என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ - அத்தியாயம் 32

Advertisement

Deiyamma

Well-Known Member
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 32

வெண்பஞ்சு மேகத்தை
வடமிழுத்து கால் பதித்தேன்..
வட்ட நிலவில் திசையறியாமல்
யாரோடு யாரை சேர்க்கவோ?!



சிவப்பு நீல கற்களில் இருந்து வெளிவந்த தங்க மீனும் பப்பி டாக்கும்.. இத்தனை காலமும் அதில் சிறைப்பட்டிருந்த காரணத்தை கேட்டதும் பெண்ணவள் ஆராதனா மயக்கம் போடாத குறை தான்.

அந்த நாளில்.. இந்த உலகத்தில் மனிதர்கள் பிறப்பதற்கு முன்.. செவ்வாய் கிரகத்திலும் வெள்ளியிலும் ஆண்கள் பெண்கள் என்று தனி தனியே ஒவ்வொரு கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் செவ்வாய் கிரகத்திலும் பெண்கள் வெள்ளி கிரகத்திலும் இருந்தனர்.

வெள்ளி கிரகத்தை மேரியும் செவ்வாய் கிரகத்தை ஜூலியஸும் ஆட்சி செஞ்சிக்கிட்டு இருந்தார்கள். ஆண்கள் மட்டுமே ஒரு கிரகத்தில் இருந்தால் எப்படி இருக்கும்..? அதே போல பெண்கள் மட்டுமே ஒரு கிரகம் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே விசித்திரமாக இருக்கிறதா?

அப்படி ஒரு சமயத்தில் அவர்களுக்குள்ளே ஒரு எண்ணம்.. வேறு ஒரு கிரகத்தில் இதே போல உயிரனங்கள் வாழ முடியுமா? அப்படி இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொண்டால் என்ன?? விளைவு மேரியும் ஜூலியஸுவும் தூதுவர்களிடம் ஆராய்ச்சி செய்ய சொன்னனர்.

இரண்டு கிரகத்திற்கும் பொதுவாக பக்கத்தில் இப்போது நாம் வாழும் பூமி அவர்கள் கண்ணிற்கு மனிதர்கள் வாழ ஏற்ற கிரகமாக பட்டது. ஆனால் அதனை அடைவதற்கு ஒரு சிக்கல் இருந்தது. பூமியில் நேரடியாக அவர்களால் கால் பதிக்க முடியாது. பூமியின் நண்பனான நிலாவில் முதலில் கால் பதித்து பூமியின் உண்மையான நிலையை கண்டறிந்தால் தான் எந்தவித சந்தேகமும் இன்றி பூமிக்கு செல்லலாம் என்ற நிலை. விளைவு இரண்டு கிரகத்திலுமிருந்து நிலவினை நோக்கி பயணம்.

அங்கு தான் அவர்களுக்கான ஆச்சரியம் காத்திருந்தது. முதன் முதலில் ஆண்கள் பெண்களை சந்தித்தார்கள். பிணைக்க முடியாத பந்தம் உருவானது. பெண்கள் ஆண்கள் பால் ஈர்க்கப்பட்டார்கள். ஆண்கள் பெண்களிடம் மயக்கம் கொண்டார்கள். அந்த நிலா இப்பொழுது ஷேக்ஸ்பியர் நாடக ஹீரோ ஹீரோயின் ரோமியோவும் ஜூலியட்டும் சந்திக்கும் இடமாக மாறியது.

காதல் என்ற புதிய உணர்வில் இருகிரக மக்களும் திளைத்திருந்த தருணமது. சில காலம் இனிமைக்கு பின் தங்கள் இலக்கை நினைத்து தத்தம் ஜோடிகளோடு பூமியை நோக்கி பயணம் தொடங்கினர். அங்கே அவர்கள் புது கிரகத்தில் பால் காய்ச்சி ஜோடியாக அமோகமாய் வாழ ஆரம்பித்தனர். விஷயம் இரு கிரக மக்களுக்கும் பரவியது. அனைவரும் பூமியை நோக்கி பயணித்தனர்.

அப்படி ஒரு பயண முடிவில் தான் ஜூலியஸும் மேரியும் சந்தித்தனர் அந்த காதல் தேனுறும் மன்மத நிலவில். முதல் பார்வையிலேயே இருவரும் காதலென்னும் பிடியிலே வசமாக சிக்கி கொண்டனர். பிரிக்க முடியாத நிலையான பந்தம் ஒன்று அங்கே அந்த இரு வேறு வேற்று கிரகவாசிகளிடம் நிகழ்ந்தது. வெகுகாலம் அந்த புத்தம் புது காதலர்கள் தேனுறும் நிலவில் காதல் தேனை திகட்ட திகட்ட பருகினர். பின் பூமியை தரிசித்துவிட்டு அங்கே தங்கள் மக்களை ஒன்றாக இணைத்து அவர்களுக்கு புதியதொரு வாழ்வை வாழ அனுமதி கொடுத்துவிட்டு, ஒரு கிரகத்தின் தலைவனாக தலைவியாக தங்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை எண்ணி தங்கள் காதலுக்கு தற்காலிக விடுமுறை கொடுத்து மீண்டும் தங்கள் கிரகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் பிரிந்து சென்றனர்.

ஒரு நாள் வெள்ளி கிரகத்தில் எதிர்பாராத விண்கல் ஒன்று மோதியதில் பெரிய பேரழிவு ஏற்பட்டது. அங்கிருந்தால் இனி தன் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெண்ணி
வெள்ளி கிரகத்தின் அரசியான மேரி தன் கிரக மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிரடி முடிவை எடுத்தார். அனைவரையும் பூமியில் குடியேற வழி வகுத்தார்.

ஆனால் அவர் மட்டும் பூமிக்கு செல்லாமல் நிலாவிலே தங்கி விட்டார். தன் கண்முன்னே இத்தனை நாட்கள் வாழ்ந்த கிரகம், மக்கள் வாழ தகுதி அற்ற கிரகமாக மாறுவதை கண்ணெதிரே காண முடியாமல் துடிதுடித்தார். ஒரு சின்ன விண்கல் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கனவிலும் எதிர்பார்த்திருக்க வில்லை. அதே போல இந்த விஷயம் தன் வாழ்வில் மிகப்பெரிய சூறாவழியை ஏற்படுத்தும் என்பதை அவர் அன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரும் சாதாரண மனிதர் தானே.


இப்போது மேரி எல்லாம் முடிந்து ஏதோ தனி ஆளாய் இருப்பது போல உணர்ந்தார். பூமியின் செழிமை வா வா என்றது. ஆனால் அவருக்கோ பூமிக்கு செல்ல விருப்பமில்லை. தன் காதலனோடு சேர்ந்து வாழ விரும்பினார்.

அதை நடைமுறை படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. வெள்ளி கிரக மக்களுக்கும் செவ்வாய் கிரக மக்களுக்கும் பூமியின் காலநிலை ஒத்துக் கொண்டது. ஆனால் வெள்ளி கிரக மக்களுக்கு செவ்வாய் கிரக சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளும் படி இல்லை. அதனால் மேரியால் நேரடியாக செவ்வாய் செல்ல முடியாத நிலை.

அப்போது தான் அவரது ஆலோசகர் அகத்திய மாமூனி ஒரு ஆலோசனை வழங்கி அதை செயல்படுத்தினார். ஜூலியஸுக்கு தூது அனுப்பி மேரியின் நிலையை எடுத்துரைத்து ஜூலியஸின் பதிலை வாங்கி வருவது என்று. தன் சீடர் இருவரை உருமாற்றி செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் தற்காலிக கவசத்துடன் அனுப்பி வைத்தார். ஆனால் அச்சீடர்கள் செல்லும் வழியில் விண்வெளியில் ஏற்பட்ட புழுதிப்புயலில் சிக்கி அவர்களால் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் நிலாவில் தன் காதலனின் பதிலுக்காக காத்திருந்த மேரிக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. போதுமான வைத்திய பொருள்கள் அங்கில்லை. பூமிக்கு தான் சென்றாக வேண்டும்.

இருந்தும் அவர் மனம் தன் காதலனது வரவுக்காக காத்திருக்க விரும்பியது. இந்நிலையில் அவரது உடல்நிலையின் மீது அக்கறை கொண்டு அகத்தியர் வலுக்கட்டாயமாக மேரியை பூமியில் கொண்டு சேர்த்தார். ஜூலியஸை உன்னிடம் சேர்த்து வைப்பது என் பொறுப்பு என்று வாக்கு கொடுத்தார். வேறு வழியின்றி மேரியும் பூமியில் தங்க சம்மதித்தார்.

அங்கே செவ்வாய் கிரகத்திலோ தன் ஒற்றன் மூலம் வெள்ளியின் அழிவையும் மக்கள் பூமியில் குடியேறியதையும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேரியின் முடிவு சரி என்று தான் நினைத்தார். ஆனால் ஒரு காதலனாக அந்த இக்கட்டான நிலையில் மேரி ஏன் தன்னை நாடி வரவில்லை..? சரி..போகட்டும். ஒரு தகவலாவது சொல்லியிருக்கலாமே.. இந்த அளவு தானா அவளுக்கு என் மீது காதல்? உண்மையிலேயே என்னை விரும்பியிருந்தால் என்னிடம் வந்திருப்பாளே. எல்லாம் வெறும் நடிப்பு. பெண்கள் என்றாலே இப்படி தான் போல. பச்சோந்தி போல நேரத்திற்கு நேரம் நிறம் மாறுவர்கள் போல.. அதானே செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது.. பூமியை போலவா செழிப்பு.. அதான் சரியாக கணக்கு போட்டு பூமியை தேர்ந்தெடுத்திருக்கிறாள். துரோகி..

மேரியின் உண்மை நிலை அறியாமல் ஜூலியஸ் காதலி மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். இதை அறியாத மேரியோ தன் காதலன் வருகைக்காக பூமியிலே காத்து கொண்டிருக்கிறார்.

அங்கே புழுதி புயலில் மாட்டி கொண்ட சீடர்கள் வேறு வழியின்றி தங்கள் பயணத்தை மேற்கொண்டு தொடர முடியாமல் குருவிடம் திரும்பி வந்தனர். விஷயத்தை அறிந்த அகத்தியர் பதறி போனார். இதனால் எவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து கொண்டவர் எவரது துணையுமின்றி தானே ஜூலியஸை சந்திப்பது என்று முடிவெடுத்தார். ஆனால் ஜூலியஸோ அகத்தியரை பார்க்கவே அனுமதிக்கவில்லை.

மேரிக்கு தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத கோபத்தில் தூது செல்லாமல் திரும்பி வந்து அந்த சீடரகளுக்கு சாபம் ஒன்றினை கொடுத்தார். "இக்காதலர்களை சேர்த்து வைக்க உதவி கிடைக்கும் வரை நீங்கள் இருவரும் காலப்பயணம் மேற்கொள்ள விளையாடும் இந்த பரமபத பெட்டிக்குள் கற்களாய் இருக்க கடவதாக. உங்களது மறுஜனனம் கற்களின் ஒளி குறைய காரணமாயிருக்கும் கையால் நிகழட்டும்".

பின்பு இந்த காதலர்களை சேர்த்து வைக்க முடியாத துயரத்தில் அகத்தியர் யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார். அந்த மேரியோ தன் காதலன் வருகைக்காக இன்னும் பூமியிலே காத்திக்கொண்டு இருக்கிறார்.

இப்பொழுது தான் ஆருவிற்கு புரிந்தது. இது வெறும் விளையாட்டு இல்லை.. இருவரது வாழ்வு என்று.

வாழ்க்கை என்பது பல மாற்றங்கள் நிறைந்தது. எதிர்பாராததை எதிர் பாருங்கள் எதிர்பார்ப்புகள் இன்றி இது தானே வாழ்வில் நிம்மதியை தரகூடிய மருந்து. நேற்று இருந்தது இன்று இல்லை. இன்று இருப்பது நாளை இருப்பதும் கேள்விக்குறியே. அப்படி இருக்கையில் ஏன் இந்த தாமதம்.. விட்டுக் கொடுங்கள் உங்கள் துணையிடம். உங்கள் கோப வெறுப்புகளை களைந்து கொஞ்சம் தாழ்ந்து கீழிறங்கி போய் மன்னிப்பை கேட்பதில் அசிங்கம் இல்லை. அது தான் பலவருட தாம்பத்தியத்திற்கு அஸ்திவாரம்.

நன்றி..! நல்லது..! உன் விருப்பப்படியே..! சரி. முயற்சி செய்கிறேன்..! மன்னிச்சிடு. கோபத்துல நான் அப்படி பேசிட்டேன். இனி திருத்திக்க முயற்சி செய்கிறேன்.! என்னால நீ இல்லாம.. முடியாது.!

இப்படி சில வார்த்தைகள் போதும் உறவை நீட்டிக்க. அதை செய்ய தான் பெரும்பாலும் தவறுகிறார்கள். தாங்களே நீதிபதியாகி அனைத்தையும் தன் போக்கிலே தீர்மானித்து அவசர அவசரமாய் தீர்ப்பு எழுதி முடித்தும் வைத்து விடுகிறார்கள். எதிர் நிற்பவர் ஏன் இப்படி நடந்து கொண்டார்..? அவருக்கு என்ன சூழ்நிலையோ? கொஞ்சம் காது கொடுத்து அவர் தரப்பு நியாயத்தை கேட்டிருக்கலாமோ..? என்றெல்லாம் இப்போது சிந்திப்பதில்லை.

இப்படி ஒரு தவறை தான் ஜூலியஸ் செய்தார். ஆனால் மனமொத்த காதலர்களான இவர்கள் பிரிவின் வீரியத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒருவர் அன்பால் தன் காதலை மீண்டும் அடைய விரும்பினார். ஆனால் இன்னொருவரோ கோபம் என்னும் அரக்கனை தலையிலே ஏந்தி வெறுப்பை கண்ணிலே அணிந்து தான் என்ற அகந்தையிலிருந்து வெளிவர முடியாமல் பிரிவை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டார்.

பூமியிலே மேரி பல ஆன்டுகளாக காதலுக்காக தவம் இருந்து கொண்டிருக்க... செவ்வாய் கிரகத்திலோ ஜூலியஸ் மனம்விட்டு பேசாத ஒரு காரணத்தினால் தன்னை தானே ஒரு வட்டத்திற்குள் அடக்கி தன் காதலை புதைத்து இல்லை இல்லை சிதைத்து கொண்டிருக்கிறார். மிஸ் அண்டர்ஸ்டான்டிங் லீட்ஸ் டு பெட்டர் அண்டர்ஸ்டான்டிங் இதை இப்போது யார் இங்கே சொல்லி புரிய வைப்பது..??

சாதாரண உப்பு சப்பில்லாத விஷயம் அதை தன்னிடம் சொல்லாமல் தனியாக முடிவு எடுத்த ஒரே காரணத்துக்காக இன்று வரை மேரி தண்டிக்க பட்டிருப்பது ஆராதனாவிற்கு தெள்ள தெளிவாக புரிந்தது.

பாவம் மேரி.. இந்த மனிதருக்காக இப்படி தவமாய் தவம் கிடக்கிறாரே.. இந்த காதல் தான் எத்தனை விசித்திரமானது. கல்லை கட்டி கடலில் போட்டால் கூட காதலுக்காக சந்தோசமாக அனுபவிக்குமே..

தீடிரென பூமி பற்றி ஒரு எண்ணம் தோன்ற, "அது சரி..இதனால் பூமிக்கு என்ன ஆபத்து வந்துவிடப்போகிறது?" ஏலியன் குட்டிகளிடம் பார்வையை திருப்பினாள்.

"இப்போது செவ்வாய் கிரகமும் அழிவின் விளிம்பில் நிற்கிறது" சோகமாய் குரைத்தது பப்பி டாக்.

"எ..எ..என்ன...?"

"ம்ம்ம்ம்.. செவ்வாய் அழிந்தால் பூமியின் ஈரப்புவிசையில் மாற்றம் நிகழும். அப்படியென்றால் பூமியில் சுனாமி.. எரிமலை வெடிப்புகள்.. என்று பேரழிவு ஏற்படும்".

"ஓ மை காட்.. இப்போது எப்படி இந்த அழிவை தடுப்பது? அந்த ஜூலியஸை மேரியிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்பது..?"பெண்ணவள் பரிதவித்தாள்.

"அது உன் கையிலும் ஜூலியஸ் கையிலும் தான் இருக்கிறது".

"ஜூலியஸ் என்றால் சரி. ஆனால் என் கையில் எப்படி? தெளிவா சொல்லு".

"எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. நீ ஜூலியஸை சந்தித்து பேசினால் மற்ற விவரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது".

"சரி.. சரி .. பேச்சு போதும். இப்போது சீக்கிரம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வழியை கண்டறிவோம்" துரித படுத்தியது தங்க மீன்.

ஆராதனா அந்த பறக்கும் யானையின் மீதிருந்து கீழே பூமியை பார்த்தாள். பார்க்க ரம்மியமாய் தான் இருந்தது. ஆனால் உள்ளத்தில் ஏதோ ஒரு கவலை பிறந்தது. தாயை பிரியும் சேயை போல பூமியை ஏக்கமாக பார்த்தாள். அதற்குள் அந்த யானை மேகத்தினை கடந்து பூமியின் வெளிப்புறம் வந்திருந்தது. அங்கே ஓரிடத்தில் நின்ற அந்த யானை இவர்களை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் பூமிக்குள் ஒளிந்து கொண்டது.

"இப்போது நாம் அடுத்த வழியை சென்றயடைய வேண்டும். எங்கேனும் ஏதாவது வழி கிடைக்கிறதா என்று தேடுங்கள்" தங்க மீனின் பேச்சில் அதில் கவனமானாள் ஆராதனா.

விண்வெளி.. உயிர் இல்லாத இடம்.. வெகு வெகு அமைதியாக இருந்தது. எந்த கவச உடையும் இன்றி பெண்ணவள் பாதங்கள் அந்தரத்திலே அடியெடுத்து வைத்தது. ஆங்காங்கே சிறு சிறு கற்கள் பரவி கிடக்க அனைத்தையும் உற்று பார்த்தப்படி வந்தவளுக்கு சந்தேகம் படும் படி எதுவும் அகப்படவில்லை. திரும்பி ஏலியன் குட்டிகளை பார்க்கையில் அவர்களும் தேடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"சரி தான்... இங்கிருந்து வெளியே சென்ற படி தான்" அலுத்துக் கொண்டபடி பெண்ணவள் இன்னும் கொஞ்சம் முன்னேறி நடக்க ஆயத்தமானாள். அப்போது அங்கே மின் மினி பூச்சி போலே குட்டி குட்டியாய் நட்சத்திர வடிவில் ஏதோ ஒன்று ஒளிர்வது போல இருந்தது. ஆர்வ மிகுதியில் பெண்ணவள் விரைந்து அதை நோக்கி சென்றாள். இடைவரை குனிந்து இரு கைகளையும் கூப்பி அந்த ஒளிர் விளக்குகளை பிடிக்க முற்பட்டாள். ஆனால் அதுவோ நான் உன் கையில் அகப்படுவேனோ என்ற ரீதியில் ஆட்டம் காட்டியது.

பெண்ணவள் இப்போது பொறுமை இழந்திருந்தாள். "எனக்கேவா டிமிக்கி கொடுக்கிற...இப்போ பாரு உன்னை பிடிக்கிறேன்". துப்பட்டாவின் இரு முனைகளையும் இரு கைகளிலும் பிடித்தவள் மீன் பிடிப்பது போல அதனை நோக்கி வீசினாள். அவள் அதிர்ஷ்டம் நான்கைந்து நட்சத்திரஒளிர் விளக்குகள் அகப்பட்டு கொண்டன. மகிழ்ச்சியில் பெண் துள்ளி குதித்தாள்.

"ஹேய்.. மாட்டிக்கிட்டீங்களா..??" சிறு இடைவெளி வழியாக மாட்டிக் கொண்ட ஒளிர் பூச்சிகளை பார்த்து சிரித்தாள். அ..ப்..போது... அ...ப்போது...

அந்த விளக்கு பூச்சிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்றாக கை கோர்த்து பெரியதாக மாறியது... அதிர்ச்சியில் அவள் 'ஆ..ஆ..ஆ..' வென்று வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருக்கையிலே... அது மலைபோல பெரிதாகி ராட்சஷ நட்சத்திரமாக உருவெடுத்தது.

"யா..யா...யார் ந்நீ..?" அதனிடமிருந்து ஓங்கி ஒலித்தது குரல்.

ஆருவிற்கோ அச்சத்தில் இதழ்கள் திறப்பேனோ என்று ஒட்டி கொண்டது இதழ்கள்.

"ம்ம்ம்ம்... கேட்கிறே..ன் இ..இ..ல்லையா?! யார் நீ..நீ..? என் குழந்தைகள் விளையாடுகையில் தொந்தரவு செய்கிறாய். எ..எ.. என்ன தைரியம். உன்னை யார் இங்கே அனுமதித்தது. நீ எப்படி இங்கே வந்தாய் அதை முதலில் சொல்" அழுத்தமாய் வார்த்தைகள் வெளிவந்தது.

அதில் பெண்ணவள் வெளவெளத்துப் போனாள். நொடிகள் கரைய அவளையே பார்த்திருந்த அந்த ராட்சஷ நட்சத்திரம் சட்டென்று தன் பூத உடலை அசைத்தது. அதிலிருந்து வெளிப்பட்ட குட்டி குட்டி நட்சத்திரங்கள் பறந்து வந்து அவளை வெட்டுக்கிளி போல தாக்க ஆரம்பித்தது. அவற்றை தடுத்தவாறு பின்னோக்கி ஓடியவள் கால் தடுமாறி விழுந்தாள்.. கூடவே அவள் அணிந்திந்திருந்த அந்த மூன்றடுக்கு சங்கிலியும்.

'ஹைய்யோ.. இது பாட்டி ஆசை ஆசையாக தந்த பரிசாயிற்றே..' பதறியடித்து கொண்டு அதை குனிந்து எடுக்க முனைந்தாள். அதற்குள் அந்த குட்டி பட்சிகள் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. விரல் நுனியில் சிக்கியிருந்த சங்கிலி அவள் தடுமாறியதில் பறந்து போய் அந்த பூத நட்சத்திரத்தின் முன் விழுந்தது.

தன் முன் கிடந்த அந்த சங்கிலியை பார்த்ததும் அதனுள் மகிழ்ச்சி பிரவாகம் ஊற்றெடுத்ததோ..?! விரல் சொடுக்கி ஆராதனாவை தாக்கிய பட்சிகளை நிறுத்த சொன்னது. அது வரை கோரமாய் காட்சியளித்த அந்த ராட்சஷ உருவம் இப்போது அப்படியே சாந்தமாக மாறியது. அந்த சங்கிலியில் இருந்து சின்ன நட்சத்திர டாலரை மட்டும் தனியே பிரித்தெடுத்து ஆத்மார்த்தமாக இதழ் ஒற்றியது தான் தாமதம் அந்த இடமே வெண்புகை மண்டலமாக மாறியது. அந்த குட்டி டாலர் நட்சத்திரம் இப்போது உயிர் வந்து ராட்சஷ உருவமாக மாறியது.

ராட்சஷ நட்சத்திரம் ஆனந்த களிப்பில் அதன் புது துணையை அணைத்து கண் குளிர பார்த்து ரசித்தது. பின் இதனையே வியப்பாக பார்த்திருந்த ஆருவிடம்.. "இ..இது.. இ..இவ்..வன் தான் என்னோட உயிர்.. என்னோட காதல்.. நாங்க செஞ்ச ஒரு சின்ன தப்பால் நாங்க இவ்ளோ நாள் பிரிஞ்சி இருக்க வேண்டியதா ஆகிற்று.

அன்றைக்கு மட்டும் நாங்க அப்படி ஒரு தப்பை பண்ணாம இருந்திருந்தா இப்படி ஒரு நிலை வந்திருக்காது. ஆனால் இந்த பிரிவும் ஒரு வகையில நல்லது தான். ஏ..ன்..ன்..னா இந்த இடைப்பட்ட காலத்துல தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டோம். எங்களுக்குள்ள காதல் இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு".

'இது என்ன புது கதை?' என்று வியப்புடன் பார்த்திருந்த ஆருவிடம் தன் துணையை பிரிந்த நிகழ்வை சொல்லலானது... "அன்றைக்கு நாங்க ரெண்டு பேரும் சந்தோசத்துல இருந்தோம். அப்போ எங்களையும் அறியாம டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டோம். எங்க டான்ஸோட வேகம் இந்த விண்வெளியில் புழுதி புயலை உருவாக்கிற்று. அது மாமூனி அகத்தியரோட சீடர்கள் வழியை தடுத்து நிறுத்திடிற்று. அதனால அவங்க முன்னேறி செல்ல முடியல. அவங்க வந்த வழியே திரும்பி போயிட்டாங்க. அப்போ எங்களுக்கு இது பெரிய விஷயமா தெரியல. அதான் எந்த உயிருக்கும் ஆபத்து இல்லையே.. அப்படின்னு நினைச்சோம்.

ஆனா.. அதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு விஷயம் தெரிஞ்சி. அதை நினைச்சி நாங்க ரொம்பவே வருத்தப் பட்டோம். அகத்தியரை பார்த்து மன்னிப்பும் கேட்டோம். ஆன்..னா..அவர் ஏத்துக்கல. அப்படியென்ன குருட்டு காதல்.. 'காதல் வாழ வைக்கணும். அடுத்த நபரோட வாழ்வை கெடுக்கிறது மாதிரி நடந்துக்க கூடாது. காதல் பொறுப்பா இருக்க சொல்லும். பொறுக்கி மாதிரி சுயநலமா இருக்க சொல்லாது. நீங்களும் வாழ்ந்து அடுத்தவரையும் வாழ வைக்கணும். இப்படி காதல் போதையில் மூழ்கி சுற்றி இருக்கிறவங்களுக்கு துன்பத்தை கொடுக்க கூடாது.

உங்களால் எப்படி மேரியும் ஜூலியஸும் பிரிஞ்சி இருக்கிறாங்களோ அதே மாதிரி நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருப்பீங்க. எப்போ அவர்களை சேர்த்து வைக்க ஒரு தூதுவர் ஜூலியஸை பார்க்க வருவாரோ அப்போ தான் நீங்க ரெண்டு பேரும் சேர்வீங்க. அதுவரை உங்கள் காதல் வலிமையானதா இருந்தா... அந்த தூதுவர் உன் காதலரோட உயிரை மீட்பார். அவருக்கு தேவையான உதவியை நீங்க தான் செய்யணும்'. அப்படின்னு சொல்லிட்டு என்னோட துணையை குட்டியா மாற்றி கூடவே கொண்டு போயிட்டார்.

அவர் சொன்ன மாதிரி இப்போ தூதுவரா நீ வந்து தான் எங்களை சேர்த்து வச்சியிருக்கிற. மம்ம்ம்ம்... சொல்லு. இப்போ உனக்கு நாங்க என்ன செய்யணும். உனக்கு நாங்க கடமை பட்டிருக்கிறோம்".

அந்த ராட்சஷ நட்சத்திரம் சொல்லியதை வியப்புடன் கேட்டவள்.. சிந்தை தெளிந்து தனக்கு இங்கிருந்து செல்ல வழியை கொடுக்குமாறு கேட்டாள். உடனே குட்டி குட்டி மின் மினி பூச்சிகள் போல சில பறந்து வந்து ஒரு ஏணி போல மாறியது. அது அடுக்கடுக்காக உயர்ந்து நிலாவிலே முடிந்தது. "ம்ம்ம்.. ஏறிக்கொள். இந்த ஏணி உன்னை கொண்டு போய் சேர்க்கும்" கூறிய மாத்திரத்தில் அதன் துணையுடன் பறந்து சென்று விட்டது.

பரவசத்துடன் பெண்ணவள் அந்த ஏணியில் காலடி எடுத்து வைத்தாள்... அது ஒரு லிப்ட் போல மேலே தூக்கி சென்றது. இதை தூரமாய் பார்த்துக் கொண்டிருந்த பப்பி டாக்கும் தங்க மீனும்.. ஓடோடி வந்து அவளோடு இணைந்து கொண்டது.

"வா..வா..வ்... நானும் நிலாவிலே கால் பதிச்சிட்டேன்.. ஹா ஹா ஹா..." ஆரவார புன்னகையுடன் நிலாவிலே இறங்கி நடந்தாள் ஆரு. அப்போது அவளை நோக்கி வெண்மை நிற குதிரை போன்ற ஒன்று பாய்ந்தோடி வந்தது. அதன் தலைமுட்டியில் நீளமாக ஒற்றை கொம்பும்.. அடி வயிற்றுப் பகுதியில் பறந்து விரிந்த இரண்டு இறக்கைகளும்.. உடல் குதிரை தேகமுமாய் இருந்தது. இதை எதிர்பாராத ஆராதனா சுதாரிப்பதற்குள் அது தலையை குனிந்து கூரிய கொம்பால் ஆருவை முட்டி தூக்கி எறிந்தது.

"அ..அ..அ..ம்..ம்..மா.. மா.. மா.." பெரும் கூவலுடன் பெண்ணவள் தூரமாய் போய் விழுந்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top