தூரம் போகாதே என் மழை மேகமே!! - 21

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


ஆதிரையும், அர்ஜூனும் சாப்பிட்டப் பின் , படகினை நிறுத்திவிட்டு , torch light – ஐ எடுத்துக் கொண்டனர். அப்போது மீண்டும் ஒரு சப்தம் கேட்டது. அந்தச் சப்தத்தில் ‘ஒரு வேளை இந்தத் தீவு மீண்டும் கடலின் மேற்பரப்பை அடைந்துவிட்டதோ!‘ என்று எதிர்பார்ப்பில் படகினைவிட்டு ஆதிரையும் அர்ஜூனும் அவசரமாக வெளியில் வந்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் இருந்த தீவிற்கு மேலாக அர்ஜூனின் கப்பல் வந்து நின்றிருந்தது. மேலே இருந்த கேப்டன் மற்றும் உடன் இருந்தவர்கள் பேசுவது, நீரில் இருந்த ஆதிரைக்கும் அர்ஜூனுக்கு எங்கோ கேட்பது போல் கேட்டது.


“நான் அப்போதே நினைத்தேன். இங்கே எதுவும் தீவு இருப்பது போல இல்லையே. கடலில் இந்த GPS location எல்லாம் தெளிவாக இருக்காது. அந்தப் படகில் இருந்த எரிபொருளினைக் கொண்டு இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருக்க முடியும். ஆனால் தீவெல்லாம் இன்னும் பல மைல்களுக்கு அப்பால் இருக்கிறதே! எங்கே சென்று சிக்கிக் கொண்டார்களோ தெரியவில்லையே!. phone call -ம் போகவில்லை. கடற்கரையை விட்டு மிகவும் தூரமாக சென்றிருக்க வேண்டும். இல்லை அவர்களுக்கு ஏதேனும் ஆகியிருக்குமா!. phone – ல் இருக்கும் compass வைத்து , மேற்கு நோக்கி அர்ஜுனே படகு செலுத்திக் கொண்டு வந்துவிடக் கூடாதா! முடிந்த வரை தேடுவோம்! நடுக்கடலுக்கு அதிகம் பழக்கமற்ற அர்ஜூன் என்ன செய்ய கூடுமோ! எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது மூர்த்தி.” என்றார் அந்தக் கப்பலின் கேப்டன் சந்தன்.


“ஆமாம் சார். என்னையாவது வந்து அவர் அழைத்துச் சென்றிருக்கலாம். அர்ஜூன் சார் இப்படி தனியாக கடலில் சென்றிருக்க கூடாது. இதுவே 20 Km தூரம் இருக்கும் பழக்கமில்லாமல் எப்படி செலுத்திக் கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. ஏரி நீர் போலல்லாமல் கடல்நீர் அழுத்தம் அதிகமுடையது. எனக்கும் கொஞ்சம் கவலையாக இருக்கிறது சார்" என்றான் மூர்த்தி.


“ம்ம்.. எது எப்படியோ! முதலில் காதம்பரன் சார்க்கு phone செய்து தற்போதைய சூழலை சொல்லுவோம்!” என்றார் கேப்டன்.


“ம்ம் சரிங்க சார். இன்னும் கொஞ்சம் தூரம் சென்று பார்ப்போம். எந்தப் படகு கண்ணுக்குத் தெரிந்தாலும் , நெருங்கிச் சென்று ஆராய்ந்து பார்ப்போம் சார்" என்றான் மூர்த்தி.


“சரி. எதற்கும் சின்ன படகுகள் சிலவற்றை கீழே இறக்கி அருகில் ஏதேனும் நிலப் பகுதியோ, இல்லை படகோ தெரிகிறதா! என்று பாருங்க" என்று அங்கிருந்த அனைவரையும் நோக்கி உரக்கக் கூறினார் கேப்டன் சந்தன்.


அவர்களின் குரலில் வெளியில் வந்த அர்ஜூன் மற்றும் ஆதிரைக்கு, அவர்கள் பேசியது குரல் மெலிந்து கேட்டாலும் அவர்கள் கப்பலின் விளிம்பிலிருந்து பேசியதால் நங்கு கேட்டது.


ஆதிரையும் அர்ஜூனும் உரக்கக் கத்தினர். “ சந்தன். நாங்க இங்க இருக்கிறோம். கேட்கிறதா!” என்று கைகளையும் அசைத்துப் பார்த்தனர். ஆனால் அவர்கள் இருந்த தீவிற்கு நேராக மேலே அந்தக் கப்பல் இருந்ததாலோ என்னமோ ஆதிரை மற்றும் அர்ஜூனின் குரல் மேலே கேட்கவில்லை.


சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் அந்தக் கப்பல் அங்கிருந்து நகர்ந்தது. அர்ஜூனும் ஆதிரையும் செயல்திறன் அற்று சோர்ந்து போய் அந்தப் படகின் அறைக்குள் மீண்டும் சென்று அமர்ந்தனர். இருவரின் நம்பிக்கையும் மிகவும் குறைந்தது.


“சார். நாம் இங்கேயே இருப்பதுதானா சார்! வேறு வழியே இல்லையா! என் ராஜா என்ன செய்து கொண்டிருக்கிறானோ! தெரியவில்லையே!” என்று கவலையுற்று கூறினாள் ஆதிரை.


ஏற்கனவே ஏற்பட்டிருந்த முயற்சி தோல்வியால் , நடுக்கமுற்ற நம்பிக்கையாக இருந்த அர்ஜூன், “இப்போது நாம் உயிருடன் வீடு திரும்ப கூடுமா! என்றே தெரியவில்லை. நீ வேறு ராஜா! கூஜா என்று பொலும்புகிறாய். கொஞ்சம் அமைதியாய் இரு" என்று கடுமையாக அவளை நோக்கிக் கத்தினான். தலை வலிப்பது போல தன் கையினால் தலையை அழுந்தப் பிடித்தபடி அந்த அறையில் அமர்ந்தான்.


இதனைச் சற்றும் எதிர்பாராத ஆதிரை, விக்கித்து அவனையே பார்த்தாள். அவனுக்கு அவள் பயப்படுகிறவள் இல்லை. இருந்த போதும் இந்தத் தனிமையில் அவனது இந்தக் குரல் அவளைப் பயமுறுத்தியது. 'அவனும் பாவம் என்னை போலத்தானே தவித்துக் கொண்டிருப்பான். அவனிடம் எதிர்மறையாக பேசினால் கோபம் வரத்தானே செய்யும். என்னால் தான் இவனும் இங்கு வந்து மாட்டிக் கொண்டான். இது எல்லாவற்றிருக்கும் காரணம் அந்த, அந்தக் குரல் யாருடைய குரல். ‘ என்று அந்த குரலின் மீது கோபம் கொண்டாள்.


மெலிந்த குரலில் , “sorry சார்" என்றாள். அதற்கும் அவன் நிமிர்ந்து பார்க்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் , அதே அறையில் ஓரமாக இருந்த தார் போன்ற பாயின் மீது தன் கைகளை தலையணையாக்கி அவனுக்கு முதுகு காட்டி படகின் சுவரினை பார்த்த வண்ணம் படுத்திருந்தாள் ஆதிரை.


சில நிமிடங்களுக்குப் பின் தான் சப்தமாக ஆதிரையிடம் கத்திவிட்டோம் என்பதை உணர்ந்த அர்ஜூன் , அமைதியான சூழலில் ஆதிரை மீண்டும் எங்கேனும் தொலைந்து போகப் போகிறாள் என்று நிமிர்ந்து பார்த்தான். அவள் ஒடுங்கியபடி அந்த அறையின் ஓரத்தில் இருப்பதைப் பார்த்து பரிதாபம் கொண்டான். பாவம் தாய்மையின் வேகம். அவளைத் தவிக்க செய்திருக்கிறது. இதை உணராமல் நாமும் கத்திவிட்டோமே!’ என்று வருந்தி அவளை அழைத்தான்.


“ஆதிரை..” அர்ஜூன்.


“ம்ம்… “ என்று அவனை நோக்கித் திரும்பிய ஆதிரை “sorry சார். எல்லாம் என்னால்தான் நீங்களும் இப்படி வந்து மாட்டிக் கொண்டீர்கள்" என்று அவனைக் கண்டு கண்ணில் ஈரம் பணிக்க கூறினாள் .


“ஏ… பரவாயில்லை. இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது போல் தெரியவில்லை. நாம் இங்குத் தானாக வரவில்லையென்பது மட்டும் எனக்கு உறுதி. இங்கு வந்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கக் கூடும். அதுவும் தானாக தெரியும். அதனால் கவலை படாதே. அதனோடு உன் ராஜாவைப் பற்றி நீ கவலைப் பட வேண்டாம். நீ இப்படி கடலில் இறங்கித் தொலைந்த பின், அவன் அழுதது ஒருசில நிமிடங்களே! அதன்பின் வியக்க தக்கும்விதமாக அவன் துளியும் அழவே இல்லை. சொல்லப் போனால் அவன்தான் நீ கடலை நோக்கி நீ இருப்பதாகக் கைகாட்டினான். அதன் பிறகே உன்னை பற்றிய அந்த video clip கிடைத்தது. அதன் பின் அவன் ஒரு நொடி கூட கவலைப்படவில்லை. ஒருவேளை நாம் திரும்ப செல்லவில்லையென்றாலும், ராஜா எங்கள் வீட்டுப் பிள்ளையாக வளர்க்கபடுவான். நான் பாட்டியிடம் இது பற்றி ஏற்கனவே பேசிவிட்டேன். ராஜா என்ற பெயரைக் கேட்டதும் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.” என்று நீண்ட வாக்கியங்களாகக் கூறி முடித்தான்.


“ராஜா என்ற பெயரை கேட்டதுமா! ஏன் சார்" என்றாள் ஆதிரை.


“ராஜா என்பது என் தாத்தாவின் பெயர். அதனால் இருக்கலாம்" என்றான் அர்ஜூன்.


‘என்ன உங்க தாத்தாவின் பெயரா.’ என்று நினைத்த போதும் ஆதிரை அதுபற்றி எதுவும் பேசாமல், “நான் இருப்பது இறப்பது பற்றி எனக்கு கவலையில்லை சார். என் ராஜாவை எண்ணியே கவலை கொண்டேன். அதனோடு தேவையில்லாமல் நீங்களும் இப்படி வந்து என்னால் இங்கு " என்று மீண்டும் சொல்ல வந்தவளின் வாய் மீது கை வைத்து, “ போதும் ஆதிரை. நடந்தது நடந்துவிட்டது. இனி என்ன செய்லாமென்று யோசிக்கலாம் சரியா" என்று குழந்தைக்கு சொல்வது போல சொன்னான் அர்ஜூன். அவளும் பொம்மை போல அவனுக்குத் தலையை ஆட்டினாள்.


"சரி இப்போது தூங்கலாம். காலையில் வெளிச்சம் வந்ததும்,” என்று சில வினாடி நிறுத்தி , “ இந்தத் தீவுக்குள் வெளிச்சம் வருமென்று நினைக்கிறேன். வந்ததும் , என்ன செய்து இங்கிருந்து செல்ல முடியுமென்று பார்ப்போம்.” என்றான்.


“சரிங்க சார். thanks . என் ராஜாவைப் பற்றிய கவலைதான் அதிகமாக இருந்தது. அவனைப் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டதற்கும் , எதிர்கால நடவடிக்கைக்கும் ரொம்ப நன்றி சார்" என்றான்.


“நன்றியா. நன்றியெல்லாம் வேண்டாம் உயிருடன் இங்கிருந்து தப்பிக்க முடிந்தால் வந்து என் ஊர் மக்களுக்கு மருத்துவ சேவை செய் " என்று சிரித்தான் அர்ஜூன்.


அவனை சில வினாடி இமைக்க மறந்து பார்த்த ஆதிரை, ‘ இவன் சிரிப்பு இவ்வளவு அழகாக இருக்கிறதே. கடுவன் பூனையாக இருந்த போதும் , சிரிக்கும் போது என் ராஜாவைப் போல என்ன ஒரு வசிகரம். கொஞ்சச் சொல்லும் வசீகரம்' என்று நினைத்தாள்.


“என்ன மேடம் கண் விழித்துக் கொண்டே கனவா?” என்று அவள் கண் முன் சொடுக்கு போட்டான் அர்ஜூன்.


அவனை வெறித்து பார்த்தை நினைத்து வெட்கம் கொண்ட ஆதிரை “அ.. அது… வ.. வந்து சார். ஒன்னுமில்ல சார். கண்டிப்பாக மருத்துவம் பார்க்க வருகிறேன் சார்" என்றாள்.


“ம்ம்.. பார்ப்போம். பார்ப்போம்" என்றான் அர்ஜூன்.


"தவறாக எண்ணாதே ஆதிரை. உன் கையை என் கையோடு சேர்த்துக் கட்ட போகிறேன். இரவில் உன்னையறியாமல் மீண்டும் நீ தொலைந்து போனால் நான் மட்டும் தனியாக தப்பித்துச் செல்வதை பற்றி யோசிக்க முடியாது. அப்புறம் நான் இங்கு வந்து மாட்டிக் கொண்டதற்கு எந்த ஒரு பலனும் இல்லாமல் போய்விடும். அதனால் இந்தக் கைக் கட்டு அவசியம். ஒருவேளை நீ உன்னையறியாமல் கயிற்றினை அவிழ்த்தாலும் எனக்குத் தெரிந்துவிடும், இல்லை எழுந்து நடந்தாலும் என்னை இழுத்துக் கொண்டுதான் நடக்கக் கூடும். அதனால் நீ தொலைந்து போவாயென்ற கவலையின்றி எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்" என்றான்.


“என்ன சார் சொல்கிறீர்கள். நாம் ஒன்றாகவாக தூங்கப் போகிறோம். நீங்க உள்ள படுத்துக்கோங்க சார். நான் வேண்டுமென்றால் வெளியில் படுத்துக் கொள்கிறேன். நாம் இருவரும் ஒன்றாக ஒரே அறையில் இருப்பது… " என்று இழுத்தவள், பின் "நான் அப்படியெல்லாம் மீண்டும் தொலைந்துவிடமாட்டேன் சார்" என்றபோதும் , ஆதிரையின் கற்பனையில் மீண்டும் அந்தக் குரல் கேட்டால் என்ன செய்வது என்பதும் ஓடியது.


“அம்மா தாயே! உன்னுடைய கற்பனைகளையெல்லாம் புரம்தள்ளுகிறாயா! ஒன்றாக தூங்குவதெல்லாம் பற்றி நீ என்ன நினைக்கிறாயென்று எனக்குத் தெரியாது. நாம் வீடு சேரும்வரை நான் சொல்வதை அமைதியாகக் கேள். நான் என் எல்லை மீறமாட்டேன் என்று முன்பே உன்னிடம் சொல்லிவிட்டேன். உனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கும். அதனோடு வெளியில் ஏதேனும் மிருக நடமாட்டமும் இருக்கக் கூடும் அதனால் நான் இந்தக் கதவினை அடைக்கப் போகிறேன். நீ அமைதியாகத் இங்கே தூங்கு. மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டு என் பொறுமையை இழக்க செய்யாதே!" என்றுவிட்டு "உன் இடது கையை கொடு" என்று ஆதிரையின் இடக்கை மணிக்கட்டை அங்கிருந்த சணல் கயிற்றினால் தன் வலது கையின் மணிக்கட்டுடன் சேர்ந்தார் போல கட்டிக் கொண்டான்.


ஆதிரையும் , எதிர்த்துப் பேசும் சக்தியற்று அர்ஜூன் சொல்வதை ஏற்கச் செய்தாள். அர்ஜூனும் ஆதிரையின் அருகில் படுத்துக் கொண்டு அவனது ஒருகையை தலையணையாக்கி படகின் மேற் கூரையை பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top