உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 09

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ஃப்ரென்ட்ஸ்...

யாரும்மா நீன்னு நீங்க கேட்குறது நல்லா கேட்குது. என்னங்க பண்றது? சிலபல பர்சனல் கமிட்மெண்ட்ஸ். இன்றுதான் கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைத்தது. உடனே இங்கே ஓடி வந்துவிட்டேன். அம்மா வீடு கல்யாணத்துக்கு பிறகு மட்டும் இல்லை, வெளியூரில் வேலை செய்பவர்களுக்கும் இங்கு மட்டும் தான் ரிலீஃப் என்று இப்போதான் தெரியுது. பல நாட்கள் கழித்து ரெஸ்டிங் இன் மை வீடு:D அதனால்தான் இன்று அப்டேட் கொடுக்க முடிந்தது. சரி, வளவளன்னு பேசாமல் அடுத்த பகுதி இதோ...


rana-and-sai-pallavi.jpg

சில வருடங்களுக்கு முன்பு,

“ம்மா…!” என்று அந்த வீடே அதிரும்படி கத்திக்கொண்டிருந்தாள் மகிழ்.

“என்னடி?” என்று கேட்டவாறு சமையலறையில் இருந்து வெளிப்பட்டார் அவள் தாய்.

“என்னோட ப்ளேக் கலர் ஹீரோ பேனா எங்கம்மா?”

“நீ எங்க வெச்சியோ அங்க தான் இருக்கும்” என்றுவிட்டு விட்ட வேலையைத் தொடர உள்ளே நுழைந்தார், ‘எடுக்குறத எடுத்த எடத்துல வைக்குறது இல்ல, அப்புறம் நம்ம உசுற வாங்க வேண்டியது” என முனுமுனுத்தவாறு.

“போங்கம்மா… நானே எடுத்துக்கறேன்” என்று தானே அவற்றை தேடி எடுத்து பள்ளிக்கு கிளம்பினாள் மகிழ்.

இன்று அவளுக்கு பத்தாம் வகுப்பு ப்ராக்டிக்கல் எக்ஸாம். அதற்கு முன்பே அனைத்தையும் எடுத்து வைக்குமாறு கேட்டுக்கொண்ட அன்னையிடம் தலையை ஆட்டிவிட்டு காலையில் இருந்து அவரை படுத்தி எடுத்துக்கொண்டிருந்தால் அவரும்தான் என்ன செய்வார்?

காலை 8:20க்குள் பள்ளியில் இருக்கவேண்டும். அந்த கவலை அவருக்கு. இதில் காலையில் இவள் செய்யும் அலப்பறைக்கு எவ்வாறு ஈடுகொடுப்பது?

ஒரு வழியாக பெண்ணை கிளப்பி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது அவருக்கு. (பிள்ளை பெற்றுப்பார், வீட்டை கட்டிப்பார்ன்னு சொன்னவங்க, அந்த பிள்ளையை வளர்த்துப்பார்ன்னும் சேர்த்துருக்கலாம்.)

ப்ராக்டிக்கல்ஸ் முடிந்து மகிழுக்கு தியரி எக்ஸாம்ஸ் முடியும் வரையும் நொந்தே போய்விட்டார் அவர். (இதுக்கே இப்படியா? இன்னும் இரண்டு வருடத்தில் 12-த் எக்ஸாம் வருதுல்ல!)

அதன்பின், பள்ளி விடுமுறை. அவளுக்கோ விடுமுறை, அவருக்கோ, தங்கள் பள்ளியின் அடுத்த செட்டை இந்த தேர்வு ஓட்டத்திற்கு தயார் செய்ய வேண்டிய நிர்பந்தம்.

தனக்கு விடுமுறை விட்டும் தன்னை கண்டுகொள்ளாத தாயின் மீது கோபம் கொண்டு அமர்ந்திருந்தாள் பெண்.

அவரும்தான் என்ன செய்வார்? அவள் மேல் வண்டி வண்டியாக பாசம் இருந்தாலும் அவர் சேர்ந்த பள்ளி அவ்வாறு. காலை எழுந்தது முதல் இரவு வரை தங்கள் பள்ளியில் வேலை செய்பவர்களை தங்களை பற்றியே நினைக்க வைத்துக்கொண்டே இருப்பார்கள். (அந்த பள்ளி மட்டும் ஒரு மனிதனா இருந்துருந்தா இத்தனை தடம் நினைப்பதற்கும் அதற்கு இவ்வளவு செய்து தருவதற்கும் என்னைக்கோ லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கும்.)

மகளை நினைத்து கவலை கொள்ள மட்டுமே முடிந்தது அவரால். அப்போது, அவர் கஷ்டம் தீர்க்கவென்றே வந்தார் அந்த பெண்மணி, மகிழின் பாட்டி, ராஜசேகரின் தாய்.

நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர், அவர் பள்ளி விடுமுறையில் தன் பேத்தியை தன்னோடு அழைத்துச் செல்ல விழைவதாக கூற, யோசிக்கலானார் ராஜசேகர். அவரும் சரி, அவர் மனைவியும் சரி, தங்களின் அலுவல்களை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும். தற்போது பெண்ணிற்கு விடுமுறை என்பதால் ஒன்றிரண்டு நாள் எங்கேனும் அவளோடு சென்று வரலாம் என்று நினைத்திருந்தனர். அது நடக்கலாம், நடக்காமலும் போகலாம். அதற்காக அவளை ஒரு மாத காலம் வீட்டிலேயே வைத்திருப்பதா? என்ற யோசனையின் ஊடே அவர் மகளின் முகம் காண, முகம் முழுவதும் ஆர்வத்துடன் நிற்கும் அவளைக் கண்டு,

“கூட்டிட்டு போங்கம்மா!” என்று அனுமதியளித்துவிட்டார்.

அவர் செல்லும்வரை தன் சந்தோசத்தை அடக்கி வைத்திருந்தவள், அவர் தலை மறைந்ததும், “அப்பத்தா!” என்று கட்டிக்கொண்டாள் தன் பாட்டியை.

தன் தந்தையின் சொந்த ஊரை நோக்கி பறக்க தயாரானது அந்த சிட்டு, இந்த சிறு பயணம் பெரியதொரு வாழ்க்கைப் பயணத்திற்கான அஸ்திவாரம் இடப்போவதை அறியாமல்.

*******

குளிர்க் காற்று வந்து முகத்தில் மோத, அதனை முழுவதும் அனுபவிக்க ஜன்னலை முழுவதும் திறந்துவிட்டாள். அந்த மெல்லிய காற்றை சுவாசித்தவாளுக்கு அதன் வாசம் ஒன்றும் தெரியவில்லை எனினும் முகம் புன்னகை பூத்தது. காற்றிலும் சந்தோஷம் மிகுந்து இருப்பதாக தோன்றியது அவளுக்கு. பல வருடங்களுக்குப் பின் தன் பாட்டியின் வீட்டிற்கு செல்கிறாளே!

சிறிது நேரத்தில் “பாப்பா! இடம் வந்தாச்சு. வாம்மா!” என்று அவள் பாட்டி அழைக்க, “இதோ!” என்று அவர்பின்னே தன் உடைமைகளை சுமந்துகொண்டு இறங்கினாள்.

பொள்ளாச்சி, கோவை மாநகரத்தின் தெற்கே அமைந்திருக்கும் ஊர். முன்பெல்லாம் கிராமத்துக் கதைகள் எடுக்கவேண்டும் என்றாலே கிளம்பிவிடுவர் பொள்ளாச்சிக்கு. சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற புல்வெளிகள் இருக்கும். இன்றும் அந்த பசுமையை பாதுகாத்துக்கொண்டு சிறிது புதுமையையும் வரவேற்று நிற்கும் ஊர். மகிழின் சொந்த ஊர்.

தாயை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் அவள் மடியில் தலைவைத்து படுத்தால் பாரம் நீங்கிப்போகுமே! அதுபோல, இங்கே வந்தாலே சோகம் எல்லாம் பறந்து போகும் மகிழுக்கு.

பாட்டியுடன் நடந்து வீட்டை அடைந்தவளை வரவேற்றது புதியதாக அருகில் கட்டியிருந்த வீடு. ‘இது யாரோடதா இருக்கும்? நான் முன்ன வந்தப்போ இல்லியே! எங்க இருந்து புதுசா முளைச்சது? அதுவும் இவ்வளவு பெருசா?’ என்று அவள் யோசிக்க,

மிஸ்.மனசாட்சியோ, ‘நேத்து நைட் நீ வந்தப்போ இங்க இல்ல தாயி… விடியிறதுக்குள்ள இந்த இடத்துல காளான் முளைக்குற மாதிரி வீடு முளைச்சிருச்சு. நீ வந்தே ஐந்து வருஷமாச்சு. எல்லாம் மாறாமயா இருக்கும்?’ என்று நகையாட, ஹீஹீஹீ என்று அதனிடம் பல்லை காட்டிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் மகிழ்.

சாப்பிட்டுவிட்டு தூங்கியவள் எழுந்தது ஹாலில் இருந்து வந்த ஒரு குரலில்.

“பாட்டீடீடீடீடீ….” என்று அவள் காதில் விழுந்த கத்தலில் அடித்துப் பிடித்து எழுந்து ஙே என விழித்தாள் அவள்.

உடனே பாட்டிக்கு என்னவாகிற்றோ என்று எழுந்து ஓட, அவள் பாட்டி சோபாவில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் அவள் வயதை ஒத்த ஒரு பெண்ணுடன்.

யார் இவர் என்ற எண்ணத்தில் இவள் இருக்க, அந்த புதுவரவோ, “ஹாய் மகிழ்! எப்படி இருக்க? உன்ன இங்க கூட்டிட்டு வர சொல்லி பாட்டிகிட்ட எத்தனை டைம் கேட்டேன் தெரியுமா? அட்லீஸ்ட் என்னால அங்க வர முடிஞ்சா நானாவது அங்க வந்திருப்பேன். அதுவும் முடியல. இன்னைக்கு தான் உன்னை பார்க்கவே முடிஞ்சது. அடடா… என்னைப் பத்தி சொல்லாம நான் மட்டும் பேசிட்டே இருக்கேன் பாரு. ஏன் பாட்டி, என்னைப் பத்தி இவகிட்ட சொல்லவே இல்லையா?” என்று மகிழில் தொடங்கி பாட்டியிடம் முடித்தாள் அவள்.

“வந்தவுடன் தூங்கிட்டா கீர்த்தி. நானே அவ எழுந்ததும் அழைச்சிட்டு வரலாம்னு இருந்தேன். அதற்குள்ள நீயே வந்துட்ட” என்றவர், “மகிழ், இவ கீர்த்தி. நம்ம பக்கத்து வீட்டுல இருக்கா. நீ இங்க இல்லாத கவலைய போக்குறதே இவதான். ரொம்ப சுட்டி, ரொம்ப நல்லவ” என்று கீர்த்தியை அறிமுகப்படுத்த, ஏனோ அந்தப் பெண்ணை பார்த்தவுடனே பிடித்தது அவளுக்கு.

“ஹாய் கீர்த்தி. நீங்க என்ன படிக்குறீங்க?” என்று அவள் பேசத் துவங்க,

“ஓஹோ… இது என்ன நீங்க, வாங்க, போங்கன்னு? நானும் உன் ஏஜ் தான். நீன்னு சொல்லியே கூப்பிடு” என்றவள் மகிழுடன் உரையாட ஆரம்பித்துவிட்டாள்.

அவளைப் பற்றி நன்கு தெரிந்தாற்போல் கீர்த்தி பேச, பாவம் மகிழ் தான் கீர்த்தியைப் பற்றி எதுவும் தெரியாமல் தவித்துப் போனாள். அவள் எவ்வாறு அறிவாள், கீர்த்திக்கு மகிழ் முதன்முதலில் பேசிய வார்த்தையில் இருந்து ஸ்பெஷல் கிளாசை கட்டடித்து அப்பாவின் பெல்ட் எவ்வளவு உறுதி என்று ஆராய்ச்சி செய்தது வரை அனைத்தும் தெரியும் என்று!

மகனை/மகளை பிரிந்திருக்கும் தாய்-தந்தையருக்கு அவர்களைப் பற்றியும் அவர்கள் பிள்ளைகளைப் பற்றியும் பேசுவதே ஒரு தனி சுகம் தானே! அவ்வாறு தன் பேத்தியைப் போலிருக்கும் கீர்த்தியிடம் மகிழைப் பற்றி உரையாடுவது சராசரி விடயமாகிப் போனது. ஆனால், கீர்த்தியைப் பற்றி மகிழிடம் அவர் பேசவில்லை. என்றாவது ஃபோன் செய்யும் பேத்தியிடம் நலம் விசாரிக்கவே நேரம் சரியாக இருக்க, எங்கே மற்றவை பேச?

கீர்த்தி அங்கேயே மாலை சிற்றுண்டி அருந்திவிட்டு, மகிழை அழைத்து தன் வீடு நோக்கி சென்றாள். தயங்கிய மகிழை சிறிதும் சட்டை செய்யாது அவளை இழுத்துச் சென்றாள் கீர்த்தி.

******

அந்த பெரியவீட்டின் மதிலை எட்டிய மகிழுக்கு உள்ளே செல்ல கால்கள் ஏனோ பின்னிக்கொண்டது.

“வா மகிழ்!” என்று கீர்த்தி இழுக்க, “இல்ல கீர்த்தி! இன்னொரு நாள் வர்றேனே!” என்று அவள் இழுக்க,

“நீ இப்படி எல்லாம் சொன்னா வர மாட்ட. வாங்கறேன்” என்று மகிழை அழைத்துக்கொண்டு கேட்டைத் தாண்டி சென்றாள்.

‘இவ என்ன இப்படி செய்யறா? இவ வீட்டுல நம்மல திடீர்ன்னு பாத்துட்டு என்ன நினைப்பாங்க?’ என்று நினைத்தவாறே அவள் பின்னே சென்றாள் மகிழ்.

“அம்மா…. அப்பா…. யாரு வந்துருக்கான்னு பாருங்க… நம்ம மரகதம் பாட்டி பேத்தி!” என்று வீடே அதிருமாறு அவள் கத்த, ‘இந்த பெண்ணிற்கு மெதுவாக பேசவே வராதா?’ என்று தான் நினைக்கத் தோன்றியது மகிழுக்கு.

“வாம்மா… எப்படி இருக்க? உட்காரு” என்றவாறே வந்தார் கீர்த்தியின் அப்பா.

“நல்லாருக்கேன்… அங்கிள்” என்றாள் மகிழ்.

“வாம்மா மகிழ். வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று அவளிடம் வந்தார் கீர்த்தியின் தாயார்.

“காஃபி எடுத்துக்கோம்மா” என்றவர் கீர்த்தியின் தந்தையின் அருகில் அமர்ந்தார்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆண்ட்டி. தேங்க்ஸ்…” என்றவள் அவர் அளித்ததைப் பருகலானாள். பொதுப்படையான விசாரிப்புகளுக்குப் பின் மகிழை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு செல்ல மாடியேற அழைத்துச் சென்றாள் கீர்த்தி. இருவரும் வெகு நேரம் ஒன்றாக இருந்துவிட்டு பிரிந்தார்கள்.

மகிழ் அங்கே இருந்த நாள் எல்லாம் இதுவே வழக்கமானது இருவருக்கும். ஒத்த வயதுடையவராகையால் பேசுவதற்கு பல விடயங்கள் இருந்தன இருவருக்கும்.

பார்த்த படம் தொடங்கி பிடித்த உடை வரை அனைத்தையும் அலசினர்.

ஒரு நாள் அவ்வாறு பேசும்போது அது தங்கள் குடும்பத்தைப் பற்றி திரும்பியது.

“அப்பா எப்பவுமே ஃபேமிலிக்கு ரொம்ப இம்பார்டன்ஸ் கொடுப்பாரு. எங்களை விட்டு அவரால இருக்கவே முடியாது. அம்மாவும் அப்பாவும் அவ்வளவு லவ்வபில் பேர்” என்று கீர்த்தி சொல்ல, மகிழின் முகம் லேசாக வாடியது.

“ஹே! என்ன மகிழ்? திடீர்னு சோகமாகிட்ட?” என்று கீர்த்தி கேட்க,

“என் அப்பாவும் அம்மாவும் உங்க அப்பா அம்மா மாதிரி அடிக்கடி என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டாங்க கீர்த்தி. அப்பப்போ அவங்களுக்கு என்னைவிட அவங்க லேலை தான் முக்கியம்னு தோணும்” என்று அவள் முடித்துவிட, தன் தோழி சோகமாக இருப்பதை காண விரும்பாத கீர்த்தியோ,

“இப்போ என்ன உனக்கு? அப்பா அம்மாவோட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணனும், அவங்க உங்கிட்ட பாசமா இருக்கனும். அதான? என் அப்பா-அம்மாவை பிடிச்சிருக்கா உனக்கு?” என்று அவள் கேட்க,

தன்னை சொந்த மகள் போல் பார்த்துக்கொள்ளும் பாரிவேந்தன்-ராதை தம்பதியின் பாசம் நினைவுக்கு வர, அவள் தலை தானாக மேலும் கீழும் ஆடியது.

“நீ பேசாம என் அண்ணாவை கட்டிக்கோ. அப்புறம் என் அப்பா-அம்மா உனக்கும் அப்பா-அம்மா ஆகிருவாங்க. உன்னை ஆல்ரெடி அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சோ, நோ பிராப்ளம் அட் ஆல்” என்றவள் அதனைக் கேட்டு என்ன சொல்வது என்று புரியாமல் அமர்ந்திருந்த மகிழை அழைத்துக்கொண்டு ஒரு அறையினுள் நுழைந்து ஆளுயற இருந்த அந்த புகைப்படத்தின் முன் நிறுத்தினாள்.

“டேய் அண்ணா… இவ தான் நான் உனக்கு பார்த்திருக்கும் பொண்ணு… எப்படி என் செலக்ஷன்?” என்று கேட்க, இதனைக் கேட்டவளோ அதிர்ச்சியுடன் தன் முன் இருந்த அந்த புகைப்படத்தை நோக்கினாள்.

அங்கே, கருப்பு நிற கோட் சூட்டில் இடது கை பட்டனை சரி செய்தவாறு மகிழை பார்த்தவாறு நின்றிருந்தான் அவன்.

அந்த சிறுபெண்ணின் மனதில் முதல் சலனம் வந்தது தன்னால் தானென்று அறியாமல் மென்மையாக புன்னகைத்தான் அவன், புகழேந்தி தமிழ்வேந்தன்.



ரொம்ப நாள் கழித்து எழுதியது. சொதப்பல்ஸ் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top