Advertisement

ஹோ… என்று ஆர்பரித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள் சாருமதியும் அவளுடைய தோழர்களும். 
கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் தங்கள் உயர்படிப்பின் இறுதிகட்டத்தில் இருக்க, திடீரென்று ரேணுகாவிற்கு ஒரு ஆசை.
வேறொன்றுமில்லை… “மதுரை மருத்துவக் கல்லூரியில் நம் ஐந்து பேரின் கால்படாத இடமே கிடையாது. அதே போல நான் இப்போது படிக்கிற கல்லூரியிலும்  நம்முடைய ஐந்து பேரின் காலடித்தடமும் ஒன்றாக படவேண்டும்” என்ற தனது வித்தியாசமான ஆசையைச் சொல்ல திவாகரும், அஸ்வினும் அதையே தங்களின் ஆசையாக வழிமொழிந்தார்கள். 
மேலோட்டமாகப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமான தெரியும் அந்த ஆசைக்குள் மறைந்திருக்கும் ஆழமான நட்பு,  எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாளாகப் பார்த்து நண்பர்களை கிளம்ப வைத்திருந்தது. 
முதலில் ரேணுவின் கல்லூரியில் ஒன்றாக சந்தித்துக் கொண்ட நண்பர்கள், அவள் ஆசை தீர அந்த கல்லூரி வளாகத்தில் அவளுடன் சுற்றி வந்தார்கள்.
பின்னர் அஸ்வின் கல்லூரிக்கு அனைவரும் ஒன்றாக சென்று, இறுதியாக சென்னையிலிருக்கும் திவாகரின் கல்லூரியில் வந்து  நின்றார்கள்.
அங்கும் ஆசைதீர சுற்றிவந்தவர்கள், பின் ஒரு பிரபல மாலில் சுற்றியடித்து விட்டு, இதோ சென்னையின் மிகப்பெரிய அடையாளமாம் மெரினா பீச்சில் இருக்கிறார்கள்.
கடல் அலைகளில் சிறுபிள்ளைகளாய் ஆடிக்களித்தவர்களின் உடையெல்லாம் நனைந்திருக்க, ஒருவழியாக ஓய்ந்து போய் கரைக்கு வந்து வட்டமாக உட்கார்ந்திருந்தவர்களின் கைகளில், அருகில் விற்றுக் கொண்டிருந்த குல்ஃபி ஐஸ்.
 சாருமதி கைகளில் மட்டும் இரண்டு ஐஸ். அதை அவள் இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சாப்பிடுவதை ஒருவருக்கொருவர் கிண்டலடித்தபடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தவர்களை
“ஹாய்! ஃப்ரெண்ட்ஸ்… நீங்க இங்க எங்க?” என்ற ஆர்சர்யக் குரல் கலைத்தது.
 ஒரே நேரத்தில் குரல் வந்த திசையை எல்லோரும் பார்க்க முகத்தில் புன்னைகையோடும், அருகில் தனாவோடும் நின்று கொண்டிருந்தது கிருஷ்ணா.
“ஹேய்… ப்ரோ… நீங்களா? வாங்க… வாங்க…” என்று அனைவருக்கும் முந்திக்கொண்ட அஸ்வின் தன்னருகே கிருஷ்ணா உட்காருவதற்காக லேசாக விலகி இடம் கொடுக்க, 
அவனருகே உட்கார்ந்திருந்த சாருமதிக்கும் அவனுக்குமிடையே விழுந்த இடைவெளியில், சாருமதி அருகே சென்று உட்கார முயன்ற தனாவை முந்திக்கொண்டு அவளருகே உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா.
தனா அறிந்தவரை கிருஷ்ணாவிற்கு சாருமதி என்றால் ஆகாது. அதனாலேயே ‘தன் நண்பன் அவளருகில் உட்கார விரும்பமாட்டான்’ என்று நினைத்து சாருமதி பக்கத்தில் அவன் உட்கார முயன்றது.
ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்ட நண்பனைப் “இது எப்போயிருந்து?” என்பது போல ஆச்சர்யத்தோடு தனா பார்க்க, நண்பனை பார்த்து லேசாக கண் சிமிட்டியபடியே,
“இங்க அம்மா வழியில ரொம்பக் க்ளோஸ் ரிலேட்டிவ் வீட்டு  கல்யாணத்துக்கு வந்தேன் ஃப்ரெண்ட்ஸ்… அப்படியே தனாவையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன். திரும்பி வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு இன்னும் டைம் இருக்கு… சோ இந்த பக்கமா வந்தாச்சு” என்றவனிடம்
“ஓ…கல்யாண வீட்டுக்கு வந்தீங்களா? அப்போ கிஃப்ட்டா கொண்டு வந்த வெள்ளிக் குடமெல்லாம் கல்யாண வீட்டுக்கு மொய்யா போச்சா… இல்லை சேட்டு வீட்டுக்கு … ” என்று கிண்டலாக இழுத்த திவாகரிடம் சிரித்துக்கொண்டே,
“அதெல்லாம் ப்ராப்பரா சேர்க்க வேண்டிய இடத்துல சேத்தாச்சு ப்ரோ…” என்றவன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் சாருமதியை தன் கண்களில் நிரப்பிக்கொண்டு, நண்பர்கள் உடனிருக்கும் தைரியத்தில்,”நல்லா இருக்கியா சாரு?” என்று கேட்டான் வாஞ்சையாக. 
சாருமதிக்கு அவனை இங்கு கண்டதே ஒரு அதிர்ச்சி என்றால், தன் நண்பர்களிடம் கலகலப்பாக பேசிக்கொண்டு, தன்னருகே உட்கார்ந்ததும் அல்லாமல் தன்னை விசாரித்தது பேரதிர்ச்சியாக இருக்க, 
 அவன் கேள்விக்கு பதில் சொல்ல மனமின்றி லேசாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ கையிலிருக்கும் குல்ஃபியில் மூழ்கியிருப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
அதை கவனித்து கொண்டிருந்த நம் அஸ்வினோ உண்மையிலேயே சாருமதி கிருஷ்ணா கேட்டதை கவனிக்கவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டு
“ஹேய்… சாரு! கிருஷ்ணா உங்கிட்ட தான் கேக்குறாரு ப்பா” என்று அவள் கவனம் கலைக்க
‘போடா புண்ணாக்கு… நான் என்ன செவிடா, அவன் கேட்டது எனக்கு கேக்காமல் போகுறதுக்கு?’ உள்ளுக்குள் அஸ்வினை தாளித்தவள்
“ம்ம்…” என்றாள் நிமிர்ந்து பார்க்காமலேயே
சாருமதிக்கு இப்போதெல்லாம் இந்த கிருஷ்ணாவின் பார்வைகள் பிடிக்கவேயில்லை.
இப்போதெல்லாம் என்றால், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே.
‘அவனோட அம்மாவுக்கு கிட்னி டொனேட் பண்ணுறோம்ல, அதனால்தான் தொரை நம்மள ஏதோ நன்றியுணர்ச்சியில் இப்படி பார்க்கிறான் போல’ என்று ஆரம்பத்தில் எளிதாக அவன் பார்வைகளை கடந்த அவளால்,
தான்  ஐசியூவில் இருக்கும் போது வெளியே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவின் பார்வையை அவ்வாறு கடக்க இயலவில்லை. 
அதன்பிறகு ரூமிற்கு அவள் வந்த பிறகு அவளைக் காண வரும் அவனின் அப்பாவின் பின்னோடு வருபவனின் பார்வையில்  நன்றியுணர்வைத் தாண்டி வேறெதுவோத் தெரிய சுத்தமாகப் பிடிக்கவில்லை அவளுக்கு.    
அவனின் அந்த பார்வையைத் தவிர்க்க அவர்கள் வரும் நேரத்தில் பெரும்பாலும் தூக்கத்தில் இருப்பது போல கண்களை மூடிக்கொண்டு நடிக்க ஆரம்பித்தாள்.
அதன்பிறகு சுவாதீனமாக “கல்யாணி ம்மா…” என்று அழைத்துக்கொண்டு அவளின் தாயின் தேவைகளை நிறைவேற்றுகிறேன் பேர்வழி என்று அடிக்கடி ரூமிற்கு வருபவன் கௌரியிடம் நட்பாகி விட, காயத்ரி மட்டும் ஏனோ அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நின்றாள். 
இன்னும் ஏன்? அவனை அவ்வளவாக பிடிக்காத ரகுவிடம் கூட அவ்வப்போது ஃபோனில் சரளமாக பேச ஆரம்பித்துவிட்ட கிருஷ்ணாவைப் பார்க்கும் போது,
அவன் தன் குடும்பத்தையே தன் உள்ளங்கைக்குள் சுருட்டி வைத்துக் கொண்டது போலத் தோன்ற, அறவே வெறுத்தாள் அவனை. 
அவனின் ஏளனப்பேச்சுக்களும், அலட்சியப்பார்வைகளும்
 பசுமரத்தாணியாக நெஞ்சில் பதிந்து போயிருக்க, அவனின் இந்த திடீர்மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை சாருமதியால்.
‘திமிர்பிடித்தவன்… இவன் ஈஈ…ன்னு பல்லைக் காட்டியதும் பதிலுக்கு நானும் பல்லைக் காட்டணுமா?’ மனதுக்குள் பொறுமியவள்
 அதற்கு மேல் தன்னிடம் அவன் பேச இடம்கொடாமல்  ஹேமாவிடம் ஏதோ முக்கியமான விஷயம் பேசுவது போல திரும்பிக் கொள்ள, ஹேமாவும் தோழியின் எண்ணம் புரிந்தவள் போல ஈடுகொடுத்தாள்.
அவனோ அதற்கு மேல்  அவளிடம் ஏதும் பேச முயற்சிக்காமல் அவளது நண்பர்களுடன் கலகலத்துக் கொண்டிருந்தான். 
பேச்சு அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் அவர்களது படிப்பில் வந்து நிற்க,”இந்த மாசக்கடைசியில் எல்லோரும் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிடுறோம். சாருவும் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வர்றா தெரியும்ல ப்ரோ” என்றான் முந்திரிக்கொட்டையாய் அஸ்வின்.
“ம்ம்… அதுக்காகத் தானே காத்திருக்கேன் நான்”  சாருமதியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சொன்னவனிடம்,
“இதெல்லாம் எப்போ இருந்து மாப்ள? எங்கிட்ட நீ சொல்லவே இல்ல” என்று நண்பனின் காதுகளில் கிசுகிசுத்த தனாவிடம், அவன் பாணியிலேயே
“இப்போ தெரிஞ்சிடிச்சில்ல… கம்முன்னு இருடா…” என்று சொன்ன நண்பனின் கேலிக்குரலில், வியந்து போய் வாயைப்பிளந்த தனா வேண்டுமென்றே
“கிருஷ்… அப்போ அந்த மிருதுளாவோட நிலமை…” என்று இழுக்க
“அடேய்… நீ ஒருத்தன் போதும்டா… தொடங்குன வேகத்திலேயே என் காதலுக்கு எண்ட் கார்டு போட”
“அப்போ இது அது தானா?”
“ம்ம்… அப்படித்தான் எல்லா சிம்டம்ஸ்ஸும் சொல்லுது”
தங்களுக்குள் ரகசியக்குரலில் கிசுகிசுத்துக் கொண்டு சிரித்த நண்பர்களை,”எங்ககிட்டயும் சொன்னா நாங்களும் சிரிப்போம்ல” என்று திவாகர் கலைக்க
“இல்ல… லேட்டாகிடிச்சி, அதனால  இன்னைக்கு எங்கூட தங்கிட்டு நாளைக்கு போன்னு தனா சொல்லுறான்… அதான் இல்ல நான் இப்பவே போறேன்னு சொல்லிட்டு இருந்தேன்” வாயில் வந்ததை சொல்லி சமாளித்தான் கிருஷ்ணா.
“வேணும்னா ஒன்னு செய்யலாமே. ஹேமாவும், சாருவும் ஹேமாவோட கார்ல தான் கிளம்புறாங்க. நீங்க வேணும்னா அவங்க கூட மதுரை வரைக்கும் ஜாயின் பண்ணிட்டு, அங்கயிருந்து பஸ்ல போகலாமே…” எளிதாக கிருஷ்ணா வீட்டுக்குச் செல்ல வழிசொன்ன அஸ்வினை இடைமறித்த ஹேமா
“இல்லை அஸ்வி… நான் இப்போ போற வழியில் திருச்சியில் என்னோட சித்தி வீட்டுக்கு போய்ட்டு தான் போவேன்” என்று சொல்ல
இல்லாத ஒரு புது சித்தியை இருப்பதாகச் சொன்ன தோழியின் பேச்சிலேயே கிருஷ்ணாவை தங்கள் காரில் உடன் அழைத்துச் செல்ல அவளுக்கு விருப்பமில்லை என்று புரிந்து கொண்டு, அடுத்து என்ன பேச என்று தடுமாறி நின்றவனிடம்,
“நோ ப்ராப்ளம்…நான் பாத்துக்குறேன் ப்ரோ…” என்று சொன்ன கிருஷ்ணா,’போறபோக்கைப் பாத்தா சாமி வரம் குடுத்தாக் கூட, பூசாரி வரம் குடுக்க விடாமல் தடுப்பார் போலயே’ என்று நினைக்க
மனதில் ஓடிய எண்ணத்தின் பிரதிபலிப்பாக கிருஷ்ணாவின் இதழ்களில் கீற்றாக புன்னகை ஒளிர்ந்தது.
*********
அன்று,”அதற்காகத் தான் காத்திருக்கிறேன் நான்…” என்று சொன்ன கிருஷ்ணா, திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் மதுரையிலிருந்து வரும் ஒவ்வொரு பஸ்ஸையும் ஆவலோடு பார்த்தவண்ணம், கடந்த ஒருமணிநேரமாக கால்கடுக்க காத்துக் கொண்டிருக்கிறான்.
இன்று தன்னுடைய மருத்துவபடிப்பை முடித்துக்கொண்டு சாருமதி ஊருக்கு வருகிறாள் என்ற தகவலை கேசவன் மூலம் தெரிந்து கொண்ட கிருஷ்ணா, 
சாருமதியை அழைத்து செல்லலாம் என்ற எண்ணத்தில், பொன்னைய்யனைத் தவிர்த்து தானே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.
அவன் காணத்தவம் கிடந்த அந்த தாமரை முகத்தாள் அப்போது வந்துநின்ற பேருந்திலிருந்து இறங்கி தன் தோளில் ஒன்று கையிலொன்று என்று தனது பயணப் பைகளைத் தூக்க, சட்டென்று அவளை நோக்கி சென்றான் கிருஷ்ணா.
ஆனால் அவளோ சிரித்தபடியே அங்கிருந்தே கையை ஆட்ட,’தன்னைப் பார்த்தா கையை ஆட்டுகிறாள்?’  ஒருநிமிடம் ஆடிப்போனவன், சிறிய சந்தேகத்தில் பின்னால் திரும்பிப் பார்க்க, அங்கே வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தான் ரகு.
‘அதானப் பார்த்தேன்… இவளாவது என்னைப் பார்த்ததும் சிரிக்குறதாவது?’ லேசாக அலுத்துக் கொண்டு நின்றிருந்தவனை, கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற அக்காவையும், தம்பியையும்
“ரகு…” என்றழைத்து நிறுத்த
திரும்பிப் பார்த்த இளையவன்,”ஓஹ்… நீங்களா? நான் கவனிக்கவேயில்ல”
அவன் கவனம் முழுவதும் அக்காவைத் தவிர வேறு யாரிடமும் இல்லை என்பது கிருஷ்ணாவுக்கு தெரியும். அதே போல் ரகுவின் அக்காவின் கவனம் அப்படியில்லை என்பதுவும் அவனுக்கு தெரியும்.
எதையும் காட்டிக்கொள்ளாமல்,”எப்படி வந்த?” என்று கேட்க
“கேசவன் அண்ணா பைக்க வாங்கிட்டு வந்தேன்”
‘அப்போ இன்னைக்கு எனக்கு வில்லன் கேசவன் தானா!’
மனதுக்குள் எண்ணம் ஓட
“லக்கேஜை வச்சிட்டு ட்டூவீலர்ல போய்டுவீங்களா? அதை வேணும்னா நம்ம வண்டியில போடு, நான் கொண்டு வர்றேன்”
‘அழைத்துப் போக தம்பி வந்து நிற்கும் போது தன்னுடன் வருவதற்கு சான்ஸ்ஸே  இல்லை’ என்பதை புரிந்து கொண்டவன் சொல்ல
இளையவனோ சொன்னதைச் செய்யாமல் தமக்கையைப் பார்த்தான்.
அவளோ,”வேண்டாம்…” என்று தலையசைக்க
“தேங்ஸ்… நாங்க பாத்துக்குறோம்” என்று ஒரு சின்ன சிரிப்பை கிருஷ்ணாவை நோக்கி வீசிவிட்டு தமக்கையோடு நகர்ந்தான் ரகுராம்….

Advertisement