உன்னாலே.... நான் பெண்ணானேனே 13

varshakavin

Well-Known Member
#1
அத்தியாயம் 13

அவள் தந்த விலாசத்திற்குச் சென்றவன் அந்த பிரமாண்டக் கட்டிடத்தைப் பார்த்து மனம் வெறுத்துப் போனான்.

அது தமிழகத்திலயே சிறப்பான பெயர் வாங்கிய மருத்துவமனை. அதுவும் செயற்கை கருத்தரித்தலில் முதலிடம் வகிக்கும் மிகப் பெரிய மருத்துவமனை.

காரை வேகமாக அடித்துச் சாத்தியவன் உள்ளே செல்ல , வரவேற்பறையில் தலையைக் குனிந்து , இருக்கையின் கைப்பிடியில் முட்டுக் கொடுத்து கன்னத்தில் கை வைத்து எதையோ வெறித்துக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்தான்.

திடுக்கிட்டவள் கையை இழுக்கப் போராட ,சுற்றி இருந்தவர்கள் பார்வை இவர்கள் பக்கம் திரும்பவும் போராட்டத்தை கைவிட்டு ,

"கைய விடுங்க... "

"முடியாது … என் கூட வா .. "அங்கிருந்தவர்கள் முன் காட்சிப் பொருளாக விரும்பாமல் ,

" விடுங்க அத்தான் … கைய விடுங்க .. நான் வாறேன்"

அவன் அவள் பேச்சைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாது…அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிறிய பிள்ளையார் கோவில் முன்பு நிறுத்தினான்.

இருள் சூழத் துவங்கியதால் அவ்விடம் அதிக வெளிச்சமில்லாமலும் இருக்கவே அவனோடு வந்தவள் ,

"இங்க ஏன் …" என்பதற்குள்ளாகவே விஜய் தன் கையிலிருந்த தாலிச் சரடை அவள் கழுத்தில் போட்டு விட்டு, பிள்ளையார் முன்பிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியிலும் வைத்தான். நொடி நேரத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வில் திடுக்கிட்டு அதைக் கழற்றப் போனவள் கையைப் பிடித்துக் கொண்டவன் ,

"நீ கேட்டது உனக்கு வேணும்னா இது எங்கம்மாவோடது அதை நீ கழட்டக் கூடாது….ஏன்னா எங்க வீட்டு வாரிசு உரிமை இல்லாம வரவும் கூடாது வளரவும் கூடாது .…."

கையை எடுத்தவன் தன் நெற்றியில் வைத்துக் கொண்டு ,

"ஏன்டி ....ஏன்டி இப்படி என்னை இப்படியாக்குற….. உனக்கு அக்கானா… எனக்கு அண்ணி … அவங்க சொன்னத எனக்கு விருப்பம் இல்லனாக் கூட நிறைவேத்த மாட்டேனா …. எனக்கு டைம் கொடு… நீயும் டைம் எடுத்துக்கோ… மெதுவா யோசிச்சு இயற்கையா என்ன நடக்குமோ அப்படி நடக்கட்டும்.... இப்படி வேண்டாம் ….வா வீட்ல பாட்டிக்கிட்ட சொல்லி உன்னை விட்டுட்டு நான் ஜெர்மனி போறேன்…. யோசிச்சு முடிவெடுக்கலாம் .... எனக்கு இப்ப இதை தவிர வேற வழித் தெரியல …" என்றவன் , அவள் தோளைப் பற்றி,

"லூசு லூசு … பெரிசா யோசிக்கிறாளாம் யோசனை … இப்ப நீ என் பொண்டாட்டி … வீட்லப் போய் பேசிக்கலாம் கிளம்பு.... " என்றவாறு அவள் கைப்பிடிக்க ,

மறுபடியும் அவன் பிடியிலிருந்த கையை இழுத்துக் கொண்டவள், "இப்பக்கூட நீங்க சொன்னீங்க தானே … எனக்கு விருப்பமில்லனாக் கூடனு….. அது ஏன் …. அப்படி ஒரு கல்யாணமோ குழந்தையோ உங்களுக்கு வேண்டாம்....." என அழுதவளிடத்தில், விஜய் ,

"ஹேய் நான் அப்படிச் சொல்ல வரல .... நான் " என அவன் பேச வாயெடுக்க , கை நீட்டி பேசாதே என்பது போல் தடுத்தவள் , கண்ணீரோடு ….

"உங்களுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யக் கூடாது அத்தான்… ஆனா எனக்கு உங்க மேல விருப்பம் இருக்காத் தெரியாது … ஆனா உங்க குழந்தையை மட்டும் தான் நான் சுமக்கணும்ங்கிற விருப்பம் இருக்கு … எனக்கு இப்ப யாருமே இல்ல.... நீங்க இந்த உதவிய செய்தா… நான் உங்களுக்கு காலம் முழுசும் நன்றியுள்ளவளா இருப்பேன்.

தாலியை தொட்டுக் காட்டியவள் , " இது போட்டு விட்டாலும் நமக்குள்ள எந்தப் புரிதலும் இல்லாம கடமைக்காக ஒன்னு சேர்ந்து வர்ற குழந்தை நல்லதுக்கில்ல….. அதுக்கு இந்த மாதிரி எவ்வளவோ மேல் … எனக்கு ரொம்ப ரொம்ப விருப்பம் … நான் சந்தோஷமா சுமப்பேன் …. ப்ளீஸ் இதை மட்டும் எனக்காக செய்துட்டுப் போங்க …." எனக் கையெடுத்துக் கும்பிட்ட வளைப் பார்த்து ,

"உன் நன்றியக் கொண்டு குப்பைல போடு … உன்னை … "அதற்குள் அவள் மொபைலில் அழைப்பு வரவும் கண்களை துடைத்துக் கொண்டவள் , அவன் உணரும் முன்னமே அவனது கரத்தினை இறுக பற்றிக் கொண்டாள்.

"ப்ளீஸ் அத்தான் " எனக் கண்களால் கெஞ்சியவளிடம் அவனால் எதிர்த்துப் பேச முடியவில்லை.

இப்பொழுது அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு டாக்டரைப் பார்க்கச் சென்றாள். ஆனால் ஒன்று இது நேரம் வரை ஏதோ தப்பான முடிவு எடுத்து விட்டோமோ என்றுக் கலங்கி போயிருந்தவள் இப்போது அவன் கைப்பித் துருக்கும் போது தோணவில்லை.

அது அவன் போட்டிருக்கும் தாலிக்கொடி கொடுத்த உரிமை , நிம்மதி என்பது அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

மருத்துவரின் அறைக்குள்ளே வந்தவர்களை வரவேற்ற மருத்துவர் , "மிஸ்டர் விஜய் உங்க வெஃய்ப் எல்லா விஷயமும் சொன்னாங்க … இந்த குழ்நிலைல….. ஓகே….அதை விட்டுடுவோம் …பொதுவா கணவனோட குடும்பம் நடத்தி வாய்ப்பு கம்மியா இருக்கிறப்பெண்களுக்குத்தான் நாங்க இந்த முயற்சி செய்வோம் ….எனிவே ஒரு கன்னிப் பொண்ணுக்கு எங்க கிளினிக்ல இதுதான் ப்ரஸ்ட் … அதுவும் என் பொண்ணு அவ ஃபிரண்ட் குடும்ப சூழ்நிலைய சொல்லி ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டுக் கிட்டதால தான் …ஓகே சொன்னேன்.. இப்படி சூழ்நிலைல உங்களுக்கு நாங்க கவுன்சிலிங் தர்றதும் வேஸ்ட் தான் … நீங்க நர்ஸ் கூட போங்க நான் உங்க வொய்ஃப் கிட்ட பேசிக்கிறேன் " என்றவர், தமிழினியைப் பார்க்க ,

அவளது அழுது வடிந்த தோற்றம் அவருக்கு பலதையும் உணர்த்த , அதை விடவும் விஜய்க்கு அவள் முகம் வருத்தத்தை தர, மருத்துவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் கேட்ட சில கேள்விகளக்கு பதிலளிக்கவும் ,அதற்கு மேல் ஒன்றும் சொல்லாது , ஒரு ஆண் செவிலியரை வர வைத்து விஜயை அவருடன் அனுப்பி விட்டார்.

அவளுக்கு தேவையான மருந்துகளை தந்து எப்போது வர வேண்டும் என்று அறிவுறுத்தி,

"இந்த பிராசஸ் ஆரம்பிக்கிற வரை உங்களுக்கு டைம் இருக்கு … எப்படினு யோசிச்சுக்குங்க" என்பதாக அவர்களை அனுப்பி வைத்தார்.

அவள் என்ன சொல்லி வைத்தாள் என்று விஜய் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் மருத்துவரின் பேச்சிலிருந்து தாங்கள் கணவன் மனைவி என சொல்லி வைத்திருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

எல்லாம் முடிந்து வெளியே வந்தவன் , அவளை பாட்டியிடம் விட்டு விடுவானோ என அஞ்சி , தன் பையை எடுத்துக் கொண்டவள் ,

"நான் … நான் திருவனந்தபுரம் கிளம்புறேன்… யாருகிட்டயும் முக்கியமா பாட்டிக்கிட்ட நான் இங்க வந்தத சொல்லல....." என்றவள் , எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்த ,

"இப்ப நீ என் கூட கார்ல ஏறல… நான் பாட்டிக்கிட்ட இப்ப நடந்தத சொல்லிருவேன் …. அப்புறம் நமக்கு பிடிக்குதோ இல்லையோ நாம சேர்ந்துதான் இருக்கணும் … " இப்படி சொன்னப் பிறகு என்ன செய்வாள் , உடனே சென்று காரில் ஏறிக் கொண்டாள்.

அவளை அழைத்துக் கொண்டு இரயில் நிலையம் வந்து இறக்கி விட்டவன் , அதுவரை எதுவும் பேசவில்லை .ஆனால் கிளம்புகையில் "சாதிச்சுட்டில்ல " என்று கோபமாகச் சொல்லி விட்டு சென்று விட்டான்.

அவன் ஜெர்மனிக் கிளம்பும் அன்று மனம் கேளாது போன் அடித்துக் கேட்க , "இல்லை அத்தான் …. யோசிச்சுப் பார்த்துட்டு இப்படி வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் …."

கேட்டவனுக்கு ஏன் கோபம் எதற்கு கோபம் என்றுத் தெரியாமல் , "இதுக்குத்தான் அன்னைக்கு என்னைய அந்தப் பாடு படுத்தினியா…. போடி …." என்றவன் கோபம் அடங்க வெகுநேரமானது .எதற்காக இந்தக் கோபம் என்பது அப்போது அவனுக்குப் புரியவுமில்லை.

அதன் பிறகு அவன் பாட்டி கூப்பிடும் போது எல்லாம் வருகையை தள்ளிப் போட்டவன், பல மாதங்களுக்குப் பிறகு தமிழினியின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும் உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து இந்தியா வந்தவன் நேராக திருவனந்தபுரம் சென்று அவள் தங்கியிருந்த மருத்துவமனைக்குச் சென்றான்.

அந்தப் பெரிய வயிற்றோடு சோர்ந்து படுத்திருந்தவளைப் பார்க்க மனம் கனக்க , அவள் கையைத் தொடவும் , …விழித்தவள் ,

"அத் .... அத்தான் என்னை மன்னிச்சுருங்க … எனக்கு எனக்கு BP அதிகமா இருக்குத்தான் …. ப்ளீஸ் எனக்கு எதுவாது ஆகிருச்சுனா ….என் பிள்ளைய நல்லபடியா வளர்த்துருங்க…. டாக்டர்கிட்ட பிள்ளை தான் வேணும்னு சொல்லுங்கத்தான் …. ப்ளீஸ் ப்ளீஸ் " என்பதற்குள்ளயே இரு நாட்களாக விட்டு விட்டு வந்த வலி … தகப்பன் வருகையை அறிந்து வெளிவரத் துடித்ததோ என்னமோ … பிள்ளை வலி எடுக்க ஆரம்பிக்க , பிரசவ வார்டுக்குள் போகும் முன்னர் … வலியிலும் ,

"ப்ளீஸ் அத்தான் நம்ம பிள்ளைய காப்பாத்திடுங்க… " என்றவளை என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றிருந்தான். மருத்துவர் குழந்தையைக் கொண்டு வந்து தந்தவர் இருவரும் நலம் என்றப் பிறகே அவனுக்கு சீராக மூச்சு வந்தது . ஆனால் இப்போது அவள் மீது அடக்க முடியாத கோபமும் பெருகியது.

"இல்லனு பொய் சொல்லியிருக்கா … இத்தனை மாசம் பாட்டிக்கிட்ட அப்படி இப்படினு கதை வேற விட்டு, சென்னைப் போகாம தப்பிச்சுருக்கா …இவள … எல்லாம் அவ இஷ்டம்… என்னைய சொல்லணும் இவள கவனிக்காம விட்டது என் தப்பு …." அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது.

பாட்டியை திருவனந்தபுரம் வரவழைத்தவன் , அன்றுக் கோவிலில் தான் அவளுக்கு விருப்பமில்லாது கட்டாய தாலி கட்டி மனைவியாக்கி கொண்டதையும் சந்தர்ப்ப வசத்தால் கணவன் மனைவியாக இருந்ததாகவும் காரணம் சொன்னவன் , அனைத்திற்கும் காரணம் தானே என்று மட்டும் சொன்னான் இதைப் பற்றி அவளிடம் ஒரு வார்த்தையும் கேட்கக் கூடாது என்று விட்டான்.

"எய்யா நல்லது தானய்யா செஞ்சுருக்க … எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் என் பேத்திய ஊட்டம் கொடுத்து கவனிச்சுருப்பேனே … இப்ப பாரு புள்ளைக்கு பால் கொடுக்க கூடசத்தில்லாம இருக்கா" என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

சென்னைக்கு அழைக்க ,முடியாது என்றவள் , தூத்துக்குடி செல்வதாகச் சொல்லவும்,

"அடங்காபிடாரி இவ்வளவு நடந்தும் அடங்க மாட்டிக்கிறா … எல்லாம் அவ இஷ்டம் … அவ வான்னா வரணும் … போன்னா போகணுமா " சலித்துக் கொண்டே ,


அங்கு சென்று விட்டு விட்டு வந்தான் .ஒன்று விட்ட பெரியம்மா முறையில் ஒருவரை பாட்டி அவளுக்கு துணைக்கு வைத்துவிட்டு மூன்றாம் மாதம் அழைத்துக் கொள்வதாக வந்து விட்டார். அவரால் பேரனையும் தனியாக விட முடியவில்லை.

"பாட்டி அவ உடம்பு தேறினதும் புரிய வச்சு கூட்டிட்டு வரலாம் ...." என அவளைப் பார்த்துக் கொண்டே சொல்ல ,

"பாட்டி அக்கா ஆசையை நிறைவேத்திட்டேன்… எனக்கு அது போதும் … இதுக்கு மேல என்னைய விட்டுருங்க ப்ளீஸ்...." என அழுது அடம் பிடித்தவள் ஊரிலேயே இருந்து விட்டாள்.

அக்காவிற்காகவே இந்த திருமணமும் குழந்தையும் என்றவளை விட்டு வைப்பது சரியில்லை என்பதை உணர்ந்த பாட்டி … மூன்றாம் மாதம் முடியவும் ,

"தாயி புருஷன் ,புள்ள , பேரன்னு என் பரம்பரையே இல்லாம போய்ட்டுனு இருக்கிறப்ப … இல்லனு என் கொள்ளுப் பேரன கண்ணு முன்னால கொண்டு வந்து நிப்பாட்டிருக்க … அந்த புள்ள வளர்ந்த இருக்கிற கொஞ்ச நாள் பார்த்து சந்தோஷபட்டு இந்த உலகத்தவிட்டு நானும் போயிடுறேன் … உன்னைக் கையெடுத்து ...." என சொல்லவும் வந்து கையைப் பிடித்துக் கொண்டவள் ,

"ஏன் பாட்டி… ஏன்… ஏற்கனவே நான் என்னப் பாவம் செய்தேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.... நீங்க கூடக் கொஞ்சம் சேர்க்கறீங்களே…" என அழுதவளை உடன் வர சம்மதிக்க வைத்தார்.

ஏற்கனவே கோயிலில் தாலிக் கட்டியிருந்தாலும் முறையாகச் செய்ய வேண்டுமென அவர்கள் இருவரையும் அதைச் சொல்லி இதைச் சொல்லி பதிவுத் திருமணமும் இறைவன் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் மஞ்சள் கயிறும் கட்ட வைத்து அழைத்து வந்தார் அந்தப் பெரியவர் .

உதட்டளவில் 'விருப்பமில்லை விருப்பமில்லை' என்றவர்கள் உள்ளத்தளவில் அதிகமாகவே விரும்பியிருந்திருக்கிறார்கள் என்பதை மெதுவாகத்தான் புரிந்துக் கொண்டார்கள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes