Ramadan 2021- Day 26 What is Hijra

Advertisement

fathima.ar

Well-Known Member
அபூஜஹ்ல் சில சமயம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திருமறையின் வசனங்களை செவிமடுத்துச் செல்வான். ஆனால், நம்பிக்கை கொள்ளவோ, அடிபணியவோ மாட்டான். ஒழுக்கத்துடனோ, அச்சத்துடனோ நடந்து கொள்ளவும் மாட்டான். தனது சொல்லால் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிப்பதுடன் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறரைத் தடுத்தும் வந்தான். தனது இச்செயலை புகழ்ந்து பேசுவதற்குரிய நற்காரியம் என்றெண்ணி அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து செல்வான். இவனைப் பற்றியே பின்வரும் திருமறை வசனங்கள் இறங்கின.

(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை தொழவு மில்லை. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (அல்குர்ஆன் 75:31-33)

முஹம்மது உங்களுக்கு முன்னிலையில் தனது முகத்தை மண்ணில் வைத்து தேய்க்கிறாராமே” என்று அபூஜஹ்ல் கேட்டான். குழுமியிருந்தவர்கள் “ஆம்!” என்றனர். அதற்கவன் “லாத், உஜ்ஜாவின் மீது சத்தியமாக! நான் அவரைப் பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக ஆக்கி விடுவேன்” என்று கூறினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்தான். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவன் நபி (ஸல்) அவர்களின் பிடரியை மிதிக்க முயன்றபோதெல்லாம் பின்னோக்கி விழுந்து தன் கைகளால் சமாளித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். மக்கள் “அபூ ஜஹ்லே! என்ன நேர்ந்தது?” என்று கேட்டனர். அதற்கு அவன் “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழியையும், மிகப்பெரிய பயங்கரத்தையும், பல இறக்கைகளையும் பார்த்தேன்” என்று கூறினான். பிறகு நபி (ஸல்) அவர்கள் “அவன் எனக்கருகில் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனுடைய ஒவ்வொரு உறுப்பையும் இறாவியிருப்பார்கள் (பிய்த்து எறிந்திருப்பார்கள்)” என்று கூறினார்கள்.


இதற்கு முன் நாம் கூறியதெல்லாம் தங்களை அல்லாஹ்வின் சொந்தக்காரர்கள், அவனது புனித பூமியில் வசிப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் இணைவைப்பவர்களின் கரங்களால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட அநியாயம் மற்றும் கொடுமையின் ஒரு சிறிய தகவல்தான். இத்தகைய இக்கட்டான கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனையையும், வேதனையையும் முடிந்த அளவு இலகுவாக்கி அவற்றிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க மதி நுட்பமான ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். இதற்காக இரண்டு திட்டங்களை நபி (ஸல்) அவர்கள் வகுத்தார்கள். அவ்விரு திட்டங்களால் அழைப்புப் பணியை வழி நடத்துவதிலும், இலட்சியத்தை அடைவதிலும் பற்பல பலன்கள் கிட்டின. அவையாவன:

1) அழைப்புப் பணிக்கு மையமாகவும், ஒழுக்க போதனைக்கு உறைவிடமாகவும் “அர்கம் இப்னு அபுல் அர்கம் மக்ஜூமி’ என்பவரின் வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

2) முஸ்லிம்களை ஹபஷாவிற்கு (எதியோபியா) குடிபெயருமாறு கட்டளையிட்டார்கள்.

அர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி

இந்த வீடு ஸஃபா மலையின் கீழே, அந்த அநியாயக்காரர்களின் கண் பார்வைக்கும் அவர்களது சபைக்கும் தூரமாக இருந்தது. முஸ்லிம்கள் இரகசியமாக ஒன்றுகூட அவ்வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வீட்டில் முஸ்லிம்களுக்குக் குர்ஆனை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு அதன் பண்புகளையும் சட்ட ஞானங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அங்கு முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டு மார்க்க கல்வியும் கற்று வந்தார்கள். புதிதாக இஸ்லாமிற்கு வர விரும்புபவர் அவ்விடத்தில் வந்து இஸ்லாமைத் தழுவுவார். இது வரம்பு மீறிய அந்த அநியாயக்காரர்களுக்குத் தெரியாததால் முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் அங்கு இருந்து வந்தனர்.

முஸ்லிம்களையும் நபி (ஸல்) அவர்களையும் ஒருசேர ஓரிடத்தில் இணைவைப்பவர்கள் கண்டுவிட்டால், நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குக் கற்றுத்தரும் ஒழுக்கப் பணிகளையும், குர்ஆனையும், மார்க்கத்தையும் நிச்சயம் தங்களது சக்திக்கு மீறிய குறுக்கு வழிகளைக் கொண்டு தடுப்பார்கள். அதனால், இரு கூட்டத்தார்களுக்கிடையில் கைகலப்பு கூட நிகழ்ந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் மலைக் கணவாய்களுக்கிடையில் இரகசியமாகத் தொழுது வருவார்கள். ஒருமுறை அதனைப் பார்த்துவிட்ட குறைஷி நிராகரிப்பவர்கள் அவர்களை வாய்க்கு வந்தபடி ஏசிபேசி அவர்களுடன் சண்டையிட்டனர். அச்சண்டையில் ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஒருவனை வெட்டி சாய்த்து விட்டார்கள். இதுதான் இஸ்லாமுக்காக செய்யப்பட்ட முதல் கொலை.

இவ்வாறு கைகலப்பு தொடர்ந்தால் முஸ்லிம்கள் அழிக்கப்படலாம். ஆகவே, இரகசியமாக பணிகளைத் தொடர்வதுதான் சரியான முறையாகப்பட்டது. பொதுவாக நபித்தோழர்கள் தாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது வணக்க வழிபாடுகளை மறைமுகமாகச் செய்து வந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் மட்டும் குறைஷிகளுக்கு முன்னிலையிலும் தங்களது வணக்க வழிபாடுகளையும் அழைப்புப் பணியையும் பகிரங்கமாக செய்து வந்தார்கள். எதற்கும் அவர்கள் அஞ்சிடவில்லை. ஆனால், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நன்மையைக் கருதியே முஸ்லிம்களை இரகசியமாக சந்தித்து வந்தார்கள்.

ஹபஷாவில் அடைக்கலம்

நபித்துவத்தின் நான்காம் ஆண்டு நடுவில் அல்லது இறுதியில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பவர்கள் வரம்பு மீற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாகத் தென்பட்ட துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஐந்தாம் ஆண்டின் நடுவில் சோதனைகள் மலையாக உருவெடுக்கவே அதிலிருந்து விடுதலைபெற வழி என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள். இச்சூழ்நிலையில்தான் “அல்லாஹ்வுடைய பூமி நெருக்கடியானதல்ல. எனவே (இடம்பெயரும்) ஹிஜ்ராவின் வழியை தேர்ந்தெடுங்கள்” என்று சுட்டிக் காட்டப்பட்ட அத்தியாயம் ஜுமல் உள்ள 10வது வசனம் இறங்கியது.


இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக, பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)

ஹபஷாவின் மன்னராக இருந்த “அஸ்மஹா நஜ்ஜாஷி’ நீதமானவர். அவர் யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே, உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நபித்தோழர்களின் ஒரு குழுவினர் முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார்கள். இதனை குறைஷிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு “ஷுஅய்பா’ துறைமுகத்தை அடைந்தனர். வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர்களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார்கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார்கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி (ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது


அந்த ஆண்டு ரமளான் மாதம் ஓர் இரவு நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு குறைஷியரும் அவர்களது தலைவர்களும் கொண்ட பெருங்கூட்டமொன்று குழுமியிருந்தது. திடீரென அவர்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் தோன்றி அத்தியாயம் அந்நஜ்மை ஓதினார்கள். நிராகரிப்பவர்கள் இதற்கு முன் குர்ஆன் வசனங்களைக் கேட்டதில்லை. அதற்குக் காரணம், “குர்ஆனை நீங்கள் கேட்காதீர்கள்; அது ஓதப்படும்போது வீண்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்று அவர்களில் ஒருவர் மற்றவருக்கு கூறி வந்ததுதான். நிராகரிப்பவர்களின் இந்தக் கூற்றைப் பற்றி,

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் “இந்தக் குர்ஆனை (உங்கள் காதாலும்) கேட்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டுபண்ணினால் நீங்கள் வென்று விடுவீர்கள்” என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)

என்ற வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.


நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை திடீரென ஓத, இனிமையான இறைவசனங்கள் அவர்களது காதுகளை வருடின. இதுவரை கேட்டவற்றில் இத்துணை மதுரமான, செவிக்கு இன்பத்தைத் தரும் சொற்றொடர்களை அவர்கள் இதற்கு முன் கேட்டதில்லை. அல்லாஹ்வின் அந்த வசனங்கள் அவர்களை மிகவும் கவர்ந்தன. அவர்களது உணர்வுகளை அவ்வசனங்கள் முழுமையாக ஆட்கொண்டன. நபி (ஸல்) ஓதுவதை அவர்கள் மெய்மறந்து கேட்டனர். நஜ்ம் அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் கேட்போரின் உள்ளத்தைக் கிடுகிடுக்கச் செய்யும் கோடை இடியாக விளங்குகிறது. இறுதியில், “அல்லாஹ்வுக்கு தலைசாயுங்கள், அவனை வணங்குங்கள்’ என்ற வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் சிரம் பணிந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் இறை வசனங்களால் கவரப்பட்டு தங்களை கட்டுப்படுத்த முடியாமல் தாம் என்ன செய்கிறோம் என்பதையும் உணராமல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து சுஜூதில் வீழ்ந்தனர்.

எதார்த்தத்தில் சத்தியத்தின் ஈர்ப்பு, பெருமை கொண்ட அவர்களின் உள்ளங்களில் உள்ள பிடிவாதத்தைத் தவிடு பொடியாக்கியது. எனவேதான், தங்களை கட்டுப்படுத்த இயலாமல் அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் சுஜூதில் வீழ்ந்தார்கள்.

அல்லாஹ்வுடைய வசனத்தின் மகிமை அவர்களது கடிவாளத்தை திருப்பி விட்டதை உணர்ந்த அவர்கள் மிகவும் கைசேதமடைந்தனர். அவ்வுணர்வை அழிப்பதற்கு உண்டான முழு முயற்சியை செய்தனர். இச்சம்பவத்தில் கலந்துகொள்ளாத இணைவைப்பவர்கள் நாலாபுறங்களில் இருந்தும் அச்செயலைக் கண்டித்ததுடன் பழித்தும் பேசினர். இதனால் சிரம் பணிந்த இணை வைப்பவர்கள் தங்களின் இச்செயலை நியாயப்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு கதையைக் கட்டிவிட்டனர். அதாவது நபி (ஸல்) அவர்கள் நமது சிலைகளை கண்ணியப்படுத்தும் விதமாக நாம் எப்போதும் கூறி வரும் “தில்க்கள் கரானிக்குல் உலா, வஇன்ன ஷஃபாஅத்த ஹுன்ன லதுர்தஜா” என்பதை ஓதினார்கள். அதனால்தான் நாங்கள் சுஜூது செய்தோம் என்று கதை கட்டினார்கள். (அதன் பொருளாவது: இவைகளெல்லாம் எங்களின் உயர்ந்த சிலைகள். அவைகளின் சிபாரிசு நிச்சயமாக ஆதரவு வைக்கப்படும்.) பொய் சொல்வதை தொழிலாகவும் சூழ்ச்சி செய்வதை வழக்கமாகவும் கொண்ட அக்கூட்டம் இவ்வாறு செய்தது ஓர் ஆச்சரியமான விஷயமல்ல!

முஹாஜிர்கள் திரும்புதல்

இணைவைப்பவர்கள் சுஜூது செய்த விஷயம், ஹபஷாவில் இருந்த முஸ்லிம்களுக்குக் “குறைஷிகள் முஸ்லிமாகிவிட்டனர்’ என்று, உண்மைக்கு புறம்பான தகவலாய் சென்றடைந்தது. அதனால் அதே ஆண்டு ஷவ்வால் மாதத்தில் அந்த முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினர். மக்காவிற்கு சற்று முன்னதாகவே உண்மை நிலவரம் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தவுடன் சிலர் ஹபஷாவிற்கே திரும்பிவிட்டனர். சிலர் எவருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் சென்றுவிட்டனர். மற்றும் சிலர் குறைஷிகள் சிலர் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தனர்.
 

fathima.ar

Well-Known Member
ஒரு மார்க்கத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் போது அதை தடுக்க பல இழி செயல்களை குறைஷியர்கள் செய்யும் போது எளிய முஸ்லிம்களை காப்பாற்ற தான் நபியவர்கள் ஒரு சிறு குழுமத்தை ஊருவிட்டு இரு பயணம் செய்ய வைக்கிறாங்க
முதல் காரணம் அதுவா இருந்தாலும்
இரண்டாவது இயற்கையாகவே இஸ்லாம் மார்க்கம் பரவவும் செய்யும் தானே...

அவ்வளவு இனிமையான அத்தியாயங்கள் கொண்ட சூரா நஜ்ம் வசனங்கள்..

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top