உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 14

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

அடுத்த பதிவு இதோ... எங்க ஊருல எங்கேயும் காய்கறியே இல்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு முழு லாக்டவுனாம். உங்க ஊருல நிலைமை எப்படி?


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 14
rana-and-sai-pallavi.jpg


சத்திரம் பேருந்து நிலையம்.

அது ஏனோ, திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்தை விடவும் இது அவளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டிற்கு செல்ல இங்கிருந்து அதிகம் பேருந்துகள் உண்டு என்பதாலா அல்லது அதன் அருகே உள்ள சர்ச்சினாலா? அவள் அறியாள். முடிந்தளவு அவள் சுற்றும் இடமெல்லாம் சத்திரத்தை சுற்றியே இருக்கும்.

அன்றும் அதேபோல் அந்த பஸ் ஸ்டாண்டின் முன்பு வந்து நின்றவள் தந்தைக்காக காத்திருக்கலானாள்.

பெற்றோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வெள்ளியன்று மதியம் பள்ளியில் இருந்து விடுமுறை எடுத்து வந்தவள் அன்று மதியமே திருச்சிக்கு பஸ் ஏறிவிட்டாள்.

தன்னருகில் அவர்கள் இருந்தபோது உணராத பாசத்தை அவர்களை பிரிந்ததில் இருந்து நினைத்து உருகியவளுக்கு அவர்களோடு செலவளிக்கும் நேரம் இன்னும் வேண்டும் என்று அந்த பிஞ்சு நெஞ்சம் கேட்டதன் விளைவே அது.

இரண்டு மணிக்கு ஏறினால் இரவு உணவிற்கு வீட்டிற்கு சென்றுவிடலாம் என ஒரு வழியாக அரை மனதாக அனைவரையும் சமாதானப்படுத்தி கிளம்பியிருந்தாள் தன் பாட்டியுடன்.

“பாட்டி, அப்பா வரும்போது வரட்டும். நாம ஒரு டீ குடிப்போம் வாங்க” என்று அவள் தன் பாட்டியிடம் கேட்க,

அந்த முதியவரோ, தெரியாத இடத்தில் இந்த நேரத்தில் போகவேண்டுமா என்று யோசித்தவாறு நின்றிருந்தார்.

சிறிது நேரம் சமாளித்தவருக்கு ஆபத்தாண்டவனாய் மகிழின் தந்தை வரவும், அவரிடமே முறையிட்டவள் மற்ற இருவரையும் இழுத்துச்சென்றுவிட்டாள்.

ஒரு வருட கோவை வாசமும் தெருவுக்கு தெரு இருக்கும் டீக்கடையும் அவளை டீப்பிரியையாக மாற்றியிருந்தது.

அங்கே அமர்ந்த சிறிது நேரத்தில் அவள் பிரியமானவனின் குரல் செவிகளை தீண்டியது.

“ஹலோ திருச்சி! நான் உங்க ஆர்.ஜே. தமிழ். இந்த இனிய இரவு நேரத்தை மேலும் இனிமையாக்க இந்த ஒரு மணி நேரமும் நாம் அடுத்தடுத்து கலக்கலான சாங்ஸ் கேட்கப்போறோம்” என்று அங்கிருந்த ரேடியோவில் புகழ் பேச, அதனைக் கேட்ட அவள் பாட்டி,

“ஏன் கண்ணு, நம்ம கீர்த்தியோட அண்ணன் தானே இது?” என்று கேட்க,

கள்ளம் இல்லாமல் காதல் ஏது? பாட்டி இவ்வாறு கேட்கவும் எங்கே அவருக்கு தன் முகத்தில் அவன் குரலைக் கேட்டவுடன் தோன்றிய சந்தோஷத்தை பார்த்திருப்பாரோ என பயந்தவள்,

“தெ… தெரியலியே பாட்டி… அவரு எந்த சேனல்ல எந்த டைம்க்கு ஷோ நடத்துறாரோ? எனக்கு எங்கே தெரியும்?” என்றபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

அதற்குள் மருமகன், ‘அது யார்?’ என்று கேட்க,

கீர்த்தியைப் பற்றியும் அவள் மூலம் தான் அறிந்து கொண்ட புகழைப் பற்றியும் பாட்டி கூற, அதனை செவிமடுத்து கண்டும் காணாமல்… சாரி… கேட்டும் கேளாமல் கேட்டுக்கொண்டிருந்தவள் நெஞ்சமெல்லாம் இவன் என்னவன் என்ற பெருமை நிரம்பியிருந்தது.

மறுநாள் காலை அதிகாலையிலேயே விழித்தவள் தன் தாயைக் காண செல்ல, அவர் சமையலறையில் இருந்தார்.

“ஹே மகிழ்… வாம்மா… என்ன சீக்கிரம் எழுந்துட்டியா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே?” என்று அவர் கேட்க,

“தூக்கம் வரலம்மா” என மெலிதாக கூறியவள் அவரை பின்னிருந்து அணைத்துக்கொண்டாள்.

அதில் செய்திருந்த கைவேலையை ஒரு நொடி நிறுத்தியவர், அவளை நோக்கி “என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று வாஞ்சையோடு கேட்டார்.

அவர் மகளை இத்தனை வருடங்களாக பார்ப்பவருக்கு தெரியாதா, மகள் என்றுமே தன்னை இவ்வாறு வந்து கட்டிக்கொண்டதில்லை என்று.

இல்லையென்று தலையசைத்தவள், “உங்களுக்கு என்ன எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டாள்.

சிரித்த அத்தாய், “என்ன திடீர்ன்னு?” என அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் தானும் ஒரு கேள்வி கேட்க,

“ம்ச்… கேள்வி கேட்டா பதில் சொல்லனும். டீச்சர் சொல்லி தரல?” என்றாள்.

மேலும் சிரித்தவர், “யாருக்காவது அவங்களோட உயிரை பிடிக்காம இருக்குமா? நீ எங்களுக்கு உயிர்டா” என்றார் அவர் தன் கணவனையும் உடன் சேர்த்தியவராய்.

ஒரு பிள்ளை குடும்பம் என்பதை கற்றுக்கொள்வதே தாய் தந்தையரைக் கண்டு தான். காதலை கற்றுக்கொள்வதும் அவர்களிடம் இருந்தே! வெளிப்படையாக கூறாவிடினும் இவ்வாறு சிறு சிறு செய்கைகளினால் நாங்கள் இருவரல்ல, ஒருவரே என்பது அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுவிடும். அதனை உணர்ந்து கொண்ட வாரிசுகள் தாங்கள் கண்முன் கண்ட வாழ்வினை தங்கள் துணையோடு வாழ்ந்தும் விடுகிறார்கள்.

எவ்வாறு வாழ வேண்டும் என்பதும் எவ்வாறு வாழக்கூடாதென்பதும் கற்றுக்கொடுப்பதே பெற்றோர் தான்.

மகிழும் கற்றுக்கொண்டாள் அந்த சிறு வயதிலேயே!

காதலித்த மனது அவர்கள் இருவரிடமும் உள்ள அந்நியோனியத்தைக் கண்டது. காதல் என்னும் அஸ்திவாரத்தின் மேல் அவர்கள் ஆரம்பித்த தாம்பத்தியம் என்னும் கட்டடம் அழகாக கட்டப்பட்டிருக்க, அதனை உணர்ந்து கொண்டாள். பெற்றோரின் பாசத்திற்கு ஏங்கும் மனதோ, தொழிலையும் குடும்பத்தையும் சரிவர கவனிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டது.

தாயாரின் சொல்லைக் கேட்டவளின் கண்களில் கண்ணீர் சூழ, “ஐ அம் சாரிம்மா… நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

அவள் இத்தனை மாதங்களாக தங்களை பிரிந்திருந்ததால் தான் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறாள் என்று நினைத்துக்கொண்டார் அந்தத் தாய்.

இந்த ஒரு வருடத்தில் பண்டிகைகளைத் தவிர்த்து அவர்கள் சந்திப்பது கஷ்டமாகவே இருந்தது. இதோ, இப்போது கூட இன்னும் இரண்டு வாரத்தில் பதினொன்றாம் வகுப்பின் செய்முறைத் தேர்வு இருக்கிறது. அப்படி இருந்தும் தங்களை பார்க்க வந்திருக்கிறாளென்றால் அவள் தங்களை மிகவும் தேடியிருப்பாள் என்பது அந்த தாய் மனதிற்கு புரிந்து போனது.

அந்த இரண்டு நாட்களும் பெற்றோர் மற்றும் பாட்டியுடன் நேரம் செலவிட்டவள் ஞாயிறு பிற்பகலில் வீட்டில் நண்பர்களை காண செல்வதாக சொல்லி வெளியேறினாள்.

என்.ஐ.டி, திருச்சி,

திருச்சி நகரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மகிழ் வசிக்கும் துவாக்குடியில் இருந்து சிறிது தூரம் மட்டுமே அந்த கல்லூரி.

‘உன் உயிர் அருகிலேயே தான் இருக்கு. ஒரு முறையேனும் பார்த்துவிடு டி’ என்று அவள் மனம் அவளை அரிக்க, அருகில் இருக்கும் தன் இதயத்தை தூரத்தில் இருந்தேனும் ஒரு முறை பார்த்துவிடலாம் என நினைத்து கிளம்பிவிட்டாள்.

கல்லூரி வாசலில் நிறுத்தி கேள்வி கேட்ட காவலாளியிடம் அங்கே நடக்கும் நீச்சல் பயிற்சியில் சேர வந்திருப்பதாக கூற, எளிதில் அனுமதி கிடைத்தது.

உள்ளே நுழைந்தவளுக்கோ, வேறோர் உலகத்தினுள் நுழைந்தது போல் ஒரு தோற்றம். தன் பள்ளிகளைத் தவிர வேறு எதுவும் கண்டிராதவள் இன்று தான் மூன்றாவதாக ஒரு கல்வி நிலையத்தைக் காண்கிறாள்.

முதண்மைக் கட்டிடத்தின் முன்பு அந்த கல்லூரியின் வரைபடம் இருக்க, அதனைக் கண்டு மலைத்தவள் புகழை எங்கே சென்று தேட என்று யோசித்தபடியே நின்றுவிட்டாள்.

‘முதலில் அவன் இங்கே தான் இருப்பான்னு எப்படி நிச்சயமா சொல்ற? வெளியே போயிருந்தா என்ன செய்வ?’ என்று கேட்டது அவள் மூளை.

‘இல்லை, அவன் இங்கே தான் எங்கேயாவது இருப்பான்’ என்று அவன் சுவாசத்தை உணர்ந்த உள்மனம் சொல்ல,

தூரத்தில் இருந்து அவள் வரைப்படத்தையே கண் கொட்டாமல் வெகு நேரம் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட ஒருவன் அவளிடம் வந்து,

“சிஸ்டர், உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்று கேட்டான்.

தன்னருகே கேட்ட அந்த ஒலியில் திடுக்கிட்டவள் உடல் அதிர ஒரு அடி நகர, “ஓஓஓ… ஈஸி… ஈஸி… ரொம்ப நேரமா பார்க்கறீங்களே! வழி தெரியாம நிக்கறீங்களோன்னு நினைத்து கேட்டேன். யூ கேரி ஆன்” என அவன் வந்தவழியே செல்லப் பார்க்க,

அதுவரை திருதிருத்தபடி நின்றிருந்தவள் இந்த உதவியும் போய்விடுமோ என்ற பயத்தில், “அண்ணா… ஒருத்தர் எங்க இருக்காருன்னு தெரியனும்” என்று கேட்டே விட்டிருந்தாள்.

“என் பாசமலரே! யாரை தேடிம்மா வந்திருக்க… சொல்லும்மா, உன்ன இந்த அண்ணன் கூட்டிட்டு போறேன்” என்று அந்த புதியவன் சிவாஜியைப் போல் கூற, அதனைக் கேட்டு புன்னகைத்தவள்,

“புகழேந்தி எங்க இருப்பாருன்னு சொல்ல முடியுமான்னா?” என்று கேட்க, அந்தக் கல்லூரியில் அவன் பிரபலம் என்பதால் உடனே புரிந்தது யாரென்று.

“நீ அவனோட ஃபேன் ஆ?” என்று கேட்க, “ஃப்ரெண்ட்” என்றவள், ‘ஃப்ரெண்டுங்கறா, அவன் எங்க இருக்கான்னு தெரியாம சுத்தறா?’ என்ற ரேஞ்சில் அவன் பார்த்த பார்வையை கண்டுகொள்ளவில்லை.

பின்பு அந்த பையனே அவளை அழைத்துச் சென்று கிரிக்கெட் மைதானத்தில் அவன் ஆடுவதைக் காட்டி மைதானத்தின் உள்ளே செல்லும் வழியையும் காட்டி விடைபெறவும், மகிழோ, மைதானத்தினுள் செல்லாமல் அதன் வெளியே இருக்கும் பெஞ்சில் அமர்ந்து அவள் விளையாடும் அழகை ரசிக்க ஆரம்பித்தாள்.

அந்த மைதானத்தை சுற்றி முழுவதும் கம்பி வேலிகள் போடப்பட்டிருக்கும். ஒரு புறம் மட்டும் வேலியை ஒட்டி மரங்கள் நடப்பட்டிருக்க, மைதானத்தை நோக்கி சில பெஞ்சுகளும், மறுபுற வேலியை தாண்டி இருக்கும் சாலையின் அருகில் சில பெஞ்சுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மகிழ் அமர்ந்திருந்தது சாலையை ஒட்டி போடப்பட்டிருந்த பெஞ்சில்.

அங்கிருந்து புகழை நன்றாக காண முடிய, அங்கேயே அமர்ந்து அவன் ஆடுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் ஆட்டம் முடிய, புகழும் மற்றொருவரும் சேர்ந்து அவளை நோக்கி வந்தனர்.

‘ஐயையோ! என்னை பார்த்திருப்பானோ?’ என்ற எண்ணம் தோன்ற, திரும்பி அமர்ந்துகொண்டாள் மகிழ்.

அவளை மரம் மறைத்திருக்க, அதற்கு பின்பு இருந்த பெஞ்சில் தங்கள் உடைமைகளை எடுக்க வந்தவர்கள் வழக்கமான உரையாடலையும் தொடர்ந்தார்கள்.

“என்ன மச்சி வர வர உன் முகம் ஒரு மாதிரி பிரகாசமா இருக்கு? ஏதாவது ஃபிகரை எனக்கு தெரியாம உஷார் பண்ணிட்டியா?” என்று நண்பன் கேட்க,

“டேய்!” என்று அவன் விலாவில் செல்லமாக குத்தியவன், “அப்படியெல்லாம் எதுவும் இல்லடா” என மறுத்தான்.

வாயில் இருந்து வரும் சொற்கள் மறுமொழி கூறினாலும், அவன் இதழில் உறைந்திருந்த புன்னகை வேறு கதையைக் கூற,

“டேய்… உண்மையை சொல்லு… லவ் பண்ற தான?” என்று கேட்க, புகழின் புன்னகை மேலும் விரிந்தது.

“சூப்பர் மச்சி! யாருடா மச்சி என் தங்கச்சி? நம்ம காலேஜா? பேர் என்ன? எப்படி இருப்பா?” என்று அவன் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே செல்ல,

“டேய்ய்ய்ய்… நிறுத்துறா… அவ நம்ம காலேஜ் எல்லாம் இல்ல. வெளியூர். அவ இருக்காளே! அய்யோ! கொள்ளை அழகு மச்சி! கொஞ்ச நேரம் என்னை ஆட்டிப்படைப்பா, மீதி நேரம் என்னை சுத்தி சுத்தி வருவா. என்னை முழுசா மாத்திட்டா மச்சி! அதுவும் அவ பேச ஆரம்பிச்சா, கேட்டுட்டே இருக்கலாம். நிறுத்தவே மாட்டா. வளர்ந்த குமரிடா என் ஆளு. கூடிய சீக்கிரமே அவளை உனக்கு காட்றேன்” என்று தன் மனம் கவர்ந்தவளைப் பற்றி புகழ் உணர்ந்து கூறிக்கொண்டிருக்க, அதனைக் கேட்ட ஒரு உள்ளம் தன் நண்பனின் கண்களில் தோன்றிய பாவத்தில் அவனுக்கு அந்தப் பெண் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து மகிழ்ச்சி கொள்ள,

மற்றொரு உள்ளமோ, அவன் குரலில் வழிந்தோடிய காதலில் சில்லுசில்லாக உடைய கேட்டுக்கொண்டிருந்தது.

அது அவனை அகத்தில் கொண்டுள்ள மகிழ்தினியின் மனம்!

அவனுள் தானில்லை என்பதை விட, அவன் மற்றவளுக்கு சொந்தம் என்பதை புரிந்த அகமகிழ்தினியின் மனம்!



காதலைப் போல் சிறந்ததும் இல்லை,

அதைப் போல் முட்டாள்தனமும் இல்லை,

இதயம் அதைத் தேடி செல்வதை விடுவதும் இல்லை!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top