என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 3

Advertisement

என் உயிரின் உயிரான மனைவிக்கு....

( மனைவிக்கு ஒரு கடிதம்)
குறும் தொடர் -பாகம் 3


3. வருடம் தோறும் வளரும் அன்பு

பிரியசகியே, குளிர்காலத்தில் பெய்யும் பனி, மலர்களில் தங்கி உறைவது போல், என் இதயத்தில் உறைந்து தங்கியவள் நீ....

உலகத்து தம்பதிகளை நான் நம்மோடு ஒப்புமை செய்ய விரும்பியதே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். ஆனால் நம்மிடையேயான அன்புக்கு அப்படி ஒன்றை மட்டுமே குறிப்பிட இயலாதே??

காதலித்தோம்... கரம் பற்றினோம்... இன்றும் கூட இளமை பருவத்த்தில் பூத்த அன்பில் மாற்றம் ஒன்றையும் காணவில்லை. ஆனால், வருடம் தோறும் நம்மிடையேயான அன்பு கூடி வருவதை நாம் மட்டுமே அறிவோம். என்னை நீ அறிந்து கொண்டு புரிவதிலும், உன்னை நான் அறிந்து புரிவதிலும் போட்டியிட்டு கொண்டிருக்கின்றோம். உணர்வு குவியல்களில் சிக்கி தவிக்கும் நேரங்களில் ஒருவரையொருவர் ஊக்கமூட்டி, வென்றிருக்கின்றோம்.

உனக்காக நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் நீ பாராட்டி, புளங்காகிதம் அடையாது போனதில்லை. சிறு விஷயங்களை கூட உளம் திறந்து பாராட்டி முத்தமிட்டு வியக்கும் உன் மனம் யாருக்கு வரும்.

சூடும் பூ முதல், காலிலிடும் காலணி வரை என்னுடைய விருப்பத்தை தெரிந்து கொள்ள விரும்பும் நீ... என்னுடைய தேவைகளின் தேர்வை முடிவு செய்துள்ளாய். நான் தலை வாரும் சீப்பு முதல் உபயோகிக்கும் கைக்குட்டை வரை தேர்ந்தெடுத்து தருவாய். நான் எதை உபயோகித்தால் நலமாக இருக்கும் என்று உட்கார்ந்து யோசிப்பாய். இன்றுவரை அதில் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லையே...?!.

வருடங்கள் ஓடிவிட்டன. இருபதுகளில் தொடங்கிய காதலை நாற்பதுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அன்று காட்டிய அதே காதலும், அதே அக்கறையும், இப்போதும் இளமையாக இருப்பதற்கு வசதி காரணமா? அல்லது கவலையில்லை என்பது காரணமா? நீயும் நானும் வாழ்வை கஷ்டத்திலும், கவலைகள் மத்தியிலும் தொடங்கியதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?

எத்தனை துன்பங்கள்? எவ்வளவு போராட்டங்கள்? அத்தனையின் நடுவிலும் ஒரு முழம் மல்லிகைக்கு நீ அடைந்த பேரின்பத்தை, இன்று இருக்கும் வசதிகள் தந்ததா என்றால் நீ கூறும் பதில் இல்லை. ஆனால் இன்றும் நீ சூடும் அதே ஒரு முழம் மல்லிகையின் மணமும், அதை நான் தருகையில் கொள்ளும் ஆனந்தமும் மாறாது இருப்பதால் தான்.... இது ஒரு உதாரணமே....

இன்றும் வெளியூர்களுக்கு தொழில் ரீதியாக பயணப்படும் நான், என் பெட்டியில் முதலில் வைப்பது உன் புடவை தானே. அன்று இதே புடவை தனித்து நான் வெளியூர்களில் இருந்த போது, விடுதி அறையில் என்னுடைய போர்வையாக ஆனது. உன்னோடு அருகிலேயே இருப்பதாக நம்பிக்கை ஊட்டியது. அதே தான் இன்றும். வித்தியாசம் இன்று,... ஆடம்பர விடுதியில் தங்கலாம். குளிர்சாதன அறையும், போர்த்திக்கொள்ள உயர்வகை கம்பளியும் இருக்கலாம். ஆனால் இப்போதும் உன் புடவை தானே பிரியசகி என் உடல் போர்த்தி குளிர் நீக்குகிறது.

பிள்ளைகள் இன்று உன்னையும், என்னையும் பார்த்து கிண்டலாக கூறும் வார்த்தை. இருவருக்கும் இன்னும் இளமை மாறவில்லையோ? உண்மைதானே, இளமையில் தொடங்கிய காதலும், அது கொண்ட அன்பும், அரவணைப்பும், நம்பிக்கையும், நேசமும், பாசமும் குறைவின்றி குதூகளித்து பிரவாகிக்க காண்கின்றோம். அது வரமல்லவா தோழி.

இப்போதும் நாம் நமக்கென்று தீர்மானித்த விஷயங்களை விட்டு கொடுத்து கொண்டதில்லையே!. காலை எழுந்த பின் இறைவழிபாடு தொட்டு இரவில் உணவருந்திய பின் இருவரும் கைகோர்த்து செல்லும் நடைப்பயிற்சி வரை... நாம் நித்தமும் நாமாகவே இருக்கின்றோம்.
வருடங்கள் உடலுக்கு மட்டும் கூடியுள்ளது என்றால் அது பொய். வருடங்கள் அன்பையும் கூட்டியுள்ளது என்பதே மெய். ஆம்.. வருடங்கள் நமக்கு பாடம் சொல்லி கொடுத்து, பக்குவப்படுத்தி, புதிய ஆற்றலை ஒவ்வொரு முறையும் நமக்குள் காதலாய், பாய்ச்சி விட்டல்லவா சென்றுள்ளது?!!.


புரிதல்கள் நமக்கு பொக்கிஷம், உணர்தல் என்பது நமக்கு வரப்பிரசாதம். இவற்றின் மீது கட்டப்பட்ட நம் காதலும், அன்பும் இப்போதும் வளர்கின்றது. வாழ்வின் வசந்தங்கள் வருடங்கள் கடந்தும், பருவநிலை மாற்றமின்றி நம்மில் தொடர்கிறது. ஆகவே பேரன்பான என் பிரியசகியே!...

உலக தம்பதியரை நம்மோடு நான் ஒப்பிடாததற்கு இவையெல்லாம் காரணம். உலக தம்பதியர் எப்படி வாழலாம் என்பதற்கு நம் அன்பே என்றும் உதாரணம்.
உலகை நாம் வென்ற விதத்தை தொடர்ந்து எழுதுகின்றேன் தோழி!..


கடிதம் தொடரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top