அத்தியாயம் 16 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-16

காலையில் மதுவால் கண்களைத்
திறக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு
இமைகளைப் பிரித்தவள் சிறிது நேரம்
கண்களைத் திறந்தபடியே படுத்து
இருந்தாள். மனம் முழுதும் நேற்று
நடந்ததை நினைத்து மருகியபடியே
இருந்தது.

தலையைத் திருப்பிக் கார்த்திக்கைப்
பார்க்க அவனும் அசதியில் உறங்கிக்
கொண்டு இருந்தான். அவனும்
கண்ணை மூடியது அதிகாலையில்
தான். அவனது புருவ முடிச்சு வேறு
அவன் அதே யோசனையில் தூங்கிக்
கொண்டிருக்கிறான் என்று
சொல்லாமல் சொன்னது.

எழுந்து உட்கார்ந்து எழ முயன்றாள்
மது. ஆனால் உடல் எங்கோ பறப்பது
போல இருந்தது மதுவிற்கு. நேற்று
வேறு சரியாக உறங்காததால் தூக்கம்
வேறு மறுபடியும் கண்ணைத்
தொட்டது மதுவிற்கு. கண்டிப்பாக
இன்று ஹாஸ்பிடல் செல்ல முடியாது
என்று மதுவிற்குத் தோன்றியதால்
ஹாஸ்பிடலிற்கு வர முடியாது என்று
தகவல் தெரிவித்து விட்டு மீண்டும்
படுக்கையில் விழுந்தாள். அவளது
கண்களை மறுபடியும் தூக்கம் வந்து
ஆட்கொண்டது.

மறுபடியும் எட்டு மணிக்கு எழுந்தவள்
கார்த்திக் அருகில் இல்லை என்பதைக் கவனித்தாள். பாத்ரூமிலும் இல்லை
என்று அறிந்தவள் கீழே தான்
இருப்பான் என்று யூகித்தாள்.
பல்துலக்கி கீழே செல்ல அவன்
சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

"என்ன மது ஹாஸ்பிடல்
போகலையா?" என்றபடி ஜானகி
பூஜை அறையில் இருந்து வெளியே
வந்தார். மதுவின் முகம் வெளுத்து
இருந்ததை அவர் கவனிக்கத்
தவறவில்லை.

"இல்லை அத்தை.. ரொம்ப டயர்டா
இருக்கு. இன்னைக்கு லீவ்
சொல்லிட்டேன்" என்றாள் மது. தன்
அன்னையின் பேச்சிலும் மனைவியின் பேச்சிலும் நிமிர்ந்தக்
கார்த்திக்கோ அவளை ஏறிட்டுப்
பார்த்து விட்டு எதுவும் பேசாமல்,
சாப்பிட்டு விட்டு வந்து நியூஸ்
பேப்பரை எடுத்துக் கொண்டு
உட்கார்ந்து விட்டான். மதுவும்
அசதியினால் எதுவும் பேசாமல்
உட்கார்ந்து இருந்தாள்.

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது
மதுவிற்கு.. சாப்பிடலாம் என்று
எழுந்தவளுக்கு ஜானகி அம்மாள்
தன்னை நோக்கி காஃபி எடுத்து
வருவது தெரிந்தது.

"இந்தா மது.. ஏன் ரொம்ப டல்லா
இருக்க நான் வேணா ஜூஸ் போட்டுக்
கொண்டு வரட்டா" என்று வினவ
"இல்லை அத்தை இதுவே போதும்"
என்று கையில் காஃபி கப்பை
வாங்கிக் கொண்டாள் மது.

ஜானகி அம்மாள் கொடுத்தக்
காஃபியை வாய் அருகில் கொண்டு
சென்றவளுக்கு குமட்டல் எடுக்க வாஷ் பேஸனை நோக்கி ஓடினாள். அவள்
திடீரென ஓடுவதைப் பார்த்த
கார்த்திக்கும் ஜானகியும் அவள்
பின்னால் எழுந்து என்ன என்றபடி
சென்றனர். அவசரமாக வந்து
"என்னமா ஆச்சு?" என்று ஜானகி
அம்மாள் வினவ "ஒன்றுமில்லை
அத்தை இரவு சரியாக உறங்கவில்லை. அதுதான்" என்றுவிட்டு அறைக்குள் செல்ல எண்ணி மாடிப்படி ஏறினாள்.

ஏதோ யோசித்தபடி நின்ற
கார்த்திக்கிற்கும் போன் வரப் போனை அட்டென்ட் செய்து வேறு பக்கம்
சென்றான். ஆனால் மது போகும்
திசையையேக் கவனித்தபடி
நின்றிருந்தான். எதோ அவள்
நடையில் வித்தியாசத்தை உணர்ந்து
சிறிது யோசித்தவன் டயர்டா இருக்கும் என்று விட்டுவிட்டான்.

சிவாதான் போன் செய்து இருந்தான்
கார்த்திக்கிற்கு. "சிவா
கிளம்பிவிட்டேன் டா.. இன்னும் பத்து
நிமிடத்தில் வந்து விடுவேன்" என்று
சொன்னான்.

"வேண்டாம் மச்சி.. நம்ம போக
அவசியம் இருக்காது" என்றான்
ஓய்ந்தக் குரலில். "ஏன் டா... என்ன
ஆச்சு ?" என்று ஷூவை மாட்டிக்
கொண்டு இருந்தவன், நிமிர்ந்து
தோளிற்கும் தலைக்கும் இடையில்
வைத்து இருந்த போனிற்கு கை
வைத்துப் பேசினான்.

"திருச்சியில் இருந்து போன் வந்தது
டா... ஒரு போலீஸ் அதிகாரி தான்
பேசினார்.. நேற்று கோயம்பத்தூரில்
வைத்தே கல்யாணத்தை முடித்துக்
கொண்டு தான் திருச்சி ப்ளைட் ஏறி
இருக்கிறார்கள்" என்றவன் "அந்த
அதிகாரி இப்போது எதுவும் செய்ய
முடியாது என்கிறார் கார்த்திக்..
மிதுனாவும் இங்கு வரவே விருப்பம்
இல்லை என்று கூறுவதாகவும்
தெரிவித்தார்" என்று சொல்லி
முடித்தான் சிவா.

"ஸாரி டா சிவா" என்றான் கார்த்திக்..
"நீ ஏன் டா ஸாரி சொல்ற.. விடு
அவளுக்கு எங்களைப் பார்க்கத்
தோன்றினால் வரட்டும்.. இல்லை
என்றால் அவள் இஷ்டம் தான்.."
என்றவன் "தாங்க்ஸ் டா.. நேற்று வந்து
செய்த உதவிக்கு" என்று சின்னக்
குரலில் சிவா சொல்ல.. "டேய்..
போனை வச்சிட்டு போ... தாங்க்ஸாம்"
என்று தொடர்பைத் துண்டித்தான்
கார்த்திக்.. போனை வைத்தவன்
நேராகத் தன் அறையை நோக்கி
நடந்தான். அவனது கோபம் இப்போது
முழுவதும் மதுவின் பக்கம் திரும்பியது.

அறைக்கு வந்த மதுவிற்கு 'என்னாச்சு'
என்று கேட்ட தன் மாமியாரிடம்
சொல்ல ஆசை தான். ஆனால்
சொல்ல வாய் தான் வரவில்லை..
கார்த்திக்கிடம் சொல்லாமல்
யாரிடமும் சொல்லக் கூடாது என்ற
பிடிவாதம் எழுந்தது மதுவிற்கு.
எல்லாவற்றையும் யோசித்துக்
கொண்டு அப்படியே ட்ரெஸிங் டேபிள்
முன்னால் நின்று தன் பிம்பத்தைப்
பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவனுடன் கடந்த ஒரு மாதத்திற்கு
மேல் இந்தக் கண்ணாடி முன் நின்று
காதல் புரிந்தது நினைவு வந்து
கண்கள் கரித்து வர ட்ரெஸிங் டேபிள்
முன் இருந்த சேர் முன்னாடியே
உட்கார்ந்து விட்டாள்.

சிவாவிடம் பேசிவிட்டுத் தன்
ரூமிற்குள் வந்தவன் மது ட்ரெஸிங்
டேபிள் முன்னால் உட்கார்ந்து
இருப்பதைப் பார்த்து அவளிடம்
சென்று இரண்டடி பின்னால் தள்ளி
நின்றான். "உன் ப்ரண்ட் கல்யாணமே
நேற்றே பண்ணிவிட்டாளாமே..
இப்போது தான் எங்களுக்கு
இன்பர்மேஷன் கிடைச்சுது..
செய்வதையும் செய்து விட்டு வர விருப்பம் இல்லை என்று சொல்லி
இருக்கா மிதுனா. அனுப்பி வைக்கும்
போது கல்யாணமும் செய்து
அனுப்பி வச்சுட்டே.. ரைட்? " என்று
கண்களைக் கூர்மையாக்கி
வினவியவனிடம் மது பதில் பேசாது
நின்றாள். இவனிடம் என்ன
சொன்னாலும் நம்பப் போவதில்லை.
வீண்வாக்குவாதம் செய்தால் அதற்கும் ஏதாவது சொல்லுவான் என்று
பேசாமல் நின்றாள்.

அவள் ஒன்றும் பேசாமல் நிற்பதைக்
கண்டவனுக்கு எரிச்சல் கூடியது
"இப்போது சந்தோஷமாக இருக்குமே..
எப்படி கஷ்டப்படுறாங்க தெரியுமா
சிவா வீட்டுல...ச்ச" என்று கோபமாய்
அவளை வெறித்துவிட்டுக் கிளம்பி
விட்டான்.

அவன் சென்ற பிறகு மது சோர்ந்து
கட்டிலில் வந்து உட்கார்ந்தாள்.
போனை எடுத்து மது மிதுனாவிற்கு
போன் போட்டுப் பார்த்தாள். This
number is out of service என்று வர மதுவிற்கு எரிச்சல் தான் வந்தது.
போனைத் தூக்கி மறுபடியும் பெட்டில்
எறிந்துவிட்டாள். ஏனோ எரிச்சலாக
இருந்தது. ஏதோ தோன்ற பெட்டின்
மூலையில் இருந்த போனை
மறுபடியும் எடுத்து ஸ்வேதாவிற்கு
கூப்பிட்டாள்.

மதுவின் நம்பரைப் பார்த்த ஸ்வேதா
உற்சாகத்தோடு போனை எடுத்து "ஹே மது.. எப்படி இருக்க?" என்று கேட்டாள்.
"நல்லா இருக்கேன் டி" என்ற மதுவின்
குரலில் இருந்த சோர்வைக் கண்டு
கொண்டாள்.

"ஏன் டி டல்லாகப் பேசற... ஆமாம் நீ
ஹாஸ்பிடலில் இருந்தா போன்
செய்கிறாய்" அவள் ட்யூட்டியில்
இருக்கும் போது போன் பண்ண
மாட்டாளே என்ற யோசனையுடன்
ஸ்வேதா கேட்க "ஒன்றுமில்லை டி..
தலைவலி அதான் குரல் ஒரு மாதிரி
இருக்கு.. லீவ் போட்டுட்டேன்
இன்னிக்கு" என்று அவள் அடுக்கிய
கேள்விகளுக்கு பதில் அளித்த மது..

"ஸ்வேதா.. உன்னிடம் ஒன்று
கேட்கனும் டி" என்று கேட்டாள்.. "ம்ம்
கேளு டி" என்றவளிடம்.. நேற்று மிதுனா வீட்டார் வந்த விஷயத்தை
மட்டும் சொன்னாள்.

"உனக்கு அவள் காதலித்தது
தெரியுமா டி?" என்று ஸ்வேதாவிடம்
கேட்டாள் மது.

"இல்லை மது.. தெரியாது.. நீ
சொல்லுவது எனக்கு ஷாக்கா
உள்ளது.. நீ இல்லாத நாட்களில்
நாங்கள் சந்திக்கும் போது கூட
கல்யாணத்தைப் பற்றிக் கேட்டால்
"ஜாதகம் இப்போதைக்கு சரி இல்லை..
25 ற்கு மேல் தான் பார்ப்பார்கள் என்று
சொல்லுவா" என்றாள் ஸ்வேதா.

"சீரியஸாக எனக்கு ரொம்ப
அதிர்ச்சியாக இருக்கு மது" என்றாள்
ஸ்வேதா.. பிறகு சிறிது நேரம்
பேசிவிட்டு போனை வைத்தார்கள்
இரு தோழிகளும்.

போனை வைத்து விட்டு கீழே வர
கார்த்திக் கிளம்பிச் சென்று
இருந்தான். கீழே மது வந்ததைக்
கவனித்த ஜானகி "மது வா.. வந்து
சாப்பிடு" என்றார். பிறகு சாப்பிட்டு
விட்டுத் தூங்குகிறேன் என்று மறுபடியும் அறைக்கு வந்து விட்டாள்.
அறைக்கு வந்தவள் தூங்கியும்
விட்டாள்.

கீழே இருந்த ஜானகி தன் கணவரிடம்
நேற்று இரவு நடந்த அனைத்தையும்
சொல்லிக் கொண்டு இருந்தார்.
அனைத்தையும் கேட்டு முடித்தவர் "மது எங்கே?" என்று வினவினார்.

"மது சாப்பிட்டு விட்டு மேலே சென்று
விட்டாள்.. பேசாலம் என்று மேலே
சென்றான்.. நன்றாகத் தூங்கிக்
கொண்டு இருந்தாள்.. அதான் கீழே
வந்து விட்டேன்" என்றார்.

யோசித்தபடி அமர்ந்திருந்த
வேலுமணி "ஜானகி... அவர்களுக்கு
நம்மால் அட்வைஸ் மட்டும் தான் தர
முடியும்.. ஆனால் புருசன் பொண்டாட்டி சண்டையில் நாம் நம் தலையை
நுழைக்க முடியாது.. அதுவும்
இல்லாமல் கார்த்திக் என்று இல்லை
வேறு எந்தப் பையனாக இருந்தாலும்
நாம் ஏதாவது சொன்னால் கோபம்
அந்தப் பெண்ணின் பக்கம் தான்
திரும்பும்.. மேலும் அவன் விஷயத்தில்
யார் தலையிட்டாலும் அவனுக்குச்
சுத்தமாகப் பிடிக்காது என்று நமக்கே
தெரியும்" என்றார். கணவன்
சொன்னதை யோசித்த ஜானகிக்குமே
அதுவே சரியாகத் தோன்றியது.

ஆபிஸிற்கு வந்த கார்த்திக்கிற்கு
வேலையில் கவனம் செலுத்தவே
முடியவில்லை. சிடுசிடுவென
இருந்தான். அவன் அப்படி
இருப்பதைக் கண்டு எவருமே
அவனிடம் அது இது என்றுப்
போகவில்லை. ஏதோ கையெழுத்து
வாங்க வேண்டும் என்று ஒரு பையன்
மூர்த்தி சாரை அணுகினான். அவனை
மூர்த்தி ஸார் முறைக்க "ஸார் ஸார்
ப்ளீஸ் ஸார்.. நீங்களே வாங்கித்
தாங்க.. காலையில் தான் அவர் டோஸ்
விட்டார்.. இனியும் போனால் எனக்குத்
தான் மூட் அவுட் ஆயிரும்.." என்று
கிட்டதட்டக் கெஞ்சினான்.

"சரி சரி பைலைக் கொடு வாங்கித்
தரேன்" என்று பைலை வாங்கிக்
கொண்டு கார்த்திக்கின் ஆபிஸ்
அறையைத் தட்டினார் மூர்த்தி.. பாவம்
அங்கு ஒருவன் வாங்கிக்கட்டிக்
கொண்டு இருந்தான். "கவனம்
எல்லாம் வேலையில் வைக்காவிட்டால் இப்படித் தான்... மறுபடியும் போய்
கரெக்டா எடுத்துட்டு வாங்க" என்று
அவனை வெளியே அனுப்பினான்.

மூர்த்தி ஸார் நிற்பதைப் பார்த்தவன்
"ஏன் அங்கிள் நின்னுட்டீங்க.. வாங்க"
என்றான்.. குரலில் சற்றுக் கடுமை
குறைந்திருந்தது. அவன் தன் 18
வயதில் இருந்து பார்த்துக் கொண்டு
இருப்பவர் மூர்த்தி.. மற்ற கம்பெனிகள் எவ்வளவு இழுத்தும் வேலமணியிடம்
இருக்கும் விஸ்வாசத்திற்காக இன்று
வரை இந்தக் கம்பெனியிலேயே
இருப்பவர்.

"ஒன்றுமில்லை தம்பி.. இந்தப் பைலில் ஒரு கையெழுத்து வேண்டும்" என்று
பைலை அவன் முன்னால் வைத்தார்.
"இது....." என்று யோசித்தவன் ஒரு
நிமிடம் அறை வாயிலைப் பார்த்தான்.
அந்தப் பையன் ஆபிஸ் அறையின்
கதவின் பின் நின்றதைக் கார்த்திக்
பார்க்க, அவன் சட்டென்று மறைந்து
விட்டான். ஒரு நிமிடம் தோளைக்
குலுக்கியவன் கையெழுத்தைப்
போட்டுக் கொடுத்தான்.

மூர்த்தி ஸார் திரும்பும் போது
"அங்கிள் அந்தப் பிரபுவை (பைலைக்
குடுத்து அனுப்பிய பையன்), அடுத்த
வேலையை முடித்துக் கொண்டு
அவனையே வந்து காண்பிக்கச்
சொல்லுங்கள்" என்று கையில் இருந்த பேனாவை சுற்றியபடியே சொன்னான். "சரி தம்பி" என்று வெளியே சென்று விட்டார் அவர்.

சட்டையின் மேல் பட்டனைத் திறந்து
விட்டவன் அப்படியே இரண்டு
கைகளையும் பின்னால் கொண்டு
சென்று தலைக்குக் கொடுத்து அந்தச்
சுழல் நாற்காலியில் சாய்ந்து
உட்கார்ந்தான்.

மதுவை முதலில் சந்தித்திலிருந்து
இப்போது வரை மனத்திரையில்
ஓடியது. அவளது சிரிப்பும்..
லொடலொடப் பேச்சும்.. வெட்கமும்
எல்லாம் கண் முன் வந்து நின்றது.
ஏனோ அவளை கை நீட்டி அடித்தது
அவனின் நெஞ்சை அழுத்தவும்
செய்தது. "ஏன் மது இப்படிப்
பண்ணினாய்.. என்கிட்ட கூட பொய்
சொல்லனுமா?" என்ற கேள்வியையே
திரும்பத் திரும்பக் கார்த்திக்கின்
மனம் மதுவின் முன் வைத்துக்
கத்தியது. பிறகு மணியைப்
பார்த்தவன் எழுந்து நேராக உட்கார்ந்து வேலையைத் தொடங்கினான்.

மது மூன்று மணி போலத் தான் கீழே
வந்தாள். மாமியார் இல்லாததைக்
கண்டவள் 'தூங்கிக் கொண்டு
இருப்பார்கள்' என்று டைனிங்
டேபிளில் வந்து உட்கார்ந்து
அவளாகவே எடுத்துப் போட்டு
உண்ணத் துடங்கினாள்.

பசி இரு மடங்காக இருப்பதை மது
உணர்ந்தவள் கடகடவெனச் சாப்பிட்டு
முடித்தாள். கையைக் கழுவிக்
கொண்டு வர "அட மது எழுந்துட்டயா..
நான் சாப்பிட எழுப்பலாம் என்று
வந்தேன்.. நன்றாகத் தூங்கிக்
கொண்டு இருந்தாய்.. சரி கண்
விழித்தால் நீயே வந்து விடுவாய்
என்று கீழே வந்து விட்டேன்.. என்னை
கூப்பிட்டிருக்கலாம் இல்லை" என்றபடி
பேசிக்கொண்டே வந்தவர் கையில்
எடுத்துக் கொண்டு வந்த பூவை
குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார்.

"இல்லை அத்தை.. தூங்கிட்டு
இருந்தீங்க-ன்னு நினைத்தேன்" என்று
சமையல் மேடையில் கையை
ஊன்றியபடியே சொன்னாள். ஏனோ
மீண்டும் சோர்வாகவே இருந்தது
மதுவிற்கு.

"இல்லை நான் வெளியில் இந்தப்
பூவைப் பறிக்கச் சென்று இருந்தேன்"
என்ன குளிர்சாதனப் பெட்டியை
மூடியபடிச் சொன்னார்.

பின் வேலுமணி எங்கோ சென்று
விட்டு வர மூவரும் டி.வி யைப் போட்டு
உட்கார்ந்தனர். மது
உட்கார்ந்திருந்தாளே தவிர சிந்தனை
எல்லாம் எங்கெங்கோ இருந்தது.

"மதுக்குட்டி" என்ற அழைப்பில் மது..
வேலுமணி.. ஜானகி.. மூவரும்
வாயிலை நோக்கித் திரும்பினர்.
மதுவின் தாத்தா-பாட்டி மற்றும்
வருணும் நின்று இருந்தனர். 'தாத்தா'
என்று எழுந்தவளுக்கு கண் கலங்கி
அவரிடம் சென்று அவரைக் கட்டிப்
பிடித்துக் கொண்டாள் மது.

வேலுமணி ஜானகியிடம் முன்னேயே
சொல்லி இருந்தனர் வருவதாக.
ஆனால் அவர்கள் இருவருமே
இருந்தக் குழப்பத்தில் மருமகளிடம்
சொல்ல மறந்துவிட்டனர்.

பின் வேலுமணி-ஜானகி தம்பதியர்
அவர்களை வரவேற்று உபசரிக்க
தாத்தவின் கைகளைப் பிடித்தபடியே
அமர்ந்திருந்தாள் மதுமிதா.

"அக்கா இந்தா... அம்மா இதைக்
கொடுக்கச் சொன்னார்கள்" என்று
வெளியே சென்று காரில் இருந்த ஒரு
சம்படத்தை எடுத்து வந்து தந்தான்
வருண்.

"என்னடா இது" என்று மது வினவ
"லட்டு தான்.. மேடத்திற்கு பிடிக்கும்
என்றே செய்து என்னிடம் தந்து
அனுப்பி வைத்தார்கள்.. ஈவ்னிங் தான்
வரலாம்-னு இருந்தேன்.. மாமாவிற்கு
போன் பண்ணி என்ன டைம்-க்கு
வருவீங்கன்னு கேட்டேன்.. நீ
இன்னிக்கு ஹாஸ்பிடல் போலன்னு
சொன்னார். தாத்தாவும் உன்னைப்
பாக்கனும் போல இருக்குன்னு
சொல்ல இரண்டு பேரும் கிளம்பி
என்னுடன் வந்து விட்டார்கள்" என்று
சொன்னான்.

கணவனைப் பற்றி சிந்தனை
செய்தவள் தம்பி தந்த லட்டு
சம்படத்தைக் கொண்டு போய் சமையல் அறையில் வைத்து விட்டு
வந்தவள் தாத்தா உடனேயே அமர்ந்து
விட்டாள். ஏனோ நேற்றிலிருந்து
மனச்சோர்வில் இருந்தவளுக்கு
அவளை சின்னக் குழந்தையில்
இருந்து வளர்த்தவரைக் கண்டதில்
சற்று அமைதியாகத் தெரிந்தது.

தாத்தாவிடம் வந்து உட்கார்ந்த
மதுவை ஈஸ்வரி பாட்டி உற்று
நோக்கினார். "ஏன் மது டயர்டா
இருக்க.." என்று பாட்டி கேட்க "அது
நேற்று வேலை அதிகம் பாட்டி அதான்"
என்ற பொய்யைச் சொன்னாள்.

பிறகு வேலுமணியும் சண்முகம்
தாத்தாவும் ஏதோ பேச ஆரம்பிக்க...
மது வருணிடமும் பாட்டியிடமும் பேசிக்
கொண்டு இருந்தாள்.. வருண் மதுவை
ஏதோ கிண்டல் செய்ய "இவன் இப்படி
பேசுறான்ல.. நீ வந்த அப்புறம் 'அக்கா'
'அக்கா' 'என் அக்கா இருந்திருந்தா
இப்போ இப்படிச் செய்வாள்' என்று
அக்கா புராணம் பாடுகிறான்" என்று
வருணை கிண்டலடித்தார் பாட்டி.

தமையனைப் பார்த்து "அப்படியாடா"
என்று கேட்டுச் சிரித்தாள் மது..
"அதெல்லாம் இல்லை.. சண்டைப்
போட ஆளில்லை... அதான் உன்
பெயரை வைத்து இவர்களை
வம்பிழுத்தேன் " என்று
வேண்டுமென்றே தன் அக்காவை
சீண்டினான். "சரிதான் போடா" என்று
வருணின் தலையைத் தட்டிய மதுவின் புன்னகை அப்படியே நின்றது..
கார்த்திக் தான் நின்றிருந்தான்.
எல்லோரையும் இன்முகத்துடன்
வரவேற்றவன் மதுவைப் பார்த்து ஒரு
பார்வையை மட்டும் வீசிவிட்டு மேலே
சென்றுவிட்டான்.

உடையை மாற்றிவிட்டுக் கீழே
வந்தவன் அனைவரிடமும் நன்றாகப்
பேசிக் கொண்டு இருந்தான். நேற்று
நடந்த நிகழ்வின் சுவடு ஒன்று கூட
அவனிடம் தென்படவில்லை. "எப்படி
ஒன்னும் நடக்காத மாதிரி இவனால்
உட்கார முடியுது" என்று மது மனதில்
புகைந்து கொண்டு இருந்தாள்.

வெளியே வந்த ஜானகி "சாப்பிட்டு
விட்டுத் தான் போக வேண்டும்" என்று
கட்டளையிட மதுவும் மாமியாருக்குச்
சென்று உதவினாள்.. உள்ளே வந்தப்
பாட்டியை எதுவும் செய்யக் கூடாது என்று மாமியாரும் மருமகளும்
ஒருசேர மிரட்டி அமர வைத்து விட்டனர்.
வெளியே வருணும் கார்த்திக்கும்
சிரித்தது நன்றாகவே மதுவின்
காதுகளில் விழுந்தது. பின் மது
எதற்கோ வெளியில் வர "மது.. உங்கள்
கல்யாண ஆல்பத்தை எடுத்து வா...
எல்லோரும் பார்க்கட்டும்" என்றார்
வேலுமணி.

மது மேலே சென்று எடுத்து வந்து
வருணின் கைகளில் வைத்து விட்டுப்
போனாள். கார்த்திக் அவளை ஒரு
பார்வை பார்த்ததையும் கவனிக்காமல் உள்ளே சென்று விட்டாள். பின்பு
பாட்டியும் அவர்களுடன் சென்று
பார்க்க ஆரம்பித்தார். சமையல்
வேலை எல்லாம் முடித்துக் கொண்டு
ஜானகி அழைக்க அனைவரும் வந்து
அமர்ந்தனர்... மதுவும் ஜானகியும்
பரிமாறினர். வருணும் கார்த்திக்கும்
சீக்கிரம் சாப்பிட்டு முடித்து எழுந்து
கைகழுவி விட்டு நகர்ந்தனர்.

பிறகு "நீங்கள் உட்காருங்கள் அத்தை.."
என்று மது சொல்ல "நீயும் உட்கார்"
என்றார் ஜானகி.. தலையை மறுப்பாக
அசைத்தவள் "மதியம் லேட்டாகத்
தானே அத்தை சாப்பிட்டேன்..
எனக்குப் பசி இல்லை.. இன்னும்
கொஞ்ச நேரம் கழித்து
சாப்பிடுகிறேன்" என்று விட்டாள் மது..

பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க
வருணை எங்கே எனத் தேடி வெளியே
வர கார்த்திக்கும் அவனும் பேசிக்
கொண்டு இருந்ததைக் கண்டாள்.. மது
திரும்ப எத்தனிக்க "அக்கா இங்க வா"
என்றான் அவளின் அருமை
சகோதரன்.

அமைதியாக அவன் அருகில் சென்று
நின்றவளின் தோளில் கை போட்ட
வருண் "என் அக்கா இங்கேயும்
சேட்டை செய்கிறாளா மாமா.. அங்கே
வீட்டில் அதிகமாக இருக்கும்.. சின்ன
வயதில் சீக்கிரம் என்னை ஏமாற்றி
விடுவாள் ஏதாவது விசயங்களில்"
என்று கார்த்திக்கிடம் கேட்டுக்
கொண்டு இருந்தான் வருண்.

ஒரு நிமிடம் மதுவைப் பார்த்த
கார்த்திக் "ஆமாம்.. அப்படித்தான்..
உங்கள் வீட்டில் மாதிரியே இங்கேயும்
எல்லோரின் சப்போர்ட்டும்
இவளுக்கே.. ஆனால் உன்
அக்காவால் என்னை அவ்வளவு
எளிதில் ஏமாற்ற முடிவதில்லை" என்று மதுவைக் குத்திப் பேசினான்.
மதுவிற்கு சுரீரென்றது.. கோபமும்
எட்டிப் பார்த்தது.. அவன் சொன்ன
அர்த்தம் அவளுக்குப் புரியாமல்
இல்லை.

"ஆனால் வருண்.. நீ நான் ஏதாவது
பொய் சொன்னால் கூட
நம்பிவிடுவாய். உன் மாமா நான்
உன்மையைச் சொன்னால் கூட நம்ப
மாட்டார்" என்று கூறி தன் கணவனை
ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள்..

வருண் அவர்கள் இயல்பாக
பேசுவதாக எண்ணினான்.
கார்த்திக்கிற்கு தான் கோபம்
தலைக்கேறியது.. அச்சமயம்
ஜானகியும் மதுவை அழைக்க மது
உள்ளே சென்று விட்டாள். பின்பு
மூவரும் கிளம்ப நின்ற போது தான்..
மதுவிற்கு மறுபடியும் சோர்ந்து போல
ஆனது. கஷ்டப்பட்டு முகத்தை சிரித்த
படி வைத்து இருந்தாள். அவர்களை
அனுப்பி விட்டு உள்ளே நுழைய
கார்த்திக் மேலே சென்று விட்டான்.
பிறகு மாமியாரிடம் பேசியபடியே
உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு
இருக்க அவரும் சமையல் அறையை
துடைத்துவிட்ட படியே பேசிக் கொண்டு இருந்தார் மதுவிடம்.

பிறகு சாப்பிட்டு விட்டு மேலே
சென்றவளுக்கு குமட்டல் எடுக்க
பாத்ரூமை நோக்கி ஓடினாள். ஏதோ
சாப்பிட்டது எல்லாம் வெளியே
வந்ததைப் போல இருந்தது மதுவிற்கு.
இந்த மசக்கை தன்னை இப்படி
பாடாய்ப்படுத்துகிறதே என்று
எண்ணினாள் மது. மேலும் இந்த
நேரத்தில் தாங்கிப் பிடிக்க நினைத்தக்
கைகள் நேற்று கன்னத்தை அல்லவா
பதம் பார்த்தது என்று நினைத்தவளுக்கு துக்கம்
தொண்டையை அடைத்தது.

வெளியே வந்தவள் அப்போது தான்
கார்த்திக் அங்கு இல்லை என்பதை
உணர்ந்தாள்.. பால்கனியில்
பார்த்தால் அங்கும் அவன் இல்லை..
யோசித்துக் கொண்டு இருக்கும்
போதே அறைக்குள் நுழைந்தான்
கார்த்திக்.. "எங்கே போய் இருந்தீங்க"
என்று கேட்க வந்த மது எதுவும்
கேட்கவில்லை காரணம் அவன் முகம்
தாடை எல்லாம் இறுகி இருந்தது.

ஆனால் அவனிடம் இருந்து வீசிய
சிகரெட் நெடியே அவன் மொட்டை
மாடியில் இருந்து வந்து இருக்கிறான்
என்று சொன்னது.

கதவைச் சாத்தி விட்டு வந்தவன்,
மதுவிற்கு முதுகைக் காட்டி
படுத்துவிட்டான். என்ன எப்போது
பார்த்தாலும் காய்கிறான் நம் மேல்..
வருணிடம் நான் சொல்லியதற்குக்
கோபம் என்றால் இவன் பேசியது
மட்டும் நியாயமா என்று மது
நினைத்தாள். பெட்டின் இன்னொரு
பக்கம் உட்கார்ந்து இருந்தவள்
இவனது கோபம் இப்போதைக்கு
குறையாது, பேசாமல் தான்
கருவுற்றிருப்பதைச் சொல்லி
விடலாம் என்று முடிவெடுத்து
"கார்த்திக்" என்று அவன் தோளின்
மீது கை வைத்து அழைத்தாள்.

அவள் அழைத்தவுடன் கோபத்துடன்
பெட்டில் இருந்து இறங்கி எழுந்து
நின்றவன் "என்ன...டெம்ப்ட் பண்ண
ட்ரைப் பண்றையா? இந்த
பொண்ணுங்களுக்கு எல்லாம் இது
ஒரு பழக்கமாப் போச்சு. ஆனால் நான்
அந்த அளவுக்கு மடையன் இல்லை"
என்று கோபத்துடன் அழுத்தமாக
உரைத்து விட்டு பால்கனிக்குச் சென்று விட்டான்.
 

Yaazhini madhumitha

Well-Known Member
மதுதான் அவன் பேசிய
வார்த்தைகளால் உடைந்து விட்டாள்.
"இவனை யார் இப்போது
முந்தானையில் முடிந்து வைக்க
முயற்சி செய்தார்களாம். இவன் சொல்
கேட்கும் படி அனைவரையும் வைத்து
விட்டு... இவனை நான் டெம்ப்ட்
பண்ண ட்ரை பண்றேனாம். எப்படி
எல்லாம் பேசுகிறான் என்று
இதயத்தில் ரத்தம் வழியாத குறையாக
இருந்தது. பால்கனியில் இருந்து
சிகரெட் நெடி வேறு வந்தது. அவள்
இங்கு வந்த தினத்திலிருந்து அவன்
பால்கனியில் சிகரெட் பிடித்ததே
இல்லை.. எப்பாவது
கோவையிலிருந்து பொள்ளாச்சி
வரும் வழியில் பிடிப்பான் அல்லது
வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று
விடுவான். அதுவும் அந்த நெடி
அவளுக்கு எட்டாதவாறு கொஞ்சம்
தள்ளி நின்று பிடிப்பான். ஆனால்
இன்று... விம்மி வெடித்துக் கொண்டு
அழுகை வந்தது மதுவிற்கு. அழும்
சத்தம் கேட்டால் அதற்கும் திட்டுவான்
என்று கண்ணையும் வாயையும் இறுக
மூடினாள். அவன் சிறிது நேரம் கழித்து
உள்ளே வருவது தெரிந்தவுடன்
போர்வையால் காலில் இருந்து தலை
வரை தூங்குவதைப் போல மூடிக்
கொண்டாள்.

அடுத்த நாளிலிருந்து வழக்கம் போல
ஹாஸ்பிடல் சென்று வர
ஆரம்பித்தாள். ஆனால் இருவருக்கும்
இடையே இருக்கும் பேச்சு அடியோடு
நின்றுவிட்டது.
அவன் அப்படிக் கேட்டதில் இருந்து
மதுவிற்கும் அவனுடன் பேசவே
பயமாக இருந்தது. ஏதோ பேச
இஷ்டமும் இல்லாமல் இருந்தது.
காதலையும் காமத்தையும் அவனால்
மட்டுமே உணர்ந்தவளால் அவன்
அப்படிக் கேட்டதில் அவளின்
உள்ளத்தில் வெறுமை பரவியிருந்தது.

இறுகியபடியே இருக்க ஆரம்பித்தாள்
மதுவும்.. காரில் வரும் போது கூட
தலையை வெளியே திருப்பிப்
பார்த்தபடியே வர ஆரம்பித்தாள்.
சரியாகி விடும் என்று நினைத்த ஜானகிக்கு மகன் மருமகள் இப்படி
இருப்பது சரியாகப்படவில்லை.

சில் வண்டாய் மருமகள் அவனையே
வீட்டிற்குள் சுற்றி வந்ததும்.. மகனும்
மாலை வந்தவுடன் ஏதாவது ஒரு
சாக்கு சொல்லி சமையல் மேடையில்
உட்கார்ந்து கொண்டு சமையல்
செய்பவளிடம் வம்பு இழுத்துக்
கொண்டிருந்ததும்.. ஆனால் இப்போது
ஆளுக்கு ஒரு திசையில் முகத்தைத்
திருப்பி வைத்திருப்பதும் அவருக்குக்
கஷ்டமாக இருந்தது. இந்த
விஷயத்தில் கணவன் சொன்னதைப்
போல மூக்கை நுழைக்கவும்
அவருக்கு ஜானகிக்குப்
பிடிக்கவில்லை.. ஆனால் அப்படியே
விடவும் மனது வரவில்லை.

மேலும் சிரித்து சிரித்து பேசும்
மருமகள் கூட இப்போது முகம் இறுகி
இருப்பதைக் கண்டவருக்கு
வேதனையாகவும் பயமாகவும்
இருந்தது. ஏதாவது செய்ய வேண்டும்
என்று முடிவு எடுத்தவர் கணவரிடம்
அன்று இரவு உறங்கச் செல்லும் முன்
தன் மனதில் ஓடிக் கொண்டு
இருந்ததைச் சொன்னார்.

"நானும் கவனித்தேன் ஜானகி..
உன்னிடம் பேச வேண்டும் என்று கூட
நினைத்தேன். நம் கார்த்திக் தான்
பிடிவாதம் என்றால் மதுவும் அவனுக்கு
மேல் பிடிவாதமாகத் தெரிகிறாள்.."
என்றார் தன் மூக்குக் கண்ணாடியைக்
கழட்டி வைத்தபடி பேசினார்.

வேலுமணி சொன்னதையும்
ஜானகியால் மறுக்க முடியவில்லை.
மதுவும் பிடிவாதம் பிடிக்கும் பெண்
தான்.. "இப்போது என்னங்க
பண்ணலாம்.." என்று யோசனையுடன் கேட்டார் ஜானகி.

"நாளை மாலை நியாபகப் படுத்து..
சொல்லுகிறேன்" என்று
படுத்துவிட்டார். ஜானகியும் 'காமாட்சி
அம்மா நீதான் துணை இருக்கனும்'
என்று கடவுளின் மீது பாரத்தைப்
போட்டு படுத்து விட்டார்.

வேலுமணியும் ஒரு முடிவை எடுத்தார்.

அது இருவருக்கும் சாதகமாக அமையுமா?
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழினி மதுமிதா டியர்

எவளோ எவனையோ லவ் பண்ணி கல்யாணம் செஞ்சால் அதுக்கு மதுதான் பிணையா?
கார்த்திக் ஒரு கேனையன்
இவனெல்லாம் என்ன பிஸினஸ் பண்ணி என்ன பிரயோஜனம்?
மிதுனாவின் போன் பேச்சையும் இவன் முழுசா கேட்கலை
ஆனால் மிதுனாவின் லவ் மதுவுக்கு தெரியாத நிலையில் நன்றி சொல்லி மிதுனா அப்படி பேசக் காரணம் என்ன?
யாரு குறுக்குசால் ஓட்டுறது?
இதிலே குழந்தை வந்ததைக் கூட சொல்ல முடியவில்லை
புருஷன்காரன்தான் திலீப்பிக்கிட்டு போறதால குழந்தை வரப் போறதை ஜானகியிடமாவது மது சொல்லியிருக்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top