உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 06

Advertisement

ChitraPurushoth

New Member
P
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
ஒரு வாரமாக காணாமல் போனதற்கு மன்னிக்கவும்! கொஞ்சம் பர்சனல் ஒர்க். இதோ அடுத்த அப்டேட்டுடன் வந்துட்டேன்.View attachment 5245
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்

அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

தங்கத் தோடு ஜனித்த மஞ்சள்

கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்

மஞ்சள் மஞ்சள் மஞ்சள்

மாலை நிலவின் மரகத மஞ்சள்

எல்லாம் தங்கும் உந்தன் மஞ்சள்

என்று ஹரிஹரன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து புது உலகத்திற்கு அழைத்துச் செல்ல விழைய, அது எதுவும் தன்னைக் கவராமல் தனக்கான உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான் ஆதி.

இதனைக் கண்ட அவன் தோழன், அவனை உலுக்கி, “டேய் மச்சான்! என்னடா ஆச்சு உனக்கு? ஃபோன் வர்றது கூட தெரியாம அத கைல வைச்சுட்டு பாத்துட்டு இருக்க?”

“ஒன்னும் இல்லடா!” என்று அவன் கூற, அங்கே வந்த மற்றவனோ, “மச்சி! அவனை எந்த மோகினியோ அடிச்சிருச்சு போலடா… நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் எனக்கு கால் பண்ணுங்கன்னு மெஸேஜ் போட்ருக்கான். சரி, பேலன்ஸ் இல்ல போலன்னு கால் பண்ணா, எடுக்கவே இல்லடா! இவனுக்கு என்ன நடந்துச்சோன்னு எல்லாரும் பயந்து போய் வந்தா, இப்போதான் டீத் வைட்னிங் ட்ரீட்மெண்ட் எடுத்து முடிச்சவன் மாதிரி பல்ல காட்டிட்டு இருக்கான்” என்று கடுப்புடன் கூற,

அவன் கூறியதில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, “அவ மோகினி இல்ல, என் தேவதைடா!” என்றவன், அவளைக் கண்ட அந்த நாளுக்கு சென்றான்.

****

மகிழும் ஆதியும் அன்று ஷாப்பிங் சென்றபோது, அவனை லாபியில் விட்டுவிட்டு சிறிது நேரத்தில் வருவதாக சொல்லிச் சென்றாள் மகிழ். அங்கே ஒரு கடையின் முன் இருந்த பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ஆதி. அப்பொழுது, சிறிது நேரத்தில் அதுவும் கடுப்பாக, தன் சிகையை சரி செய்ய ஆரம்பித்தவனின் கைகள் அந்தரத்தில் நின்றது, தன்னெதிரில் தெரிந்த அந்த பிம்பத்தினால்.

அவனுக்கு நேர் பின்பு நின்றுகொண்டிருந்தாள் அந்தப் பெண். அவள் நின்றிருந்தது அவனைப் பார்த்து நிற்பது போன்றே இருந்தது, கண்ணாடியில் பார்க்கையில். அவளையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த நேரம் சட்டென்று மறைந்துவிட்டாள் அந்த மஞ்சள் வண்ண மாயக்காரி.

மாயவலை அறுந்து விழுந்ததில் அவளை சுற்றும்முற்றும் தேடிய ஆதியின் கண்களில் அகப்படவில்லை அவள். அவளைத் தேட நினைத்து அடியெடுத்து வைத்தவனின் செயல் தடைபட்டது அவனை நோக்கி வந்த மகிழால்.

அவளைக் கண்டதும் ஆதியின் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் தெரிய, அதனைக் கண்டுகொண்ட மகிழ், “என்னடா?” என்று கேட்க, “ப்ச்… போக்கா… சைட் சீயிங் செய்ய நினைச்சா, நீ அதுக்குள்ள வந்து நிக்குற” என்று அலுத்துக்கொண்டான் ஆதி.

அதனைக் கேட்ட மகிழோ, அவனை முறைத்தாள்.

“ஊருல ஒரு பொண்ண விட்றதில்ல. இதுல என்கூட வந்தும் சைட் அடிக்குறியா? இப்போவே சித்தப்பாக்கு ஒரு ஃபோன் பறக்கவிடவா மிஸ்டர்!” என்று அவள் கேட்க,

“அம்மா தாயே! நீ டீன் ஏஜ்ல யாரையும் சைட் அடிக்க விடாம செய்ததுக்கு இப்போ என்ன நல்லா செய்யுற!” என்றவன் முன்னே நடக்கலானான்.

அவன் பின்னோடு தனக்குள் சிரித்தவாறு நடந்தாள் மகிழ். இவனோடு இவ்வாறு விளையாடிப் பார்ப்பது அவளுக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

ஆதி எப்பொழுதுமே மகிழை நன்கு பாதுகாப்பான். அதுவும் ‘நீ தான் அக்காவை பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அவர்கள் வீட்டினரும் ஒரு முறை கூறிவிட, அன்றிலிருந்து அவளது பாதுகாப்பே அவனுக்கு முதன்மை. அவளை யாரேனும் பார்த்தால் போதும், அவர்களுடன் ஒரு சண்டையை வளர்த்து அடிக்காமல், அல்லது அடி வாங்காமல் விடமாட்டான். இதனைக் கண்டவள், அவனை வம்பிழுக்க ஒருமுறை ஒரு பையனைக் காண்பித்து, ‘அந்த பையன் செமயா இருக்கான்டா!’ என்க, அதைக் கேட்டு அவன் முறைத்ததைக் கண்டவள் ‘சோ ஸ்வீட் செல்லோ நீ!’ என்று கொஞ்சிக்கொண்டாள். பின்பு, அவனது இந்த ‘அக்கா அக்கறை’யைக் காணவே அவனுடன் வரும்போதெல்லாம் இவ்வாறு ஏதேனும் சொல்லி வம்பு வளர்ப்பது வழக்கமாகிப் போனது. அவளின் விளையாட்டைப் புரிந்தவனும் அவளோடு அதனை வளர்க்கலானான். அதன் ஒரு அங்கமாக, ‘நீ என்னை சைட் அடிக்கவே விட்டதில்லை’ என்று கூறி அவன் சைட் அடிக்கும் தருணங்களில் அதனை கலைத்து விடுவதும் உண்டு.

(ஷப்பா…. ஒரு ரிங்டோனுக்கு எவ்வளவு பெரிய ஃப்ளேஷ்பேக்! அக்காவும் தம்பியும் இதுல மட்டும் ஒரே மாதிரி இருங்க!)

*****

அன்று புகழ் தங்கள் கம்பெனியில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பெரிய நட்சத்திர விடுதியில் விருந்து ஏற்பாடு செய்திருந்தான். அவன் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ப்ராஜெக்ட் மிகுந்த போட்டிக்கிடையே அவனுக்கே கிடைத்திருந்தது. அதனைக் கொண்டாடும் பொருட்டே இந்த ஏற்பாடு.

அத்தோடு கம்பெனியின் ஆண்டுவிழாவும் வந்திருக்க, அதனை விஷ்வநாதனிடம் கேட்டுவிட்டு கொண்டாட அனுமதி பெற்றிருந்தான் புகழ். கம்பெனியின் பெரும்பாலான ஷேர்களை புகழ் வாங்கியிருந்தாலும், அதில் சிறிய பாகத்தை விஷ்வநாதனிடமே இருக்கட்டும் என்று சொல்லியிருந்தான். அவர் வளர்த்த கம்பெனியை முழுவதும் விட்டுச் செல்வது மனதை பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவு. அதனால், ஆண்டுவிழாவை நடத்துவதில் எந்த உறுத்தலும் இல்லாமல் போனது. அவனது இந்த குணத்தினால் விஷ்வநாதனின் மனதில் உயர்ந்து நின்றானெனில், இதனை அறிந்துகொண்டவளோ, எல்லாம் எனக்கு தெரியும் என்ற மர்மப்புன்னகையோடு கடந்துவிட்டிருந்தாள்.

ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் கலந்துகொள்ளவென புகழ் தன் குடும்பத்தை அழைத்திருக்க,, அவர்கள் யாரும் வர முடியவில்லை.

கம்பெனியின் சார்பாக ஒரு பெரிய கேக்கை வெட்டியவர்கள், அதன்பின் ஆடல் பாடல் என்று கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது ராகுல் மகிழை பாடுமாறு அழைக்க, அவள் மறுத்துக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அனைவரும் வற்புறுத்த, அவள் சங்கடத்துடன் அனைவரையும் நோக்கி இறுதியில் புகழின் முகத்தைக் கண்டு அனுமதி வேண்டி நின்றாள்.

இதனைக் கண்டு புருவம் சுருக்கிய புகழும், சம்மதித்து தலையசைக்க, மேடையேறிய மகிழ், மைக்கை வாங்கி கண்களை மூட, அங்கே அவள் அனுமதியின்றியே புகழ் வந்து நிற்க, மெல்ல பாட ஆரம்பித்தாள்.

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்

மலர் பொழியினிலே

கோலக் கிளிகளுடன் குயில்கள்

கொஞ்சிடும் வேளையிலே

மாலைக் குலவு மார்பம் மருவில்

மாமதி போல் முகத்தான்

வேலொன்று கையிலேந்தி என்னையே

விழுங்குவான் போல் விழித்தான்

என்று அவள் செஞ்சுருட்டி ராகத்தில் தொடங்கவும், அவள் குரல்வளமையைக் கேட்டு விழிவிரித்து பார்த்திருந்தான் அவள் பார்த்தன். இதனை அறியாதவளோ, தன் பாடலைத் தொடர்ந்தாள்.

நீலக் கடலினைப் போல் என் நெஞ்சம்

நிமிர்ந்து பொங்கிடவும்

நாலுபுறம் நோக்கி நாணிநான்

யாரிங்கு வந்ததென்றேன்

இவ்வரிகளில் நாணி என்று அவள் உச்சரித்த அழகில் அரங்கமே லயித்திருக்க, பாடலினுள் மூழ்கிப்போனாள் மகிழ். அந்த சூழலில் தான் இருப்பதாகவே எண்ணி தொடர்ந்தாள்.

ஆலிலை மேல் துயின்று புவனம்

அனைத்துமே அளிக்கும்

மாலின் மருமகன் யான் - என்னையே

வேலன்! முருகன்! என்பார்


சந்திரன் வெட்குறும் உன் முகத்தில்

சஞ்சலம் தோன்றுவதேன்?

சொந்தம் இல்லாதவளோ – புதிதாய்

தொடர்ந்திடும் உறவோ?

முந்தைப் பிறவிகளில் உன்னை நான்

முறையினில் மணந்தேன்

எந்தன் உயிரல்லவோ – கண்மனி

ஏனிந்த ஜாலமென்றான்

புன்சிரிப்போடும் காதல் குரலில் தெறிக்க அவள் பாடிய வரிகளில் அனைவரும் கட்டுண்டிருக்க,

உள்ளம் உருகிடினும் உவகை

ஊற்று பெருகிடினும்

கள்ளத்தனமாக கண்களில்

கனல் எழ விழித்தேன்

புள்ளி மயில் வீரன் மோகனப்

புன்னகைதான் புரிந்தான்

துள்ளி அருகில் வந்தான் - என் கரம்

மெல்லத் தொடவும் வந்தான்

என்று அவள் பாட, புகழின் இதழ்கள் தன்னை அறியாமலேயே சபாஷிட்டது அவள் கடைசி வரிகளை பாடிய விதத்திலும் அவள் முகம் காட்டிய பாவனைகளிலும்.

சட்டென்று குரலில் சோகத்தைக் கொண்டு வந்தவள் அடுத்தடுத்த வரிகளைப் பாடலானாள்.

பெண்மதி பேதமையால் அவன் கை

பற்றிடுமுன் பெயர்ந்தேன்

கண் விழித்தே எழுந்தேன் - துயரக்

கடலிலே விழுந்தேன்

வண்ண மயில் ஏறும் பெருமான்

வஞ்சனை ஏனோ செய்தான்?

கண்கள் உறங்காவோ அக்குறை

கனவைக் கண்டிடேனோ

என்று அவள் மீண்டும் ஒரு முறை கனவில் அவனைக் காண்பேன் என முடிக்க, அதுவரை அவளோடு அக்காட்சியை தங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டிருந்த நேரம் ஒன்றன்பின் ஒன்றாக ஆரம்பித்த கைத்தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

அதன்பின் இரவு உணவு பஃபே முறையில் பரிமாறப்பட, ஒரு தட்டில் பெற்றுக்கொண்டு ஓரமாக வந்தமர்ந்தவளின் அருகில் சிறிது நேரத்திலேயே அமர்ந்தாள் ஒரு பெண், “ஹாய்!” என்றவாறு.

யாரென்று பார்த்தவளுக்கு தன் முன்னால் சிநேக பாவத்துடன் சிரித்துக்கொண்டிருக்கும் ப்ரார்த்தனா விழ, அவள் முதல் யோசனை, ‘இவள் எங்கே இங்கே?’ என்பது தான். பாவம், அவளுக்குத் தெரியாதே, ப்ராத்தனா சமீபகாலமாக இந்தியாவிற்கு அடிக்கடி வலம் வந்து கொண்டிருப்பது.

“ஹாய்!” என்று சங்கடத்துடன் ஒரு சிரிப்பை சிந்திய மகிழ் மீண்டும் உணவின் புறம் தன் கவனத்தைப் பதிக்கலானாள்.

“நீங்க சூப்பரா பாடுனீங்க” என்றவளுக்கு ஒரு தேங்க்ஸை உதிர்த்தவள், ‘மகிழ், சீக்கிரம் எழுந்து போ’ என்று தனக்குத் தானே கட்டளையிட, அதற்கு உடன்பட்டு அவள் கைகளும் உணவை உள்ளே தள்ள, உணவுக்குழாயை அடைய மறுத்தது அது.

“பாட்டு கிளாஸ் போனீங்களா?”

“ம்ம்ம்… ரெண்டு வருஷம் போனேன்” என்றவள் விழுங்க முடியாமல் விழுங்க, அதனைக் கண்ட ப்ரார்த்தனா அருகில் இருந்த ஜூஸ் க்ளாசை அவள் புறம் நீட்ட, நன்றி உரைத்து வாங்கிக்கொண்டவள் அங்கிருந்து மெல்ல நகர்ந்தாள்.

*****

சிறிது நேரம் கூட்டத்திலிருந்து தனியாக இருக்க வேண்டும் என்று தோன்ற, விடுதியின் பின்புறத்தில் இருந்த புல்வெளியில் நடந்துகொண்டிருந்தாள் மகிழ். அப்பொழுது, ‘சீக்கிரமா கொண்டு வாடா!’ என்று ஒரு சத்தம் மெலிதாக கேட்க, என்னவென்று பார்க்கச் சென்றாள்.

அங்கே ஒருவன் முன்னே சென்று யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்து சைகை செய்ய, அவன் பின்னே ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு இன்னொருவன் வந்தான். மங்கிய நிலவொளியில் அவள் ப்ரார்த்தனா என்று தெரிய, உடனே புகழை அழைத்து விஷயத்தை உரைத்தவள் அவர்கள் இருவரையும் ஓசை படாமல் பின்தொடர்ந்தாள்.

ப்ரார்த்தனாவை ஒரு காரின் பின்சீட்டில் வைத்த இருவரும் சிறிது தூரம் செல்ல, அங்கே தலையை சொறிந்தவாறு நின்றிருந்தான் பாதுகாவலன் ஒருவன்.

“யார் வந்து என்ன கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாது. சரியா?” என்ற முதலாமவன், ஒரு கட்டை எடுத்து அந்த பாதுகாவலனிடம் கொடுக்க, அதனை எண்ணிப் பார்த்தவன், “பத்தாதுங்களே ஐயா!” என்றான். இருவரும் அவனிடம் பேரம் பேசியபடி இருக்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மகிழ் கார்க்கதவைத் திறந்து முன்புறம் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை சிறிதளவு ப்ரார்த்தனாவின் முகத்தில் தெளித்தாள்.

அதில் சுயநினைவு பெற்ற ப்ரார்த்தனா கத்த முயற்சிக்க, அவளிடம் தான் தான் வந்திருப்பதாக உரைக்கவும், நிம்மதியடைந்தவளுடன் அவளும் காரை விட்டு இறங்கி தப்ப முயற்சிக்க, இருவரையும் மறைக்கும் விதமாக வந்து நின்றனர் அந்த அடியாட்கள்.

“என்னம்மா! ஏமாத்திட்டு போகலாம்னு பாக்குறியா? எத்தனை பேரை பார்த்திருப்போம்” என்ற ஒருவன் மற்றவனைப் பார்த்து, “சனிப்பொணம் தனியா போகாதுன்னு சொல்லுவாங்கல, இங்க தொணையேட போகப்போகுது மாப்ளே” என்க, பெண்கள் இருவருக்கும் கிலி பிடித்துக்கொண்டது.

“யாரை மச்சான் முதலில் போட்டுத் தள்ளுறது?” என்று இரண்டாமவன் கேட்க, மற்றவனோ, “இவளை காப்பாத்த தான இவ வந்தா? அப்போ இவ இறக்கறத பார்த்துட்டே போய் சேரட்டும்” என்றுவிட்டு தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் பார்த்துக்கொண்டே ப்ரார்த்தனாவை குறி வைத்தான்.

இதனைக் கண்ட ப்ரார்த்தனா ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து கண்களை மூடிக்கொண்டாள். ‘சாரிடா! இதுவரை உன்னிடம் என் காதலை சொல்லல. இன்னிக்கு சொல்லலாம்னு வந்தேன். இப்போ சொல்லாமலே போறேன்’ என்றெண்ணி தன் கைகளை அழுத்தமாக மூடிக்கொண்டவள் ட்ரிக்கரை அழுத்தும் சத்தம் கேட்பதற்காக காத்திருந்தாள்.

ட்ரிகரும் அழுத்தப்பட்டது! அடுத்த நொடி தரையில் கிடந்தாள் ப்ரார்த்தனா!!!
Aaaaaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top