முரண்பாடே காதலாய் 8

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
காதல் ..!!!
ஒரு சிலருக்கு மகிழ்விக்கும் அமுதமாய் ...
ஒரு சிலருக்கு கொடும்விஷமாய் ...
ஒரு சிலருக்கு அழகாய் ...
ஒரு சிலருக்கு ஆழமாய் ..
காதலது பலவகை ஆனாலும் காதலன்றி ஓர் உயிரும் வாழ்வதில்லை இவ்வுலகில்...!!


அத்தியாயம் 8:

சந்திரமதியின் காடு :

அனகா சந்திரிகாவையும் , சந்திராதித்யனையும் மாற்றி மாற்றி தன் கேள்விகளால் திணறிடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் மீண்டும் மீண்டும் அவர்களின் இருப்பிடம் மற்றும் உறவுகளை பற்றி கேட்க ,

"தாம் இக்காட்டில் பலதலைமுறையாய் தங்கள் இனத்தோடு மனிதர்களிடம் இருந்து தள்ளி வாழ்வதாக" சந்திராதித்யன் பாதி உண்மையே சொல்லினான்....அதை அனகாவும் புரிந்துகொண்டாள்.

இன்னும் தங்களின் பழமை மாறாமல் மற்றவர்களிடமிருந்து தங்களை மொத்தமாய் ஒதுக்கி தனியாக வாழும் எத்தனையோ மக்களை பற்றி பல செய்திகளை அவள் அறிந்திருந்தாளே. இன்றும் ஆப்பிரிக்காவின் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுடைய ஊரை தவிர வெளியில் ஓர் உலகம் இருப்பதை அறியாமல் அறிந்துகொள்ள விருப்பம் இல்லாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நினைவு தோன்றியதில் இவர்களும் ஒரு விதத்தில் அவ்வாறு தான் போல என்று எண்ணிக்கொண்டாள் அவள்.

அதன் பின் மூவரும் ஏதேதோ பேசியபடி நேரத்தைக் கடத்தி , அங்கு இருந்த பழங்களை பறித்து தங்களது பசியாறினர்.

மூவரும் பேசினார்கள் என்பதைவிட முக்கால்வாசி நேரம் அனகா பேச அதை சந்திரிகாவும் , சந்திராதித்யனும் வியப்பாய் பார்த்திருந்தனர் .

நேரம் சென்று மாலை ஆக சந்திரிகாவை தங்களிருப்பிடத்தில் விட்டு வருவதற்காக கிளம்பினான் சந்திராதித்யன் .

அதைப் பார்த்த அனகா ," ஒருநிமிஷம் ....நானும் உங்ககூட அங்க வரட்டுமா ???"என கண்களில் ஆசை மின்ன ஆவலாய் கேட்க,

அவளின் ஆசை முகத்தைக் கண்ட சந்திராதித்யனுக்கோ மனம் உருகியது.

"உன் ஒவ்வொரு ஆசையையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதற்க்கே நான் உள்ளேன் பெண்ணே !" என அவன் மனம் இயல்பாய் பதிலளித்ததில் உள்ளுக்குள் அதிர்ந்தான்.

அவனுக்கு புரிந்தது தன் மனம் தங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அவளிடம் சிக்கிக் கொண்டது என்பது. அது அவனுக்கு கோபத்தையோ வலியையோ ஏற்படுத்துவதற்கு பதில் தேகத்தை சுகமாய் சிலிர்க்க வைத்தது.

அவளின் கேள்விக்கு பதிலளிக்காமல் சந்திராதித்யன் அமைதியாக இருந்ததில் , தன்னை அழைத்துச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்து அனகாவின் முகம் சுருங்கியது.

அதை பார்த்து வருத்தப்பட்ட சந்திரிகா ஒரு வேகத்தில், "அண்ணா...!" என்று அழைத்து விட்டவள்,

அடுத்து என்ன சொல்வதென்று அறியாமல் தடுமாறினாள் ....தங்கள் இருப்பிடத்திற்கு அனகாவை அழைத்து செல்ல முடியாது என்பதை அவளும்தான் அறிந்திருந்தாள் அல்லவா.

அவளின் அழைப்பில் கலைந்த சந்திராதித்யன் , தனது மௌனத்தில் முகம் சுருங்கி நின்றிருந்தவளிற்க்கு பதில் எதுவும் சொல்லாமலே , " கிளம்பலாம் சந்திரிக்கா" என்று தங்கையிடம் சொன்னவன் திரும்பிவிட்டான்.

அவனைத் தொடர்ந்த சந்திரிகா ஏதும் செய்யமுடியா பாவத்தை முகத்தில் தாங்கி அனகாவை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அவனுடன் சென்றாள்.

அவன் பதில் சொல்லாதது மட்டுமின்றி விடைபெறும் பொழுதும் கூட தன்னைத் திரும்பிப் பார்க்காததில் மேலும் அனகாவின் மனம் கலங்கியது . அது ஏன் என்பதை யோசிக்க விரும்பாதவளாய் திரும்பிச் செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனகா.

அவளின் பார்வையைச் சந்திராதித்யன் உணர்ந்தே இருந்தான். தன் மனம் செல்லும் பாதையை அறிந்து இருந்தவன், அவள் பார்ப்பதை தவிர்த்து... அவளைப் பார்க்க அடம்பிடிக்கும் மனதின் தவிப்பை ஒதுக்கி திரும்பாமலே நடந்துகொண்டிருந்தான் .

அனகாவிற்கு தான் ஏன் அவன் பார்வைக்கு ஏங்குகிறோம் என்பது போலெல்லாம் தோன்றவில்லை . ஏதோ ஒன்று உந்த அவனின் பார்வையை பெற்றே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் மனம் ஆர்ப்பரிக்க செல்லும் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

இதற்குள் மலையின் அடிவாரத்திற்கு சென்றிருந்த இருவரும் இவளின் பார்வையில் இருந்து மறைய சில நொடிகளே இருக்க , அவனின் பார்வை கிடைக்காமலே போய்விடுமோ என்ற ஏக்கத்தில் தானாய் ஒரு கேவல் வெளிப்பட்டது அனகாவிடம் .

அத்தனை நேரம் திரும்பாமலே மனதால் அவளை உணர்ந்தபடி நடந்து கொண்டிருந்த சந்திராதித்யன் இந்நொடி அவளின் ஏக்கத்தை போக்கவேண்டுமென தோன்ற தன் கட்டுப்பாட்டை மீறி அவனின் தலை அவளை திரும்பிப் பார்த்தது .

அவன் பார்க்கவில்லையே என கேவ தொடங்கியவள் அவன் திரும்பி பார்த்ததில் சட்டென்று அழுகை நிற்க ஆயினும் இடது கண்ணின் ஓரம் ஓர் நீர் துளி வழிந்து கன்னம் தொட... இதழில் சிறு சிரிப்புடன் அவள் நின்று கொண்டிருந்த தோற்றம் சந்திராதித்யன் மனதில் ஆழப் பதிந்தது.

சந்திரிகாவும் ,சந்திராதித்யனும் தங்களின் சந்திரமதியை நெருங்கியவேளை ,

சந்திரிகா, "அண்ணா...! மனிதர்கள் நல்லவர்களாய் தானே அண்ணா இருக்கிறார்கள்...பின்பு ஏன் நம் குலத்தவர் அவர்களை எதிரியாய் பாவிக்கிறார்கள்"- என்று அனகாவை கண்ட நொடிமுதல் அவளுக்கு தோன்றிய சந்தேகத்தை தற்பொழுது தானும் தன் அண்ணனும் மட்டும் இருக்கும் பொழுதினில் கேட்டுவிட்டாள்.

" ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதை போல் மனிதர்களை எண்ணாதே சந்திரிகா....அனகாவை வைத்து மனிதர்களை எடை போடாதே "

சந்திராதித்யன் தன் ஆசையை கண்டுகொண்டானோ என்னும் பயத்தில், " இல்லை அண்ணா...!! நான் என் மனதில் தோன்றிய சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவே தங்களை வினவினேன் மற்றபடி எனக்கு எதற்கு மனிதர்கள் பற்றிய எண்ணம் " என தன் தடுமாற்றத்தை மறைத்தாள் .

அதற்க்குள் சந்திரமதி வந்திருக்க "தப்பித்தோம் " என்றெண்ணி வேகமாய் உள்நுழைந்தாள் .

அவளை தொடர்ந்த சந்திராதித்யனோ யாருமில்லா தங்களின் அறைக்கு வந்தபின் அவளை தடுத்தவன்," சந்திரிகா ...! நீ மனித வாழ்வின் மேல் கொண்ட பற்றை நான் அறிவேன்.அவர்களை போல் நீயும் வாழ ஆசைப்படுகிறாய் அல்லவா ...ஆனால் அது உனக்கு நல்லதல்ல சந்திரிகா "என்று பொறுமையுடன் ஓர் தமையனாய் தன் தங்கைக்கு அவளிற்க்கான நல்லதை எடுத்து சொன்னான்.

அவனின்￰ பொறுமையில் அவனிடம் தன் மனஆசையை சொல்லலாம் என தைரியம் கொண்டவள் தயங்கியபடியே என்றாலும் திடமாய் , " அண்ணா ...! காட்டின் கோடியில் பெரிதாய் ஓர் மரம் இருக்கிறது அல்லவா...அம்மரத்தில் அமர்ந்து தூரத்தில் மனிதர்களைக் அடிக்கடி கண்டு இருக்கிறேன் அண்ணா. அவர்களின் வாழ்வு மிகவும் அழகானது . நினைத்த பொழுதில் நினைத்த இடம் செல்கிறார்கள்... எப்பொழுதும் சிரிப்புடன் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கிறார்கள் அண்ணா . அவர்களின் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது . நீயே சொல் அண்ணா நாம் எவ்வாறு இருக்கிறோம் ,நாமும் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கிறோம் தான் ஆனால் அவர்களிடம் இருக்கும் சுதந்திரம் நம்மிடம் இல்லை தானே அண்ணா ??? அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது போல் நமக்கு இல்லையே...நமக்கு உருமாரும் சக்தி உள்ளபோது அதை பயன்படுத்தி சிறிது காலம் மனிதர்களாய் அவர்களின் வாழ்வை வாழலாமே அண்ணா ?" என தனது ஆசையை ஏக்கமாய் தன் அண்ணனிடம் வெளிப்பூச்சு ஏதுமின்றி தைரியமாய் வெளிப்படுத்தினாள் சந்திரிகா.

"அன்பாகவா???சரிதான்...மனிதர்களிடம் தங்களுடனிருப்பவர்கள் மேல் அன்பென்பது அளப்பரிய அளவில் உள்ளது தான் . ஆனால் தான் என்னும் சுயநலம் அதைவிட அளவிட முடியாத அளவிற்கு உள்ளது .தங்களின் தேவைக்காக மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவது மட்டுமல்லாமல் சதையையும் பிய்த்து உண்ணும் பிணந்தின்னிக் கழுகுகள் அவர்கள்" என்றவனின் தாடைகள் இறுகியது கோபத்தில்.

அமைதியாய் பேசிக் கொண்டிருந்தவனின் திடீர் கோபத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் சந்திரிகா தடுமாற , அதை கண்டுகொள்ளாத சந்திராதித்யனோ மேலும் கொதித்துக்கொண்டிருந்தான்.

"மனிதர்களை சாதாரணமாக எண்ணிவிடாதே சந்திரிகா ....அவர்கள் பாவம் புண்ணியம் பற்றி கதைகள் பல சொல்லிக் கொண்டு திரிந்தாலும், பாவங்களைச் சிறுதுளி அச்சமும் இல்லாமல் செய்து முடிப்பவர்கள். தாங்கள் செய்வது தவறு என்பதை அறிந்தும் அதை பெருமையாக எண்ணும் ஈனப்பிறவிகள் " என மேலும் பற்களை கடித்தபடி ஆவேசமாய் பேசியவனின் தலையை தடவியது ஓர் மென்மையான கரம்.

"மனிதர்களைப் பற்றி இத்தனை தெளிவாய் அறிந்திருந்தும் நீ மனிதர்களுடனான உனது தொடர்பை இன்னும் தொடர்வது ஏன் மகனே ??" என கேட்டபடியே அவர்களின் அருகில் அமர்ந்த சிந்திரை தனது மகனின் ஆவேசம் குறைக்க அவன் தலை கோதினாள்.

"நீங்கள் இருவரும் மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா...நாகராஜா ராணிக்கு பிறந்த பிள்ளைகளே தங்கள் குலத்திற்கு எதிரானவர்கள் மேல் பற்றுகொண்டுள்ளீர்கள்." என்று பெருமூச்செய்தியவர் தொடர்ந்து ,

"எதையும் செய்யாதே என்றால் அதை அவசரமாய் எவர் தடுத்தாலும் அதை மீறி செய்ய முற்படுவது ஆண்களின் குணம் என்றால்... மனதின் ஆசையை சிறிதும் வெளிப்படுத்தாமல் அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பது பெண்களின் குணமாம். இது நம் முன்னோர்கள் சொன்னது. இது தங்கள் இருவருக்கும் மிகப்பொருத்தமானது தான். ஒருவழியாய் நீ அடக்கி வைத்திருந்த உன் மனதின் ஆசையை வேளிப்படுத்தி விட்டாயா" என்றபடி சிரித்தார் .

அவரின் சிரிப்பில் , " ஆம் அம்மா ...! தாங்கள் சொல்வது மிகச்சரியே... பெண்கள் அவர்களின் எண்ணங்கள் ஈடேறாமல் தங்களின் உள்ளக்கிடக்கை சொல்வதில்லை "என வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் சந்திரிகா , அவள் நினைத்தார் போலவே மனித குலத்தை சேர்ந்தவருடன் ஒருநாளை கழித்துவிட்டாளே.

"எதற்காக இவ்வளவு சந்தோஷம் சந்திரிகா ?? நீ மனிதர்களில் எவரையேனும் சந்தித்தாயா என்ன??" என்று மகளின் வெற்றிக்களிப்பில் சந்தேகம் கொண்டார் சிந்திரை.

அத்தனை நேரம் இருவரையும் பார்த்திருந்த சந்திராதித்யன், அவரின் சந்தேகத்தில் சந்திரிகா ஏதும் உளறும் முன் தடுக்க பார்க்க￰,

அதற்குள்ளாக தானாகவே சுதாரித்த சந்திரிகா, " பெண்ணிடம் குற்றம் கண்டுப்பிடிப்பதே அம்மாகளுக்கு முதல் வேலையாக போய்விட்டது. தங்களின் புத்திரனையும் சற்று பார்க்கலாம் அல்லவா .எப்பொழுதும் அம்மாக்களுக்கு கொஞ்ச மட்டும் மகன் திட்டுவதற்கு மகள் " என வம்பாய் பேச்சை மாற்றினாள்.

அதில் தன் சந்தேகம் களைந்த சிந்திரை, " போதுமடி அம்மா உனது வாய்ப்பேச்சு... என் புத்திரன் பற்றி அனைத்தும் நான் அறிவேன் ...அவனின் மனிதர்கள் மேலான பாசம் தூய்மையானது ".என்றவர் தொடர்ந்து ,

"நீ அறியமாட்டாய் இப்பொழுது நீ அடிக்கடி செல்லும் மரம்தான் சிறுவயதில் உன் அண்ணனின் இருப்பிடமாகும்.

அன்றொருநாள் உனது தந்தை உன் அண்ணனுக்கு உருமாறும் கலையை கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார்.அதை கற்றுக்கொண்டவனோ நொடிப்பொழுதினில் அவரின் கண்களில் மண்ணை தூவுவது போல் வழக்கம்போல் காட்டை விட்டு வெளிவந்துவிட்டான் .அந்நேரம் எவ்வாறு வந்தாள் எனத்தெரியாமலே ஓர் சிறுமி பாதையில் நின்றுகொண்டிருக்க , அந்நேரம் பார்த்து அதிசயமாய் ஓர் வாகனம் அதிவேகத்தில் அச்சிறுமியின் மேல் மோதுவது போல் வந்தது . அப்பொழுது உன் அண்ணன் தான் அச்சிறுமியை காப்பாற்றினான் .

அப்பொழுது அச்சிறுமியின் பெற்றோரும் அங்குவந்து இவனை கண்டவர்கள் இவனிடம் யாரென்று வினவியுள்ளார்கள் .அப்பொழுது மனிதர்களின் மொழி இவனுக்கு பரிச்சயம் இல்லை அல்லவா இவன் பதில்கூறாமல் முழித்ததில் சிறுவன் வழிதெரியாமல் வந்துவிட்டான் என எண்ணி அவனை தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்"

இவ்வளவு நேரம் சுவாரஸ்யமாய் கதை கேட்டுக்கொண்டிருந்த சந்திரிகா தற்பொழுது இடையிட்டு , " என்ன ...??அண்ணனை அழைத்து சென்றுவிட்டார்களா . எனில் அண்ணன் எப்பயமும் இன்றி மனிதர்களுடன் சென்றானா ?" என வியப்பாய் கேட்டாள்.

அவளின் கேள்வியில் சிரித்த சந்திராதித்யன் , "எனக்கு எப்பயமும் தோன்றவில்லை சந்திரிகா!! அவளை பார்ப்பதற்கு எனக்கு பிடித்திருந்தது . அவளும் என் விரல்களை இறுக்கமாய் பிடித்தவள் அன்று இரவு தூங்கும் வரையிலும் விடவில்லை . அதன் பின் நாங்கள் நீண்ட தூரம் செல்லாததால் அன்றிரவே தந்தை என்னை கண்டுபிடித்து எவரும் அறியும் முன் அழைத்துவந்துவிட்டார் . எனது சிறு வயது நியாபகங்களில் அது அழிந்துவிடும் என தந்தையவர்கள் எண்ணியிருப்பார் .ஆனால் சிறுவயதில் மனதில் பதிவது என்றும் அழிவதில்லை . அதிலும் அவளின் நினைவாய் இந்த சங்கிலி என் கழுத்தினிலே எப்பொழுதும் இருக்கும் தருவாயில் "

கண்கள் மின்ன தன் சிறுவயது அனுபவத்தை சொல்லியவனின் கண்கள் தன் கழுத்திலிருந்த சங்கிலியை கண்டு கலங்கியது .

அதில் பதறிய சந்திரிகா , "என்னாகிற்று அண்ணா ??" எனக் கேட்டாள்.

அந்தத் தடிமனான சங்கிலியில் கோர்த்து இருந்த டாலரில் ஒரு சிறுவனும் சிறுமியும் கைகளை கோர்த்தவாறு இருந்தனர்.

அவளின் பேச்சில் இடையிட்ட சந்திரை , " இதைப் பார்த்தாய் அல்லவா சந்திரிகா ... அன்று உன் அண்ணண் மீண்டும் வந்தபொழுது இது அவனின் கழுத்தில் இருந்தது. அப்பொழுது ஒரு சிறுவனின் உருவம் மட்டுமே இதில் இருந்தது ."

இத்தனை நேரம் தன் தாய் சொல்லியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சந்திராதித்யன் தற்பொழுது தலையை நிமிர்த்தி தாயின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

அவனின் பார்வை உணர்ந்தவர் முகத்தினில் எதுவும் வெளிப்படுத்தாமல் ," மனிதர்களின் மேல் உனக்கு பற்று ஏற்பட்டிருந்தாலும் இவ்வாறு அடிக்கடி இங்கிருந்து மறைந்து செல்வது கடந்த ஓராண்டாக தான் என்பதை நான் அறிவேன் மகனே . அதுவும் அது அவர்களின் மேலான பற்றால் அல்ல ஏதோ ஓர் கோபம் உன் உள்மனதில் இருக்கிறது என்பதையும் அறிவேனடா .என் மகனைப் பற்றி என் உன்மனம் கூறும் கணிப்பு உண்மை எனில் கடந்த ஆண்டு நீ அச்சிறுமியை காணச் சென்றபோது ஏதோ பெரிதாய் மனிதர்கள் பற்றிய தாக்கம் உன் மனதில் ஏற்பட்டிருக்க வேண்டும் . அதுவே உனது தொடர் பயணத்திற்கு காரணம் ".

தாய் என்னும் உன்னத உறவின் அருமைகளில் இன்னும் என்னென்ன உள்ளனவோ . மகவுகளை தாய் அன்றி எவர் முழுதாய் அறிவர். எங்கிருந்தாலும் தாயின் மனது தனது மகவுகளை பற்றிதானே எண்ணம்கொள்ளும் . சிந்திரையும் மிகத்தெளிவாக தன் மக்கள் இருவரை பற்றியும் அறிந்திருந்தார் .

அவர் பேசப்பேச சந்திராதியனின் மனமும் கடந்த ஆண்டு தான் சென்ற இடத்தையும் ,அதன் சூழலையும் நினைவில் கொண்டு வந்ததில், அவன் முகம் பல உணர்ச்சிகளை கொட்டிக்கவிழ்க்க, கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

மூடிய விழிகளுக்குள் அன்று கண்டதனைத்தும் காட்சியாய் ஓடியது.

மகிழ்ச்சியாய் மனம் முழுக்க ஆசையுடன் தன் சிறுவயது தோழியை காண சென்றவன் கண்டதோ , முற்றிலும் வலுவிழந்து மருந்துவ உபகாரணங்களுக்கு நடுவில் இருந்த அவ்வுருவத்தையே.

உடல் முழுக்க ஆங்காங்கே காயங்களுடன் , முகத்தில் சிராய்ப்புகளுடன் உதடுகள் கிழிந்து கசங்கிய காகிதமாய் முகம் மட்டுமே தெரிந்தது.

கண்ட நொடியில் உள்மனம் நடுங்கது அவ்வுருவத்தை நெருங்கிய தருணம், கண்களைத் திறக்க முடியாமல் உதடுகள் கிழிந்திருந்ததில் பேச்சு தெளிவில்லாமல் போக "...ஆ...வலிக்கிறது...ம்ம்ஹா வலிக்கிறதே " என வழியில் உடல் நடுங்க முனங்கிய வார்த்தை தெளிவாக கேட்டது அவனுக்கு .

அந்நிகழ்வு நடந்து ஓராண்டு கடந்த பின்பும் , இன்னும் அந்நினைவுகள் அவனின் அடிமனம் வரை சென்று உலுக்க , அம்முனங்கள் மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் ஒலித்தது . அவ்வேதனையை தாங்க முடியாத சந்திராதித்யன் தன் இரு கைகளையும் இருக்கமாய் தன் காதுகளில் பொத்திக் கொண்டான் எப்பொழுதாவது அக்குரலிலிருந்து தப்பிக்கலாம் என்றெண்ணியபடி .

---------------------------------------------------------------------------------
சின்னம்பாளையம் :

"ஆ...வலிக்குது..கா.கா..காப்பாத்துங்க ... வலி....க்கு. து " என ஓர் குரல் தீனமாய் முனங்கியது .

மித்ரனுக்கு அக்குரல் மிக அருகில் கேட்பது போல் தோன்ற சுற்றும் முற்றும் தேடினான் . யஷியின் அறையிலிருந்து சத்தம் வர சிறு பதட்டத்துடன் சென்று பார்க்க அங்கு உடல் முழுக்க காயங்களுடன் ரத்தம் தோய்ந்தபடி ஓர் பெண் படுத்திருந்தாள் .

அதை பார்த்த மித்ரன் தடுமாறிய கால்களை சமாளித்து அருகில் சென்றவன் நடுங்கிய கைகளால் அவளை திருப்ப , அங்கிருந்தவளை கண்டு அலறினான் .

"நோஓஓஓ...." கத்திகொண்டே பின்னால் சென்றவன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான்.

" மித்ரா...டேய் மித்ரா ...என்னாச்சுடா " என யஷியின் குரல் கேட்டும் அசையாமல் அமர்ந்திருந்தவனின் கைகளை முகத்திலிருந்து விலக்கினாள் அவள்.

அதில் கண் திறந்து பார்த்தவன் , தான் சோபாவிலிருந்து கீழே விழுந்திருப்பதையும் ...யஷி தன்னை குழப்பத்துடன் பார்ப்பதையும் கண்டு நடந்தது கனவென்று அறிந்தவன் அதை உணர சற்று நேரம் தேவைப்பட்டது .



-காதலாகும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top