உறக்கம் வராததால் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த சினேகா இப்போது நான்காவது புத்தகத்தில் இருக்க, உறக்கம் மட்டும் வருவேனா என்று வீம்பாக கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் அந்த முயற்சியை செய்வது வீண் என்று உணர்ந்தவள் மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து மெல்ல அடி மேல் அடி வைத்து அறையை அளக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே இன்றைக்கு இங்கும் அங்கும் என்று வீட்டினுள்ளேயே நடந்ததில் முனுமுனு என்று பாதங்களில் வலி இருக்க அதைப் பொருட்படுத்தாமல் அறையை வலம் வந்து கொண்டிருந்தாள்.
வீடு முழுவதிலும் மெல்லிய வெளிச்சம் பரவியிருக்க அவளது அறை பிரகாசமாக இருந்தது. விளக்கு எரிந்தால் தூக்கம் வராது என்ற அவளது புலம்பலை காதில் போட்டுக் கொள்ள்வில்லை விஜயா. ‘இருட்டிலே தனியா படுக்கக் கூடாது..லைட். போட்டுக்கணும் இல்லை நானோ வசந்தியோ உன்னோட படுக்கணும்.’ என்று கண்டிஷன் போட, அவளது தனிமைக்கு விளக்கைத் துணையாக்கிக் கொண்டாள் சினேகா.
மெல்ல நடை பயின்று கொண்டிருந்தவள் அலமாரியில் பதித்திருந்த கண்ணாடியில் அவளது உருவத்தைப் பார்த்ததும் அதனருகே சென்றாள். கடந்த இரண்டு மாதங்களில் அவளது எடை, இடை கூடிப் போயிருந்தது. கருப்பு நிறப் பருத்தி டீ ஷர்ட், சாம்பல் நிறப் பருத்தி பைஜாமாவில் அவளது தோற்றம் அவளுக்கே விசித்திரமாக இருக்க, இந்த நிலையில் அவளைப் பார்த்தால் அவளுடைய கணவனுக்கு எப்படி இருக்குமென்ற எண்ணம் அவளை நிதமும் கவலைக்குள்ளாக்கியது. அவர்களின் வாழ்க்கையை மாற்ற வரப் போகும் புதிய நபரால் அவளது உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்க, பல மாதங்ககளாக கணவனிடமிருந்து எந்தத் தகவலும் வராதது அவளது மனத்தை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தது.
இன்று காலையில் தான் கணவன் அவளருகில் இல்லாததைப் பெரிதாக உணர்ந்தாள். கணவன் செய்ய வேண்டிய அனைத்தையும் விஜயா அத்தை தான் செய்தார். ‘நேர்லே வரமுடியலைன்னா பரவாயில்லை..வீடியோலே வரச் சொல்லுங்கோ.’ என்று பண்டிட் ஜி சொல்ல, ‘அவன் செய்ய வேண்டியதை நான் செய்யறேன்.’ என்று முன் வந்தார் விஜயா. அவளது துணை அருகியில்லாததால் இந்த நேரத்தில் அனுபவித்த சந்தோஷங்கள், துக்கங்கள் இரண்டையும் முழுமையாக அவளால் அனுபவிக்க முடியவில்லை. இன்று காலையில் நடந்த விழாவின் கதாநாயகி அவளதானென்றாலும் ஒரு பார்வையாளராக தான் அதைக் கடந்திருந்தாள். அதனால் தான் எந்த விதமான உணர்ச்சி உடைப்புகள் இல்லாமல் விழா நல்லபடியாக நடந்து முடிந்தது.
இடதுக் கையால் வயிற்றை மறைத்த கருப்பு டீ ஷர்ட்டை உயர்த்தினாள் சினேகா. அஷ்டத் திக்குகளிலும் சுலபமாக செல்லக் கூடிய இலாஸ்டிக் அல்லாத லைக்ரா துணி அவளது வயிற்றை இதமாக அரவணைத்திருந்தது. அதைக் கொஞ்சம் போல் கீழே இறக்கி அவளது வலதுக் கரத்தை வயிற்றில் வைத்தவுடன்,’எனக்கும் தூக்கம் வரலை’ என்று அம்மாவிற்கு குட்டி ஆதரவு காட்டியது. ’உனக்கு ஓய்வு நேரம் கிடையாதா? காலை, மதியம், இராத்திரின்னு நீ எப்போதும் பிஸி..எப்போ தான் நான் ரெஸ்ட் எடுக்கறது?’ என்று அவள் பொய் கோவம் கொள்ள, டக்கென்று அடிவயிற்றில் ஓர் உதை விழ,’சரி..சரி..உன்னை ஒண்ணும் சொல்லை..ஒண்ணும் சொல்லலை..மன்னிச்சிடு.’ என்று மன்னிப்பு கேட்டு டீ ஷர்ட்டை இறக்கி விட்டாள் சினேகா.
சில நிமிடங்களில் கண்கள் லேசாக சொருக, நடந்தது போதும் என்று கட்டிலுக்குச் சென்றாள். இப்பொழுதெல்லாம் ஒருபுறமாக தான் படுத்துறங்க முடிகிறது. இடதுப் புறமாக ஒருக்களித்துப் படுப்பது நல்லது என்று மருத்துவர் சொல்லியிருக்க அந்தப் புறம் தான் படுக்கிறாள். சில நிமிடங்கள் கழித்து அது அசௌகர்யத்தை ஏற்படுத்துவதால் மெதுவாக எழுந்து, சாயந்து அமர்ந்து உறக்கத்தை தொடர்வள். அதன் பின் மீண்டும் வலதுப் புறமாக படுத்துறங்குவாள். அமர்ந்திருந்தாலும் சரி படுத்திருந்தாலும் சரி உறக்கம் என்பது சில மணி நேரங்கள் கூட இருப்பதில்லை.
’எங்கே போயிட்டாங்க உங்கப்பா? ஒரு ஃபோன்கால் கூட இல்லை..’நல்லா இருக்கேன்னு’ தகவல் அனுப்பலாமில்லே..நீ வரப் போறேங்கற விஷயம் அவருக்கு தெரியாது..அவர் எப்போ வரப் போறார்ன்னு எனக்குத் தெரியலை..ஒருவேளை நீ வந்த பிறகு தான் அவர் வரப் போறாரா? நீ யாருன்னு கேட்பாரோ?’ என்று சிசுவோடு பேசியபடி கட்டிலில் சாய்ந்தமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொள்ள, உறக்கம் அவளைத் தழுவியது. ஏதோ ஓர் உந்துதலில் கண்களைத் திறக்க, கண்ணெதிரே கணவன் நின்றிருந்தான். முகத்தை மறைத்த தலைமுடி, தாடி, மெலிந்த தேகம் என்று சட்டென்று அடையாளம் தெரியாத அளவிற்கு அவனது தோற்றம் மாறியிருக்க, அவனை அடையாளம் கண்டு கொண்ட மனைவியின் மனத்தில் லேசான அதிர்ச்சி அதன் பின் ஓர் ஆசுவாசம். கணவனுக்கு கடவுள் கருணை காட்டவில்லை. பல விதமான பயிற்சிகளைச் செய்து இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலைகளில் அவனது மனம், உடல் இரண்டையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க கற்றுக் கொண்டிருந்தவனின் வித்தை எல்லாம் மனைவியின் தோற்றதைக் கண்டவுடன் மாயமாக மறைந்து போக, அதிர்ச்சியில் ‘அம்மா’ என்று உரக்கக் கத்தியிருந்தான் அப்பாவாகப் போகிறவன்.