சாரல் 13

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
சாரல் 13


இரவு நேரம் கழித்து உறங்கியதில், காலையில் தாமதமாக தான் கண் விழித்தான், முகுந்தன். கண்கள் இரண்டும் சிவந்து. திறக்க முடியாது காந்தியது. எரிச்சலுடன் கண்களை மூடிக் கொண்டான். மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தவன், தன்னை சுத்தப்படுத்திக் வர, வயிறு, “நானும் இருக்கேன்! எனக்கு எதாவது கொடேன்!” என கெஞ்சியது. அதன் குரலுக்கு செவி மடுத்தவன், சமையல் அறைக்கு செல்ல, அறையை விட்டு வந்தான்.



அங்கே சோபாவில், ஜேக் தலையில் போர்வையை போர்த்தியபடி அமர்ந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தான்.


“இவன் ஏன் இங்கே தூங்குறான்?” என்றெண்ணியபடி புருவம் சுருக்கி பார்த்தவன், அவனை நெருங்கி தோளைதொட்டு, “டேய் மச்சான் மச்சான்!” அவனை உலுக்க, பதறி எழுந்தவனைக் கண்டு, “ஏன்டா இங்கேயே தூங்குற?” முகுந்தன் கேட்கவும், அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து வைத்தான், அவனது நண்பன்.


“ஏண்டா கேட்க மாட்ட? ஏன் கேட்க மாட்ட? உனக்கு நண்பனா இருக்க பாவத்துக்கு எனக்கு தான் கதி கலங்குது!”



“மச் என்னடா உளருற!” முகுந்தன் சலித்துக் கொள்ள, “ஹ்ம்ம்! நீயும் குடிக்க மாட்ட! அடுத்தவனையும் குடிக்க விடாம, ராத்திரி முழுக்க நைநைன்னுட்டு, நீ பாட்டுக்கு தூங்க போய்ட்ட ! எனக்கு தான் தூக்கமே போச்சு!” என புலம்பி தள்ளினான்.



“ம்ச்ச் விடு மச்சான் பார்த்துக்கலாம்!” அவன் அசால்ட்டாய் சொல்லிவிட்டு அடுக்களையை நோக்கி நடையை கட்ட, அவனின் பதிலில் “என்னது விடு பார்த்துக்கலாமா? என அதிர்ந்தவன், அவன் பின்னாடியே சென்றான். “ஏண்டா உன்னை ஹெட் வரக் கூடாதுன்னு சொல்லிட்டார்! அதுல உனக்கு கொஞ்சமாச்சும் வருத்தம் இருக்காடா?” என கடுப்பாய் வினவ, “அதான் விடுன்னு சொல்றேன்ல! அது அது நடக்கும் பொது பார்த்துக்கலாம். லிவ் த மொமென்ட் மச்சான்!” என்றபடியே தனக்கும் நண்பனுக்கும் டீ போட்டவன் அவனுக்கும் ஒரு கோப்பையை நீட்ட, அவனை சலிப்பாய் ஒரு பார்வை பார்த்தவன், “என்னவோ போடா! இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு எனக்கு தெரியல!” புலம்பியபடியே டீயை பருகினான்.

அப்படி என்ன நடந்திருக்கும்???

—---------------------------------------நேற்று….


மாடிப்படி கட்டை சுவற்றை பற்றியபடி, இரவின் இருளை வெறித்தபடி நின்றிருந்தான், முகுந்தன்.


“டேய்…. நானும் பார்த்துட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?” நண்பனின் மௌனம் தாளாது, கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான், ஜேக். வாங்கி வந்திருந்த பீர், கூலிங் போகிறதே! எனும் வருத்தம் ஒருபுறம். நண்பனின் நடவடிக்கை பற்றிய குழப்பம் மறுபுறம் என இரண்டுக்கும் இடையே கிடந்து அவன் ஊசலாட, சம்பந்தப்பட்டவனோ எதுவும் சொல்லாது வானை வெறித்திருக்க, வெடித்து விட்டான்.



அப்போதும் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாது போக, “டேய் உன்னை தான் கேட்குறேன்!” வேகமாய் அவனை நெருங்கி தோள் தொட்டு திருப்பியவன், “ஏன்டா அப்படி பண்ணுன? யார் அந்த பொண்ணு? நீ முன்னாடியே அவளை பார்த்திருக்கியா? உனக்கு தெரிஞ்ச பொண்ணா?” நண்பனிடம் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, முகுந்தனோ நண்பன் முகம் காணாது தொலை தூரத்தை வெறித்தபடியே, “ஹ்ம்ம்! முரளியோட தங்கச்சி!” அவனது அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை பதிலாய், சலனமற்ற ஒருவித இறுக்கமான குரலில் மொழிய, “டேய்….. மச்சான்!.... என்னடா சொல்ற! உங்க அக்காவோட நாத்தனாரா அந்த பொண்ணு?” என கேட்க,


“ம்ம்ம்!” - முகுந்தன்.



“டேய் அப்ப… அது….!” என வார்த்தைகளை கோர்க்க முடியாது ஜேக் திணற, நண்பன் சொல்ல வருவது புரிந்தது போல “ஆமா!” சிக்கனமாய் வந்தது பதில்.



“டேய் இருக்குற பிரச்சனை போதாதுன்னு நீ வேற ஏன்டா இன்னும் பிரச்னையை இழுத்து வச்சிருக்க?” நண்பனின் மனம் படும்பாடு உணர்ந்த போதும், கடிந்துக் கொண்டான் ஜேக்.



“சரி விடு! எதுக்கு நீ அங்க போன! நமக்கு தான் அங்க வேலை இல்லையே!”


“ம்ம்ச்!” சலித்துக் கொண்டவன், அங்கே நடந்ததை பகிர்ந்துக் கொண்டான்.


“டேய்… நீ சொல்றது நம்புற மாதிரியே இல்லையே!” தாடையை தடவியபடி யோசனையாய் நண்பனை அளவிட்டது ஜேக்கின் கண்கள்.



“என்ன… என்னடா! சும்மா வளவளன்னு பேசாம போய் தூங்கு! என அதட்டியவன் நண்பனை விரட்ட, “என்னவோ போ! நீயும் எதோ சொல்ற! நானும் அதை நம்புறேன்!” என்று சந்தேகமாய் முகுந்தனை திரும்பி திரும்பி பார்த்தபடியே உள்ளே சென்றவன், போன வேகத்திலேயே திரும்பி வந்து, “மச்சான்… எதுவும்…. ம்ம்ம்கும்….!” என சங்கேதமாய் வினவ,



“என்னடா ம்ம்ம்ஊம்?” கடுப்பாய் வினவினான் முகுந்தன். “இல்ல ஒரு வேளை அதுவோ….! என ராகம் இழுக்க, அவன் சொல்ல வருவது புரிந்து, “ஹே ச்சீ போடா லூசு பயலே!” நண்பனை அச்சில் ஏற்ற முடியாத பல நல்ல வார்த்தைகள் கொண்டு அர்ச்சிக்க துவங்க, அதனை காது கொடுத்து கேட்க முடியாது ஓடி மறைந்தான், ஜேக்.


அவன் தலை மறைந்ததும், சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தவன் தன்னை நிலை படுத்திக்கொண்டு அறைக்குள் முடங்கினான்.


கட்டிலில் படுத்தவன், மனதிலோ ஆயிரம் எண்ண ஊர்வலம். புரண்டு புரண்டு படுத்தவனுக்கு தூக்கம் போக்கு காட்ட, சலிப்பாய் கண்களை மூடியவன் விழிகளுக்குள், பல நிகழ்வுகள் வரிசையாய் அணிவகுத்தது.



“ஹையோ! இது உனக்கு தேவையாடா முகுந்தா? போயும் போயும் அவள… லூசு பயலே லூசு பயலே!” தன் தலையில் அடித்துக் கொண்டவன்,


“உனக்கு மறைதான் கழண்டு போச்சு! எப்போதும் போல ஒரு பொண்ணை பார்த்தோமா, சைட் அடிச்சோமானு இருக்காம, உனக்கு இது தேவையாடா?”


“கை அழகா இருக்கு! அவ காது அழகா இருக்குனு பார்த்ததோட போய் இருக்க வேண்டியது தானேடா முட்டா பயலே! முகத்தை பார்க்க ஆசைப்பட்டு… இப்ப எங்க வந்து நிக்குற பார்த்தியா! அவளால உனக்கு என்னைக்குமே பிரச்சனை தான்!” தலையில் தலையில் அடித்தபடி புலம்பியவன், மனதின் சோர்வு தாளாது கண்ணை இறுக்கமாய் மூடி படுத்துக்கொண்டான். அவனைக் கண்டு நித்ரா தேவிக்கே பாவமாய் இருக்க, தன் இருகரம் கொண்டு அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.

—---------------------------------------

இரவு பிருந்தா வீட்டில்,


அனைவரும் உணவு மேஜையில் கூடியிருக்க, தன்யா வழக்கம் போல தந்தையிடமும், பாட்டியிடமும் கொஞ்சிக் கொண்டு இருக்க, ஹாலில் இருந்து அதனை ஏக்கமாய் பார்த்தபடி தாய் ஊட்ட உண்டுக் கொண்டிருந்தான், ராகுல்.



ஏதோ சொல்லி தமக்கை சிரிக்க, அதற்கு தந்தை சிரித்தபடி அவள் தோளை அணைத்துக் கொள்வதும், கொஞ்சியபடி உணவு ஊட்டவுமாய் இருக்க, பார்த்தவனுக்கு ஆசையாய் இருந்தது.



ஏனோ தந்தை தன்னிடமும் அப்படி நடந்துக் கொண்டால்!... என ஒருவித ஏக்கம் முளைத்தது சின்னவனின் மனதில். மகனது கவனம் இங்கில்லாதது கண்டு அழைக்க, அவன் திரும்பாமல் இருக்கவும், அவனது பார்வை செல்லும் திசையில் தனது பார்வையை செலுத்தினாள். மகனின் மனம் புரிந்து அவளது கண்கள் குளம் கட்ட, தாய் மனமோ குழந்தையின் ஏக்கம் கண்டு துடித்துப் போனது. தங்களின் நிலை கண்டு அவளால் அந்த நேரம் வருந்ததான் முடிந்தது.



அதற்குள் அனைவரும் உண்டு முடித்திருக்க, கைகளை துண்டால் துடைத்தபடி வந்த வைத்தியநாதன், “அர்ச்சனா! சாப்டுட்டு ஆபீஸ் ரூம்க்கு வா!” என்றார்.


சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் திரும்பி பார்க்க, வாயில் இருந்த உணவை விழுங்கிவிட்டு “சரிப்பா!” என்றாள் பவ்யமாய். கையை கழுவி விட்டு, தந்தையை தொடர்ந்தாள், மகள்.


அனுமதி வேண்டிவிட்டு அவள் உள்ளே செல்ல, நாற்காலியில் அமர்ந்து எதோ ஒரு கோப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர், அரவமுணர்ந்து, உட்கார் என இருக்கையை காட்ட, தயங்கியபடி உட்கார்ந்தாள், பெண்.


“நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன். இன்னைக்கு என்ன நடந்துச்சு?” மகளின் முகத்தை கூர்மையாய் அளவிட்டது அவரது கண்கள்.


தந்தை கண்டுக் கொண்டாரோ என ஒரு நொடி திடுக்கிட்ட அர்ச்சனா, தனது முகபாவத்தை நொடியில் மாற்றிக்கொள்ள, அது அவரது கழுகு கண்களில் இருந்து தப்பவில்லை.


“என்னப்பா கேட்குறீங்க? நான் இன்னைக்கு காலேஜ் போனேன். அப்புறம் வீட்டுக்கு வந்துட்டேன்!” என்றவள், இலகுவாய் தன்னை காட்டிக்கொள்ள முற்பட்டாள்.



“ஓ… அப்ப இன்னைக்கு சீ ப்ரீஸ் ஹோட்டல பிரச்சனை பண்ணினது நீ இல்லையா அர்ச்சனா?” வாளின் கூர்மையோடு வந்தது அவர் வார்த்தைகள்.


தந்தையின் வார்த்தையில், விலுக்கென நிமிர்ந்தவள், அவரை அதிர்ச்சியாய் ஏறிட, “எப்போதும் என் வீட்டு ஆளுங்க மேல எனக்கு அக்கறை இருக்கு அர்ச்சனா!” என்றவரின் வார்த்தைகளில், நீங்கள் அனைவரும் எனது கண்காணிப்பில் என்ற அர்த்தம் பொதிந்து இருந்தது.


“ப்பா.. அது வந்து… நான் எதுவும் பண்ணல…!” வேகமாய் வெளிவந்த வார்த்தைகள் தந்தையின் பார்வை தீட்சண்யத்தில் தேய்ந்து மறைந்தது. குரலை செருமிக் கொண்டவர், “எனக்கு தேவை உன் வாயால என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியனும்! அவ்ளோதான்!”


நடந்ததை விவரித்தவள், வசதியாய் தான் சொன்னதை மறைத்துவிட்டாள். “அவ்ளோதானா?” வைத்தி தொக்கி நிறுத்த, அதே நேரம் புயல் போல வேகமாய் அறைக்குள் நுழைந்தனர், சாரதாவும், முரளியும். “என்னப்பா இவ்ளோ நடந்திருக்கு! நீங்க யாரு என்னனு விசாரிச்சு கைய கால தட்டுறத விட்டுட்டு அச்சுவ விசாரிச்சுட்டு இருக்கீங்க!” படபடவென பொரிந்தான், தமையன். மகனின் வார்த்தைகளை அமைதியாய் ஆமோதித்தார் தாய். இருவரையும் அமைதியாய் ஏறிட்டவர், மகளை பார்க்க, அவரது பார்வையில், “இன்னும் இருக்கிறது சொல்!” எனும் செய்தி இருந்தது.


“அது அது நான் இல்ல அ… வ.. அவன் தான்… அந்த மு… கு..ந்தன் தான்!” அவள் திக்கி திணற, “ வேகமாய் மகளை இடையிட்ட சாரதா, “யாரு? எந்த முகுந்தன்?” என கேட்க, முரளிக்கு எதுவோ புரிவதாய், “யாரு பிருந்தாவோட தம்பியா?” என வினவ, ஆம் என்பது போல தலை அசைத்தாள். தங்கையின் பதிலில் வெகுண்ட முரளி, ஆத்திரத்தில் பல்லை கடிக்க,


“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அக்கா நாத்தனார்ன்னு தெரிஞ்சும் இப்படி செய்து இருப்பான்!” என சாரதா பொரிய, முரளிக்கு கோபம் கரையை கடந்தது.


“அவனை!” ஆத்திரத்தில் பல்லை நறநறவென கடிக்க, “எங்கடா உன் பொண்டாட்டி கூப்பிடு அவளை!” மகனை ஏவ, வாயிலில் சத்தம் கேட்டது. அனைவரும் திரும்ப பிருந்தா தான் நின்றிருந்தாள்.


மாமியாரிடம் நாளை உணவுக்கான பட்டியலை கேட்க அறைக்கு சென்றிருக்க, அவர் அங்கில்லாது போகவே, தேடி வந்த சமயம், அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, திரும்ப போனவள், தம்பியின் பெயர் அடிபடவும், அங்கேயே தேங்கினாள்.


“பாத்தியா! பாத்தியா! உன் பொண்டாட்டி நம்ம பேசுறத ஒட்டு கேட்குறா!” சாரதா எடுத்துக்கொடுக்க, முரளியின் கண்கள் மனையாளை எரித்தது.


“பிருந்தா இங்க வாம்மா!” வைத்தி அழைக்க, அடிமேல் அடிவைத்து உள்ளே வந்தவள், மாமனாரின் முன் நின்றுக் கொண்டாள். தலை குனிந்தபடி, “மாமா நான் ஒட்டு எல்லாம் கேட்கல!” என்பதற்குள் இருதுளிகள் கண்ணில் இருந்து சிதற, அதனை வேகமாய் துடைத்துக் கொண்டாள்.



அதனை கண்டு சாரதா இளக்காரமாய், “இதோ ஆரம்பிச்சுட்டா நாடகத்தை!” சத்தமாய் முணுமுணுக்க, வைத்தியநாதன் மனைவியை கண்டன பார்வை பார்த்தார். இருந்தும், அவரின் தான் எனும் அகங்காரம் அடங்க மறுக்க, “ஏய் என்ன அக்காவும் தம்பியும் சேர்ந்து எல்லாம் பண்ணிட்டு, நீ இங்க நீலி கண்ணீர் வடிக்கிறியா?” பிருந்தா மீது பாய,


“சாரதா” மனைவியை அதட்டினார் வைத்தி. மெல்ல நடந்ததை விவரிக்க, ஒரு நொடி பிருந்தாவுக்கு தம்பியின் செய்கை மீது அதிருப்தி தான் எழுந்தது.



“என்ன அப்படியே கல்லு மாதிரி நிக்குற! நீ சொல்லித்தான் அவன் அப்படி செய்திருப்பான்!” சாரதா மறுபடி குற்றம் சாட்டினார்.


“இல்ல மாமா! அவன் அப்டி செய்ற ஆளு இல்லை!” மெதுவாய் ஒலித்தது அவள் குரல். “அப்போ என் பொண்ணு தான் தப்புன்னு சொல்றியா!” மருமகளை இடையிட்டார், சாரதா.


பிருந்தா அமைதியாக இருக்க, “வாயை திற! நீ நிக்குறத பார்த்தா அப்படித்தான்னு சொல்ற மாதிரி இருக்கு!” மருமகள் மீது பாய, “சாரதா!” வைத்தியின் குரல் ஓங்கி ஒலிக்கவும் தான் அடங்கினார்.


பெருமூச்சுடன், “அர்ச்சனா! நீ இன்னும் முழுசா சொல்லல!” தந்தையின் அழுத்தம் நிறைந்த குரலில் எச்சில் கூடி விழுங்கினாள், பெண்.


“அவளை ஏன்ப்பா கேட்குறீங்க?” முரளி இடையிட,

கை உயர்த்தி அவனை தடுத்தவரின் பார்வை மகளை துளைக்க, “அ… அது… சமைக்கிறவனுக்கு இங்க என்ன வேலை….ன்னு…” இழுத்து நிறுத்தியவள், தந்தையின் பார்வை தன்னைமீது இருப்பது உணர்ந்து தலை நிமிராமலே, “ “மாசம் கைகட்டி சம்பளம் வாங்குற சமையல்காரன்…. எல்லாம் என்கிட்ட பேசுறான்!” அவள் சொல்லி முடிக்க, அதையே தான் அங்கே முகுந்தனும் நினைத்துக் கொண்டிருந்தான்.



சாரல் அடிக்கும்…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top