என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 4

#1
என் உயிரின் உயிரான மனைவிக்கு
(மனைவிக்கு ஓர் கடிதம்)
பாகம்-4

4. பிரச்சனைகளை எதிர்கொண்ட விதம்

என் உயிரில் உறைந்து, உணர்வில் நிறைந்து, உதிரத்தில் கலந்து வாழும் நேசமுள்ள பிரியசகியே....

நம் வாழ்வின் பல்வேறு தருணங்களில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளோம். சில பிரச்சனைகள் உன் வீட்டில் இருந்தும், பல பிரச்சனைகள் என் வீட்டிலிருந்தும் வந்துள்ளன. சிலவற்றை நண்பர்களிடமும், உறவுகளிடமும் சந்தித்துள்ளோம். இவற்றை தாண்டி "நமக்கு இடையூறாக எழுந்த சந்தேக ரேகைகள்... நமக்குள் எழுந்த என்பதை தாண்டி, நம்மை தூண்டி விட்டவர்கள் எழுப்பிய சந்தேகங்கள்" என்பதே சரி. இவற்றை வென்ற நம் அன்பின் ஆழம் குறித்து உனக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

உன் வீட்டைவிட என்னுடைய வீட்டில் எத்தனையோ வலுவான வேதனைகள் உன்மீது சுமத்தப்பட்டது. ஒவ்வொரு சுமையையும் நீ கையாண்ட விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. என்னை குறித்து உன்னிடம் கூறப்பட்ட குறைகள், என் நண்பர்கள் குறித்து கூறிய பொய்கள், என்னுடைய பழக்கங்கள் குறித்து உனக்கு கூறப்பட்ட எதிர்மறையான கருத்துக்கள்.... அத்தனையும் அவர்களிடமிருந்து கேட்டுக்கொண்டு, என்னிடம் நீ கோபம் கொண்டு கொதித்து துடித்ததில்லை. குடும்ப உறுப்பினர்களே கூறிவிட்டனர், நீ செய்வது தவறென்று நீ என்னோடு சண்டையிட்டதே இல்லை. தனித்து நாமிருக்கும் அறையில் மிகவும் தாழ்ந்த குரலில் நீ என்னோடு அவர்கள் கூறியதை பகிர்வாய்.!!.. பின் "இது ஏதுவாக இருந்தாலும் நான் உங்களை நம்புகின்றேன், உங்கள் நடவடிக்கையால், நீங்கள் இவற்றை பொய்யாக்கி காட்டுங்கள் போதும்" என்று நீ கூறிய நேரங்களை இப்போதும் நினைத்துப் பார்க்கின்றேன். என்மீது உணக்கிருந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கை காரணமாக நீ என் மீது வைத்த விசுவாசம், அந்த விசுவாசத்தால் உனக்கு என்மீது உண்டான பேரன்பு... இவை என்னை ஆழமாக யோசிக்க செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"உன் கணவரை உணவகத்தில் ஒரு பெண்ணோடு பார்த்தேன், என்று கூறிய உன் தோழி... அதை புகைப்படமாக உனக்கு வாட்சப் செய்த நேரம். மாலையில் நான் வீடு திரும்பும் வரை காத்திருந்தாய். பின் வழக்கம் போல உன் மடியில் தலை வைத்து படுக்கும் வரை பொறுத்திருந்தாய். "கண்ணம்மா இன்று அலுவலகத்தில் ஒரு சிறப்பு அதிகாரி வந்திருந்தார்கள். அவர்கள் பெண் என்பது முக்கியமான விஷயம். அவர்களுடன் அலுவலக விஷயமாக நிறைய வெளியில் சுற்ற வேண்டியது இருந்தது. மதியம் உணவகத்தில் அவர்களோடுதான் உணவருந்தினேன்" என்று நான் கூறிய போது, என் இதழை மேற்கொண்டு பேசவிடாது நீ உன் இதழால் மூடிய தருணம், இப்போதும் நினைவில் பசுமரத்து ஆணியாக பதிந்து உள்ளது. என்ன ஆயிற்று என்ற கேள்வியை மழுப்பிய நீ... இரவில் அலைபேசியில் வாட்சப் செய்து விசாரித்த தோழிக்கு கூறிய பதிலை வெளிப்படையாக என்னிடம் காட்டினாய். என் கணவரை குறித்து நீ வருத்தப்பட வேண்டாம். என்னை குறித்த கவலையும் நீ படாதே... என் கணவர் எனக்கு ஆத்மார்த்த தோழர் என்று நீ கூறிய பதில் மறக்க முடியுமா?

இளமை பருவத்தில் உன்னை சுற்றி சுற்றி வளைய வந்து காதலித்த எத்தனையோ பேர்கள் குறித்து ஒன்றுவிடாது நீ என்னிடம் ஒப்புவித்து உள்ளாய். ஒவ்வொருவர் குறித்தும் எனக்கு தெரியாத விஷயமே இருக்க முடியாது. அத்தனை விஷயங்களையும் என்னை தோழனாக நீ பாவித்து நம்பிக்கையுடன் கூறியது போன்று உலகில் எத்தனை பெண்களால் தன் கணவனிடம் கூற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. எத்தனை பேர் உன்னை காதலித்து இருந்தாலும் நீ காதலித்தது என்னை அல்லவா? என்னுடனான வாழ்விற்காக தானே நீ எண்ணற்ற தியாகங்கள் செய்தாய். அப்படியிருக்க எப்படி உன்னை சந்தேகிக்கும் எண்ணம், எனக்குள் வருமென்று உன் நண்பர்களும், தோழியரும் நினைத்தனர். ஏனெனில் அவர்களுக்கு தெரியாது நாம் இருவரும் முதலில் நண்பர்கள் என்பது... அது தானே உண்மை.

என்னை நீயும், உன்னை நானும் விசுவாசித்து வாழ்வது என்பது நம் வாழ்வின் வரப்பிரசாதம். ஊடல் இல்லாது இருந்ததில்லை நமக்குள். சிலநேரம் கோபத்தில் நீ கத்தினாலும், சிறிது நேரத்திற்கு பின் வந்து என் மடியில் படுத்திருக்கின்றாய். அந்த வேளையில் நான் உன்னை அதிகம் கெஞ்சி கொஞ்சியதை ரசித்திருக்கின்றாய். முடிவில் முத்தமிட்டு உன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டு இருக்கின்றாய். என்னுடைய கோபங்கள் பலவற்றில், என்னுடைய கோபத்திற்கான நியாயத்தை அளவிட்டு கொண்டிருப்பாய்... ஆனால் ஒரு போதும் நீ என்னிடம் எதிர் வாதம் செய்ததில்லை. என்னை பல வேளைகளில் முத்தமிட்டு மடி கிடத்தி, தலைகோதி நீ, சமாதானப்படுத்தியதை எவர் அறிவார் கண்மணியே... "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" என்னும் முதுமொழி, நம்மிடம் தோற்ற வரலாறு இன்றும் உள்ளது. நம் காதலும், அன்பும், இருபது வருடங்களாக ஒரே பாதையில் ஒருமித்து பயணிக்கிறது. மோகமென்னும் தாம்பத்திய வாழ்வை நாம் பசிக்கு உணவென்று உண்டதில்லை என்றுமே. உணர்வுக்கு மதிப்பளித்து, ஒவ்வொருவரின் உடலுக்கும் ஆத்மார்த்தமாக ஆராதனை செய்து, கொண்டாடி மகிழவே நாம் அறிவோம். இங்கும் நாம் தோற்றதில்லை.

உலக இணைகள் ஒன்றித்து, புரிந்து வாழ்வதில் பல ஓட்டைகளை அடைக்காது பயணிப்பதே, விரைவில் எரிபொருள் தீர்ந்த வாகனம் போல நெடுஞ்சாலையில் நிற்க காரணம். நம் வாழ்வு அவர்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் தவறுகளை மாற்ற உதவும் இல்லையா???

வாழ்வில் பிள்ளைகள் நமக்கு எப்படி என்பதை குறித்து தொடர்ந்து எழுதுகின்றேன்

தொடரும்...
 
#9
அருமையான கடிதம்... பிரியசகி விளிப்பு அருமை...சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட உறவு தான் திருமணம்...அருமை சகோதரா...
உண்மை சகோதரி... சந்தேகமற்ற வாழ்வே செழிப்பான வாழ்க்கை. மிக்க நன்றி சகோதரி
 
#10
உணர்வுகள் ஒரு தொடர்கதை... உணர்ச்சிகள் சிறுகதை.. இந்த இடைவெளி புரியாததால் தானே இதயங்களில் எழுகின்றது பிறல் என்ற புது கதை... என் உயிரின் உயிரான மனைவிக்கு இதை பலருக்கு உணர்த்துமென்ற நம்பிக்கையில்.... பாரதிப்பிரியன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes