கொலுசொலி மயக்குதடி - 1

Advertisement

கோயம்புத்தூர் இரயில்நிலையம்...
மணி சரியாக இரவு எட்டு மணி பத்து நொடிகள்...

கோவையிலிருந்து மும்பை செல்லும் லோக்மானிய திலக் விரைவு இரயில் புறப்படத் தயாராக இருந்தது....

இலக்கின்றி போன தனது வாழ்வின் ஓட்டத்தை தொடர அந்த இரயிலில் ஏறியிருந்தாள் அவள். முன்பதிவு என்று எதுவும் செய்யாததால் உள்ளே சென்று சற்று ஒதுக்குப் புறமாய் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தவள் வெளியே இருட்டை வெறிக்கத் தொடங்கினாள்....

இரயில் அடுத்த சந்திப்பில் நின்றதோ ஆட்கள் ஏறியதால் அவள் இருந்த கம்பார்ட்மெண்ட் சற்று நிரம்பியதோ ஏன் இரயில் மறுபடியும் கிளம்பியதும் கூட அவளது கவனத்தில் பதியவில்லை....

எக்ஸ்கியூஸ் மீ......
ஹலோ உங்களைத்தான்...
மேடம்.........

எந்தப் பதிலும் இல்லாது போனதால் அவளை சற்று உலுக்கவும் சிலை உயிர்பெற்றது போல நிமிர்ந்து பார்த்தாள்...

நீங்க உட்கார்ந்துட்டு இருக்கறது என்னோட சீட் மேடம். கொஞ்சம் விட முடியுமா நான் உட்கார வேண்டும்.....

தன்னிடம் தான் கேட்கிறார்கள் எனப் புரிந்து கொண்டவள் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்....

அவளின் நிலையை பார்த்ததும் என்ன உணர்ந்தானோ, உங்களிடம் டிக்கெட் இருக்கா.....? சற்று பொறுமையாகவே கேட்டான்...

பதில் சொல்ல வாயைத் திறக்காமல் தலையை மட்டும் இடவலமாக ஆட்டினாள். அதை புரிந்து கொண்டவனாய் தான் பதிவு செய்திருந்த இருக்கையில் அவளை விட்டுவிட்டு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்...

கேள்வியாக அவனைப் பார்க்கவும் என்னோட நண்பனுக்கு பதிவு செய்தது. கடைசி நேரத்தில் அவன் வரவில்லை என்றதும் புரிந்ததாய் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள்....

நன்றி கூற வேண்டும் என்றெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் எதையோ ஒன்றை எதிர்பார்த்தான். அது என்னவென்று தனக்கே தெரியாத போது அவளிற்கு எப்படித் தெரியும்....

கண்களை மூடி அமர்ந்திருந்தவள் சோகத்தை தாங்கி இருந்ததை அவளின் முகத்தை வைத்தே கண்டு கொண்டான்....

யாரென தெரியாத ஒரு பெண்ணை இப்படிப் பார்ப்பது தவறு என மூளை அறிவுறுத்த பார்வையை வெளியில் பதித்தான்...

இரவு நேரம் என்பதால் கும்மிருட்டாக இருந்தது. புத்தகம் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் தனது தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து பா.விஜய் எழுதிய ஒரு புத்தகத்தை படிக்கத் தொடங்கி விட்டான். அதற்கு பின்பு அவனது உலகத்தில் பா.விஜயின் எழுத்துகள் மட்டுமே...

வெகுநேரம் கண்களை மூடியபடியே இருந்தவளுக்கு அன்று நடந்த அதிகப்படியான அதிர்ச்சி சம்பவங்களால் தூக்கம் என்பது எட்டாக்கனியாகி இருந்தது. அழுவது கோழைத்தனம் வாழ வேண்டும் என உறுதியாக நினைத்தவள் கண்களைத் திறந்தாள்..

எதிரில் இருந்தவன் புத்தகத்தில் தலையை நுழைத்து இருந்ததால் அவனது முகம் தெரியவில்லை. நமக்காக தானே அவனது இருக்கையை விட்டுக் கொடுத்தான் நன்றி கூட சொல்லவில்லை என புத்தியில் உரைத்தது....

யாரோ பார்ப்பது போல உள்ளுணர்வு தோன்ற புத்தகத்தில் இருந்து கண்களை விலக்கியவன் எதிரில் பார்த்தான். அவளோ அவனையே பார்த்தபடி இருப்பதை கண்டதும் அவசரமாக புத்தகத்தை மூடிவிட்டான்....

பரவாயில்லை படிங்க.... உங்களிடம் நன்றி சொல்ல மறந்து விட்டேன் அதனால் தான் எப்படி அழைப்பது என தயங்கிக் கொண்டிருந்தேன்.....

தனது காதுகளை நம்ப முடியாமல் கைகளை ஒருமுறை கிள்ளிப் பார்த்தான். உண்மைதான் போலேயே என மனதிற்குள் பேசுவதாய் நினைத்து வெளியில் கூறி விட்டான்....

மெல்லியதாய் சிரித்தவள் அப்படி என்ன ஆச்சர்யம் நம்ப முடியாமல் கைகளை கிள்ளிப் பார்க்கும் அளவிற்கு....

பதில் தெரிந்தே கேட்டாலும் அவனும் அதற்கு பதில் சொல்வான் என இவள் எதிர்பார்க்கவில்லை.

நீங்க பேசறீங்களே அதனால தான். இவ்ளோ நேரம் பேசலையா அதான் ஒருவேளை பேசாமடந்தை அப்படினு நெனச்சுட்டேன். எப்படியோ பேசிட்டீங்க. நான் எல்லாம் பயணத்திலே அமைதியாக வந்ததாக சரித்திரமே இல்லை.

சிறு சிரிப்புடன் பேசிக் கொண்டே இருந்தவனை பார்த்து இவ்வளவு நேரமாக இருந்த சோகத்தை மறந்து விட்டு இதழ்களைப் பிரித்து மென்னகை புரிந்தாள்....

உங்களைப் பத்தி சொல்லுங்க. இப்போ எங்கே போய்ட்டு இருக்கீங்க. கைல லக்கேஜ் எதுவும் இல்லையே....

சந்தேகமாகக் கேட்கவில்லை என்றாலும் அவன் கேட்டதும் இதுவரை இருந்த இலகுத்தன்மை மாறி உடல் விறைக்க முகம் கடினமாக மாறி இறுகினாள்....

தவறான நேரத்தில் கேட்டுவிட்டோமோ என மனதில் வருந்தினாலும் அதனை மறைத்துக் கொண்டு அவளை இயல்பாக்கும் முயற்சியில் இறங்கினான்...

மேடம் மேடம் என்ன கேட்டேன்னு இப்போ இப்படி ஆர்மி ஆபிசர் மாதிரி மூஞ்சிய வச்சுட்டு இருக்கீங்க. நான் எதுவும் இனி கேட்கல. உட்களுக்கு சொல்ல தோணும் போது சொல்லுங்க. எனக்கு மும்பை போற வரைக்கும் போர் அடிக்காம இருந்தால் போதும்....

ஓ.... நீங்க மும்பை போறீங்களா......? நானும் அங்கதான் போகனும். ஆனால் எனக்கு அங்க யாரையும் தெரியாது இனிமேல் தான் தெரிஞ்சுக்கனும்....

முகத்தில் விரக்தியுடன் பேசிக் கொண்டிருந்தவளை காண சகியாமல் அவனே அவசரமாக அவளிற்கு பதில் சொல்ல விழைந்தான்....

ஏற்கனவே உங்களுக்கு ஒருத்தரை தெரிஞ்சாச்சு..... சோ இனிமேல் கவலையை விடுங்க....

கேள்வியாக அவனைப் பார்க்கவும், என்ன புரியலையா நான் தான் அது. உங்களுக்கு அங்க என்ன வேணுமோ அதைக் கண்டிப்பாக நான் செய்து தருகிறேன்....

பார்த்து சில மணிகளே ஆனவனை எவ்வாறு நம்புவது என சிறிது தயங்கினாள். அவளின் தயக்கம் புரிந்தவன் அதை எவ்வாறு போக்குவது என்பது மட்டுமே அவனது யோசனையாக இருந்தது...

வேகமாக தனது லேப்டாப்பை எடுத்தவன் தனது சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவளிற்கு அரைமணி நேரம் விளக்கினான். அதோடு தான் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதாரத்தையும் காட்டவும் அவளது முகத்தில் நம்பிக்கையான புன்னகை தோன்றியது....

அவனின் பெயர் வாசு.... வாசுதேவன்... பூர்விகம் தமிழ் என்றாலும் பிறந்த வளர்ந்து இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாம் மும்பையில்.... பெற்றோர் இருவரும் இல்லாமல் சொந்தங்கள் இருந்தும் தனியாளாய் வாழ்கிறான்... யாதும் ஊரே... யாவரும் கேளீர் என்ற கொள்கை உடையவன்...

அதனால்தானோ என்னவோ தனியாக யாராவது சோகத்தில் வாடினால் தயங்காமல் உதவிக்கரம் நீட்டும் நல்லவன்.. மென்மையானவன்... கோபத்தை கூட பார்வையால் வெளிப்படுத்தி அமைதி காப்பான்... படித்து முடித்து விட்டு தந்தை விட்டுச்சென்ற தொழிலை திறம்பட நடத்துகிறான்...

என்ன தொழில்னு போகபோக கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்... அதோடு அவர்களை பற்றியும்தான்....

மானே தேனே பொன்மானே என அவர்களது புற அழகை வர்ணிக்க நான் விரும்பவில்லை.. அவர்களின் குண அழகை வைத்தே இந்த கதை நகரப்போகிறது....

அட வாங்க மறுபடியும் அவங்க கிட்ட போகலாம்.. என்ன நடக்குதுனு பார்க்கலாம்..

எனக்கு எதற்காக நீங்க உதவி பண்றீங்க. இதையெல்லாம் காட்டி நம்பிக்கையை கொடுக்க என்ன அவசியம் இருக்கு.... அவள் அவனிடம் கேள்விக்கனையை வீசினாள்...

மனம் அவன்மேல் சிறிது சந்தேகத்தை கொண்டிருந்தது. நமக்கு செய்வதால் அவனிற்கென்ன ஆதாயம் என மூளை கேள்வி கேட்டது...

கண்டிப்பாக எந்தவொரு ப்ளானும் இல்லாம தான் உங்களாட இந்தம் பயணம் ஆரம்பமாயிருக்கு. எந்தவொரு பிரச்சனையிலும நீங்க மாட்டிக்க கூடாது என்ற ஒரு அக்கறை மட்டும்தான்.....

கண்களில் கண்ணீர் பெருக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதனைக் கண்டு பதறி போனான்....

எந்தவொரு சூழ்நிலையிலும் பெண்கள் அவங்களோட கண்ணீரை வெளியிடக் கூடாது. அதுதான் அவங்க பலவீனம். நீங்க எப்பவும் தன்னபிக்கையோட தான் இருக்க நினைக்கிறேன்....

சற்று தெளிந்தவள் தன்னைப் பற்றி நேரம் வரும்போது சொல்கிறேன் என கூறி விடவும் அந்தப் பேச்சை அத்தோடு விட்டு விட்டான்...

சரி உங்களை நான் நிலா அப்பிடினு கூப்பிடறேன்... எந்த நேரத்தில் சொன்னானோ.. இறுதிவரை அவள் அந்த பெயருடன் வாழ்ந்து விடப் போகிறாள் என்பதை இருவருமே அறியவில்லை... விதி அவர்களை பார்த்து சிரித்தது...

நிலாவா.... நானா... நல்ல காமெடி.... நிலவிற்குரிய எந்த பண்பு இருக்குதுனு என்னை அப்படி கூப்பிட போறதாக சொல்றீங்க...

வாசுவோ சிறிதும் யோசிக்காமல் சூழ்ச்சிகள் உங்களை சூழ்ந்து வீழ்த்த நினைத்தாலும் அதை விரட்டி அந்த நிலவைப் போல பிரகாசிப்பீர்கள் என்று மனதில் இருப்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான்...

நிலவிற்கு தானாக ஔிரும் தன்மை இல்லை வாசு... அவளும் சலிக்காமல் எதிர்வாதம் புரிந்தாள்....

வாசுவோ எதற்கும் அசராமல் என்னால் ஔி வீசப் போவதாக நினைத்துக் கொள்ளுங்கள்... அசராமல் பதில் கொடுத்தான்...

ஸ்லீப்பர் கோச் என்பதால் பேசியே சோர்வாகி விட அவள் படுத்துக் கொண்டாள்... அவனும் சிறிது நேரம் புத்தகம் படித்து விட்டு ஏதோதோ யோசித்தபடியே படுத்திருந்தான். இரவு வெகுநரம் கழித்தே நித்ராதேவி அவனை ஆட்கொண்டாள்....

அடுத்த நாள் காலை அவன் எழும்போது பேப்பர் படித்தபடியே கையில் டீயுடன் அமர்ந்திருந்தாள் நிலா.....

இனிமேல் அவளை அப்படியே அழைக்கலாம்.. நமக்கெல்லாம் அவள் நிலா தான்... என்ன மக்களே நான் சொல்றது....

அடடா ப்ரஷ்அப் ஆகிடீங்களா நான் தான் லேட் போலயே என்றவாறு வாசு எழுந்து அமர்ந்தான்....

நிலாவோ பதிலிற்கு ஒரு புன்னகையுடன் போங்க ப்ரஷ்அப் ஆயிட்டு வாங்க என்றவாறு அவனது கையில் பேஸ்ட் அன்ட் ப்ரஷ்ஷை கொடுத்தாள்...

தேங்க்ஸ்....இதோ வந்துடறேன் என்றவன் சிறிது நேரத்தில் திரும்ப வந்தபோது அவனிற்கான டீ கப்பை கையில் கொடுத்தாள் நிலா....

நான் போகும் போது ஒண்ணு தானே வச்சிட்டு இருந்தீங்க...?

ஏன் அதையே கொடுத்தா குடிக்க மாட்டீங்களா...?

வாசு திருதிருவென விழிக்கவும் அதைப் பார்த்து கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள். இப்பொழுது தான் அவள் வாய்விட்டு சிரிப்பதைப் பார்க்கிறான். நீங்க சிரிச்சா ரொம்ப அழகாக இருக்கீங்க என்றவாறு அவளது கையில் இருந்த டீயை வாங்கிக் கொண்டான்...

கவலைப் படாம குடிங்க. நீங்க வரதுக்குள்ள புதுசா தான் வாங்கினேன். என்னோடது குடிச்சுட்டு தூக்கி போட்டாச்சு...

தெரியும்.... நீங்க அப்படி எல்லாம் கொடுக்க மாட்டீங்க சும்மா விளையாடறீங்கனு அப்பவே கண்டு பிடிச்சுட்டேன்....

ஷப்பா பெரிய கண்டுபிடிப்பு தான். நோபல் பரிசு எல்லாம் கொடுக்க முடியாது போங்க... நிலாவோ அவனை வாரினாள்....

ஏங்க நீங்க எப்பவுமே இப்படித்தானா....?

கேள்வியாக கேட்டவனை புரியாமல் பார்த்தவள், எப்படி....? பதில் வினா தொடுத்தாள் நிலா..

இப்படி கடிக்கறீங்களே.... புல்லரிக்குது.... வாசு சொல்லவும் அவனைப் பார்த்து பொய்யாக முறைத்தாள்...

டீ எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. அப்போ டிபன் என்ன வாங்கித் தரப் போறீங்க....? கேலியாக அவளைப் பார்த்து கேட்டவாறு டீயை குடிக்கத் தொடங்கினான்.

அடப்பாவி கஞ்சூஸ் எனக்கு நீங்க வாங்கிக் கொடுப்பீங்கன்னு நெனச்சேனே..... நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்க...

ஹாஹாஹா.... என்னை கஞ்சன்னு சொன்ன முதல் ஆள் நீங்கதான். மும்பை வந்ததும் நீங்களே தெரிஞ்சுப்பீங்க....

அவளிற்கே ஆச்சர்யமாய் இருந்தது.... இவனை சந்தித்து முழுதாக ஒருநாள் கூட ஆகவில்லை.. தன்னுடைய மனநிலையை முற்றிலும் மாற்றி விட்டானே.... மனதிற்குள் தனது மாற்றத்தை எண்ணி வியந்தவாறு யோசித்துக் கொண்டிருந்தாள்....

ஹலோ மேடம் எந்த கோட்டையை பிடிக்க இவ்வளவு பலமான யோசனை... கவலை படாதீங்க இன்னைக்கு ப்ரேக்பாஸ்ட்க்கு நான் ஸ்பான்சர் பண்றேன்...

என்னோட சர்ட்டிபிகேட்ஸ் எதுவுமே என் கிட்ட இல்லை. வேலை எப்படி தேடறதுனு தான் புரியல..... நிலா கவலையாகி விட்டாள்...

நீங்க அதைப்பத்தி கவலையே படாதீங்க. அங்க போய்ட்டு ஒரு வழி பண்ணலாம் என்றவன் அவளிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் பேசினான்....

இரயிலின் அதிர்வில் மனதின் பாரங்கள் எல்லாம் தூரமாய் விலகிச் செல்வதைப் போன்ற ஒரு பிரம்மை...வெளியே வேகமாக தன்னை தாண்டிடும் இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் தனது கண்களால் மனப் பெட்டகத்தில் சேமிக்கத் தொடங்கினாள்....

மயக்குவாள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top