ஐப்பசி அன்னாபிஷேகம்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்று 30-10-2020 அன்னாபிஷேகம்

ஐப்பசி அன்னாபிஷேகம்.

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது,

அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி.

உலக வாழ்க்கைக்கு அச்சாணி.

அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும்தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க
மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள்.

ஐப்பசி பௌர்ணமி நாள்.

#அன்னாபிஷேக_பொருள்_விளக்கம்:

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழாதான் அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான்
அன்று அவனது கலை அமிர்த கலையாகும்.

அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

*#சிவன்_பிம்பரூபி*

அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள்.

பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும்.

அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொருபாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.

இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

#அன்னாபிஷேக_தரிசன_பலன்:

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு
பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

சிவன் அபிஷேகப்பிரியர்.
மொத்தம் 16 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம்.

அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம்.

சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்பு உடையதாகும்.

#ஆகமத்தில்_அன்னாபிஷேகம்:

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்குரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும்.
ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய
அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.

முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும்.

இரண்டும் வேறல்ல.

அபிஷேக அன்னப் போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட் கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

#அன்னத்தின்_சிறப்பு :

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது.

நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது.

அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது.
எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை.

இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்படுத்தி அடைக்கலமாகின்றது.

அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.

எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

#முக்கிய_குறிப்பு :

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

#அன்னாபிஷேக_மஹத்வம் :

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான தவகோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும்.

அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
அன்னாபிஷேகம் நல்ல
முறையில் நடந்து ஐயனின்
மனம் குளிரட்டும்
ஓம் நமச்சிவாயா
ஓம் நமச்சிவாயா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top