சாரல் 10

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே,

திரும்பவும் நானே. என்னோட ரெண்டாவது கதையை தூசி தட்டி எடுத்து இருக்கேன். சாரி ரொம்ப சாரி. இந்தகதைக்கு எவ்வளவு பேர் ஆர்வமா வெயிட் செய்தீங்கநு தெரிந்தும் என்னால அப்போ தொடர முடியாத சூழல்.

உங்க நம்பிக்கையை திரும்ப பெற தான் நானும் முயற்சி செய்றேன். பாக்கலாம் உங்க நம்பிக்கையை திரும்ப பெறுவேனா?

திரும்ப சாரல் உங்களை நனைக்க வருது யாருக்கெல்லாம் அதுல நனைய விருப்பம். கதை டச் விட்டு போச்சு என நினைப்பவர்கள், முந்தைய எபி படிச்சுட்டு வாங்க ப்ளீஸ்.


உங்க கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 10


தன் முன்னே பரந்து விரிந்திருந்த அந்த பங்களாவின் கதவையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான், முகுந்தன். வெளியே அமைதியாக தன்னை காட்டிக்கொண்டாலும், உள்ளே தனக்குள் போராடிக் கொண்டு இருந்தது அவனுக்கு மட்டும் தான் தெரியும். மனதுக்கும் மூளைக்கும் கிடந்து அல்லாடியவனின் மனதை இறுதியில் தாய் பாசமே வென்றது. தாயின் பரிதவிப்புடன் கூடிய குரலே முகுந்தன் எனும் பனிமலையை கரைக்க போதுமானதாக இருந்தது. அவர் தன்னிடம் அதட்டி மிரட்டியோ, இல்லை கெஞ்சவோ செய்திருந்தால், நிச்சயம் தனது பிடித்தம் இல்லாததாக இருந்திருந்தால், அதனை செய்திருப்பானோ என்பது சந்தேகம் தான். ஆனால் அவர் பாசம் எனும் தழை கொண்டு அல்லவா அவனை பிணைத்திருந்தார். அதனை மீறும் சக்தி அவனுக்கு இல்லாதததால், தனக்கு பிடிக்காவிட்டாலும் அவருக்காக அதனை செய்ய விழைந்தான். பாட்டி சொன்னதோடு சரி. உன் விருப்பம் என சொல்லாமல் சொல்லும் தாயின் ஆசையை எப்படி மகன் நிறைவேற்றாது போவான். அன்னையின் குரலுக்கு அடிபணியவேண்டி தான் இருந்தது.


அனைத்தையும் யோசித்தப்படி அந்த கதவையே அவன் நீண்ட நேரமாய் வெறிக்க, அதனை கண்ட காவலாளி, புருவம் சுருக்கினார். “எப்பா தம்பி யாருப்பா நீ? ரொம்ப நேரமா இங்கேயே நின்னு மொறச்சு மொறச்சு பார்த்துட்டு இருக்க!”


“யாரை பாக்கணும்? சின்னவரையா? இல்ல பெரியவரையா?” என அவர் கேட்க, அவன் முகமோ தனது விருப்பமின்மையை அப்பட்டமாய் காட்டியது. அதனை கண்ட காவலாளி, “இங்கெல்லாம் ரொம்ப நேரம் நிக்க கூடாதுப்பா. கிளம்புங்க கிளம்புங்க இடத்தை காலி பண்ணுங்க!” என அடித்து விரட்டாத குறையாய் அவனிடம் கறாராய் சொல்ல, பல்லை நறநறவென கடித்தான், முகுந்தன்.


அதற்குமேலும் அங்கே நிற்க துளிக்கூட அவனுக்கு விருப்பமில்லாது போக, விறுவிறுவென திரும்பிபாராது நடந்தான். வேகமாய் வண்டியில் ஏறி அமர்ந்து கிளப்ப, ஏனோ இரு பெண்களின் முகம் அவன் மனதில் மின்னி மறைய, ஓய்ந்து போனான், ஆடவன். தனது கையாலாகா தனத்தை எண்ணி, கோபத்தில் வண்டியில் ஓங்கி குத்தினான்.


அவனது செய்கையையே சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு இருந்த காவலாளி இண்டர்காம் ஒலிக்க அதில் கவனம் களைந்தார். அழைப்பை ஏற்றவர் கண்கள் அவனையே அளவிட்டபடியே இருக்க, எதிர்முனையில் என்ன சொல்லப் பட்டதோ, நொடியில் அவர் கண்களில் ஒரு மாற்றம். அதுவரை அவனை சந்தேகமாய் பார்த்துக்கொண்டுக் இருந்தவரின் உடல்மொழியில் ஒரு குழைவு. “சரிங்க! சரிங்க சார்” என்றபடியே வேகமாய் அவனை நெருங்கினார்.

“சார் சார் கொஞ்சம் நில்லுங்க!” என முகுந்தனை அழைக்க, அவன் சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தான். “உங்களைத்தான் சார்! உங்களை கூப்பிடுறாங்க! உள்ளவாங்க சார்!” என பவ்யமாய் அழைக்க, முகுந்தனுக்கோ என்னடா இது என்றுத்தான் தோன்றியது.

வேற எதையும் ஆராயும் மனம் இல்லாததாலோ, இல்லை விரும்பவில்லையோ? அது அவன் மனதுக்கே வெளிச்சம். இப்போதைக்கு சீக்கிரம் இங்கிருந்து சென்றால் போதும் என்றிருக்க, மெதுவாய் உள்ளே நடக்க ஆரம்பித்தவன் கண்களோ அந்த வீட்டின் சுற்றுப்புறத்தையே அலசிய படியே வந்தது. அந்த வீட்டின் ஆடம்பரமோ, பகட்டோ, கொஞ்சம் கூட அவன் மனதை பாதிக்கவோ, சலனத்தையோ உருவாக்கவே இல்லை. ஒரு ஏளன புன்னகை தான் அவன் இதழில் உதித்தது.

“வீடு மட்டும் பெருசா இருந்து என்ன பிரயோஜனம்? பணக்கார ஏழைங்க!” என கிண்டலாய் நினைத்துக் கொண்டது, அவன் மனம். “பொழப்பு இல்லாதவங்க! வீட்டுக்கும் வாசலுக்குமே ரெண்டு கிலோமீட்டர் இருக்கும் போலவே! எவ்ளோ தூரம் தான் நடக்குறது!” என சலித்தபடியே வாயிலை நெருங்கி இருந்தான். அவனுக்கு அங்கு வரவே இஷ்டம் இல்லாததால், காணும் அனைத்திலும் அவன் மனம் ஒரு குறையை கண்டுபிடித்த படியே வந்தது.


வாயிலை நெருங்கியவுடன் ஏனோ அவன் உடல்மொழியில் சட்டென ஒரு மாற்றம். மனதில் ஏனோ பல பல நிகழ்வுகள் சூறாவளியாய் சுழன்று அடிக்க, உடல் இறுக, ஒரு நொடி திரும்பி சென்று விடலாமா என்று கூட தோன்றியது.

ஒரு நொடி கை முஷ்டியை இறுக்கி தன்னை நிலைப்படுத்தியவன், “பார்த்துக்கலாம் விடுடா முகுந்தா! இந்த தடவை எது பேசுனாலும், திரும்பி கொடுத்துட்டு வந்திரு! எதுனாலும் பார்த்துக்கலாம்!” என மனதை திடப்படுத்தியவாறே உள்ளே சென்றான்.


அவன் உள்ளே சென்ற நேரம் காலை உணவுக்காக அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க, கணவனுக்கு பரிமாறியபடி எதேச்சையாய் திரும்பிய பிருந்தா, தனது உடன்பிறந்தவனை எதிர்பாராமல் கண்டதும் அசைவற்று போய் அப்படியே நின்றாள். அனைவரின் பார்வையும் அவனிடமே தேங்கி நிற்க, உள்ளே செல்லலாமா? வேண்டாமா? எனும் தயக்கம் அவனிடத்தில். “அடடே வாப்பா முகுந்தா! ஒரே ஊருள்ள இருந்துக்கிட்டு இப்பத்தான் எங்களை எல்லாம் பார்க்கணும்னு உனக்கு தோணுச்சா?” என வைத்தியநாதன் தான் அவனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றவர், இறுதியில் அவனுக்கு கொட்டு வைக்கவும் தவறவில்லை.

சங்கடமாய் ஒரு சிறு புன்னகையை சிந்தியவன் கண்களோ தன் உடன் பிறந்தவளிடம் தான் தொக்கி நின்றது. தம்பியை கண்டவளின் கண்கள் ஆனந்தத்தில் கலங்க உதடு கடித்து உணர்வுகளை அடக்க போராடினாள், மங்கை. அவளையும் மீறி இருதுளி நீர் கண்கள் பொழிய, “இப்பதான் என்னை பார்க்கணும்னு உனக்கு தோணுச்சா? உனக்கு கூட நான் வேண்டாதவளாகி போய்டேன்ல!” அவளின் கண்கள் அவனை குற்றம் சாட்டுவது போல இருக்க, தனது பார்வையை விளக்கி, வேறு புறமாக திருப்பிக் கொண்டான்.

“பிருந்தா என்ன அப்படியே நின்னுட்ட! தம்பி எவ்ளோ நேரமா வெளியவே நிக்குது! உள்ள கூப்பிடுமா!” என அமிர்தம் பாட்டி அவளை கலைக்க, “ வா…. வா.. வாடா!” அழுகையில் தோய்ந்த குரலை சீர் படுத்தி தம்பியை அழைத்தாள், பிருந்தா. என்ன முயன்றும் அவளது குரலே அவள் எவ்வளவு உணர்ச்சிவசப் பட்டுயிருக்கிறாள் என உணர்த்தியது.


தாயும், மகனும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல இருக்க, அமிர்தம் பாட்டி தான், வீட்டுக்கு மூத்தவராய், “சாரதா! முரளி! வீட்டுக்கு வந்து இருக்குறவங்களை வான்னு கூப்பிட மாட்டிங்களா? என்ன பழக்கம் இது?” என அதட்டலாய் கேட்க, மாமியாரை மனதினுள் வசைபாடியபடி, “வாங்க!” என வாயை இழுத்து பிடித்து முகத்தை அஷ்டகோணலாய் வைத்துக்கொண்டு வரவேற்றார், சாரதா.

“இதுக்கு இவ கூப்பிடாமலே இருந்து இருக்கலாம்!” என்று தான் தோன்றியது, வைத்தியநாதன், அமிர்தம் இருவருக்கும். “ வாப்பா உட்காரு சாப்பிடலாம்!” பெரியவராய் பாட்டி உபசரிக்க, “இல்லை பாட்டி நான் சாப்பிட்டு தான் வந்தேன்!” மறுத்தான் முகுந்தன்.


அதற்குள் உணவை முடித்த வைத்தி, அவனை அழைத்துக்கொண்டு சோபாவில் அமர, ஏனோ முள் படுக்கை மீது அமர்ந்திருப்பவன் போல சோபாவின் நுனியில் பட்டும்படாமல் அமர்ந்தான். “ஹ்ம்ம் சொல்லுப்பா! வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? வேலை எல்லாம் எப்படி போகுது? அப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்கு?” என விசாரிக்க, முயன்று தன்னை சகஜமாக்கி கொண்டவன், அவருக்கு பதிலளித்தான்.

அந்நேரம் அவருக்கு ஒரு அழைப்பு வர, “ஒரு நிமிஷம்ப்பா!” என்றவர், அதனை ஏற்று காதில் வைக்க, அவன் கண்களோ வீட்டை வலம் வர துவங்கியது. அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டே வந்தவனின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்குத்த, புருவமோ யோசனையில் சுருங்கியது.



அங்கே ஒரு நவநாகரீக மங்கையின் புகைப்படம் தான் அந்த சுவற்றை விதவிதமாய் அலங்கரித்திருக்க, அவளின் முகமோ அவனுக்கு நன்கு பரிச்சயபட்டதாய் தோன்றியது. அதே நேரம் டக் டக் என ஹை ஹீல்ஸ் சப்தம் எழுப்ப அவனையே தான் பார்த்தப்படி படி இறங்கினாள், அந்த மங்கை. சத்தம் போடாமல் அவன் பின்னே நின்றுக்கொள்ள, அனைத்து போட்டோகளையும் ஊன்றி கவனித்தவன், மெதுவாய் திரும்ப, ஒரு நொடி திடுக்கிட்டு போனான். நிச்சயமாய் அவன் அவளை அங்கே திடீரென்று எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகமே சொன்னது.


அதற்குள் போன் பேசி முடித்து வந்த வைத்தியநாதன், “என்னப்பா அப்டி பாக்குற? என் பொண்ணு அர்ச்சனா!”

“இது யாருன்னு தெரியுதா? உங்க அண்ணியோட தம்பி முகுந்தன்!” என இருவருக்கும் அறிமுகம் செய்துவைக்க, அவள் கண்களோ அவனை ஒரு நொடி அளவிட்டது. பின்னர் ஒரு அலட்சிய பாவத்துடன், திரும்பிக்கொண்டாள்.


அவளது பெயரைக் கேட்டவுடன் அவனது உடலில் ஒரு விறைப்பு. முகமோ கடுகடுவென்றாக, இதுவரை இருந்த இலகுத்தன்மை சுத்தமாய் இல்லை. அதற்கு பிறகு முகுந்தன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.

தம்பிக்கு ஜூஸ் போட சென்ற பிருந்தா பின்னோடு தாயின் சேலையை பற்றியபடி, ராகுலும் நடந்து வந்தான். “இந்தா முகுந்த்!” பிருந்தா நீட்ட, தாயின் பின்னே ஒளிந்துக் கொண்டு மாமனை கண்டான் சிறுவனும்.

அவனைக் கண்டதும் பெரியவன் உதட்டில் சிறுபுன்னகை உதயமாக, சிரித்தபடியே, அவனை நோக்கி கைகளை நீட்ட, தாயின் பின்னே தன்னை நன்றாக மறைத்துக்கொண்டான், சிறுவன்.

மகனின் கைகளை பிடித்து முன்னே இழுக்க, முன்னிலும் வேகமாய் தாயின் பின்னே மறைந்துக்கொண்டு, மாமனை ஓரகண்ணால் பார்த்தான், ராகுல். அதனைக் கண்டதும் முகுந்தனின் முகத்தில் புன்னகை விரிய, வேகமாய் அவனை இழுத்து தனது மடியில் அமர்த்திக்கொண்டான், மாமன்.

“உன் பேர் என்ன?”
ஆசையாய் தோளில் தூக்கி வைத்து தனது நெஞ்சில் வளர்ந்து இருக்க வேண்டிய குழந்தைகளை, இப்படி யாரோ போல தன்னை அறிமுகம் செய்ய வேண்டிய நிலையை எண்ணி அவன் நெஞ்சில் பெரும் பாரம் ஏறியது. அதிலும் அக்காள் குழந்தையின் பேர் கூட தெரியாத தனது நிலையை எண்ணி, அவளின் கணவன் மீதும் கோபமும், தங்களின் நிலையை எண்ணி வருத்தமும் சரிவிகிதத்தில் அகத்தில் தோன்றி மறைந்தது.


அதற்குள் மாமனின் சட்டை பட்டனை ஆராய்ச்சி செய்தபடி, “உங்க பேரு என்ன?” மழலையில் குழந்தை கேட்க, சிறு சிரிப்புடன் “முகுந்தன்!” என இவன் மறுமொழி கூற, “மு..ந்தன்!” பெயர் வாயில் நுழையாமல் குழந்தை அவனது பெயரை தனக்கு தோது போல உச்சரிக்க, அவனின் முகமோ விளக்கெண்ணெய் குடித்தது போலாகியது.

“சரிவிடு உனக்கு எப்படி சொல்ல வருதோ அப்டியே சொல்லு!” என்றவன், அவனிடம் ஒரு கடலைமிட்டாயை நீட்ட கண்கள் மின்ன அதனை பார்த்தவன், ஒப்புதலுக்காக தாயின் முகத்தை பார்க்க, அவள் கண்மூடி திறக்கவும், அதனை ஆசையாய் வாங்கிக் கொண்டான்.


அதே நேரம், “குழந்தைக்கு கண்டதையும் வாங்கிக் கொடுக்க கூடாது. இது எந்த கடையில வாங்குனதோ! பாக்கவே லோக்கல் ஐட்டம் மாதிரி இருக்கு!” என நீட்டி முழக்கியபடியே வந்தார், சாரதா. முகுந்தனின் முகம் ஒரு நொடி பொலிவிழந்து போக, சகோதரனின் முகத்தை கண்டவளுக்கு மனதில் ஒரு வலி. பதில் பேச முடியா தன் நிலையை எண்ணி அவள் வருந்த, “அவன் என்ன கண்டதையுமா வாங்கிட்டு வந்திருக்கான்! ஆசை ஆசையா தன் அக்கா பிள்ளைங்களுக்கு நல்லதை தான் வாங்கிட்டு வந்திருக்கான்! நம்ம பகட்டுக்காகவோ, இல்லை அவங்க ஆசைப்படுறாங்க அப்படிங்கிறதுக்காக, நம்ம தான் குழந்தைக்கு விஷத்தை கொடுத்து அவங்களை கெடுக்கிறோம்! இது ஒன்னும் செய்யாது!” என்றவர், தனது கொள்ளுபேரனிடம், “கண்ணா நீ போய் அக்கா கூட விளையாடு போ!” என சிறுவனை சாமர்த்தியமாய் அவனை அனுப்பி வைத்தார், அமிர்தம் பாட்டி.

அவனை மட்டம் தட்ட நினைத்து அவர் ஒன்றை சொல்ல போக, அது தனக்கே எதிராய் முடிந்ததில் அதிருப்தி கொண்ட சாரதா, தனது வாயை மூடிக் கொண்டார். மேலும் எதாவது பேச போனால், மாமியார் யார் இருக்கார் என்றும் பார்க்காது தன்னை வைத்து செய்துவிடுவார் என உணர்ந்தவராய், கடுகடுவென்ற முகத்தோடு அங்கிருந்து நகர்ந்தார்.


மேலும் அங்கிருக்க பிடிக்காதவனாய், இல்லாத அழைப்பு வந்ததாய் சொல்லி அவன் விடை பெற எழுந்த சமயம், அமிர்தம் பாட்டி தான், “அப்பா முகுந்தா! நீயும் அடிக்கடி வந்துட்டு போ! அப்ப தான் உன் உடன் பிறந்தவளுக்கு தன் பிறந்தவீட்டு சொந்தம்னு ஒரு பிடிப்பு இருக்கும்!” என்றவர், திரும்பி பிருந்தாவிடமும், “உன் தம்பியை கண்டவுடன் தான் உன் முகமே தெளிவா இருக்கு!”

“என்ன இருந்தாலும் உடன் பிறந்தவங்க பாசமே தனிதான்! இனிமே நீதான் உன் அக்காவுக்கு உங்க அப்பாவுக்கு அடுத்து எல்லாமே செய்யணும்!” என மறைமுகமாய் அவனது பொறுப்பை உணர்த்தினார், பாட்டி. பிருந்தாவின் கண்களோ அவனையே ஏக்கத்தோடு பார்க்க, சகோதரியை கண்டவன் மனதில் வலித்தாலும், “எப்படி இருந்திருக்க வேண்டியவள், யாரோ போலவா நான் உன்னை வந்து பார்க்க வேண்டும்! எல்லாம் நீயே அமைத்துக்கொண்டது! உனக்கு இது தேவை தானா?” எனும் செய்தி ஒழிந்திருந்தது, அவர்கள் இருவர் மட்டுமே அறிவர். சகோதரனின் பார்வையில், அது தன்னிடம் கேட்ட கேள்வியில் ஒரு நொடி தடுமாறிய பிருந்தா, முகத்தில் ஓட்டவைத்த புன்னகையுடன், தலையசைத்தாள்.


பெருமூச்சுடன், தமக்கையிடம் தலையாட்டி விடை பெற்றவன், வேகவேகமாய் விடுவிடுவென்று திரும்பியும் பாராது, சென்றான். செல்லும் தம்பியையே கலங்கிய கண்களுடன் பார்த்திருக்க, “ஏதோ ஊரு உலகத்துலயே இல்லாத தம்பி வந்துட்டான்! இதான் சாக்குன்னு வேலைக்கு டிமிக்கி கொடுக்கவேண்டியது” என மாமியாரின் முணுமுணுப்பில் கண்களை துடைத்து விட்டு கிட்சனுள் சென்று மறைந்தாள், பிருந்தா.

சாரல் அடிக்கும்…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top