உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 15

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்து ஆதரவளித்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி... இதோ அடுத்த பகுதி. படிச்சிட்டு உங்க எண்ணங்களை ஷேர் செய்யுங்கள் ஃப்ரெண்ட்ஸ்...


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 15

rana-and-sai-pallavi.jpg

கண்ணீர்… அது விலைமதிப்பற்றதோ இல்லையோ, பிடித்தவர்களுக்காக சிந்தப்படும் கண்ணீர் கண்டிப்பாக விலைமதிப்பற்றது தான். அதனை அளவில்லாமல் சுரந்து கொண்டிருந்தன மகிழின் விழிகள்.

தனக்குள்ளே இருக்கும் அவனிடம் நெடுநேரமாக பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

‘ஏன் தமிழ், என் காதல் அவ்வளவு அதிர்ஷ்டமற்றதா? உன்னிடம் சொல்லி மறுப்பு வாங்க கூட அதற்கு கொடுப்பனை இல்லாமல் போய்விட்டதே! இனி என்னால் என்றும் அதை சொல்லக்கூட முடியாதேடா… என் முகத்தில் முழிக்காதேன்னு சொல்லிட்டியே! அது மட்டும் இல்லாம என்ன வார்த்தை சொன்ன!’ என வாய் விட்டு கதற முடியாமல் தன் துப்பட்டாவை அடைத்து சத்தத்தை வெளிவராமல் தடுத்தவளுக்கு தன் நயனங்கள் சுரக்கும் நதியை தடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து என்றுமே அவள் விழிகளின் மழைக்கு அம்ருதவர்ஷினி தேவையே இல்லை. புகழின் நினைப்பு ஒன்றே போதும், இன்று வரைக்கும்.

‘ஐயோ ஐயோ! நீ என்னிடம் முதன்முதலில் நேரில் பேசும் வார்த்தை இப்படியா இருக்கனும்?’ என்று நினைத்தவள் மனதில் அங்கு நடந்தது படம் போல் ஓடியது. மெல்ல தன்னை அந்த நினைவுகளிடம் இருந்து விலக்கியவள் இரவு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யலானாள்.

******

அன்று இரவே பாட்டியும் அவளும் ஊருக்கு திரும்பவேண்டியிருந்தது. கிளம்பும்போது தன் தாயை கட்டிக்கொண்டவளுக்கு ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவள் அழுததைக் கண்டவர்களுக்கு பெண்ணை தங்களுடனே வைத்துக்கொள்ளலாமா என்று கூட தோன்றிவிட்டது. ஆனால், அவள் படிப்பு அங்கே இருக்கிறதே!

எனவே, ஒரு வருடம் முடிந்ததும் அவளை இங்கே உள்ள கல்லூரியில் சேர்க்கலாம் என அவர்கள் நினைக்க, ஒரு வாரத்திலேயே தாய்க்கு அழைத்து தன்னை கூப்பிட்டுக்கொள்ளுமாறு கதறினாள் பெண்.

கோவை வந்தவள் கீர்த்தியைக் காண, ‘ஐயோ!’ என்றானது. இதுவரை கீர்த்தியும் தானும் எப்போதும் இதே அன்போடு ஒன்றாக இருப்போம் என்று தன் ஆழ்மனது விடுத்த ‘நீ அவளுக்கு தெரியாமல் அவள் அண்ணனைக் காதலித்து துரோகம் செய்கிறாய்!’-ஐ ஒதுக்கியவளுக்கு இப்போது அது விஷ்வரூபம் எடுத்து தெரிய, தன்னை நினைத்தே வெறுத்துப்போனாள் மங்கை.

அதுவும் இவள் சோகமாக இருப்பதை பெற்றோரை பார்த்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட சோகம் என்று நினைத்து அவளை உற்சாகப்படுத்த கீர்த்தி நகைச்சுவையாய் பேச, மகிழுக்கு எதுவோ ஒன்று அவள் மனதை கூறாக அறுத்தெடுப்பது போல தோன்றும். அப்போது எல்லாம் தலைவலி என்று சொல்லி தன் படுக்கைக்கு சென்று கண்ணீர் விடுவாள் மகிழ்.

இங்கே வந்ததிலிருந்து அவள் புகழிடம் பேசவும் இல்லை, அவள் முகபுத்தக கணக்கை உயிர்ப்பிக்கவும் இல்லை. அவனிடம் பேச அவளுக்கு தைரியம் வரவில்லை என்பதே உண்மை. அவனே ‘என் முன்னால் இனி வராதே’ என்றபிறகு மீண்டும் சென்று அவன்முன் நிற்க அவள் விரும்பவில்லை. ‘அப்படி செய்தால் என்ன?’ என்று அவள் நினைக்கும்போது எல்லாம் ஒரு கணம் விழிகளை மூடி அன்று நடந்ததை நினைத்து மனதை சமன்படுத்திக்கொள்வாள்.

ஒரு வாரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதவள், தாயிடம் அழைத்துக் கதற, அவள் சொன்ன ‘நான் அங்கே வரேன்ம்மா. ப்ளீஸ்ம்மா… என்னால இங்கே இருக்க முடியல’ என்ற வார்த்தைகள் அவளை பெற்றவரை கலங்கடிக்க வைக்க, தன் பெற்றவருக்கு அழைத்தவர் என்னவென்று கேட்டார்.

அவரும் என்னவென்று சொல்வார்? நன்றாக இருந்த பிள்ளை இவ்வாறு திடீரென்று மாறிய விதம் அவருக்கும் புரிபடவில்லை. அவர் என்ன கேட்டாலும் ‘அம்மாகிட்ட போகனும்’ என்பதைத் தவிர ஒன்றும் அவள் கூறவில்லை. கீர்த்தி கேட்டாலும் பதில் இதுவே.

வேறு வழியில்லாமல் அவள் அடுத்த கல்வியாண்டில் அவள் தாயின் பள்ளியிலேயே சேர மிகவும் பிரயத்தனப்பட்டு இடம் வாங்கினார்கள். இதற்குள் பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வுகள் முடிந்திருக்க, விடை பெற வந்த மகிழை பிரிய மனமில்லாமல் பிரிந்தாள் கீர்த்தி. மகிழிடம் உரையாடுவதற்காக அவள் தொலைபேசி எண்ணைக் கேட்க, தான் அங்கிருந்து அழைப்பதாக கூறியவள் அவளை விட்டு கண்ணீருடன் பிரிந்து சென்றாள். அவளுக்கென கிடைத்த உண்மையான நட்பல்லவா?

அவளுடனே இருக்க விரும்பிய பாட்டியும் அவளுடனே திருச்சிக்கு வந்துவிட, அத்தோடு பொள்ளாச்சிக்கும் அவளுக்கும் இருந்த உறவு முற்றிலும் அறுந்து போனது.

*****

திருச்சி வந்தவள் புகழின் நிகழ்ச்சிகளை மட்டும் கேட்டுக்கொள்வாள். மற்றபடி அவனை நெருங்க அவள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

பள்ளிப்படிப்பை முடித்தவளிடம் என்ன படிக்கப் போகிறாய் என்று அவள் பெற்றோர் கேட்க, அவளுக்கு இன்டீரியர் டிசைனிங்கை தவிர வேறு ஒன்றும் தோன்றவேயில்லை. புகழுக்கு பிடித்ததாயிற்றே! அவனுக்கு பிடித்தது அனைத்தும் அவளுக்கும் பிடித்தது. அவனைத் தாண்டி அவளால் எதுவுமே யோசிக்க முடியவில்லை.

அவனுக்குத் தன்னை பிடிக்காதென்பதாலேயே அவனுக்கு பிடித்தது அனைத்தையும் செய்து தனக்கே தன்னை பிடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் அந்த காதற்பேதை. முடிவு, அவன் அதே கல்லூரியிலேயே அவளுக்கும் இடம் கிடைத்தது.

அது தெரிந்ததும் அழுவதா சிரிப்பதா என்று தெரியாத ஒரு நிலையில் இருந்தாள் மகிழ். பின்பு, வாழ்க்கை கொண்டு செல்லும் பாதையில் செல்வதற்கு முடிவெடுத்தவள் அனைத்தையும் ஒரு பார்வையாளராய் காண ஆரம்பித்தாள்.

அவள் கல்லூரியில் சேரும்போது புகழ் படிப்பை முடித்து வெளியேறியிருக்க, அவனை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. அதுவும் ஒரு வகையில் நன்மையாகவே பட்டது அவளுக்கு.

ஒரு முறை மட்டும் புகழ் அதன்பின் தன் சான்றிதழ் வாங்க கல்லூரிக்கு வந்திருக்க, அன்று அவனை தூரத்தில் இருந்தே பார்த்து சென்றுவிட்டாள் மகிழ். அவன் நினைவு வரும்போதெல்லாம் அவளுக்கு அவனை பார்த்து ரசித்த கல்மேடை மட்டுமே துணை.

அவனுடன் சந்திப்பு ஏற்பட்ட இடத்தை முற்றிலும் தவிர்த்துவிடுவாள். எப்போதாவது அதன்வழியே செல்லும்போது அவள் மனம் மிகுந்த பாடுபடும்.

வருடம்தவறாமல் அவனுக்கு இஷ்டமான அந்த கோவிலுக்கு மட்டும் செல்வதை அவள் மறப்பதில்லை. என்றுமே புகழ் வீட்டினர் காலையிலேயே அங்கு வந்து சென்றுவிடுவதால் மாலை வருபவளை அவர்கள் காண முடியாது போய்விடும்.

தன் வீட்டினர் வருந்தக்கூடாது என்று தான் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக்கொண்டவளின் வாழ்வில் விழுந்த முதல் கல், அவள் பாட்டியின் மரணம். மகிழ் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது நிகழ்ந்தது.

அடுத்த கல் கல்லூரி முடித்ததும் திருமணம் என்ற பெயரில் விழுந்தது.

*****

முடிந்தவரை தன் பெற்றோரிடம் போராடிப்பார்த்தவளினால் அவர்கள் ‘எங்களுக்காக இதை மாட்டும் செய்’ என்று கெஞ்சும்போது எதுவும் செய்ய முடியாமல் போனது.

அவள் மனம், ‘ஒரு முறையேனும் தமிழிடம் சென்று பேசிப்பாரேன்?’ என கேட்க, அவனிடம் யாசகமாகவேனும் காதலை வேண்டலாமா என்று நினைத்தவளை தடுத்தது அந்த முகம்.

இறுதியில் புகழைப் பற்றி நன்கு அறிந்திருந்தவள், அவன் என்றுமே தன்னை நினைத்து ஒரு பெண் தனித்திருப்பதை விரும்பமாட்டான் என்பதை உணர்ந்து சம்மதித்தாள்.

அதன்படி அவள் வாழ்வில் நுழைந்தான் அன்புச்செல்வன், பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வரன் தேடும் அவன் பெற்றோருக்கு அவனைப் பற்றிய விவரம் தெரியவர, விசாரித்தவரையில் அனைத்தும் நன்றாக இருக்கவே அவனைப் பிடித்திருந்தது அவர்களுக்கு.

மகிழிடம் தெரிவிக்கப்பட, ‘உங்க இஷ்டம்’ என்றவள் வேறு ஒன்றும் சொல்லவில்லை. என்னவென்று சொல்வாள்? நான் என்ற ஒருத்தி இந்த உலகத்தில் இருப்பதே தெரியாத ஒருவனை என் உலகமாக்கிக் காதலிக்கிறேன் என்றா?

புகழை அதுவரை மனதில் கொண்டிருந்தவள் அவனை தன் மனதில் இருந்து வெளியேற்றும் வேலையில் அன்றில் இருந்து மிகத் தீவிரமாக முயன்றாள். அவள் புகழுக்கும் கீர்த்திக்கும் உண்மையை கூறாமல் இருந்தது துரோகம் என்றே பதிந்து போயிருக்க, தற்போது மீண்டும் ஒரு துரோகம் செய்வதற்கு அவள் தயாராக இல்லை. எனவே, அந்த முயற்சி எவ்வளவு துன்பம் கொண்டதாக இருந்தாலும் அதனை செய்துத்தான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

கடினமாகத் தான் இருந்தது, சிகப்பு நிற ரோஜாக்களை, பிரம்பு ஊஞ்சல்களை, பூமரங்க் என அவனுக்குப் பிடித்தவற்றைக் காணும்போதெல்லாம் அவன்மட்டுமே நினைவிற்கு வந்தான். இவ்வளவு ஏன், அவன் மூச்செடுக்கும் நேரம் கூட அவளுக்கு அத்துப்படி. அவன் அவளை நெருங்கியிருந்த அந்த ஒரு நிமிடம் போதுமே அதை அவள் மனம் குறித்துக்கொள்ள. அவ்வளவு ஆழமாக தன்னுள் புதைந்திருப்பவனை தனக்குள் இருந்து எடுத்து வெளியேற்ற மிகவும் பாடுபட்டு போனாள்.

‘அவன் வேறு ஒருத்திக்கு உரிமையானவன், நீயும் வேறு ஒருத்தருக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவள்’ என்று அவள் தன்னைத் தானே திட்டியும் அது தன் பிடியில் இருந்து தளரவில்லை. இவளும் தான் சொல்வதைக் கேட்கும்வரை விடாது முயற்சிக்கும் குரங்காட்டியைப் போல தளரவில்லை.

அதுவும் முடியாதென்று தெரிந்து போனது, அன்பு அவளுக்கு அழைத்தபோது.

வேறு வழியில்லாது பேசியவளுக்கு தனக்குள் எழுந்த ஒவ்வாமை என்றுமே அவளால் புகழை மறக்கமுடியாது என்று முகத்திலடித்தாற்போல் உரைத்தது.

நாட்கள் செல்ல செல்ல, புகழை மறக்கவேண்டும் என்று நினைத்தவளுக்கு எவ்வாறேனும் திருமணத்தை நிறுத்த முடியுமா என்று தோன்ற ஆரம்பித்தது. அன்பு அவளிடம் பழக ஆவலாக இருந்த விதத்திலேயே அவன் மனம் புரிய, வேறு வழியில் முயன்று பார்த்தாள். அதுவும் முடியாதென்று தெரிய வர, பேசாமல் இறந்துவிடலாமா என்று கூட யோசிக்கலானாள்.

அனைவருக்கும் தொல்லை கொடுத்து வாழ்வதைவிட இறப்பதே மேல் என நினைத்தவள் தற்கொலைக்கு முயல, அவளை தடுத்தது அங்கிருந்த தாய் தந்தையின் புகைப்படம்.

அவர்களைப் பார்த்தவளுக்கு தன் தற்கொலை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவளுக்கு அதுவும் முடியாமல் போனது.

எதுவும் யோசிக்கத் தோன்றாமல் மரத்துப்போய் அமர்ந்திருந்தவள் நீண்ட நேரம் கழித்து அந்த முடிவை எடுத்தாள். அதனை செயல்படுத்தும்போது ஆதித்தியாவிடம் மாட்டிக்கொண்டாள். அதிலிருந்து அவளை அவன் தன் கண்வளையத்திற்குள்ளேயே வைத்திருக்க, அவளால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

*****

நாட்களும் மெல்ல நகர்ந்து நிச்சயிக்கப்பட்ட திருமண நாளும் நெருங்க, மணப்பெண்ணுக்கான எந்த சந்தோஷமும் இல்லாமல் அவள் அந்த நாளை எதிர்நோக்கலானாள். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் அவள் மனதில் இருந்த எண்ணம் மட்டும் வலுபெற்றுகொண்டே இருந்தது.

அவளுக்கு காவல் வைக்க முடிந்த ஆதியால் அவள் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு எவ்வாறு காவல் வைக்க முடியும்?

எனவே, அந்த விபரீதம் நிகழ்ந்தேவிட்டது.

*****

அனைத்தையும் நினைத்துப் பார்த்த மகிழுக்கு அவனிடம் அன்று செல்லாமல் இருந்ததற்கான காரணங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே இருப்பதாகவே பட்டது.

அவன் ஏன் தற்போது தன்னிடம் நெருங்க நினைக்கிறான் என்று அவளுக்கு என்ன யோசித்தும் புரியவில்லை. சின்னுவை விட அவனுக்கு எதுவும் பெரியதில்லை. அவளுக்கு அவன் எவ்வளவு பிடித்தம் என்பது அவனை அவள் பார்த்துக்கொண்ட விதத்தைக் கண்டே தெரிந்துகொண்டாள். மகிழ் தான் தினமும் யாரும் அறியாமல் மருத்துவமனை சென்றாளே!

ஒரு வேளை, லட்சத்திலும் ஒரு வாய்ப்பாக அவன் தன்னை நேசிக்கிறானோ? என்று நினைத்தவள் மறு நொடியே அதனை அழித்தாள். அவனுக்கு அவளைப்பற்றியும் அவள் காதலைப் பற்றியும் தெரியவே தெரியாதே!

எது எப்படியோ! இதுவரை எவ்வாறு இருந்தோமோ, அப்படியே இனிமேலும் இருப்போம் என்று முடிவெடுத்தவள், மெல்ல உறங்கினாள்.

*****

புகழ் அந்த புத்தகத்தைக் காண அது அவனைப் பார்த்து சிரித்தது. மெல்ல தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் அதனை திறந்து பார்க்க, முதல் பக்கத்தில் இருந்த பெயரை அதற்கு வலிக்குமோ என்று மெதுவாக தடவிக்கொடுத்தான். அவன் பெயரே அவள் பெயரோடு இணைந்து இருக்கும் இடத்தில் தான் அழகானதாக தோன்றியது அவனுக்கு.

அடுத்த பக்கத்தைக் காண, அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த படத்தில் அவன் அவளை தோளோடு அணைத்துக்கொண்டிருக்க, அவனோடு சாய்ந்தவாறு அவள் நின்றிருந்த அந்த குடும்பப்படத்தில் தான் அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, நிறைவு, காதல்.

‘இவ்வளவு காதலை தனக்குள் வைத்துக்கொண்டு மறுக்கிறாளே!’ என்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

அதற்கும் அடுத்த ஒரு படத்தில் பார்த்தால், அவர்கள் இருவர் மட்டும். ஒருவரை ஒருவர் பார்த்தவாறு காதலோடு நின்றிருந்தனர். பின்பு வந்த அனைத்து பக்கத்திலும் இருவர் மட்டுமே, காதலாக, விளையாடிக்கொண்டு, முறைத்துக்கொண்டு என்று.

ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவனின் கைகள் நின்றன கடைசி பக்கத்தில்.

அதனை பார்த்தவன், “ஓ… பேபி…” என்றவாறு அதனை அணைத்துக்கொண்டான்.


என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு ஓ

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு ஓ

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்


யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என்னை சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே


காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்
என் நினைவுகள் சருகுகள் ஆகும்
அந்த நேரத்தில் மழை என வாராயோ

ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட
ஒரு சாலையில் எதிர்படுவாயா

உன் காதலை சிறகென தாராயோ

காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top