Thoorika Saravanan
Member
கதையை பற்றி...
எந்நாளும் என் பொன்வானம் நீ!
இது ஒரு antihero கதை என்று சொல்லலாம். ஆனால் இந்த antihero சில கதைகளில் வருவது போல் நாயகிக்கு stalking தொல்லை கொடுக்க மாட்டான். லவ் torture கொடுத்து திருமணம் செய்து கொள்ள சொல்லி மிரட்ட மாட்டான். திருமணம் இல்லாமல் physical relation க்கு நாயகியை வற்புறுத்த மாட்டான். அவள் மறுத்தால் அவள் உறவுகளை கடத்தி வைத்து மிரட்ட மாட்டான். சொல்ல போனால் இவனை போல் antihero வை நாம் நம் வாழ்க்கையில் பார்த்து இருக்கலாம். நம் அப்பாவாக பெரியப்பாவாக சித்தப்பாவாக மாமாவாக அண்ணனாக தம்பியாக ஏன் கணவனாக கூட பார்த்திருக்கலாம். சிலர் பக்கத்து வீட்டில் நண்பர்களின் உறவுகளில் பார்த்து இருக்கலாம்.
நாயகன் antihero. நாயகி எப்படி...இவள் பாரதி கண்ட புதுமை பெண்ணெல்லாம் இல்லை... ஒரு சராசரி மத்திய தரக் குடும்பத்தை சேர்ந்த பெண். அதுவும் இளமையான நாயகி அல்ல. இந்த கதையில் நாயகனுக்கு ஐம்பது வயது. நாயகிக்கு நாற்பத்தி ஐந்து வயது. எனவே இன்றைய 2 k kids போல் என்னை திட்டி விட்டாயா, மரியாதை குறைவாக நடத்தி விட்டாயா, என் தன்மானத்தை சீண்டி விட்டாயா இந்தா பிடி டைவர்ஸ் என்னும் நாயகி அல்ல இவள்...
இப்போது ஒரு குட்டி டீஸர்முக நூலில் ஏற்கனவே போட்ட டீஸர் மற்றும் புது டீஸரையும் இங்கே பதிவு செய்கிறேன்.
முன்னோட்டம் 1
நிச்சயம் செய்கையில் மோதிரம் மாற்றிக் கொண்ட போதும் அவன் அவளுக்குக் கழுத்துக்குச் சங்கிலி போட்ட போதும் யதேர்ச்சையாகப் பார்வைகள் உரசினாலும் அவன் பெரிதாக எதையும் காட்டி கொள்ளவில்லை.
எல்லா சடங்குகளும் முடிந்து புகைப்படங்கள் எடுத்து முடித்த பின் இருவரும் அமர்ந்து கொள்ள இயல்பாகக் கேட்பது போல் “போன் இருக்கா உன்கிட்ட?” என்று லேசாக அவள்புறம் சாய்ந்து வினவினான்.
அவனது ஆளுமையும் கம்பீரமுமான குரலில் கொஞ்சம் மயங்கினாலும் இத்தனை நாள் அலைக்கழிப்பும் மனதில் இருந்ததால் “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க” என்று சொல்லத் துடித்த நாவை அடக்கி “ம்ம்” கொட்டினாள்.
“நம்பர் சொல்லு!” என்றான் அதிகாரமாக...
முடியாது என்றால் என்ன செய்வான் என்று தோன்றினாலும் இதழ்கள் அதன் போக்கில் எண்களை உச்சரித்தன.
“எப்போ வேணா கால் பண்ணலாம்ல…நீயென்ன வேலைக்கா போறே? நான் ஃப்ரீயா இருக்கிறப்போ கூப்பிடுறேன்” என்று கூறியபடியே எண்ணை அவன் அலைபேசியில் பதித்து உள்ளே வைத்து கொண்டான்.
அவளுக்கு அதிர்ச்சியில் பேச வாய் வரவில்லை.அடுத்து யாரோ வந்து அவர்களை சாப்பிட அழைக்க மற்ற நினைவுகளைப் புறந்தள்ளி விட்டு எழுந்து அவன் பின்னால் போனாள்.
இரவு தனிமையில் யோசிக்கையில் ஒரு வேளை அவள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ என்று தோன்றிற்று அவளுக்கு…அவளுக்கும் வேலைக்கு செல்வதில் பிடித்தம்தான்...அவன் பேசினால் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
நேரமில்லையோ அல்லது என்ன காரணமோ நிச்சயம் முடிந்து ஊருக்குச் சென்ற பின் இரண்டு நாட்கள் கழித்தே அவளை அலைபேசியில் அழைத்தான்.அதன் பின் நாள்தோறும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்…மணிக் கணக்கில் எல்லாம் அல்ல…பொதுவான பேச்சுக்கள்... கல்யாணம் குறித்து... உடை எப்போது எடுப்பது... பத்திரிக்கை மாதிரி என்ன... எத்தனை பத்திரிக்கை வேண்டும்... கல்யாணச் சாப்பாடு மெனு…இப்படியாக...
மனோகரி தைரியமான பெண்தான்… ஆனால் கமலக்கண்ணனிடம் பேசுகையில் ஏனோ அவளுக்கு பயமாகத்தான் இருந்தது... ஆளுமையான அவன் குரலா…அல்லது நிச்சயத்தின் போது அவன் பேசிய வார்த்தைகளா… கொஞ்சம் சட்டென நெருங்கி விட முடியாத இடத்தில் அவன் இருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.
பெரும்பாலும் அவன் கேட்டதற்கு ஆமாம் இல்லை என்று ஒற்றை வார்த்தை பதில்களாகத்தான் சொல்லுவாள்…அவனும் அப்படிக் கேள்விகளாகத்தான் கேட்பான்.ஆனாலும் ஒரு நாள் தயக்கத்தை விட்டொழித்து அவனிடம் கேட்டே விட்டாள்.
“கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்கு போகட்டுமா?”
“எதுக்கு? பணம் சம்பாதிக்கவா?
என் மனைவிக்கு சம்பாதிச்சு போடுற அளவுக்கு எனக்குத் தெம்பு இருக்கு”
“இல்ல இல்ல நான் அப்பிடிச் சொல்லல…” என்றவளுக்கு ‘நீதானே வேலைக்கு போகாமல் சும்மாதானே இருக்கிறாய் என்று கேட்டாய்’ என்று பட்டெனக் கேட்க முடியவில்லை.
அவன் அமைதியாக இருக்கவும் “இல்ல சும்மாதான் கேட்டேன்... உங்களுக்குப் பிடிக்கலைன்னாப் போகலை”
“இங்க நமக்குக் குடுத்திருக்கிற க்வாட்டர்ஸ் நல்லாப் பெருசாவே இருக்கும்…நீ இங்க வந்தா என்னை கவனிக்க... வீட்டை கவனிக்கவே நேரம் சரியா இருக்கும். இதுல வேலைக்கு எங்க போகப் போறே?”
“ம்ம் சரிங்க!”
..............................................................................................................................................................
“நான் உங்கள் ஏகாந்தத்தைக் கலைத்து விட்டேனோ” என்று அவள் கேட்ட போது அவன் கண்ணீர் வழியச் சிரிக்கும் எமோஜியை அனுப்பி விட்டான்.
பின் “அவ்வையார் பாட்டுத் தெரியுமா?” என்று கேட்டான்.
“என்ன பாட்டு?”
“இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியை தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பதுதானே”
“ஓ!”
“ஆமாம் நான் அறிவுள்ள ஒரு பெண்ணிடம் நட்பு பாராட்டுவது இனிமையான விஷயம்தானே”
“ஐஸ் வைக்கிறீங்களா?”
“எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க?”
“போங்க அர்வி! இனி உங்ககிட்டப் பேச மாட்டேன்...சும்மா ஒரு வார்த்தைக்காவது இல்லைன்னு சொல்லலாம்ல”
“உங்களுக்குப் பொய் சொன்னாப் பிடிக்குமா?”
“பெண்கள் எப்பவுமே ஸ்வீட் லைஸை விரும்புவாங்க... வசீகரா பாட்டு கேட்டது இல்ல...குளுகுளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையே எதிர்பார்க்கும்”சொன்னவள் “அது காதலனோ, கணவனோ, சகோதரனோ, தகப்பனோ நண்பனோ ஸ்வீட் லைஸ் பெர்மிட்டெட்” என்றும் சேர்த்து சொன்னாள்.
அவன் பல் தெரிய சிரிக்கும் எமோஜியை அனுப்பி விட்டு “ரொம்ப உஷார்தான்” என்றான்.
“ஆல்வேஸ்!” என்று அவள் கண்ணடிக்கும் எமோஜியை அனுப்பினாள்.
“நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல அர்வி?”அவனிடம் இருந்து சில வினாடிகள் பதிலில்லை.
முன்னோட்டம் 2
“தப்புதாங்க. மனுஷங்களை உங்களை மாதிரி இன்னும் எனக்கு எட போடத் தெரியலை” எனவும் அவள் அருகில் வந்தவன் அவள் இடையை வளைத்து அருகில் இழுத்தான்.
அவளது நேரடி சரணடைதலில் எப்போதுமே அவன் இளகுவான்.
கடந்த ஒரு வாரமாக மனைவியை நெருங்கியிருக்கவில்லை அவன். அப்போதும் அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருக்க அவள் இதழ்களில் முத்தமிட்டவன் “குட் இந்த மாதிரி உன் தகுதி தெரிந்து நடந்துக்கோ” என்று விட்டுக் கிளம்பச் சென்று விட்டான்.
அன்றிரவு எல்லா ப்ரச்சனையும் தீர்ந்ததென அவள் நினைத்திருக்க அன்றும் தள்ளிப் படுத்திருந்தானவன்.
வேலைகளை முடித்து வந்தவள் அரை வினாடி தயங்கி நின்றாள். பின் அவனுக்கு ஏதோ விருப்பமில்லாமலோ இல்லை அசதியிலோ உறங்க முடிவு செய்து விட்டான் என எண்ணியவள் தன்னிடத்தில் சென்று படுக்க இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் “உன் மனசில என்னடி நினைச்சுட்டு இருக்க?” என்று கேட்டான் கோபமாக.
தூக்கி வாரிப் போட்டு எழுந்து அமர்ந்தவள் “என்ன ஆச்சுங்க?” என்று கேட்டாள்.
“ஒரு வாரமா பக்கத்துல வராம இருக்கானே என்னாச்சு ஏதாச்சுன்னு கேட்டியா? உனக்கு வேணும்னா நீ வா அப்பிடின்னு சொல்லாம சொல்றே இல்ல? எல்லாம் படிச்ச திமிர்டி. படிச்சதுக்கே இப்பிடின்னா இன்னும் வேலைக்கு வேற போக ஆரம்பிச்சா நீ எல்லாம் தலைகீழாதான் நடப்பே”
அவளுக்குக் கண்ணீர் தளும்பி விட்டது.
“ஏன் இப்பிடில்லாம் பேசுறீங்க?”
“பின்ன எப்பிடிப் பேசச் சொல்ற? புருஷன் கோபமா இருந்து திரும்பிப் படுத்தா என்னாச்சுன்னு கேட்டு சமாதானப்படுத்த மாட்டியா? நல்லதாப் போச்சுன்னு நீயும் திரும்பிப் படுத்துக்குவியா? பகல்ல வேலைக்காரியாவும் படுக்கையில வேசியாவும் நடக்கிறவளுக்குப் பேர்தான்டி பொண்டாட்டி”
அவள் அதிர்ந்து போய்ப் பார்க்க
“என்னதான் சொல்லிக் குடுத்தாங்களோ உங்க வீட்டுல. அம்மா இல்லைன்னாலும் அத்தை சித்தி பெரியம்மான்னு ஆட்கள் இருந்தாங்கதானே புருஷன் வீட்டுக்குப் போற பொண்ணுக்கு புத்திமதில்லாம் சொல்லிக் குடுக்க மாட்டாங்களா?”
பொரிந்து முடித்து விட்டு அவன் திரும்பிப் படுத்துக் கொள்ள அவனை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவளுக்கு அப்போதுதான் அவனின் கடந்த ஒரு வாரக் கடுகடுப்பின் அர்த்தம் புரிந்தது.
இந்தக் குறுகிய கால தாம்பத்தியத்தில் அவன் அவளை நாடியிருக்கிறான். ஆனால் அவன் எப்போது கோபப்படுவானோ ஏதாவது செய்து அவனுக்குக் கோபமூட்டி விடுவோமோ என்ற பயத்திலேயே அவள் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க அவனருகில் அவளாக நெருங்க முயன்றது இல்லை. திருமணமான புதிதில் இயல்பாக இருக்கும் கூச்சம் வேறு அவளைத் தயங்கச் செய்திருந்தது.
ஆனால் இப்போது அவளை முழுக் குற்றவாளியாக அவன் மாற்றியிருக்க இதை இப்படியே விட முடியாது அவளால். கெஞ்சினால் மிஞ்சுபவன் அவள் மிஞ்சினாலும் மிஞ்சவே செய்வானே ஒழிய மனைவியிடம் கெஞ்ச மாட்டான் என்பது அவளறிவிற்கு உறைக்க கண்களைத் துடைத்துக் கொண்டவள் மெல்ல அவனை நெருங்கி அவன் மேல் ஒரு கையைப் போட்டு அவன் முதுகை ஒட்டிக் கொண்டு படுத்தாள். புயல் வேகத்தில் திரும்பியவன் அவளை வாரிச் சுருட்டிக் கொண்டான்.
.........................................................................................................................................................................
தொடர்ச்சி கதையில்....
இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் கதையை ஆரம்பிக்கிறேன் நண்பர்களே! பிள்ளைகளுக்குக் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருப்பதால் இந்தத் தாமதம். விரைவில் முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்.
டீசர் படித்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் உங்கள் ஆதரவை நாடும்
தூரிகா
Last edited by a moderator: