்ட்ஷிப்ல நடுவுல எதுக்கு லவ்வ கொண்டு வர? " சரவணன்

" எனக்கென்ன வேண்டுதலா? அதுவா வந்துருச்சு மச்சான். நான் என்ன பண்றது?... " விஜய்.

" அப்ப கன்ஃபார்மா லவ்வா? " தமிழ் பயத்துடன் கேட்டாள்.

" நான் இவ்ளோ நேரம் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்... " விஜய்.

தமிழும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

" ஹேய் ப்ளீஸ்டா. ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட். எனக்கு நித்யாவ ஃப்ரெண்டையும் தான்டி புடிக்க ஆரம்பிச்சிருச்சு. இப்ப ஒரு ரெண்டு நாளாதான். உங்க கிட்ட சொல்லாம ஒரு மாதிரி இருந்ததா... அதான் இன்னைக்கே சொல்லிட்டேன். "

" இத ஏன் நீ நித்யாகிட்ட சொல்லல? " சரவணன்.

" இப்பவே சொன்னா அவளுக்கு புரியும்னு தோனல. கொஞ்ச நாள் கழிச்சு... அவளையும் என்ன லவ் பண்ண வச்சு அப்புறம் சொல்லலாம்னு இருக்கேன் " என்று கனவில் மிதந்தவாறே அவன் சொல்ல, மற்ற இருவரும் " தூ " என்று துப்பினார்கள்.

" என்னாச்சுடா? " விஜய்.

" வாயில கொசு போயிடுச்சு " சரவணன்.

" எனக்கும் தான் " தமிழ்.
" அதெப்படி ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல கொசு வாய்க்குள்ள போகும்? " சந்தேகமாகக் கேட்டான்.

" அவனுக்கு புருஷன் கொசு. எனக்கு பொண்டாட்டி கொசு. இப்ப இந்த விளக்கம் ரொம்ப தேவையா உனக்கு? " தமிழ் எரிந்து விழுந்தாள்.

" அதுக்கு ஏன்டி இவ்ளோ காண்டாகுற? " விஜய் சொல்ல அந்த நேரம் அவன் மொபைல் ஒலித்தது. அழைத்திருந்தது அவன் அம்மா.

பேசிவிட்டு வைத்தவன் " ஹே அம்மா பிக் அப் பண்ணிக்க கூபுட்றாங்கடா. நான் கெளம்புறேன். நீங்க வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணுங்க. " என்றுவிட்டு அவசரமாகக் கிளம்பிச் சென்றான்.

" சரி நாமளும் கெளம்புவோமா? " என்று சரவணன் தமிழை பார்க்க, அவள் முகமே சரியில்லை.

" ஓய் என்ன ஒரு மாதிரி இருக்க? "

" இது சரியில்ல சரவணா... "

" எது? "

" விஜி நித்யாவ லவ் பண்றது. "

" அதுல உனக்கென்னடி பிரச்சனை? "

" எனக்கு மட்டுமில்ல. உனக்கும்தான் பிரச்சனை. அவன் வேற யாரயாவது லவ் பண்ணியிருந்தா பரவால்ல... நம்மள்ள ஒருத்தரையே லவ் பண்றது டேஞ்சர். "

" எப்படி சொல்ற? "

" அவன் நமக்குள்ள பார்ஷியால்டி பார்க்க ஆரம்பிச்சிட்டா? " தமிழ் பயமாகக் கேட்க, சரவணனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

இந்த கோணத்தில் அவன் யோசிக்கவே இல்லை. நண்பனின் காதலை வித்தியாசமாகப் பார்த்தானே தவிர அதில் உருவாகும் சிக்கல்களை அவன் கவனிக்க மறந்தான்.

" விஜி அப்படி பண்ணுவானா? "

" பண்ண ஆரம்பிச்சிட்டான். நேத்தே நம்மள கழட்டி உட்டுட்டு நித்யாவோட ஊர் சுத்த போனான்ல. என்னைக்கும் இல்லாம பொய் வேற சொல்ல ஆரம்பிச்சிட்டான்டா. நாம கேட்டப்ப கூட எப்படி மழுப்புனான்? இப்படியே போச்சுன்னா அவன் நம்ம ரெண்டு பேர தனியா நித்யாவ தனியா பார்க்க ஆரம்பிச்சிடுவான். இத்தனை வருஷ ஃப்ரெண்ட்ஷிப் நேத்து வந்த அவனோட லவ்வால காணாம போயிடுமோன்னு பயமா இருக்கு " என்றாள். தமிழுக்கு லேசாகக் கண்ணே கலங்கிவிட்டது.

எப்போதுமே நால்வருக்குள் வேறொருவரை அவர்கள் அனுமதித்ததில்லை. இப்போதும் இல்லைதான். ஆனால் இதில் காதல் என்ற உணர்வை புகுத்துவது தமிழுக்கு பிடிக்கவில்லை. சரவணனுக்கும் இதிலிருக்கும் விபரீதம் புரிய அவனுமே பயந்தான். விஜய்யின் காதல் ஆபத்து என்று நினைத்தான்.

தமிழுக்கு சுபா மீதான சரவணனின் விருப்பம் தெரியும். அவள் தங்கையாகவே இருந்தாலும் நால்வருக்குள் ஒருத்தியில்லை. அதோடு சிறு வயதிலிருந்தே இவர்களின் நட்பை கண்டு வளர்ந்தவள். அந்த வகையில் சரவணனின் காதல் பிரச்சனையில்லை. சரவணனுக்குமே இதே மாதிரியான எண்ணம்தான்.

" நீ சொன்னதுக்கு அப்புறம் எனக்கும் லேசா பயம் வருதுடி " கலவரமாகச் சொன்னான் சரவணன்.

" விடவே கூடாது. பிரிச்சி மேய்ஞ்சிடனும். " தமிழ்.

" எத? "

" நண்பனோட காதல. "

" அவனுக்கு தெரிஞ்சா? "

" தெரிஞ்சாதான... ரெண்டு பேருக்கும் தெரியாம நேக்கா பிரிச்சி விட்ருவோம். "

" எப்படி? "

" இவன் லவ் பண்றது நமக்கு மட்டும் தான தெரியும். நித்யாவுக்கு இன்னும் தெரியாதே. சோ அவளுக்கு விஜி மேல லவ் வரவே விடக்கூடாது. "

தமிழ் வில்லத்தனமாகச் சொல்ல, சரவணனும் அப்படியே சிரித்தான். இருவரின் தலையிலும் மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத சிவப்பு நிற ஈவில் கொம்புகள் முளைத்தன.
என்ன பண்ண போறாய்ங்களோ...
 

Saroja

Well-Known Member
அடக் கண்றாவியே நண்பன் காதல
பிரிக்க வில்லத்தனமா
யோசிக்கிறாங்க
இவங்க பிரிக்க அதுலேய
தன்னால சேந்துறுவாங்களோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top