செழியனின் அறையிலிருந்து வெளிவந்த நொடி, “ஷ்ஷப்பா” என்று மூச்சை இழுத்து விட்டாள் அம்மு எழிலரசி.
தந்தை இதை நிச்சயம் விடப்போவதில்லை. அப்போதைக்கு சமாளித்து வைத்திருந்ததில், நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் சத்தமாகவே ஊதி வெளியேற்ற, வெற்றியின் ஆர்ப்பாட்டமானச் சிரிப்பு திரும்பிப் பார்க்கச் செய்தது.
முறைத்து விட்டு நகரப்போனவளை, “ஏய் மூஞ்செலி!” என்றழைப்பு பிடித்து நிறுத்த, “கால் மீ அம்மு ஆர் எழிலரசி” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“இரண்டும் ஒன்னுதான் போடி! ஆமா, என்மேல விசாரணைக் கமிஷன் இருக்கிறதுவரை தெரிஞ்சி வச்சிருக்க, மாமா மேல அவ்வளவு கரிசனமா?” கண் சிமிட்டினான்.
“மாமா…வா” என்று இழுத்து, அவனை மேலும் கீழுமாக ஒருமுறைப் பார்த்தாள்.
“ஓ! இந்த போலீஸ, பசங்க எல்லாரும் மாமா…மாமான்னு சொல்வாங்களே அந்த மாமாவா… மா..ம்மா?” என்று மாமாவில் அழுத்தம் கொடுத்து, அவள் இழுத்த இழுப்பில் அவன் இதயமும் சேர்ந்து இழுபட, வயிற்றுக்குள் ஜில்லென்ற உணர்வுத் தாக்கியது.
சின்ன நெற்றி, அதில் புள்ளியாய் நீள் வடிவத்தில் பொட்டு. ஒட்டு மொத்த கார்குழலையும் பணி நிமித்தம் கொண்டையாக முடிந்திருந்தாள். புருவம் இரண்டையும் வீச்சருவாளாக வளைத்துச் செதுக்கி இருக்க, அதற்கும் கீழ் விண்மீன்கள் இரண்டும் வெட்டும் பார்வையுடன் இவனை முறைத்துக் கொண்டிருந்தது.
‘இந்த கண்கள் தன்னை காதலுடன் பார்த்தால்தான் அதிசயம்!’ என்ற சிந்தை தோன்ற மெலிதாய்ப் புன்னகைத்தான்.
அவளருகில் குனிந்து, “இதோ சுழற்றி அடிக்குதே இந்த வாய். அது ஒருநாள் இல்ல ஒருநாள் எந்த மாதிரியான மாமான்னு தெரிஞ்சிக்கும் டி என் மூஞ்செலி” என்றவன் நொடியில் அங்கிருந்து மறைந்திருக்க, முறைக்கக் கூட ஆளில்லாமல் நின்றிருந்தாள் அவள்.
நின்றால் இருக்குமிடம் மறந்து அடி வெளுத்துவிடுவாள், என்றதில் அவன் ஓடிவிட்டிருந்தான்.
‘ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசுறான். ஆனா இந்த பிரின்ஸ் ஆஃப் விக்டரியத்தான் நல்லவன் வல்லவன்னு இந்த ஊரும் உலகமும் கொண்டாடுது. ச்ச…’ மனதுக்குள் வறுத்தெடுத்தவளுக்கு இந்த அவனின் உழறலும், உரிமையும் அவளிடம் மட்டுமே என்று நன்றாகவேத் தெரியும்.
‘நான் மாட்டினது இவனுக்கு எப்படித் தெரிய வந்ததுன்னு கேட்காம விட்டுட்டோமே?’
தந்தையின் முன் தடைபட்டிருந்த சிந்தனை மீண்டும் மேலோங்க, பாதையில் கவனமில்லாது நடந்தவள், எதிரில் வந்தவர் மீது மோதப் போக, மின்னலாக உள்நுழைந்து தன்மீது பூவாய் சாய்த்துக் கொண்டான்.
“என்ன வெற்றி இப்படி குறுக்கால புகுந்திட்ட?” என்ற கான்ஸ்டபிளின் சிரிப்பில் சிந்தைத் தெளிந்து பெண்ணவள் முழிக்க, வெற்றிக்கு மிக மிக நெருக்கமாய் கிட்டதட்ட அவன் நெஞ்சில் சாயாத குறையாய் நின்றிருந்தாள் அவள்.
அவள் கவனத்தில் பதியும்முன் அந்த கடுகளவு இடைவெளியையும் அவன்தான் ஏற்படுத்தி இருந்தான். தன்னுடனான நெருக்கம் நிச்சயம் அவளுக்கு அசூயையை உருவாக்கும் என அறிந்தே கண்ணிமைக்கும் நொடியில் செயல்பட்டிருந்தான்.
“அட போப்பா!, சர்வீஸ் முடிஞ்சி போற அன்னைக்கு மேல விழ இருந்த சந்தன மாலையை சாய்ச்சிபுட்டியேப்பா…” இன்று பணி ஓய்வு பெறும் உற்சாகத்தில் இருந்த கான்ஸ்டபிள், வயதில் பெரியவர் என்ற உரிமையில் அவ்வளவு வேகமாக குறுக்கில் புகந்தவனின் உள்ளம் புரிந்து கேலி பேசினார்.
“என்ஜாய் யங்மேன்” என்றுவிட்டு அவருமே வெளியேற எழிலரசிக்குத்தான் சுற்றம் உரைக்க சற்றுநேரம் பிடித்தது.
புரிந்த நொடி, “எப்போ எப்போன்னு அலைவீங்களா? ச்ச…” வார்த்தையில் அமிலத்தை வீசி விலகி நின்றாள். இருவரின் மூச்சுத் தொடும் நெருக்கம் கோபத்தைக் கிளற, வார்த்தையை அம்பாக்கினாள்.
அவளின் வெறுப்பான பார்வையும், பதறிய விலகலும் வலித்தது. இருந்தும் எதிர்பார்த்த ஒன்றுக்காய் தோல்வியை ஒத்துக்கொண்டால் அவன் வெற்றி அல்லவே!
“கண்ணை பொதடியில வைக்காம கொஞ்சம் பாதையிலும் வச்சி நடந்திருந்தா இந்த விலகலுக்கு அவசியமே வந்திருக்காது மேடம்!” என்றான் குரலை செருமி.
மனது காயப்பட்டதில் குரல் மாறுபட்டிருந்தது.
வழக்கத்திற்கும் மாறாக வெற்றியின் குரல் சிறிது தடுமாற்றமாக ஒலிக்கவும், அதீதமாய் பேசி விட்டது புரிந்தது. இருந்தும், ‘நல்லா வலிக்கட்டும்’ என்று அவள் நினைத்து முடிக்கும்முன், அவள் எண்ணத்தைத் தூள் தூளாய் சிதறடித்தான் அவன்.
“அந்த வயசான கட்டை மேல, இந்த வைரம் பாய்ஞ்ச கட்டை சாய்ஞ்சிருந்தா பாவம்டி மனுஷன். போய் சேர்ந்திருப்பார் அதான் குறுக்கால பாய்ஞ்சி அவரைக் காப்பாற்றினேன்” என்றவன் இதழுக்குள் சிரிக்க, மீண்டும் உக்கிரமானாள் அந்த உக்ராதேவி.
“உன்னை எல்லாம் கண்ட இடத்தில சுடுற ஆர்டர் வாங்கி சுட்டுத் தள்ளணும்” என்றவளோ தன்நிலை மறந்து இடுப்பிலிருந்த ரிவால்வருக்கு கையை கொண்டுச் செல்ல…
“அடியேய், அம்முகுட்டி கூல்டி கூல்..கூல். ப்ளீஸ்” என்று பதறி கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி அவன் நின்றிருக்க, அதையெல்லாம் அவள் கவனித்தால் தானே!
அவர்கள் இருவரும் நின்றிருந்தது முக்கியக் கோப்புகளை பாதுகாக்கும் அறைக்குச் செல்லும் வழி என்பதால் ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரும் இவர்களை கவனிக்க வில்லை.
அவள்தான் வெற்றி என்ற பெயரைக் கேட்டாலே நிதானம் இழப்பவளாயிற்றே!. இதில் அவனே நேரில் வந்து வம்பிழுத்தால் விடுவாளா?
தன்னையும் மீறி துப்பாக்கியை கையில் பிடித்தபடி பாய்ந்துகொண்டு வந்தவளை, “அம்மு…” என்று அதிர்ந்து அழைத்தவனின் கோபக்குரல்தான் நிதானத்துக்கு கொண்டு வந்தது.
கையிலிருந்த துப்பாக்கியையும், அவன் சட்டையில் மாட்டப்பட்டிருந்த ஸ்டார்களின் எண்ணிக்கையையும் ஒரு நிமிடம் கூர்ந்தவளின் கைகள் தானாக தளர, “சாரி சர்” என்றாள் தலை குனிந்த படி. மெல்லச் சிரித்தான். அவனுக்கும் தெரியுமே அவள் வலி எதனால் என்று. நிச்சயம் இவனை இங்கு எதிர்பார்த்திருக்க மாட்டாள். அதுவே அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கும்.
அவன் சென்னைக்கு மாற்றலாகி வருவது தெரிந்தால், அவளுடைய போஸ்டிங்கை தந்தை மூலம் எங்கேயாவது மாற்றிவிடுவாள் என்றே விசயம் வெளியே கசியாமல் மறைத்து வைத்திருந்தான். இதில் காலையில் நடந்தது வேறு, தந்தைமுன் மாட்டிவிட்டது வேறு என்று மன உளைச்சலில் இருந்தவளைத்தான் இவனும் சீண்டி விட்டது.
சமாதானமெல்லாம் எந்தக் காலத்திலும் அவளிடம் எடுபடாது என்று தெரிந்தே வம்பிழுத்தான்.
அவனுடன் வலிய மல்லுக்கட்டும் அம்முவைத்தானே அவனுக்குப் பிடிக்கும். அதில், “ஓகே ஃபார்கெட் எ..வ்..ரி..தி..ங்க்!” என்றவன், “ஃப்ரண்ட்ஸ்…” என கை நீட்ட, அலட்சியமாய் அவனின் நீட்டியக் கைகளைப் பார்த்தாள்.
அந்த எவ்ரிதிங்கை, அவன் ஒற்றை ஒற்றை எழுத்தாய் பிரித்து அழுத்திச் சொன்னதில் இருந்த அர்த்தம் புரிந்து, “நெ..வர்.. அண்ட் எவர் மிஸ்டர் வெற்றி” என்றாள் முகத்தைக் கடினமாக்கி.
இத்தோடு மூன்றாவது முறை அவன் நட்புக்கரம் நீட்டி அவள் மறுப்பது.
‘மை அம்மு இஸ் ஃபேக்’ மெலிதாய்ப் புன்னகைத்தான்.
அவளுக்கு அதிக மன அழுத்தத்தை இன்று ஒரே நாளில் கொடுத்துவிட்டதில் அவனுக்கு மனம் இளகியது.
அவளருகில் நெருங்கி, அவள் விழிகளுக்குள் பார்த்தவன், “எப்போ இந்த உடையைப் போட்டியோ… இனிமேல் எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்கக்கூடாது. எதிரில் நிற்கிறது யாரா இருந்தாலும். ஏன் நானாவே இருந்தாலும் புரிஞ்சிதா?” என்று தானாகவே அவளின் கரம் பற்றி அதில் மெல்லிய அழுத்தம் ஒன்றைக் கொடுத்து விடுவிக்க, கோபமாகக் காட்டிக்கொண்டவளின் மனம் தன்னையுமறியாமல் நிதானத்துக்கு வந்ததை அறவே வெறுத்தாள்.
‘என்ன? செண்டிமெண்டல் அட்டாக்கா? போடா! அதுக்கு வேற ஆளைப் பாரு!’ முகத்தைச் சுளித்தாலும் என்றுமில்லாமல் அவனின் குரலில் இருந்த நிதானமோ, இல்லை அந்த மெல்லிய அழுத்தமோ ஏதோ ஒன்று அவனிடமே ‘கேட்டுவிடு’ என்று உந்தியது.
“இல்ல உ.ங்..க உங்களுக்கு எப்… தெரி..” என்று நிமிர்ந்தவள், அவனின் நேரடிப் பார்வையில் கேட்க வந்ததை கேட்க முடியாமல் தடுமாறினாள்.
இப்படி இருவருமே இயல்பாகப் பேசிப் பழகாததாலோ என்னவோ அவன் முகத்தைக் கண்டதும் அவளிடம் சின்னதாய் தடுமாற்றம்.
முதல்முறையாக தன்னிடம் தடுமாறும் பெண்ணவளை சுவாரஸ்யம் மிக பார்த்திருந்தான் அந்தக் காவலன். அவளிடம் மட்டும் கள்வனாவன்.
புன்னகை விரிய, “உன்னைச் சுத்தி நடக்கிற ஒன்னுகூட என் பார்வையிலிருந்து தப்ப முடியாதுடி என் மூஞ்செலி” என்றவனோ, சற்றே அவள் உயரத்திற்கு குனிந்து, “இதோ இந்த நேம் பேட்ஜ் எத்தனைமுறை ஏறி இறங்குதுங்கிற வரை” என்று அவள் காதில் கிசுகிசுக்க,
“யூ…ராஸ்கல். ச்ச.., உன்னைப்போய் ஒரு நிமிஷம் நல்லவன்னு நினைச்சிட்டனே…” என்றவளின் கரம் மறுபடியும் இடுப்பைத் தடவ, “போடி மூஞ்செலி!” என்று சிரித்தவன் அங்கிருந்து ஓடியேவிட்டான்.
உன் நண்பன் யாரென்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்! என்ற சான்றோரின் வாக்குக்கிணங்க, “பொறுக்கி! பொறுக்கிங்க கூட சுத்துன நீயும் பொறுக்கியாதான இருப்ப” சத்தமாகவே முனுமுனுத்து வெளியேறினாள் அவள்.
தன் ஜீப்பை இயக்கிய வெற்றிக்கும் இதழ்களில் புன்னகை. நொடிநேரம் எனினும் தன்னிடம் தடுமாறியவளின் கோலம் அவனை இரசிக்க வைத்தது.
எத்தனை நாள் கனவு கண்டிருக்கிறான் தன்னிடம் நாணி, கோணி நிற்கும் பெண்ணவளை! என்ன இன்றுவரை அது கனவாக மட்டுமே இருக்கிறது.
‘ஏன்டா பக்கி, நீ விடும் மூச்சுக் காற்றும் எனக்கு அத்துப்படிங்கிறது எவ்வளவு ரொமான்டிக்கான வார்த்தை? அதைப்போய் இப்படி காக்கா கழிஞ்சி வச்சா மாதிரி அவகிட்ட சொல்லிட்டு வந்திருக்கியே உன்னைக் கொல்லாம விட்டாளேன்னு சந்தோஷப்படு. நிஜம்மாவே உனக்கெல்லாம் ரொமான்ஸ் வருமா வராதாடா?’ சந்தேகமாய் கேள்வி எழுப்பியது அவனது மனசாட்சி. ‘அது தெரிஞ்சா என்னைக் கண்டதும் துப்பாக்கியவா தூக்குவா? என்னையே தூக்கிச் சுத்த மாட்டா?’ என்றவனின் இதழ்களில் புன்னகை உறைந்திருக்க, தன்னவள் வெகு அருகில் வந்துவிட்டாள் என்ற நிம்மதியே அவனுக்குப் போதுமாயிருந்தது.
சற்றுமுன் அவனிடம், தடுமாறியவளை விட அவன் அதிகம் இரசிப்பது மூக்கு விடைக்க, முறைத்து நிற்கும் அந்த கோவக்கார கிளியைத்தான்.
அதே கோவத்துடன்தான் அம்முவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். ‘இவனுடனா குப்பைக் கொட்ட வேண்டும்? முடியவே முடியாது’. ஆனால் இந்த கடத்தல் வழக்கு வேறு. ‘ப்ச்’ என்று தலையிலடித்துக் கொண்டாள்.
அது முடியும் வரை மாற்றல் கிடைக்குமா தெரியாது. எப்படியாவது தந்தையிடம் பேசி மாற்றல் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தவளுக்கு, தந்தை இருக்கும் கோபத்தில் அது முடியும்போல் தோன்றவில்லை.
‘நான் மாற்றல் வாங்குவேன்னு தெரிஞ்சேதான் கேட்க முடியாதபடி, அப்பாட்ட வேணும்னே போட்டுக் குடுத்திருக்கான் பக்கி. கேடிக்கு இந்த வேலை எல்லாம்தான் கை வந்த கலையாச்சே’ பொறிந்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
பூனை நடந்து தனது அறைக்குள் நுழையப் போக, “அம்மு!” என்ற தந்தையின் குரலில் ஆணி அடித்தாற் போல் நின்றாள்.
தந்தையின் அழுத்தமான குரலைத் தாண்டி ஓரடிக்கூட எடுத்து வைக்க இயலாது இரவு விளக்கில் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
‘இன்னமுமா அப்பா தூங்கல?’ வழக்கமாக தூங்கும் நேரம்வரை காத்திருந்து தாமதமாக வந்ததெல்லாம் வீணா? இதற்கும் சேர்த்து வாங்கிக் கட்டனுமா? உள்ளே உதறிய மனதை மறைத்து, “சொல்லுங்கப்பா” என்றாள் எதுவும் அறியாததைப் போல்.
“இன்னைக்கு ஏர்போர்ட்ல என்ன நடந்தது?” என்றவனின் குரலே சொன்னது அவன் கோவத்தின் அளவை.
மீண்டும், “அது வந்துப்பா” என்று திணறியவள் காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என விழியைச் சுழற்ற, பளிச்சென விளக்கு எரிந்தது.
சுவற்றில் சாய்ந்தபடி, செழியனுக்கு இணையான கோபத்தில் இரு கைகளையும் கட்டியபடி தாய் திவ்ய பாரதி ஒரு பக்கம் நின்றிருக்க, நமட்டுச் சிரிப்புடன் அவளின் தங்கை ஒரு பக்கமாக நின்றிருந்தனர்.
செழியனுக்கு மிக அருகில் நீள்விருக்கையில் துருவன். தன் பழுப்பு நிற கண்களால் ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்திருந்தான். ‘டேய் துருவா நீயுமாடா?’ என்று விழி விரித்தவளை அவன் துளியும் சட்டை செய்யவில்லை. வாகாக செழியனின் மடியில் தன் காலை வேறு போட்டுக் கொண்டான்.
“இந்த பொடி பட்டாசுக்கு இருக்க தைரியத்தைப் பார்த்தியா! அடேய் அது ஊரே நடுங்கிற என் அப்பாடா! அதானே உங்கப்பன் ஹென்றி போலீஸ்ல தானே இருந்தான். அந்த இரத்தம்! தன்னைக் கண்டதும் வாலாட்டியபடி தாவி வரும் துருவனும் கூட தகப்பனின் கோபம் புரிந்து தள்ளி வைத்ததில் நொந்து போனாள்.
‘பக்கிங்க எதுவும் தூங்காம காத்திருக்கே, இன்னைக்கு சம்பவம் பெருசு போலவே!’ எல்லாம் அவனால.’ அந்நேரத்திலும் வெற்றியை கடித்துக் குதறியவள் விழிகளைச் சுழற்றி ஆபத் பாந்தவனான தன் மாமனைத் தேடினாள்.
‘இந்நேரம் இங்க வந்திருக்கனுமே!’ என்று ஆசையோடு தேட, அவளது எண்ணங்களின் காவலனோ, காலையில் இவள் விசயத்தை முடித்தக் கையோடு ஊருக்கல்லவா சென்றிருந்தான்.
கார்த்தியின் கார் வெளியில் நிற்கும் தைரியத்தில் தானே, அவள் அசட்டையாக உள்ளே நுழைந்திருந்தாள்.
அதில் ‘மாமா எங்கடி?’ தங்கையிடம் விழிகளை மேலேற்றி மாடியைக் காட்டினாள்.
‘ஊருக்கு’ அவளது தங்கை நமட்டுச் சிரிப்புடன் வாயைக் குவித்து இதழசைக்க ‘போச்சிடா’ மானசீகமாக தலையில் கை வைத்தாள்.
“அங்க என்ன உருட்டிட்டிருக்க, இங்க நான் கேட்கிறது காதுல விழலையா?” உறுமினான் செழியன்.
அதில் உண்மையாகவே அதிர்ந்துதான் போனாள் அம்மு. அவளின் அளப்பரிய சேட்டையில் குழந்தையிலிருந்து எத்தனையோ முறை செழியன் கண்டித்திருக்கிறான்தான். ஆனால் தந்தையின் இந்த கோபம் அவளுக்கு மிகவும் புதிது.
தான் உயிராய் நேசிக்கும் காவல் பணியில் சிறு கேடும் வர விரும்பாதவனின் மிகையான கோபம் அது என்பதை அறியவில்லை அவள். எப்போதும்போல் தந்தையை ஏய்த்துவிடலாம் என்றே எண்ணி விட்டாள்.
“இன்னும் பதில் வரல அம்மு!” தந்தையின் வழக்கமில்லாத கோபத்தில், “அது வந்துப்பா அது…” என திணறியவள் காலையில் நடந்த அத்தனையும் நொடியில் உளறிக் கொட்டினாள்.
அதில் அவன் தன்னை வேண்டுமென்றே சீண்டியதை மட்டும் மறைத்து விட்டாள். அதைச்சொன்னால் வெற்றியைப் பற்றியும் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வாள்? வெற்றி என்ற பெயரே தன்னை தடுமாறி நிதானம் இழக்கச் செய்வதை. இப்போதும் அவனை நினைத்ததும் அடி மனதில் கோபம் மண்டியது.
“ரீசன் சொல்லாத அம்மு! நீ ஒரு ஐபிஎஸ். எப்பவும் சுற்றுப்புறத்தில ஒரு கண்ணு இருக்கணும். எதிராளியோட கண்ணைப் பார்த்தே அவனை கணிக்கத் தெரியணும்” கடிந்தான்.
‘எங்க கூலர், தொப்பி, தாடின்னு முகத்தையே பார்க்க முடியல. இதுல கண்ணை பார்க்கணுமாமே’ உள்ளுக்குள் குமைந்தவளால் அதை தந்தையிடம் தைரியமாகச் சொல்ல இயலவில்லை. தந்தையை ஏறெடுத்தும் காண இயலாமல் தலைகுனிந்து நின்றாள்.
“எவ்ளோ அழகா உன்கிட்ட ஒன்னைக் குடுத்துட்டு வெளில வந்ததும் வேற சாக்லெட்டை கை மாத்தி இருக்கான். அதைக்கூட நீ கவனிக்கல இல்லையா?”
வெற்றி வெற்றி என்றதில் தன் மூளை மரத்துப்போனதை எப்படிச் சொல்லுவாள்.
தமக்கையின் திணறலை இரசித்துச் சிரித்திருந்த தங்கையிடம் பார்வை சென்று வர, “மிரு தாம்பா சாக்லட்டைத் தின்னா. அவதான் அவன் கைல குடுத்தா” என்றாள் பட்டென்று.
‘பக்கி கோர்த்து விட்ருச்சே’ தமக்கையை ஒரு முறை முறைத்துவிட்டு “அச்சோ அப்பா! அக்கா ஆசையா வாங்கிட்டு வந்திருக்காளேன்னு நினைச்சிதான் தின்னேன். மத்தபடி அவன் யாருன்னே எனக்குத் தெரியாது” என்று படபடத்தவள், “இதோ இவதான் அவன்கூட ஜோடி போட்டுட்டு ஒன்னா வந்தா…” தன்னை கோர்த்து விட்ட தமக்கைக்கு இணையாக சம்பவத்தை சிறப்பாக செய்து நான் உன் தங்கை என நிருபித்துக் காட்டினாள் மிரு.
“எரும..எரும… நாங்க ஜோடி போட்டத நீ பார்த்த” தங்கையிடம் பாய்ந்த அம்முவை செழியன் கை நீட்டித் தடுக்க அப்படியே அமைதியானாள்.
“ஏமாந்ததுகூட தப்பில்ல. ஆனா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கணும்” என்றவன் சிறு மூச்சை இழுத்துவிட்டு, “என் பெயருக்கு எந்த கலங்கத்தையும் ஏற்படுத்திடாத. அதை என்னைக்குமே நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று எழுந்து சென்று விட மளுக்கென்று தளும்பிய கண்ணீரில் உறைந்து நின்றாள் அம்மு.
யாரைப்பார்த்து பார்த்து இந்தத் துறைக்காகத் தன்னையே செதுக்கிக் கொண்டாளோ அப்படிப் பட்ட தந்தையிடமிருந்த வந்த வார்த்தைகள் அவளை உருக்குலைத்தது. அதுவும் பணியில் சேர்ந்த முதல் நாளே.
ஒரு முறை மகளை ஏறிட்ட பாரதி, உன் கண்ணீர் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என செழியனுடனே உள்ளே நுழைந்து கொண்டாள்.
விட்டால் கன்னம் கன்னமாக அறைந்திருப்பார். அவ்வளவு ஆத்திரம் மகளின் மீது. மருமகளை அறைந்தது தெரிந்தால் கார்த்திக்கு கோபம் வந்துவிடும். அதற்காக பொறுத்துக் கொண்டாள். செழியன் எந்தளவு தனது பணியை நேசித்தானோ அதைவிடவும் கூடுதலாக செழியனை நேசிப்பவள் பாரதி. அவன் இல்லையேல் அவள் இல்லை.
வார்த்தைகளற்று கண்ணீரையும் சிந்தாமல் இறுகிப்போய் நின்றிருந்த தமக்கையைக் கண்ட மிருத்யூவால் அதற்கும் மேல் தாளவில்லை. “அக்கா” என ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
அம்முவின் உடல் ஒருமுறை இறுகித் தளர்ந்தது. எளிதில் கண்ணீரைச் சிந்தி விடுபவள் அல்ல அவள். மாறாக அந்த கோபம் கணலாக அவளுள்ளே உழன்று கொண்டே இருக்கும்.
“விடுக்கா அப்பா தான. சீக்கிரமே அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கிக் காட்டு. எங்கக்காவால முடியலைன்னா யாரால முடியும் சொல்லு!” தமக்கையை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
அதில் சற்றேத் தளர்ந்தாலும் எதுவும் பேசவில்லை அவள். நேராக தன் அறையைத் தேடி அதனுள் சுருண்டு கொண்டாள். அவள் தலைமீது தலைவைத்துப் படுத்திருந்தான் துருவன். அவளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருந்தது அந்த வாயில்லா ஜீவன்.
‘எனக்கு எந்த அவமானத்தையும் தேடித்தந்திடாத’ தந்தையின் வார்த்தைகள் அவள் மூளைக்குள் ரீங்காரமிட, புரண்டு புரண்டுப் படுத்த தமக்கையை, தன் படுக்கையிலிருந்தபடியே இயலாமையுடன் வெறித்திருந்தாள் அவள் தங்கை.
அவள் தமக்கை சமாதானத்தை ஏற்றுக்கொள்பவள் இல்லையே! அவளாகத் தெளிய வேண்டும். இல்லை தெளிய வைக்க ஒருவன் வர வேண்டும்.