முரண்பாடே காதலாய் 7

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
வாய்மொழியாய் சொல்லித்தான் அறிய வேண்டுமென்றில்லை
காதலதை ...!!!
உரிமையாய் காதலுடன் தன்னை தழுவும் கண்களுக்கு முறைப்பை அல்லாமல் நாணமாய் தன் காதலை பரிசளித்தாள் கன்னிகை ...!
வாய்மொழியாய் சொல்லித்தான் அறிய
வேண்டுமென்றில்லை காதலதை ...!!



அத்தியாயம் 7:

சின்னம்பாளையம் :

"முறையானவர்களுக்கு எதிரானவர்கள்"- ஆ ?? இது எப்படி சாத்தியம்?? அதுவும் நாம் பார்த்த நான்கில் இரண்டு வாகனத்தில் இவ்வார்த்தையை பார்த்தோமே... அப்படி என்றால் இத்தனை பேர் எப்படி ? முதலில் நான் கண்டுபிடித்த இந்த வார்த்தையின் அர்த்தம் சரிதானா ? சரிதான் என்றால் அதை எப்படி தெரிஞ்சுகிறது ?? "

-என பல கேள்விகள்அடுத்தடுத்து மனதில் தோன்ற என்ன செய்வதென அறியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்த மித்ரனின் கை காயத்தில் யஷி மருந்திட்டதில் ஏற்பட்ட எரிச்சலில் "ஆ ஆ " என கத்தினான்.

மருந்தை தடவி சிறு கட்டு ஒன்றை போட்டபடி "அவ்வளவுதான்டா " என சொல்லி எழுந்தவளுக்கு ,அவன் முகத்தில் குழப்பத்தையும் தாண்டி வலி தெரிய ," டேய் எரும ...! உன்னால தான் வலி தாங்கமுடியாதுனு தெரியும்ல ...அப்புறம் எதுக்கு இப்படி கோபப்பட்டு செவுத்துல கைய்ய குத்தி சீன போட்ற " என அவனை இயல்பாக்க வம்பிழுத்து சீண்டினாள்.

மித்ரனோ அவளின் சீண்டலுக்கு பதில் எதுவும் சொல்லாமல் தனக்கு விடையாய் கிடைத்த வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதை கண்ட யஷி கவலையாய், " என்னடா என்ன ஆச்சு உனக்கு ?? எதுக்கு இப்போ இப்படி இருக்க ...கை ரொம்ப வலிக்குதா ?" என கேட்க,

அவளின் கவலைக் குரலில் உணர்வுக்கு வந்த மித்ரன், தானே இன்னும் முழுதாய் அறியாத ஒன்றை சொல்லி இவளையும் குழப்பவேண்டாம் என நினைத்தவன் ,

"ஒன்றுமில்லை யஷிமா ..!! நேரமாகுது நீ போய் தூங்கு . அப்றம் நாளைக்கு நான் சீக்கிரம் கிளம்பணும்டா.. கொஞ்சம் வேலை இருக்கு . நீ இன்னிக்கி போலவே இந்த ஊர் மக்கள் கிட்ட பேட்டி மட்டும் எடுத்துடு ...வேற எங்கேயும் போயிடாதடி, பேட்டி எடுக்கும்போதும் கதிரேசன்ணாவ கூட நிறுத்திக்கோ ... நான் சீக்கிரம் வந்திடுவேன் ." என சொன்னவன் , சற்று நிறுத்தி அவள் முகத்தை கைகளில் ஏந்தியபடி , " பாப்பா ...!! காலைல நீ எழுந்துக்குறதுக்கு முன்னாடியே நான் கிளம்பிடுவேன்டா ...நீ பார்த்து இருக்கனும் சரியா " என்றான்.

அவனின் கேள்விக்கு ஏதோ கேட்க வந்த யஷி, என்ன நினைத்தாளோ எதுவும் கேட்க்காமல் சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்ட , அவனும் சிரிப்புடன் அவளின் தலையில் தட்ட , அதன்பின் தூக்கத்திலும் இருவரின் அச்சிரிப்பு மறையவில்லை .

இதுதான் அவர்கள் இருவரும் எவ்வித பயமும் இல்லாமல் சிரிப்புடன் உறங்கப் போகும் கடைசி இரவு என்பதை உணராமல் இருவரும் நிம்மதியாய் உணர ,அதை உணர்ந்திருந்த காற்றில் கலந்திருந்த உருவமோ அதில் முதல் படியாய் நாளை இரவு தான் செய்யப்போகும் செயலை எண்ணும் பொழுதே அதன் கோபம் அதிகரித்ததில் சுற்றிலும் காற்றினில் வெப்பம் கூட யஷி துக்கம் கலைந்து சிணுங்கயதில், சட்டென்று தன் உணர்வை மாற்றி அவள் மேல் மெதுவாய் தழுவி சென்றது .

--------------------------------------------------------------------------------


சந்திரமதியின் காடு :

சந்திராதித்யன் விட்டுசென்ற சில மணி நேரத்திலேயே வழக்கமாய் தன்னை எழுப்பும் தன் கைபேசியின் அழைப்பும் இல்லாமல் , கடந்த சில நாட்களாய் தன்னை எழுப்பும் குரலும் இல்லாமல் , புதிதாய் தன் காதுகளில் கேட்ட பெயர் தெரியா பறவைகளின் இன்னிசைக் காணத்தில் கண்விழித்தாள் அவள்.

கண்விழித்தவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் கண்களை கசக்கிகொண்டு அவ்விடத்தை பார்த்தவளுக்கு, நேற்று நடந்தவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்தது .

அதில் தான் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் ஒரே ஒருவனை மட்டும் நம்பி இருட்டில் , காட்டிற்கு நடுவில் இருக்கும் இவ்வீட்டிற்கு வந்ததை நினைத்து சிரித்தவள்,
எங்கே அவன் என்று சுற்றும் முற்றும் தேடினாள்.

அவன் அருகில் இல்லாததில் , " இந்த பச்சைக் கண்ணன் இவ்ளோ சீக்கிரம் எழுந்து எங்க போனான் ??? நேத்து நைட்டும் இப்படித்தான் எங்கயோ போயிட்டு ரொம்ப பதட்டமா வந்தாங்க ....என்னனு கேட்டாலும் சொல்லல . இப்போ எங்கே போனாங்க ? இந்த காட்ல இவங்களுக்கு மட்டும் அப்படி என்ன வேலை இருக்க போகுது " - என்று நேற்று தான் அவனை பார்த்தோம் என்பதையும் மறந்து பல நாளாய் பழகியது போல் சொல்லிக்கொண்டு அவனை தேடினாள்.

வெளிச்சம் இருந்ததால் பயம் இல்லாமல் அக்குகை வீட்டை விட்டு வெளியே வந்தவளின் கண்கள் தன் முன் பரந்திருந்த அழகைக் கண்டு பெரிதாய் விரிந்தது .

அக்குகைவீடு மலையின் மேல் இருக்க , அங்கிருந்து பார்க்க காடு முழுவதும் பச்சை புடவையை போற்றியதை போல் பச்சை பசேலென மரங்கள் அடர்ந்து பரவியிருந்தது .அதில் தங்கள் கூடுகளை கட்டிருந்த பல பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட பறந்துசெல்ல , கூட்டிலிருந்த குஞ்சுகளோ சத்தமிட்டபடி விளையாடிக்கொண்டிருந்தது இனிமையாய் காதை தீண்டியது . மற்றொரு புறம் சிறுபிள்ளைகள் உற்சாகமாய் சறுக்குமரம் விளையாடுவதை போல் "சோ" என்ற ஓசையுடன் அருவிநீர் மலையிலிருந்து கொட்ட குழந்தையை வாரிஅணைக்கும் அன்னையாய் பூமியவள் ஓடையாய் அதை தன்னுள் தாங்கிக்கொண்டாள்.

கண்களை இமைக்க கூட தோன்றாமல் அதன் அழகை கண்டு,"
அம்மாடியோ...!!! எவ்வளவு பெரிய காடு !!!!அதும் இவ்ளோ அழகா " என்று கைகளைக் கட்டிக்கொண்டு அதை ரசித்தாள்.

அப்பொழுது அருகினில் எதோ சத்தம் வர , "அட வந்துவிட்டாரா !!" என தனக்குள் கேட்டுகொண்டே திரும்பியவளுக்கு எதிரில் இருந்ததை கண்டு சர்வமும் நடுங்கியது.

சந்திரமதியில் தன் தாயிடம் பேசிக்கொண்டிருந்த சந்திராதித்யனுக்கு, திடீரென்று நேற்று தன்னுடன் வந்தவளின் முகம் மனதில் தோன்றி அவளிர்க்கு ஏதோ ஆபத்து என்று சொன்னது .

அதில் தாயின் முன் மண்டியிட்டபடி அமர்ந்திருந்தவன் எழுந்து , "அம்மா ...! நான் இப்பொழுது ஒரு இடத்திற்கு விரைவாக சென்றாக வேண்டும்... தாங்கள் கவலை கொள்ளாதீர்கள், நான் விரைவாக வந்து விடுவேன் " என்றவன், அவரின் பதிலை எதிர்பார்க்காமலே விரைந்து நாகத்தின் உருவிற்கு மாறி குகைவீடை நோக்கி விரைந்தான்.

மலை மேல் நின்றிருந்தவளுக்கு நேற்றிரவு தன்னந்தனியாக யாரென்று தெரியாத ஒரு ஆணுடன் காட்டுக்குள் வரும்போது இல்லாத பயம் ... தன்முன் படையெடுத்து நின்ற அந்த நாகத்தை கண்ட நொடி தோன்றியது.

என்ன செய்வது என மிரண்டபடி அவள் நின்றிருக்க எதிரில் இருந்த நாகமும் எவ்வசைவும் இல்லாமல் இருந்தது.
அதைகண்டவள் மிக மிக மெதுவாக பக்கவாட்டில் நகர அந்நாகமும் "ஸ்ஸ்.....ஸ்ஸ்" என்ற சத்தத்துடன் சீற தொடங்க அதில் பயந்து அலறியவள் மயங்கி சரிந்தாள்.

அதற்குள் அவ்விடம் வந்திருந்த சந்திராதித்யன் நொடியில் தன்னுருவுக்கு வந்து மயங்கி சரிந்தவளை தனது கைகளில் ஏந்திக் கொண்டான் .

தங்கள் எதிரிலிருந்த நாகத்தை ஆழ்ந்து பார்த்தவனின் கடின குரல் , " சந்திரமதியை விட்டு அனுமதி இல்லாமல் இங்கு எவ்வாறு வந்தாய் சந்திரிகா " என்று அதட்டியது .

அவன் கண்டுக்கொண்டதில் தன்னுருவிற்கு வந்த சந்திரிகா , "அண்ணா...!! அது ...அது... நான் ஆலயத்திற்கு செல்ல வேறேதும் வழி உள்ளதா என்று பார்க்கவே இவ்வழியில் வந்தேன். அப்பொழுது நம் இனத்தவரை தவிர வேறொருவர் இங்கு இருப்பதை உணர்ந்து எவரென அறிவதற்காக வர, அவர்கள் என்னை கண்டு பயந்துவிட்டார்கள் அண்ணா... உண்மையில் நான் அவர்களை எதுவும் செய்யவில்லை " என அவள் சந்திரமதி விட்டு வெளியே வந்ததால் அண்ணனின் கோபத்திற்கு ஆளாக நேருமோ என்ற பயத்தில் ஒப்புவிப்பதுபோல் அவள் இங்கு வந்ததை சொன்னாள்.

அவள் சொல்லிய அனைத்தையும் கேட்டவனோ அதை நம்பவில்லை என்பதை போல் ,

"வீண்பேச்சு வேண்டாம் சந்திரிகா...! அருகே இருக்கும் ஓடையில் இருந்து சிறிது நீர் கொண்டு வா , இவளின் மயக்கத்தை தெளிவிக்க வேண்டும் " என்றபடி தன் கையில் மயங்கியிருந்தவளை தூக்கிச்சென்று குகை வீட்டினுள் கிடத்தினான் .


சிறிது நேரத்தில் கண் விழித்தவள் தன் முகத்தின் வெகுஅருகில் இருந்தவனை தான் முதலில் பார்த்தாள். அந்த பச்சை கண்கள் இரண்டும் பதட்டத்தில் முழ்கி இவளுக்கு என்னாகிற்றோ என்ற கவலையை வெளிப்படுத்த , அதை விரும்பிய மனம் இது தனக்கானது என சொல்லியதில் சட்டென்று அவனை கட்டிக்கொண்டாள்.

அவளின் இச்செயலை எதிர்பார்க்காத சந்திராதித்யன் அதிர்ந்தான் என்றால், அவன் பின் நின்றிருந்த சந்திரிக்காவிற்க்கோ இப்பொழுது தான் மயங்கிவிடுவோமோ எனத் தோன்றியது.


அப்பொழுதுதான் இப்பெண் எவ்வாறு இங்கு வந்தாள் என கேள்வி உதிக்க , "அண்ணா...! யார் இவர்கள் ?? எவ்வாறு இங்கு வந்தார்கள் ?" எனக் கேட்டாள்.

அப்பொழுதுதான் அவள் அங்கிருப்பதை கண்ட அப்பெண் சந்திராதித்யனை விட்டு விலகி , இவள் யாரென்ற கேள்வியை தன் கண்களில் தாங்கி அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வையின் பொருளை படித்தவன் , "ம்ம்க்கும் ..." என தொண்டையை செறுமியபடி " இவள் என் தங்கை சந்திரிகா" என்றவன் ,...தங்கையிடம் " இவளின் பெயர் 'அனகா' , வழித்தவறிவிட்டவளை இருட்டிவிட்டதால் என்னுடன் அழைத்துவந்துவிட்டேன் " என சற்றும் தடுமாறாமல் கூறினான்.


"அனகா" என உச்சரித்த சந்திரிகா , " மிகவும் அருமையான பெயர் ...இதன் பொருள் என்ன" எனக் கேட்டாள் .


எதிரிலிருந்தவளோ , " இந்த பெயரையே இப்போதான் கேக்குறேன்... இதுல அர்த்தத்துக்கு நான் எங்க போவேன் " என மனதில் முனகியபடி என்ன சொல்வதென்று தடுமாற ,

இப்பொழுதும் சந்திராதித்யனே , " அனகா என்றாள் அப்பழுக்கற்ற சிறு பறவை என்று அர்த்தம் " என்றவனின் இதழ்கள் புன்னகைக்க துடிக்க , தன்னுடன் வந்தவளின் குறுகுறுபார்வையில் அதை உதட்டுக்குள்ளே அடக்கிக்கொண்டாள் .

( சந்திராதித்யனே அப்பெண்ணை "அனகா " என்று அறிமுகப்படுத்தியதால் நாமும் அவ்வாறே அழைப்போம்).


அனகாவை மேல் இருந்து கீழ் வரை பார்வையிட்ட சந்திரிகா தன் அண்ணனிடம் திரும்பி , "அண்ணா ...! இவர்களின் உடை மிகவும் அழகாக இருக்கிறது அல்லவா இவர்கள் போலவே " என அவளை அறிமுகப்படுத்தும் பொழுது தன் அண்ணணின் குரலில் வந்த மாற்றத்தை உணர்ந்திருந்தவள் இறுதி வரியை குறும்பாய் கேட்டாள்.

மனித குலத்தை சேர்ந்த ஒருவரை மிக அருகில் பார்ப்பது அவளிற்கு இதுவே முதல் முறை என்பதால் அவள் ஒவ்ஒன்றையும் ஆழ்ந்து பார்க்க அதில் உணர்ந்ததே அவளின் அண்ணனின் குரலில் உண்டான மென்மை.

நாவல் பழ நிறத்தில் அனகா அணிந்திருந்த சுடிதார் அவளின் பால்வண்ண நிறத்திற்கு பொருத்தமாக இருக்க, தூங்கி எழுந்ததில் அவ்வுடை கசங்கி , கலைந்த தலை, என்று சற்று சோர்வாக இருந்த போதிலும் அழகாகவே இருந்தவளை சற்றுமுன் அவள் அணைத்ததில் தைரியம் பெற்றிருந்த சந்திராதித்யனின் கண்கள் உரிமையுடன் ரசித்தது .


அண்ணன் தங்கை இருவரும் அவளையே பார்க்க கூச்சமாக உணர்ந்தாள் அனகா, அதிலும் சந்திராதித்யனின் பார்வை ஆழமாய் அவளின் உள்ஊடுருவது போல் தோன்ற ஒரு நொடி தடுமாறியவள் அதை மறைப்பதிற்காய் , ..

"நான் அப்பவே எங்க வீட்டு ஆளுங்க கிட்ட சொன்னேன் , நான் வெளியே எங்கும் போக மாட்டேன் அப்புறம் எல்லோரும் என்னையே பார்த்துட்டு அவங்க வேலைய மறந்துருவாங்கனு கேட்டாங்களா....ம்ம்ம்ம்...வாட் டு டூ ???நான் இவ்ளோ அழகா பொறந்துட்டனே. சரி சரி ரெண்டு பேரும் என்னைப் பார்த்து முடிச்சாச்சுனா கொஞ்சம் வழி விடுங்க. நான் உங்கள மாதிரி இல்ல ...எனக்கு நிறைய வேலை இருக்கு " என தன் அடாவடி பேசசை தொடங்கிவிட்டாள்.

அவளை மட்டுமில்லாமல் அவளின் பேச்சையும் அவளவன் சிறுசிரிப்புடன் ரசனையுடன் பார்க்க, அவளின் பேச்சில் பாதிக்குமேல் புரியாமல் சந்திரிகா தான் விழித்தாள் .

திரும்பி தன் அண்ணனை பார்த்தவள் அவன் இதழில் புன்னகையுடன் இருந்ததில் இடவலமாய் தலையாட்டியபடி, " அண்ணா...!!!இவர்கள் என்ன வித்தியாசமாக பேசுகிறார்கள்? மனிதர்கள் இவ்வாறுதான் பேசுவார்களா ?" என சந்தேகமாக கேட்டாள்.

அதை தவறாக புரிந்துகொண்ட அனகா , " என்ன....?? நான் வித்தியாசமா பேசுறனா?? ... சரிதான்,நீங்க அண்ணனும் தங்கையும் ஏதோ நாடக கம்பெனில இருந்து தப்பிச்சு வந்த மாதிரி பேசிட்டு என்ன சொல்றீங்களோ?? ஆமா அது என்ன என்னை பார்த்து மனிஷியானு வேற கேட்கிறீங்க இத நான் தான் உங்க கிட்ட கேக்கணும் , அரசகாலத்துல போட்ற மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு , வித்தியாசமா பேசிட்டு இந்த காட்டில் என்ன பண்றீங்க நீங்க??" என கேட்க ,

அண்ணனும் தங்கையும் அவளின் கேள்விகளுக்கு உண்மையை சொல்லமுடியாததால் அவளை சமாளிக்க முடியாமல் திணறினர்.



--------------------------------------------------------------------------------
சின்னம்பாளையம்:


இரவு மணி எட்டை கடந்திருக்க களைத்துப் போய் வந்த மித்ரனை கண்ட யஷி சமையலறை சென்று சூடாய் காபியை தயாரித்து கொண்டு வந்து அவன் கைகளில் கொடுத்தாள்.

அவன் அதை குடித்து முடிக்கும்வரை கூட பொறுக்கமுடியாதவள் அவன் குடித்தபின் கப்பை வாங்கியபடி , " மித்ரா ...! ஹீட்டர் போட்ருக்கேன் சீக்கிரம் குளிச்சிட்டு வாடா, உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள்.


மித்ரனோ பதிலேதும் சொல்லாமல் இருக்க, அவனின் முகம் பார்த்தவள் அதில் தெரிந்த வருத்தத்தில் ," என்னடா ஆச்சு ??" என கேட்டபடி அவன் தலையை கோதினாள்.

அவளை பார்த்தவன் அதற்கு மேல் தன்னால் முடியாது என்பது போல அவளின் மடியில் தலை சாய்த்தான்.

அவன் தலை சாய்த்ததும் யஷி எதுவுமே கேட்காமல் தொடர்ந்து அவன் தலையைக் கோத , கண்களை மூடி சற்று நேரம் அமைதியாய் படுத்திருந்தான் .

சிறிது நேரம் கழித்து எழுந்தவன் அவளின் கைகளை இறுக்க பிடித்தவாறு ," யஷிமா ...இன்னிக்கு ஒருநாள் இங்க ஹால்ல தூங்குறியா . நான் பெட் தூக்கிட்டு வந்து போட்றேன் நீ படுத்துக்கோ , நான் இந்த சோபாலையே படுத்துகிறேன் ப்ளீஸ்டி...!"" எனக் கேட்டான்.

அவனின் தவிப்பில் யஷியும் என்னவென்று அறியாமல் "சரி "என்று தலையாட்ட , அவளின் அறையினுள் சென்று பெட்டை எடுத்துவந்து போட்டவன் , மீண்டும் வந்து அவளின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்து அதிலே முகம் புதைத்தான் .

சிறிது நேரம் கழித்து அவனின் கண்ணீரை தன் கைகளில் உணர்ந்தவள் , " மித்ரா " என கேள்வியுடன் அழைத்தாள்.

முகத்தை நிமிர்த்தாமலே , " பாப்பா ப்ளீஸ் டா....என்னால இன்னிக்கு கேட்ட விஷயங்களை எல்லாம் தாங்க முடிலடா . இப்போ திரும்ப என்னால அதப்பத்தி உன்கிட்ட சொல்ல முடியாது . ப்ளீஸ் ....நான் நாளைக்கு உனக்கு சொல்லட்டுமா " என அவன் கேட்ட விதத்திலே அவனின் மனம் அதிகம் காயப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தவள் அமைதியாய் அவனின் தலையை தன் மடிதாங்கினாள் .

அவனின்￰ துயரத்தை கண்டவளுக்கும் வருத்தமாய் இருக்க அமைதியாய் அவனின் தலை கோதிக்கொண்டிருந்தவளை கண்ட காற்றுடன் கலந்திருந்த அவ்வுருவம் ," நீங்கள் பார்க்கவேண்டியது இன்னும் அதிகம் உள்ளது " என்றெண்ணியபடி காற்றில் கலந்து அவ்வூரின் எல்லையில் இருக்கும் அவ்வீட்டின் வாயிலிற்கு வந்துநின்றது .


பாதி எறிந்திருந்த அவ்வீட்டை கண்ட நொடி அவ்வுருவம் என்ன உணர்ந்ததோ யாம் அறியோம் .. ஆயினும் ,ஏதோ ஓர் உணர்வில் அது ஆழ்ந்தது என்பதை அங்கு வீசிய காற்றின் வேகம் உணர்த்தியது .


அவ்வீட்டிற்குள் ஓர் அறையில் இரண்டு நபர்கள் தனித்தனி நாற்காலியில் கட்டப்பட்டிருந்தனர்.

அவ்வறை முழுக்க காரிருள் பரவிப்படர்ந்திருக்க, அவர்கள் இருவருக்குமே ஒருவருக்கொருவர் அங்கிருப்பது தெரிந்திருக்கவில்லை .

கைகள் இரண்டும் நாற்காலியின் பின்புறம் கட்டப்பட்டிருக்க , கால்கள் இரண்டையும் ஒன்றாய் சேர்த்து அந்நாற்காலியில் கட்டியிருந்ததில் அசையமுடியாமல் உடல் மருத்தது. வாயிலும் பெரிதாய் துணியை கொண்டு அடைக்க பட்டிருக்க,
இருவராலும் முனங்குவதென்ன மூச்சுக்கூட சரியாய் விடமுடியவில்லை.

இதில் என்னவென்றே அறியமுடியா துர்நாற்றம் வேறு அவ்விடம் முழுதும் பரவிருந்ததில் அவர்களுக்கு குடலை புரட்டிக்கொண்டு வந்தது .

தாங்கள் இவ்விடம் எவ்வாறு வந்தோம்??எங்கிருக்கிறோம்?? எவ்வாறு இங்கிருந்து தப்பிப்பது ??? என எதையும் யோசிக்கமுடியாமல் செய்தது அவ்விடத்தின் இத்தகைய சூழல் .

பகலா இரவா என்பதைக்கூட அறியமுடியாமல் அக்காரிருளில் மரணபயத்தை கண்களில் தேக்கியபடி அமர்ந்திருந்தனர் இருவரும்.

சற்றுநேரத்தில் அவ்விடத்தில் காற்று வேகமாய் வீசத்தொடங்க சிறிதாய் வெளிச்சம் தோன்றியது .

பலமணிநேரங்களுக்கு பின்னான வெளிச்சத்தில் கண்கள் கூச சற்று பொறுத்து கண்களை திறந்த இருவரும் எதிரே இருந்த மற்றவரை கண்டு அதிர்ந்தனர் .

அவர்கள் அதிர்ச்சி விலகும் முன்பே அவர்களின் முன் தோன்றியது அவ்வுருவம் . இத்தனை நாட்கள் காற்றோடு கலந்திருந்த உருவம் இன்று தனியே பிரிந்து நிற்க அவ்வுருவத்தை கண்டவர்களின் கண்களோ பயத்தில் தெரித்துவிடுவது போல் விரிந்தது.


இருவரும் ஒருவரை ஒருவர் நம்பமுடியாமல் பார்த்துக்கொள்ள , அதற்குமேல் பொறுக்கமுடியாமல் காத்திருந்த அவ்வுருவம் வேகமாய் எதையோ தூக்கி வீச அடுத்தநொடி இருவரின் கால்களும் வெட்டப்பட்டு தனியே விழுந்தது .


இருவரும் கத்தகூடமுடியாமல் உட்கார்ந்தபடியே துடிக்க , அவர்களை பார்த்த படியே அருகினில் வந்த உருவம் தன் இடதுகையை பார்க்க இயல்பாய் இருந்த கை நொடியில் தீக்கங்காய் மாறி கனலை கக்கியது .

அதை ஒருவனின் நடுமுதுகில் அப்படியே வைக்க அதை தடுக்கமுடியாமல் மரணிக்காமலே மரணத்தின் வலியை உணர்ந்தான் அவன்.

அதை பார்த்திருந்த மற்றவனுக்கோ தன் கால்கள் வெட்டபட்டு குருதி பெருகி வழிவதுகூட உணரமுடியாமல் மரணபயத்தில் உறைந்தான் .

மரணபயத்தில் உறைந்தவனுக்கு அதை உணர்த்தவே செய்தது அவனின் மணிக்கட்டை நறுக்கென்று அறுத்த அவ்வுருவம் .


இருவரும் மரணத்தின் வலியில் துடிக்கக்கூட முடியாமல் மயக்கத்தில் ஆழப்போக அதை திருப்தியின்றி பார்த்த அவ்வுருவம் அவ்வறையின் மூலையிலிருந்து பெட்டியை கொண்டுவந்து அதிலிருந்த எலிகளை இருவரின் அருகிலும் கொட்டிவிட்டு நீண்டநாட்களுக்கு பிறகான புன்னகையுடன், திருப்தியாய் காற்றில் கலைந்து மித்ரன் மற்றும் யஷியை தேடிச் சென்றது .




- காதலாகும் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top