உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 10

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ அடுத்த அப்டேட்...


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 10
rana-and-sai-pallavi.jpg


“ஹலோ திருச்சி… இந்த இனிமையான இரவு நேரத்தை மேலும் இனிமையாக்க உங்க ஃபேவரேட் ‘காதல் காதல்!’ ஷோவை நடத்த வந்துட்டேன், நான் உங்க தமிழ். அடுத்த ஒரு மணி நேரம் நாம பல காதல் பாடல்களை கேட்டு ரசிக்கப்போறோம். இப்போ உங்களுக்காக முதல் சாங் வந்துட்டே இருக்கு. அதன்பிறகு நாம் நிறைய பேசலாம், வழக்கம்போல. உங்களுக்கான முதல் பாடல் இதோ!”

ஸ்பீக்கரில் இருந்து வந்த அந்த குரலில் தன்னை தொலைத்தமர்ந்திருந்தாள் மகிழ். இந்த கள்வனை ஏன் இவ்வளவு நேசிக்கிறாள் என்று அவளுக்கு புரியவேயில்லை.

அன்று கீர்த்தி அவளிடம் தன் அண்ணனை திருமணம் செய்யுமாறு விளையாட்டாக கேட்டாளோ இல்லை உண்மையாகவே கேட்டாளோ, ஆனால், காதல் என்னும் மரத்திற்கான முதல் விதை விழுந்தது அப்போதுதான்.

அதற்கு நீரூற்றி வளர்த்ததும் கீர்த்திதான். இருவரும் பேசும்போது பல சந்தர்ப்பங்களில் புகழைப் பற்றிய பேச்சுகள் வரும். அப்போதெல்லாம் தன்னையும் அறியாமல் அவற்றை சேமித்து வைத்துக்கொள்வாள் மகிழ். சில நாட்களிலேயே புகழ் என்னும் பெயரில் ஒரு டிகிரி எக்ஸாம் வைத்தால் அதில் டிஸ்டின்ஷனில் தேறுவது இவள் மட்டுமாகத்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு மகிழுக்கு புகழைப் பற்றிய அனைத்தும் அத்துப்படி.

அத்தகைய ஒரு நாளின் போது அவள் அறிந்த ஒரு விடயம் தான் புகழ் திருச்சியில் ஒரு வானொலி நிலையத்தில் பகுதிநேர ஆர்.ஜே.வாக வேலைபார்ப்பது. இது அவன் வீட்டினர் யாருக்கும் பிடிக்கவில்லை எனினும் அவன் விருப்பம் இதுதானென்று விட்டுவிட்டனர். ஏனென்றால், நம் சாரின் பிடிவாதம் அப்படி.

நிர்வாகம் சம்பந்தமாக படி என்று கூறிய தந்தையை எதிர்த்து ஆர்க்கிடெக்டர் தான் படிப்பேன் என்று சாதித்து சேர்ந்தான். அதுவும், என்.ஐ.டி. திருச்சியில். தற்போது, கல்லூரியோடு சேர்ந்து இவ்வேலையையும் சரிவர செய்துகொண்டிருக்கிறான்.

புகழுக்கு எப்போதுமே அவன் குடும்ப உறுப்பினர்களே பிரதானம். அவர்கள் மேல் அவன் கொண்டுள்ள பாசத்தைப் பற்றி கீர்த்தி கூற, அதுவரை புகழ் என்னும் கடலில் நீச்சலடித்துக்கொண்டிருந்தவள் முற்றிலும் மூழ்கியது அங்கேதான்.

தாய்-தந்தையர் பாசம் காட்ட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்க, பாசப்பிணைப்புடன் இருக்கும் கீர்த்தியின் குடும்பத்தைக் கண்டு ஏக்கம் கொண்டிருந்தவள், அக்குடும்பத்துடன் தானும் சேரும் ஒரு துடுப்பாக புகழைக் கண்டாள்.

அங்கிருந்த இரண்டு மாதமும் அவளுக்கு பாட்டியும் கீர்த்தியின் குடும்பமுமே எல்லாமாகின. தேர்வு முடிவுகள் வரவும், பள்ளியில் உயர்கல்வி சேர கிளம்பியவளை அழுதுபுரண்டு அங்கேயே சேரவைத்தாள் கீர்த்தி. மகிழுக்கும் அங்கிருந்து செல்ல விருப்பமில்லை என்பதோடு, யாருக்கும் இருவரையும் பிரிக்கவும் இஷ்டமில்லை.

இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் சேர்ந்தும் விட்டனர். அதன்பின், தூங்கும் நேரம் தவிர ஏனைய நேரம் யாவும் சேர்ந்தே இருந்தனர்.

ஒரு நாள் படித்துக்கொண்டிருந்த மகிழை அழைத்து, ஃபேஸ்புக்கை திறந்து காட்டினாள் கீர்த்தி.

‘என்னடி?’ என்று கேட்டுக்கொண்டே பார்த்தவள் முன் விரிந்தது ஆர்.ஜே. தமிழ் என்ற அந்த முகநூல் பக்கம்.

“அண்ணா புதுசா ஓப்பன் பண்ணீருக்காரு டி… என்னையும் புதுசா ஐடி கிரியேட் செய்ய சொன்னான். அவன் அங்க பேசுறத நாம இங்க இருந்து கேட்க முடியாதுல. அத ரெக்கார்ட் பண்ணி இதுல அனுப்புறானாம்” என்றவள் தானும் ஒரு ஐடி ஓப்பன் செய்து மகிழுக்கும் அதையே செய்து கொடுத்தாள்.

தான் செய்த இச்செயலால் மகிழின் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் நேரப்போகிறதென்று அறியாமல் அந்த வயதுக்குறிய எதையும் புதிதாக அறிந்து பார்க்கும் சுபாவத்தால் செய்தது இது.

அதன்பின், தினமும் புகழ் பதிவு செய்து அனுப்புவதை கேட்காமல் இருவரும் தூங்குவதில்லை. அந்த இரவு நேரத்தில் காதுக்குள் ஒலிக்கும் அவன் மென்மையான குரலில் கரைந்தே போய்விடுவாள் மகிழ். கேட்போரை கட்டியிழுக்கும் வசியம் அந்த குரலுக்கு இருந்தது. இவன் மட்டும் முழுநேரமாக இதனை செய்தால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் அறியப்படுவான் என்று நினைத்துக்கொள்வாள் மகிழ். ஆனால், அவளே அவன் இதனை விட காரணமாவாள் என்று பாவம் அவள் அறியவில்லை.

அன்றும் புகழின் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு துயில்கொள்ள தன் இருப்பிடம் வந்தவளுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. அவள் கைகள் தானாக கணினியை உயிர்பித்து முகநூலை இயக்கியது.

அவள் சென்றது, புகழின் முகநூல் பக்கத்திற்கு.

என்ன தோன்றியதோ, அங்கே ஓரத்தில் இருந்த மெசேஜ் பட்டனை க்ளிக்கிட்டு ‘ஹாய்!’ என்று டைப் செய்தவள் அதனை அனுப்புவதற்குள் தனக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திவிட்டாள் பெண்ணவள்.

அவன் அதனை பார்த்துவிட்டதாக அறிகுறி வர, சில்லிட்டுப்போனது அவள் தேகம். நெஞ்சம் தடதடக்க அமர்ந்திருந்தாள். ‘யாருன்னு கேட்டா என்ன சொல்லுவடி?’

“ஹாய்! எனக்கு உங்களை தெரியுமா?” என்று ஆங்கிலத்தில் வந்து விழுந்தது பதில்.

அவளும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தாள். “இல்லை, ஆனால் எனக்கு உங்களை தெரியும்” என்று அனுப்பிவிட்டு தலையில் அடித்துக்கொண்டாள் அவள், அவன் அனுப்பிய ‘எப்படி?’ என்ற கேள்வியைக் கண்டு.

“Just a crazy little fan of you!” (உன் எண்ணற்ற விசிறிகளில் ஒருத்தி) என்று சொல்ல, “ஓஓஓ…” என்பதோடு அவன் பேச்சுவார்த்தை நின்றுபோனது.

அதன்பின் நெடுநேரம் காத்திருந்தாள், அவன் எதுவும் அனுப்பும் வழி தெரியாததால் உறங்கச்சென்றாள்.

அடுத்த நாள் காலை அவள் முகம் பிரகாசித்திருந்தது. அது ஏனென்று கேட்ட அவள் பாட்டிக்கும் கீர்த்திக்கும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தாள்.

ஆனால், அவள் உள்மனம் குறுகுறுக்காமல் இல்லை, தன் தோழிக்கு துரோகம் செய்கிறோம் என்று. இருந்தாலும், காதல் வந்துவிட்டால் கள்ளமும் சேர்ந்தே வருமல்லவா?

பிழை செய்கிறேன், உன்னை ரசிக்கிறேன்!

நட்பிலே துளி விஷம் கலக்கிறேன்!

மலரும், முள்ளும் சேர்ந்தே இருப்பது போலே!

அன்று இரவும் அதேபோல் அவளே அவனுக்கு செய்தி அனுப்பினாள்.

“ஹாய்! ஒரு உதவி! எனக்கு உங்க ஷோ ரொம்ப பிடிக்கும். ஆனால், நான் இப்போ இருக்குற இடத்துல உங்க ஷோ கேட்க முடியாது. சோ, தினமும் அத ரெக்கார்ட் செய்து எனக்கு அனுப்ப முடியுமா?” என்று அனுப்பிவிட்டு காத்திருந்தாள் அவள். இடையில் தான் அறிந்த தெய்வங்கள் அனைத்திற்கும் மனு போடவும் மறக்கவில்லை.

அவள் நாள் முழுவதும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருந்தாள். எப்படியும் கீர்த்திக்கு அனுப்புவான், அதனை தனக்கும் அனுப்ப சொல்வோம். அதன்மூலம் தினமும் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தாள். ஆனால், இவள் கேட்டவுடன் அவன் சம்மதிப்பான் என்று எவ்வாறு நினைத்தாள் என இன்று வரை யோசித்தும் அவளுக்கு புரிபடவில்லை. அவள் நினைத்ததெல்லாம், ஃபோர்வேர்ட் செய்வது எளிது என்று ஒத்துக்கொள்வான் என்று மட்டும்தான். ஆனால், அவளுக்கு அனுப்பவேண்டும் என அவனுக்கு எந்த அவசியமும் இல்லையே?

இதையெல்லாம் எண்ணிக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, “நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வி வந்தது அவ்விடமிருந்து.

“சென்னை!” என்று சட்டென பதிலளித்திருந்தாள் பேதை.

“அங்கே நான் எந்த நிகழ்ச்சியும் செய்ததில்லையே! பின் எப்படி?” என்று அவன் இழுக்க, ‘அட, என் விடாகண்டனே! உனக்கு எல்லாம் எத்தனை ஜென்மமெடுத்தாலும் லவ் செட்டாகாதுன்னு உன் தங்கை ஓட்றது சரியாத் தான் இருக்கு’ என தலையிலடித்துக்கொண்டவள்,

“திருச்சியில் என் பாட்டி வீடு இருக்கு. அங்கே வந்தப்போதான் நான் உங்க ஷோ கேட்டேன். அதோட காண்செப்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால் தான்” என்று அவள் சொல்ல, மறுப்பக்கம் பதிலில்லை சில நேரம்.

அவளுக்கு எங்கே தெரியும், இதே போன்று ஷோ அவர்கள் வானொலி நிலையத்தின் அனைத்து கிளைகளிலும் நடத்துகின்றனர், அதற்கு முதலில் அஸ்திவாரம் போட்டதே சென்னை கிளை தான் என?

“உங்கள் பெயர்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என நான் தெரிந்துகொள்ளலாமா?” என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு கேள்வி கேட்கப்பட,

அவனுக்கு என்ன சொல்வது என்று தவித்துப்போனாள் அவள். நல்லவேளை, அவளது ஐடியில் நிஜப்பெயர் தரவில்லை. எனவே, ‘அ’ என்று மட்டும் டைப் செய்தவள், எங்கே தன் பெயர் தெரிந்தால் தான் யாரென்று கண்டுபிடித்து விடுவானோ என பயந்து “அனி” என்று மட்டும் அனுப்பினாள்.

“அனி? முழுப்பெயரே அவ்வளவுதானா?”

“அனிகா. கூப்பிடுவது அனி”

“ஓஓஓ… சரி, அனிகா. நீங்க என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”

‘திரும்பவும் அதே கேள்வியா! அட ராமா!’

“படித்துக்கொண்டிருக்கிறேன்.”

“காலேஜ்”

“ஆம்!” அவள் கையில் மெல்லிய நடுக்கம்.

“சென்னை?”

“ம்ம்ம்”

“சோ, மிஸ். அனிகா, உங்க ஊருலயும் எண்ணற்ற சேனல்கள் இருக்கும். இதே போல ஷோவும் இருக்கும். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு என் ஷோவை மட்டும் ஏன் கேட்கறீங்க?” என்று அவன் கேட்க, என்ன சொல்வதென்று அவள் பயந்துபோனாள்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு,

“சிலருக்கு சில பாடகரை மட்டுமே பிடிக்கும், மேலும் சிலருக்கு சில எழுத்தாளரோட படைப்புகள் மட்டுமே படிக்க பிடிக்கும். ஒரு சிலருக்கு சிலரோட படங்கள். அதற்காக மற்றவர்கள் எல்லாம் நன்றாக பாடுவதில்லை, எழுதுவதில்லை, நடிப்பதில்லை என்று சொல்ல முடியுமா? அவங்க அலைவரிசைக்கு, டேஸ்ட்-க்கு இவங்க ஒத்து வர்றாங்கன்னு அர்த்தம். அதே போலத்தான் இதுவும். உங்க வாய்ஸ்-ல உள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு வேறு எங்கேயும் எனக்கு தோணல. எப்படி பாடகர்களை அவர்களோட குரலை வைத்து அதில் அவர்கள் கொண்டு வரும் உணர்ச்சி, உச்சரிப்பு, பாவம் இது எல்லாம் வைத்து பிடிக்கும்னு சொல்றோமோ, அதே போல, ஆர்.ஜே.க்களை அவர்களோட நக்கல், நய்யாண்டி, அண்ட் உங்களை மாதிரி மற்றவர்களோட அனுபவங்களை பகிர்ந்துக்குற நிகழ்ச்சிகளில் வர்றவங்களோட பாவம், உச்சரிப்பு, ஒரு சம்பவத்தை ரசிச்சு சொல்லுற விதம் எல்லாத்தையும் வைத்து பிடிக்கும். அப்படி பார்த்தா, உங்க குரல் எனக்கு தனியா தெரியுது, எஸ்.பி.பி, ஹரிஹரன், ஜேசுதாஸ் குரல் மாதிரி. அதனால் தான் கேட்டேன். தவறாக இருந்தால் மன்னிச்சிருங்க”

என்று நீளமாக எழுதி அனுப்பியவள் அதோடு கணினியை அணைத்துவிட்டு தன் கட்டிலில் சென்று விழுந்து கதறி அழுதாள்.

அவன் கேள்வி கேட்ட விதமே அவன் தன்னை நல்ல விதமாக நினைக்கவில்லையோ என்று நினைக்க வைத்தது. ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் அவனுடன் பேசிப் பழக நினைத்த மனதை திட்டிவிட்டு மேலும் மேலும் அழுதவாறே தூங்கிப்போனாள்.

சந்தோஷமாக ஆரம்பித்த நாள் அதற்கு நேர்மாறாக முடிந்திருந்தது அவளுக்கு. அதற்கு காரணமும் அவனே! இனி அவள் வாழ்வு சுழலப் போவதும் அவனை சுற்றியே!

என்னுள் நீ வந்தாய், இன்னும் வாழ்கின்றாய்!

உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய்!





ஓகே ஃப்ரெண்ட்ஸ்… ஒரு சிலர்க்கு இந்த கேள்வி இருக்கலாம். எதற்காக புகழை தேடிப்போய் மெசேஜ் செய்ய வேண்டும் என்று. இப்போ மகிழுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயது. அப்போது சிறு பிள்ளை தனமாக யோசிக்க மட்டுமே தோன்றும். அதுவும் செலிபிரிட்டி க்ரஷ் (celebrity crush) என்று யாரேனும் இருந்தால் அவர்களுடன் பேச, அல்லது எவ்வாறேனும் அவர்களை பின்தொடர முயற்சிப்பார்கள். அவ்வாறு மகிழ் செய்த முயற்சியே இது. இதற்கு கீர்த்தியிடம் கேட்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். கீர்த்தியின் அண்ணனாக மட்டும் பார்த்தால் கேட்கலாம். மகிழுள் அவன்மேல் என்னவென்றே தெரியாத ஒரு உணர்வு உண்டே! அது அவளை தடுத்துவிட்டது தான் மகிழ் தானாகவே அவனிடம் பேச முயன்றதன் காரணம்.


விரைவில் புகழின் கண்ணோட்டத்திலும் வரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top