உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 13

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...

ரொம்ப நாள் ஆகிருச்சு... ரொம்ப சாரி... இதோ அடுத்த பதிவு. சென்ற பதிவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் ரொம்ப தாங்க்ஸ்... அடுத்த பதிவு இன்றோ நாளையோ கொடுத்துவிடுவேன்....


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 13

rana-and-sai-pallavi.jpg

“டேய் மச்சான், நான் அப்டியே வீட்டுக்கு போய்விடுவேன்டா. வார்டன் கிட்ட சொல்லிட்டேன். சோ, நான் லேட்டா வருவேன்னு வைட் செய்யாத” என்ற புகழ் தனது ஓவர்நைட் பையை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியேறி பஸ்ஸை பிடித்தான்.

அவன் என்றுமே பஸ்ஸை மட்டுமே உபயோகப்படுத்துவான். எளிமை என்பது ஒரு காரணமென்றாலும், அவன் தந்தையுடன் அவன் போட்ட சண்டை ஒரு மிக முக்கியமான காரணம்.

புகழ் என்றுமே அடுத்தவர் நலன் வேண்டுபவன் தான். அவர்களுக்காக என்ன செய்யவும் தயங்க மாட்டான். ஆனால், அது அவன் விருப்பத்தில் தலையிடாதவரை தான்.

பெற்றோர் மீது பாசம் உண்டு தான். ஆனால், சில விடயங்களில் அவன் பிடி உடும்புப்பிடி. அவன் வாழ்வைப் பற்றிய முடிவுகளை அவன் எடுக்கவேண்டும், அவன் மட்டுமே எடுக்க வேண்டும்.

அவ்வாறு வாழ்ந்து வந்தவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவன் தோழி அனி அவனுக்கு அறிமுகப்படுத்திய தன் தந்தையின் மற்றொரு பக்கம் அவனை வெகுவாக சிந்திக்க வைத்தது.

தவமிருந்து பிள்ளை பெறுவார்கள் என்று சொல்வார்களே, அதுபோல் தவமிருந்து பெற்ற பிள்ளை அவன். திருமணமாகி ஐந்து வருடங்களைக் கடந்தும் ராதைக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர் அதற்காக இஷ்டதெய்வமான விநாயகரிடம் வேண்டிக்கொள்ள, அடுத்த ஒரு வருடத்தில் அவர் கையில் தவழ்ந்தான் புகழ். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் எங்கு இருந்தாலும் அன்றைய நாளில் ஈச்சனாரியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை தரிசிக்க சென்றுவிடுவான். இது அவன் குடும்பத்தினர் பழக்கப்படுத்திக் கொடுத்தது.

அந்த ஒரு நாள் எவ்வளவு வேலை இருந்தாலும் அதனை ஒதுக்கிவிட்டு அன்று மட்டும் ஒன்று கூடி விடுவார்கள். சில காலமாக தாங்கள் மட்டும் கடைபிடித்தவர்கள், சின்னு வரவும், அவளையும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டனர்.

சின்னு, இந்த பெயரை முதலில் அவளுக்கு சூட்டியது புகழ் தான். சிறு பூக்குவியலாக அவன் அங்கிள் அவனிடம் அவளை தூக்கிவந்து காட்ட, அவள் கண்ணத்தை அதுரத்துடன் தடவியவனுக்கு அவள் இன்றியமையாதவளாகிப்போனாள். சின்னுவை ஹாஸ்டலில் சேர்க்கவேண்டும் என்று அவன் அங்கிள் கூறியபோது இவனிடம் வந்து அழுதவளுக்காக அவன் போர்க்கொடி தூக்க, எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அவள் தந்தை சொன்னது இப்போது நினைவிற்கு வந்தது அவனுக்கு. அதனால் மட்டுமே சின்னுவை காப்பாற்ற முடிந்தது. இல்லையெனில் அவளும் அந்த கார்விபத்தில் சிக்கியிருப்பாள்.

தன் வாழ்வின் பக்கங்களை புரட்டிக்கொண்டே வந்தவன், தனது தற்போதைய தொழிலைப் பற்றி நினைக்க, சரியாக பஸ் அவன் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நின்றது.

ஆபிசினுள் நுழைந்தவனை அவன் நடத்த வேண்டிய நிகழ்ச்சி தன்னுள் இழுத்துக்கொள்ள, அடுத்த ஒரு மணி நேரம் ரேடியோவுடன் கழிந்தது. பின்பு, கோவை பஸ்ஸை பிடித்து ஏறியவனுக்கு மீண்டும் பழைய நினைவுகள். இந்த முறை அவன் எண்ணத்தில் நிறைந்தவள் அனி, அவன் ஹனி.

அவளை எண்ணும்போதே அவனுள் ஏதோ ஒன்று இளகியது.

சில மாதங்களிலேயே அவனுக்கு நெருக்கமானவளாகி விட்டாள். இருவரும் பலவற்றில் எதிரெதிராக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் இருவருக்கும் ஒத்துபோனது.

அவள் யாரென்ற் இன்று வரை அவனுக்கு எதுவும் தெரியாது, அவள் பெயரையும் இருப்பிடத்தையும் தவிர. இருந்தும், அவளுக்கு அவனைப் பற்றி நிறைய தெரிந்தாற்போல் அவனுக்கு சில சமயம் தோன்றுவதுண்டு. ஏதேனும் கேட்டால், ஒரே வார்த்தையில் பதில் வைத்திருந்தாள், ‘ஜஸ்ட் கெஸ்ஸிங்க்’ என்று. சிறு சிரிப்பு எழுந்தது அவனுக்கு.

ஆனால், அவள் கண்டிப்பாக அவன் கல்லூரியில் படிப்பவள் இல்லை என அவன் உள்மனம் அடித்துக் கூறியது. கல்லூரியில் நெருங்கிய தோழர்களுக்கு அவன் தெரிவிக்காத விஷயங்களைக் கூட தெரிந்து வைத்திருக்கிறாளே!

ஏனோ அவளை கூடிய விரைவில் காணப் போகிறோம் என்று அவன் மனம் அடித்துக்கூறியது. அவளை பார்க்கும்போது அவன் கூறுவதற்கு சிலவை இருந்தன. அதனை கேட்கும்போது அவள் முகம் எவ்வாறு மாறும் என்று பார்க்க ஆசையாக இருந்தது அவனுக்கு.

‘டேய்… டேய்… அவ எப்படி இருப்பான்னே தெரியாது உனக்கு. கருப்பா, செவப்பா, நெட்டையா, குட்டையா? ஏதாவது தெரியும்? இதுல பெருசா பேச வந்துட்டான்’ என்று அவன் மனசாட்சி உள்ளிருந்து குரல் கொடுக்க,

‘அவ எப்படி இருந்தாலும் அழகா தான் இருப்பா… நீ அடங்கு’ என அவன் அதனை அடக்க,

‘திருத்த முடியாதுடா… உன்னய திருத்தவே முடியாது…’ என அங்கலாய்த்தவாறு ஒரு போர்வையை போர்த்தி உறங்க ஆரம்பித்தது.

பின், எந்த தொல்லையும் இல்லாமல் புகழும் உறங்க, அவனை சுமந்த அந்த பேருந்து பொள்ளாச்சியை நெருங்கியது அந்த அதிகாலை வேளையில்.

*****

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இறங்கியவனை அழைத்துச் செல்ல அந்த நேரத்தில் பாரிவேந்தன் நின்றிருந்தார். அவரை அங்கே கண்டதும் புகழுக்கு தன்மீதே சிறிது கோபம் ஏற்பட்டது.

சமீப காலமாக கேட்ட கேள்விகளுக்கு பதில் தருவது என்ற ரீதியில் தான் இருவருக்குமான உறவும் இருந்தது. ஆனாலும், அவனுக்கு எது தேவையோ, அதனை செய்ய அவர் என்றுமே தவறியதில்லை. இவன்தான் தன்மானம் என்ற பெயரில் திமிரெடுத்து! (இதனை சொல்லித்தான் ஆகவேண்டும்!) அவரை விலக்கி வைத்திருந்தான். ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் கூறினார்களோ?

அவரை நெருங்கியவன் ஏதும் கூறுவதற்குமுன்பே அவர் பிறந்தநாள் வாழ்த்தை கூற, அதனை ஏற்றுக்கொண்டவன், “ஏன்ப்பா இந்த நேரத்தில் வந்திருக்கீங்க? நானே ஆட்டோ பிடித்து வந்திருப்பேனே!” என்று அவன் கேட்க,

அதில் புன்னகைத்தவர், “நீ எப்படி வருவியோன்னு அங்கே இருந்து தவிச்சுட்டு இருக்குறதுக்கு நானே வந்து கூப்பிட்டு வரலாம்” என்றவர், அமைதியாக காரை கிளப்ப,

“நான் சின்ன குழந்தை பாருங்க!” என்று அவன் முனுமுனுத்தது அவருக்கும் கேட்டது. வெடித்து சிரித்தவர், ஒன்றுமே பேசவில்லை.

அரை மணி நேரத்தில் வீடு வர, போர்ட்டிகோவில் இறங்கி உள்ளே செல்ல அடியெடுத்து வைத்தவன் ஏதோ தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்தான்.

“என்ன தமிழ், நின்னுட்ட?” என்று அவன் பின்பு வந்த தந்தை கேட்க, “ஒன்னுமில்லைப்பா” என்றவன், அவரை உறங்க சொல்லிவிட்டு தானும் அறைக்கு விரைந்தான், சிறிது நேரம் தூங்கலாம் என்ற எண்ணத்தில்.

*****

புகழ் எழும்போது நன்கு விடிந்திருந்தது. மணியைப் பார்க்க, அது எட்டரை என்று கூற, அடித்துப்பிடித்து கட்டிலை விட்டு எழுந்தவன் விரைந்து தயாராகி கீழே வர, அங்கே அனைவரும் அவனுக்காக காத்திருந்தனர்.

அனைவரும் வாழ்த்துகூற, அதனை ஏற்றுக்கொண்டவன், தாயிடமும் தந்தையிடமும் ஆசீர்வாதமும் வாங்கினான்.

அதன்பின் அனைவரும் கோவில் செல்ல, அங்கே வழக்கம்போல் அவன் பெயரில் அர்ச்சனையு செய்தவர்கள், அருகில் இருந்த ஆசிரமத்தில் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தபடியால் அங்கு சென்றனர்.

இதுவும் அவர்களின் வழக்கம் தான். எந்த ஒரு நல்ல நாளானாலும் இங்கு வந்து அன்றைய நாளை செலவிடுவர். அன்றும் அதேபோல் அங்கே சென்றவர்கள் தங்கள் இருப்பிடம் வருவதற்கு மதியமானது.

அன்றைய களைப்பில் கீர்த்தியும் சின்னுவும் தங்கள் அறைக்கு செல்லப்போக, அவர்களிடம் தான் விரைவில் திருச்சிக்கு கிளம்புவதாக சொன்னான் புகழ்.

அதில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டனர் இருவரும். சின்னுவிற்கு தன்னோடு அவன் நேரம் செலவளிக்காமலே செல்கிறான் என்று. கீர்த்திக்கு அவன் இன்னும் தன் தோழியை காணவில்லை என்று.

காலையில் விரைவில் பள்ளிக்கு சென்றுவிடலாம் என்று கிளம்பியவளை தானே சென்று இழுத்து வந்து வைத்திருந்தாள் கீர்த்தி, தன் அண்ணனுக்கு அறிமுகப்படுத்த. அவன் தான் லீவ் எடுக்க முடியாது என்றுவிட்டானே தன் வேலைக்கு. அதனால் மாலை வரை காத்திருக்காமல் விரைவில் இருவருக்கும் ஒரு அறிமுகப்படலம் நடத்திவிடுவது என்ற முடிவோடு இருந்தாள் கீர்த்தி.

ஆனால் புகழோ, வெகு நேரம் வரை வரவேயில்லை. பின்பு, நேரமாவதை உணர்ந்து மகிழை பள்ளிக்கு அனுப்பி வைத்தவள் தன் அண்ணன் வருவதற்காக காத்திருந்தாள். கீர்த்தி விட்டதும் தொடங்கிய ஓட்டத்தை பள்ளி வாயிலை தொட்டு தான் நிறுத்தினாள் மகிழ்.

காலையில் புகழுக்கு தெரியாமல் அவனை பார்த்ததோடு சரி, அவன் கண்ணில் படக்கூடாதென்று தான் அவள் வழக்கமான நேரத்தை விட விரைவில் பள்ளிக்கு கிளம்பியதே. ஆனாலும் கீர்த்தியிடம் மாட்டிக்கொண்டாள். நாளையில் இருந்து பருவத்தேர்வு ஆரம்பமாவதும் வசதியாக போயிற்று அவளுக்கு. இல்லையேல் கீர்த்தி எவ்வாறேனும் அவளையும் விடுமுறை எடுக்க சொல்லியிருப்பாள்.

எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ, அவன் கண்களில் படாமல் தப்பிவிட்டாள். கீர்த்தி அறிமுகப்படுத்தி, அவன் பாட்டிற்கு தங்கை என்று கூறிவிட்டால், தாங்காது சாமீ, தாங்காது! அதனாலேயே இந்த கண்ணாமூச்சி.

இது எதுவும் அறியாமல் கீர்த்தி இருவரையும் சந்திக்க வைக்க முடியாமல் கோபம் கொண்டிருந்தாள்.

இருவரையும் சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச்சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கித்தந்தவன், தன் தந்தையை பார்க்க அலுவலக அறைக்கு சென்றான்.

அவரோடு சிறிது நேரம் செலவிட்டவன் வெளியே வந்தபோது அவன் முகம் ஒரு நிறைவைக் கொண்டிருந்தது.

******

“எப்போவுமே நாம நாம நினைக்கிறது தான் கரெக்டுன்னு நினைச்சுட்டு இருப்போம். ஆனால், ஒரு நாணயத்துக்கு எப்படி ரெண்டு பக்கம் இருக்கோ, அதே மாதிரி ஒவ்வொரு விஷயத்திலேயும் நம்ம பார்வையோட சேர்த்து அதில் சம்பந்தப்பட்டவங்களோட தரப்பு நியாயத்தையும் தெரிஞ்சிக்கிட்டாதான் அதற்கான சரியான தீர்வு நமக்கு கிடைக்கும். இல்லைன்னா, முடிவு எட்டப்படாமலே சண்டை தான் தொடர்ந்துகொண்டே போகும். ஆனா, நாம் அதுக்கும் பேசனும்ல. அத நிறைய பேர் செய்யறதே இல்ல. நான் ஏன் போய் பேசனும்னு யோசிச்சு யோசிச்சே ஒரு புள்ளி கோலத்த நூறு புள்ளி வைச்சு நூடுல்ஸ் ஆக்கிட்றாங்க. கேட்டா, அவன் வந்து பேசினானா? நான் மட்டும் ஏன் பேசனும்னு சொல்வாங்க. அதுவே நாம கோபப்படறது நம்ம பேரண்ட்ஸா இருந்தா, சொல்லவே வேண்டாம். அவங்க எப்பவுமே நிறைய பசங்களுக்கு டேக் இட் ஃபோர் கிராண்டட் தான். ஏன்னா, நாம என்ன பண்ணாலும் நமக்காக வந்து நின்னுடுவாங்களே! ஆனால், ஒன்ன மட்டும் புரிஞ்சுக்கவே மாட்டோம். நாம நல்லது செஞ்சா, ‘என் பையன்/பொண்ணு இவங்க’ன்னு சொல்லி உண்மையா சந்தோஷப்பட்றவங்களும் அவங்கதான். நாம ஏதாவது தப்பு செய்தா அதை நினைத்து நினைத்து மருகுவதும் அவங்கதான். ஸோ, அவங்களை எப்பவுமே ஹர்ட் பண்ணிடாதீங்க. இன் கேஸ், நீங்க அப்படி ஏதாவது செய்திருந்தீங்கன்னா அவங்களிடம் சென்று மன்னிப்பு கேட்டுக்கோங்க. கண்டிப்பா அவங்க மன்னிச்சிடுவாங்க. அண்ட், நாம எல்லாருமே நம்மை பெற்றவர்களுக்கு பெருமை தேடி தர முடியவில்லை என்றாலும் நம்மால் அவர்களுக்கு பழிச்சொல் எதுவும் வரவிடாமல் வாழ்ந்தாலே போதும். இதைத்தான் திருவள்ளுவரும்

‘எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்’

என்று சொல்லியிருக்கார்.

இப்போ நீங்க கேட்டுக்கொண்டிருப்பது உங்கள் அபிமான **** எஃப்.எம். இதுவரை ஒரு நேயர் நம்மிடம் அவரோட கதையை பகிர்ந்துகிட்டார். அடுத்து மற்றுமொரு நேயர் அவர் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நம்மோட பகிர காத்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்னால் உங்களுக்காக அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் இதோ!” என்று புகழ் கூறியதோடு அன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது பதிவு முற்றுபெற, அதனை கேட்டுக்கொண்டிருந்த மகிழுக்கு கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது. அவளாலேயே அவள் மனநிலையை வரையருக்க முடியவில்லை.

(என்ன தன் நடந்தாலும் அவன் பின்பே ஹட்சு டாக் போல் வாலாட்டிவிட்டு சென்றுவிடுகிறது மிஸ்.மனசாட்சி!)

என்ன நடந்தது என்று சரியாக தெரியாவிடினும், அவனுக்கும் அவன் தந்தைக்கும் உள்ள பிணக்கு சரியாகிவிட்டது என்று அவன் பேசியதை வைத்தே தெரிந்துகொண்டாள் மகிழ்.

‘சரி! நீ சொன்ன மாதிரி அவன் செய்துட்டான். நீ எப்போ செய்யப்போற?’ என்று அவள் மனம் கேள்வி கேட்க,

‘என்ன செய்யனும்?’ என எதிர்கேள்வி கேட்டாள் மகிழ்.

‘நீ சொன்னதால அவன்பக்க தப்பை புரிஞ்சு அவன் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுட்டான் அவன் அப்பாகிட்ட. நீயும் அதேபோல ஒரு தப்பு செய்திருக்க. டைரக்டா அவங்களை ஹர்ட் செய்யலைனாலும் இத்தனை வருடமா அவங்க கூட இருந்து விலகியிருந்த. இப்போ மொத்தமா விலகி வந்திருக்க. அதனால் எத்தனை வருத்தப்படுவாங்க உன் வீட்டுல? அதைப் பற்றி நினைச்சு பார்த்தியா? உனக்கு அவன் வீட்டைப் பற்றி இவ்வளவு அக்கறை இருக்கே, அது கொஞ்சமாவது உன் வீட்டைப் பற்றி இருக்கா? அவன் கூறியதற்கு பிறகு நீ முன்னை விட நல்லாவே அவங்களோட பேசற, பழகற. நான் இல்லைன்னு சொல்லல. இருந்தாலும், ஒரு முறை அவங்கள போய் பார்க்கிறதுல உனக்கு என்ன ஆகப்போகுது? இந்தா இருக்குது திருச்சி. அங்க போயிட்டு வர ரெண்டு நாள் போதாது? இதுவரை உன் அப்பா அம்மாவை பார்க்கனும்னு தோனுச்சா உனக்கு?’ என்று அவள் மனமே அவளை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்க, அதில் இருந்த நியாயத்தை உணர்ந்தவள் அந்த வாரத்தில் சனி, ஞாயிறு விடுமுறை இருப்பதால் அன்றே தன் பெற்றோரை பார்க்க செல்லலாம் என்று முடிவெடுத்தாள்.

அங்கே செல்லும்போது இருந்த மகிழுக்கும், திரும்பும் மகிழுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் மகிழ் சென்றிருக்க மாட்டாளோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top