கானலாகி போனாயோ காதலே?!!-6(a)

#1
அத்தியாயம்-6(a)

மயூரி அருகிலேயே உறங்கி இருந்தாள் நளினி.எங்கோ தூரத்தில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்க கண்களை பிரிக்க முடியாமல் பிரித்தவள், தள்ளாட்டத்துடன் சென்று வாசல் கதவை திறந்தாள்.அங்கு யார் இருக்கிறார்கள் என்பதை கண் திறந்து கூட பார்க்கமால் அரை தூக்கத்தோடே ”ஏன்டா அறிவு கெட்டவனே கதவை திறக்கலனா, போகமாட்டியா அது என்ன விடாம அடிச்சுட்டேஇருக்கறது. உங்க அப்பாவீட்டு பெல்லுனு நெனச்சுயா?, விடாம அடிச்சு இப்படி என் தூக்கத்த கெடுத்துட்டியே,தூங்கறவங்கள எழுப்புனா மேலோகத்துல கபீம்குபாமாம் தெரி...........” என்றவளின் வார்த்தை பாதியிலேயே நின்றிருந்தது.அரை கண்ணில் தெரிந்த சூர்யாவின் உருவத்தை பார்த்து.அவனோ முகம் முழுவதும் கோபத்துடன் கண்கள் சிவந்து நின்றிருந்தான்.

மாத்திரை போட்டதால் நன்றாக தூங்கி எழுந்த மயூரி குளியலறையில் இருக்கும் போது வாசல் மணி அடிக்கவும் திறக்கவில்லை.இப்போது யார் என்று பார்க்க வந்தவள் தோழி இரவு உடையோடு நின்றிருப்பதை பார்த்து ”காலிங்பெல் அடிச்சது யாருடி,ஏன் ரொம்ப நேரமா அங்கயே நிக்கற” என்று கேட்டு கொண்டே வந்தாள்.நளினி கதவை ஒரு பக்கமாக திறந்து வைத்திருக்க,இதில் அவளும் பாதி வாசலை அடைத்து நிற்கவும் வந்தது யார் என்று தெரியாமல் மயூ வாதலை நோக்கி தானும் சென்றாள். அங்கு நின்றிருந்த சூர்யாவை பார்த்து “அண்ணா” என்று அழைத்து வேகமாக அவனிடம் சென்றவள் அப்போதுதான் கவனித்தாள். தோழி “பேய்” அடித்தார் போல் நின்றிருக்கும் தோரணையை, “ஏற்கனவே ரெண்டுக்கும் ஏக பொருத்தம், இதுல,வாசல்லையே நிக்க வச்சிருக்கா பாரு, என்று தலையில் அடித்து கொண்டவள்.அவளை இடித்து நிகழ் உலகத்துக்கு இழுத்து வந்தாள்.

மயூ தன்னை இடிக்கவும்தான் நளினிக்கு உரைத்தது,முட்டி வரை இறுக்கும் இரவு உடையோடு தான் நிற்பது.’ஸ்லீவ்லஸ்’ மாடலில் இருந்த அந்த உடையை குனிந்து பார்த்தவள், அடுத்து சூர்யாவை பார்க்க அவனோ, தன் தங்கையைதான் பார்த்து கொண்டு இருந்தான்.’ஹய்யயோ’ என்று கத்தி கொண்டே தனது அறைக்கு ஓடிவிட்டாள் நளினி.அவளின் ஓட்டத்தை பார்த்த மயூ மனதுக்குள் சிரித்தாலும் அண்ணனிடம் எதையும் காட்டி கொள்ளாதவாறு “வாங்க அண்ணா,என்ன திடீர்னு நீங்க மட்டும்......” என்றவள் அப்போதுதான் கவனித்தாள்,அண்ணனின் பார்வை தான் வந்த காரில் பதிந்து மீள்வதை, பார்த்தவள் தானும் எட்டி பார்க்க அங்கு அழுது அழுது கண்கள் சிவக்க, சரியான தூக்கம் இல்லாமல் முகம் லேசாக உப்பி, வாடி போய் காரில் அர்ந்திருந்தார் தங்கம்.

தாயை பார்த்ததும் மயூரி’ புரிந்து கொண்டாள்,என்ன நடந்திருக்கும் என்பதை.”நளினி போன் போட்டுட்டா போலவே ,’அடியே......’ உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவு இல்லையா” என்று மனதினுள் தோழியை வைதவள், வேகமாக காரின் அருகில் சென்று ,தாயை அணைத்து கொண்டாள்.இருவருக்கும் இடையில் பேச்சை விட ‘கண்ணீரே’ அதிகமாக வந்தது.’மகளை வருத்திவிட்டோமே’ என்று தாயும்,’தாயை அலையவிட்டுவிட்டோமே’ என்று மகளுமாக இருவருக்கும் இடையில் பாச போராட்டம் நடந்து கொண்டு இருந்தது.

“ம்…………ஓகே, சென்டிமெண்ட் சீன் ஓவர் . உள்ள, வாங்க.என்ன? இங்கயே நிக்க போறீங்களா” என்று, கேட்டவாறு வந்தாள் நளினி.ஆம், வேகமாக தன் அறைக்கு போனவள் “அய்யயோ இந்த வளந்து கெட்டவன் எதுக்கு இப்ப, சொல்லாம, கொள்ளாம வந்துருக்கான்னு தெரியலையே,இவன் வந்திருக்கான்னா இவன் வச்ச ஸ்பை,இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்க நடந்த எல்லாத்தையும், புட்டு புட்டு வைக்க வந்துடுவானே.வட்சன் விஷயம் தெரிஞ்சா, என்னமோ நான்தான் அவளுக்கு பேச டையலாக் சீட் எழுதி கொடுத்த மாதிரியே பேசுவானே, என்னமோ இவனோட தங்கச்சி பச்ச புள்ள மாதிரியும், நான் என்னமோ துபாய் தாதா ,மாதிரியும் என்னோட சேர்ந்து,அவ கெட்டு போற மாதிரியும்ல பேசுவான்.’ஒரு பேட்ட ரவுடிய’ வளர்த்துவிட்டுட்டு ,’பச்ச புள்ளைய’ வளர்த்த மாதிரியே பேசுவானே, அததானே தாங்க முடியாது”என்று மனதினுள்ளே புலம்பியவள் தன் சுட்டு விரலை தன்னை நோக்கி திருப்பி “இது எல்லாம் உனக்கு தேவையாடி நளி, பேசாம அப்பா சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணுனோமா, நமக்கு வந்த அடிமைய வச்சு எண்டர்டெயின்மண்ட் பண்ணுனமானு இல்லாம,நட்புனா என்னனு தெரியுமா?நண்பன்னா என்னனு தெரியுமானு? தளபதி பட லெவல்க்கு பேசி இப்புடி நீயே வந்து சிக்கிட்டியேடி” என்று புலம்பி, பின் தெளிந்தவளாக பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவள்,வேற வழி இல்ல, எப்புடியாவது கெத்தாவே அவன்கிட்ட மெயிண்டென்பண்ணி தப்பிச்சுடு அதுதான் உனக்கு சேப் பீ ஸ்டெடி......பீ ஸ்டெடி ....’ஹய்யோ’ இப்படி அறையும், குறையுமா வேற அவன் முன்னாடி போய் நின்னுட்டனே” என்று அதற்கு ஒரு பாடு புலம்பி கொண்டே முகம் கழுவி வேறு உடை அணிந்து வந்திருந்தாள்.

ஒரு வழியாக நால்வரும் வீட்டிற்குள் செல்ல ,அதே நேரம் சரியாக சூர்யா தங்கையை பார்த்து கொள்ள வைத்த ஸ்பை,அதாவது அவனது தோழன் ஷாம் வந்திருந்தான். அவனை பார்த்தவுடன் நளினியின் மனதிற்குள் “வந்துட்டான்டா......வந்துட்டான்” என்ற வடிவேல் வாய்ஸ்தான் ஓடியது.ஆனால் மயூரி அவனை “வாங்க அண்ண” என்று உண்மையான அன்போடே வரவேற்றாள்.

நண்பன் தான் வந்தவுடன் வந்திருக்கிறான் என்றால், ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கும் என்பதை உணர்ந்த சூர்யா, உடனே வெளியே சென்று வருவதாக தாயிடமும்,தங்கையிடமும் தெரிவித்துவிட்டு கிளம்பிவிட்டான்.இங்கு தங்கமும்,மயூரியும் தங்களுக்கான தனி உலகில் இருக்க நளினிதான் ஆபிஸிற்கு போன் செய்து ‘இன்று வர முடியாது’ என்றும் ‘முக்கியமான வேலை இருந்தாள் தன்னை அழைக்குமாறும் சொல்லி போனை வைத்தாள்’.பின் மூவரும் தங்களுக்குள் பொதுவாக பேசி கொண்டு பொழுதை கழித்தனர்.

நளினியை, எப்போதும் தங்கத்திற்கு பிடிக்கும். அதனாலேயே மகள் அனைத்தையும் மறந்திருந்த சூழ்நிலையில், அவளுடன் ஒரு துணை இருக்க அவர் அழைத்தது அவளைதான்.அவளும் தோழியின் நிலை அறிந்து மகிழ்ச்சியூடனே அவளுடன் இங்கு வந்தாள்.புது மனிதர்கள்,புது நாடு,புது சூழல் என்று அனைத்தும் அவளுள் முதலில் இருந்ததற்கு நல்ல மாற்றத்தை தந்தாலும், இந்தியாவிற்கு அவள் வரமாட்டேன் என்று சொல்வதற்கான காரணத்தை மட்டும் நளினியால் அறிந்து கொள்ள முடியவில்லை அவள் காரணத்தை அறியும் போது தோழியின் மீது கோபபடுவாளா இல்லை வெறுத்து ஒதுங்கி போவாளோ.......

வீட்டில் மூவரும் தங்களின் உலகில் பேசி சிரித்து கொண்டு இருந்தனர் என்றால், வெளியே சென்று வந்த சூர்யா யோசனையான முகத்துடனே சுற்றி கொண்டு இருந்தான்.அவனின் யோசனையான முகத்தை பார்த்த ‘நளி “அய்யோ யோசிக்கறானே, நமக்கு இனிக்கு தரமான சம்பவம் இருக்கும் போல, ‘ஒடம்ப திடமா வச்சுக்கடா கிரிகாலா…………. திடமா வச்சுக்க’” என்று மனதில் திகில் பரவ சிந்தித்து கொண்டு இருந்தாள். பின்னே இருக்காதா பயம்.ஒரு மணி நேரம் அட்வைஸ்ங்கர பேர்ல அடைமழையா விடாம பேஞ்சா புள்ள என்ன பண்ணும் பாவம்.

வெகுநேரம் யோசித்த சூர்யா நளினியிடம் “பேச வேண்டும்” என்று சொல்லும் போதே உஷாரானவள், அவனுடன் அவர்களுக்கு என்று இருக்கும் ஆபிஸ் அறைக்குள் சென்றனர். உள்ளே சென்றவுடன் அவளையே சிறிது நேரம் கூர்மையாக பார்த்த சூர்யா பின் “உன்னிடம் இருந்து இது போல அஜாக்கிரதையை எதிர் பார்க்கவில்லை” என்றவன்,நளினி முதலில் புலம்பியது போல்தான் பேசினான்.’லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்’ என்று சொல்வது போல் இறுதி முத்தாய்ப்பாக “ கொஞ்சம் பொறுப்போடு இரு” என்று கூறி சென்றான்.

நளினியோ மனதில் “அடேய் நல்லவனுங்களா, நீங்க எல்லாம் எங்க இருந்துடா வற்றீங்க?,என்ன வச்சு செய்யவே, அந்த கடவுள் உங்களுக்கு ‘ஸ்பெஷல் மேட்’ பிரைன் குடுத்துருக்காறாடா” என்று புலம்பி வெளி வருவதற்குல் அவன் அட்வைஸில் அவள் காதில் இரத்தம் வர ஆரம்பித்து விட்டது.வெளியே வந்த நளி “கடவுளே எனக்கு வரம்னு ஒண்ணு குடுத்தேனா, மனசு இறக்கப்பட்டு போனா போகுதேனு ரெண்டா குடு, ‘ஒண்ணு, என் காதுல இரத்தம் வர்ற அளவுக்கு பேசிட்டு போறானே அந்த வளந்து கெட்டவன்,அவன, வாழ்க்கை பூரா பேசவே விடாம தான் மட்டுமே பேசுற பொண்டாட்டி கிடைக்கனும்’, ‘ரெண்டாவது, என் காதுல இரத்தம் வந்த மாதிரி அவனோட புள்ளைங்க அவன் காதுல இரத்தம் வர்ற அளவுக்கு அவன தூங்க விடாம,வேலை செய்ய விடாம, முக்கியமா அவன் பொண்டாட்டி பக்கத்துல கூட அவன விடமா இருக்க மாதிரி டபுள்ஸ் ,டபுல்ஸ்ஸா புள்ளைங்க பொறந்து அவன் காத பஞ்சர் ஆக்கணும் நியாபகம் வச்சுக்கோ இதுல ஏதாவது ஒரு வரம் குறைஞ்சாலும் நான் மேலோகம் வரும் போது பேசி பேசி உன் காத பஞ்சர் ஆக்கிடுவேன் பாத்துக்கோ ” என்று கடவுளுடன் டீல் பேசி கொண்டு வந்தாள்.

நளி, இங்கு சூர்யாவின் அறுவையில் நொந்து போய் சமையலறைக்கு வர, அங்கு மயூ “அம்மா பால் பாயாசம் செம்மமா ,உங்க கை பக்குவமே தனி” என்று கூறி சப்பு கொட்டி பாயசத்தை குடித்து கொண்டு இருந்தாள்.அதை பார்த்த நளி, “‘வெல்லம் திங்கறவன் ஒருத்தன் விரல் சூப்புறவன்” ஒருத்தன்னு இதைதான் சொல்லுவாங்க போல பேசுறது ‘எல்லாம் பேசிட்டு இவ பாயசம்’ சாப்பிடறா,ஒண்ணுமே பேசாம நான் போய் ‘உப்புமா’ சாப்புட்டு வர்றேன்” என்று மனதுள் நொடித்து கொண்டவள் வேகமாக தோழியின் அருகில் சென்று, அவள் கையில் இருந்த பாயாச கப்பை பறித்து கொண்டு தன் அறைக்கு ஓடிவிட்டாள்.மயூ அவள் பின்னோடு ஓடி அறைக்குள் நுழைய முயற்சிக்க அதற்குள் அவள் கதவை அடைத்திருந்தாள்.அவர்களை பார்த்த தங்கத்திற்கு சிரிப்புதான் வந்தது. “நீங்க ரெண்டு பேரும் பிஸ்னஸ் பாக்குறீங்கனு இந்த உலகம் நம்புது” என்று நொடித்து கொண்டு போய் சோபாவில் அமர்ந்துவிட்டார்..

நளினியிடம் பேசிய சூர்யா நண்பனை சந்தித்து வட்சனைப்பற்றி விசாரிக்கலாம் என்று சென்றவன், வெகு நேரம் கழித்து முகத்தில் களைப்புடன்தான் வீடு வந்தான்.அவர்களுக்கு தனிமை கொடுத்து நளினி விரைவில் படுக்க சென்றுவிட , மூவரும் பொதுவாக பேசி கொண்டு இருந்தனர்.அப்போது பேச்சு அங்கு சுற்றி ,இங்கு சுற்றி மயூரி இந்தியா வருவதில் வந்து நின்றது.ஒரு முழு நிமிடம், அமைதியாக இருந்த மயூ பின் தன் அம்மாவிடம் கெஞ்சி,கொஞ்சி இன்னும் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டிய பிராஜெக்ட் இருப்பதாகவும் அதன் பின் ஒரு பேஷன் ஷோ முடித்து கொடுத்துவிட்டு வருவதாக சொல்ல அவரும் ஒரு மனதாக தலையாட்டி தன் சம்மதத்தை தெரிவித்து இருந்தார் தங்கம்.

நளினி சூர்யாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்ட பிறகு அவன் அங்கிருந்த ஒரு வாரமும் அவன் கண்ணில் சிக்காமல் தப்பித்து கொண்டாள்.அவனும் தங்கையிடம் தாயின் புலம்பலை கோடிட்டு காட்டி சீக்கிரம் ஒரு நல்லா முடிவாக எடுக்க சொல்லிவிட்டு இந்தியா திரும்பினர்.

ஆறுமாத இடைவெளி மயூரி மனதில் மாற்றத்தை கொண்டு வருமா பார்ப்போம்.நாட்கள் அதன் போக்கில் நகர ,அலமு பாட்டியின் தேடுதல் வேட்டையில் ‘மூன்று பெண்கள்’ சிக்கினர்.அதில் ‘ஒரு பெண்ணை’ ஏக மனதாக தேர்ந்தெடுத்தவருக்கு ஏனோ மனது பாரமாக போனது. இருந்தாலும் வீட்டில் இருப்பவரிடம் எதையும் காட்டி கொள்ளாமல் மறைத்தவர், பேரனிற்கு அந்த பெண்ணின் புகைப்படத்தையும், மற்ற தகவல்களையும் அனுப்பினார்.பின் அனைத்து வேலைகளையும் ஜெட் வேகத்தில் செய்தவர், பெண் வீட்டில் பேசி திருமண நாளையும் குறித்து இருந்தார்.

சிங்கப்பூர் வந்த கிருஷ், நிற்க நேரம் இல்லாமல் ஒடி கொண்டு இருந்தான். அவனது கம்பெனியின் ஒரு கிளையை, இங்கு புதுசாக ஆரம்பிக்க நாட்கள் ஆகும் என்பதை உணர்ந்தவன் அடுத்தாக அங்கு ஏற்கனவே நஷ்டத்தில் ஓடி கொண்டிருக்கும் ,கம்பெனியோடு ‘டை அப்’ வைத்து கொண்டாள், வேலை சுலபமாக முடியும் என்று முடிவு சொய்து அதற்கான வேலையில் இறங்கினான். இதற்கான வேலையில் அவன் தூங்கும் நேரமும் குறைந்து போனது.அவன் வெளிநாடு வந்து நான்கு மாதங்கள் கடந்த பின், ‘பெண் பார்த்துவிட்டதாகவும்,பெண்ணின் புகைபடம் அனுப்பி இருப்பதாகவும்’ அலமு பாட்டியிடம் இருந்து அவனுக்கு தகவல் வந்தது.இருக்கும் உடல் சோர்வில், போட்டோவை பார்க்காதவன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி தூங்கிவிட்டான். பின் காலை எழுந்தவன் போட்டோ நினைவே இல்லாமல் அடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டான்.அவன் அலைந்து திரிந்ததில் வேலை ஓரளவு விரைவில் முடிய ,அங்கிருந்த அவர்களின் பார்ட்னர் பார்ட்டி ஒன்று அரென்ஜ் செய்திருந்தார்.இது போன்ற விஷயங்களில் ஈடு பாடு இல்லாத கிருஷ் வேறுவழி இல்லாமல் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டான்.

பார்ட்டிக்கு எப்போதும் போல் அபிஸியல் லுக்கில் இல்லாமல்,டீ-சர்ட் ,பேண்ட் என்ற சாதாரண உடையிலும் பெண்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் பேரழகனாக இருந்தான் கிருஷ்.அவன் அழகில் மயங்கி பல பெண்கள் அவனுடன் ‘[டான்ஸ் ஆட’ அழைக்க அவர்களுடன் ஆட மறுத்தவன் தன் வேடிக்கை பார்க்கும் வேலையை தொடர்ந்தான். ஒரு பெண் அதற்கும் மேல் போய் “ஷால் வீ டேட்” என்று கேட்க அவளது வார்த்தை அவனுள் பல நினைவுகளை தோற்றுவித்தது. அதை தலையை உலுக்கி சமாளித்தவன் “நோ” என்ற வார்த்தையில் ஒதுக்கினான். அவன் அருகில் இருந்த அவனது பார்ட்னர் ஜேட்சன்.”ஏன் சார் உங்களுக்கு ‘அதில்’ இண்ட்ரஸ்ட் இல்லையா” என்று கேட்டான்.’அதில்’ என்ற வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி.

கிருஷோ ஜேட்சனை அலட்டி கொள்ளாமல் பார்த்தவன் “என் மனைவியிடம் மட்டும்தான் எனக்கு இண்ட்ரெஸ்ட் மற்றவரிகளிடம் இல்லை” என்றவன் மேலும் “பார்க்கும் இடம் எல்லாம்,பார்ப்பவர்களுடன் எல்லாம் உறவு வைத்து கொள்ள நான் ‘மிருகம்’ இல்லை.ஐந்தறிவு இருக்கும் மிருகத்திற்குதான் வரைமுறை இல்லை ‘எங்களுக்கு’ முக்கியமாக ‘எனக்கு’ இருக்கிறது.என் ‘ஆரம்பம்,தடுமாற்றம் முடிவு’ அனைத்தும் என் மனவியிடமே” என்றவன் அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் ஜீஸை கையில் எடுத்து கொண்டு வேறு பக்கம் நகர்ந்துவிட்டான்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes