கண்ணீர் - அத்தியாயம் 33

Advertisement

Nuha Maryam

Active Member
அன்று ஏதோ முக்கியமான ஸ்டாஃப் மீட்டிங் என்று கூறி கல்லூரி சற்று முன் கூட்டியே விடப்பட்டது.

காலையில் ஜெயா சமையலுக்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறியது நினைவு வரவும் வீடு செல்ல முன் நேராக கடைக்குச் சென்று அதனை வாங்கி வரலாம் என்று கிளம்பினாள் அனுஷியா.

கடையில் இருந்து வெளியே வந்தவள் தூரத்தில் மாலதியிடம் ஒருவன் வாக்குவாதம் செய்வதைக் கண்டு அவசரமாக அங்கு ஓட, அதே நேரம் மாலதியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவனோ அவளை அடிக்க கை ஓங்கினான்.

அனுஷியா குறுக்காக வந்து நிற்கவும் அவள் கன்னத்தில் அடி விழ, "அனு..." எனப் பதறினாள் மாலதி.

திடீரென குறுக்காக வந்து அடி வாங்கியவளையே மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தான் அந்த ஆடவன்.

அனுஷியா, "அக்கா... என்னாச்சு கா? யார் இவர்? எதுக்காக உன் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கார் இவர்?" எனக் கேட்டாள் மாலதியிடம் புரியாமல்.

"ஆஹ்... உங்க அக்கா என் கிட்ட ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தா... அதுவும் ஒரு மாசத்துல திருப்பி தரதா சொல்லி..‌. ஆறு மாசம் ஆகியும் இன்னும் பணம் வரல... கால் பண்ணி கேட்டாலும் சரியான பதில் சொல்லல... அதான் நானே என் பணத்த வாங்க தேடி வந்திருக்கேன்... வட்டியோட சேர்த்து இப்போ மொத்தமா ஒரு லட்சம் ஆகிடுச்சு... ஒழுங்கு மரியாதையா இப்பவே என் பணத்த எடுத்து வை... இல்லன்னா அசிங்கம் ஆகிடும்... உன்ன போல **களுக்கு பணம் தந்ததே பெரிசு... இதுல என்னையே ஏமாத்த பார்க்குறியா நீ?" என்றான் அந்த ஆடவன்.

அவனின் பதிலில் அதிர்ந்த அனுஷியா மாலதியை அதிர்ச்சியுடன் நோக்க, "எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க... ப்ளீஸ்... கண்டிப்பா உங்க பணத்த திருப்பி கொடுத்துடுறேன்..." எனக் கையெடுத்து கெஞ்சினாள் மாலதி கண்ணீருடன்.

"சரியா ஒரு வாரத்துல பணம் என் கைக்கு வந்தாகணும்... இல்ல நடக்குறதே வேற... சொல்லிட்டேன்..." என மிரட்டி விட்டு அவர்களை விட்டு சற்று தள்ளி சென்றவன் தன் கைப்பேசியை எடுத்து ஏதோ தேட, அவன் தேடியது கிடைக்கவும் இதழ்களில் ஒரு இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது.

"எதுக்குக்கா அந்த ஆள் கிட்ட பணம் வாங்கின? என்னாச்சுக்கா?" என்ற அனுஷியாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனமாக கண்ணீர் சிந்தினாள் மாலதி.

"என் படிப்புக்காகவா?" எனக் கேட்டாள் அனுஷியா சந்தேகமாக.

மாலதியின் மௌனமே அவளுக்கான பதிலை வழங்கி விட, "சாரி க்கா... என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்... நான் எல்லாம் பிறந்ததே சாபம்... எல்லாருக்கும் பாரமா இருக்கேன் நான்..." என மாலதியை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள் அனுஷியா.

அவளின் தலையை வருடி விட்ட மாலதி, "அனும்மா... இங்க பாரு... நீ யாருக்கும் பாரமா இல்ல... முதல்ல அதை புரிஞ்சிக்கோ... என்னை அக்கான்னு வாய் நிறைய கூப்பிடுறது எல்லாம் வெறும் பேச்சுக்கா?" எனக் கேட்கவும் உடனே மறுப்பாக தலையசைத்தவளிடம்,

"என் தங்கச்சிக்காக நான் இதைக் கூட பண்ண மாட்டேனா? எனக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கல... ஆனா‌ நீ படிச்சி பெரிய ஆளா வரணும்... அப்போ தான் இந்த அக்காக்கு பெருமை... புரிஞ்சுதா?" எனக் கேட்டாள் மாலதி.

அனுஷியா ஆம் எனத் தலையசைக்க, "சரி சொல்லு... நீ இப்போ எங்க இருக்க? உனக்கு அந்த சத்யனால எந்தப் பிரச்சினையும் வரலைல..." என மாலதி கேட்கவும் சில நொடிகள் அமைதி காத்த அனுஷியா இதுவரை நடந்த அனைத்தையும் மறைக்காமல் கூறினாள்‌.

"நீ சொல்றதை பார்க்கும் போது அவர் நல்லவரா தான் தெரியுறார்... இருந்தாலும் நீ பார்த்து சூதானமா இருந்துக்கோ... சொந்தக்காரங்களையே நம்ப முடியாத காலம் இது... யாரோ மூணாவது மனுஷன் இவர்... பார்த்து பத்திரமா இரு... சரி லேட் ஆகிடுச்சு... நீ பார்த்து போய்ட்டு வா... இந்தப் பண மேட்டரை நான் பார்த்துக்குறேன்... நீ இது எதையும் யோசிச்சி வருத்தப்படாதே..." என மாலதி கூறவும் மனமேயின்றி விடை பெற்றுச் சென்றாள் அனுஷியா.

அனுஷியா சற்றுத் தூரம் சென்று விடவும் மறு பக்கம் திரும்பி கலங்கி இருந்த கண்களைத் துடைத்த மாலதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விடாமல் இறுமினாள்.

'சாரி அனு... என்னால உன் கிட்ட உண்மைய சொல்ல முடியல...' என்றாள் மனதுக்குள்.

இங்கு அனுஷியாவோ ஏதாவது செய்து மாலதி வாங்கிய கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டு மனம் போன போக்கில் நடக்க, அவளின் முன் வேகமாக வந்து நின்ற ஒரு வேன் கண் இமைக்கும் நொடிப் பொழுதில் அனுஷியாவை அதில் ஏற்றிக் கொண்டு பறந்தது.

"ஏய்... யாருடா நீங்க? விடுங்க டா... யார் நீங்க? எதுக்காக என்னைக் கடத்திட்டு போறீங்க?" என இரு பக்கமும் அவளைப் பிடித்து வைத்துக்கொண்டு இருந்தவர்களிடமிருந்து தப்பிக்க திமிற, முன் சீட்டில் இருந்த ஒருவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து, "அமைதியா இருக்கலன்னா நடக்குறதே வேற..." என்று மிரட்டினான்.

அனுஷியா பதிலுக்கு ஏதோ கூற வரவும் அதற்குள் முன் சீட்டில் இருந்தவன் அனுஷியாவின் அருகில் இருந்தவனிடம் கண்ணைக் காட்ட, அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் மயக்க மருந்து அடங்கிய ஊசியை அவள் கழுத்தில் இறக்கி இருந்தான் அவன்.

மறு நொடியே அனுஷியா மயங்கி விட, "பாஸ்..‌. ஆப்பரேஷன் சக்சஸ்... நீங்க சொன்ன இடத்துக்கு தான் வந்துட்டு இருக்கோம்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

மீண்டும் அனுஷியா மயக்கம் தெளிந்து கண் விழிக்கும் போது இருந்தது ஒரு இருட்டறைக்குள் தான்.

அவளின் கை கால்கள் கட்டப்பட்டு வாயைத் துணியால் கட்டி இருந்தனர்.

"ம்ம் ம்ம்.... ம்ம்ம்ம்... ம்ம்..." என அனுஷியா கட்டை அவிழ்க்கப் போராட, அவளை அடைத்து வைத்திருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

"என் கண்ணுலயே மண்ணைத் தூவி ஏமாத்த பார்த்தியா பேபி?" என்ற குரலில் அனுஷியா சத்தம் வந்த திசையை அதிர்ச்சியுடன் நோக்க, அங்கு விஷமச் சிரிப்புடன் அவளை நோக்கி வந்தான் அந்தக் கயவன்.

பயத்தில் அனுஷியாவின் முகம் வெளிறிப் போக, அவளின் வாயில் இருந்த துணியை எடுத்தவுடன், "நீ... நீ... எ.. எதுக்காக என்னைக் கடத்திட்டு வந்த?" என அனுஷியா பயத்துடன் கேட்கவும் பேய்ச் சிரிப்பு சிரித்தவன், "உன்னை சும்மா வெச்சிருக்கவா அவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்கோம்... வேற எதுக்கு? இதுக்காக தான்..." என்றவன் அனுஷியாவின் முகத்தை ஒரு விரலால் வருடினான்.

அனுஷியாவிற்கு அருவருப்பில் உடல் கூச, "ப்ளீஸ் என்னை எதுவும் செஞ்சிடாதே... என்னை விட்டுடு..." என கண்ணீருடன் இறைஞ்சினாள்.

"அது எப்படி பேபி விட முடியும்? நான் நினைச்சதை நடத்திக் காட்ட வேண்டாமா?" எனக் கேட்டவன் அனுஷியாவின் நெஞ்சில் கை வைக்கப் போக, தன்னைக் காத்துக்கொள்ள அவனின் முகத்தில் காரி உமிழ்ந்தாள் அனுஷியா.

அதில் ஆத்திரம் உச்சிக்கு ஏறவும் அக் கயவன் அனுஷியாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, உதடு கிழிந்து இரத்தம் வடிந்தது.

"என்னை விட்டுடு... வேணாம்..." என அனுஷியா கெஞ்ச, அதனைக் கண்டு கொள்ளாதவன், "உனக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ? இனி யார் நினைச்சாலும் உனக்கு என் கிட்ட இருந்து தப்ப முடியாது டி..." என்றவன் அவளின் உடையில் கை வைத்து இழுக்க, அனுஷியாவின் உடை கிழிந்து அவளின் பெண்மை அவனுக்கு காட்சிப் பொருள் ஆகியது.

இந்த நொடியே தன் உயிர் போய் விடக் கூடாதா என வேண்டியவள் அவமானத்தில் கண்ணீர் சிந்தினாள்.

அவளின் கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவளால் தன்னைக் காத்துக்கொள்ள எதுவும் செய்ய முடியவில்லை.

உடலைக் குறுக்கி சுவரோடு சாய்ந்து அமர்ந்தவள், "விட்டுடு ப்ளீஸ்..." எனக் கெஞ்சினாள்.

அவளைக் கண்களாலே துகில் உறிந்தவன் அனுஷியாவின் தலை முடியைப் பற்றி இழுத்து அவளை முத்தமிட முயன்றான்.

அனுஷியாவோ கட்டப்பட்டிருந்த கால்களாலே அவனை உதைத்து தள்ள முயன்றாள்.

ஆனால் அதிலிருந்து லாவகமாக தப்பித்தவன் மீண்டும் அவளுக்கு அறைய, முழுதாக மயக்கமடைந்தாள் அனுஷியா.

அதனைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன் அனுஷியாவின் உடைகளை முற்றாகக் கலைத்து விட்டு அவளின் பெண்மையைக் களவாட முயல, பட்டென அவ் அறைக் கதவு திறக்கப்பட்டது.

"டேய் ராகேஷ்... என்ன காரியம் டா பண்ண போன? உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?" எனக் கோபமாகக் கேட்டபடி உள்ளே வந்தார் சத்யன்.

அவரைப் பார்த்து முறைத்த ராகேஷ், "நான் யூஸ் பண்ணி முடிச்சதும் நீ யூஸ் பண்ணிக்கோ... அதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்? இப்போ என் மூட மாத்தாம கிளம்புயா..." என்றான் ஒரு மாதிரி குரலில்.

அவனை அனுஷியாவிடமிருந்து இழுத்து விலக்கிய சத்யன், "இந்தப் பொண்ணால நமக்கு எம்புட்டு லாபம் கிடைக்க இருக்குதுன்னு தெரியுமா உனக்கு?" எனக் கேட்டார் ஆத்திரமாக.

ராகேஷ் அவரைக் குழப்பமாக நோக்க, "ஆமா... ஃபாரின் கஸ்டமர் ஒருத்தனுக்கு ஃப்ரெஷ் பீஸ் அஞ்சி நாளைக்கே அனுப்பி ஆகணும்... ஆல்ரெடி நாழு பேர் ரெடி... இவ தான் அஞ்சாவது பீஸ்... அந்தாளு ரொம்ப மோசமானவன்... இவ மட்டும் ஃப்ரெஷ் பீஸ் இல்லன்னு தெரிஞ்சா எங்க தலையை தனியா எடுத்துடுவான்... ஒழுங்கா இந்தப் பொண்ண விட்டுட்டு வெளிய வந்துடு... உன்னால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு..." என்று விட்டு சத்யன் வெளியேற, அனுஷியாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த ராகேஷ் 'ஷிட்...' எனத் தரையைக் காலால் உதைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

***

ஜெயா அழைப்பைத் துண்டித்ததும் பித்துப் பிடித்தவன் அனுஷியாவை எல்லா இடத்திலும் தேடி அலைந்தான் பல்லவன்.

எங்கு தேடியும் அனுஷியா கிடைக்காமல் போக, அவனின் மனதில் பயப் பந்து உருள ஆரம்பித்தது.

அப்போது தான் அவனுக்கு அனுஷியாவிற்கு புது கைப்பேசி வாங்கிக் கொடுக்கும் போது எதற்கும் இருக்கட்டும் என்று அவளின் பாதுகாப்புக்கு ஜீ.பி.ஸ் கனெக்ட் செய்து தன் கைப்பேசியுடன் இணைத்தது நினைவு வந்தது.

இவ்வளவு நேரமும் இருந்த பதட்டத்தில் பல்லவனுக்கு இவ் விடயம் மறந்து இருந்தது.

உடனே தன் கைப்பேசியை எடுத்து அனுஷியா இருக்கும் இடத்தைத் தேட, அதில் காட்டிய இடத்திற்கு கிளம்பினான் பல்லவன்.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த கிளைச் சாலையில் கைப்பேசி காட்டிய இடத்தை நோக்கி நடந்தவனுக்கு அவ் இடத்தைப் பார்க்கும் போதே மனதில் அச்சம் சூழ்ந்தது.

ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அனுஷியாவின் கைப்பேசி இருக்கும் இடத்தைக் காட்ட, சுற்றும் முற்றும் பார்த்த பல்லவனின் பார்வையில் பட்டது ஒரு பாழடைந்த வீடு.

வெளியே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, வீட்டின் உள்ளிருந்து ஒரு மெல்லிய வெளிச்சம் வந்தது.

அதனை வைத்து அங்கு ஆட்கள் இருப்பதை உறுதி செய்தவன் அவ் வீட்டை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்து விட்டு, திடீரென என்ன நினைத்தானோ தன் காவல் துறை நண்பன் ஒருவனுக்கு அழைத்து விஷயத்தை கூறி அவ் இடத்துக்கு வரவழைத்தான்.

காவல் துறையினர் அங்கு வந்து சேர எடுத்த அரை மணி நேரமும் பல்லவனுக்கு பல யுகங்கள் போல் இருந்தது.

தனக்குத் தெரிந்த அத்தனை தெய்வத்திடமும் அனுஷியாவிற்கு எதுவும் நடந்து விடக் கூடாது என வேண்டிக் கொண்டவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

அது பல்லவனுக்கு அனுஷியா மேல் எழுந்திருந்த காதல்.

அதற்குள் காவல் துறையினர் வந்து விட, உள்ளே இருப்பவர்களுக்கு சந்தேகம் வராதபடி அவ் இடத்தை காவல் துறையினர் முற்றுகையிட்டனர்.

சத்யனும் ராகேஷும் தீவிரமாக ஏதோ பேசியபடி இருக்க, திடீரென காவல் துறையினர் உள்ளே நுழையவும் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தவர்கள் பின் வாசல் வழியாக தப்பிக்க முயல, சுற்றிலும் காவல் துறையினர் வந்து அவர்களைப் பிடித்தனர்.

பல்லவன் அனுஷியாவைத் தேடிச் செல்ல, பூட்டியிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் தன்னவள் இருந்த நிலையைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

அவசரமாக தன் சட்டையைக் கழட்டி அனுஷியாவிற்கு அணிவித்த பல்லவன் அவளின் கட்டுகளை அவிழ்த்து விட்டு தன்னவளை வாரி அணைத்து, "அனு... அனுஷியா... ஷியா... இங்க பாரு... உனக்கு எதுவும் ஆகல... நான் வந்துட்டேன்... ப்ளீஸ் டி... கண்ணைத் திறந்து பாரும்மா..." எனக் கண்ணீர் வடித்தான்.

அனுஷியாவிடம் ஒரு அசைவும் இல்லாது போகவும் அவளைக் கரங்களில் ஏந்தியவன் அவசரமாக அங்கிருந்து வெளியேறினான்.

அதற்குள் காவல் துறையினர் சத்யன், ராகேஷ் உட்பட அவர்களின் ஆட்களை கைது செய்திருந்தனர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top