அந்த 24 மணி நேரம் (புலம்பெயர்ந்த தொழிலார்கள் - சிறுகதை)

Advertisement

அந்த 24 மணி நேரம்
(புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கதை)
சிறுகதை

சவுரவ்... இன்னைக்கு உனக்கு வேலை இருக்கா? என்று கேட்டபடி வந்தான்... ரஞ்சித் சிங்...

ஹே... இல்லப்பா...நான் போன்லே கூப்பிட்டு கூப்பிட்டு பாத்துட்டு சேட் வீட்டுக்கு போனேன்... அவரு அங்கே இல்லே... சேட்டம்மா வேலை இல்லே நீங்க பெங்காலுக்கு கிளம்பிடுங்க சொல்லுறாங்க என்ன செய்யன்னு தெரிலே என்றான் சவுரவ்...

ஹாங்... இதே தான் எல்லா இடமும் நடக்குது தம்பி... நம்ம பசங்க ஐம்பது பேர் இருக்காங்க... ஒரு வாரம் ஆச்சு... இன்னும் சாப்பிடக்கூட இல்லே... நேத்து ஒரு சர்தார்ஜி சாய்..யும் ரொட்டியும் தந்தார்... அதான் பசங்க சாப்பிட்டாங்க என்ற ரஞ்சித் .... மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் தங்கி கட்டிடவேலை செய்யும் ஐம்பது பேர் கொண்ட தொழிலாளர்கள் குழுவிற்கு மேஸ்திரி...

சவுரவ்.. ரஞ்சித் போலவே ஒரு மேஸ்திரி... ஆனால் ரஞ்சித் குடும்பம் மேற்கு வங்கத்தில் உள்ளது. சவுரவ் குடும்பத்தோடு இங்கு தங்கி வேலை செய்கின்றான்... கடந்த ஜனவரியில் தான் திருமணம் நடந்தது... வயதான கண் பார்வை மங்கிய அப்பா... இது தான் சவுரவ் குடும்பம்.

தீப்தி மொன்டால் இவனது மனைவி... இருபது வயது மங்கை... ஏராளமான கனவுகளுடன் சவுரவை திருமணம் செய்து கொண்டு தமிழகத்தின் திருப்பூருக்கு வந்து சேர்ந்தவள்.. சவுரவ் கட்டிட வேலைக்கு செல்ல, தீப்தி அருகில் இருக்கும் பனியன் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்கின்றாள்...

பேரிடர் காலத்தின் தொடக்கத்தில் கொஞ்சம் சமாளித்து கொள்ள இந்த குடும்பம், கைகளில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு சமாளித்தது... ஆனால் பேரிடர் காலத்தின் 75வது நாளில் பூரண ஊரடங்கு தொடரும் நேரத்தில் கண்டிப்பாக வாழ இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டு நிற்கிறது...

சவுரவ் முதலாளி ஒரு பெங்காலி என்றாலும் அவன் ஒரு காண்டராக்டர் தான். அவனாலும் இங்கு இருக்கும் அவனை நம்பி இருக்கும் இருநூறு பேருக்கு எப்படி தினமும் கையில் இருந்து செலவுக்கு பணம் தர இயலும் ??... சவுரவும் ரஞ்சித்தும் பேசிய படியே நடந்து ரயில் நிலையத்தை அடைந்தனர்... அங்கே பெரிய தள்ளு முள்ளு நடந்து கொண்டிருந்தது...
வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வேலை பார்த்து வந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் முண்டியடித்து கொண்டு ஏறிக்கொண்டிருந்தனர். ஒரு வயதான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் பெட்டிக்குள் ஏற இயலாமல் ரயில் பெட்டியின் வாயில் கம்பியை ஒரு கையிலும், ஒரு கையால் தலையில் வைத்திருந்த தன்னுடைய பெட்டியை பிடித்துக்கொண்டும் நின்று கொண்டிருந்தார்...


ரயில் கிளம்பி நிலையத்தை விட்டு சிறிது தூரம் கடப்பதற்குள் பெட்டியின் உள்ளே நின்றவர்கள் சிறிது நெருக்கி உந்த வாயில் நின்று கொண்டிருந்த அந்த பாட்டி தன் கட்டுப்பாட்டை இழந்து பெட்டியுடன் ரயிலில் இருந்து கீழே விழுந்தாள்... ரயில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க.... கவனித்த பயணிகள் சிலர் மட்டும் சப்தம் எழுப்பினர்... ஆனால் ரயில் நிற்கவில்லை...

சவுரவும், ரஞ்சித்சிங்கும் ஓடிச் சென்று அந்த பாட்டி விழுந்த இடத்தை அடைந்த போது பாட்டியின் உடல் இருமுறை குலுங்க.... உடலில் இருந்த மொத்த குருதியும் வாயிலும் காது வழியே வெளியேறி பாட்டி உயிரை விட்டாள்...

அதற்குள் அங்கு கூட்டம் கூட.. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் விலகும் நேரத்தில் காவல்துறை வந்து சேர்ந்தது.. தள்ளி நின்று ரஞ்சித்தும் சவுரவும் இதை பார்த்து வேதனைப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். வந்த காவல்துறை ஆய்வாளர் கொஞ்சம் முரட்டு தன்மை உடையவர்... எஞ்சிய கூட்டத்தினரை விரட்ட மற்ற காவலர்களுக்கு உத்தரவு போட்டார்...
கொஞ்சம் வசவு அதிகமான தமிழில் அவர் இறந்து போன பாட்டியை ஏசிவிட்டு... சுற்றி தன் பார்வையை சுழற்றினார்... அவர் கண்ணில் ரஞ்சித்தும் சவுரவும் தென்பட அவர்களை அருகில் வருமாறு சைகை செய்தார்....


யாரடா நீங்க... இங்க என்ன பண்ணறீங்க... இது யாரு உங்க ஆத்தாவா... இல்லே சொந்தமா... என போலீஸ் பாணி விசாரணையை தமிழில் செய்ய அந்த இரு அப்பாவிகளுக்கும் நை சாப் நை சாப் தவிர்த்து ஒன்றும் சொல்ல வரவில்லை.... ஒரு வழியாக கொச்சை தமிழில் கொஞ்சம் நஞ்சமல்ல மொத்த பெங்காலி, ஹிந்தியை கலந்து சவுரவ் விளக்கம் தர அவனை ஜீப்பில் ஏற ஆய்வாளர் உத்தரவு போட்டார்...
தவறு எதுவும் செய்யவில்லை என்று மறுத்த சவுரவுக்கு இரண்டு அறை கன்னத்தில் விழுந்தது... இதை கவனித்த தலைமை காவலர் மட்டும் வேதனையின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தார்... அவர் கூறினால் இந்த ஆய்வாளர் கேட்கப் போவது இல்லை...


இந்த வீணாப் போனவங்க இங்க விழுந்து செத்து போவாங்க... இதை தூக்கி வேரா சுமக்கணும். கொரோனா டியூட்டி பாக்கறதா... பந்தோபஸ்து கொடுக்கறதா... இல்ல வெட்டியா சுத்தறவன புடிக்கறதா... இருக்கற வேலைல இது வேற... சை... ஒரே வேதனை என்று எரிச்சலை வெளிப்படுத்தியவாறு ஜீப்பின் முன் இருக்கையில் ஏறி அமந்தார் ஆய்வாளர்...

ரஞ்சித் சிங் கையெடுத்து கூப்பிட்டு சவுரவை விட்டுவிட கூறி கெஞ்சினான்... ஆனால் அவனை சில பல பதிவிட முடியாத வார்த்தையில் வசைபாடிய ஆய்வாளர் கண்ணை காட்ட ஜீப் காவல் நிலையம் நோக்கி சென்றது...

செய்வது அறியாது திகைத்த ரஞ்சித் உடனே சவுரவ் வீட்டிற்கு ஓடினான்... தீப்தியிடம் சென்று விஷயத்தை அவன் விளக்கி கூற... தீப்தி உடைந்து போனாள்.... ஏற்கனவே வாழ தவிக்கும் இந்த குடும்பத்திற்கு சோதிகனை வேறு வடிவில் வந்து நிற்க... தன்னோடு ரஞ்சித்தை அழைத்துக்கொண்டு தான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியை பார்க்க சென்றாள்...

நிறுவனத்தின் காவலாளி அவளை உள்ளே விட அனுமதிக்க மறுத்தான்... நீண்ட கெஞ்சலை தீப்தி செய்வது உள்ளே இருந்த முதலாளியின் காதில் விழுந்தது... வாயிலில் இருந்த கேமிராவில் அதை கவனித்த முதலாளி, வாயில் காவலாளிக்கு போன் செய்தார்... என்னப்பா அங்கே சப்தம்....???
அய்யா ஒரு வட நாட்டு பொண்ணு உங்கள பாக்க வந்து இருக்கு... கொரோனா நேரம் கம்பெனி இல்லன்னு சொன்னா கேட்க மாட்டேங்குது... என்றான் காவலாளி...


சரி.. சரி.. அந்த பொண்ண மட்டும் உள்ளே அனுப்பு என்ற முதலாளிக்கு 55 வயது இருக்கும். தலையில் ஒட்டு முடி இல்லை... நெற்றி நிறைய விபூதியை பட்டையாக வரைந்து இருந்தார்... கதர் சட்டையும் வெள்ளை வேட்டியுமாக நிறைமாத கர்பிணி போன்ற தொப்பையை தடவிக்கொண்டே உட்கார்ந்து இருந்தார்... பார்க்க பக்திப் பழமாக காட்சி தரும் இவர் உண்மையில் கேவலமான மனிதர்... அரசியல் செல்வாக்கும், ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் பணமும், இவருக்கு அளவில்லாத திமிரையும், தலைகணமும் இவருக்கு கொடுத்து இருந்தது...
உள்ளே வந்த தீப்தியின் நிறமும், இளமை செழிப்பும் இந்த வக்கிர புத்திகாரனை இன்னும் உசுப்பேற்ற... என்னம்மா என்று கேட்டார்...


பெங்காலி பாதியும், தமிழ் பாதியுமாக அவள் சவுரவின் நிலையை கூறினாள்....

புரிந்து கொண்டார் முதலாளி... ஆக இப்போது இவர் தான் அவளுக்கு உதவ வேண்டும்... கொடுக்கல் வாங்கல் கணக்கை போட்டார் முதலாளி.... மெதுவாக தன்னுடைய கேவலத்தை அரங்கேற்ற முயன்றார்...
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லே.. நீ கவலை படாதே.. ஒரே போன் போட்டு உடனே உன் புருஷனை வெளியே விட சொல்லறேன்.. என்று போனை எடுத்தவர்... சரி பதிலுக்கு நீ என்ன செய்வே... உனக்கு நான் உதவாட்டி யாரும் உதவி செய்ய மாட்டாங்களே.... என்று வலையை விரிக்க தொடங்கினார்... அவளின் அருகில் வந்த தோளில் கையை போட்டார்....


தீப்திக்கு புரிந்து விட்டது... தன்னுடைய கணவனை காப்பாற்ற இந்த கிழட்டு கழுதை... தன்னை கூலியாக கேட்கிறது என்று... சட்டென்று யோசனை மனதில் உதயமாக அய்யா... முதலில் அவரை வெளியே விட சொல்லுங்கள்... மற்றவற்றை பிறகு பார்க்கலாம் என்றாள்... கொஞ்சம் சிரித்துக்கொண்டே....

கிழவனுக்கு பேரானந்தம்... அவளின் சிரிப்பில் சிந்தையை தொலைத்தவன் உடனே காவல் ஆய்வாளருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்... இன்ஸ்பெக்டர்ரே... நான் தான் சுயம்புலிங்கம்... சுப்ரீம் எஸ்போர்ட்ஸ் ஓனர்... என்றார்...

மறுமுனையில் ஆய்வாளரின் குரலில் குளைவு தொனி தென்பட்டது... சொல்லுங்க சார்.. என்ன திடீர்னு இன்னைக்கு அடியேன் ஞாபகம் என்றார் ஆய்வாளர்...

ஒன்னும் இல்லே அங்க ஒரு வட நாட்டு பயல புடிச்சு வெச்சு இருக்கியா? என்றார்...

ஆமாம் சார்... இப்போதான் ஸ்டேஷன்க்கு கொண்டு வந்தேன் என்ற ஆய்வாளரிடம்... ஒன்னுமில்லே அவனை நான் சொல்லற வர வெளியே விடாதே... அவனோட பொண்டாட்டி இப்போ இங்க தான் இருக்கா... நான் அவள பல்லடத்துக்கு கொண்டு போய் நெனச்சத நிறைவேத்தற வரைக்கும் அவனை விடாதே... அப்புறம் சாயங்காலம் பல்லடம் வாய்யா... உனக்கும் மிச்சம் வெக்கிறேன் என்று சொல்லி சிரித்த போது அந்த கிழட்டு கழுதையின் சுயரூபம் குரூரமாக முகத்தில் பிரகாசித்தது...

தீப்தி போட்ட திட்டம் தவிடு பொடியானது முழுமையாக அவளுக்கு புரியவில்லை... ஆனால் தன் கணவனை அவன் விட்டுவிட கூறியதாக நம்பினாள்... ஆனால் கிழவன் அவளை மொழி பிரச்சனையில் முட்டாள் ஆக்கிவிட்டது அவளுக்கு தெரியவில்லை..
அவள் கையெடுத்து கூப்பி நன்றி சொன்னாள்... அய்யோ அதெல்லாம் வேண்டாம்... வா.. நானும் போலீஸ் ஸ்டேஷன் உன்னோடு வருகின்றேன்.. உன் புருஷனை போய் பார்க்கலாம் என்று கூறிய போது மொத்தமும் நம்பி விட்டாள்...


ஆனால் தீப்தியின் பெண்மை கூறியது... இல்லை உன்னை அடைய நினைத்து உன்னை தொட்டவன் எப்படி உன்னை கூட்டிக்கொண்டு போலீஸ் நிலையம் வருவான்??... உன்னிடம் கேட்ட கூலியை பெறாமல் எப்படி இவன் நல்லவனாக மாறுவான் என்று சுட்டிக்காட்டியது...???!!!!.

கிழட்டு முதலாளி எதிர்பாராத நேரத்தில் சட்டென்று கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினாள் தீப்தி..

கிழவன் சுதாரிப்பதற்குள் கேட்டை அடைந்து வெளியே வந்தவள்...!!! ரஞ்சித்தின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடத் துவங்கினாள். அவனிடம் பெங்காலியில் நடந்தவற்றை கூறிக்கொண்டே இருவரும் ஓட... கிழவன் காவலாளியிடம் இருவரையும் பிடிக்க உத்தரவு போட்டான்...

காவலன் வயதானவன் அவனால் வேகமாக ஓட முடியவில்லை... அதற்குள் இருவரும் வழியில் வந்த ரயில் பாதையை கடக்க கோவையிலிருந்து டெல்லி சென்ற சரக்கு ரெயில் இருவரையும் மறைத்து சென்றது....

அவர்கள் இருவரும் ஒருவழியாக ஒரு வீட்டின் முன் ஆசுவாச படுத்திக்கொள்ள நிற்க... அவர்களின் தோளில் ஒரு ஜோடி கைகள் விழுந்து பிடித்தது... திடுக்கிட்டு இருவரும் நிமிர்ந்து பார்க்க.... அங்கே ஒரு இளைஞர் கூட்டம் நின்று கொண்டிருந்தது... மிரட்சியில் விழித்த இருவரையும் ஆசுவாசப்படுத்தி விபரம் அறிந்து கொண்டனர் அந்த கல்லூரி இளைஞர்கள்... அவர்கள் கூட்டத்தில் பெண்களும் இருக்க அவர்கள் தீப்தியை ஆதரவுடன் அணைத்துக்கொண்டனர்...

அதற்குள் கிழட்டு முதலாளி காவல் ஆய்வாளருக்கு போன் செய்து தீப்தி தப்பி விட்டதையும், அவளை ஏதாவது பொய் வழக்கில் உடனே பிடிக்கும் படியும் அதுவரை சவுரவை சித்திரவதை செய்யவும் சொன்னான். முதலாளியின் ஆட்கள் ஒரு புறமும், போலீஸ் ஒரு புறமும் தேட... கல்லூரி இளைஞர் குழுவினர் பாதுகாப்பில் அவர்கள் மாவட்ட நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டனர்...

துர்கா ஸ்ரீனிவாசன் என்னும் பெயர் கொண்ட அந்த பெண் நீதிபதி நடந்தவற்றை முழுமையாக கேட்டுவிட்டு... தன்னுடைய குமாஸ்தா மூலம் காவல் ஆணையருக்கு தகவல் கொடுத்தார்...

அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆய்வாளரின் பதவி பறி போனது... சிறப்பு ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் சிறிய போலீஸ் படை கிழட்டு முதலாளியை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்தது... சவுரவ் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டான்.

திருப்பூரில் இருந்த சவுரவின் தொழிலாளர் குழு, ரஞ்சித் சிங்கின் குழு மொத்தத்தையும் அடுத்த நாள் காலை ஹவுரா செல்லும் சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நீதிபதி உத்தரவு இட்டார்... தொழிலாளிகளை அரக்கர்களிடம் இருந்தும் கொரோனாவிடம் இருந்தும் காப்பாற்ற உதவிய அந்த கல்லூரி இளையோர் குழுவை நீதிபதி பாராட்டினார்...

அடுத்த நாள் விடியற்காலையில் ஹவுரா செல்லும் ரயிலில் தீப்தி, சவுரவ், ரஞ்சித் சிங், சவுரவின் தந்தை என்று மொத்த தொழிலாளிகளும் பயணத்தை தொடங்கி இருந்தனர்... தீப்தி சவுரவின் கைகளை இறுகப்பிடித்து இருந்தாள்... மெல்ல சவுரவின் காதில் கூறினாள்.... இனி இங்கே நான் வரவே வேண்டாம். நம் ஊரிலேயே வேலை செய்து கொள்ளுவோம் என்று...

தீப்தியின் வயிற்றில் இப்போது ஒரு உதை விழுந்தது... ஆம் தீப்தி கருவுற்று இருக்கின்றாள்... குழந்தையும் அவர்கள் இருவரையும் எச்சரித்தது....

நம்பி வரும் தொழிலாளர்கள்... அவர்களை வைத்து சம்பாதிக்கும் முதலாளிகள், எதற்குமே கவலைப்பட்டு கொள்ளாத அரசாங்கங்கள்.. இது மாற வேண்டும்... மாற வேண்டுமெனில் இளைய சமுதாயம் கையில் ஆட்சியும், அதிகாரமும் ஒப்படைக்க வேண்டும்... அப்போதுதான் புதிய இந்தியா உருவாகும்... வேலையின்மையும், பசியும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிப்படும்... ஓட்டுக்கு காசு வாங்காமல், போடும் ஓட்டுக்கு ஒவ்வொருவரும் ஒரு புரட்சி செய்யுங்கள்...



முற்றும்....
 
Your narration too gud. I Can't believe that, this is yours first one.
Tharpothulla samooga avalathai sutti katirukeenga. Ipadi seyalpattal nalla irukumnu soldrathu arumai. Keep writing.
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும். இது இந்த தளத்தில் என்னுடைய முதல் பதிவு. தமிழ் நாவல் ரைட்டர்ஸ்.. தளத்தில் எழுதி வருகிறேன். புதியவன் தான் என்றாலும் படைப்புகள் படிப்பதை என்னுடைய 14 வயது முதல் செய்து வருகின்றேன். உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி...
 
Nice story. But reality only nature can punish old man. Like the girl having the asymptotic virus, coughs when he approaches, moves out of scare and the old man gets infected by it.
உங்கள் கருத்து மிகவும் சரியே... நிச்சயமாக அப்படியும் இருந்து இருக்கலாம். சட்டப்படி என்று மட்டும் எடுத்து கொண்டேன். ஆகையால் தான் இப்படி முடித்தேன். உங்களின் அன்பான விமர்சனத்திற்கு மிக்க நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top