என்னை தீண்டிவிட்டாய் 22

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
உன் விலகல்
எனக்கானது
என்று உன்
அதரங்கள் உரைத்தபோது
மகிழ்வதா வருந்துவதா
என்று நான் குழம்ப
என் மனமோ
உன்னை அதிகதிகமாய்
நேசித்து
நன்றிக்கடன்
செலுத்தியது...

காலையில் ஆதிராவின் ஊரை நோக்கி தம் பயணத்தை தொடங்கியிருந்தனர் ஷாகரின் குடும்பத்தார்... அன்றிரவு தோட்டத்தில் வந்தமர்ந்த ஷாகருக்கு ஆதிராவின் நிலையை புரிந்துகொள்ளமுடியவில்லை... தான் எங்கு தவறிழைத்தோம்??? அவளோடு பேசவிழையும் போதெல்லாம் ஏன் இவ்வாறு நடக்கின்றது??? இந்நிலைக்கு என்ன காரணம்??? இதை எவ்வாறு சரிப்படுத்துவது?? மனம் விட்டு பேசுவதால் இந்த பிரச்சினை முடிவுக்கு வருமா?? ஆனால் பேச முயலும் போதெல்லாம் எதிர்பாராத விடயங்கள் நடந்து இருவருக்குமான இடைவெளி அதிகரிப்பதையன்றி வேறெந்த முன்னேற்றமும் இல்லையே??? அதோடு என்னுள் உள்ள தயக்கம் அவளை நெருங்க தடுக்கின்றதே... காதலனாய் என் தயக்கம் சரியென்ற போதிலும் ஒரு கணவனாய் என் தயக்கம் சரிதானா?? இந்த விரிசலை எவ்வாறு சரிப்படுத்துவது???
இவ்வாறு சிந்தித்தபடியிருந்தவனுக்கு அன்று காலை தன் அன்னை கூறிய பரிகார விடயம் நினைவில் வந்தது...
நடந்தது எதையும் இனி தன்னால் மாற்றமுடியாது. .. ஆனால் இனி நடப்பதனைத்தும் நல்லதாக ஆதிராவின் மனக்குறையை சரிப்படுத்துவதாக நடக்க வேண்டுமென முடிவெடுத்தவன் அதற்கான சந்தர்ப்பமாக இந்த பரிகார நிகழ்வை பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தவனுக்கு ஏதோ தெளிவு கிட்டியது போன்றதொரு உணர்வு..
மறுநாளே தன் தாயிடம் ஆதிராவின் ஊரிற்கு செல்லலாமென கூற வசுமதியும் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத்தொடங்கினார்..
ஷாகரின் திருமணத்தை மீண்டுமொருமுறை பிரமாண்டமாய் நடத்தவேண்டுமென முடிவெடுத்த வசுமதி அதை பிரகஸ்பதியிடம் தெரிவிக்க அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்..
வசுமதியும் பிரகஸ்பதியும் சேர்ந்து சென்று பிரகஸ்பதியின் தங்கை குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்தனர்... ஆதிரா மீது அத்தனை விருப்பமில்லாத போதிலும் தம் அண்ணன் மகனின் சந்தோஷத்தை கருத்தில் கொண்டவர்கள் அதை ஏற்றனர்..
அதிலும் ஷாகரின் அத்தை மகள்கள் தமக்கே உரிய பாணியில் திருமண வேலைகளில் கலக்கவென்று அனைவரும் அந்த பயணத்தை எதிர்பார்த்திருக்க ஆதிராவோ அவர்களுக்கு எதிரான மனநிலையில் இருந்தாள்...
அவளது பிறந்த மண் என்றபோதிலும் அவள் எதிர்காலம் கேள்விக்குறியாக காரணமான நிகழ்வுகள் அவள் மனதிலோடி அவளை கலக்கம் கொள்ளச்செய்தது... அதோடு தன் அன்னையின் மரணத்திற்கு கூட அவளால் அங்கு செல்லமுடியவில்லையே என்று இத்தனை நாள் மனதில் இருந்த ஏக்கம் இப்போது பூதகரமானது...ஊர் உறவுகளுக்கு எப்படி முகம்கொடுப்பது..??தன் மாமனை என்ன சொல்வான்??? அந்த சுப்பிரமணி என்ன செய்வான்?? என்று நினைத்தவளுக்கு சுப்பிரமணியால் ஷாகருக்கு மறுபடியும் ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயமும் சேர்ந்துகொள்ள பயணத்தை மறுத்துவிடுவதே சிறந்தது என்று எண்ணியவள் அதை ஷாகரிடம் தெரிவித்தபோது அவனோ
“இங்கபாரு ஆதிரா...இதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை... உனக்கு இஷ்டமில்லைனா நேரடியாக அம்மாகிட்ட சொல்லிடு.... என்னால எதுவும் பண்ணமுடியாது...” என்று கூறிவிட ஆதிராவிற்கோ வசுமதியிடம் எவ்வாறு மறுத்து பேசுவதென்று புரியாமல் நின்றவள் இறுதியில் நடப்பது நடக்கட்டுமென்று இருந்துவிட்டாள்..
வசுமதி தன் நாத்திகளின் உதவியுடன் திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிட ஆதிராவிற்கும் அதை ஏற்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை..
இதோ அதோவென்று ஊரிற்கு கிளம்பும் நாளும் வந்துவிட அனைவரும் பஸ் புக் செய்து ஆதிராவின் ஊரை நோக்கி பயணத்தை தொடங்கினர்..
ஊரிற்குள் வந்ததும் பஸ் நேரே சென்று ஞானபண்டிதரின் வீட்டின் வாசலில் நின்றது..
வாசலில் நின்றிருந்த ஷாகரின் தோழன் அர்ஜூன் கைகாட்ட பஸ்ஸிலிருந்து இறங்கிற ஷாகர் அர்ஜூனை அணைத்து விடுவித்தவனிடம்
“மச்சான் எப்படி இருக்கடா...?”
“நான் நல்லா இருக்கேன்டா... அங்கிள் இல்லையா??”
“இவ்வளவு நேரம் இங்க தான்டா இருந்தாரு... இரு கூப்பிடுறேன்.... மாமா... மாமா... ஷாகர் பேமிலி வந்துட்டாங்க..” உள்புறம் நோக்கி குரல்கொடுக்க வெளியே வந்தார் ஞானபண்டிதர்.
அவரோடு அவரது மனையாளும் வந்து அனைவரையும் வரவேற்றார்.....
வசுமதி முன்னே இறங்கியவர் ஆதிராவை வண்டியிலிருக்கும்படி கூறியவர் ஷாகரிடம்
“கண்ணா நாம முடிவு செய்தபடியே நம்ம குடும்பமும் ரம்யா அத்தை குடும்பமும் வாகினி அத்தை குடும்பமும் அர்ஜூனோட மாமா வீட்ல தங்கிக்கலாம்... ஆதிராவும் மத்தவங்களும் அந்த வீட்டுல தங்கிக்கட்டும்... எல்லாம் முறைப்படி செய்யனும்பா...”
“சரிமா... உங்க இஷ்டம்..”
“ரம்யா, வாகினி நீங்க எல்லாரும் இறங்குங்க....” என்று கூற அப்போது ஆஷிகா
“அத்தை நாங்க சின்னவங்க எல்லாரும் ஆதிரா அக்கா கூட தங்கிக்கிறோம்... ஆதியும், ஆத்வியும் இங்க இருக்கட்டும்” என்று கூற அதை அமோதித்த வசுமதி ரம்யா, வாகினி மற்றும் அவர்களது கணவன்மார்களை இறங்கக்கூறியவர் ராகினி மோகினி மற்றும் அனைவரையும் அவர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மற்றைய வீட்டிற்கு அனுப்பினார்..
இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்க மணமகனையும் மணப்பெண்ணையும் வெவ்வேறு வீட்டில் தங்கவைத்து உரிய சடங்குகளை நடத்த முடிவு செய்தார்....
அன்றிரவு ஷாகரின் குலவழக்கப்படி அவர்களது குலதெய்வமான தொப்பைமுனியிற்கு படையல் இட்டனர்.. இதில் ஆண்களே முன்நின்று செய்வர்... பெண்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்து அதை படையலுக்கு வழங்க பிரகஸ்பதி தேங்காய் உடைத்து பூஜையை ஆரம்பித்தார்... பூஜையில் மணமக்களின் உடை மற்றும் தாலியை வைத்து தூப தீபம் காட்டியவர் பொங்கலை நைவேத்தியம் செய்து பூஜையை முடித்தார்... பின் மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் சில்லறையை முடிந்தவர் அதை ஷாகரின் கையில் கொடுத்து குலதெய்வத்தை நன்கு வேண்டிக்கொண்டு சுவாமி முன் வைத்து வணங்கச்சொன்னார்.. பின் படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர்...
அன்றைய நாள் அவ்வாறே முடிந்துவிட மறுநாள் காலை பெண்கள் கூட்டணி மெஹெந்தி பங்ஷன் என்று கொட்டம் அடித்தனர்... அன்றிரவு மணமகன் வீட்டில் தாலிக்கூரை படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது... இந்த நிகழ்வில் நடுச்சாலையில் தாலியை வைத்து குலதெய்வத்துக்கு அசைவ படையல் இடுவர்... இது மணமகனே செய்யவேண்டும்... படையலுக்கு கட்டாயம் கோழிக்கறியும் முட்டையும் மட்டுமே இடம்பெறவேண்டும்.... இதற்கான காரணம் பெண்கோழி முட்டை இட்டு தன் சந்ததியை பெருக்கும்.. அதை குலதெய்வத்திற்கு படைத்து அவரிடம் சந்ததி விருத்திக்கு அருள் புரியவேண்டுமென வேண்டுவதற்காகவே இவ்வாறு வழிபடுவதாக ஒரு நம்பிக்கை...
அதன்படி அந்த சடங்கும் முடிய மணமக்கள் இருவருக்கும் அவரவர் தங்கியிருந்த வீட்டில் நலுங்கு வைத்தனர்..
இளசுகளின் கலாட்டாவுடன் அனைத்தும் சிறப்பாய் முடிந்திட இதோ நாளை திருமணம் என்ற வேளையில் அனைவரும் சீக்கிரம் உறங்கிவிட்டனர்..
ஆனால் ஆதிராவுக்கோ தூக்கம் வருவேனா என்றிருந்தது.. ஏனென்றால் இந்த நாள் தான் அவள் ஷாகரை தஞ்சமடைந்த நாள்.. அதாவது இன்றோடு ஷாகரிடம் அவள் தஞ்சமடைந்து நான்கு வருடங்கள், முழுதாக 1461 நாட்களாகிவிட்டது.... நான்கு வருடங்களுக்கு முன் இந்த நாளில் அவள் அனுபவித்த வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல... உயிரை கையில் பிடித்துக்கொண்டு கண்மண் தெரியாமல் ஓடியவள் கடைசியில் ஷாகரிடம் தஞ்சமடைந்தாள்... இப்படியொரு நாள் அவள் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால் இத்தனை வேதனை, வலி அவள் வாழ்வில் இருந்திருக்காது...
தன்னால் ஷாகரின் வாழ்விலும் இத்தனை குழப்பங்கள் நடந்திருக்காது...
இவ்வாறு அன்றைய நாளின் தாக்கம் அவளை மூச்சுமுட்டச்செய்ய மெதுவாக வீட்டிலிருந்து வெளியே வந்தவள் தன் சேலையின் முந்தானையை உடலுக்கு போர்வையாக்கிக்கொண்டு கால்போன போக்கில் நடக்கத்தொடங்கினாள்...
இருட்டில் நடந்தவளுக்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள்... நிலவின் வெளிச்சத்தில் நடந்த சென்றவளுக்கு தென்படும் இடமெல்லாம் சுகமான நினைவுகள்...
அயல்வீட்டு சிறார்களோடு கிரிக்கெட் ஆடுவது, தன் வயதை ஒத்த பெண்களோடு தண்ணீர் எடுக்கச்செல்லும் ஆறு, தன் அன்னையோடு வயல் வேலைக்கு செல்லுதல், சிறார்களுக்கு மரத்தடியில் பாடம் கற்பித்தல், தோட்டத்தில் புகுந்து திருட்டு மாங்காயை ருசித்தல், அன்னையின் பிரம்படியிற்கு பயந்து வீட்டை சுற்றி ஓடுவது, ஆடு மாடினை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது என அவளது இளமைக்கால நினைவுகள் அனைத்தும் படையெடுத்து அவளது மனதை லேசாக்கியது.. ஏனோ இன்றோடு தனக்கும் இந்த ஊருக்குமான பந்தம் நிறைவடையப்போவதாய் மனதில் ஒரு எண்ணம்... ஒரு வகையில் அது உண்மை என்ற போதிலும் மனம் பிசைந்தது... ஆனாலும் தன்னை இந்த மண்ணுடன் பிணைத்த உறவுகளே இல்லையென்றாகிய பின் இந்த மண்ணுடனான தன் பந்தம் நிலைக்காது என்று உணர்ந்தாள்... அப்படியே அவளது கால்கள் இடுகாட்டினை நோக்கி நகர்ந்தது...
இடுகாட்டின் வாசலிலேயே நின்றவளுக்கு மனதில் துளிகூட பயமிருக்கவில்லை... இரவு நேரம் என்ற நினைவுகூட இல்லாமல் வாசலில் நின்றபடி மனதால் தன் அன்னையோடு உரையாடத்தொடங்கினாள்...
“அம்மா.... ஏன் மா.. என்னைவிட்டுட்டு போன.... நீயாவது எனக்காக இருப்பனு நினைச்சேன்.. ஆனா நீயும் என்னை வேண்டாம்னு உதறிட்டல... ஏன்மா.. எனக்காக சரி நீ இருந்திருக்கலாமேமா.. இப்போ எனக்குனு இந்த ஊருல யாருமே இல்லையேமா.... ஏன்மா இப்படி பண்ண?? அன்னைக்கு நான் தப்பிக்கும் போதா உன்னையும் கூட வரச்சொன்னேனேமா.... நீயும் என்கூட வந்திருந்தா யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் எங்கேயோ ஒரு மூலையில நாம நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமேமா..... இப்படி யாரும் இல்லாமல் நான் தனியாக இருந்திருக்கமாட்டேனமா... ஷாகரும் என்னால இப்படி கஷ்டப்பட்டிருக்கமாட்டாரேமா... ஏன்மா என்னை விட்டுட்டு போன.” என்று மனதில் புலம்பியவளுக்கு கண்ணீர் வெளிப்பட அதை துடைத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்....
அங்கிருந்து நடந்தவள் கோவில் குளக்கரைக்கு சென்று அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்துகொண்டவள் கையோடு கொண்டு வந்திருந்த சிறுகற்கள் ஒவ்வொன்றாய் எடுத்து குளத்தில் எரியத்தொடங்கினாள்...
மறுநாள் பௌர்ணமி என்பதால் நான் தயாராகிவிட்டேன் என்ற ரீதியில் வானில் காய்ந்துகொண்டிருந்த நிலவின் விம்பம் அந்த குளத்தில் விழ ஆதிரா குளத்தில் கல்லெரியும் ஒவ்வொரு வேளையும் அந்த விம்பம் குழம்பி மீண்டும் சீர்பட்டது..
அத்தோடு தென்றலின் தீண்டலும் அந்த சூழலை ரம்மியப்படுத்தியது.. அந்த சூழல் அவள் கலக்கங்களுக்கு பதிலாகாதபோதிலும் தற்காலிகமாக ஆசுவாசப்படுத்தியது...
பலநினைவுகள் சூழ அமர்ந்திருந்தவள் தன் கைகளை யாரோ பற்ற அதில் உணர்வு பெற்றவள் யாரென்று திரும்பி பார்க்க அவளருகே அமர்ந்திருந்தான் ஷாகர்.
அவள் கையினை எடுத்து தன் கைகளினுள் சிறைபடுத்தியவன் அவள் கைகளுக்கு முத்தம்கொடுத்தான்...
அதில் உனக்காக நான் இருக்கின்றேன் என்ற செய்தி மட்டுமே இருந்தது...
“ஆது ஐயம் சாரி...” என்று ஷாகர் கூற அதில் குழம்பியவள்
“எதுக்கு ஷாகர்....”
“எல்லாத்துக்கும் பேபி... இதுவரைக்கு நடந்த எல்லாத்துக்கும் சாரி... உன்னோட விருப்பம் இல்லாமல் உன்னோட வாழ்க்கை மாற நான் தான் காரணம்... ஐயம் சாரி பேபி...”
“ம்..ஹூம்... நீங்க என்ன பண்ணுவீங்க ஷாகர்... எனக்கு எழுதப்பட்டது எதுவோ அது தானே நடக்கும்... இதுக்கு நீங்க எப்படி பொறுப்பாளியாக முடியும்??”
“நான் அன்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டாமல் இருந்திருந்த நீ இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டேல்ல....??”
“ஆமா.. ஆமா இப்படி தினம் தினம் சாகாமல் ஒரேடியாக செத்திருப்பேன்... நீங்களாவது நிம்மதியாக இருக்கலாம்.....”
“ஆதிரா என்ன பேசுற நீ???”
“அது தான் உண்மை ஷாகர்...என்னால எல்லாருக்குமே கஷ்டம் தான்... என்னை பெத்தபாவத்துக்கு எங்கம்மா உயிரோடு இல்லை.. என்னை காப்பாத்துன பாவத்துக்கு இப்போ வரை நீங்க அனுபவிக்கிறீங்க..”
“ஆது.. நீ ஏன் இப்படி நினைக்கிற???”
“எனக்கு என்னையே பிடிக்கலை ஷாகர்... எல்லோருக்கும் பாராமா நான் எதுக்கு உயிர் வாழணும் ஷாகர்???... வேணாம்... இதுக்கு பிறகு யார் வாழ்க்கையிலும் நான் தொந்தரவாக இருக்க விரும்பல... இன்றோடு எல்லாம் ஒரு முடிவுக்கு வரட்டும்...” என்று கூறியபடி எழுந்தவள் ஷாகர் சுதாகரிக்கும் முன் குளத்தில் குதித்திருந்தாள்....
ஆதிராவிற்கு தண்ணீர் என்றாலே பயம் என்று நன்கறிந்தவன் தாமதிக்காது குளத்தில் குதித்து அவளை கரைக்கு தூக்கி வந்தான்...
உடனேயே நீரிலிருந்து தூக்கி வந்ததால் சுயநினைவோடு இருந்தவள் குளிரில் நடுங்கியபடி மூச்சுவிட சிரமபட்டாள்...
அவள் கை கால்களை ஷாகர் சூடு பறக்க தேய்த்ததும் அது தந்த உஷ்ணம் குளிர் சமனப்பட உதவியது...
அவள் சற்று தெரிந்ததும் மெதுவாக எழுந்தவள் வாந்தி எடுத்தாள் ...
அவள் குடித்த நீரனைத்தும் வாந்தியாய் வெளியேடுத்தவளை தாங்கிப்பிடித்துக்கொண்டவன் அவள் தன்னை சுத்தப்படுத்த உதவிவிட்டு அவளை சற்று தள்ளி ஓரிடத்தில் அமரவைத்தவனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது....
அவளது தற்கொலை முயற்சி அவனை விதிர்விதிர்க்கச்செய்து விட்டது... அது தந்த ஆற்றாமை கோபமாய் உருவெடுக்க அவள் தோள்பட்டை இரண்டையும் இறுகப்பற்றியவன் அவளை குலுக்கி
“என்னதான்டி பிரச்சனை உனக்கு?? ஏன் எப்போதும் இப்படி அவசரப்பட்டு தப்பான முடிவு எடுக்குற?? உனக்கு உன்னோட வாழ்க்கையும் பிரச்சினையும் மட்டும் தான் பெருசா தெரியுமா?? என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட நினைக்கமாட்டியா??? இத்தனை நாள்ல ஒரு நொடிகூடவா என்னோட காதலை நீ உணரல??? இல்லை உணர்ந்ததால தான் என்னை தள்ளி வைக்கிறியா??? நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம்டி... உன்னை நான் எப்பவுமே பாரமா நினைச்சதில்லை.... ஆனா ஒவ்வொரு தடவையும் நீ என்னோட வாழ்க்கையை கெடுத்தமாதிரி பேசும் போது எனக்கு உள்ளுக்குள்ள அவ்வளவு வலிக்கும்... நான் உன்னை காதலிச்சவன் டி... என்னோட கடைசி மூச்சு வரை அந்த காதல் அப்படியே தான் இருக்கும்... இதை ஏன்டி நீ புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற??? உனக்காகனு தானே நான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன்... ஆனா நீ என்னோட காதலை கடைசி வரை புரிஞ்சிக்கவே இல்லையே..... இப்போ கூட சாக துணிஞ்சிட்டியே.. நீ இல்லாமல் என்னோட நிலைமை என்னதுனு யோசிச்சியா??? ஏன்டி எப்பவோ நடந்து முடிஞ்ச விஷயத்தை பத்தி இன்னும் நினைச்சி உன்னையே நீ வருத்திக்கிற?? முடியல ஆது... மனசு வலிக்கிது.... ஒவ்வொரு தடவையும் நீ பேசும் போதும் யாரோ இதயத்தை வாளால அறுக்குற மாதிரி இருக்கு.... புரிஞ்சிக்கோடி... எனக்காகவாவது என்னை ஏத்துக்கோடி... இதுக்கு மேல எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியல.. இல்லைனா உன் கையாலேயே என்னை கொன்னுரு... நான் நிம்மதியாக செத்துப்போயிர்றேன்.. தினம் தினம் உன்னோட காதல் கிடைக்குமா இல்லையானு தவிச்சிருக்கிறதுக்கு ஒரே நிமிஷத்துல உயிரை மாய்ச்சிக்கிறது நல்லது.... என்னை கொன்னுரு..” என்று கூறியவன் அவள் கையிரண்டையும் அவன் கழுத்தில் வைக்க ஆதிராவோ அவன் கைகளை உதறியவள் முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள்...
அவள் அழுகை மனதை வதைத்தபோதும் குழப்பங்களும் கலக்கங்களும் தீர பேசிவிட வேண்டுமென எண்ணிய ஷாகர்
“இங்கபாரு ஆதிரா...... நான் உன்னை விரும்புனதால தான் நான் உன் கழுத்துல தாலிகட்டுனேன்.... உன்னோட விருப்பம் இல்லாமல் நடந்த விஷயம் தான்... ஆனா உனக்கு இதில் விருப்பம் இல்லைனா உன்னை வற்புறுத்தக்கூடாதுனு தான் நான் நினைச்சிருந்தேன்.. ஆனா எந்த முயற்சியும் எடுக்காமல் என்னோட காதலை விட்டுக்கொடுக்க என்னோட மனசு சம்மதிக்கலை.. அதனால தான் என்னோட காதலை உன்கிட்ட எக்ஸ்போஸ் பண்ணேன்... ஆனா சம்மதம் சொல்ல நீ டைம் எடுத்துக்கிட்ட.. அப்போ கூட உன்னை வற்புறுத்தக்கூடாதுனு தான் நினைச்சேன்... ஆனா நீ உன்னோட காதலை மறைக்கிறனு தெரிஞ்சப்போது தான் உன்னை வற்புறுத்து என்னோட காதலுக்கு சம்மதம் சொல்ல வச்சேன்.. ஆனா அதுக்கு பிறகு நடந்து எல்லா விஷயமும் நான் எதிர்பாராதது.. நாம ஒன்னு சேர்ந்தது உட்பட...
நாம ஒன்று சேர்ந்த அன்னைக்கு அந்த சுப்பிரமணி கால் பண்ணி ஏதேதோ சொல்ல நான் பயந்துட்டேன்... நீயும் அந்த நேரம் வீட்டுல இல்லை.. என்னோட பயம் அதிகமாயிடுச்சு.. உன்னை இழந்திடுவேனோனு பயந்தேன்... உனக்கு ஆக்சிடன்ட் அது இதுனு ஏதேதா நடந்ததுல அவன் அப்படி பேசினதும் ரொம்ப பயந்துட்டேன்... அப்போ என் மனசுல இருந்த ஒரே விஷயம் நீ மட்டும் தான்... நீ என்கூட இருக்கனும்... அப்படீங்கிறது மட்டும் தான்.... சரியாக அந்த நேரத்துல நீ வர பயத்துல இருந்த என்னோட மனசு உன்னை அப்பவே சொந்தமாக்கிக்க சொல்ல உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத வேளையில் நம்முடைய உடலுறவு நடந்தது.. ஆனா அது முடிந்த பிறகு தான் நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணேன்னு புரிஞ்சிது.. காதலோட நடக்கவேண்டிய விஷயத்தை பயத்தை போக்கிக்க செய்திருக்கேன்னு புரிஞ்சப்போ என்னை நினைச்சி எனக்கே ரொம்ப கேவலமாக இருந்திச்சு....அதனால தான் உன்கிட்ட இருந்து கொஞ்ச நாள் விலகியிருந்தேன்..... இப்படி எல்லா விஷயமும் உன்னை கஷ்டப்படுத்தக்கூடாதுனு தான் செய்தேன்.. ஆனா நீ என்னை ஏன் புரிஞ்சிக்கவே இல்லை.... ஏன் ஆதிரா நான் அவ்வளவு கெட்டவனா?? இல்லை நான் உனக்கு தகுதியானவன் இல்லைனு நினைச்சியா??? சொல்லு ஆதிரா இன்னைக்கு இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைச்சாகனும்....... சொல்லு ஆதிரா...” என்று ஷாகர் கேட்க கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்த ஆதிரா
“ஆமா ஷாகர்... நான் தான் உங்க காதலுக்கு தகுதி இல்லாதவ.... நான் தான் எதுக்குமே தகுதி இல்லாதவ.. என்னை இப்படியே விட்டுருங்க... நான் யார் கண்ணுலயும் படாமல் எங்கேயாவது போயிடுறேன்.... விட்டுடுங்க ஷாகர்..... நீங்க நல்லா இருக்கனும் ஷாகர்... என்னால உங்க வாழ்க்கை சீர்கெட்டுட கூடாது..... அத்தை மாமாவுக்கு நீங்க மட்டும் தான்... நீங்க தான் அவங்க சந்தோஷமே..... என்னால உங்களுக்கு வேதனையை தவிர வேற எதையும் கொடுக்கமுடியாது... நான் உங்களுக்கு வேண்டாம் ஷாகர்.... ப்ளீஸ்.... புரிஞ்சிக்கோங்க......” என்று ஆதிரா கூற ஆத்திரத்தோட அவளை நெருங்கியவன் அவள் எதிர்பாரா வேளையில் அவள் இதழ் கவ்விக்கொண்டான்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top