உன் மனைவியாகிய நான் - 15

Spicy Kannamma

Writers Team
Tamil Novel Writer
#1
அத்தியாயம் - 15aஅன்றைய பாடம் வழக்கம் போல் நடந்து முடிந்தது. வீட்டிற்குச் செல்ல ஆயத்தமான அசிமாவுக்கு அம்மாவிடம் காலையில் கத்திய நினைவு வந்தது.” வீட்டிற்கு போய் அம்மாகிட்ட மன்னிப்பு கேக்கனும், வருத்தத்துல ஏதேதோ கத்திட்டு வந்துட்டோம்..” என்று நினைத்தபடியே பேருந்து நிறுத்தத்திற்கு நண்பர்களுடன் பயணித்தாள்.நண்பர்கள் ஏதேதோ பேசிக்கொண்டு வர இவளது நினைவுகளில் நிறைந்திருந்தது அம்மாவும் அண்ணனும் மட்டுமே. பேருந்து வந்ததும் ஏறி தனக்கு விருப்பமான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக் கொண்டு வீதியை ரசித்தபடியே வீட்டை அடைந்தாள். வீட்டில் நுழைந்தவுடன் பலகார வாசனை மூக்கை துளைத்தது.“ அம்மா...! “ என்ற அழைப்போடு உள்ளே நுழைந்தாள்.” வாடி.. வந்துட்டியா..?? “ அம்மா கேட்டார்.” என்ன உன் பையன் வரலனு சந்தோஷத்துல பலகாரம் செய்யுற போல.. “ கேலித்தாள் அசிமா.எப்பொழுது அம்மாவிடம் சண்டை போட்டாலும் எதுவும் நடக்காதது போல குறும்புப்பேச்சில் வாக்கியத்தை தொடங்குவதே அசிமாவின் மன்னிப்புக் கேட்கும் ஸ்டைல். அவளது வழக்கமான குறும்பு பேச்சை கேட்டதும் அசிமா சாதாரண மனநிலைக்கு வந்துவிட்டதை எண்ணி நிம்மதி அடைந்தாள் அம்மா.“ இல்லடி.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு.....” அம்மா சொல்லி முடிப்பதற்குள் சிட்டாய் பறந்தாள் அசிமா.“ அடியேய் பேசிக்கிட்டு இருக்கும்போது எங்க ஓடுற..?? “ அம்மா கேட்க“ இன்னைக்கு என் செல்லத்த கொஞ்சவே இல்ல...” கத்திக் கொண்டே ஓடினாள்.சிறிய புன்முறுவலுடன் வேலையை தொடர்ந்தாள் அம்மா. ஓடிச்சென்ற வேகத்தில் திரும்பி வந்தவள் ஒரு பலகாரத்தை கையில் கொத்திக்கொண்டு மீண்டும் தன் செல்லக்குட்டியை நோக்கி படையெடுத்தாள்.யார் அந்த செல்லக்குட்டி..?? வேறு யாருமில்லை. தான் வளர்க்கும் ஆசை நாய்குட்டி தாமு. காலையில் அவளது ஸ்பரிசம் தீண்டாமல் ஏங்கிக் கிடந்த தாமு அவளை விட வேகமாய் வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வந்து அவள்மேல் பாய்ந்தது. இருவரும் சிறிது நேரம் விளையாட, அம்மா தேனீரும் பலகாரமும் கொண்டு வந்துக் கொடுத்தாள்.“ உனக்கும் எடுத்துகிட்டு வா மா..சேர்ந்து சாப்பிடுவோம்.. “ சொன்னாள் அசிமா.” ம்...வரேன்... “ என்றாள் அம்மா.காற்று இதமாய் வீச, பொழுது சாய்ந்துக் கொண்டிருந்தது. அம்மாவும் மகளும் உரையாடிக்கொண்டே தேனீரையும் பலகாரத்தையும் உண்டுமுடித்தனர். பிறகு வீட்டின் அன்றாட வேலைகளை இருவரும் செய்யத் தொடங்கினர்.தன் அறையை ஒதுங்கவைக்கும் பணியில் மும்புறமாக இருந்தாள் அசிமா. ஒரு பொட்டலம் கண்ணில் தென்பட்டது. அண்ணனுக்கு வாங்கி வைத்த ரக்‌ஷாபந்தன் பரிசுகள் தான் அது. அதை பத்திரமாக பீரோவில் பூட்டி வைக்க கையில் எடுத்தவள் ஏதோ யோசித்தவாறு பொட்டலத்தைப் பிரித்தாள்.வாங்கி வைத்த ராக்கி கயிறு இருந்தது. அந்த பளிச்சிடும் பண்டிகை கயிறு தன் அண்ணன் கை சேராமல் கலையிழந்து கிடப்பதாய் உணர்ந்தாள். வாங்கிய வைத்த ஒப்பணை பொருட்களும் இருந்தது. அண்ணனுக்கு எப்போதும் சிறு பிள்ளைபோல் குடுமி போட்டு ஒப்பணை செய்துவிடுவதில் ஓர் ஆத்மார்த்த பிரியம் அவளுக்கு. அதற்கான முன்னேற்பாடாக வாங்கி வைத்திருந்த ஒப்பணை பொருட்கள் அவளிடம் ’ உன் அன்பு சகோ எப்போது வருவான்..? ’ என்று கேட்பது போல உணர்ந்தாள்.இதழோரம் சிரிப்பு அளவாய் சிதற பொட்டலத்தை மடக்கி அலமாரியில் வைத்துப் பூட்டினாள். நேரம் உருண்டோடி இரவை அடைந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய அப்பாவிடம் வந்ததும் வராததுமாக,“ என் தங்கச்சியவா மிரட்டுற..! வீட்டை விட்டு வெளியே போ..! “

என்று கூறியவாறு ஜாக்கி ஜான் போல போஸ் கொடுத்து நின்றாள் அசிமா.ஆம், அசிமாவின் மழலை பருவத்தில் அவளுக்கு செல்ல மிரட்டலிட்ட அப்பாவை வீட்டை விட்டு வெளியேற சொன்னவன் அவளது அண்ணன். தங்கையின் பாசத்திற்கு சிறிதும் சளைக்காது ஈடு கொடுப்பவன் அவள் அண்ணன். அவர்களது அன்பின் ஹிமாலயத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.அவன் குரலுக்கு முன்னால் அவளுக்கு அத்தனை கீதங்களும் தோற்றுப்போகும். அவனுக்கோ தங்கை என்ற ஒற்றை வார்த்தைக்கு முன்னால் மற்ற அழகெல்லாம் காணாமல் போகும். அவ்வப்போது தன் அண்ணனை போல நடித்துக்காட்டி வீட்டில் அவன் இல்லாக்குறையை தீர்த்து வைப்பாள் அசிமா. இன்று அவள் ஜாக்கி ஜான் போஸில் நிற்க, சிரித்தபடி செல்லமாய் தலையில் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் அவளது அப்பா.“ அப்பா.. உன் பையனுக்கு போன் போடு..பேசுவோம்..! “ என்றாள் அசிமா.“ இன்னுமா நீ பேசாம இருப்ப..? நான் போன் போட்டு கொடுக்குறதுக்கு..? “ என்று வாரினார் அப்பா.அசிமா கண்ணடித்துக்கொண்டு நாக்கை கடித்தவாறு,

” அய்யோ.. நிஜமா பேசலப்பா.. இப்பவும் நா பேசமாட்டேன்.. அவன் கூட சண்ட.. நீங்க பேசுங்க, நான் கேட்குறேன்.. “ என்றாள் அசிமா.அப்பாவும் போன் போட, அம்மா அப்பா இருவரும் பேசினர். அன்பு அண்ணன் அவன் அப்பாவிடம் தங்கையை கேட்க,“ அவ உன்கிட்ட பேச மாட்டாளாம்..! சண்டையாம்..!! ஆனா நீ பேசுறத எல்லாம் ஸ்பீக்கர்ல கேட்டுட்டு தான் இருக்கா..!!! “ நகைப்போடு கூறிய அப்பாவிடம் அசிமாவின் அண்ணனோ,“ ஏன் சண்டையாம்..?? என் குட்டி தேவதைக்கு என்கிட்ட பேசவேனாமா..?? “ என்றான்.அப்பாவிடம் செல்ல முறைப்போடு போனை பிடுங்கிவிட்டு ஒற்றை விரலை தன் உதட்டின் மீது வைத்து” ஸ்ஸ்ஸ்... “ என்றாள் அசிமா.பின்பு போனை தன் வாய் அருகே வைத்துக்கொண்டு, தன் செல்லக்குட்டி தாமுவிடம் பேசுவது போல்,“ டேய் தாமு.. உனக்கு மட்டும் தான் டா நான் பலகாரம் ஊட்டிவிடுவேன்.. நீ மட்டும்தான் என்ன தேடுற.. நீ தான் என் கூட பிறந்த பிறப்பு.. வேற எந்த நாயுமில்ல.. “ செல்லாமாய் சீண்டினாள் அசிமா.அலைபேசி வழியாக அண்ணன் காரனோ,” டேய் தாமு.. அண்ணன் சொல்லுறத கேளு டா.. என்ன வேணும்னாலும் சாப்பிடு.. அவ கையால கொடுக்குற பலகாரத்த மட்டும் சாப்பிட்டுறாத.. கவனம் டா அண்ணன் வேற உன் கூட இல்ல உன்ன பார்த்துக்குறதுக்கு... “ என்று நகைத்தான்.” என்ன..? அவன் அதெல்லாம் சாப்பிடுவான்.. நான் பார்த்துப்பேன் தாமுவ..! “ பேசமாட்டேன் என்று கூறியதை மறந்து சண்டைபிடித்தாள் அசிமா.“ யாரோ என்கிட்ட பேச மாட்டேன்னும், என் மேல கோவமா இருக்கறதாவும் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க பாப்பா.. அத தான் நம்ம தாமுகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. “ என்றான் அண்ணன் காரன்.தோல்விக்கூட சுகம் தானே நம் அன்புக்குரியவர்களிடம் தோற்றுப்போகும் பொழுது. அசிமா அந்த ஆனந்தத்துடன்,“ எரும.. என்ன ஏமாத்திட்ட டா நீ..!” என்றாள்.” அண்ணனுக்கு லீவ் கிடைக்கல அம்மு.. சாரி செல்லம்.. “ என செல்லமாய் கெஞ்சினான்.” சரி சரி மன்னிச்சிட்ட அழாத.. “ என்றாள் அசிமா.“ சாப்பிட்டியா தங்கமே..?? “ பாசமாய் கேட்டான் அண்ணன்.” ஆ.. அதெல்லாம் நல்லா சாப்பிட்டேன்.. உன்ன விட்டு நான் மட்டும் தனியா நிறைய சாப்பிட்டேன்..” என்றாள்.” சரி சரி .. என் தங்கச்சி சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரிதான.. “ என்றான் அவன்.” இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேணாம்.. வரும்போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா.. அதான் வேணும்.. “ என்றாள்.” கண்டிப்பா வாங்கிட்டு வர்றேன்.. காலெஜ் எப்படி போகுது..?? “ என கேட்டான்.” ம்ம்... அதுக்கென்ன செமயா போகுது.. “ என்றவளிடம்“ அது போகுது சரி.. நீ கூடவே போறியா.. இல்ல அது ஒரு பக்கம் போக நீ ஒரு பக்கம் போறியா..? “ என கேலித்தான்.“ அடேங்கப்பா.. உன்ன மாதிரியா..?? கடைசி பரிட்சையில கூட வழக்கம்போல நான் தான் முதல் மார்க்.. “ என்றாள் கர்வ குரலில்.” என்ன டி .. பிட்டு கிட்டு அடிக்கிறயா..?? எப்பவும் முதல் மார்க் வாங்குற..?? “ என்றான்.” எப்பா..! கலாய்ச்சிட்டாராமா..! சாப்பிட்டியா லூசு..?? “ என தன் விசாரணையைத் தொடங்கினாள்.” இப்ப தான் வேலை முடிஞ்சிது.. இனிதான் மெஸ்-க்கு போகனும்..” என்றான் அவன்.” மெஸ்-க்கு போகிற மாதிரி தெரியலயே..? உன் குரலுக்கு பின்னால வண்டி சத்தமா கேக்குது..! எங்க ஊரு சுத்துற..?? அம்மாகிட்ட சொல்லுற இரு..!! “ என தொடங்கினாள் அவள் லீலையை.” கம்பெனி வாசல்ல நிக்கிறேன்.. அதான் ரோட்டுல போகிற வண்டி சத்தம் கேட்குது.. “ என்றான் அவன்.” வண்டி ரோட்டுல போகிற மாதிரி கேட்கலயே..! நீ வண்டியில போகிற மாதிரில கேட்குது.. “ என்றாள் விடாபிடியாக. அவனோ ஒரு நிமிடம் கைபேசியின் வாயினை மூடிக்கொண்டு,’ வாயாடி எதையும் கண்டுபிடிச்சிருவாளோ..? சரி சமாளிப்போம்..’ என்று எண்ணிக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தான்.“ வயிறு ரொம்ப பசிக்குது.. நான் மெஸ்-க்கு தான் கிளம்புறேன்.. “ என்றான் அழுத்தம் திருத்தமாக.பசி என்றதும் தாயாய் மாறிய தங்கை,

“ சரி.. ஒழுங்கா சாப்பிடு.. உடம்ப கவனிச்சிக்க.. “ என்று தன் புலன் விசாரணையை முடித்துக் கொண்டாள்.பிறகு வழக்கம் போல் பாச மழை மட்டும் பொழிய தொலைபேசி உரையாடல் தொடர்ந்து முடியும் வேளையில்“ சரி மா.. நல்லா படி.. உடம்ப பார்த்துக்க.. எப்போதும் படிச்சுக்கிட்டே இருக்காம நேரத்துக்கு தூங்கு. காலேஜ்-க்கு கவனமா போய்ட்டு வா.. என்ன பிரச்சனைனாலும் அண்ணனுக்கு போன் செஞ்சிடு.. “ என்றான்.

அண்ணனது இந்த டயலாக் தான் அவளின் ஃபேவரட் என்றாலும் அதை காட்டிக் கொள்ளாமல் குறும்புக்காரியின் பதிலோ,” ஆமா.. இவரு பெரிய இவரு.. கால் செஞ்சதும் பத்து அடியாள் அனுப்பிடுவாறு.. எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்..! “ என்றாள்.” வாயாடி..! சரி அம்மாகிட்ட போன கொடு.. “ என்றான்.

(பேசி முடித்ததும் எப்போதும் போனை அம்மாவிடம் கொடுக்க சொல்லி சரிமா நாளைக்கு பேசுறேன்னு சொல்லுறது அவனது வழக்கம். வழக்கம் தவறாது இன்றும் அதுவே நடந்தது)“ இதோ கொடுக்குறேன். அம்மா................ “

என்றவள் அம்மாவிடம் போனை கொடுத்துவிட்டு அண்ணனின் சட்டையை அணிந்துக்கொண்டு உறங்கச் சென்றாள்.
 
Spicy Kannamma

Writers Team
Tamil Novel Writer
#2
அத்தியாயம் - 15b

பொழுது விடிந்தது. ஞாயிற்று கிழமை. காலை சூரியன் அவள் முகத்தில் இதமாய் தன் கதிர்களை பரப்ப, கண்களை கசக்கியவாறு எழுந்து சோம்பலை முறித்துக்கொண்டு, மெத்தையை விட்டு இறங்க மனமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள் அசிமா. பொதுவாகவே அதிகாலையே எழும் பழக்கம் கொண்டவள் அசிமா.இயற்கை மீது தீராத நாட்டம் கொண்டவள் அவள். ஜன்னல் திரையை விலக்கிக் கொண்டு வெளியே இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள். குருவிகளின் கீச் கீச் சத்தம் காதில் மயிலிறகால் சிணுங்கலூட்டியது போல் இனிமையாய் இருக்க சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தாள்.திடீரென அம்மா..... என்று கத்தினாள்.“ காலங்காத்தால ஏன் டி இப்படி கத்துற..? “ எங்கிருந்தோ தன் குரலை மட்டும் அனுப்பி வைத்தாள் அம்மா.“ அம்மா...சீக்கிரம் வா மா...! ” என்றாள் இன்னும் வேகமாக.” இரு டி வர்றேன்..! “ என்றார். அசிமாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பாவும் அங்கு வந்தார்.“ என்ன டி.. ஏன் இப்படி கத்துற..? ” என்ற அம்மாவிடம்“ அய்யோ அம்மா.. நான் எப்படி சொல்லுவேன்..?? “ என்று திணறினாள் உத்வேகத்தோடு. வானத்துக்கும் பூமிக்குமாய் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தாள்.“ இப்ப என்ன-னு சொல்லுறியா இல்லையா..?? நிறைய வேலை இருக்கு எனக்கு..! “ என்றார் அம்மா.” அம்மா நம்ம வீட்டுக்கு இன்னைக்கு ஒரு வரவு மா...!! “ என்றாள்.புருவங்கள் இரண்டும் ஆச்சரியத்தில் மிதக்க, கண்கள் வியப்பில் ஆகாயம் தொட, கன்னங்கள் இரண்டும் பொரித்து எடுத்த குலாப் ஜாமூன் போல் சிவக்க புன்னகை முத்துக்கள் வாயில் சிதற திகட்டா திகைப்புடன் கூறினாள் அசிமா.அசிமாவின் கண்களையும் புருவங்களையும் கடன் வாங்கியது போல் அம்மாவும் கண்களை விழிக்க, வெடிக்க வைத்த எருக்கம் பூ போல மெதுவாய் வாயை திறந்த அம்மா, குழப்பத்துடன் தன் கணவனை பார்த்தாள். அவரோ ஆளுக்கு முந்திக்கொண்டு மனைவிக்கு போட்டியாய் வியப்பில் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தார். அம்மாவோ சைகையில் அப்பாவிடம்“ என்ன .. சொல்லிட்டீங்களா..?? “ என கேட்டார்.அப்பாவும் சைகையிலேயே “ நான் எதுவும் சொல்லல டி..” என்றார்.இருவரும் சைகை பேச்சுவார்த்தையில் இருக்க,“ என்ன ரெண்டு பேரும் இப்படி முழிக்கிறீங்க..? இருங்க காட்டுறேன்.. “ என்ற அசிமா வீட்டிற்கு வெளியில் ஓடிச் சென்றாள். அம்மாவோ“ என்ன நடக்குது இங்க..?? நீங்க சொல்லிட்டீங்களா அவகிட்ட..?? “ என மீண்டும் கேட்டார்.” நான் எதுவும் சொல்லல டி.. அவ கத்துற சத்தம் கேட்டு தான் நானே வந்தேன்..! “ என்றார்.” அப்போ வழக்கம் போல அவளே கண்டுபிடிச்சிட்டாளா..?? “ என்றார் அம்மா.“ என்னனு தெரியலையே.. சரி வா பார்ப்போம்.. “ என்று அப்பாவும் அம்மாவும் வெளியில் வர எத்தனிக்க,அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் அவர்களது குழப்பத்திற்கு விடையளிக்கும் வண்ணம் வீட்டிற்குள் வந்து நின்றாள் அசிமா.கையில் அழகிய பூனை குட்டி. இதற்கு தான் இத்தனை ஆர்பாட்டமா..? என மனதில் எண்ணியவாறு அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு சிரித்துக் கொண்டனர்.“ அடடே..! ரொம்ப அழகா இருக்கே..” என்றார் அம்மா.” ஆமா.. அம்மா... இனி இதுவும் நம்ம வீட்டுலையே இருக்கட்டும்.. நான் இல்லாத நேரம் இதுவும் தாமுவும் விளையாடுவாங்க..” என்றாள்.” பூனைக்கும் நாய்க்கும் ஆகாது பாப்பா.. “ என்றார் அப்பா.” அதுலா ஒன்னு இல்ல அப்பா.. எல்லாம் நாம பழக்குறதுதான்.. அத நான் பாத்துக்குறேன்..! ” என்றாள்.” என் பேச்ச எப்பவும் கேட்டுறாத.. “ என துண்டை உதறி தோளில் போட்ட அப்பா, செய்தி தாளை எடுத்துக்கொண்டு திண்ணைக்குச் சென்றார்.“ அம்மா.. அம்மா.. இதுக்கு அழகா ஒரு பேரு சொல்லு பார்ப்போம்..” என்றாள் அசிமா.” ம்ம்ம்..... “ யோசனையிலேயே இருந்தார் அம்மா.“ அம்மா.. சொல்லுமா..” சிறிய சினுங்களுடன் கூறினாள் அசிமா.“ உனக்கு பிடிச்ச மாதிரி நீயே வை மா.. “ என்று கூறிவிட்டு பூனை குட்டியின் தலையை தடவிய அம்மா உள்ளே சென்றாள். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே பூனை குட்டியை தாமுவிடம் கொண்டு சென்றாள்.“ டேய் தாமு..! இங்க பாருடா.. இவன் தான் நம்மளோட புதிய சொந்தம். உனக்கு இவன பிடிச்சிருக்கா..?? “ என கேட்டாள். வேகமாக வாலை ஆட்டி தன் சம்மதத்தைத் தெரிவித்தான் தாமு.“ இவனுக்கு என்ன பேரு வைக்கலாம் தாமு..?? “ என்றவள் தன் விரலை நாடியில் வைத்து கருவிழிகளை உயர்த்தி சிந்திக்கத் தொடங்கிய மறுநொடி“ ஆ.. நீ தாமு, இவன் ராமு.. சரியா..?? “ கல கல வென சிரித்தாள் அசிமா.“ போதும் போதும்.. முதல்ல பல்ல தேச்சிட்டு வா.. “ கூறியபடி தேனீரை அருகில் வைத்துச் சென்றாள் அம்மா.காலை உற்சாகம் சிறிதும் குறையாமல் பூனை குட்டியுடன் ஓடித் திரிந்து பற்களை துலக்கிய அசிமா, தேனீர் அருந்திக் கொண்டிருந்தாள்.“ இன்னைக்கு உன் ராசிக்கு ஏதோ இன்ப அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்குனு பேப்பர்ல போட்டுருக்கானே டா பாப்பா..! “ திண்ணையில் இருந்து அப்பாவின் குரல் கேட்க, எப்போதும் ராசி பலன் எல்லாம் உண்மை இல்லை என மார்டன் வசனம் பேசுபவள்,“ அடடா.. அப்படியா..? ஆமா, அதா நம்ம ராமு வீட்டுக்கு வந்துருக்கானே..!” என்று கூறிக் கொண்டே திண்ணையை அடைந்தாள். மான்குட்டிப் போல ஒரு துள்ளு துள்ளி திண்ணைமேல் ஏறி, இரு கால்களையும் மடக்கி அமர்ந்து, கைகளில் ஒட்டிய மண்ணை தட்டி விட்டு,


‘ அப்புறம்.. வேற என்ன சொல்லியிருக்காங்க..?? “ என்றாள்.” என்ன எப்பவும் இதெல்லாம் பொய்-னு சொல்லுவ..? இப்ப வேற என்ன சொல்லியிருக்காங்க-னு கேட்குற..?? “ என்று கேட்டார் அப்பா.“ நல்லதா சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டுகனும்.. கெட்டதா சொன்னா இதெல்லாம் சும்மா னு சிரிச்சிக்கனும்.. ஆக மொத்தத்துல எப்பவும் வருத்தப்படாம சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்.. “ என்றவள் மீண்டும் கல கலவென சிரித்தாள்.(சந்திப்போம்)
 
Advertisement

New Episodes