உனக்காகவே நான் -23

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1
அத்தியாயம் – 23
Heroin.jpg

“தேவி...நா..நான் அவளிடம் பேச வேண்டும்.இப்போதே!..என் சுமியிடம் பேச வேண்டும்” எனக் குரல் தழுதழுக்கச் சொன்னான் குரு.


குருவின் நிலையுணர்ந்த மித்ரா, “இதுதான் அவளது ஃபோன் எண்,ம்ம்...தொடர்பு கொள்ளுங்கள்” எனச் சொன்னாள்.அந்த எண்ணை தன் ஃபோனில் பதிவு செய்து கொண்டு வேகமாகக் கோவிலை விட்டு வெளியில் வந்தான்.அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட வண்ணம் அங்கிருந்த அவர்களது காரை நோக்கி நடந்த வண்ணம் சுமித்தாவின் குரலை இரண்டு வருடங்களுக்குப் பின்பு கேட்டான் குரு.


இங்கிதம் தெரிந்தவளாக இன்னும் ஒரு மணி நேரம் கோவிலையே இரண்டு முறை சுற்றினாள் மித்ரா.பிறகு நேரம் கூடுவதை உணர்ந்து வந்தவள் காரை நோக்கிச் சென்றாள்.அவள் எதிர் பார்த்தது போல குருவின் அணைப்பில் சுமித்தாவும்,அவளை ஆருதலாக வருடிய படி குருவும் அந்த காரில் இருந்தார்கள்.


இவளைத் தூரத்தில் கண்டதும் விலகி அமர்ந்த சுமித்தாவும் குருவும் மித்ராவை கண்டு புன்னகைத்தனர்.சுமித்தா மித்ராவை நன்றியுடன் பார்த்தாள்.


வந்ததும்,கார் கதவில் கைவை வைத்தவள் “ம்ம்கும்...என்ன நடக்கிறது இங்கே..என்னை இந்த நேரத்தில் சிவ பூஜை வேளை கரடியாக்கியாற்றா..?இப்போது சந்தோஷமா அண்ணா” எனப் பொய் கோபம் கொண்டவளாக முறைத்துச் சிரித்தாள் மித்ரா.


குரு அசடு வலியப் பின்னந்தலையை தடவிய வண்ணம் புன்னகைத்தான்.


அதனைத் தொடர்ந்து “மிகவும் நன்றி மித்ரா...எனக்கு என் குரு திரும்பக் கிடைத்துவிட்டார்.உன்னால்தான் எல்லாம்.ஏதோ என் வேதனைப் போக அன்று உங்களிடம் புலமினேன்.பெயர் கூட தெரியாமல் எப்படி இவர்தான் என்னவர் என அறிந்தாய் என்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் என் உயிரையே நீ மீட்டுத் தந்திருக்கிறாய்.நான் என்ன கை மாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை” என உணர்ச்சி ததும்ப கூறினாள் சுமித்தா.


“ஆஹம்..அப்படியா அண்ணி..பெரியதாக எந்தக் கைமாறும் செய்ய வேண்டாம்.எனக்கு இப்போது பசிக்கிறது..ஏதாவது பஜ்ஜி சொஜ்ஜி வாங்கித் தந்தாள் மகிழ்வேன்” என சின்னப் பிள்ளை போலக் கொஞ்சினாள் மித்ரா.


மித்ராவின் நளினமான பதிலில் அங்கே அவர்களிடையே சத்தமிட்ட சிரிப்பொலி பரவியது.அதனை வேறொரு ஜோடிக் கண்கள் காணவும் செய்தது.ஆனால் இதை அறியா மித்ரா,குரு மற்றும் சுமித்தா மாலை சிற்றுண்டியுடன் முடித்துவிட்டு வீடு சேர்ந்தனர்.


“ரிஷியிடம் மெதுவாக உண்மையை புரியவைத்து உன்னை அழைத்துச் செல்கிறேன்” என சுமித்தாவிடம் வார்த்தை கொடுத்துவிட்டு,பிரிய மனமற்று வந்தான் குரு.


“ம்ம்...”என்றதோடு அதுவும் சரியே என எண்ணி,சுமித்தாவும் இருந்த ஆசிரமத்தில் நடந்தவற்றை சொல்லி வைத்தாள்.


வீடு வந்து சேர்ந்ததும்,இரவு உணவு முடித்துவிட்டு அவள் அறை சென்றுவிட்டாள் மித்ரா.எப்படியும் குரு அங்கிளிடம் எல்லாம் சொல்லிவிடுவான் என்பது மித்ராவிற்கு தெரியும் .அதனால் ‘ஹப்பா...எவ்வளவு பெரிய ப்ரட்சனை தீர்ந்தது.இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்’ எனப் பெருமூச்சுவிட்டபடி, ‘ பெருமாளே’ என நிம்மதியாக நாளை நடக்கவிருக்கும் பூகம்பம் அறியாமல் கண் அயர்ந்தாள் மித்ரா.


காலையில் அவள் விழித்த போது அவளது ஃபோனில் ஒரு Message வந்திருந்தது.அது குருவிடமிருந்து.புன்னகையுடன் திறந்து பார்த்தாள்.


“தேவி...என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை.அப்பாவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.அவரும் இந்த முறையில் யோசிக்கவில்லையே என வேதனையுற்று பின் இப்போதாவது சரியானதே!என மகிழ்ந்தார்.ஆனால் எனக்கு உடனே பாட்டியிடமும் பேச வேண்டும்.மரகதம்மா,வள்ளி,முத்து எல்லாரிடமும் சொல்ல வேண்டும்.சுமி,வள்ளியிடமும் முத்துவிடமும் அவளது சித்தி அவர்கள் மீது திணித்த திமிர்பிடித்த செயல்களுக்கு மன்னிப்பு கேட்க சொன்னாள்.எல்லாம் இப்போதே செய்ய வேண்டும் போல் இருந்தது.அதனால் அப்பாவும் நானும் இப்போதே கோவை சென்றுவிட்டு ,ஊட்டிக்குக் கிளம்புகிறோம்.நீயும் ரிஷியும் நாளை வாங்க.உன் அறை வந்து சொல்லத்தான் நினைத்தேன்.ஆனால் நீதான் எனக்கு தங்கச்சியாயிற்றே!!எனக்கு மேல் கும்பகர்ணீயாக உறங்கிக் கொண்டிருந்தாய்.அதனால் கிளம்பிவிட்டோம்.நீயும் ரிஷியும் நாளை ஊட்டிக்கே வந்துவிடுங்க.நாளை பார்க்கலாம் J - குரு” என முடிந்ததிருந்தது.அதைப் படிக்கும் போதே மித்ராவின் முகத்தில் புன்னகை அரும்பியது.


பிறகு வழக்கம் போல் எல்லாம் நடக்கக் காலை உணவும் முடிந்தது.


பிறகு ரிஷி மித்ராவின் அறைக்கு வர “பார்..எதுவும் சொல்லாமல் திடீரென்று கிளம்பிவிட்டார்கள்.இவனுக்காக நாம் இங்கு வந்தால் நம்மை விட்டுவிட்டு அவங்க கிளம்பிவிட்டார்கள்.இதில் வேறு இன்று நாம் நால்வரும் பீச் போகலாம் என்று நேற்று பெரியதாக திட்டமெல்லாம் போட்டான்.காலையில் எழுந்து பார்த்தால் ஒருMessage.குருவிடம்.அவ்வளவுதான்” என சலிப்பு போல சொல்லிவிட்டு “சரி...மித்ரா...நாமும் ஊட்டிக்குக் கிளம்புவோம் நீயும் தயாராகு” எனச் சலிப்பு மேலும் மிகச் சொன்னான் ரிஷி.


அவனது சோர்வு பொறுக்காமல் மித்ரா, “ஏன் ரிஷி...நாம் பீச் போய்வரலாமே” எனக் கேட்டாள்.அதனோடு மித்ராவிற்கு அங்கிள் சொன்னது நினைவு வந்தது. ‘காதலைச் சொல்வதற்கான சூழ்நிலை உண்டாகவில்லையோ’ என்று கூட ஒருவேளை பீச் போனால் அங்கிருக்கும் பரந்த கடலைப் பார்க்கும் போது மனம் லேசாகி என்னிடம் அவன் காதலை சொல்லக் கூடுமோ’ என ஆசைகொண்ட கனவில் மிதந்தாள். ‘என்னதான் அங்கிள் அவனது விருப்பம் சொன்னாலும்,அவன் வாயால் கேட்பதே தனக்குப் பரிபூரண மகிழ்வைத் தரும்’ என நினைத்தாள் மித்ரா.


உடனே முகம் மலர “உண்மையாகவா?நீ வர மாட்டாயே என்று எண்ணித்தான் நாம் ஊட்டிக் கிளம்புவோம் என்றேன்.சரி ஒரு நாலு மணிபோல போய்விட்டு வருவோம்.பீச்சிலிருந்து வந்ததும் ஊட்டிக்குக் கிளம்புவோம்” எனச் சொல்லிவிட்டு, “இப்போது கொஞ்ச ஓய்வெடுத்துக் கொள்.இரவு நேரத்தில் பயணம் இருக்கும்.நீ கலைத்துப் போவாய்.சரியா?”என அக்கறையாகச் சொல்லிவிட்டு அவன் அறை சென்றுவிட்டான்.


“ம்ம்...”என்று சொன்னவள் அவன் தனக்காக எடுத்துத் தந்திருந்த ஜீன்ஸை மட்டும் வெளியில் வைத்துவிட்டு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை தன் கைப்பையில் வைத்துவிட்டு படுக்கையை சரி செய்து அதில் சாய்ந்தவிதமாக அமர்ந்தாள்.


கொஞ்ச நேரம் கண் மூடி ரிஷியின் நினைவில் இருந்தாள் மித்ரா.அழகிய பூவனமாக அவனது நினைவுகள் அவள் மனதில் ஓடியது.ஆனால் அந்தப் பூவனத்தில் ஒரு நெருஞ்சி முள்ளாய் ஒரு நினைவு வந்தது. ‘ரிஷி ஏன் அப்படியோ நிபந்தனை சுமித்தாவிடம் விதித்தான்.அது நிஜமாகவே அவளைப் பரிசோதிக்கும் முறைதானா.?ஏன் எல்லாப் பெண்களையும் அவனுக்குச் சந்தேகிக்க தோன்றுகிறது.?ஒருவேளை தனக்கும் ஏதேனும் பரிசோதனை கொடுக்கப் போகிறானோ!.ஆனால் அவனையே நேசிக்கும் எனக்கு யார் மூலம் பரிசோதனை தரப் போகிறான்’ எனப் பலவாறு எண்ணியவளின் புத்தியை அவள் மனமே திட்டியது.


அவள் மனம் ‘வீணாக எதையும் யோசித்துக் கொண்டிருக்காதே பெண்ணே.அவன் உன்னவன்.உன் நலனிலும் மகிழ்விலும் உன்னை விடவும் அதிக அக்கறைக் கொண்டவன்.அவனைப் பற்றி தவறாக எதுவும் எண்ணாமல்,அவன் சொல்லியது போல ஓய்வெடு’ என அறிவுறுத்தியது.அதன்படி மெதுவாக அமர்ந்தவிதமாகவே கண்ணயர்ந்தாள்.


அதன் பிறகு மாலை நேரம் வந்துவிட மித்ரா ரிஷி எடுத்துத் தந்த ஜீன்ஸையும் குருத்தாவையும் அணிந்து கொண்டாள்.ரிஷியும் ஜீன்ஸும் டீ-ஷர்ட்ம் அணிந்துக் கொண்ட வந்தான்.அந்த உடையிலும் கம்பீரமாக அவள் எதிரே வந்து நின்று தன் பேண்ட் பாக்கெட்டில் தன் இருக்கைகளையும் விட்டவிதமாக ‘எப்படி இருக்கிறேன்?’எனக் கண்களாலே அவளைக் கேட்டான்.


அவளும் ‘சூப்பர்’ என தன் வலதுக் ஆள்காட்டிவிரலை கட்டைவிரலால் மடக்கி மூன்று விரல் நீட்டிச் சொன்னாள்.அதனோடு, ‘நான் எப்படி இருக்கிறேன்?’என விழி நிமிர்த்திக் கேட்டவள் அவனது பார்வையில் முகம் சிவந்து தரை பார்த்தாள்.


அவளை மேலும் தவிக்கவிடாமல்,”போகலாமா?”எனக் கேட்டான் ரிஷி.


இயல்பாக ஒலித்த அவனது குரலில் ,”ம்ம்... “ என்றாள்.


அதன் பிறகு மெதுவாக கார் கடற்கரை நோக்கிச் சென்றது.சில நிமிடங்களில் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா வந்தது.பல நாட்களுக்குப் பிறகு கடற்காற்றை அனுபவித்த மித்ராவினுள் ஒரு புதுவித சக்தியை உணர்ந்தாள்.


காரை நிறுத்திவிட்டு வந்தவனை பார்த்தக் கொண்டு புன்னகைத்தவிதமாக இருந்தாள் மித்ரா.அவளைப் பார்க்காமல் வருவது போல் அவள் அருகில்வந்த ரிஷி,அவளின் வலதுகையை தன் இடது கையினுள் அடக்கி நடந்தான்.


அவனது இதமான கை அணைப்பில் இருந்த அவளது விரல்கள் ‘நாங்கள் உன்னிடம் இருப்பதைவிட இவன் கைக்குள் இருப்பதையே அதிக சுகமாக உணர்கிறோம்’ என அவளைப் பார்த்து பல் இளித்தன.அவற்றின் மீது மித்ராவிற்கும் பொய் கோபம் வரத்தான் செய்தது.ஆனால் அவளும் அத்தையேதானே உணர்ந்தாள்.அவளையும் அறியாமல் முகத்தில் புன்னகை அதிகரித்தது.


அவனுடன் சேர்ந்து நடக்கும்போது உண்டான நிம்மதிக்கு நிகர இவ்வுலகில் இருக்கக் கூடுமோ என்பது போல இருந்தாள்.கூடவே ‘அவள் என்ன குழந்தையா?கூட்டத்தில் தொலைந்து போக?இப்படி கையை பிடித்து அழைத்துச் செல்கிறானே!’என எண்ணி அவனை ஓர பார்வையில் முறைத்தாள்.


மித்ராவின் மன நிலை எதையும் அறியாமல் ,ரிஷியின் முகம் யோசனையில் இருப்பது அவனது முகச் சுருக்கங்களே சொல்லியது.ரிஷியின் இறுகிய முகத்தைச் சற்றும் எதிர் பாராத மித்ரா,சிறிது திகைத்தும்தான் போனாள்.அவனாக ஏதுவேனும் கேட்கக் கூடுமென்று மித்ராவும் எதுவும் பேசாமல் அமைதியுடன் இருந்தாள்.


அந்த பரந்த கடல் நீரின் முன் இருவரும் அமர்ந்தனர்.அலையின் ஒலியுடன் கூடிய கடல் அலைகளின் நடனத்தை அவர்களின் கண்கள் ரசித்தவிதமாக சில நிமிடங்கள் கழிந்தன.இருந்தும் மித்ரா,ரிஷி இருவரின் இதயங்களின் ஒலி ஒன்றிணைந்து ஒலிப்பது போல இருவரினுள்ளும் ஒரு படபடப்பு இருந்தது.இருவரும் வாய்விட்டுப் பேசவில்லை என்றாலும் ,அவர்களின் மனதினுள் ஒரு வித அமைதியற்ற போராட்டமே நிலவியது.


பிறகு அந்த நேர வெளிப்புற அமைதியை உடைத்து ரிஷியே பேச ஆரம்பித்தான். “ம்ம்..மித்ரா..”என அவளை விழித்தான்.


“ம்ம்...சொல்லுங்க ரிஷி..”என்றவளின் குரல் கடினபட்டு இயல்பாக்கப்பட்டது.


“உன்னைப் பற்றி சொல்லேன்.”எனச் சொல்லிவிட்டு தன் இருக்கைகளை தன் முதுகுக்கும் பின் இருந்த மணலில் புதைத்து இயல்பாக அமர்ந்தான்.


“என்னை பற்றியா?என்ன தெரியவேண்டும்?”என துடுக்குதனத்துடன் ரிஷியின் இறுக்கம் தளர்ந்த முகத்தைப் பார்த்து கேட்டாள் மித்ரா.


“உன்னைப் பற்றி..எல்லாம்.நீ படித்தது?உன் நண்பர்கள்?எதை செய்யவெல்லாம் பிடிக்கும்” என அவனும் பதிலுக்கு புன்னகைத்து அவள் குரலிலே கேட்டான்.


“ஓ..”என்றவள் சிறிது நிறுத்தி, “ரிஷி...படித்தது எல்லாம் சென்னையில்தான்.பள்ளி,கல்லூரி இரண்டும்.கரண் என்னுடைய நண்பன். LKG லிருந்து இளங்கலை வரை அவனும் நானும் ஒன்றாகத்தான் படித்தோம்.அதனோடு அவன் எங்கள் வீட்டின் பக்கத்துவீடு.அப்பறம் எனக்கு ரொம்ப பிடிச்சது அப்பா அம்மாவோட பீச்க்கு வருவது.”எனச் சொன்னவளின் குரல் மெதுவாக கம்மியது.


அதை கவனியாதுப் போல அருகிலிருந்தவளின் கையை அழுந்தப் பற்றிய ரிஷி, “அப்பறம்?”எனக் கேள்வியாக அவளை மேலும் சொல்ல ஊக்கினான்.


“அ..அப்பறம்..நான் என் வீட்டுக்கு ஒரே பெண்.திருமணத்தின் பின் ஆறு வருடத்திற்குப்பின் பிறந்த ஒரே செல்லப்பெண்.இதை அங்கிளும் உங்களிடன் சொல்லி இருக்கலாம்.செல்லமென்றால் முழுமையான செல்லம் கிடையாது.அப்பா எப்போதும் செல்லம்தான்.அதனோடு அவருக்கு நான் எடுக்கும் முடிவுகளின் மீது அதிக நம்பிக்கை.அதனால் கண்டிப்பு கிடையாது.அம்மா கொஞ்சம் கண்டிப்போடு கூடிய செல்லம்.பெண்மையின் குணங்கள் அனைத்தும் அம்மாவின் சொல்படி.ஆண்களிடம் பழகும் முறையிலிருந்து எல்லாமே அம்மாவின் அறிவுரையைச் சின்ன வயதிலிருந்து கேட்டதால் வந்தவை.அவற்றில் அம்மாவும் சிறிது அதிக கண்டிப்புதான்” என வருந்திய மனதிற்கு உரம் போட்டு எழுப்பி இயல்பாகப் பேசி சிரித்தாள் மித்ரா.


“ஓ...எல்லாமே வா?”எனக் கேட்டு மித்ராவை சில வினாடிகள் திணறடித்தான் ரிஷி.


“எ..என்ன?”எனத் திக்கி கேட்டாள் மித்ரா.


“இல்லை..எல்லாமேவா என்று கேட்டேன்” எனக் கேட்டவன் குறும்பாக அவளைப் பார்த்தான் ரிஷி.


“புரியவில்லையே” கேட்டவள் மறந்தும் அவன் முகத்தைப் பார்த்தாள் இல்லை.அவள் கன்னங்கள் காரணமின்றி சிவந்தது.


“இல்லை.எப்படி கன்னங்களை கலர் பொடி இல்லாமலே சிவப்பாக மாற்றமுடியும் என்பதும் அம்மாதான் சொல்லி கொடுத்தார்களா?”எனக் கேட்டு குறும்பாகச் சிரித்து அவள் கன்னங்களை தட்டினான் ரிஷி.


“அ...அது...அந்த...”எனச் சொல்லியவள் தன் சூடேறிய கன்னங்களைத் தடவினாள்.


“ம்ம்.அப்பறம் இப்படித் திக்கி பேசவும் கற்று கொடுத்திருக்கிறார்கள் அப்படிதானே” மேலும் குறும்புடன் கேட்டான் ரிஷி.


அவனது இந்தக் கிண்டலான வார்த்தைகளில், “போங்க ரிஷி” என சிணுங்கினாள் மித்ரா.பின் “அது உங்களைப் பார்த்தால் மட்டும் அப்பப்போ வந்துவிடுக்கிறது.நான் என்ன செய்ய?”எனக் கேட்டு அவன் மீதுதான் பிழை என்பது போல் ரிஷியைப் பார்த்து முறைத்தாள்.


“அம்பேல்.கடைசியாக என்னையே குற்றம் சொல்லிவிட்டாயா?”எனச் சத்தமிட்டு சிரித்தவன்.


“எப்படி?நான்.திறமையில்லை?”என சொல்லிக் கொண்டு இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள் மித்ரா.


“ஆஹம்...அது சரி..”என்றவனின் சிரிப்பு திடீரென்று மறைந்தது.யோசனை முடிச்சு நெற்றியின் மத்தியில் விழ, “அது ஏன் என்னைப் பார்த்தாள் மட்டும் வந்துவிடுக்கிறது” எனக் கேட்டவனின் உதடுகள் மட்டுமே சிரித்தன.கண்கள் இல்லை.


அவன் முகம் பாராமல் தலை குனிந்திருந்த மித்ரா ரிஷியின் முக மாறுதலைப் பார்த்தாள் இல்லை.


பின் ‘ரிஷி தன்னை முதலில் காதலை சொல்ல வைக்க முயற்சிக்கிறான்’ என்பது போல் யூகித்தவள், ‘நானாக சொல்ல மாட்டேனே.நீதான் முதலில் சொல்ல வேண்டும் ரிஷி’ என எண்ணி, “நீங்கதான் மந்தரம் எல்லாம் தெரியுமென்று சொன்னிங்கலே!!!கண்டுபிடிக்க வேண்டியதுதானே” எனக் குறும்பாக கேட்டுப் பரந்த கடலைப் பார்த்தாள் மித்ரா.


“கண்டுபிடிக்கலாம்தான்.”என யோசனையிலிருந்தவனின் நெற்றி சுருக்கம் தளர்ந்து , “சரி மித்ரா..நீ அப்பா அம்மாவோடு பீச் வந்தால் என்ன செய்வாய்” எனப் பேச்சை மாற்றிக் கேட்டான் ரிஷி.


சில வினாடிகள் விசித்திரமாக ரிஷியைப் பார்த்த மித்ரா பின் சமாளித்து, “அ அ.ம்மா,அப்பாவோடு வந்தால் கடல் நீரில் விளையாடுவேன்.அப்பாவும் நானும் சேர்ந்து மணல் வீடு கட்டுவோம்.சில சமயங்களில் கரணும் வருவான்.அம்மாதான் இது என்னடி சின்னப்பிள்ளைப் போல என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள்.அப்பாவிடம் எப்போதும் எனக்குத்தான் சலுகை.ஆனால் அம்மாவின் கட்டுப்பாட்டுக்கு மேலே நான் எதைவும் செய்யமாட்டேன்.அதனோடு இங்கு வந்தால் இன்னொன்றும் பிடிக்கும்” எனப் பேச்சின் சுவாரசியத்தில் நிறுத்தினாள் மித்ரா.


லேசாக மித்ராவின் முகம் சிவக்க ஆரம்பித்தது.


அவளது முக மாறுதலைக் கண்ட அவன் , “ம்ம்ஹும்...என்ன அது?”என அவளை ஆர்வத்துடன் கேட்டான் ரிஷி.


“அது ரிஷி,என் அம்மாவும் அப்பாவும் ஒருவர் கையை மற்றொருவர் பற்றிய வண்ணம் கால்கள் மட்டும் கடல் நீரில் நனையச் சிறிது தொலைவு வரை நடந்துவிட்டுத் திரும்பி வருவார்கள்.அதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்.அப்போது தெரியும் அவர்களின் நெருக்கம் காண பிடிக்கும் .அவர்களின் அந்தக் காதல் பிடிக்கும்.ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அன்பு அவர்களின் கண்களில் தெரியும் அது பிடிக்கும்.”என்றவளின் குரலின் ஸ்ருதி குறைந்து,அவளது கண்கள் முன்பு அவளது பெற்றோர் சென்று வந்த பாதையை பார்த்தவிதமாக திரும்பியது.மித்ராவின் கண்களில் அவர்களின் பெற்றோரின் உருவம் தெரிவது போல் உணர்ந்தாள்.அவளின் மனம் அறிந்தவனாக சில நிமிடங்கள் அமைதியுடன் இருந்தான் ரிஷி.


பிறகு மித்ராவே சில நிமிடங்களில் தன்னிலை உணர்ந்து அவசரமாக ‘ரிஷி அருகிலிருக்கும் போது.சோர்ந்து பெற்றொரையே நினைத்திருந்துவிட்டோமே!’என எண்ணி ரிஷியைத் திரும்பி பார்த்தாள்.


ரிஷி அமைதியாக தன் இருக்கைகளையும் தன் தலையின் பின்புறம் கோர்த்து மணலில் தலை படராமல் லாகவமாக சாய்ந்தவிதமாக கடல் அலையினை பார்த்தவிதமாக ஏதோ யோசனையிலிருந்தான்.


ரிஷியின் இந்தத் தோற்றம் மித்ராவினுள் ஏதோ உறுத்தியது போல் ஓர் உணர்வை உண்டாக்கியது.வரும் போதும் இவ்வாறு முக இறுக்கத்துடனேதான் இருந்தான்.இப்போதும் ஏதோ யோசனையுடனே இருக்கிறானே!ஏதேனும் பிரட்சனையோ!’எனப் பலவாறு எண்ணி எதுவும் அறியா பேதையின் மனம் வாடுவது போல மித்ரா கலங்கினாள்.


‘ம்ம்கும்...இதற்கு மேல் அவனாக சொல்லக் கூடும்’ என்ற எண்ணம் மித்ராவிற்கு இல்லை.அவளே கேட்டாள். “என்ன ரிஷி...எதாவது பிரட்சனையா?”என கேட்டேவிட்டாள்.


அவளது குரலில் நிலை உணர்ந்தவன்,”ம்ம்..”என்றுவிட்டு அவள் விழிகளைத் தவிர்த்தான்.இருந்தும் அவளின் கலங்கிய உள்ளம் அவள் முகத்திலும் தெரிய இரக்கம் பிறந்தவனாக, “ஒன்றுமில்லை.பிறகு சொல்கிறேன்” என்றுவிட்டு முகம் இறுக்கம் தளர கைகளில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டு எழுந்துவிட்டான் ரிஷி.


அவன் எழுந்ததும் உடன் எழுந்த மித்ரா, “அதற்குள்ளவேவா?கிளம்ப வேண்டும்.வந்து30நிமிடமும் ஆகவில்லையே!!”என ஆச்சரியத்துடன் வினவி அவளும் கை மணலைத் தட்டிவிட்டாள்.


சிரித்த ரிஷி, “அதற்குள் கிளம்புகிறோம் என்று உன்னிடம் யார் சொன்னது.உன் கால் ஜீன்ஸை அடியில் கொஞ்சம் மடக்கிக்கொள்,நாமும் உன் அப்பா ,உன் அம்மாவுடன் கைப்பற்றி இந்தக் கடல் நீரில் நடந்தது போல சிறிதுதூரம் நடந்துவிட்டு வருவோம்” எனப் புன்னகை மறையாமல் சொல்ல தன் பேண்டின் அடிப் பகுதியை மடக்கிக் கொண்டிருந்தான் ரிஷி.


வியப்புடன் ரிஷியைப் பார்த்த மித்ரா,அவன் மீது செலுத்திய பார்வை மீளாமலே அவன் சொன்னதை செய்தாள்.பிறகு அவள் மனம், ‘உன் அம்மா அப்பாவை போல நாமும் நடக்கலாம் என்றால் அவர்களைப் போல காதல் கொள்ளவும் அழைக்கிறானா?என்று இவன் மறைமுகமாக தன் காதலைச் சொல்கிறானா?இல்லை இயல்பாக நடக்க அழைக்கிறானா?எதுவானாலும் அவனே சொல்லட்டும்’ என முன்னுக்குப்பின் முரணாக சிந்தித்துக் கொண்டிருந்தது.


பிறகு அவளைப் பார்த்து தனது வலதுகையை நீட்டினான் ரிஷி.மித்ராவும் மந்திரத்தால் கட்டுண்ட பதுமை போல அவன் சொல்வதை செய்யும் பொம்மையானாள்.


தன் சில்லிட்ட தளிர் இடதுகையை அவன் இதமான சூட்டிலிருந்த வலதுகைக்குள் மறைத்தாள்.ஏற்பட்ட கன்ன சிவப்பும் அவளின் இயல்பான கைகால் அசைவுகள் போல அவளுடன் பொருந்தி போனது.


அவனது அருகாமையில் உணர்ந்த பாதுகாப்பு உணர்வு இன்னும் பல மடங்கு பெருகியது.அவனுடன் இணைந்து நடக்கவே இத்தினை காலம் தான் தவமிருந்தது போல் உணர்ந்தாள் மித்ரா.


“ம்ம்..அப்பறம்...”என வேறு பேச மித்ராவை ஊக்கினான் ரிஷி.


குரல் நடுக்கம் உண்டானது என்றாலும்.,அதை வெளிக்காட்டாமல் பேசவே மித்ரா துடித்தாள்.அதன் முயற்சியாய், “அப்பறம்...உங்களைப் பற்றி சொல்லுங்க” என அவனையே திரும்ப பேச செய்தாள்.


புன்னகைத்த ரிஷி,மித்ராவை நிறுத்தி ஒருதரம் நேரே அவள் கண்ணை பார்த்தான்.அவனது இந்த குறுகுறுப்பார்வையில் மித்ரா மேலும்தான் சிவந்து போனாள்.அப்படியே அவன் கண்களில் படாமல் தண்ணீரில் முழுகிவிட்டாள் என்ன?என உடலெல்லாம் ஒரு துருதுருத்தது.அவன் பார்வையை தொடர்ந்து பார்க்க முடியாமல் சிரம் தாழ்த்தினாள்.சிலிர்ப்புடன் அவள் உச்சி முதல் பாதம் வரை ஒரு புதுவித உணர்வை மித்ரா உணர்ந்தாள்.மீண்டும் பேசா மடந்தையானாள்.


‘அவ்வளவுதான்.இனி எந்த முயற்சி செய்தாலும் வார்த்தைகள் வரப் போவதில்லை.இது என்ன பார்வை.?நானே கடினப்பட்டு வார்த்தைகளை தொண்டைக்குள் செலுத்து ஒலியாக உதிர்த்துக் கொண்டிருக்கின்றேன்.அதற்கும் ஒரு தடை போல அவனது பார்வை.’ரிஷியைத் திட்டியும் தீர்த்தாள். ‘இவனுக்கெல்லாம் இது போல உணர்வு ஏற்படாதா?என்னால் மட்டும் அவன் போல ஏன் இருக்க முடியவில்லை.’என தன் இயலாமையை எண்ணிச் சோர்ந்தாள்.அவன் மீது கோபம் என்று சொல்லமுடியாத கோபம் கொண்டாள்.


அவளை மேலும் தவிக்கவிடாமல் நடந்த ரிஷி,அவனே பேசினான். “பெரியதாகச் சொல்ல எதுவுமில்லை மித்ரா.நம் கம்பனியிலே நீ வேலை செய்ததால் என்னுடைய படிப்பு மற்றும் பொருளாதாரம் பற்றி உனக்கே தெரியும்.அது தவிர,எனக்கு நண்பர்கள் என்று நெருக்கமாக யாருமில்லை.எல்லாம் என் தோழன்,சகோதரன் குரு மட்டும்தான் நெருக்கம்.அது அல்லாமல் நம் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அப்பறம் என் அம்மா..”எனப் பெருமூச்சுடன் நிறுத்தினான்.


அதுவரை தலைத்தாழ்த்தி அவன் வார்த்தைகளைக் கேட்டிருந்தவள் அவனது கண நேர அமைதியையும் தாங்க முடியாமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.அவனது முகச் சுருக்கத்தினால் அவன் உணர்வுகளைக் கட்டு படுத்தத் துடிப்பது தெரிந்தது.


அவனே பேசினான். “என் அம்மா சுமார் பத்து வருடத்திற்கு முன் புற்று நோயால் இறந்தார்.அதன் பிறகு எங்களுக்குப் பாட்டியும் மரகதம்மாவும்தான் எல்லாம்.வள்ளி என் தங்கையைப் போல.அப்பறம்..”என நிறுத்தியவன்.


அவனது இயல்பான வார்த்தைகளில் அவளும் இயல்பாகி , ‘அப்பறம்?’எனக் கேள்வியாய் ரிஷியை நோக்கினாள்.


“அப்பறம் ஒன்றுமில்லை.”என எதையோ சொல்ல ஆரம்பித்துச் சொல்லவேண்டாம் எனத் தவிர்த்தான் ரிஷி.மித்ராவும் எதுவும் துருவிக் கேட்கவில்லை. ‘அவன் குருவின் காதலை தனக்கு தெரியாது என்று சொல்ல நினைத்திருக்கக்கூடும்.குருவே சுமித்தாவின் இன்றைய நிலையைப் பற்றி சொல்லட்டும்’ என தனக்குள் சமாதானப் படுத்துக் கொண்டாள்.


அதன் பிறகு சில நிமிடங்கள் அமைதியுடன் நடந்தனர்.இப்படி அமைதியுடன் இருவரும் இணைந்து நடப்பதே இதமான உணர்வாக இருவரும் உணர்ந்தார்கள்.மீண்டும் வந்த வழி திரும்பி தண்ணீரில் கால் நனையவே நடந்தனர்.


அப்போது ரிஷி,அவனது மணிக்கட்டிற்கும்,முழங்கைக்கும் இடையான கை பகுதியில் சில்லிட்ட மித்ராவின் தொடுகையை உணர்ந்தான்.ஆமாம் தன் வலதுகையால் ரிஷியை இறுகப் பற்றி ரிஷியின் உடலில் தன் உடலைப் பாதி மறைத்தார் போல ஒரு இடத்தை நோக்கினாள் மித்ரா.

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement