எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 5

Vishnu Priya

Well-Known Member
#1
எனை எரிக்கும்
ஈர நினைவுகள்!
[5]

அடுத்த நாள் காலை,

மேனகா ஆசிரமம்... கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் ‘வெள்ளவத்தை’ எனும் இடத்தில் அமைந்துள்ள யாழினியின் தந்தை மகேந்திரனுக்கு சொந்தமான ஆசிரமம்.

அழகான அடர் நீல நிற சேலையில், விரிந்த தோகை போன்ற கூந்தலில்.. மல்லிகைப்பூச்சூடி...

அந்த மேனகை தான் இந்திரலோகம் விட்டு தரையிறங்கி வந்தாளோ? என்று பார்ப்பாரை ஐயங்கொள்ள வைக்கும் வண்ணம்.. ஆசிரமத்துக்குள் நடந்து வந்தாள் மாது.

யாழினி காலையிலேயே குளித்திருக்க வேண்டும். சோப்பு வாசனையுடன் மல்லிகை மலரின் வாசனையும்...

இதமான தண்ணீரின் குளிர்மையும்.. அவளைச் சூழ உணர முடியுமானதாகவே இருந்தது.

அவள் கைகளோ என்றுமே இல்லாதவாறு.. தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த ஹேன்ட்பேக்கின் வாரினை இறுகப் பற்றியிருந்தன.

காரணம்..அதற்குள் இருப்பது ஒரு சினிமாவொன்றையே எடுக்கும் அளவுக்கு பெறுமதியான விலை கொண்டதாயிற்றே??

ஆம், பையில் இருந்தது கணையாழியே தான்!!

“ஹை!!.. யாழினிக்கா!..”என்று ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த ஓர் குழந்தை,
ஆசிரம மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து கைகாட்ட,

அவள் நுழைவதை, விளையாட்டுப் பூங்காவில் உலகம் மறந்து விளையாடிக் கொண்டிருந்த மற்ற ஆசிரமக் குழந்தைகள் கண்டு கொண்ட மறு விநாடி...

அந்தக் குழந்தைகள் முகமெங்கும்.... வெள்ளந்தியான சிரிப்பு பரவலாயிற்று.


குழந்தைகள் அனைவரும் அவளிடம் பாய்ந்தடித்துக் கொண்டு ஓடி வர அவர்கள் உயரத்துக்கு மண்டியிட்டவள்,

“வாங்க.. வாங்க குட்டீஸ்..!!”என்றபடி, தன்னாலியன்ற மட்டும் காற்றில் அகல கை நீட்டி.. அனைவரையும் அணைத்துக் கொள்ள முயன்றாள் அவள்.

அதிலும் மூன்று வயதேயான ஓர் குட்டி வாண்டு, இடுப்பில் கைவைத்து நின்று,

பெரிய மனுஷி போன்ற தோரணையில்,

“எங்களுக்காக என்ன வாங்கி வந்திருக்கீங்க?”என்று ஆசையுடன் கேட்க, அந்தக் குழந்தை கன்னம் வருடி பதில் சொல்லும் முன்னம் குறுக்கிட்டது இன்னோர் குரல்.

மார்புக்கு குறுக்காக கை கட்டு நின்று எங்கோ பார்த்தவாறு, தன் கோபம் காட்டிய சிறுவனொருவன்,

“இப்போல்லாம் யாழினிக்கா.. எங்களை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க!!.. எங்களையெல்லாம் பார்க்கவே வர மாட்டேங்குறீங்க!!.” என்று சொல்ல,

அந்த சின்னஞ்சிறுசுகளின் கோபத்தையும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அவர்களது பரிசுத்தமான அன்பையும் ரசித்தாள் அவள்.

கை கட்டி நின்றவன் உச்சந்தலைக் களைத்து, மென்மையான குரலில் இவள் சொன்னாள்,

“அப்படியெல்லாம் இல்லைடா கண்ணா.. அக்கா வேலை அப்படி.. லங்கா வந்ததிலிருந்து.. உங்களையும், அப்பாவையும் பார்க்க முடியாதளவுக்கு வர்க் பிஸியில் அலைஞ்சிட்டிருக்கேன்.. இப்போ கூட ஒரு முக்கியமான வேலை தான்... இருந்தாலும் அப்படியே அப்பாவையும், உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு தான் ஓடி வந்துருக்கேன்..” என்று.

தாய், தந்தை அரவணைப்பில், அவர்கள் சிறகின் கீழ் சுருண்டு வளர்ந்திராத குழந்தைகளாயிற்றே அவர்கள்.

யாழினியின் வேலைப்பளுவை, பக்குவமாகவே புரிந்து கொண்டார்கள்.
ஹேன்ட் பேக்கிலிருந்து ஒரு பையை எடுத்து அவர்கள் முன் ஆட்டிக் காட்டியவள், “இங்கே பாருங்க.. நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு..?” என்று கேட்க,

அந்த பையில் இருந்த சாக்லேட் கண்டதும் இரட்டிப்பு சந்தோஷமாகிப் போனது அவர்களுக்கு.

“ஹை!! சாக்லேட்..!!”- என்று கண்கள் விரித்த குழந்தைகள் பையை வாங்கிக் கொண்டே ஓட, மண்டியிட்டமர்ந்திருந்தவளோ, தனக்கு புறமுதுகிட்டு ஓடும் குழந்தைகளின் செயல் கண்டு.. தலை சிலுப்பி சிரித்தாள்; பின் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்தாள்.

தூர சென்று கொண்டிருந்தவர்களை நோக்கி இரைந்த குரலில், “ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்குங்க.. சண்டை பிடிச்சிக்கக் கூடாது..”என்று இலவச அறிவுரை வேறு வழங்கியவள்,

புன்சிரிப்புடனேயே தந்தையை நோக்கி செல்லலானாள்.

அந்த ஆசிரமத்தின் நடைபாதைகளுக்குக் கூட ஓட்டுக்கூரை மூலம் நிழல் கொடுக்கப்பட்டிருக்க.. மிகுதி இடமெங்கும் பச்சைப் பசேலென்ற புற்களும்,
அலங்காரத் தாவரங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன.

பெஸேஜில் நடந்து வந்தவளின் முன்னே, தியான மண்டபத்துக்கு வெளியே எதிர்ப்பட்டார் ஆசிரம ஆயா லக்ஷ்மியம்மா.

அவரைக் கண்டதும் மரியாதை நிமித்தம் இதழ்கள் மலர, கையை ஆட்டிக் கொண்டே வந்தவள், “ஹாய் லக்ஷ்மியம்மா.. எங்கே அப்பா..?” என்று கேட்டாள்.

“தியான மண்டபத்துல இருக்காரு..”- வெளியே நின்று பேசினால் கூட உள்ளே கேட்டுவிடுமோ என்ற அச்சத்தில்.. ரொம்ப ரொம்ப இரகசியமான குரலில் சொன்னார் லக்ஷ்மியம்மா.

அவளும் அவரைப் போலவே, இரகிசயம் பேசும் ஹஸ்கி குரலில், “ஓகே..” என்றவளாக தியான மண்டபத்தை நோக்கி நடக்க,

நெஞ்சமெல்லாம் பதற லக்ஷ்மியம்மாவும், “இப்போ போனா.. ஐயா கோபப்படுவாரு..”என்று சொல்ல, பக்கென கிளுக்கி நகைத்தாள் யாழினி.

வாய் மூடி சிரித்தவள், “ஹஹஹா... அது மத்தவங்களுக்கு.. என் முன்னாடி அப்பா கோபம் ஒருநாளும்.. செல்லாது..”என்று கட்டை விரல் ஆட்டி உரைத்தவள்,

மகேந்திரனின் கோபத்துக்கு சிறிதும் அஞ்சாமல்.. வெளியே தன் பாதணிகளைக் கழற்றி வைத்து விட்டு, ஒலியெழுப்பாமல் மண்டபத்துக்குள் நுழைந்தாள் .

பத்மாசன முறையில் அமர்ந்து, தொடைகளின் மேல் விரல் வைத்த வண்ணம், கண்கள் மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் அவளது தந்தை.

அந்த மண்டபம் முழுவதும், அவள் தந்தையின் ‘ஓம்’ மந்திரம் எதிரொலியைத் தோற்றுவித்ததோடு அல்லாமல்,

கேட்பாரையும் ஈர்க்கும் ஒருவிதமான காந்த சக்தியையும் அந்த அறை முழுவதும் பரப்பியிருந்தது .

அரவமே எழுப்பாமல்... அடி மேல் அடி வைத்து வந்தவள்,

தந்தை ‘ஓம்’ மந்திரம் கணிப்பதற்காக திறந்திருந்த இறுதி விரலையும் மடிக்கப் போகிறார் என்று தெரிந்ததும்,

அவர் முன்னிலையில் சம்மணம் கொட்டி அமர்ந்தவள் முகத்துக்கு நேராக, மென்னகையுடன் நின்றாள்.

தியானம் முடிந்ததும் அமைதியே உருவாக.. அவர் கண் திறந்ததும், அவர் முதலில் கண்டது அவள் முகம்.

அவளை, எதிர்பார்த்திராத தந்தை.. கண்டதும் அதிரக்கூடும் என்று எண்ணி ஆசையோடு விழிகள் திறந்து காத்திருந்தவள் ஏமாற்றமடைந்தாள்.

எந்தவிதமான அதிர்ச்சியையும், வியப்பையும் காட்டவேயில்லை அவர் முகம். மாறாக சாந்தத்துடன் அவளை நோக்கி பாசத்துடன் புன்னகை சிந்தியவர்,

“அப்பாவை இப்போ தான் பார்க்கணும்னு தோணிச்சா?..”என்று தான் கேட்டார்.

எந்த வயதிலும் தந்தைக்கு மகள் குழந்தையன்றோ? அவளும் தந்தை முன்னிலையில் குழந்தையாகிப் போனாள்.

அவள் இதழ்கள் வளைந்து அலுத்துக் கொள்ள, “நான் வந்து நின்னது உங்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸாகவே இல்லையாப்பா?..”என்று கேட்க,

அவளது தந்தையோ.. வளைந்த உதடுகளை... சிரிப்பது போல இழுத்துப் பிடித்தவராக,

“ம்ஹூஹூம்.. நீ.. குழந்தையா இருக்கும் போது எடுத்து வைச்ச எட்டின் சத்தத்ததையே என்னால் இன்னும் மறக்க முடியல.. இப்போ மட்டும் மறப்பேனா சொல்லு??.. மண்டப வாசல்ல செருப்பைக் கழற்றி வைக்கும் ஓசையிலேயே அப்பாவுக்கு வந்திருப்பது யார்னு புரிஞ்சிருச்சு!!..”என்றார் யாழினியின் தந்தை.

அதைக் கேட்டு , கைகள் உதறி, மழலைகள் போல சிணுங்கினாள் ஓர் அழகிய இளம் பெண்.

தன் கன்னம் கிள்ளும் தந்தை கைகள் தள்ளி விட்டவளாக இவளும், “போங்கப்பா!!.. தியானம் செய்றதுனால உங்க ஐம்புலன்களும்.. விழிப்பா இருக்கு ஓகே.. பட் எனக்காக ஷாக்கான மாதிரி.. அட்லீஸ்ட் நடிச்சிருக்கலாமேப்பா..”என்று சொல்ல,

அவரது மென்னகை பூத்த இதழ்கள் இன்னும் சற்றே திறந்தன. பிறகு அந்த விரிந்த நகை.. ஒலிகள் சிந்தும் சிரிப்பு நகையாக மாறியது.

“ஹஹஹா அடுத்தவாட்டி நடிச்சிட்றேன்.. போதுமா?”- மகள் உச்சந்தலையில் கை வைத்து அவள் ஆறுதலுக்காக சொன்னார் தந்தை.

அதன் பிறகே.. அங்கு வந்ததன் நோக்கம் ஞாபகம் வர, ஹேன்ட் பேக்கில் எதையோ கையிட்டுத் துலாவியவளாக,

“ம்.. இந்தியாவுல இருந்து வரும் போது.. உங்களுக்கு ஒண்ணு எடுத்து வந்தேன்ப்பா.. ஆனால் வந்ததுமே உங்களை ஹாஸ்பிடலில் வைச்சு பார்க்கும்படியானதனால.. என்னால இதை அப்போ கொடுக்க முடியலை.. அப்புறம் இடையில் வந்த வர்க்கில் மறந்துட்டேன்..இன்னைக்கு காலையில் தான் ஞாபகம் வந்தது.. சரி இதை கொடுத்துடலாம்னு அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்” என்று பேசிக் கொண்டே தேடுதல் பணியில் தீவிரமாக இறங்கியிருந்தாள் அவள்.

“என்னம்மா?..”- அவரும் சுருங்கிய கண்களால், அவள் ஹேன்ட்பேக்கைத் துலாவிய வண்ணமே கேட்டார்.

தன் ஹேன்ட்பேக்கினுள் இருந்து , ஒரு தங்க அருணாக்கயிறை எடுத்து, அவர் முன் நெடுஞ்சாண் கிடையாகத் தொங்க விட்டவள்,

புன்னகையுடன், “இது தான்ப்பா..!!” என்று சொல்ல
இதுவரை அவர் முகத்தில், தியானத்தில் விளைந்திருந்த அமைதி சிறுகச் சிறுக காணமலாகிப் போனது.

முகம் இறுக, கைகள் நடுங்க.. அந்த தங்க அருணாக்கயிறை லபக்கெனப் பற்றியவர், கண்கள் உச்சபட்ச பதற்றத்தில் கலங்கவாரம்பித்தது.

அதைப் பார்த்து யாழினிப் பெண் தான் அதிர்ச்சியாகப் போனாள்.

சற்று முன் தந்தை முகத்தில் இருந்த அமைதியும், ஆசுவாசமும் எங்கே?

சட்டென அவள் கைச்சந்தைப் பற்றிக் கொண்டவர், “இ.. இது.. இது.. எப்படி உன்கிட்ட வந்தது??..”என்று பதறியபடி கேட்ட கேள்வி..

அவளுக்கு குழப்பத்தைத் தோற்றுவித்தாலும், எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது, நிர்மலமான முகத்துடன்,

“அங்கே மதுரையில் கீழடி எக்ஸ்கவேஷன்ல இருந்தப்போ.. ஒருநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போயிருந்தேன்.. அங்கே ‘வெறும்மேல்’ சித்தர்னு ஒரு சித்தர்ப்பா.. அவர் தான் இதை உங்ககிட்ட கொடுக்க சொல்லி கொடுத்தாரு..”என்றார்.

“எ.. என்ன பேர் சொன்ன?”- தட்டுத் தடுமாறி வந்தது மகேந்திரனின் குரல்.
அவளும் தந்தை கேட்பதன் உள்நோக்கம் புரியாமல்,

“வெறும்மேல் சித்தர்ப்பா.. மேல் சட்டை எதுவும் போடாம.. கீழே ஒரு துண்டு மட்டும் கட்டிக்கிட்டு.. வெறும் மேனியுடன் இருக்குறதனால.. எல்லாரும் அவரை வெறும்மேல் சித்தர்னு கூப்பிடுறாங்க.. பட் அவர் யாரு? அவர் உண்மையான பேர் என்ன?.. எங்கேயிருந்து வந்தார்னு யாருக்கும், எதுவும் தெரியலைப்பா..”என்று தனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தந்தையிடம் சொன்னாள் அவள்.

அந்த வெறும்மேல் சித்தருக்கும், தந்தைக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லையாயினும்.. ஏதோ சீரியஸான விஷயமொன்று உள்ளே பதுங்கியிருப்பது மட்டும் புரிந்தது அவளுக்கு.

ஆனால், அவருக்கோ உள்ளே ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. இந்த தங்க அருணாக்கயிறைக் கொடுத்த நபர்... யாழினியை சந்தித்திருக்கவும் கூடுமோ??

உண்மைகள் அனைத்தையும் யாழினியிடம் உரைத்திருக்கவும் கூடுமோ?
‘தந்தை’ என்றெண்ணி.. யாழினி தன்னைப் பார்க்கும் பார்வையில் கடுகளவாவது மாற்றம் உண்டோ? என்று களேபரத்துடன் ஆராய்ந்தது அவர் கண்கள்.

அவள் முகத்திலிருந்து எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை மகேந்திரனுக்கு.

வெறும்மேல் சித்தர் பற்றி வாய் விட்டு கேட்க நாடியவர்,

“அவன்.. அவர்.. அவர் வேற என்ன சொன்னாரு..?. சொல்லு யாழினி!! ..அவரு வேறு என்ன சொன்னாரு...?” என்று தந்தை வெறும்மேல் சித்தரை ஒருமையில் அழைத்து பன்மைக்கு மாறியதையும் கூட உன்னிப்பாக அவதானித்தாள் அவள்.

அங்கே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்து நிகழ்ந்தவை அப்படியே, அந்த பாவையின் கண்முன் விரிந்தது.

தேக்கு போன்ற உடல் வெறும்மேல் சித்தருக்கு. சிவனை நினைவுகூரும் ஜடாமுடியுடனும், கழுத்தில் உருத்திராட்சை மாலையுடனும்,

நெற்றி, கைச்சந்து எங்கிலும் திருநீறுடனும் தெய்வ கடாட்சத்துடன் அங்கே மண்டபத்தில் கண்கள் மூடி அமர்ந்திருந்த வெறும்மேல் சித்தர் மீண்டுமொருமுறை அவள் கண் முன்னே வந்து போனார்.

அவர் வாய் திறந்து நன்மொழி கூறுவதற்காக, அவரிடம் இருந்து கடைக்கண் பார்வையிலாவது ஆசி பெறுவதற்காக பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருக்க,

அவரோ தன் கடுந்தவம் களைந்தாற் போன்று.. படாரெனக் கண் விழித்து, சடாரென எழுந்து,

கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அவளை நோக்கித் தான் வந்தார்.

தொடர்ச்சி கீழே....
 
Last edited:

Vishnu Priya

Well-Known Member
#2
சற்றும் எதிர்பாராத வகையில், ஓர் தபஸ்வியொருவர் தன் முன்னிலையில் வந்து நிற்கவும், மங்கையவளோ பயந்து பின்வாங்கி.. நெஞ்சில் கை வைத்து நிற்க,

அந்த வெறும்மேல் சித்தரின் கண்கள் அவளைக் கனிவும், பாசமும், பரிவும் ஊசலாட நோக்கியதெல்லாம் ஒரு சில கணங்களுக்குத் தான்!!

தன் இடுப்பிலிருந்து அருணாக்கயிறை சரேலென உருவியெடுத்து, அவள் கைகளில் திணித்தவரை, இவள் புரியாமல் பார்க்கவும்,

தனக்கே உரித்தான இதயம் பிளக்கச் செய்யும் கிடுகிடு குரலில்,

வருஷங்கள் பல ஆயினும்,

யுகங்கள் பல போயினும்..
உற்றவன் பொருள்..

உற்றவனையே சாரும்..” என்று இயம்பியவர்,

“இதை உன் தாயுமானவரிடம் கொடு..”என்றும் சொல்ல, தன் உள்ளங்கையில் இருந்த அருணாக்கயிறையும், அவரையும் மாறி மாறிப் பார்த்தாள் அவள்.

யாழினிப் பெண்ணோ இறைவழிபாட்டில் எள்ளளவு நம்பிக்கையே வைத்திருப்பவள்.

பாவம், அவளுக்கு சித்தர் சொன்னது புரியவுமில்லை. இருப்பினும் அவர் தந்ததை மறுதலிக்கவும் மனம் வரவில்லை.

அவள் நம்பிக்கையின்மையை அப்படியே படித்தாற் போன்று.. தன் தாடையைத் தடவிக் கொண்டே, அவளைப் பார்த்து புன்னகைத்தவள்,

அவளை வலம் வந்து கொண்டே உரத்த குரலில்,

காதல் பிறப்பதும், இறப்பதும்

பிறந்திடாதிருப்பதும்
அதை மறப்பதும், நினைப்பதும்
மறந்ததைத் தெளிந்ததும்..
மன்னவனோடு நீ
இரண்டறக் கலப்பதும்

எல்லாம் அவன் செயலே!!” என்றவர், அதன்பின் அங்கு நில்லாமல் நடந்து சென்று கொண்டேயிருந்தார் அவர்.

ஏன் அந்த சித்தர்.. அவளைப் பார்த்து காதல் பற்றி சொன்னார்? எதை மறந்தாளாம்?.. மறந்ததைத் தெளிவதற்கு? எந்த மன்னவனோடு தான் அவள் இரண்டறக் கலக்கப் போகிறாளாம்?

ஒன்றுமே புரியவில்லை அந்த தொல்லியலாளப் பெண்ணுக்கு.

அவளோடு கூட வந்த சக தோழி தான்.. அவளையும், சித்தரையும் வித்தியாசமாகப் பார்த்தவளாக,

“அது சரி.. எந்த சித்தர் தான் புரியுற மாதிரி பேசியிருக்காங்க..”என்றதும் கூட நினைவில் வந்தது அவளுக்கு.

ஆனால் வெறும்மேல் சித்தர் இறுதியாக அவளைப் பார்த்து இயம்பியவைகளை அவள் தந்தையிடம் சொல்லவேயில்லை.

அவள் ஒருவேளை சித்தர் தன்னிடம் இயம்பியவைகளை தந்தையுடன் பகிர்ந்திருப்பின்.. இந்தக் கதையின் போக்கும் வேறாக மாறியிருக்கும்!!

ஒரு சில கணங்கள் தந்தையின் கண்கள் தீவிர யோசனை பாவத்தைக் காட்டியது. மறுவிநாடி அதிலிருந்து மீண்டு வந்தவர்,

அவசர கதியில், “அவரை எங்கே பார்த்ததா சொன்ன?”என்று தான் கேட்டார்.
பெண்ணவளோ, புருவங்கள் இரண்டும் அம்பு போல இடுங்கி விரிய, அமைதியான குரலில்,

“மதுரை மீனாட்சி அம்மன் கோவில்லப்பா.. ஏனோ தெரியலைப்பா..நான் அதிக சாமி நம்பிக்கை இல்லாதவள் தான்.. ஆனாலும்.. அவரை திரும்ப ஒரு முறை பார்க்கணும்னு ஒரு எண்ணம் ..எனக்குள்ள இருந்தது..... அதனால் அடுத்த நாள் அவரைத் தேடிப் போனேன்.. ஆனால் அவர் அங்கே இல்லை.. விசாரிச்சப்போ வெறும்மேல் சித்தர்.. எங்கே போறார்னு யார்ட்டயும் சொல்லாமல் ராத்திரியே கிளம்பி போயிட்டதா சொன்னாங்க..” என்று கூற,
மகேந்திரனின் விழிகள் மெல்ல தாழ்ந்து கொண்டன.

‘ஏனோ தெரியலைப்பா.. அவரை திரும்ப ஒரு முறை பார்க்கணும்னு ஒரு எண்ணம் ..எனக்குள்ள இருந்தது’ என்று மகள் உரைத்தது ஒரு பக்கம் கவலையைக் கொடுத்தாலும்,

மறுபக்கம் அப்படித் தோன்றுவது தானே இயற்கை!! என்ற எண்ணமும் தோன்றி மறைந்தது.

தந்தை விழிகள் எல்லாம் சிவந்து, ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டவராக இருப்பதைக் கண்டதும், உள்ளுக்குள் சிறு ஆற்றாமை தோன்ற,

அவர் முன்னங்கை மேல், தன் கை பதித்தவள், அவர் விழி பார்த்து,
“என்னாச்சுப்பா? ”- என்று கேட்டாள்.

யாழினி தந்தையின் முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்புப் பரவ,

கவலை அப்பிய குரலில், “ஒண்ணுமில்லைம்மா.. இந்த அருணாக்கயிறைப் பார்த்ததும்.. ஏதோ பழைய நினைவுகள்..!! வெறும் மேல் சித்தர் சரியா தான்மா சொல்லியிருக்காரு.. உற்றவன் பொருள்.. உற்றவனையே சாரும்னது... சரியா தான் இருக்கு..” என்று எதையோ தீர யோசித்தவர்,

அந்த அருணாக்கயிறை தன் உள்ளங்கையில் பொத்திக் கொண்டார்.

பின் தன் மகளின் விழிகளை ஆதுரத்துடன் ஏறிட்டவர், மீண்டுமொருமுறை கேட்டார்,

“அவர் வேற ஏதாவது சொன்னாராமா?”என்று.

“இல்லைப்பா..”- மென்மையாகவே மறுதலித்துத் தலையாட்டினாள் இவளும்.
தந்தையின் அமைதியான மூடைக் கெடுத்து விட்டோமே என்று தோன்றினாலும்,

தந்தையாகவே தன்னிடம் மனம் திறந்து எதையும் சொல்ல முன்வராத பட்சத்தில், தானும் எதையும் சென்று தூண்டித் துருவிக் கேட்கப் போவதில்லை என்று தீர்மானித்தவளுக்கு,

அந்தப் பணக்கார வள்ளல் யாதவ் மகாதேவனுக்கு, ஒப்படைக்க வேண்டிய கணையாழியின் ஞாபகம் வந்தது. அதனால் வலுக்கட்டாயமான புன்னகையை இதழோரம் தவழ விட்டவள்,

ஹேன்ட்பேக்கினை மீண்டும் தோள்களில் மாட்டியவளாக,

“சரிப்பா.. அப்போ நான் கெளம்புறேன்!!” என்றவளாக எழுந்தாள்.

பெரியவரும், சின்ன சிரிப்புடன் விடை கொடுக்க, அவர் கைகளோ அந்த அருணாக்கயிறைப் பலமாகப் பற்றிப் பிடித்திருந்தது.

அவர் இதழ்களோ, அவரையும் அறியாமல், “யாழினி என் பொண்ணு!!”என்று உரிமையுடன் முணுமுணுக்க, அவர் கண்கள் வாஞ்சையுடன்...

செல்லும் மகளையே அவதானித்துக் கொண்டிருந்தது.


******
முற்பகல் பொழுது...

கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்திருக்கும் ஓர் நாற்சந்தித் தெரு.

அங்குமிங்கும் தன் தேவைகளுக்காக.. ஜெட் வேகத்துடன் நகர்ந்து கொண்டிருந்த மக்களுடன், அங்கே தான்.. கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்தாள் யாழினி.

அவள் இடது கையோ, ஹேன்ட்பேக்கின் வாரினை இறுகப்பற்றியிருந்தது.

அவள் பையிலிருக்கும் நூற்றியெண்பது கோடி ரூபா பெறுமதியான அந்த மோதிரத்தை உற்றவனிடம் கொண்டு போய் சேர்க்கும் வரை அவள் மனதில் திகில் மூட்டம் சூழ்ந்திருந்தது.

யாதவனின் கொழும்பில் இருக்கும் தலைமை செயலகம் நோக்கித் தான் அந்த சுந்தரப் பெண்ணின் பயணம்!!

அதுவரை அந்த மோதிரத்தைத் திரும்ப உற்றவனிடம் கொடுக்கும் வரை அவள் முகத்தில் மருந்துக்கும் கூட ஆசுவாசம் என்பது இருக்கவில்லை.

ஆயினும், அவளது வலது கையிலிருந்த செல்லோ அவளது காதில் அடைக்கலமாகியிருந்தது.

அவளோடு செல்லில் பேசிக் கொண்டிருக்கும் மறுமுனையாளன், அவளது மனம் கவர்ந்த கண்ணாளன் அல்லவா?

ஆகையால் யாழினிப் பெண்ணுக்கு உலகமே மறந்து தான் போனது.

அவளைக் கடந்து யார் போனார்? யார் வந்தார்? என எதுவுமே அவள் சிந்தனையில் பதியவுமில்லை;காதலன் குரல் தேனாக காதினுள் இனிக்க மற்றவை அவளுக்கு தேவையுமில்லை.

ஆனால், அவளது பேச்சும் கூட யாதவனின் வருகையினாலும், அவன் தந்த பரிசினாலும் நேற்று நிகழ்ந்தவை பற்றியே அமைந்திருந்தது.

பேசிக் கொண்டே அந்த ப்ளாட்பாரத்தில், மனிதர்களோடு இடித்து விடாமல், கொஞ்சம் வளைந்து நெகிழ்ந்து கொடுத்துக் கொண்டே நடந்தவள்,

ஆச்சரியம் தாள முடியாத குரலில், விழிகளை அகல விரித்து, “யெஸ் ராம்.. என்னால அதை இன்னும் கூட ஜீரணிக்க முடியலைடா... வீட்டுக்கு வந்தது ஓக்ஷனில் விலை போன ரிங்க்!!.. அதுவுமில்லாமல் சாக்லேட் ஓர்க்கிட் வேற??.. மெக்ஸிக்கோவிலிருந்து ஃப்ரஷ்ஷா வந்திருக்குன்னா.. அது சும்மாவா?? வெரி எக்ஸ்பென்ஸிவ் ராம்!!.. எனக்கு.. ரொம்ப பயமா இருக்கு ராம்...!!” என்று இறுதியில் அச்சத்தில் பம்மிய குரலில் முடித்தாள் மங்கை.


எப்போதும் அவளை சீண்டிப் பார்க்கும் அவளது ஸ்ரீராமனுக்கும், யாழினிப் பெண்ணை அந்நொடியும் சீண்டிப் பார்க்கும் எண்ணமோ?

இன்றேல், சின்ன விஷயத்துக்கெல்லாம் பயம் என்பவளை டைவர்ட் பண்ணும் எண்ணமோ?

இல்லை இரண்டுமே தானோ?

அவன் குரலோ.. போலியான ஆச்சரியம் சிந்தும் குரலில்,

“என்ன?? ராணி மங்கம்மாவுக்கு பயமாஆஆ..?”என்று கேட்க, அவளுக்கு வந்ததே கோபம்!!

நல்ல வேளை ராம், அந்த அழகான முன்கோபக்காரியின் முன்னே இல்லை.
இருந்திருந்தால்.. சீரியஸ்னஸ் தெரியாமல், உசுப்பேத்தும் ராமின் தலைக்கே ஹேன்ட்பேக்கால் இரண்டு போடு போட்டிருப்பாள்!!

நடுவீதி என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டே, “ர்ர்ராம் வ்விளையாடாதே.. நான் சீரியஸா தான் சொல்றேன்.. எனக்காக எதுக்கு அவன் இத்தனையும் பண்ணனும்??...”என்று அவள் அடக்கத் துணிந்தும், முடியாத கோபத்துடன் சீற,

அந்த இதமான முற்பகல் காலைப்பொழுதில், அவள் பின்னே நிழலாடத் தொடங்கியது.

அந்த நிழலின் கதகதப்பில்.. தன்னையும் அறியாமல் இதம் காண முற்பட்டது அவள் உள்ளமும், உடலும்!!

ஏதோ தன்னைச் சூழ ஓர் அரண் போல.

மறுமுனையிலிருந்த ராமோ... எதையும் நேர்மறையான விதத்தில் கையாண்டு பழக்கப்பட்டிருப்பவனாயிற்றே??

ஆதலால், தன் முன்கோபக்குயிலை சமாளிக்கும் வண்ணம்,

“ஹேய் கூல் யாழினி.. நீயோ ஃபேமஸ் ஆர்க்கியோலஜிஸ்ட்.. ஸோ.. ஏதாவது ஆர்க்கியோலஜி சம்பந்தமா.. உன் உதவி அவருக்கு தேவைப்பட்டிருக்கலாம்.. அதனால் உன்னை இம்ப்ரஸ் பண்ண.. இப்படி அவர் வழியில் ஏதாவது செய்யறாரோ??என்னவோ..??” என்று ராமும் சொல்ல,

சட்டென அவள் மனக்கண்முன் வந்து போனது, நேற்று ஏலத்தில் வைத்து அந்த யாதவன் பார்த்து வைத்த ஆளை உருக்கும் பார்வை!!

ஸப்பாஆஆ..!! என்ன மாதிரியான பார்வை அது?? உடலுக்குள் நுழைந்து, இதயம் அடைந்து.. ஏதேதோ நினைவுகளை, உணர்ச்சிகளைக் கிளப்பி விடும் பார்வை அல்லவா அது??

என்னமோ.. அவளுடைய உச்சாதி பாதம் வரை.. அவனுக்குத் தான் உரிமை என்பது போல அவன் பார்த்த பார்வை???

நடுவீதியில் வைத்து அந்தப் பார்வை ஞாபகம் வர, ஒரு கணம் உடல் கூசி, புல்லரித்து ஏதோ செய்தது யாழினுக்கு.

நாகரிகமான பார்வையா அது?? அதை தன் காதலனிடம் வெளிப்படுத்த விரும்பாது போனாள் அந்த சுந்தரப் பெண்!!

அந்த நாற்சந்தி வீதியில், டிராஃபிக் லைட்களில் சிவப்பு விளக்கு ஒளிர, வாகனங்கள் எல்லாம் நிற்க,

பாதசாரிகள் கடப்பதற்கான அறுபது நொடி நேரமும் கவுன்ட் டவுனில் ஒளிபரப்பாக்கப்பட,

மெல்ல இறங்கி கடவையில் கால் வைத்து நடந்து கொண்டே,

“எதுன்னாலும் டிரெக்ட்டா டீல் பண்ண வேண்டியது தானே..??”என்று கேட்ட அந்நொடி தான் அந்த விசித்திரம் நடந்தேறியது.

ஓர் வலிய முரட்டுக்கரம்.. சேலை அணிந்திருந்தவளின் வெற்றிடையில் ஊர்ந்து,

நச்சென்று அழுந்தப் பதிந்து..அவள் இடுப்பை உரிமையுடன் தொட்டு இழுக்க,
அந்த கணம் சாலை விதிகளை மீறிய ஓர் அதிநவீன காரொன்று மின்னல் வேகத்தில்,

அவளைக் கடந்து செல்ல,

அந்த அதிர்ச்சியில் கையிலிருந்த ஃபோன் நழுவி விழுந்து, பாகம் பாகமாக உடைந்தும் போனது.

சடாரெனத் திரும்பி.. தன் இடையில் உரிமையுடன் இன்னும் கைகள் பதிந்திருக்கும் உரிமையாளனைப் பார்த்தாள் யாழினி.

மிகமிக அருகாமையில்... அவள் இதழின் மூச்சுக்காற்று, அவன் பரந்த கழுத்தில் பட்டு மோத,

அவனது சுகந்தமான சுவாசம்.. இவள் நுரையீரல் தீண்ட,

அவனது திண்ணிய மார்புகள், இவளது தனங்களோடு தில்லாய் நின்று பொருதிட,

அனல் தெறிக்கும் விழிகளுடன் நின்றிருந்தான் அவன்!!

அவன் சாம்ராட் யாதவ் மகாதேவன்!!

அவனது அடர்ந்த கருநயன விழிகள் கோபத்துக்கும் மேலாக,

தனக்குரியவளை இழந்து விடுவோமோ என்ற அச்சமும், இன்னும் ஏதோ ஓர் உணர்வு சுடர் விடுவதையும் அண்மையில் இருந்து பார்த்தாள் அவள்.

அவனைக் காணும் போது ஏதேதோ செய்கிறது. இடுப்பில் அழுந்தப் பதிந்த விரல்களின் அழுத்தம்.. சொல்ல முடியாத உணர்வலைகளைத் தோற்றுவிக்கிறது.

இருப்பினும் ஏன்?? என்ற கேள்விக்கு விடை புரியாமல், அவன் அணைப்பில், நாற்சந்தியில் நின்றிருந்தாள் அவள்.

அந்த கணம்.. அவளுள் எழுந்த மாய உணர்வுகளை அறுக்கும் வண்ணம் கேட்டது யாதவனின் தில்லான குரல்!!

அன்று அவள் மட்டும் கேட்க கவிதை பாடிய அதே குரல்!!

அதி உச்ச கோபத்துடன் வாய் திறந்தவன் சொன்னான், “உனக்கு வேணும்னா ராமோட கால் பேசுறது முக்கியமா இருக்கலாம்.. ஆனால் எனக்கு!!... உன் உயிர் முக்கியம்!!”என்று.

அவன் தீட்சண்யமான கண்களில் கோபத்துக்கும் அப்பால், அவளை இழந்து விடுவோமோ என்று துளிர்விட்ட அச்சம்.. அவளைக் கட்டிப் போட.. அவனது விழிகளையே மலங்க மலங்கப் பார்த்த வண்ணம் நின்றாள் மாது!

தொடரும்..
 

Vishnu Priya

Well-Known Member
#4
தாமதமான அத்தியாயம் வந்ததற்கு மன்னிச்சுக்குங்க. போன யுடி க்கு லைக், கமெண்ட் பண்ண அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னா அடுத்த யுடி சீக்கிரமே போடுவேன்.நன்றி.. நன்றி.. நன்றி.
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates