உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 25 (Last episode)

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கதையோட நிறைவு பகுதிக்கு வந்துட்டோம். கேட்டவுடன் திரி அமைத்து கொடுத்த மல்லி மேம்க்கு தான் முதலில் நன்றி சொல்லனும். ரெகுலரா அப்டேட் செய்யாம போனாலும், அதையெல்லாம் பொறுத்து கடைசிவரை வாசிச்ச உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. எவ்வளவு சொதப்பீருக்கேனோ, அதையும் வேற பொறுத்துக்கிட்டீங்க... இப்போ உடனே அடுத்த கதை ஆரம்பிக்க போவதில்லை. ஒரு சில பர்சனல் கமிட்மெண்ட்ஸ். சோ, இந்த வருட இறுதியில் அல்லது, புதுவருடத்தில் தான் அடுத்த கதை. அதுக்குள்ள என்னை மறந்திடாதீங்கப்பா...

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 25

rana-and-sai-pallavi.jpg

அந்த அறையினுள் நுழைந்ததில் இருந்து மருண்டு மருண்டு விழித்துக்கொண்டிருந்தாள் மகிழ். அவளுக்கு அந்த அறையும் புதிதில்லை, அதில் அவள் காணப்போகிறவனும் புதிதில்லை. ஆனால், இந்த சூழல் புதிது. அதனால் ஏற்பட்ட பயத்தையும் படபடப்பையும் அப்பட்டமாக கண்ணில் தேக்கி அப்போது தான் பார்ப்பதுபோல் ஒவ்வொரு பொருளையும் பார்த்து நின்றவளுக்கு அவள் பின்புறமிருந்த கதவை திறந்துகொண்டு கணவன் வந்ததை அறியமுடியாமல் போயிற்று.

தன் கண்கள் மூடப்பட, “என்ன தமிழ் இது?” என்று நா வரள கேட்டாள்.

“ஷ்… உனக்கு ஒன்னு காட்டனும்” என்றவன் அப்படியே பால்கனிக்கு அழைத்து சென்று அவளை அங்கிருந்த ஊஞ்சலில் அமரவைத்தான்.

அதன்பின் அவள் கண்களை திறந்தவன், ஊஞ்சலை மென்மையாக ஆட்ட, “ஹே… இது என்ன புதுசா இருக்கு? இங்க பிரம்பு ஊஞ்சல் தான போட்டிருப்பீங்க? உங்களுக்கு அது தான பிடிக்கும்?” என்று கேட்டாள். அவனை பார்க்கும்வரை இருந்த பயம் எல்லாம் தற்போது ஓடியேவிட்டிருந்தது.

முன்பு அவ்விடத்தில் பிரம்பால் ஆன ஊஞ்சல் தான் போட்டிருப்பர். அதில் புகழ் யாரையும் அமரவிட மாட்டான். அவன் இல்லாத சமயங்களில் கீர்த்தியும் மகிழும் அந்த ஊஞ்சலில் விளையாடுவதுண்டு. அது நினைவுக்கு வரவே இவ்வாறு கேட்டாள்.

“ம்ம்… பிடிக்கும் தான். ஆனா, அதுல இப்படி உன்னோட சேர்ந்து உக்கார முடியாதே! அப்படியே என் மடியில உன்ன வெச்சு உக்காந்தாலும், என் வெய்ட்ட தாங்கும். ஆனா, உன்ன அது தாங்குமா? எப்படி ஒடஞ்சதுன்னு கேட்டாங்கன்னா நான் என்னன்னு வெளிய சொல்ல?” என்று கேட்டவாறே அவளுடன் அமர்ந்தான்.

அவன் கூற்றில் கடுப்பானவள், “ஏன் வெய்ட்ட நீ தாங்கமாட்டியா?” என்று மரியாதை பறக்க அவனை அடித்தாள்.

“டேய் புகழ்… கல்யாணமான முதல் நாளே உன் மரியாதை போச்சேடா… இனி வர நாட்களில் வாடா போடா எல்லாம் எதிர்பார்க்கலாம் போல…” என்று அவன் புலம்ப,

“ஏன் அதோட விட்டுட்டீங்க? இன்னும் நிறைய வரும்… எல்லாத்தையும் வாங்கனும்…” என்று போலியாக மிரட்டினாள்.

அவளை தன்னை நோக்கி இழுத்தவன், “நீ எது கொடுத்தாலும் வாங்கிப்பேனே…” என்றவாறே அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்தான்.

“ம்ம்ம்ம்” என்று மெலிதாக அவன் தாடியின் குறுகுறுப்பில் முனங்கினாலும், ஒன்று நினைவிற்கு வர, அவனை தள்ளிவிட்டு, “எனக்கு நீங்க ஒரு விஷயம் இன்னும் சொல்லவே இல்ல” என்று கேட்டவளை மீண்டும் தன்னோடு இணைத்துக்கொண்டவன், “எதுவா இருந்தாலும் இப்படியே கேளு…” என்றான்.

“நீங்க எப்போல இருந்து என்ன லவ் பண்றீங்க? என்ன ஆபீஸ்ல பார்த்ததுக்கு அப்புறமா? இல்ல, நான் தான் அனின்னு தெரிந்தபின்பா?” என்று கேட்டவளை பார்த்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “உன்னோடு பேச ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே” என்றான். அவன் தான் இந்த கேள்விக்கு இன்று வரை பதில் சொன்னதே இல்லையே.

“என்ன, அப்போவேவா? பிறகு ஏன் என்னிடம் நீங்க சொல்லவே இல்ல?” என்று கோபம் பாதி, ஆச்சரியம் மீதி என்று கேட்டாள்.

“அப்போவே உனக்கு என்மேல விருப்பம்னு எனக்கு தெரியும். இருந்தாலும், உனக்கும் சரி, எனக்கும் சரி, நாம எந்த ஒரு பெரிய டெசிஷன் எடுப்பதற்கான வயதும் இல்ல, அதற்கான மனப்பக்குவமும் இல்ல. அதனால தான் நான் உங்கிட்ட சொல்லி உன் மனச எதுக்கு கலைப்பானேன்னு சொல்லல. அது மட்டும் இல்லாம, நீ ஒன்னு கேள்விபட்டிருக்கியா? ‘உனக்கு ஒருத்தங்கள பிடிச்சிருந்தா அவங்கள சுதந்திரமா விடு. அவங்க உன்கிட்ட திரும்ப வந்தா அவங்க உனக்கானவங்க. இல்லைன்னா, அவங்க உனக்கானவங்க இல்லை’ன்னு? என்னதான் நடந்தாலும் எனக்கு நீ தான்னு இருந்தா எப்படியாவது என்னிடம் வந்து சேர்ந்திருவன்னு ஒரு நம்பிக்கை. இப்போ பாரு! நீ என்கிட்ட வந்துட்ட” என்று அவன் கூற, ஒரு நொடி அவள் முகம் மாறியது. சட்டென்று அதனை மாற்றிக்கொண்டவள், அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

இதனால் தானே அவள் அவனுக்கு வேண்டாம் என்று தலைபாடாய் அடித்துக்கொண்டது. எங்கே அவன் அன்று பேசிய வார்த்தைகளை மனதில் வைத்து என்றேனும் அவனை காயப்படுத்திவிடுவாளோ என்று பயந்திருந்தவள், அவன் சொன்ன ‘நேற்றை நினைத்து இன்றை கெடுத்துக்கொள்ள கூடாது’ என்பதில் தான் தன்னை சமாதானப்படுத்தி வாழ்ந்துபார்க்க முடிவெடுத்திருந்தாள். இதுவரை அந்த எண்ணம் வரும்போதெல்லாம் அதனை ஒதுக்கியும் விட்டிருந்தாள். ஆனால், தற்போது நினைக்கும்போது அவளுக்கு மீண்டும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

“கீர்த்தியிடம் உன்ன லவ் பண்றேன்னு சொன்னபிறகு அவளுக்கு கால் தரையிலேயே படல… நல்லவேளை, என் ஃப்ரெண்ட் லவ் வெற்றியடைஞ்சுருச்சுண்ணான்னு அவளுக்கு ரொம்ப சந்தோஷம். இப்போ கூட பாரேன்… உன்னோட கொஞ்ச நாள் இருக்கனும்னு அவ திருமணத்த தள்ளி வெச்சிருக்கா” என்று அவன் பேசிக்கொண்டே போக, தோழியின் அன்பில் கண்கலங்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “நான் உங்கள லவ் பண்ணது அவளுக்கு தெரியுமா?” என்றாள்.

“ம்ம்ம்… எப்பவோ தெரியும்” என்றவன் அவள் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்று தன் அலமாரியில் இருந்து ஒரு டைரியை எடுத்து காண்பிக்கவும், அதனை பார்த்தவுடன் அறிந்துகொண்டாள் அது தான் எழுதியது என்று.

புகழைப் பற்றி எழுதியும் வரைந்தும் வைத்த அந்த டைரி தொலைந்துபோனதில் அவள் எவ்வளவு அழுதிருப்பாள்? அதனை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள், மௌனமாக கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

அவள் சிறிது நேரம் அழட்டும் என்று விட்டவன், அது முடிந்தபாடில்லை என்று தோன்றவும், “என்னம்மா?” என்று அவள் தோள் தொட்டு வினவினான்.

“இந்த டைரி காணோம்னு எவ்வளவு தவிச்சேன் தெரியுமா?” என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு கேட்டவள், “எப்படி உங்களுக்கு கெடச்சது?” என்று வினா எழுப்பினாள்.

“கீர்த்தியோட புக்ஸ் சிலது உன்கிட்ட இருக்கவும், நீ ஊருக்கு போயிருந்த நேரத்தில் உன் ரூமுக்கு வந்து எடுத்திருக்கா. அதில் இதுவும் இருக்கவும், கவனிக்காம எடுத்துட்டு போனவ, திறந்து பார்க்கவே இல்ல. அதுக்குள்ள நீ ஊர மொத்தமா காலி பண்ணிட்டு போயிட்ட. அதன்பிறகு எடுத்து பார்த்தவளுக்கு நீ என்னை விரும்பறன்னு புரிஞ்சுது. ஆனா, உன்ன தொடர்புகொள்ள எந்த வழியும் நீ விட்டு வைக்கலையே. அவளும், பப்பி லவ் தான, மறந்துருவேன்னு நெனச்சுருக்கா. நீ என்னை மறக்க நினைத்து, அவள் மூலமா திரும்ப என் நியாபகம் வந்திட கூடாதுன்னு அதன்பிறகு உன்னை பார்க்கவோ பேசவோ அவ முயற்சி செய்யவே இல்ல. அன்னைக்கு உனக்கு ஆக்சிடெண்ட் ஆனப்போ நீ மயக்கத்துல புலம்பவும், நீ தான் அனின்னு எனக்கு உறுதியாச்சு.

ஆனால், நம்ம கதைல கீர்த்தி எங்க வந்தான்னு நினைத்து அவளை பார்க்க போனபோது தான் இந்த விஷயம் தெரிந்தது. அதற்குப் பிறகு, உன்னிடம் காதலை சொல்லிட்டு அவளை உன்னோட மீட் பண்ண வைக்கலாம்னு நினைத்தால், மேடம் எங்க நான் சொல்றத கேட்டீங்க? ஏதோ கடிவாளம் போட்ட மாதிரி ஒரே ரூட்… எனக்கு செமயா கடுப்பாகும். ஆனா, நீ எதை நெனச்சு குழம்புறன்னு தெரியவும், அத க்ளியர் செய்தால் தான் நீ ப்ரீயாவன்னு தோணுச்சு. அதனால் தான் என் பர்த்டே அன்னைக்கு நீ கோவில்ல இருக்கேன்னு தெரிஞ்சு கீர்த்தியை அங்க கூட்டிட்டு வந்தேன்.

உன்னை நான் லவ் பண்றேன்னு நம்ம வீட்டுல எல்லாருக்கும் அன்னைக்கே நான் சொல்லிட்டேன். உன் அம்மா, அப்பாகிட்ட அவங்கள ஹாஸ்பிட்டல்ல பார்த்தப்போ சொல்லியாச்சு. எல்லாருக்கும் சந்தோஷம் தான். ஆனால், நம்ம பிரச்சனைய நாமளே சரி செய்துக்கட்டும்னு தள்ளி நின்னு வேடிக்கைபார்த்தாங்க” என்று அவன் கூற,

“அதனால் தான் தைரியமா என்னை உங்களோட அன்னைக்கு அனுப்பி வைத்தாங்களா?” என கேட்டாள்.

ஆம் என்று தலையசைத்தவன், “இல்லைன்னாலும் நான் உன்னோட பஸ்ஸில் வந்திருப்பேன். அன்னைக்கு நீ அழவும், என்னவா இருக்கும்னு எனக்கு புரியவே இல்ல. ஆனால், கண்டிப்பா கீர்த்தி விஷயத்துக்கு இனி அழமாட்டன்னு தோணுச்சு. அப்போ நீ பேசியத வெச்சு எதுவும் கண்டுபிடிக்க முடியல. சரி, உன்னிடமே கேட்கலாம்னு நினைச்சா, கேட்டதும் சொல்ற ஆளா நீ? உன்னிடம் ப்ரோபோஸ் செய்தால் கண்டிப்பா மறுப்பன்னு தெரியும். அப்போ கோபப்படுத்தி காரணத்த தெரிஞ்சுக்க தான் வீட்டுக்கு வரவெச்சேன். நீ என்னையும் சின்னுவையும் அப்படி நினைச்சுருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல” என்று அவன் குரலில் சிறிது வலியோடு முடிக்க, அவளுக்கும் வலித்தது.

தீர விசாரிக்காமல் முடிவெடுத்தது அவள் தவறு தானே!

அவன் தலையை எட்டி கோதிக்கொடுத்தவள், “கீர்த்தி, மாமா தான் சின்னுக்கு பொறுப்பேற்றிருக்கறதா சொன்னா. அவங்களுக்கு அதுதான் விருப்பம்னு சொன்னா… ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ், அதுமட்டுமில்லாம, நீங்களும்…” என்று அவள் முடிக்காமல் நிறுத்த, என்னவென்று வினவினான் அவன்.

அப்படியும் அவள் சொல்லாமலே இருக்க, “கதவை திறக்காமலே பயந்துட்டு இருந்தா மறுபக்கம் இருப்பது பூனையா பேயான்னு பயந்துட்டே இருக்க வேண்டியதுதான். எதுவா இருந்தாலும் இப்போவே சொல்லிடு. இனி நம்ம வாழ்க்கைல இதையெல்லாம் வெச்சு இன்னொரு பிரச்சனை வரக்கூடாது” என்று தைரியம் கொடுக்க, அவன் அன்று கல்லூரியில் கூறியதை சொன்னாள்.

“உனக்கு எப்படி அது தெரியும்?” என்று அவன் கேட்க, அன்று தான் வந்ததில் இருந்து நடந்தது அனைத்தையும் சொன்னாள். அதனைக் கேட்டவன், அவளை வாரி தன்னோடு அணைத்துக்கொண்டான்.

“சாரிடா… வெரி வெரி சாரி… அன்னைக்கு என்னை ஒரு பொண்ணு ரொம்ப டார்ச்சர் செய்துட்டா… அந்த கடுப்புல வரவும், எதிரில் நிற்பது யாரென்று பார்க்காமல் கத்திட்டு போயிட்டேன்… ஆனால், யாராகவே இருந்தாலும், நான் அப்படியெல்லாம் பேசியிருக்கக்கூடாதுல்ல? உன் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? சே! அம்மா எப்பவும் சொல்வாங்க, கோபத்த கண்ட்ரோல் பண்ண சொல்லி… இப்போதான் ஏன் சொல்றாங்கன்னு புரிஞ்சுது…” என்று தன் போக்கில் கூறிக்கொண்டே வந்தவன், அவளை நோக்கி, “இதனால தான் நீ என்னிடம் பேசுவதை நிறுத்தினியா?” என்று கேட்டான்.

அதற்கு அவள் எதுவும் கூறவில்லையாயினும், கண்கள் கலங்கி இருந்ததிலேயே அதுதான் உண்மை என அறிந்தவன், தன் தலையிலேயே அடித்துக்கொண்டான்.

அவன் வருந்துவதை பொறுக்காதவள், அவனை அனைத்துக்கொண்டு, “நீங்க தான சொன்னீங்க, பழச நெனச்சு வருந்தக்கூடாதுன்னு… இப்போ நீங்களே கவலைப்படறீங்க?” என்று கேட்க, “நீ இத்தனை நாளா கஷ்டப்பட்டதுக்கு ரீசன் நானா இருக்கும்போது எப்படி கவலைப்படாம இருக்க முடியும்?” என்று ஆற்றாமையுடன் கேட்டான்.

“அதுக்கு ரீசன் நெஜமா நீங்க இல்ல தமிழ். நான் தான். நான் மட்டும்தான். அப்போ வருத்தப்பட்டாலும், கொஞ்ச நாளில் நீங்க தெரியாம தான் சொன்னீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். இருந்தாலும், உங்களிடம் வந்து பேச ஒரு பயம். எங்கே என்னையும் தப்பாவே நெனச்சுருவீங்கன்னு. இதில், நீங்க வேற பொண்ண காதலிக்கறீங்கன்னு வேற நான் நெனச்சுட்டு இருந்தேனே! அதனால் தான் நான் உங்கள வந்து சந்திக்கவே இல்ல. ஆனால், உங்கள மறக்கவும் முடியல. அப்போ எல்லாம் என் மேலயே எனக்கு ரொம்ப கோபம் வரும். நீங்க அப்படி திட்டியும் வெட்கமே இல்லாம உங்களயே நினைக்கிறேனேன்னு. எப்படியாவது உங்கள மறக்கனும்னு நெனச்சு நெனச்சே எனக்கு வலிக்க வலிக்க நியாபகப்படுத்திப்பேன். ஆனாலும், முடியவே இல்ல.

இந்த சந்தர்ப்பத்துல தான் வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. என்னால எதுவுமே பண்ண முடியல. உங்ககிட்ட வந்து என் காதல ஏத்துக்கோங்கன்னு கெஞ்சலாமான்னு கூட தோணுச்சு. எங்கே அப்படி செய்துடுவேனோன்னு ஒரு பயம். எனக்கு என் மேலயே நம்பிக்கை இல்ல. அதுமட்டுமில்லாம, உங்கள நெனச்சு ஒரு பொண்ணு தனியா வாழ்றத நீங்க கண்டிப்பா விரும்ப மாட்டீங்கன்னு தெரியும். அதனாலும் இந்த திருமணத்திற்கு சம்மதிச்சேன்.

நாள் ஆக ஆக, எனக்கு ஏன்டா இப்படி செய்தோம்னு தோணுச்சு. சரி, எப்படியும் இனி கல்லும் மண்ணும் போல தான் நம்ம வாழ்க்கைன்னு என்னை தேத்திக்கிட்டாலும், என் காதல உங்ககிட்ட சொல்லமுடியாம போகப்போகுதேன்னு ரொம்ப வலிச்சது. அதனால் தான் உங்களுக்கு கால் செய்து காதல சொன்னேன்” என்றவளை இறுக்கி அணைத்தான். அன்று அவள் அழைத்ததும் அவள் என்று தெரியாவிட்டாலும், நாள் செல்ல செல்ல அவளாக இருக்குமோ என்று அவனுக்கு ஐயம் வந்தது தான். அதையே தற்போது மகிழும் கூறவும், அவளை நினைத்து வருந்தவே முடிந்தது.

“உங்ககிட்ட பேசினதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்படியே செத்து போகலாமான்னு தோணினப்போதான் எதிர்ல லாரி வந்தது. உடனே எதுவும் யோசிக்காம குதிக்கப்போனேன். ஆனா, ஆதி வந்து காப்பாத்திட்டான்” என்று அவள் கூறிக்கொண்டே போக, என்னதான் இவையெல்லாம் ஆதி முன்பே தன்னிடம் சொல்லியிருந்தாலும், அதனை அவள் வாயால் மீண்டும் ஒரு முறை கேட்கும்போது அவனுக்கு நடுங்கியது. அன்று மட்டும் ஏதாவது ஆகியிருந்தால்?

அவளை தன்னில் இருந்து பிரித்தவன், “லூசாடி நீ? ஒன்னு கெடைக்காம போனா இப்படிதான் எங்கேயாவது போய் விழுந்து வைப்பியா?” என்று பொரிய ஆரம்பித்தான். ஆனால், அவன் எதிரில் இருப்பவளோ, கடந்த காலத்தில் உழன்று எதிரில் நிற்பவனை பார்த்து திருதிருவென்று முழித்தவாறு பார்த்திருந்தாள்.

‘இவரு எங்க இங்கே?’ என்றது மட்டும்தான் அவளுக்கு ஓடியது. பின் மெதுவாக சுயநினைவிற்கு வந்தவள், மெல்ல நடப்பு புரிய, தான் செய்ய இருந்த காரியத்தின் வீரியம் அப்போது தான் அவளுக்கு புரிந்தது.

“சாரி!” என்று தலைகுனிந்தவளைப் பார்த்தபோதும் அவனுக்கு கோபம் குறையவில்லை. அவளை விட்டு நகர்ந்து தோட்டத்தைப் பார்த்து நின்றான்.

“அன்னைக்கு எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? நீங்க இல்லாம ஒரு நாள் கூட கடத்த முடியல. இதில் வாழ்க்கை முழுக்கன்னா, என்னால முடியும்னு தோணவே இல்ல” என்று அவள் கூற, நீள மூச்சுகளை எடுத்து தன்னை நிதானப்படுத்தியவன், அவள் முகம் பார்த்தான்.

அவள்தான் தனக்கு என்று அவன் முடிவெடுத்துவிட்டாலும், அதனை அவளுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தது அவன் குற்றம் தானே! அவளுக்காகவே தந்தை சொன்னதைக் கேட்டு அவர் கூறியபடி படித்துமுடித்துவிட்டு தொழிலை கையிலெடுத்தான். இருவருக்குமாக இவன் வழி வகுத்தால், அவள் வேறு பாதையில் சென்று தன்னை குழப்பிக்கொண்டிருந்திருக்கிறாள். இருவருக்கும் சமஅளவில் இதில் பங்கு உண்டே!

அதனைக் கண்டுகொள்ளாமல் மேலும் பேசிக்கொண்டே சென்றாள் மகிழ்.

“எப்படியோ போகட்டும்னு நான் நினைக்கும்போதுதான் அன்பு அன்னைக்கு வேற பொண்ணு கழுத்துல தாலிகட்டினார். அப்போ தான் எனக்கு நிம்மதியாச்சு. ஆனா, அவர திட்டும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நான் உண்மைய சொல்ல வந்தப்போ அவர் என்னை தடுத்திட்டார்” என்று அவள் சொல்ல,

“அவர் வகைல பார்த்தா அவர் செய்தது சரிதான். விருப்பம் இல்லாத பொண்ண கட்றதவிட தன்னை விரும்பறவங்கள கட்றதுதான் நல்லது” என அவன் கூற, “உங்களுக்கு எப்படி அவர தெரியும்?” என்று கேட்டாள்.

“அவரிடம் பேசினேன். நீயும் ஆதியும் பேசினத கேட்டதா சொன்னார். பின்னர் நம்ம திருமணம் பற்றி சொல்லவும், ரொம்ப சந்தோஷப்பட்டார். அடுத்த வாரம் வருவதாக சொல்லியிருக்கார்” என்றான்.

அதில், எங்கே அன்புவிற்கு தான் கெடுதல் செய்துவிட்டோமோ என்று இருந்த எண்ணம் அவளுக்கு விலகிச் சென்றது.

“ஏங்க…” என்று அவள் சொல்ல,

“எதுக்கு ஏங்கனும்?” என்று அவன் மறுகேள்வி கேட்க, அவள் புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.

“ஏக்கமே இல்லன்னு சொல்லமாட்டேன். ஒரு சின்ன ஏக்கம் இருக்கத்தான் செய்யுது” என்று அவன் கூறியவாறு, கட்டிலில் அவள் வைத்திருந்த டைரியை நோக்கி சென்றான். அவளும் அவன் பின்னே வர, அவளை தன் கைவளைவினுள் வைத்துக்கொண்டே, அதனை திறந்தான்.

முதல் பக்கத்தில் இருவரது பெயரையும் சேர்த்து எழுதியிருந்தாள் மகிழ். அதனைக் காட்டி, “இதை பார்த்ததும், நான் எப்படி ஃபீல் பண்ணேன்னு எனக்கு சொல்லவே தெரியல. இந்த டைரியை திறந்த எத்தனையோ டைம் இந்த பேஜை மட்டும் வைத்து பார்த்துக்கொண்டிருந்திருக்கேன்” என்று கூற, காதலுடன் அவனை பார்த்திருந்தாள் அவள்.

அடுத்த பக்கத்தை அவன் திருப்ப, அதில் அவர்கள் அனைவரும் நிற்பதுபோல் வரைந்திருந்தாள். “நீ இவ்வளவு தத்ரூபமா வரைவியா? அதுவும் நம்ம எல்லாரையும் சேர்த்து வரைந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது தெரியுமா?” என்று அவன் சொல்ல, அவனைப் பார்த்து அசடு வழிந்தாள் அவள்.

என்னவென்று கேட்டவனிடம், “உங்கள பத்தி தெரியறதுக்கு முன்னாடி உங்க குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிச்சது. கீர்த்தி உங்கள பத்தி சொல்லவும், உங்களோட ஒன்னாவே இருந்தா எப்படி இருக்கும்னு தோணுச்சு. அதிலிருந்து தான் எனக்கு உங்கள பிடிச்சது. ஏனோ, அம்மாவிடமும் அப்பாவிடமும் சிறுவயதில் இருந்து அவ்வளவா ஒட்டியதில்லை. அவங்க எனக்கு ஊட்டிவிடனும்ங்கறதுக்காகவே சாயந்திரம் ஏழு மணிக்கே ரெண்டு கைலயும் மருதாணி வைக்க சொல்லி அடம் பிடிப்பேன். ஆனால், அவங்க நைட் வைக்கிறேன்னு சொல்லிட்டு போயிடுவாங்க. பிறகு வளர வளர அவங்க வேலை இருக்குன்னு செய்யற சின்ன சின்ன விஷயங்களால எனக்கு அவங்க வேணும்னே விலகிப் போறாங்கன்னு தோண ஆரம்பிச்சிருச்சு. வளர்ந்ததும் கூட அவங்க மேல இருக்க கோபத்த பிடிச்சு வெச்சுட்டே இருந்தேன். நீங்க சொல்லவும் தான் ஏதோ காது கொடுத்து கேட்டேன். அதுவும் சொன்னது நீங்கங்கற ஒரே காரணத்தால் தான். பிறகு அவங்கள புரிஞ்சுக்கிட்டாலும், முன்ன மாதிரி ஒட்ட முடியல. அவங்ககிட்டயும் ஈகோ பார்த்திருக்கேன் போல… அதான் உங்க வீட்ட ரொம்ப பிடிச்சுப்போச்சு” என்று அவள் சொல்ல, பாசத்திற்காக எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் என்று புரிந்தது. அதனை அவளுக்கு அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் என்று எண்ணினான் அவன்.

அடுத்த படத்தை அவள் திருப்ப, கவனத்தை அங்கே கொண்டு சென்றான். ஒவ்வொன்றையும் அவர்களது வாழ்வு எவ்வாறு இருக்கவேண்டும் என்று எண்ணி எண்ணி அவள் தீட்டியவை. ஒவ்வொன்றிற்கும் அவள் சொல்லிக்கொண்டே வர, அதை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தான்.

கடைசி படம் வர, “அவ்வளவுதான்” என்பதுபோல் அவள் மூடி வைத்துவிட, “ஹனி… நான் பார்க்கவேண்டியதே கடைசி படம் தான்” என்றவன் அவள் மறுப்பையும் மீறி அதனை பிரித்தான்.

அங்கே, இருவரின் கல்லூரி சந்திப்பை ஓவியமாய் தீட்டியிருந்தவள், அதன்கீழே கவிதைகள் இரண்டை எழுதியிருக்க, அதனை சுட்டிக்காட்டினான்.

“டைரி ஃபுல்-ஆ சந்தோஷமா எழுதியிருக்க. ஆனால், இந்த கவிதை மட்டும் சோகமாக இருந்தது. இதை படிச்சிட்டு என்னால தாங்கவே முடியல” என்று அவன் கூற, பாவமாக அவன் முகம் பார்த்தாள் அவள்.

அவள் முதல் கவிதையை ஈன்றதே அவன் மீது உள்ள காதலால் தான். அந்த நிகழ்விற்குப் பிறகு எழுதுவதை முழுவதுமாக விட்டுவிட்டாள். அவனை திட்டி அவளால் எழுதமுடியாது. வேறு யாரைப் பற்றியும் எழுதுவதும் அவளால் முடியாது என்று. இப்போது அவன் கேட்கவும், சிறிது யோசித்தவள், அந்த கவிதைகளைப் படித்தாள்.

முதல் கவிதையை மாற்ற இயலாது என்பதை உணர்ந்தவள், அடுத்ததை வாசித்தாள்.

எனக்கென பெய்யாத

உன் காதல் மழைக்காக ஏங்கும்

சக்கரவாகம் நான்

என்று எழுதியிருந்தாள். அதனை அடித்துவிட்டு,

எனக்கென மட்டும் பெய்யும்

உன் காதல் மழையை

விரும்பி அனுபவிக்கும்

சக்கரவாகம் நான்

என திருத்தி எழுதியவள், இன்னும் சிலவற்றை எழுதி அவனிடம் நீட்ட, அதனைப் படித்தவன் அவளை பாய்ந்து அணைத்துக்கொண்டான்.

நிலை தாண்டிடும்போது

கவனமாய் இடித்திடும் சுண்டுவிரலைப் போன்றது

உனை தாண்டிடும் என் நிலை!

*****

புது மெட்டியின் மினுமினுப்பும்

துளி அசௌகரியமும்

ஒருங்கே கொண்டவனடா நீ!

(இந்த இரண்டு கவிதையும் எழுதி கொடுத்தது தெரிந்த ஒரு அக்கா!)

என்று எழுதி, “ஆனாலும், உன்ன மட்டும் தானடா பிடிக்குது!:love:;)” என்று முடித்திருந்தாள்.

சேர்ந்து வாழ ஏங்கிய ஜீவன்கள் இரண்டிற்கும் அவர்கள் கேட்ட வரம் கிடைத்தேவிட்டது.

இந்த காதலும் அதனோடு சேர்ந்த ஊடலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வந்தாலும், இருவரும் காதலை பெருக்கி, ஊடலை வகுத்து வாழ வாழ்த்தி, அப்படியே டிஸ்டர்ப் பண்ணாம ஓடிருவோம்… இதுக்கும் மேல அங்க இருந்தா ரெண்டு பேருமே நம்மள தொரத்திடுவாங்க.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top