தூரம் போகாதே என் மழை மேகமே!! - 27

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



கிராமத்தில் தனியே தம்பி கந்தனுடன் இருந்த இந்த ஓரிரு வருடத்தில் ஆதிரை தெரிந்து கற்றுக் கொண்ட இவை இந்த இக்கட்டான சூழலில் உதவக் கூடுமென்று ஆதிரை அப்போது எண்ணவில்லை. ஏனோ அர்ஜூனிற்காக தேங்காயினை வெட்டும் போது ஆதிரையின் முகத்தில் ஒருவித புன்னகையும் மகிழ்ச்சியும் உண்டானது.


இளநீரினைக் கொண்டு சென்று படகில் வைத்தவள், அப்படியே ‘அர்ஜுன் எழுந்துவிட்டானா?’ என்று ஒருமுறை பார்க்க சென்றாள். அவன் குழந்தையை போல குளிரினில் உடல் குறுகி படுத்திருப்பதைப் பார்த்து ஆதிரைக்கு ஏனோ அவனில் ராஜாவின் நினைவு வந்தது. அருகிலிருந்த சணலாலான கோணிப்பையினை சிறிது உதறி அவன் மீது போர்த்திவிட்டாள்.


இவன் எழுவதற்குள் ஓடை எங்கென்று சென்று தேடி, குளித்துவிட்டு வந்துவிடலாம் என்று சட்டென முடிவெடுத்துக் கிளம்பினாள் ஆதிரை. வெட்டி வைத்திருந்த தென்னை ஓலை மட்டைகளைச் சின்ன சின்ன கீற்றாக்கி, அவற்றை இழுத்துக் கொண்டே ஓடை தண்ணீரின் சத்தம் கேட்ட திசையில் நடந்து சென்றாள். அதிக தூரம் நடக்கவிடாமல் அந்த ஆறு அவள் கண்ணிற்கு விரைவிலே அகப்பட்டது.


கடலில் ஆற்றின் சங்கமத்தைக் கடல் மேல் உள்ள நிலத்திலும் கண்டிராத ஆதிரைக்கு அங்கே ஆச்சரியம் காத்திரந்தது. ஆம். அங்கு மிகப் பெரிய ஆறு அவ்வளவு சத்தத்துடன் கடலில் கலந்து கொண்டிருந்தது. அறிவியலின்படி நீர் அழுத்தம் அதிகமுள்ள பகுதியிலிருந்து அது குறைவாக இருக்கும் இடத்திற்குப் பாய்ந்திருக்க வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்டு இருந்த இந்தத் தீவில் குறைந்த அழுத்தமுள்ள ஆற்று நீர் கடலில் கலந்தது. ஆனால் கடல் நீர் உள்ளே நுழையவில்லை. மோட்டாரினால் இயக்கிய குழாயில் பீச்சிடப்பட்ட நீர், தோட்டிகளில் நிரம்புவது போல் அந்த ஆற்று நீர் எந்த ஆர்ப்பாட்டமும் இன்று கடலில் கலந்தது. கடல் தாயும் அந்த ஆற்று நீரை அழகாய் ஏற்றுக் கொண்டாள்.


இக்காட்சியினை பார்க்கும் எப்பேற்பட்டவனின் கவலையும் மறந்து போகும் எனும் போது ஆதிரை மட்டும் விதிவிலக்கல்ல. அவளும் அக்காட்சிகளையே பார்த்துக் கொண்டிருக்கும் அசைவற்ற சிலையானாள். எவ்வளவு நேரம் அப்படி நின்றாள் என்று தெரியவில்லை , அவள் மீது ஒரு அணில் ஏறித் துள்ளி குதித்து விளையாடிய போதே ஆதிரை சுயநினைவுக்கு வந்தாள்.


‘என்ன இது? எதைப் பார்த்தாலும், இந்தக் கண்கள் அதைவிட்டு நகர அடம்பிடிக்கிறது. இந்தத் தீவே ஒரு மாயம் போல நம்மையும் நம் கவனத்தையும் மறக்கடிக்கச் செய்கிறதே!’ என்று ஆச்சரியப்பட்டவள். ‘இனி ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யவே கூடாது. ‘ என்று அவள் தோட்பட்டையின் மீது அமர்ந்து கொண்டு ஏதோ கனியினை கொறித்துக் கொண்டிருந்த அணிலினை நோக்கினாள். ‘இந்த அணில் என்னைச் சிலையென்றே நினைத்துவிட்டதோ!’ என்று தன்னுள் புன்னகித்துக் கொண்டாள்.


ஆதிரை அசைந்த பின்னும் அந்த அணில் அவளைக் கண்டு பயம் கொள்ளாமல் , குழந்தை போல அது சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோவை பழத்தினை அவள் உதட்டில் வைத்தது. ஆதிரைக்கு ஒரு நொடி வியர்த்தே விட்டது. ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது இது கனவில்லையே!. இந்த அணில் மனிதனைப் போல அறிவுள்ளதோ! எனக்கு உணவளிப்பது போல ஊட்டிவிட முயல்கிறதே!’ என்று எண்ணும் போதே அந்த அணில் தாவி குதித்துக் கொண்டு அவளை விட்டு ஓடிவிட்டது.


அதனை சில நொடிகள் பார்த்த ஆதிரை சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆற்று மணலில் அமர்ந்த ஆதிரை கையில் கொணர்ந்த பச்சை தென்னை மட்டைகளின் ஓலைகளை கிழித்து ஒன்றாக இணைத்து குடிசைகளுக்குச் செய்யும் பின்னல் போன்று பின்னலிட்டு பச்சை தென்னை ஓலைகளாலே தனக்கு ஆடை பின்னினாள். அவள் இருந்த கிராமத்தில் ஓலைப் பின்னுவது அக்கிராம மக்களின் குடிசைத் தொழில். சில சமயங்களில் ஆதிரை பிசவம் பார்த்த வனிதாவும் அவள் அம்மாவும் ஓலைகளைக் கொண்டு வந்து தன் வீட்டின் பின்புறத்தில் ஓலைகளை போட்டுக் கொண்டு ஆதிரையுடன் பேசிக் கொண்டே பின்னியும் பார்த்திருக்கிறாள். பார்த்த அனுபவத்தையும் தோன்றிய கற்பனையையும் இணைத்து ஆதிரையின் உயரத்திற்கு ஏற்ப தென்னை ஓலையில் பாவாடையும், மேல் சட்டையும் பின்னினாள். உப்பாக இருக்கும் மேலிருந்த ஆடையைத் துவைத்து போட்டு, காய வைக்கும் வரை மாற்று உடையாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணியே இந்தத் தென்னை மட்டைகளையும் இளநீருடன் வெட்டினாள்.


ஒருவாறாக மாற்று ஆடையினை பின்னிய பிறகு , குளிக்க தோதுவான இடமாக தேடிப்பிடித்தாள். சிறிது தூரத்தில் ஒரு சின்ன ஓடை ஒன்று பிரதான ஆற்றுடன் இணைந்தது. அதன் அருகில் சில பாறைகளும் இருந்தது. உடையைத் துவைத்து காயப் போடவும், கொஞ்சம் மறைப்பாகவும் அந்த இடம் தோதுவாக இருக்குமென்று எண்ணினாள். யாருமற்ற தீவே என்றபோதும் ஆதிரையின் பெண்மையின் நாணம் அவளைப் பலவாறு யோசிக்கச் செய்திருக்கிறது. ஆர்வமுடன் ஆதிரை குளிக்க அந்த ஓடையில் இறங்கினாள். நீச்சல் தெரியாததால் கொஞ்சம் எச்சரிக்கையுடனே இறங்கி ஆழம் குறைந்த நீரின் அழுத்தம் குறைவாக உள்ள இடத்திலே ஆதிரை குளிக்கச் சென்றாள்.


இதற்குள் விழித்துவிட்டிருந்த அர்ஜூன், ஆதிரையைக் காணாததும் விதிர்விதித்து போனான். ‘இந்தப் பெண் மீண்டும் எங்குப் போய் தொலைந்தது’ என்று எரிச்சலுற்றான். ஆதிரையின் எண்ணத்தினைப் பொய்ப்பிக்கும் விதமாக அர்ஜூன் phone – ஐ பார்க்கவே இல்லை. அருகில் ஆதிரை இல்லாததும் ஒரு நொடிகூட தாமதிக்காமல் படகிலிருந்து வெளியில் வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தவன், அங்கிருந்த தென்னை மரத்தின் அடியில் சிதறிக்கிடந்த புதிய தென்னை ஓலை மட்டைகளும் தேங்காயினை சீவிய சீவல்களும் புரியாத கதையினை அவனுக்குச் சொன்னன.


ஆதிரை இழுத்துச் சென்ற தென்னை மட்டைகள் அர்ஜூனிற்கு அவள் இந்தப்புறம் போயிருக்க வாய்ப்பிருப்பதாக வழி காட்டின. அதன் தடத்தைப் பற்றி நடந்தவன் அந்த ஆற்றின் கரையை அடைந்தான். ஆதிரையே எண்ணமாக வந்த அர்ஜுனுமே சில நிமிடங்கள் ஆதிரையையும் மறந்து அந்த ஆற்றின் கடல் சங்கமத்தை வியப்புடன் விழி விரியக் கண்டான். ஒரு நொடி கற்பனையில் , கடல் நீர் இந்த ஆற்றின் மூலமாகவே இந்தத் தீவினுள் நுழைந்தால் என்னாவதென்று யோசித்தவன் அச்சத்தால் ஒரு நொடி உறைந்து போனான். பின் சுதாரித்த அர்ஜூன் அங்கே சிதறி கிடந்த தென்னை ஓலை மட்டைகளின் துண்டுகள் ‘ஆதிரையா இவற்றையெல்லாம் செய்தது. இல்லை அவளுக்கு யாரேனும் உதவுகிறார்களோ!’ என்ற சந்தேகத்தை அர்ஜூனிற்கு உண்டாக்கியது.


கண்டிப்பாக ஆதிரை இந்த ஆற்றினை கடந்திருக்க வாய்ப்பில்லை. வேறேங்கு சென்றிருப்பாள் என்று சுற்றுமுற்று ஆராய்ந்து பார்த்தவனின் கண்ணில் ஆதிரையின் சுடிதார் மேலாடை ஒரு கல்லின் மீதிருப்பது கண்ணுக்கு தெரிந்தது. ‘மாற்று ஆடையுமில்லாமல் ஆதிரை அப்படி ஆடையைக் கழட்டி இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால்’ என்று கற்பனையில் பலவற்றையும் யோசித்துப் பயந்து பாய்ந்து ஓடிச் சென்று ஆதிரையைத் தேடிக் கொண்டு அந்தப் பாறை மற்றும் ஓடை பக்கமாக பார்த்தான். அங்கே கண்ட காட்சியில் ஸ்தம்பித்துப் போனான் அர்ஜூன்.


இடைவரை வளர்ந்திருந்த முடியினை விரித்துப் பிடித்து கற்றின் அசைவுக்கு ஏற்ப அசைத்துபிடித்து ஈரமாக இருந்த அவள் கூந்தலைக் காய வைத்திருந்தது ஒரு பெண். அது ஆதிரையாக இருக்கக் கூடுமென்று அர்ஜூன் நினைக்கவில்லை. ஏனென்றால் ஆதிரையின் முகம் அழகாக இருந்த போதும் அவள் ஆடை முறைகள் அவளை அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கவில்லை. மிகவும் தளர்வான ஆடை அவளைச் சற்று பருமனாகவும் வயதில் அதிகமுள்ளவளாகவும் காட்டியது.


இரண்டு வருடத்திற்குப் பிறகு முதல் முறையாக ஆதிரை அவள் உடலுக்கேற்ப ஆடை தெய்த்து அதுவும் இயற்கையின் இலையினால் ஆன ஆடை தறித்து அணிந்திருந்தாள். என்னதான் நேர்த்தியாக ஓலையில் பின்னியிருந்தாலும் வெளிக் காற்றோ வெளிச்சமோ படாத அவளது இடை சிறிதளவு அவளது அசைவில் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தது. பாதம் வரை இருந்த ஓலையினால் ஆன பாவட்டை அவளது இடை அழகையும் பாதத்தின் அழகையும் வெள்ளியின் பளபளப்பு போல் மின்னலிட செய்தது. அந்தப் பச்சை நிற ஆடையின் மீது விழுந்து விழுந்து எழுந்த அவளது கூந்தல் என் அழகைக் காணவில்லையா என்பது போல போட்டி போட்டுக் கொண்டு , அவன் கண்ணை கவர்ந்தது. சிலையாகவே எண்ணிய அந்தச் சிற்பம் அசைந்து நடனம் ஆடுவது போல ஆதிரையின் கூந்தல் காயவைக்கும் போது அசைந்த அவளது கைகள் அபினயம் பிடித்தது. அதனைப் பார்த்து மெய் மறந்து நின்ற அர்ஜூன் அவளை ஆதிரையென்று எண்ணாமல் ‘தேவலோகத்துச் சுந்தரியோ!’ என்று எண்ணி இமைக்க மறந்து வியந்து நின்றான்.


அப்போது யாரோ தன்னையே கூர்ந்து பார்ப்பது போல உணர்ந்த ஆதிரை, நிமிர்ந்து பார்க்க அர்ஜூன் நின்றிருப்பதைக் கண்டு வியந்தாள். ஆனால் அவன் பார்த்த பார்வையினால், அவளுள் ஏற்பட்ட சூடான இரத்த ஓட்டம் அவளின் காது வரை பரவி அவளையும் அறியாமல் நாணத்தில் ஆழ்த்தியது. என்னவென்று உணர்ந்திராத இந்த புதிய உணர்வு ஆதிரைக்குத் திகிலாகவும் அதே சமயம் ஆனந்தமாகவும் இருந்தது.


‘அவன் பார்த்த பார்வையை வேறொரு ஆண் பார்த்திருந்தால் அங்கு நடப்பதே வேறு. ஏன்!! இவனே நேற்று அவளை அப்படிப் பார்த்திருந்தாலும் , அதுவும் இப்போது போல் இருந்திராது!. ஆனால் இன்று …!! ஒரே நாளில் எல்லாம் மாறிவிடுமா என்ன!!’ என்று ஆச்சரியப்பட்டாள் ஆதிரை. இவ்வாறாக அவள் எண்ண ஓட்டம் ஓட. அவனது பார்வை தளராமலே அவளை நோக்கி அவன் முன்னேறி நடந்து வந்தான்.


அவனது அருகாமையை இப்போது ஆதிரையால் தகிக்க முடியுமோ என்று எண்ணியவள் அஞ்சி, அவன் அவன் அருகில் வருவதைத் தடுக்க முயலும் முயற்சியாக ஆதிரை, “அர்…. அர்ஜூன்… சா.. சார்… நீ… நீங்க……” என்று பேச முடியாமலும் பேச முயன்றும் முதல் முறையாகத் தவித்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top