கொஞ்சல் - 17

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
கொஞ்சல் 17
12.2.jpg


எதிர்பாராத அவனது வேகத்தில் அவள் சிறு மிரட்ச்சியுடனும் அதிர்ச்சியுடனும் கண்களை இறுக்கமாக மூடினாள்.

அவளது மிரட்ச்சியையோ அதிர்வையோ உணரும் நிலையில் சித்தார்த்தன் இல்லை. மூச்சு காற்றுக்கு சற்று திணறவும் அவள் அவனது நெஞ்சில் கைவைத்து சிறிது தள்ளவும் முத்த யுத்தத்தை நிறுத்தியவன் அந்த நொடியில் தான் தனது செயலை உணர்ந்தான். தனக்குள் இப்படி ஒரு வேகமா என்று சிறிது அதிர்ந்தான்.

சில நொடிகள் மௌனத்தில் கழிய, சித்தார்த்தன் குற்றஉணர்ச்சியில் தவிக்க, ஊர்மிளா மிரட்சியில் இருந்து வெளிவந்து இயல்பாகியிருந்தாள்.

அவன் அவள் முகத்தை பார்க்காமல், “சாரி” என்றான்.

அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்பதை அறிந்தும் அறியாதவள் போல், “எதற்கு?” என்றாள்.

அவன், “நான் வேணும் னு செய்யலை.. எனக்கே தெரியலை.. ஏன்! எப்படி! இப்படி நடந்துக்கிட்டேன் னு”

அவள் அமைதியாக இருக்கவும் அவன் தவிப்புடன் அவள் முகத்தை பார்த்தான்.

அவனது தவிப்பை பார்க்க முடியாமல் அவள் மென்னகையுடன் அவன் கன்னத்தில் கையை வைத்து, “நீங்க ரொம்ப மென்மையானவங்க” என்று கூறி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

இரண்டு நொடிகள் கழித்தே அவனது கைகள் அவளை மென்மையாக அணைத்தது. இப்பொழுதும் ‘நானா இப்படி!’ என்ற கேள்வி அவனுள் இருந்தாலும் தன்னவளின் செய்கையில் குற்றஉணர்ச்சி நீங்கியது.

‘எதனால் இப்படி நடந்துக் கொண்டேன்? அவளை போல் நான் அவளை காதலிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி இபப்டி செயல் பட வைத்ததா? இல்லை என் மனதில் இருக்கும் காதலை சொல்லாமல் பொத்தி வைப்பது இப்படி வெளி வருதா? ஆனால் என் மனதில் முழுமையா காதல் வந்து விட்டதா? அவள் காதலை பார்த்து தான் என்னுள் காதல் மலர்ந்தது.. ஆனால் இது சரியா? அவளை அவளுக்காக இயல்பா தானே நான் காதலிக்கணும்! அது தானே அவளுக்கும் அவள் என் மேல் கொண்ட காதலுக்கும் மரியாதை..’ என்று குழம்பியவன், ‘காதல் எதனால் எப்படி வரும்? ஒருவரது குணம் நமக்கு பிடித்து இவருடன் நம் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும் என்ற எண்ணம் தான் காதலோ? அப்படி என்றால் அம்லு காதலை பார்த்து மலரும் என் காதல் சரியே’ என்று தனக்கு தானே சமாதானம் செய்தவன் பின், ‘ஆனா இன்னும் எதை என் மனம் எதிர் பார்க்கிறது? ஒருவேளை அவள் அளவிற்கு காதலிக்க தொடங்கிய பிறகு என் மனம் திருப்தி பெறுமோ? அம்லு அளவிற்கு என்னால் காதலிக்க முடியுமா?’ என்று யோசித்தவன் அடுத்த நொடியே, ‘ஏன் முடியாது? முடியும்.. முடியனும்!’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

இவ்வளவையும் சில நொடிகளில் அலசி ஆராய்ந்த பிறகே அவனுள் சிறு தெளிவு பிறந்தது. இந்த வன்மையான முத்தத்தை பற்றிய வினா இப்பொழுதும் அவன் நெஞ்சின் ஓரத்தில் இருக்கிறது தான்.

அவனது மௌனத்தை கலைக்கும் விதமாக அவள் மெல்ல விலகி, “உங்களுக்கு பென்னை என்னிடம் கொடுத்தது நியாபகம் இல்லையா?”

‘இல்லை’ என்பது போல் உதட்டை பிதுக்கியவன், “நான் மினி ப்ராஜெக்ட் லைப்ரேரி வைத்து தான் செய்திருந்தேன்.. லைப்ரேரியன் அதையே இன்னும் டெவெலப் பண்ணி தர முடியுமா னு கேட்டார்.. நான் சரி சொன்னதும், அவருக்கு தேவையானதை பற்றி சொல்லிட்டு இருந்தார்.. அவரிடம் பேசிட்டு கிளம்பும் பொது பென் நியாபகமே இல்லை.. அப்பறம் பென்னை தேடும் போதும் உன்னிடம் கொடுத்தது சுத்தமா நியாபகம் இல்லை”

“ஓ!” என்று அவள் சாதாரணமாக தான் சொன்னாள் ஆனால் அவனுக்கு அவள் உள்ளுக்குள் வருந்துகிறாளோ என்று தோன்றியது.

அவன், “சாரி.. எனக்கு என்ன சொல்லனே தெரியலை...............” என்று வருந்தும் குரலில் பேசிக் கொண்டிருக்க,

அவள், “நீங்க எதுக்கு பீல் பண்றீங்க? இதில் உங்க தவறு எதுவுமே இல்லை.. சொல்லப்படாத காதலின் நிலை இது தான்.. பழசை விடுங்க.. இப்போ நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்..” என்றவள் அவனை சகஜமாக்கும் எண்ணத்துடன் தலை சரித்து மென்னகையுடன், “எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ காதல் மழை பொழிய மாட்டீங்க!” என்று வினவவும்,

“நிச்சயமா” என்றவன் அவள் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

“சரி தூங்கலாம்” என்றாள்.

அவன், “அவ்ளோ தானா நீ சுட்ட பொருட்கள்?”

அவள் செல்லமாக முறைக்கவும் அவன் மென்னகையுடன், “சரி.. அவ்ளோ தானா நீ எடுத்த பொருட்கள்?”

“ஹ்ம்ம்.. அவ்ளோ தான்.. நீங்க என் மனதை கெஸ் பண்ணிட்டீங்க அதனால் எடுக்கிறதை விட்டுட்டேன்.. இல்லைனா உங்களோட சன்-க்ளாஸ், லேப்(lab) கோட், வண்டி கீ செயின், கேப்(CAP) எடுத்து இருப்பேன்”

“அட பாவி” என்றவன் பின் கிண்டலான குரலில், “நான் சாப்பிட்ட சாக்லெட் பேப்பர்-லாம் எடுத்துக்கலையா!”

“எதுக்கு என் பையை எறும்பு மொய்க்கவா?”

“வெவரம் தான்” என்று கிண்டலாக சொன்னவன் பொருட்களை பையினுள் வைக்க ஆரம்பித்தான். அவளும் அவனுடன் சேர்ந்து எடுத்து வைத்தாள்.

அவள் கடைசியாக எடுத்த பொருளை பார்த்தவன், “ஹே! அது என்னது! நான் பார்க்கவே இல்லையே! என் போட்டோ வா?” என்று ஆச்சரிய குரலில் வினவியபடி அதை அவளிடமிருந்து வாங்க கையை நீட்டினான்.

சட்டென்று அதை உள்ளே வைத்து பையை மூடியவள் அவன் முகம் பார்க்காமல், “அது ஒன்றுமில்லை” என்றபடி பையுடன் நகர பார்த்தாள்.

ஆனால் அவளை நகர விடாமல் அவள் கையை பற்றியவள், “அதை காட்டு” என்றான்.

அந்த பொருளை மட்டும் அவள் தனியாக தான் வைத்திருப்பாள்.. அன்று அவர்கள் திருமணம் நிகழ்ந்த அன்று அவள் அதை பார்த்து அழுது கொண்டிருந்த பொழுது தான் சித்தார்த்தன் கதவை தட்டினான்.. அந்த நேரத்தில் அவசரமாக இந்த பையினுள் வைத்தவள் அதன் பிறகு அதை எடுக்கவே இல்லை.

தற்போது அவன் இருக்கும் மனநிலையில் அதை காட்டி அவனை வருத்த வேண்டாம் என்ற எண்ணத்துடனும் தன்னாலும் அதை பார்த்தால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணத்துடனும் தான் அவள் மறுத்தாள்.

ஆனால் அவன் விடாமல் கேட்கவும் வேறு வழி இல்லாமல் அதை எடுத்து கொடுத்தாள்.

அதை பார்த்தவன் சிறு அதிர்வுடன் அவளை திரும்பி பார்த்தான்.

அது ஒரு சிறிய காகிதம்.. அதை மென்தகடாக்கு(Laminate) செய்து வைத்திருந்தாள். அவள் அதை பையினுள் வைக்கும் முன் அதன் பின் புரத்தை மட்டும் பார்த்ததால் தான் அவன் அது புகைப்படமாக இருக்கும் என்று நினைத்தான்.

அவன், “இதை நான் உனக்கு எழுதி கொடுத்தேனா?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.

‘எனக்கு நியாபகமே இல்லையே! இதை எப்படி மறந்தேன்?’ என்பதே அவனது அதிர்ச்சிக்கு காரணம்.

அந்த காகிதத்தில் “ALL THE BEST” என்ற வாக்கியமும் அதன் கீழே அவனது கையெழுத்து தேதியுடன் இருந்தது. அந்த தேதி அவனது கல்லூரி இறுதி நாள்.

அவனது கேள்விக்கு அவள் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் தலையை ஆட்டினாள்.

அவன், “என்ன சொல்ற அம்லு?”

அதை அவனிடமிருந்து வாங்கியவள் அதை கலங்கிய விழிகளுடன் வருடியபடி, “இதை நீங்க தான் எழுதினீங்க ஆனா எனக்கு இல்லை” என்றவளது பார்வை அந்த காகிதத்தில் தான் இருந்தது.

அவன் புரியாமல், “வேற யாருக்கும் எழுதி கொடுத்ததை சுட்டுட்டியா?”

‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டியவள், “இது நான் கேட்டு தான் எழுதினீங்க ஆனா எனக்காக எழுதலை”

“குழப்பாம சொல்லு”

“என் கிளாஸ்மேட் ஒருத்தி கௌதம் ஆர்கிஷ்டட்ரா ட்ரூப்பில் இருந்தாள்.. அவளை கெஞ்சி கேட்டதால் எனக்காக உங்களிடம் எழுதி வாங்கினாள்.. அதுவும் நேரிடையா உங்களிடம் வந்து கேட்கலை..

உங்க காலேஜ் லாஸ்ட் டே அன்னைக்கு நீங்களும் கௌதமும் தனியா இருந்தப்ப அவ என்னோட ஆட்டோகிராஃப் புக்கை எடுத்துட்டு வந்து முதலில் கௌதம் கிட்ட கேட்டா.. அவன் M.E அங்கேயே படிக்க போவதால் தேவை இல்லைன்னு சொல்லி எழுதலை.. அப்பறம் அவள் உங்களிடம் கேட்டாள்.. கொஞ்சம் யோசிச்ச நீங்க அப்பறம் தோளை குலுக்கிட்டு இதை எழுதி கொடுத்தீங்க..

அன்னைக்கு தான் உங்களை நான் கடைசியா பார்த்தது.. அப்பறம் இங்கே வசந்த் அண்ணா காலேஜ்ஜில் தான் பார்த்தேன்..

தினமும் இதில் தான் கண் விழிப்பேன்.. அதுவும் எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இதை நெஞ்சோடு அணைச்சிட்டு கண்ணை மூடி உட்கார்ந்திருவேன்” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

அவனும் கலங்கிய கண்களுடன் அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.சில நொடிகளில் அவளது அழுகை கூடவும் அவன் பதறியபடி அவளை விலக்கி தோளை சுற்றி கை போட்டு அரவணைத்தபடி, “அதையெல்லாம் மறந்திரு டா.. இப்போ தான் நான் உன் கூடவே இருக்கிறேனே! உன் ஆசை படி நாம் ரொம்ப சந்தோஷமா வாழ்வோம்.. நீயே சொன்னது போல் எல்லாத்துக்கும் சேர்த்து நான் என்னோட காதல் மழையில் உன்னை நனைய வைப்பேன்” என்று முடித்தபோது அவனது கையில் அழுத்தம் கூடியது.

அவள் ‘இல்லை’ என்று மறுப்பாக தலையை ஆட்டவும்,

அவன், “நிஜமா தான் டா சொல்றேன்.. நாம நிச்சயமா வாழ்க்கையை அனுபவித்து ரசித்து காதலுடன் இனிதாக வாழ்வோம்” என்றான்.

அவளோ அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.

‘சரி இத்தனை நாட்கள் பூட்டி வைத்த வேதனைகளை அழுகையில் வெளியேறட்டும்’ என்று நினைத்து அவன் அவளை அழ விட்டான்.

ஆனால் அவள் அழுகையை நிறுத்துவதாக தெரியவில்லை. அவள் அவனை இறுக்கமாக அணைத்து நெஞ்சில் முகத்தை புதைத்தபடி அதிகமாக அழுதாள்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#2
அவளது அழுகையை பார்த்தவனுக்கு அவள் மனதில் வேறு எதுவும் வருத்தம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.

அவன் அவள் தலையை வருடி, “என்னாச்சு அம்லு? உன் மனசை எது வருத்துது?” என்று பரிவுடன் கேட்டான்.

அவள் இருக்கும் நிலையில் மாற்றம் இல்லை என்றதும் அவளது நாடியை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன், “என்னாச்சு டா? சொன்னா தானே தெரியும்” என்றான்.

அவனை பார்த்தவளின் விழிகளில் தவிப்பும் பெரும் துயரும் தெரியவும் அவன் மெல்லிய குரலில், “அப்பா நியாபகம் வந்திருச்சா டா?” என்றான்.

அவள் சற்று சத்தமாக அழுதபடி அவனை இன்னும் இறுக்கமாக அணைத்தாள்.

அவன் மெல்ல நகர்ந்து மெத்தையில் அமர்ந்து ஒரு குழந்தையை தாங்குவது போல் அவளை தன் மடியில் தாங்கினான். இத்தனை நாட்கள் தனக்கு அன்பு மற்றும் காதல் மழை பொழிந்த தன் மனைவிக்கு அவன் தாயாக மாறினான்.

அவள் முதுகை மெல்ல வருடியபடி, “உன் அப்பாவுக்கு நீ அழுதா பிடிக்குமா? மாமா உன்னோடவே தான் இருக்காங்க.. இப்போ கூட நீ அழுறதை பார்த்து வருத்தப்பட்டுட்டு தான் இருப்பாங்க” என்றதும் அவள் அழுகை மெல்ல குறைந்தது.

அவள் தோளைத் தட்டி கொடுத்தபடி, “மாமா தான் தெய்வமா இருந்து உன் ஆசையை நிறைவேற்றி, எனக்கு இந்த தேவதையை கொடுத்து இருக்காங்க” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

மெல்ல கண்களை துடைத்துக் கொண்டவள், “சாரி” என்றாள்.

அவன், “எதுக்கு?”

அவள் மெளனமாக இருக்கவும் அவன், “உன் சுகம் துக்கம் எல்லாத்தையும் என்னிடம் பகிர்ந்துக்காம வேறு யாரிடம் பகிர்ந்துக்க போற!” என்றவன் சிறு கண்டிப்பு குரலில், “நீ இப்படி சாரி சொல்லாத” என்றான்.

அவள் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

அவன், “என்னாச்சு? ஏன் திடீர்ன்னு இப்படி அழுத?”

“அது”

“சொல்லிரு டா..” என்று அவன் கனிவுடன் கூறவும்,

அவள் அவன் தோளில் தலை சாய்த்து அந்த காகிதத்தை கையில் பிடித்தபடி, “நீங்க எழுதி கொடுத்த அன்னைக்கே இதை லமினேட் பண்ணிட்டேன்.. டெய்லி காலையில் எழுந்திச்சதும் முதலில் இதை தான் பார்ப்பேன்.. அப்பறம் எக்ஸாம் டேஸ் கிளம்புறதுக்கு முன்னாடி பார்ப்பேன்.. அப்படி தான் என்னோட பஸ்ட் இயர் லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு பார்த்துட்டு இருந்தப்ப அப்பா என் ரூமுக்கு வந்தாங்க.. அப்பா வந்ததை கூட கவனிக்காமல் நான் இதை பார்த்துட்டு இருந்தேன்.. அப்பா ‘என்னது’ னு கேட்டதும் நான் பதறி எழுந்து முழிச்சேன்.. அப்பா அதை வாங்கி பார்த்துட்டு ‘யாரு கொடுத்தா?’ னு கேட்டதும் நான் அந்த ஒரு வருஷம் நடந்ததை சொன்னேன்.. அப்பா என் தலையை வருடி, ‘இது இந்த வயசில் வரது தான்’ னு ஆரம்பிக்கவும் நான் இது அப்படி இல்லை என் மனதில் இருப்பது காதல் தான் னு உறுதியா சொன்னதும் அப்பா ‘சரி.. நான் சித்தார்த்தனை பற்றி விசாரிக்கிறேன்.. கண் பார்க்காதது கருத்திலிருந்து மறையும் னு சொல்லுவாங்க.. உனக்கு ஒரு வருஷம் டைம் தரேன்.. ஒரு வருஷம் கழிச்சு உன் மனதில் இதே அளவு காதல் இருந்தால் நான் அவனிடம் பேசுறேன்.. அவனுக்கும் விருப்பம் இருந்தால் அவங்க வீட்டில் பேசி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன்’ னு சொன்னாங்க.. எனக்கு ரொம்ப சந்தோசம்.. அப்பாவை கட்டி பிடிச்சு கன்னத்தில் முத்தம் கொடுத்து ‘லவ் யூ ஸோ மச் அப்பா’ னு சொன்னேன்.. ஆனா..” என்று சிறு தேம்பலுடன் நிறுத்தியவள், கண்ணில் கண்ணீருடன், “ஆனா அது தான் அப்பா என்னிடம் கடைசியா பேசியது.. அன்னைக்கு சாயுங்காலம் அப்பா..” என்று அதற்கு மேல் கூற முடியாமல் கண்ணீருடன் அவன் சட்டையை இறுக்கமாக பற்றினாள்.

[அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த அவள் தந்தை லாரி இடித்து அந்த இடத்திலேயே மரணித்தார்.]

சட்டென்று அழுகையை நிறுத்தியவள், “கடவுள் ஏன் என் அப்பாவை என்னிடம் இருந்து பிரிச்சான்?” என்று சிறிது ஆக்ரோஷமாக வினவினாள்.

அவன், “உன் அப்பா தான் நமக்கு மகனா வந்து பிறப்பாங்க டா” என்றதும்,

கண்கள் ஒளிர, “நிஜமாவ சித்! அப்பா நமக்கு மகனா வந்து பிறப்பாங்களா?” என்று மகிழ்ச்சியுடன் வினவினாள்.

அவன் மென்னகையுடன், “நிச்சயமா டா”

“நான் என் அப்பாவுக்கு தாய்.. நினைக்கவே எவ்ளோ நல்லா இருக்குது!” என்று கண்ணில் கனவுடன் கூறினாள்.

பின், “என் அப்பா எவ்ளோ மென்மையானவர் தெரியுமா? அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.. எனக்கு என் அப்பா தான் முதல் தோழன் ஹீரோ எல்லாம்.. அப்பா இல்லைங்கிறதை என்னால கொஞ்ச நாள் ஏத்துக்கவே முடியலை.. அப்பா இல்லாம நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? என் அப்பாவோட என் பேச்சு சந்தோசம் எல்லாம் போச்சு”

அவளை சகஜமாக்கும் எண்ணத்துடன் அவன், “என்னது பேச்சு போச்சா! இந்த பேச்சையே என்னால் சமாளிக்க முடியலை” என்று போலியாக அலறினான்.

அவள், “ஹன்.. அதான் அப்பா உங்களை எனக்கு தந்துட்டான்களே! அதனால் என்னோட பழைய பேச்சு திரும்பிடுச்சு”

மணியை பார்த்தவன் அவளை முழுமையாக இயல்பாக்கும் எண்ணத்துடன், “ஹ்ம்ம்.. விடிய விடிய கதை பேசினோம் னு சொன்னா சிரிக்க போறாங்க”

“ஏன்?”

அவள் நெற்றியை முட்டியவன், “புதுசா கல்யாணம் ஆனவங்க விடிய விடிய செய்ற வேலையே வேறு” என்று கூற,

அவள் வெக்கத்துடன், “ஏய்” என்றாள்.

அவளது வெக்கத்தில் அவனது மனநிலை அவனையும் அறியாமல் மாறத் தொடங்கியது.

“ஆனா இப்போ நம்மை யாரும் பார்த்தா நாம் கதை தான் பேசினோம் னு சொன்னா நம்பவே மாட்டாங்க” என்றவனது கை மெல்ல அவள் இடையில் பதிந்தது.

அப்பொழுது தான் இருக்கும் நிலை உணர்ந்து அவள் துள்ளி குதித்து இறங்கினாள்.

அவன் செல்ல முறைப்புடன் அவளை அணைக்க வர, அவள், “முதலில் டிஸ்டிங்கஷன் அப்பறம் தான் டீச்சர் நீங்க”

“ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர் டி நீ” என்று செல்லமாக அலுத்துக் கொண்டான்.

“நான் ஸ்ட்ரிக்ட் டீச்சரா?”

“பின்ன இல்லையா?”

“நாம உட்கார்ந்து இருந்த நிலை என்ன?”

“ஆனா ஸ்ட்ரிக்ட் டீச்சருக்கு ஏத்த மாணவனா நான் எவ்ளோ சமத்தா இருக்கிறேன்”

“உங்களுக்கு இது ஓவரா தெரியலை!” என்று அவள் கண்ணை உருட்டி வினவ,

அவனோ, “நிச்சயமா இல்லை.. சமத்தா உன்னை மடியில் மட்டும் தான் உட்கார வைத்திருந்தேன்”

“அப்போப்போ உங்க கையும் கன்னமும் உதடும் செய்த வேலை என்ன?”

“என்ன செய்தது?”

அவள் செல்லமாக முறைக்க அவனோ புன்னகையுடன் அவளை பின்னால் இருந்து அணைத்து கன்னத்தில் மென்மையாக் இதழ் பதித்து கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “உதடும் கன்னமும் இப்படி லைட்டா உரசிக்கும்.. அதை கண்டுக்க கூடாது”

“கை!”

“அது ரொம்பவே சமத்தா தான் இருக்குது”

அவள் மீண்டும் செல்லமாக முறைக்க, அவன், “ரொம்ப பண்ணாதடி.. என் கை சும்மா தானே இருக்குது.. இல்லை இப்படியா சேட்டை செய்யுது!” என்று வினவியபோது அவனது இடது கை அவளது வெற்று இடையை பட்டும் படாமல் மயிலிறகை போல் வருடவும் அவள் உடல் சிலிர்த்தது.

உணர்வின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்தவள் பின்னந்தலையை அவன் தோளில் அழுத்தமாக சாய்த்தாள்.

அவன் வருடலில் சிறு அழுத்தம் கொடுக்கவும் அவளது உதடு, “சித்” என்று கிறக்கத்துடன் முணுமுணுத்தது.

“ஹ்ம்ம்” என்று கிறக்கத்துடன் கூறியவனின் கரம் வருடலை தொடர உதடுகள் அவளது தோள்பட்டையை வருடியது.

இருவரும் வேறு உலகில் பயணிக்க ஆரம்பிக்க அப்பொழுது சுவர் கடிகாரம் தனது இருப்பை காட்டிக்கொள்ள ஆறு முறை ஒலி எழுப்ப, முதலில் சுயமடைந்தது சித்தார்த்தன் தான். இப்பொழுது ஊர்மிளா அவனுக்கு தடை சொல்லபோவது இல்லை தான் என்றாலும் முழு மனதுடன் தன் காதலை தன்னவளிடம் சொல்லும் முன் தன்னவளை தனதாக்கிக் கொள்ள விரும்பாதவனாக உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பாக நின்றான்.

பின் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்து, “அம்லு” என்றான்.

கடிகார சத்தத்தில் சிறிது தெளிய தொடங்கியிருந்தவள் அவனது இயல்பான குரலில் முழுமையாக தெளிந்தாள்.

அவன் முகத்தை பார்க்க முடியாமல் அவள் நாணத்துடன் தலையை கவிழ்த்த/தாழ்த்த, அதை புரிந்துக் கொண்டவன் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் இயல்பான குரலில், “ஒரு பைக் ரைட் போகலாமா?”

“இப்பவா?”

“ஹ்ம்ம்.. உனக்கு பிடித்த உன் சித்துடன் உனக்கு பிடித்த சன்ரைஸ் பார்க்கலாம்”

அவள் மென்னகையுடன், “சரி போகலாம்” என்றாள்.

அவன், “சுடிதார் மாத்திக்கோ” என்றதும் அவள் ‘ஏன்?’ என்பது போல் பார்க்க,

“அப்போ தான் டபிள் சைட் கால் போட்டு மாமாவை இறுக்கி அணைச்சிட்டு ரவுண்டு போகலாம்” என்று கூறி அவன் கண் சிமிட்ட,

அவள் மென்னகையுடன் ஆள்காட்டி விரலை ஆட்டி செல்லமாக மிரட்டினாள்.

அவன் கண்களால் கெஞ்சவும் அவள் சுடிதார் மாற்றி வந்தாள்.

இருவரும் சத்தம் எழுப்பாமல் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.

அவன் தனது ‘ராயல் என்பீல்ட்’ வண்டியில் அமர்ந்து அதை கிளப்பியபடி, “ஹ்ம்ம் உட்காரு” என்றான்.

அவனது விருப்பத்திற்காக அவள் முதல் முறையாக இரு பக்கம் கால் போட்டு அமர்ந்தாள் ஆனால் நாணத்துடன் மெல்லிய இடைவெளி விட்டு தான் அமர்ந்திருந்தாள்.

அவளது கைகளை பற்றி தனது இடுப்பை சுற்றி விட்டவன் உற்சாகத்துடன் வண்டியை வேகத்துடன் கிளப்பினான்.

கூச்சத்துடன் கையை எடுக்க போனவள் அவனது வேகத்தை கண்டு கையை எடுக்கவில்லை.

அந்த காலை வேளை அழகாக புலன்றுக் கொண்டிருந்தது. சூரியன் மெல்ல மெல்ல தனது தங்க கதிர்களை வீசி இருளை விரட்டிக் கொண்டிருக்க, சில்லென்ற தென்றல் வீசிக் கொண்டிருந்தது. தன் மனதிற்கு பிடித்தவருடன் இயற்கையுடன் ஒன்றிய அந்த பயணம் இருவருக்கும் மிகவும் பிடித்தது. இருவர் மனதிலும் அப்படி ஒரு நிறைவை தந்தது.

அவள் தன்னையும் அறியாமல் மெல்ல அவனுடன் ஒன்றினாள். அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடி இதழில் மென்னகையுடன் அந்த பயணத்தை அனுபவிக்கத் தொடங்கினாள்.

அவளது செய்கையில் அவன் உதட்டிலும் அழகான நிறைவான புன்னகை பூத்தது.

கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥
 
Advertisement

New Episodes