உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 22

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, அடுத்த அப்டேட்... இது சின்னது தான். இன்னும் சில சீன்ஸ் இதிலேயே சேர்க்க நினைத்தேன். ஆனால், முடிப்பதற்கு இதுவே சரி என்று தோன்றியதால், இத்தோடு தொடரும் போட்டாச்சு.

முதலிலேயே இந்த பதிவை ஓப்பன் செய்பவர்களுக்கு, இதற்கு முன்பே ஒரு அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். அதையும் படித்துவிடவும்:):)

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 22

rana-and-sai-pallavi.jpg


“உனக்கென்ன பைத்தியமாடி பிடிச்சிருக்கு? கொஞ்சமாவது எங்களைப் பற்றி நினைத்து பார்த்தியா?” என்றவனுக்கு மகிழை மூன்று மணி நேரமாக திட்டியும் கோபம் குறைந்தபாடில்லை. தன் நண்பனின் வீடு அந்த பக்கம் இருக்க, அவனிடம் படிப்பதற்கு புத்தகம் வாங்க சென்றவன் அவளைக் கண்டு கடைசி நிமிடத்தில் காப்பாற்றியிருந்தான். அவ்வாறு தான் பார்க்காவிட்டால் தன் அன்பு அக்கா இப்போது இங்கே உயிரோடு இருந்திருக்க மாட்டாள் என்பதே அவனை நடுங்கச் செய்தது.

“அப்படி உனக்கு என்னடி குறை? எல்லாம் நல்லாதான இருக்கோம் உங்கிட்ட? இத்தனை பேர் இருக்க எவனோ ஒருத்தன் தான உனக்கு முக்கியமா போயிட்டான்?” என்றவன் ஆதங்கத்தில் வேறு என்னவெல்லாம் சொல்லியிருப்பானோ, அதற்குள் அவனை தடுத்தது மகிழின் குரல்.

“என்னை என்ன வேணாலும் சொல்லு… ஆனா அவரப் பத்தி ஒரு வார்த்தை பேசாத” என்று அழுதுகொண்டே கூறியவளை என்ன செய்தால் தகும் என்பதுபோல் பார்த்தான் ஆதி.

அவளிடம் அவனும் கேட்டுவிட்டான். தான் ஒருத்தரைக் காதலிப்பதாகவும், அவனுக்கு தன் மேல் விருப்பமில்லை எனவும், அவனை மறக்கமுடியாததால் இந்த முடிவெடுத்ததாகவும் கூறியவள், அவன் யார் என்பதை மட்டும் எப்படி கேட்டும் மூச்சு விடவில்லை.

மகிழிடம் எப்படி பேசினாலும் இனி ஒன்றும் கறக்க முடியாது என்பதை உணர்ந்தவனுக்கு என்ன செய்வதென்பதும் தெரியவில்லை. அவள் பெற்றோரிடம் கூறலாம் என்றால், அதற்கும் தடா விதித்திருந்தாள் அவள். அவன் வயதிற்கு இதனை அவர்களிடம் கூறுவதே உசிதமாகப் பட்டது. அந்த வழியும் அடைக்கப்பட, இந்த நிலைமையில் இருப்பவளை நினைத்து பயம் வந்தது. ஒரு முறை முயன்றவள் திரும்பவும் செய்யமாட்டாள் என்பது என்ன நிச்சயம் என்று யோசித்தவன், அவள் வழியிலேயே சென்று தற்கொலைக்கு முயலமாட்டேன் என்று சத்தியமும் வாங்கிவிட்டான்.

இருந்தும், அவனுக்கு மனம் கேட்காமல், திருமணம் வரை அக்காவுடன் இருக்கிறேன் பேர்வழி என்று அவளுக்கு நிழல்போல் இருந்து காவல் காத்தான். அந்த காவல் திருமணத்திற்கு முதல் நாள் வரை தொடர்ந்தது.

முதல் நாள் நிச்சயம் நடக்க, அதை முடித்துவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தவளுக்கு அங்கே இருப்பதே அடைபட்ட உணர்வைத் தர, அனைவரும் உறங்கியபின் மாடிக்கு சென்றவள் இருளை வெறித்து நின்றாள்.

நாளை முதல் அவள் வாழ்வு மாறப்போகிறது. அவள் புகழுடன் வாழ நினைத்த ஒவ்வொரு நொடிக்கும் வேறு ஒருவன் இனி சொந்தமாகப்போகிறான் என்று நினைக்கும்போதே கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, அங்கேயே சுவரில் சாய்ந்தமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அப்போது அந்த சுவரில் ஹார்ட்டின் வரைந்து அதனுள் தமிழ் லவ்ஸ் திவ்யா என்றிருந்தது கண்ணில் பட, அருகில் கிடைத்த சாக்பீஸைக்கொண்டு திவ்யாவை அழித்தவள் அதில் தன் பெயரை எழுதி அழகுபார்த்தாள். பின், அது நடக்காது என்பதை உணர, மீண்டும் அழுகை வந்தது அவளுக்கு.

சிறிது நேரம் அழுது கரைந்தவளுக்கு கீழே செல்ல விருப்பமே இல்லை. அப்போது அங்கே வந்தான் ஆதித்தியா.

“இங்க என்னடி பண்ற?” என்று கேட்டவனுக்கு நிலவின் உபயத்தில் அவள் கிறுக்கியது தெரிய, கோபம் கொண்டவன், இது அதற்கான தருணம் இல்லை என்பதை உணர்ந்து அவளை சமாதானப்படுத்த நினைக்க, அதற்குள் அவனைக் கட்டிக்கொண்டவள்,

“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் பட்டு…” என்று கதறினாள். சிறுவயதில் இருந்து அவனை பட்டு என்று தான் அவள் அழைப்பது. அவன் வளர்ந்ததும் அவளை மிரட்டி அவ்வாறு அழைக்கக்கூடாதென்று கேட்டிருந்தான். அதன்பின் அழைப்பதில்லை என்றாலும், என்றாவது உணர்ச்சிவசப்படும்போது அவ்வாறு அழைத்துவிடுவது உண்டு.

பல வருடங்கள் கழித்து அவன் கேட்ட அந்த செல்லப்பெயர் அவள் தன்னிலையில் இல்லை என்பதை உணர்த்த, அவளை அணைத்துக்கொண்டவன்,

“அக்கா… இங்க பாரு! நாளைக்கு கல்யாணத்த வெச்சுட்டு இப்போ வந்து சொல்றியே! வீட்ல இந்த திருமணம் நின்னு போனா எவ்வளவு வருத்தப்படுவாங்க? நீ வேணா பாரேன்… கொஞ்ச நாள்ல தமிழ்ன்னா யாருன்னு கேட்ப…” என்றவனுக்கு,

“என்னால முடியலடா… அவன்கிட்ட போகனும்னு என் மனசு சொல்லுது… வேண்டாம்னு புத்தி சொல்லுது… எனக்கு பைத்தியமே பிடிக்குது… ஆனால், இது மட்டும் வேண்டாமே! நான் உங்களோடவே கடைசி வரைக்கும் இருந்தர்றேனே… யாருக்கும் எந்த தொந்திரவும் கொடுக்க மாட்டேன்… நல்ல புள்ளையா இருப்பேன்… நான் உங்களுக்கு வேண்டாம்னா சொல்லுங்க… யாரு கண்ணுலையும் படாம எங்கேயும் போயிட்றேன்” என்று பள்ளிக்கு செல்ல மறுக்கும் சிறுமிபோல கூற, அவனுக்கு அதைப் பார்த்து இரக்கப்படத்தான் முடிந்தது. இருந்தாலும், இப்போது அதனால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லையாகையால் தன் இளக்கத்தைக் காட்டாமல், சற்று கடுமை ஏறிய குரலில்,

“உனக்கு சொன்னா அறிவில்ல? உன்னோட கல்யாணத்த முடிவு பண்ணியதில் இருந்து உன் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க தெரியுமா? ஆனா, உனக்கு உன்னப்பத்தி மட்டும் தான கவலை? நீ எப்போல இருந்து இப்படி ஆன? போ! கீழ தான இருக்காங்க, அவங்ககிட்ட போய் எல்லாத்தையும் சொல்லு… நம்ம பொண்ண நல்லா வளர்த்துருக்கோம்னு பெருமைப்பட்டுக்குவாங்க. அவங்களுக்கு என்ன ஆனா உனக்கென்ன?” என்று அவளைப் பிடித்துத் தள்ள, அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள் மகிழ்.

பின்பு அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி கீழே அழைத்துவர, அவர்கள் இருவருமே இருட்டில் அங்கே வந்து சென்ற மற்றொரு உருவத்தை கவனிக்கவில்லை.

மறுநாள் பொம்மையென தயாராகி மேடையில் அமர்ந்தவளுக்கு சுற்றி நடப்பது எதைப் பற்றியும் கவலையில்லை. ‘சாகப்போறவன் கரண்ட்ல அடிபட்டு செத்தா என்ன, குளத்துல விழுந்து செத்தா என்ன?’ என்ற மனநிலையில் இருந்தாள்.

அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிய தாலி அவள் கழுத்தில் ஏற அன்புவில் கையில் வந்து தருணம் பார்க்க, அதுவரை குனிந்த தலையை நிமிரவில்லை அவள். அவளையே பார்த்திருந்தவனுக்கு நேற்று நடந்ததெல்லாம் கண்முன் வந்தது.

இரவு தூக்கம் வராமலிருக்க, சிகரெட் பிடிப்பதற்கென்று மாடிக்கு வந்தவன் மகிழும் ஆதியும் பேசியதைக் கேட்டிருக்க, அவர்கள் கீழே வருவது தெரிந்து அவர்கள் அறியாதவாறு மீண்டும் தன் அறைக்கு வந்துவிட்டான். இரவு முழுவதும் யோசித்தவன் ஒரு முடிவிற்கு வந்திருக்க, காலையில் இருந்து மகிழைப் பார்த்தவனுக்கு அவன் எடுத்த முடிவே சரி என்று தோன்றியது.

தன்னருகில் வந்த கை அப்படியே நிற்பதைக் கண்டு அவள் அவன் முகம் பார்க்க, அவளருகே குனிந்தவன், “எப்போவாவது உன்னால் என்னை காதலிக்க முடியுமா?” என்று தீர்க்கமாக கேட்டான். அதில் கலக்கத்தோடு அவன் முகம் பார்த்தவளின் கலங்கிய விழிகளே அந்த பதிலைக் கூற, அதில் விரக்திப்புன்னகை ஒன்றை சிந்தியவன், அவளுக்கு பின்பு நின்றிருந்த தன் முறைப்பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

என்னதான் தனக்கென்று நிச்சயிக்கப்பட்டபின் தான் அவளை அன்பு விரும்பினாலும், அவளுக்கு தன்மீது விருப்பம் இல்லை எனும்போது இருவரையும் பந்தத்தில் பிணைத்துவைப்பது சரியாகப்படவில்லை அவனுக்கு. அதுவும், தன்மீது காதலே வராது என்பவளுடன் வாழ்வதைவிட, தன்னை மணக்க விருப்பம்கொண்டு இருப்பவளே அப்போது தனக்கு ஏற்றவளாகத் தெரிந்தாள் அவன் கண்களுக்கு. சிறுவயதில் இருந்தே அவன் முறைப்பெண் அவன்மீது காதல் கொண்டிருக்க, குடும்பப்பகை காரணமாக சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது, சமீபத்தில் தான் சரியாக, அவள் விருப்பம் அவனுக்கு தெரியும்போது அவனுக்கு மகிழுடன் திருமணம் உறுதியாகியிருந்தது.

இதில் அனைவரும் அதிர்ச்சியடைய, அங்கே மகிழ் விட்ட நிம்மதிப் பெருமூச்சு யார் கண்ணிலும் படவில்லை. அதன்பின், அனைவரையும் சமாளித்தவன், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டு மகிழின் பெயர் வெளியே வராமல் பார்த்துக்கொண்டான். அந்தப் பெண்ணும் அன்புவுடனேயே வாழ்வதற்கு உறுதியாக இருக்க, அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி ஆனது.

இதில் மிகவும் உடைந்துபோனது மகிழின் பெற்றோர்கள் தான். அவர்களின் கண்ணீரைக் கண்டு உண்மையும் கூறமுடியாமல் நின்றிருந்தாள் மகிழ். அவளுக்கு அன்புவின் செயலுக்குப் பின் இருந்த காரணம் ஓரளவுக்கு விளங்க, அதனை அவள் விளக்க முற்படும்போது கூடவே கூடாதென்று தடுத்துவிட்டான் அவன். அதன்பின், நடப்பவை அனைத்தையும் கையாலாகாதனத்துடன் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது அவளுக்கு.

சில நாட்களில் தேறியவர்கள் அவளுக்கு வேறு இடம் பார்க்க நினைக்க, அவர்களிடம் சில வருடங்கள் போகட்டும் என்று கூறியவள், சென்னையில் தெரிந்த இடத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள்.

*******

அங்கே புகழ் தன் முன் வைக்கப்பட்டிருந்த மோதிரத்தை எடுத்து ப்ரார்த்தனாவை நோக்க, அவளும் அவன் முன் தன் கையை நீட்டினாள். புகழ் அவள் கைப்பிடித்து மோதிரம் அணிவிக்கும் சமயம், ஒரு குரல் “நிறுத்துங்க…” என்றது.

அந்த சத்தம் மகிழின் மனதைத் தட்டி விழிகளை மலர்த்தச் செய்ய, குரல் வந்த திசையை நோக்கியவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் ஆதித்தியா. ‘இவன் என்ன செய்யறான்?’ என்று அவள் பார்த்திருக்க, அவன் மேலும் கூறியது அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

“யோவ் மாமா… ஏதோ உன்ன ஒன்னோட லவ்வரோட சேர்த்து வைக்க நாங்க நெனச்சா… நீ என்னோட லவ்வர என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கறியே! இது நியாயமா?” என்றவன், மேலே அவள் யோசிக்கும்முன் கையைப் பிடித்து மேடையேற்றி புகழின் அருகில் நிப்பாட்டியவன்,

“இந்தாங்க உங்க லவ்வர்… இவளோட சண்ட போடுவீங்களோ, சமாதானமாவீங்களோ! உங்க ரெண்டுபேர் பாடு. இதுக்கும்மேல என்னால என் ஆள இந்த நாடகத்துல நடிக்க வைக்க முடியாது” என்றவன் ப்ரார்த்தனாவின் பக்கம் சென்று நின்றுகொண்டான்.

அப்போதும் தெளிவாக எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழித்திருந்த மகிழ் சுயநினைவிற்கு வந்தது, புகழ் அவள் கைபற்றி மோதிரம் அணிவித்தபோது தான்.

அதில் ஸ்மரனைப் பெற்றவள், நடப்பதை தாங்கமுடியாமல் தொய்ந்து தரையில் விழுந்தாள்.

மீதம் நாளை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top