sithara vaiththa sempaavaiyaal - 05

Advertisement

shamla

Writers Team
Tamil Novel Writer
05


கையில் சிகப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்துடன் தன் முன் நின்றவனை பார்த்து என்ன செய்வது என புரியாமல் ஒருவித இயலாமை கலந்த தடுமாற்றத்துடன் பார்த்திருந்தாள் மதுபாலா.

தன்னவளை காதலுடன் பார்த்த மஹத் இதழ்களில் தவழ்ந்த மென்மையான புன்னகையுடன் தன் கையில் இருந்த ரோஜாக்களை பார்த்தவன் அதை பார்வையால் வருடினான். அது தன்னவளையே வருடிக் கொடுப்பது போல் அத்தனை பரவசமாய் அவனுள் இறங்கியது.

இரண்டு வருட காத்திருப்பினை வார்த்தையால் வடிக்க எண்ணினான்... காதலின் காத்திருப்பு சுகமாய் இருப்பினும் ஒருவித வலியில் அவன் குரல் கரகரப்பாய் ஒலித்தது.

“இரண்டு வருசமா காத்திருந்தேன்... இப்போ தான் சொல்றதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு...” சன்ன சிரிப்புடன் ஒரு கையால் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

“முதல் தடவையா உன்னை பார்க்கும் போதே எனக்காக பொறந்த பொண்ணுன்னு தான் தோனிச்சு... இதுவரைக்கும் யாரை பார்த்தும் கூட இந்த மாதிரி தோணது இல்ல... பர்ஸ்ட் டைம் ஏதோ ஸ்ட்ரக் ஆன மாதிரி...” அதற்கு மேல் எப்படி சொல்வது எனப் புரியாமல் பின்னங்கழுத்தை அழுந்த தடவிக் கொடுத்தவன் அலைபாய்ந்து கொண்டிருந்த தன்னவளின் விழிகளை உற்று நோக்கினான்.

“நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு சொல்ல விரும்பிறேன் மது... இதுவரைக்கும் நான் இப்பிடி இருந்ததே கிடையாது... கண்ணை மூடி என்னால தூங்க முடில.. கண்ணை திறந்தா நீ என் பக்கத்தில இருக்கிற மாதிரி பீல் பண்றேன்... இதை எப்பிடி சொல்றதுன்னு கூட தெரில... நீ என்னை சுத்தி இருக்கிற மாதிரி ஒவ்வொரு நிமிசமும் என் கண்கள் உன்னை தேடுது மது... ஆயிரம் பேர் உன்னை விரும்பினாலும் என்னோட அன்பு அதையும் விட ஒருபடி அதிகமா இருக்கும்னு மட்டும் சொல்ல தோணுது... என்னால உன்னை மறக்க முடியல மறக்கவும் விரும்பல... நீ எனக்கு மட்டும் சொந்தம்னு மனசு துடிக்குது... நான் உன்னை ரொம்ப விரும்பிறேன் மது.. நான் சாகும் போது கூட இந்த காதல் அப்பிடியே இருக்கணும்னு நான் ஆசைபடுகிறேன்... even after that... அதுக்கு பிறகும் கூட...”

அழகான அழுத்தமான ஆழமான காதல். தன் மனதிலுள்ளதை காதலுடன் எடுத்துரைத்தவன் அவள் விழிகளிலிருந்து பார்வையை அகற்றவில்லை. அந்த கண்கள் அவனை ஆழ்கடலுக்குள் அமிழ்த்துவது போலிருந்தது. அதில் விரும்பியே தொலைந்து போனான் அந்த காதல் பித்தன்.

அவன் நீட்டிய ரோஜாக்களை வாங்காது அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவளுக்கு அவன் காதலின் ஆழத்தை உணர முடிந்தது. இப்படி ஒரு காதலை தான் அவள் அவனிடம் கொண்டாள். ஆனால் அவன் தகுதியற்று போய்விட்டானே. அதை நினைக்கும் போதே அடிவயிற்றுக்குள் இருந்து எதுவோ மேலெழுந்து தொண்டைக்குள் அடைப்பது போல் அவஸ்தையாய் இருந்தது. கண்களில் கண்ணீரின் சாயல். அடக்கிக் கொண்டாள்.

தகுதியற்ற ஒருவனை காதலித்ததும் அவள் பிழை தான் அந்த வலியை தினம் தினம் அனுபவிப்பதும் அவள் பிழை தான். ஆனால் மறக்க முடியவில்லையே.. அவள் அவன் மேல் கொண்ட காதலுக்கு சமாதியும் கட்டி விட்டாள். ஆனால் அதுவோ சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனீக்ஸாய் மீண்டும் மேலெழும்பி அல்லவா வருகின்றது.

அந்த காதலர் தினத்தன்று அவன் வாய் வார்த்தையாய் காதலை சொல்ல வேண்டும் என்று கூட அவள் எதிர்பார்க்கவில்லை மாறாய் அவன் கண்களில் தன்னை கண்டவுடன் தோன்றும் மின்னலுடன் கூடிய காதல் பார்வைக்காய் தான் தவமிருந்தாள். ஆனால் அவன் அன்றைய நாளின் பரிசாய் தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பான் என அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லையே. எதிர்பாராதது நடப்பது தான் வாழ்க்கையோ.

அன்றைய நாளின் நினைவில் பொங்கிப் பெருகிய அழுகையை கூட வேறொருவனின் முன் அழ மனமற்று தனக்குள் அடக்கிக் கொண்டாள்.

தான் அவன் மேல் கொண்ட காதலுக்கு சற்றும் குறைவில்லா காதல் தான் தன் மீது இவன் கொண்டதும் என தெள்ளத்தெளிவாய் பெண்ணவளுக்கு புரிந்தது. அவன் கண்களை உற்று நோக்கினாள்.

தன் பதில் என்னவாய் இருக்குமோ என்ற பதற்றமும் தவிப்பும் ஒருங்கே மின்ன அவளையே பார்த்திருந்தான். அதை நினைத்து சோபையாய் புன்னகை சிந்தியது அவள் இதழ்கள்.

அவளுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் போலும். அவள் நேசித்தவன் அவளை துறந்து செல்ல அவளை நேசிப்பவன் அவளுக்காய் எதையும் துறக்கும் நிலையில் இருக்க அவளுக்கு அந்த காதல் மேலே பற்றற்று போய்விட்டது. அவளுக்கு அவள் மன்னவன் கொடுத்த வலியை அவள் தன் முன் நிற்பவனுக்கு கொடுக்க போகின்றாள். உண்மையாய் நேசித்த இரு நெஞ்சமும் காதல் வாதையில் வாடப்போகின்றது. பெண்ணவள் முன்னமே அந்த வலியை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றாள்.

அடைபுற்ற தொண்டையை லேசாய் செருமிக் கொண்டாள். கண்களில் துளிர்த்த நீரை இமை சிமிட்டி சரி செய்து கொண்டாள்.

“அழகா இருக்கீங்க.. நல்லா பேசுறீங்க...” அளவான புன்னகை சிந்தியது இதழ்கள்.

“ரொம்ப காதலிக்கிறீங்கன்னு புரியுது... ஆனா அதை ஏத்துக்கத்தான் முடில... I already love someone else” அவன் மனம் படப்போகும் பாட்டை உணர்ந்தவளாய் மென்மையாய் உரைத்தாள்.

ஆர்வத்துடன் அவள் பதிலுக்காய் காத்திருந்தவன் பெண்ணவள் மொழிந்ததை கேட்டு காதலெனும் கண்ணாடி சில்லு சில்லாய் உடைய உடைந்து போய் அவளை பார்த்தான். அன்பிற்கு ஏங்கும் அடிபட்ட குழந்தையாய் அவள் காதலுக்காய் ஏங்கி அவளை ஏக்கத்துடன் தழுவி மீண்டது அவன் விழிகள்.

வேறு ஒருத்தனை காதலிக்கும் பெண்ணை அதற்கு மேல் ஒரு நொடி கூட பார்க்க கூடாது என மனம் எடுத்துரைக்க தன் விழிகளை விலக்கிக் கொள்ள முனைந்தான். காதல் நெஞ்சமோ இனி பார்க்கவே முடியாத ரசிக்காவே முடியாத பெண்ணவள் முகத்தை ஆழமாய் தனக்குள் பதிப்பது போல் உற்று நோக்கியது. விலக்கிக் கொள்ள முடியவில்லை. தன்னவள் தனக்கு இல்லை என்ற எண்ணமே அவனை உடையச் செய்ய அவனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இருந்தும் தன் வேதனையை மறைத்துக் கொண்டு இறுதியாய் ஒரு முறை அவள் விழியோடு விழி கலந்தவன் அதில் இருந்த உண்மை நான் எந்த நேரத்திலும் பொய் சொல்லா மாட்டேன் என்பது போல் இருக்க அவள் கண்களில் இருக்கும் நேர்மையும் உண்மையும் விரும்பி பெண்ணவளை நேசித்தவன் இன்று தன் காதலை கொன்ற அந்த உண்மையை பெரிதும் வெறுத்தான்.

“all the best...” தன் காதல் தோற்று போன நேரத்திலும் கூட பெண்ணவள் காதல் ஜெய்க்க வேண்டும் என்பதற்காய் தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு கூறியவன் சடுதியில் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அவள் கண்கள் பேசும் உண்மையைத்தான் வெறுத்தானே ஒழிய பெண்ணவளை அவனால் வெறுக்க முடியவில்லை. முதல் காதல் அவனுள் ஆழமாய் அழுத்தமாய் பதிந்து போனது. காலம் மாறினாலும் அதன் வடு மாறாது.

செல்லும் அவனை சில கணங்கள் பார்த்திருந்தவள் பாதி வழியிலே வீட்டிற்கு திரும்பி விட்டாள். வாய் விட்டு அழவேண்டும் போல் இருந்தது.

“டேய் ஏன்டா ஒருமாரி இருக்க என்னதான் ஆச்சு... சிஸ்டர் கிட்ட உன் காதலை சொன்னியா... சிஸ்டர் என்ன சொன்னா...” வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த நண்பனை உலுக்கிக் கொண்டிருந்தனர் மஹத்தின் தோழர்கள்.

“அவன் கொஞ்ச நேரம் ப்ரீயா இருக்கட்டும் நீங்க வெளியில போங்க நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன்...” மற்ற நண்பர்களை வெளியில் அனுப்பி விட்டு அவனருகில் வந்து அமர்ந்தான் அகில். அவனின் உயிர்த்தோழன்.

“சிஸ்டர் என்ன சொல்லுச்சுடா...” நண்பனின் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டு கேட்டான்.

அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் இருந்து அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுக்க அவன் மடி சாய்ந்து கொண்டவன் காத்திருந்த காதல் கொடுத்த வலியை தாள முடியாமல் கதறி அழுதான்.

“வேற ஒருத்தனை காதலிக்கிறாளாம்டா... என்னால தாங்கிக்க முடில மச்சான்... உனக்கு தெரியும்ல நான் எந்தளவுக்கு அவளை காதலிச்சேன்னு.. வலிக்குதுடா.. செத்துடலாம் போல இருக்கு... என்னால அவளை மறக்க முடியாதுடா இங்க வச்சிருந்தேன்...” இதயத்தை தொட்டுக் காட்டி கதறிய நண்பனின் கதறலை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்ல. எப்போதும் சிரித்த முகமாய் அமைதியுடன் கூடிய அட்டகாசத்துடன் வலம் வரும் நண்பனின் அழுகையை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
“மச்சி அழாதடா... அவ இல்லன்னா இந்த உலகத்தில வேற பொண்ணே இல்லையாடா உன் அழகுக்கு வசதிக்கு முக்கியமா உன் குணத்துக்கு ஏத்தமாதிரி பொண்ணு கண்டிப்பா உனக்கு கிடைப்பா மச்சி.. அழாதடா என்னால தாங்கமுடில...” அழுகுரலில் கூறினாலும் இன்றுடன் அவன் இந்த நிகழ்வை மறக்கட்டும் இன்றே மொத்தமாய் அழுது முட்டிக்கட்டும் என்பது போல் அவன் தோளையும் தடவிக் கொடுத்தான்.

துக்கத்திலும் தோள் கொடுப்பான் தோழன் அதை மெய்ப்பித்தான் அந்த உண்மையான தோழன்.

அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைய அகிலை நிமிர்ந்து பார்த்தவன் “என்கிட்ட என்ன இல்லன்னுடா அவ என்னை பிடிக்கலன்னு சொன்னா...” பரிதாபமாய் கேட்டான்.

“அவளுக்கு கண்ணு இல்லடா இல்லன்ன உன்னை போய் பிடிக்கலன்னு சொல்லுவாளா..” கோபத்தில் அவன் கடுகடுக்க, அவனை முறைத்து வைத்தான் மஹத்.

“அவளை மரியாதை இல்லாம பேசாதடா... அவளை காதலிச்சது என்னோட இஷ்டம் மாதிரி அவ வேறொருத்தனை காதலிக்கிறதும் அவளோட இஷ்டம் தானே மச்சான். நான் அவளை காதலிக்கிறேங்றதுக்காக அவளும் என்னை காதலிக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே.. கடவுள் இன்னார்க்கு இன்னார்னு எப்போவே தீர்மானிச்சிட்டான் போல.. அதான் விதிப்படி நடக்குது...” தன் வேதனையை விழுங்கிக் கொண்டான்.

காலத்தின் கைகளில் அனைவரும் பொம்மைகளே... அது ஆட்டுவிக்க நாம் ஆடவேண்டும்... அது தான் விதி என்கையில் யாரால் அதை மாற்றி அமைக்க முடியும்..


*****


வெட்கத்தில் சிவந்த கன்னங்கள்... கண்களில் கசிந்த காதல் என தன்னையே விழியகற்றாமல் பார்த்த பெண்ணவளை பார்த்து தொண்டையை செருமினான் ஆர்யன்.

‘சே... இப்பிடியாடி பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்க்கிற மாதிரி பார்த்து வைப்ப... கொஞ்சங்கூட அறிவேயில்லடி உனக்கு...’ தன்னை கடிந்து கொண்டவள் மானசீகமாய் தலையில் தட்டி பார்வையை விலக்கிக் கொண்டாள்.

அதில் ஆசுவாசமாய் மூச்சுவிட்டவன் “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...”

“ஷிகாயா... என் பெயர்... பெயரை சொல்லியே கூப்பிடுங்க... அதான் முன்னாடியே சொன்னீங்களே பேசனும்னு எதுவா இருந்தாலும் பரவாயில்ல சொல்லுங்க...” சிறு தயக்கம் இருந்தாலும் தன் மனம் கவர்ந்தவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் உந்தி தள்ளியதில் படபட பட்டாசாய் பேசுபவள் அவனிடமும் அப்படியே பேசினாள்.

அவள் பேச்சில் இளம் புன்னகையினை சிந்தியவன் “என்ன படிக்கிறீங்க...” என்றான். எப்படி ஆரம்பிப்பது என புரியாமல் பேச்சினை ஆரம்பித்தான்.

“பிளஸ்டூ எக்ஸாம் எழுதிட்டேன்...”

அதை கேட்டதும் ஆடவனுக்கு தன்னவளின் நினைவு தான் வந்து தொலைத்தது. மறக்கத்தான் முயல்கிறான் ஆனால் முடியவில்லையே. அவளும் எக்ஸாம் எழுதியிருப்பா... எப்பிடி எழுதினால்னு தெரியலையே... முதலில் கலங்கியவனின் இதழ்கள் பின்பு புன்னகை சிந்தியது. அவள் தான் பெரும் படிப்பாளி ஆயிற்றே... அதெல்லாம் நன்றாக எழுதி நல்ல மார்க் எடுத்து விடுவாள்... தன்னவள் நினைவில் பெருமிதம் கொண்டது ஆடவனது காதல் நெஞ்சம்.

“என்னங்க...” ஷிகா மெல்லிய குரலில் அழைக்க தன்னவள் நினைவில் இருந்தவனுக்கு அவள் குரல் செவியினை தீண்டவில்லை.

மீண்டும் அவள் அழைக்க அதில் நினைவு கலைந்தவன் அவளை நோக்கி திரும்பினான்.

“பேசனும்னு சொன்னீங்களே... நேரமாயிடிச்சு வீட்ல தேடுவாங்க...” என்ன நினைப்பானோ என்ற தவிப்புடன் மெல்லிய குரலில் முணுமுணுப்பாய் கூறினாள்.

“அதுவந்து... தயவுசெய்து இனிமே என்னை இப்பிடி பார்க்காதீங்க... நான் விரும்புற பொண்ணு மட்டுந்தான் என்னை உரிமையா பார்க்கனும்னு ஆசைபடுறேன்...” என்றான் சிறு புன்னகையுடன்.

ஷிகா அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும் குழப்பத்துடன் அவனை நோக்கினாள்.

“புரில...”

“நான் ஒரு பொண்ணை விரும்பிறேன்... அவ மட்டும் தான் என்னை ஆர்வமா பார்க்கனும்னு ஆசைபடுறேன்...” அவள் பார்க்கவே மாட்டாள் என்று தெரியும் இருந்தும் பார்த்திட மாட்டாளா என்ற அடி ஆழ்மனதின் ஏக்கம் வார்த்தையாய் வெளிப்பட்டது.

அதை கேட்டு உள்ளம் துடிக்க அவனை பார்த்தாள். நெஞ்சுக்குள் எதுவோ உடைவது போல் இருந்தது. அவனை பார்த்து பார்த்து காதலை வளர்த்தாலே. ஏன் அவனுக்கு என்னை பிடிக்கவில்லை. ஒருவேளை அந்த பெண் அத்தனை அழகோ.. அழகை பார்த்து தான் ஆண்களுக்கு காதல் வருமா.. ஏன் தான் அழகாயில்லையா.. ஏன் இவருக்கு என்னை பிடிக்கவில்லை. அன்று கல்லூரியில் என்னை பார்த்து பாடினாரே... இப்போது ஏன் மாற்றிபேசுகிறார்... ஒருவேளை என்னை சீண்டிப்பார்க்க விளையாடுகிறாரோ...

உள்ளுக்குள் பல கேள்விகள் ஓட இறுதியாய் தோன்றிய கேள்விக்கு விடையறிய அவனை பார்த்தவள் “பொய் தானே சொல்றீங்க...” ‘பொய் என்று சொல்லிவிடுங்களேன்’ என ஊமையாய் கதறிய நெஞ்சத்துடன் அவனை தவிப்புடன் ஏறிட்டாள்.

அவளை பார்க்க பாவமாய் இருந்த போதிலும் உண்மை அது தானே. அவன் மதுவை தானே உயிருக்குயிராய் நேசிக்கிறான். இதோ அவளை விட்டு விலகிய பின்னும் கூட அவள் மேல் கொண்ட காதலை மறக்க முடியாமல் துடிக்கிறானே... அந்த காதல் பொய்யில்லையே.

முதல் முதலாய் அவள் இதழ் பட்ட சட்டையை இன்று வரையிலும் பத்திரமாய் வைத்திருக்கிறானே அது பொய்யில்லையே. அவளின் கண்ணீர் கரைகள் பட்ட சட்டையை பார்த்து தினமும் வேதனை கொள்கிறானே அது பொய்யில்லையே. அவள் பார்த்து மகிழ்ந்த ரோஜா செடிகளை தினமும் பார்த்து மகிழ்கிறானே அதுவும் பொய்யில்லையே.

இப்படி அனைத்தும் பொய் இல்லை எனும் போது அவளிடம் எப்படி அதை பொய் என்பான். பொய் என்று வாய் வார்த்தையாய் கூட சொல்லமுடியவில்லையே அவனால். பொய்க்காக கூட அவனால் அதை பொய் என்று சொல்லமுடியவில்லை.

பெண்ணவள் மட்டுமல்ல ஆடவனும் கூட நித்தமும் அந்த உயிர்வாதையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றான். அது சத்தியமான உண்மை.

“முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட பொய் சொல்லமாட்டேன்.” அவளை அந்நியப்படுத்திக் கூறினான்.

அதில் உதடு துடிக்க அவனை பார்த்தவளுக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

அவள் அவனை அந்நியமாய் நினைக்கவில்லையே. தன்னவாய் தானே அவள் அவனை நினைக்கின்றாள். அவனை பார்த்த நாள் முதல். தினம் அவன் நினைவில் தானே உழல்கிறாள். இரவின் தூக்கத்தில் அவனை நினைப்பவள் மறுநாள் விடியலில் அவன் நினைவுடன் தானே கண்களை திறக்கின்றாள். இப்படி ஒவ்வொரு நொடியும் அவள் அவன் நினைவில் இருக்க அவனோ அவளை பார்த்து நீ யாரோ நான் யாரோ என்கிறான்.

அதை ஜீரணிக்க முடியவில்லை அவளால். தோழிகளிடம் கூட கூறாமல் பொத்தி பொத்தி வளர்த்த காதலை ஒரு நொடியில் சுக்குநூறாய் உடைத்து விட்டானே.

“உங்களுக்கு ஏன் என்னை பிடிக்கல... நீங்க விரும்பிற பொண்ணு என்னை விட அழகா இருப்பாங்களா...” ஏக்கமாய் வெளிவந்தது அவள் வார்த்தைகள்.

ஏக்கத்துடன் கேட்டவளிடம் ‘ஆம்’ என பட்டென்று சொல்லமுடியவில்லை அவனால். உதடு துடிக்க கண்கள் கலங்க அவள் நின்ற தோற்றம் ஏனோ அவனை அசைத்துப் பார்த்தது. மனதினுள் அழுத்தமாகவும் பதிந்தது.

“ப்ளீஸ் சொல்லுங்க” அவன் அமைதியினை தாங்கமுடியாமல் கேட்டாள்.

“ஆமா ரொம்ப அழகா இருப்பா...” இருந்தும் சொல்லிவிட்டான். அது பெண்ணவள் கன்னத்தினில் கோடாய் கண்ணீரை இறங்க செய்தது.

புறங்கையால் அதை துடைத்துக் கொண்டவள் “அது தான் அன்னைக்கு அந்த பாட்டை பாடினீங்களா...”

‘ம்’ தலையாட்டி ஆமோதித்தான்.

“அவங்களும் உங்களை காதலிக்கிறாங்களா...”

இதற்கு என்ன பதிலை சொல்வதென்றே அவனுக்கு தெரியவில்லை. அவள் அவனை அளவுக்கு அதிகமாய் காதலிக்கிறாள் தான். ஆனால் இப்போது காதலிக்கிறாளா என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால் காதலித்தது உண்மை தானே. அதற்கும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
 

shamla

Writers Team
Tamil Novel Writer
அதை கேட்டு உள்ளம் துடிக்க கேட்டுக் கொண்டவள் “நாம காதலிக்கிறவங்கள விட நம்மள காதலிக்கிறவங்க கிடைச்சா வாழ்க்கை சந்தோசமா இருக்கும்னு சொல்லுவாங்க...”

அதை கேட்டு அத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை மறைய சிறு கடுமையுடன் அவளை பார்வையிட்டவன் “அதை நானும் உனக்கு சொல்லலாமில்லையா...” என்றான் கண்டிப்புடன்.

“என்னால உங்களை மறக்க முடியாதே...” அவன் கோபம் அவளை பாதிக்க தவிப்புடன் கூறினாள்.

“என்னாலையும் என் காதலியை மறக்கமுடியாது..” கண்டிப்புடன் கூறினான்.

“காலம் எதையும் மாத்தக்கூடியது...” காதல் தோல்வி கொடுத்த வலியில் வார்த்தையை விட்டாள்.

“ஏய்...” அதை கேட்டு சுறுசுறுவென கோபம் பொங்க அவளை அறைவதற்கு கையை ஓங்கி விட்டான்.

“இனியொரு வாட்டி இந்த மாதிரி பேசின பொண்ணுன்னு கூட பார்க்கமாட்டேன்... அடிச்சி பல்லை கழட்டிடுவேன்... இனிமேல் கொண்டு என் கண்ணு முன்னாடி பட்ட” விரல் நீட்டி எச்சரித்தவன் மறுநொடியே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

சீறிக்கொண்டு சென்ற வண்டியின் வேகத்திலே அவன் கோபம் பெண்ணவளுக்கு புரிந்தது. அதனால் கவலையுடன் அவன் செல்லும் வழியை பார்த்தாள். ‘இத்தனை வேகத்துடன் செல்கிறாரே... கடவுளே நீ தான் காப்பாத்தணும்’ அவன் மேல் அவள் கொண்ட அளவில்லா காதல் அவன் வேகத்தினை பார்த்து பயத்துடன் கடவுளிடம் வேண்டிக் கொண்டது.

‘நான் என்னைக்கும் உங்களை மறக்க மாட்டேங்க... ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீங்களே என்னை தேடி வருவீங்க... அந்த நாளுக்காக காத்திருப்பேன்...’ மனதினுள் காதலுடன் எண்ணிக் கொண்டாள்.

ஆர்யன் மதுபாலாவின் மேல் கொண்ட காதல் எத்தனை உண்மையோ அதே போல் தான் ஷிகா அவன் மேல் கொண்ட காதலும்.

விதி யாரை இணைக்கப்போகின்றதோ.....


****


தன் பின்னால் நின்றவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் ஷாஷி. உடல் அழுகையில் குலுங்கியது. அதிர்ந்த நெஞ்சம் இன்னும் சமன்படவில்லை. அவனை தழுவி இருந்த கைகளின் நடுக்கத்தை அவனால் உணரமுடிந்தது. ஆறுதலுடன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவள் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.

ஷாஷியின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க தன் நண்பர்கள் இருவரை அவள் வீட்டின் முன் காவல் காக்க சொல்லியிருந்த ரோஹன் நண்பர்கள் அவள் தனியாய் எங்கோ செல்கிறாள் எனக்கூறவும் அவளை சந்தித்து பேசுவதற்காய் அவள் வீட்டின் அருகில் வந்துவிட்டான்.

நண்பர்களிடம் அவள் சென்ற வழியை கேட்டறிந்து சென்றவன் அங்கு அவள் அசையாது நிற்பதையும் அவள் முன் நின்றவர்களையும் பார்த்து விபரீதம் புரிய அவளருகில் சென்று தோளில் கை பதித்து தன் புறம் திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஒன்னுயில்லடா... பேபி அழாத நான் தான் இருக்கேன்ல... என்னை மீறி யாராவது உன்மேல கை வைக்க விட்டிடுவேனா... பாருடா...” அவள் முகத்தை நிமிர்த்தியவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான்.

அவன் நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க மட்டும் வரல்லைன்னா...” அந்த நினைவே அவள் நெஞ்சத்தை உலரச்செய்ய நடுக்கத்துடன் நின்றிருந்தாள்.

அதில் மீண்டும் அவளை இழுத்தணைத்து தனக்குள் புதைத்துக் கொண்டவன் “அதான் நான் வந்திட்டேன்ல அழாதடா...”

“ம்ம்...” முணுமுணுப்புடன் தலையசைத்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“குட் கேர்ள்...” சிரிப்புடன் அவள் நெற்றியில் மோதியவன் இருகைகளாலும் அவள் முகத்தை தாங்கினான்.

“இனிமே நீ என்னைக்கும் அழ கூடாது... நீ அழுதா என்னால தா..ங்க முடியாது பேபி...” குரல் கரகரக்க கூறியவனின் காதல் அவளை பிரம்மிக்க வைத்தது.

இதற்கு இன்னமும் இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவரின் காதலை மற்றவர் முழுமையாய் உணர்ந்திருந்தனர். சொல்லாத காதல் செல்லாது என்பதை இவர்கள் இருவரினது காதலும் உடைத்தெறிந்து இருந்தது. இங்கு இவர்களின் சொல்லப்படாத காதல் விருட்சகமாய் ஓங்கி வளர்ந்திருந்தது.

“என்னை பிடிச்சிருக்கா பேபி...” கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு மழை நாளில் தான் அவளிடம் கேட்டிருந்தான். அன்று என்ன சொல்வதென தெரியாமல் பயத்தில் ஓடிப் போய்விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு பின் அன்றிருந்த காதல் சிறிதளவும் குறைவில்லாமல் இருக்க அதே கேள்வியை மீண்டும் தன்னவளிடத்தில் கேட்டான்.

அன்று சொல்ல முடியாது பயத்தில் தவித்தவள் இன்று வெட்கத்தில் அவன் முகம் காண முடியாமல் தலை குனிந்தாள். வெட்கத்தில் செந்நிறமாய் மாறிய அவளின் முகத்தை ஆவலுடன் பார்த்தவன் அதை மென்மையாய் தடவிக் கொடுத்தான்.

“பதில் சொல்லு பேபி...” கிசுகிசுப்பாய் ஒலித்தது அவன் குரல்.

அதில் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்க தொண்டைக்குழி காதல் அவஸ்தையில் ஏறியிறங்க இதயம் படபடப்பில் தாறுமாறாய் அடித்துக் கொண்டது.

‘ம்’ வெட்கத்துடன் லேசாய் தலையசைத்தாள்.

“இப்பிடி நாளா பக்கமும் தலையாட்டினா நான் என்னன்னு நினைக்க... பிடிச்சிருக்குன்னா இல்லை பிடிக்கலைன்னா...” விடையறிந்தும் குறும்பாய் கேட்டான் அந்த குறும்புக்காரன்.

“பிடிச்சிருக்குன்னு தான் அர்த்தம்...” அவனை போலவே முணுமுணுப்பாய் கூறியவள் வெட்கத்துடன் அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள்.

அதில் வாய் விட்டு சிரித்தவன் “இதுக்கு ரெண்டு வருஷம் ஆயிடிச்சில்ல...” சிரிப்புடன் கூறினாலும் காத்திருந்த தவிப்பு அப்பட்டமாய் வெளிப்பட்டது. அதில் கவலையுடன் அவனை பார்த்தாள் ஷாஷி. அதில் தன் கவலையை மறந்தவன் “அதான் இப்போ சொல்லிட்டியே... ரொம்ப சந்தோசமா இருக்கு பேபி...” அவளை சமாதானப்படுத்தினான்.

மடியில் இருந்த தலையணையில் முழங்கையை வாகாய் சாய்த்து அதில் முகம் பதித்து இன்று மாலை நடந்த நிகழ்வுகளை முதலில் கசப்புடனும் பின்பு இனிமையுடன் எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள் ஷாஷி.

அவள் மகிழ்ச்சியினை வடிக்க வார்த்தைகளே இல்லை என்பது போல் இருந்தது. அத்தனை சந்தோசத்துடன் இருந்தாள். தன்னவனிடத்தில் தான் காதலை சொல்லிவிட்டதில். இன்றே கூட மரணித்தாலும் அதை சந்தோசத்துடன் ஏற்க தயாராய் இருந்தது அவள் காதல் நெஞ்சம்.

மூன்று தோழிகளும் மூன்று விதமான மனநிலையில்.

ஒருத்தி காதல் தோல்வியில் துவண்டு கொண்டிருக்க இன்னொருத்தி காதல் நிறைவேற மனதோடு வேண்டிக் கொண்டிருக்க மற்றவளோ காதல் கூறிவிட்ட களிப்பில் இருந்தாள்.

இவர்கள் மூவருக்கும் விதி எதை வைத்து காத்திருக்கின்றதோ.


“போ போ என்
இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும்
போ போ என்
நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும்
கோவம் உன் கோவம் என்
நெஞ்சை கொன்று போக
கண்கள் என் கண்கள்
கண்ணீரில் நனையுதே
போதும் போதும் எப்போதும் உன் நினைவுகள்
பாவம் என் உள்ளம் சொல்லாமல் கரையுதே
காயத்தை கண்டு கொண்டு பார்த்திட முடியும்
வலியை கண்டிட கண்கள் இல்லை..”


 

Keerthi elango

Well-Known Member
So sad...intha kadhal iruke....evlo thidamana manusangalayum...onume ilama aakidum....kadhal success ahna kedaikira sandhosatha vida 100 madangu athiga valiya kodukum athoda tholvi....nanum waiting sis....ena than nadakuthunu pakaren...but magath oda vali enaku theliva therinjuthu...avanuku ethathu pathu panunga pa....keep rockinggg dr....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top