சாரல் 11

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே,

திரும்பவும் நானே. சாரி வழக்கம் போல லேட் ஆகிடுச்சு. கொஞ்சம் எடிட்டிங்ல லேட் ஆகிடுச்சு. போன பதிவுக்கு விருப்பம், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்க இல்லனா எனக்கு இது சாத்தியமே இல்லை
உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்கிறது தவிர என்கிட்டே வேற வார்த்தைகள் இல்லை.

மௌன வாசகர்களே நீங்களும் உங்கள் மௌனம் களைந்தால், மகிழ்ச்சி. தொடர்ந்து படிங்க உங்கள் கருத்துக்களை சொல்லுங்க நண்பர்களே.

உங்கள் ஆதரவு தேடி,

நான் உங்கள
சுதீக்ஷா ஈஸ்வர்



சாரல் 11


மாமியாரின் முணுமுணுப்பில் மெல்ல தன்னினைவு அடைந்தவள், வேகமாய் தனது கண்ணீர் கரைப்படிந்த கன்னங்களை துடைத்துக்கொண்டு அடுக்களைக்குள் மறைந்தாள். வெளியே வந்த முகுந்தனின் கண்களும் கலங்கி போய் இருக்க, யாரும் அறியாதவாறு சட்டையில் முகத்தை துடைத்துக்கொண்டான். செல்லும் அவனின் முதுகையே பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் முரளி.

—-----------------------------------------------------------------------------


அக்காவை பார்த்ததில் இருந்து மனம் நிலையில்லாது தவிக்க, அதனை வண்டியின் வேகத்தில் காட்டினான். வேலையிடத்துக்கு வந்து சேர்ந்தவன், ஒரு பெருமூச்சை வெளியிட்டு, தன்னை நிலைபடுத்திக் கொண்டு, அடுக்களைக்குள் நுழைந்து ஏப்ரானை அணிந்து, அடுப்பை பற்ற வைத்தான். எரியும் ஜூவாலையின் முன், அவன் மனதில் எரியும் ஜூவாலையின் தகிப்பு குறைவது போல இருக்க, மெல்ல மெல்ல தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான், முகுந்தன்.


—--------------------------------------------------------------------------

இங்கு பிருந்தா, தம்பியிடம் மாமியார் நடந்துக்கொண்ட முறையில் வருந்தினாலும், தனது தம்பியை கண்ட மகிழ்வு, அவள் மனதெங்கும் விரவியிருந்த வெறுமையை கொஞ்சமே கொஞ்சம் போக்கி இருந்தது.


கணவனுக்கான டீயுடன் அறைக்கு சென்றவள், மெதுவாய் கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல, ஒரு அழைப்பில் இருந்தவன், அவளை கண்டு கண்களால் பொசுக்கினான். எதையும் யோசிக்காது போன தனது மடமையை எண்ணி நொந்துக் கொண்டவள், மெதுவாய் சத்தம் எழுப்பாது கப்பை வைத்துவிட்டு திரும்ப, “என்ன உடன்பிறப்பை பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா இருக்க போலிருக்கே!” அழைப்பை துண்டித்து விட்டு திரும்பியவனின் குரலில் எள்ளல் ஏகத்துக்கும் நிறைந்திருக்க, மனையாளை சீண்டும் நோக்கில் கேட்டான், முரளி.


ஒரு நொடி அவளது நடை தடைபட, எதோ கூற துடித்த நாவை கட்டுக்குள் கொண்டு வந்து, அவனை வெறுமையாய் ஏறிட்டாள். “என்ன! கண்ணுல லைட்டா திமிர் தெரியுது! தம்பியை கண்ட தைரியமா?” சீண்டலாய் கேட்க, அவளது நிலையில் மாற்றமில்லை. அவளின் அமைதியில் அவனது சீற்றம் அதிகரிக்க, வேகமாய் அவளை நெருங்கியவன், தோளை வலிக்கும்படி பற்றி, “என்னடி உன்னைதான் கேட்குறேன்? பதில் வாயையே திறக்காம அழுத்தமா நிக்குற!” என்றவனின் கண்களில் மனையாளை காயப்படுத்தும் எண்ணம் தான் மிகுந்திருக்க, அவன் எண்ணம் புரிந்தவள் போல அமைதியாகவே நின்றாள் பிருந்தா. அவளின் அமைதியில் அவனின் அகங்காரம் சீண்டப்பட, “கேட்குறேன்ல! அவ்வளவுக்கு அவ்வளவு திமிர் கூடி போய்டுச்சு!” என்றவன் தனது பிடியில் அழுத்தத்தை கூட்ட, வலியில் கண்கள் கலங்க, உதடு துடிக்க, அவனை ஏறிட, “ச்சீ போய்தொலை! எப்ப பாரு ஊமைக்கோட்டான் மாதிரி வாயையே திறக்காம இருக்க வேண்டியது இல்லனா கண்ணுல டாம்மை திறந்திடவேண்டியது! என் கண்ணுல பட்டுதொலைக்காத!” என உறுமியபடி அவளை கதவை நோக்கி தள்ளினான். அடுத்த நொடியே அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவந்தாள் பிருந்தா.

—-----------------------------------------------------------------------------


வீட்டை விட்டு வெளியேறிய அந்த கார், சாலையை அடைந்தவுடன் வேகம் பிடிக்க, அப்பா அப்பா என நூறு முறையாவது தந்தையை அழைத்திருப்பாள், பிரகதி. அவனும் மகளின் இழுப்புக்கு வளைந்து கொடுத்தபடி அவளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தபடியே வந்தான். தந்தையிடம் காட்ட, பேச கேட்கவென அந்த சிறு மொட்டுக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தது. மகளின் குதூகலத்தை ரசித்தபடியே காரை செலுத்தியவன், முகத்தில் அவளின் துள்ளல் கண்டு ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும், மறுபுறம் துக்கமும், ஆதங்கமும் சரிவிகிதமாக கலந்து இருந்தது.


மகளின் சந்தோசம் கண்டு தந்தையாய் மகிழ்ந்தாலும், சிறுகுழந்தை தன்னை இந்தளவு தேடி இருப்பதில் அவன் மனம் குற்றவுணர்வில் தவித்தது. இதுபோல இனிமேல் மகளை அடிக்கடி வெளியே அழைத்து செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டான். “அப்பா!”

“ம்ம் என்னடா குட்டிமா?”

“அப்பா அம்மாவும் நம்மக்கூட வந்தா நல்லா இருக்கும்லப்பா! என் பிரிண்ட்ஸ் எல்லாரும் அவங்க அம்மா அப்பா ரெண்டு பேர் கூடவும் தான் வெளிய போவாங்களாம்! என் பிரெண்ட் வைஷு சொன்னாப்பா! ஏன்ப்பா அம்மா நம்மக்கூட வரலை!” எனும் கேள்வியில் அவனது இத்தனை நேர இளக்கம் இருந்த இடம் தெரியாமல் போனது. மகளின் கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லுவான்? பதில் இருந்தால் தானே சொல்வதற்கு! ஒரு நொடி பதில் கூற முடியாது தடுமாறியவன், “அ.. அ.. து அது வந்து.. அம்மாவுக்கு வீட்டுல நெறைய வேலை இருக்காம் செல்லம்! அதான் நம்மளை போயிட்டு வர சொன்னாங்க!” என ஏதோ சொல்லி விஷ்வா சமாளிக்க, அந்த சிட்டோ நம்பாது, “ஆனா அம்மா மாமா வந்து கூப்பிட்டா போறாங்களே அப்பா!” அவளின் சாதுரியத்தில் நிஜமாய் விழிப்பிதுங்கி தான் போனது அவனுக்கு.



“சரிடா அடுத்த முறை அம்மாவையும் கூட்டிட்டு வரலாம் சரியா?” என சொல்லவும், “ஹை ஜாலி ஜாலி அப்பானா அப்பா தான்!” என குதூகலித்தது குழந்தை.


அவனை மேலும் சோதிக்காது குழந்தை அமைதியாய் இருக்க, ஒரு நெடும் மூச்சை வெளியிட்டான் விஷ்வா. மேலும் அவர்கள் அடையவேண்டிய இடம் வந்ததும் அவனுக்கு நல்லதாகி போனது.


“அப்பா நம்ம பீச் வந்துட்டோமா?” முகம் மலர்ந்து கேட்க, “ஆமா டா குட்டி!” என்றவன் மகளை கைகளில் அள்ளிக்கொண்டான்.


“என்னப்பா பீச் காணோம்?” என குழந்தை பாவமாய் கேட்க, “கொஞ்ச தூரம் நடக்கணும்டா!” என்றவன் காரை பூட்டிக் கொண்டு கடற்கரையை நோக்கி சென்றான்.


மகளை மணலில் இறக்கி விட்டவன், அவள் விளையாடும் அழகை ரசிக்க ஆரம்பித்தான். அந்நேரம் அலுவலக விஷயமாய் ஒரு அழைப்பு வர மகள் மீது ஒரு கண் வைத்தபடியே சற்று தள்ளி பேசிக்கொண்டு இருந்தான்.


“அப்பா! அப்பா!” எனும் மகளின் குரலில் திரும்ப, அங்கே “விஷ்வா விஷ்வா!” என அவள் அழைப்பது போன்றொரு பிரம்மை. திகைத்து போய் தலையை உலுக்கிக் கொள்ள, அங்கே மகள் தான் தெரிந்தாள்.


நிதர்சனம் முகத்தினில் அறைய, அதன் கணம் தாள முடியாது அவன் கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தது.


வேக வேகமாய் இதயம் எகிறி துடிக்க, மகளிடம் விரைந்தான், விஷ்வா. “அப்பா! அப்பா! இங்க பாருங்களேன்! நான் மணல் வீடு கட்டி இருக்கேன்!” மகிழ்வாய் தந்தையிடம் காட்டி குதூகலிக்க, “விஷு விஷு!” என தன்னையே சுற்றி வந்த காரிகை தான் நினைவில் வந்தாள்.



“என் வாழ்க்கையில் சந்தோசமே வராதா?”


“என் ஆயுள் முழுக்க இப்படி தான் நான் தவிக்க வேண்டுமா?”

“விடாது தொடரும் அவளது நினைவுகளை நான் செய்வேன்?” “அய்யோ!... ” என நெஞ்சம் கதறியது. தலையை பற்றிக் கொண்டு, மனதின் வலி தீர கதற வேண்டும் போல ஒரு எண்ணம் நொடிக்கு நொடிக்கு அவனுள் வலு பெற, செய்வதறியாது கலங்கி போனான் விஷ்வப்ரகாஷ்.


குழந்தையின் ஆசைக்காக அழைத்து வந்தவன் நேரம் ஆக ஆக, மனமிடும் கதறலை சகிக்க முடியாது, “பாப்பா போலாமாடா?” தயக்கமாய் அவளிடம் கேட்க, நிமிர்ந்து தகப்பன் முகம் கண்டாள் மழலை.



அவள் முகத்தில் இப்பவேவா எனும் கேள்வியும், ஏக்கமும் சரி பாதியாய் கலந்திருந்தாலும், “ம்ம் சரிப்பா!” என உடனே கைகளை தட்டிக் கொண்டு எழுந்தாள், பிரகதி. அதில் அவன் மனம் குத்த, “அது அது அப்பாவுக்கு கொஞ்சம் தலைவலியா இருக்குடா!” மகளிடம் பொய் உரைக்கிறோமே எனும் எண்ணம் அவனை தடுமாற செய்ய, குரல் கலங்கி ஒலித்தது. வேகமாய் தந்தையை நெருங்கியவள், அவனின் கழுத்தை தொட்டுப் பார்த்து, “அச்சோ தலை வலிக்குதாப்பா! நம்ம வீட்டுக்கு போய் பாட்டிக்கிட்ட தைலம் வாங்கி தடவலாம்ப்பா! உடனே தலைவலி சரியாப் போய்டும்!” என தன்னை பெரிய மனுஷியாய் பாவித்துக் கொண்டு சொல்ல, சேயின் வடிவில் தன் தாயைக் கண்டான், விஷ்வா. தான் எதுவும் சொல்லாமலே தனது உள்ளத்து உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் தனது தாயுமானவளை கண்டு உள்ளம் நெகிழ, அமைதியாய் அவளை அழைத்து கொண்டு காரில் ஏறினான்.


வரும் வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தி மகளுக்கு பிடித்ததாய் ஆர்டர் செய்ய, குழந்தையோ கண்கள் மின்ன தந்தையுடன் இருக்கும் நேரத்தை குதூகலமாய் அனுபவித்தாள்.


உணவு வரவும், “குட்டிமா கை வச்சுடாதீங்க! சூடா இருக்கும் அப்பா ஊட்டிவிடுறேன்!” என்றபடி இட்லியை பிட்டு ஊதி தர, ஏதேதோ கதைகள் பேசியபடி உணவை வாங்கியவள், பாதி வயிறு நிறையவும், “அப்பா போதும்!” என்றபடி முகத்தை திருப்ப, “இன்னும் கொஞ்சோண்டு தான்டா!” என்றபடி அவன் உணவூட்டி முடித்து,

அவள் கைகள் கழுவி வாயை துடைத்து விட்டவன், கைகளை துடைத்துவிட்டு நிமிர, மகளின் கவனம் இங்கில்லாததைக் கண்டு அவனும் அங்கே தன் பார்வையை செலுத்த, ஒரு ஆண் மற்றும் பெண் நடுவே இவள் வயதுடைய ஒரு குழந்தையும் அமர்ந்திருக்க,

குழந்தையின் தாய் போல, கணவனுடன் பேசி சிரித்தபடியே மகளுக்கு ஊட்ட, அதுவோ மறுத்தபடி, தந்தையோடு ஒட்டிக்கொண்டது, தாய் செல்ல மிரட்டலோடு கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய, தந்தையிடம் இன்னும் ஒட்டிக்கொள்ள, தாய் செல்ல கோபத்தோடு முகம் திருப்பிக் கொண்டாள். கணவன் சிரித்தபடியே உணவை மகளுக்கு ஊட்ட, சமத்தாய் உண்டு முடித்த குழந்தை, உணவு அப்பிய வாயோடு தாயின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அந்த பெண்ணின் முகத்தில் குடிக் கொண்டிருந்த கோபம் விடைபெற தானும் மகளின் முகத்தில் முத்தமிட்டாள்.



அதைதான் பிரகதியும் ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்க்க, இதனை கண்ட விஷ்வாவின் மனமும் கலங்கி போனது. கலங்க துடித்த கண்களை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன், “பிரகதிம்மா வீட்டுக்கு போலாமா?” விஷ்வா வினவ, அப்போதும் அவளின் பார்வையில் மாற்றமில்லை. நெஞ்சம் இரும்பு குண்டாய் கனக்க, அவளை தன்புறம் திருப்ப, “அம்மாவும் நம்மக்கூட வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்லப்பா!” என இரண்டாவது முறையாக தனது சின்னஞ்சிறு மனதின் ஆசையை மறைக்க தெரியாது ஏக்கம் ததும்பிய குரலில் தந்தையிடம் உரைத்துவிட, கள்ளம் கபடமில்லா பிள்ளையின் மொழியில் பெற்றவன் துடித்துப் போனான்.


அவள் குழந்தை அல்லவோ! மனதின் ஏக்கத்தை தனது தந்தையானவனிடம் இறக்கி வைத்துவிட, இவன் நெஞ்சிலோ பெரும் பாரம் ஏறிக் கொண்டது. அதன் விளைவாய் மகளை கைகளில் ஏந்திக் கொண்டவன், யாரோ துரத்துவது போல வேகமாய் அந்த இடத்தை விட்டு கிட்ட தட்ட ஓடினான். ஆனால் தனது வார்த்தைகளில் தந்தையின் மனம் ஆழிப் பேராளியாய் ஆர்ப்பரித்துக்கொண்டு இருப்பதை மகள் அறியாது தான் போனாள்.




காரில் கனத்த மௌனம் வியாபித்திருக்க, தகப்பனின் தவிப்பு உணர்ந்தாளோ என்னவோ வரும் போது ஆர்பரிக்கும் அருவியாய் கொட்டி தீர்த்தவள், இப்போது அலையற்ற ஆழ்கடலாய் அமைதியாய் வந்தாள்.


மனம் குற்ற உணர்வில் குறுகுறுக்க, மகளின் அமைதியை தாள முடியாது, பெரும் தயக்கத்துக்கு பிறகு, “அப்பா மேல கோபமாடா?”

என்றபடியே திரும்ப, அவனது செல்ல சிட்டோ, ஜன்னலில் தலை சாய்த்தபடியே உறங்கி இருந்தாள்.


அதனை கண்டவனின் முகம் கனிய, ஒரு கை ஸ்டீரிங் வீலை பற்றியபடியிருக்க, மறுகையால், மகளின் தலையை ஆதுரமாய் வருடினான்.



வீடு வந்தவுடன், மகளின் துயில் கலையாதவாறு மெதுவாய் அவளை சுமந்தபடி வீட்டினுள் வர, கைகளை நீட்டிய அன்னையிடம் மெதுவாய் தலையசைத்து மறுத்தவன், தங்களது அறையில் அமைக்கப்பட்டிருந்த மகளின் பகுதிக்கு சென்றான்.


மலரினும் மென்மையாய் மகளை படுக்கையில் கிடத்திவிட்டு நிமிர, தூக்கத்திலும் தந்தையின் சட்டையை இறுக்கி பற்றியவாறு இருந்தாள், பிரகதி. அதனை கண்டவன் மனம் தனது இறுக்கங்களை தொலைக்க, தன் பொன் மயில் துயில் கொள்ளும் அழகை கண்டு, மகளையே ரசித்துப் பார்த்திருந்தான். மெதுவாய் அவள் துயில் கலைக்காது, தனது சட்டையை அவளது பிடியில் இருந்தும் விடுவித்துக் கொண்டவன், மெதுவாய் குழந்தையின் பிறை நுதலில்,

கண்ணீர் கண்களோடு முத்தமிட்டான்.



தந்தையின் ஸ்பரிசத்தில் பிரகதி லேசாய் அசைய, வேகமாய் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு, அரவம் எழுப்பாது கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தான்.


அத்தனை நேரம், அவனது கார் வீட்டை நெருங்கியதில் இருந்து, இதோ இப்போது இந்த நொடிவரை அவனது அசைவுகள் அத்தனையையும் பால்கனியில் நின்றபடி வெறித்துக் கொண்டுதானிருந்தாள், அவன் மனைவி அபிரக்ஷிதா.


தங்களது அறைக்குள் நுழைந்தவன், அவளை பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இன்றி, தன்னுள் உழன்றவாறே, குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான். கணவனின் உதாசீனத்தில் அவள் மனம் கோபம் கொள்ள, வார்த்தை கொண்டு வதைக்க தயாராக இருந்தாள், மாது.



இதை எதையும் அறியாத விஷ்வா, தனது மனதின் வெம்மை தணிய, நீரின் கரங்களில் சரண் புகுந்தான். வார்த்தை எனும் வாள் சுழற்றி மனைவி தன்னை உயிரோடு வதைக்க போவது அறியாது போனான் ஆண்மகன். இறுதியில் காயப்படப் போவது யாரோ?


சாரல் நனைக்கும்…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top