யாருமிங்கு அனாதையில்லை - 22

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!” - 22
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா

அத்தியாயம் : 22

“திரும்பி வந்த தன் மகனாய் இவனை அவங்க நெனச்சிட்டதாலே...இவன் எங்க வீட்டிலேயே இருக்கணும்!னு எதிர்பார்க்கிறாங்க!...இந்தப் பையனும் அவங்க நிலைமையை உணர்ந்து...அதுக்கு சம்மதிச்சு எங்க வீட்டிலேயேதான் இருக்கான்!...இவனுக்கு ஒரு அம்மாவும்...தங்கச்சியும் இருக்காங்க!...அவங்களையும் நாங்க எங்க வீட்டு அவுட் ஹவுஸிலேயே தங்க வெச்சிட்டோம்!” என்று சிங்கமுத்து சொல்ல

“குட்...சரியான முடிவு” என்றார் டாக்டர்.

“ஆனா...இப்ப பிரச்சினை என்ன?ன்னா....இவன் அவுட் ஹவுஸுக்குப் போய்...அம்மாவையும் தங்கச்சியையும் பார்த்துப் பேசறது...அவங்களுக்குப் பிடிக்கலை!.. “அங்க எதுக்குப் போறே?...அவங்க கூடவெல்லாம் எதுக்குப் பேசறே?”ன்னு இவனைக் கண்ட்ரோல் பண்றாங்க!...பாவம்...இந்தப் பையன் ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கறான்” என்றார் சிங்கமுத்து.

மெலிதாய்ச் சிரித்த டாக்டர் “பயப்படற அளவுக்கு இது ஒண்ணும் பெரிய பிரச்சினையில்லை!...சரி பண்ணிடலாம்!...அதுக்காக நாம செய்ய வேண்டியது என்ன?ன்னா...வீட்டுல உங்க மகனோட போட்டோவுக்கு மாலை போட்டு வெச்சிருக்கீங்களா?” கேட்டார்.

“இல்லை டாக்டர்!...மகன் இறந்த பிறகு அவள் இருக்கும் நிலைமையைப் பார்த்து நான்தான்...அதை அவாய்ட் பண்ணிட்டேன்!...ஹால்ல போட்டோ இருக்கு...பட் மாலை போடாமல்தான் இருக்கு!” என்றார் சிங்கமுத்து.

“அதுதான் மிஸ்டேக்!...ஏற்கனவே அவங்க...தன்னோட மனசுல மகன் இன்னும் சாகலை!ன்னு பதிஞ்சு வெச்சிருக்காங்க!...அதற்கு ஏற்றார் போல் நீங்களும் மகன் போட்டோவுக்கு மாலை போடாம வெச்சிருக்கீங்க!...அது...அவங்க எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்துமே?” என்ற டாக்டர், “நீங்க என்ன பண்றீங்க?...முதல் வேலையா...இன்னிக்கே போய் அந்த போட்டோவுக்கு ஒரு பெரிய மாலையைப் போட்டு...முடிஞ்சா ஒரு சின்ன லைட்டும் போட்டுடுங்க!...” என்றார்.

லேசாய்த் தயங்கிய சிங்கமுத்து “டாக்டர் இதனால் வேற ஏதாவது பிரச்சினை வந்திடாதே?” என்று சொல்ல

“வரும்...கண்டிப்பா வரும்!...அதை நாமதான் சமாளிக்கணும்!...திட மனசோட ஒரு தடவை சமாளிச்சிட்டா...அதற்கான மாற்றங்கள் நிச்சயம் இருக்கும்”

“ஓ.கே.டாக்டர்” அரை மனதுடன் சம்மதித்தார் சிங்கமுத்து.

“நெக்ஸ்ட்...நீங்க செய்ய வேண்டியது....உங்க மகன் இறந்தப்ப..நியூஸ் பேப்பர்ல கண்ணீர் அஞ்சலி விளம்பரமெல்லாம் குடுத்திருப்பீங்கல்ல?....அதையெல்லாம் எடுத்து அவங்க கண்ணுல படற மாதிரி டீப்பாய் மேலே பரப்பி வைங்க!”

“சரிங்க டாக்டர்”

“அடுத்தது..இந்த முரளியோட ஒரிஜினல் அம்மாவோட உங்க மனைவியைப் பேசிப் பழக விடுங்க!...அப்படிப் பேசிப் பழகும் போது முரளியை வளர்க்கத் தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் முரளியோட தாய் அவங்க கிட்ட சொல்லட்டும்!...அப்ப அவங்க மனசுல முரளி வேறு ஒருவருடைய மகன்..என்கிற தாக்கம் உண்டாகும்!...ஆக...முதல்ல இந்த மூன்று முறைகளை அப்ளை பண்ணிப் பார்ப்போம்...அனேகமா இந்த அப்ரோச்சிலேயே அவங்க சரியாயிடுவாங்க!...ஒருவேளை அப்படி சரியாகலைன்னா...வீ கோ ஃபார் அனதர் ட்ரீட்மெண்ட்” என்றார் டாக்டர்.

“அப்ப...நாங்க கிளம்பறோம் டாக்டர்” சிங்கமுத்துவும் முரளியும் எழுந்தனர்.


மறுநாள் காலை பதினோரு மணியிருக்கும்

வேலைகளை முடித்து விட்டு சோபாவில் வந்தமர்ந்த ஜெகதாம்பாள் கண்களில் டீப்பாயின் மீது கிடந்த அந்த செய்தித்தாளும் அதில் போடப்பட்டிருந்த அவள் மகன் கோகுலின் புகைப்படமும் பட புருவங்களை நெரித்துக் கொண்டு அதை எடுத்துப் பார்த்தாள்.

ஒரு கட்டத்திற்குள் கோகுலின் புகைப்படமும் அதன் கீழே “கே.பி.எஸ்.டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் திரு சிங்கமுத்து அவர்களின் மகன் திரு.எஸ்.கோகுல் அவர்கள் 24.04.2019 (ஞாயிறு) அன்று அகால மரணமடைந்தார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் இறுதிச் சடங்குகள் சுந்தராபுரம் பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறும். பின்னர் சுந்தராபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்படும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.” என்கிற செய்தியும் பிரசுரமாகியிருக்க

நிதானமாய் அதைப் படித்தாள் ஜெகதாம்பாள். பின்னர் இன்னொரு செய்தித்தாளை எடுத்துப் பார்த்தாள். அதிலும் அதே போன்ற அஞ்சலி செய்தி வெளியிடப்பட்டிருக்க எல்லா பேப்பர்களையும் மீண்டும் டீப்பாயின் மீது வைத்து விட்டு மேலே சுழலும் மின் விசிறியையே நிலைக் குத்திப் பார்த்தபடி அமர்ந்தாள். அவள் மூளைக்குள் சிந்தனை வண்டுகள் தாறுமாறாய்ப் பறக்கத் துவங்கின. சாவு தினத்தன்று மகனின் போட்டோவை வைத்துக் கொண்டு தான் அழுதது ஞாபகத்தில் வர “நான் கோகுலின் உயிரற்ற உடலைப் பார்த்தேனா?...இல்லையே?....ஏன் பார்க்கலை?” தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.

நீண்ட நேரம் மின் விசிறியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் பார்வை மெல்ல மெல்லக் கீழிறங்க அவள் பார்வையில் இன்னொன்றும் பட்டது.

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கோகுலின் பெரிய போட்டோ மாலையிடப்பட்டு அதன் கீழே ஒரு சின்ன விளக்கும் எரிந்து கொண்டிருந்தது.

“என் மகன் கோகுல் இறந்தே விட்டானா?....”

“அப்படியென்றால் இங்கு வந்திருப்பது கோகுல் இல்லையா?”

“ஆனால் கோகுலைப் போலவே இருக்கிறானே?”

“ஏன் எனக்கு இப்ப அழுகை வரலை?....ஒருவேளை நான் ஏற்கனவே நிறைய அழுது விட்டேனா?...அதனால் எனக்கு இப்ப அழுகை வரலையா?”

தானே கேள்வியைக் கேட்டு தானே பதிலையும் சொல்லிக் கொண்ட ஜெகதாம்பாளிற்கு யாரிடமாவது பேச வேண்டும் தன் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

“என்னங்க முதலாளியம்மா...சாப்பிட்டாச்சா?...மாத்திரையெல்லாம் போட்டுக்கிட்டாச்சா?” கேட்டபடியே உள்ளே வந்தாள் முரளியின் தாயார் ராக்கம்மா.

“ஆச்சும்மா....! ஆமாம் நீ சாப்பிட்டியா?” திருப்பிக் கேட்டாள் ஜெகதாம்பாள்.

“ம்ம்...இப்பத்தான் முரளியை டிரான்ஸ்போர்ட் ஆபீஸுக்கு அனுப்பிட்டு...நானும் சாப்பிட்டுட்டு வந்தேன்” என்ற ராக்கம்மா மெல்ல நடந்து ஜெகதாம்பாளின் காலருகே சென்று தரையில் அமர

“அய்யய்ய...ஏன் கீழே உட்கார்றே?...எந்திரிச்சு சோபாவுல உட்காரு” என்றாள் ஜெகதாம்பாள்.

“பரவாயில்லைங்கம்மா.....இங்க உட்கார்ந்தால்தான் உங்களுக்கு கால் அமுக்கி விட தோதாயிருக்கும்” என்றவாறே ஜெகதாம்பாளின் கால்களை இதமாய்ப் பிடித்து விட்டாள் ராக்கம்மா.

“ராக்கம்மா...என் மகன் கோகுல் இறந்திட்டான் தெரியுமா உனக்கு?” மாலையிடப்பட்டிருந்த போட்டோவைப் பார்த்தவாறே சொன்னாள் ஜெகதாம்பாள்.

“ம்...அய்யா சொன்னாரு”

“எனக்கு அவன் இறந்து போன மாதிரியே தெரியலை!...என் கூட இருக்கற மாதிரியே தோணுது”

“அது உங்க தாய்ப்பாசம்”

“முரளியைப் பார்த்ததும் என் மகன் கோகுல்தான் திரும்பி வந்திட்டான்!னு நெனைச்சேன்!...ஆனா....இந்தப் போட்டோவையும்..இதோ இந்தப் பேப்பர்ல போட்டிருக்கற கண்ணீர் அஞ்சலி செய்திகளையும் பார்த்த பிறகுதான் புரியுது!...அவன் உண்மையிலேயே இறந்து போயிட்டான்!னு” என்றாள் ஜெகதாம்பாள் பரிதாபமாய்.

“அம்மா...சில காயங்கள் மருந்தால் சரியாகும்!...ஆனா சில காயங்கள் மறந்தால்தான் சரியாகும்” என்றாள் ராக்கம்மா ஜெகதாம்பாளின் கால்களை அமுக்கி விட்டபடியே.

“ஆமாம்...இந்த முரளி...உன்னோட மகனா ராக்கம்மா?....” மெல்லக் கேட்டாள் ஜெகதாம்பாள்.

தலையை மேலும் கீழும் ஆட்டினாள் ராக்கம்மா.

“அவனைப் பார்த்தால் அசப்பில் என் மகன் கோகுல் மாதிர்யே இருந்ததினால்..நான் அவனை என் மகன்னே நினைச்சிட்டேன்!” என்றாள் ஜெகதாம்பாள்.

“அதிலென்ன தப்பு?...நீங்க பெற்றால்தான் உங்க மகனா?...யார் மேலெல்லாம் நமக்கு உண்மையான...சுயநலமில்லாத...பாசம் உண்டாகுதோ அவங்க எல்லோருமே நமது குழந்தைகள்தான்” பெருந்தன்மையோடு சொன்னாள் ராக்கம்மா.

அவளை நெகிழ்ச்சியோடு பார்த்தாள் ஜெகதாம்பாள்.

அன்று மாலை அவள் கணவர் சிங்கமுத்து வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் “ஏங்க...இந்த முரளி அச்சு அசப்புல இறந்து போன நம்ம மகன் கோகுல் மாதிரியே இருக்கான் பார்த்தீங்களா?” என்றாள் ஜெகதாம்பாள்.

ஆச்சரியமான சிங்கமுத்து ஹாலில் மாட்டியிருந்த கோகுலின் போட்டோவையும் அதற்கு போடப்பட்டிருந்த மாலையையும் கண்கள் கலங்கப் பார்த்தார்.

“அந்த முரளியோட அம்மாவே சொல்லிட்டாங்க!... “இவனும் உங்க குழந்தைதான்!...தாராளமா நீங்க அவன் மேல் அன்பு காட்டலாம்...பாசம் காட்டலாம்”ன்னு..” எனாள் ஜெகதாம்பாள் வெகு இயல்பாய்.

“அப்படின்னா...இவ மனசு மகன் இறந்து போனதை ஏற்றுக் கொண்டு விட்டதா?...அந்த முரளி இன்னொருத்தியின் மகன் என்பதையும் புரிந்து கொண்டு விட்டதா?” உள்ளுக்குள் சந்தோஷமான சிங்கமுத்து

“அம்மாடி...புத்திர சோகம் நம்ம ரெண்டு பேரையும் பாதிச்சிடக் கூடாது!ன்னுதான் அந்த ஆண்டவனா பார்த்து இந்த முரளியை நமக்கு அடையாளம் காட்டியிருக்கான்!...அதனால ஆண்டவன் காட்டிய வழியை நமக்கு ஆறுதலான வழியாய் ஏற்றுக் கொண்டு அந்த முரளியையே நம்ம மகனாய் வளர்ப்போம்!” என்றார்.

அந்த மனோதத்துவ மருத்துவர் சொன்ன வழிமுறைகளைப் பின் பற்றியதில் ஜெகதாம்பாள் நார்மலுக்கு வந்து விட்ட சந்தோஷத்தை டாக்டரிடம் போன் மூலம் பகிர்ந்து கொண்டார் சிங்கமுத்து.

“நான்தான் அப்போதே சொன்னேனே?... “இது சாதாரண பிரச்சினைதான்...இதை எளிதில் தீர்த்து விடலாம்!”னு...அதே போல் ஆகிவிட்டது பார்த்தீர்களா? டாக்டரும் மகிழ்ந்தார்.

கே.பி.எஸ்.லாரி டிரான்ஸ்போர்ட்.

“தங்கவேலு...உன்னையை முதலாளி கூப்பிடறாரு” என்று சக டிரைவர் சொல்ல லாரியைக் கழுவிக் கொண்டிருந்த தங்கவேலு அதை அப்படியே விட்டுவிட்டு முதலாளியின் அறைக்குச் சென்றார்.

“கூப்பிட்டீங்களா முதலாளி?”

“ஆமாம் தங்கவேலு!...இங்க சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டிலிருந்து...ஒரு மெஷினை ஏத்திட்டுப் போய்...சூடாமணி ரைஸ் மில்லில் டெலிவரி குடுக்கணும்!...நான் நம்ம கோவிந்தன் லாரியைத்தான் அலாட் பண்ணியிருந்தேன்!...இப்ப திடீர்னு கோவிந்தன் போன் பண்ணி “உடம்பு சரியில்லை...என்னால் இந்த லோடு அடிக்க முடியாது முதலாளி”ன்னு சொல்றான்!...அதான் என்ன பண்றது?ன்னு தெரியாம முழிச்சிட்டிருக்கேன்!” என்றார் டிரான்ஸ்போர்ட் முதலாளி சிங்கமுத்து.

“இதுல முழிக்கறதுக்கு என்ன முதலாளி இருக்கு?...கோவிந்தன் இல்லேன்னா என்ன?...நான் இருக்கேனல்ல?...நான் போயிட்டு வர்றேன்” என்றார் தங்கவேலு.

“ரொம்ப சந்தோஷம் தங்கவேலு” என்றார் சிங்கமுத்து.

அந்த திடீர் டிரிப் கடைசி நேரத்தில் ஏற்பாடானதால் வீட்டில் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அன்று மதியமே புறப்பட்டார் தங்கவேலு.

ஏற்கனவே வந்து போய் வந்த பாதைதான் என்றதால் எளிதாகவே சென்று குறித்த நேரத்திற்கு முன்னதாகவே மெஷினை டெலிவரி கொடுத்தார் தங்கவேலு.

மகிழ்ந்து போன ரைஸ் மில் முதலாளி வாடகைப் பணத்தைக் கொடுக்கும் போது ஒரு ஐநூறு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தார். “இது உனக்குப்பா...டிப்ஸ்”

“இல்லைங்க அய்யா...இதையும் நான் எங்க முதலாளியிடம்தான் தருவேன்!...டிப்ஸ் பணமும் எங்க முதலாளிக்கு உரியதே” என்றார் தங்கவேலு.

புருவங்களை உயர்த்திய ரைஸ் மில் முதலாளி “ம்ம்ம்... “கோயமுத்தூர்க்காரங்க...நேர்மையானவங்க”ன்னுகேள்விப்பட்டிருக்கேன்!... இன்னிக்கு நேரிலேயே பார்த்திட்டேன்!...சந்தோஷமா போயிட்டு வாப்பா!” என்று வழியனுப்பி வைத்தார்.

அவர் கொடுத்த பணத்தை வாங்கி பர்ஸினுள் வைத்து “பம்”மென்று உப்பிப் போன பர்ஸைத் தன் பாண்ட் பாக்கெட்டினுள் திணித்தார். “அப்ப நான் வர்றேன் அய்யா” சொல்லி விட்டுக் கிளம்பினான்.

அங்கிருந்து கிளம்பும் முன் அந்த மில்லை யோசனையுடன் பார்த்த தங்கவேலுவுக்கு அங்குதான் தான் முரளியை முதன்முதலாய் சந்தித்த ஞாபகம் வர புன்னகையை முகத்தில் சூடிக் கொண்டார்.

மில் கேட்டிற்கு வெளியே வந்து லாரியின் வேகத்தைக் கூட்டிய தங்கவேல் “பொருள் கொண்ட பேர்கள்...மனம் கொண்டதில்லை!...தரும் கைகள் தேடி...பொருள் வந்ததில்லை!...மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்...அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்” வாய் விட்டுப் பாடியபடியே டிரைவ் செய்தார்.

இரண்டு கிலோமீட்டர் கடந்து வந்ததும் சாலையோரம் ஒரு டீக்கடை தெரிய லாரியை இடதுபுறமாய்ச் செலுத்தி கடை முன் நிறுத்தினார்.

இவரைப் பார்த்ததும் டீக்கடைக்காரன் ஏதோ பல நாள் பழகியவன் போல் “வாங்கண்ணே...எப்படியிருக்கீங்க?” என்று சிரித்த முகத்துடன் கேட்க

“ஒரு ஸ்ட்ராங் டீ போடப்பா” என்று சொல்லி விட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து தினத்தந்தியை எடுத்தார்.

“மாணவியிடம் சில்மிஷம் செய்த கல்லூரிப் பேராசிரியர் கைது”

“த்தூ....என்ன கருமம்டா இது?... “மாதா...பிதா...குரு...தெய்வம்!”னு தெய்வத்துக்கு முன்னாடி குருவை வச்சிருக்காங்க!...ஆனா இந்த நாதாரிப் பசங்க...இவ்வளவு கேவலமாய் இருக்கானுகளே?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.

டீக்கடைக்காரன் டீயைக் கொண்டு வந்து முகத்துக்கருகில் நீட்ட “ஏன் அப்படியே வாயைத் திறந்து உள்ளேயே ஊத்திடேன்”என்றார் தங்கவேலு எரிச்சலுடன்.

“ஹி...ஹி...”என்றபடி தள்ளிக் கொண்டான்.

அவனை முறைத்தபடியே அதை வாங்கிப் பருகிய தங்கவேலு பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து டீக்கான தொகையைக் கொடுத்து விட்டு பர்ஸை மீண்டும் பாக்கெட்டினுள் திணிக்கும் போது அது முழுமையாய் உள்ளே செல்லாமல் பாதியிலேயே நின்று கொண்டது.

அதைக் கவனியாமல் வேக வேகமாய் வந்து டிரைவர் இருக்கைக்குக் குதித்தேறினார் தங்கவேலு. அந்தக் குதியலில் பாதி வெளியில் நீட்டிக் கொண்டிருந்த பர்ஸ் சத்தமில்லாமல் தரையில் விழுந்தது.

மீண்டும் லாரியை ஸ்டார்ட் செய்து சீரான வேகத்தில் பயணிக்கத் துவங்கினார் தங்கவேலு.

இரண்டு கிலோ மீட்டர்கள் தாண்டிய பின் ரியர் வியூ கண்ணாடியில் அந்த பைக் தெரிய “இந்த பைக்காரன் ரொம்ப நேரமா நம்ம லாரிக்குப் பின்னாலேயே வந்திட்டிருக்கானே?...” தன்னைத் தானே கேட்டுக் கொண்டுக் கொண்டார்.

சிறிது தூரம் சென்ற பின் லாரியின் வேகத்தைக் குறைத்து இடது புறமாய் ஒதுக்கி லாரியை நிறுத்தினார்.

இப்போது அந்த பைக்காரன் லாரிக்கு முன்னால் வந்து தன்னுடைய பைக்கை நிறுத்தினான்.

“யாரிந்த இளைஞன்?” யோசித்தவாறே டிரைவர் இருக்கையிலிருந்து இறங்கி, நேரே அந்த இளைஞனிடம் வந்தார். அதற்குள் அவனும் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அவரை நோக்கி வந்தான்.

“என்னப்பா?...என்ன விஷயம்?” சற்றுக் கடுமையான குரலிலேயே கேட்டார்.

“சார்...என் பேர் தனசேகர்!...நீங்க அந்த டீக்கடையிலிருந்து கிளம்பும் போது உங்க பாண்ட் பாக்கெட்டிலிருந்து இந்த பர்ஸ் கீழே விழுந்து விட்டது” என்று சொல்லி “பம்”மென்று உப்பியிருந்த அந்த பர்ஸை நீட்டினான்.

சட்டென்று பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்த தங்கவேலு “அட...ஆமாம்...என் பர்ஸ்தான்” என்றபடி அதை அவனிடமிருந்து வாங்கினார். வாங்கும் போதே “ரொம்ப நன்றி தம்பி” என்றார்.

“மொதல்ல உள்ளார அமௌண்ட் சரியா இருக்கா?ன்னு பாத்திடுங்க சார்” எனான் அந்த இளைஞன்.

“ஏம்பா...பர்ஸை எடுத்து...இவ்வளவு தூரம் துரத்திட்டு வந்து குடுக்கறே?...இந்த அளவுக்கு நல்ல மனசு படைச்ச நீயாப்பா இதிலிருந்து பணத்தை எடுத்திருக்கப் போறே?...அடப் போப்பா” என்றார் தங்கவேலு.

“அதுக்காக சொல்லலை சார்!...ஒருவேளை பர்ஸ் விழுந்த போது அதிலிருந்து கொஞ்சமாய்ப் பணமும் வெளியில் விழுந்திருக்கலாமல்லவா?”

“ம்ம்ம்...அதுக்கு வாய்ப்பில்லை இருந்தாலும்...நீ சொன்னதுக்காக பார்த்திடறேன்” என்று சொல்லி அவர் பர்ஸைத் திறந்து பார்த்து விட்டு, “சரியாய் இருக்கு தம்பி”என்று சொல்லி விட்டு “தம்பி...உன் பேர் என்ன சொன்னே?” அவன் தோளைத் தொட்டுக் கேட்டார் தங்கவேலு.

“தனசேகர்” என்றான் அவன்.

“இதே ஊரா தம்பி?”

“ஆமாம் சார்” என்றவனின் கைகளைப் பற்றி “நீ செஞ்ச உதவிக்கு ஏதாவது கைம்மாறு செய்யணும் போலிருக்கு!...பணம் கொடுத்தா அது...வேற மாதிரி ஆயிடும்!” என்றபடி யோசித்த தங்கவேலு “சொல்லுப்பா...என்ன வேணும் உனக்கு?” கேட்டார்.

“ஒண்ணும் வேண்டாம் சார்!...பார்த்து பத்திரமா ஊர் போய்ச் சேருங்க!...அது போதும்” என்றவனிடம் அவன் பெற்றோர்...குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு “அடுத்த முறை இந்த ஊருக்கு வரும் போது நிச்சயம் உன்னை வந்து பார்க்கிறேன் தம்பி” சொல்லி விட்டு மறுபடியும் ஒரு முறை நன்றி சொல்லி விட்டு லாரியில் ஏறினார்.

லாரி கிளம்பி அவனைத் தாண்டிச் செல்லும் போது “டாட்டா” காட்டிய தனசேகரின் கண்களில் அப்போதுதான் அது பட்டது.

(தொடரும்)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Dr.பொன் கௌசல்யா டியர்

தனசேகர் எதைப் பார்த்தான்?
 
Last edited:

Saroja

Well-Known Member
தங்கவேலு முரளி கூட தனசேகர சேர்த்து
வச்சுடுவாரு போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top