Advertisement

சாருமதி.
அத்தியாயம் 11.
 கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்திருந்தார் வேதவல்லி. 
பொருத்தப்பட்டிருந்த மாற்று சிறுநீரகம் அவர் உடம்போடு இணைந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதை நன்றாக உறுதி செய்த பின்னர் தான் வேதவல்லியை டிஸ்சார்ஜ் செய்திருந்தார்கள் மருத்துவர்கள்.
அதன் பிறகும் குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் வந்த மருத்துவ மறுபரிசோதனைகளையும் மதுரை வீட்டிலிருந்து முடித்துவிட்டே வந்திருந்தார்கள்.
சாருமதியும் முழு உடல்நலத்தோடு வேதவல்லிக்கு முன்னரே மருத்துவமனையை விட்டு வெளியே வந்திருந்தாள். 
மருத்துவமனையிலிருந்து மகளோடு நேரடியாக சொந்த ஊருக்கு பயணப்பட இருந்த கல்யாணியை மதுரை வீட்டிலேயே தங்கியிருந்து சாருமதியின் உடல்நிலை நன்றாக தேறியபிறகு அழைத்து செல்லுமாறு பண்ணையார் சொல்லவே, அவ்வாறே செய்திருந்தார் கல்யாணி.
வீட்டை விட்டு பிரிந்திருந்த பத்து மாதங்கள் ஏதோ பலயுகங்களாகத் தெரிய, புதிதாக வீட்டை பார்ப்பது போல  வீட்டையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார் வேதவல்லி.
சிகிச்சை முடிந்து வேதவல்லி வீட்டுக்கு வந்தது தெரியவும்  உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள் என வேதவல்லியின் நலனை விசாரிப்பதற்காக ஆட்கள் வீட்டிற்கு வருவதும், போவதுமாக இருந்தார்கள்.
 வேதவல்லியின் உடன்பிறந்தவர்களும், அதுவரையிலும் மகளை காணவராத தங்கள் அம்மாவை அழைத்துக்கொண்டு தங்கள் அக்காவை பார்க்க வந்திருந்தார்கள்.
 வயோதிகத்தோடு மஞ்சள் காமாலை நோயும் சேர்ந்து கொள்ள வேதவல்லியின் அம்மாவால் நெடுந்தூர பயணம் மேற்கொள்ள இயலவில்லை. அதனாலேயே அவர் மதுரை வந்து மகளை காண இயலவில்லை.
இப்போது மகளும் வீடு திரும்பியிருக்க, அவரும் குணமாகி விடவே முதல் ஆளாக கிளம்பி மகளை பார்க்க வந்து விட்டார்.
புனர்ஜென்மம் எடுத்து வந்திருந்த வேதவல்லியோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு அங்கேசுற்றி, இங்கேசுற்றி, எங்கே சுற்றினாலும் கடைசியில் சாருமதியிலேயே வந்து நிற்க
சற்றே எரிச்சலான வேதவல்லியின் அம்மா,”அந்த பிள்ளையை டாக்டருக்கு படிக்க வைக்குறதுக்கு, அவ  இதைக் கூட நமக்கு செய்யாட்டா எப்படி?” என்று ஏதோ சாருமதி இவர்களுக்கு செய்வதற்கு கடமைப்பட்டவள் என்பது போல வாயைவிட
அவ்வளவு தான்… மாமியாரென்றும் பாராமல் ஒரு பிடிபிடித்து விட்டார் பண்ணையார்.
ஏற்கனவே மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு நாள் தான் மட்டும் சாருமதியிடம் சென்று தயங்கித் தயங்கி,”தப்பா எடுத்துக்க கூடாது சாரு! நீ டொனேட் பண்ணுனதுக்கு ஏதாவது பணம்…”
தன் வார்த்தைகளை அவர் முடிக்கக்கூட இல்லை. அதற்கிடையில் ஒரு சிறு புன்னகையோடு தலையை இடவலமாக அசைத்து மறுத்தவள்,”நான் பணத்துக்காக பண்ணலீங்க ய்யா” என்று சொல்லியிருந்தாள்.
‘அவள் பணத்துக்காக செய்யவில்லை என்பது தான் அவருக்கேத் தெரியுமே!’ இருந்தாலும் கேட்டிருந்தார்.
‘அப்பேர்ப்பட்ட பெண்ணை, தன் மாமியார் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே?’ என்ற கோபம் வார்த்தைகளாக வெடித்து சிதறிவிட்டது.
யாராலும் எதுவுமே பண்ணமுடியாத நிலமை. ஒருவாரம் பத்துநாள் மகளோடு இருந்து விட்டு போகவேண்டும் என்று வந்திருந்த பெண்மணி, மருமகன் போட்டபோடில் மறுநாளே பெட்டியைக் கட்டிக்கொண்டு மக்களோடு கிளம்பிச் சென்றுவிட்டார்.
ஊருக்கு வந்த நாளிலிருந்து காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு அலைந்த பண்ணையார் அன்று சற்றே ஓய்வாக தங்கள் அறையில் அமர்ந்திருக்க,
அருகில் அமர்ந்து அவர் தோள்களில் தன் தலையை சாய்ந்துகொண்ட வேதவல்லி,”எனக்கு இதெல்லாம் ஏதோ கனவோன்னு தோணுதுங்க”  மெதுவாக முணுமுணுத்தார்
“ஏம்மா?”
“என்னோட வாழ்க்கையில திரும்பவும் இதையெல்லாம் நான் அனுபவிப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலை”
லேசாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசத்தொடங்கிய மனைவியின் கூந்தலை தடவிக்கொடுத்தவர்,”ப்ச்ச்… வேதா! நாம அதெல்லாம் தான் கடந்து வந்தாச்சே! திரும்பவும் அதைப்பற்றி ஏன் பேசுற?” லேசாக அதட்டினார்.
“இல்லங்க… சாரு மட்டும் சமயத்துக்கு உதவி செய்யலைன்னா நான் என்ன ஆகியிருப்பேன்னு எனக்கே தெரியலை”
“சின்னப் பொண்ணா இருந்தாலும் எவ்வளவு நல்லமனசு ல்ல அவளுக்கு. நம்ம வாழ்க்கையே நமக்கு திருப்பி தந்தவளுக்கு நாமளும் ஏதாவது செய்யணுங்க” கணவனின் முகம் பார்த்து சொல்ல,
“கண்டிப்பா செய்யணும் வேதா… எனக்குள்ளயும் சதா அந்த எண்ணம் தான் ஓடிக்கிட்டு இருக்கு” என்றவர் மெதுவாக
“வேதா! வேணும்னா இப்படி பண்ணிடுவமா? என்க
“எப்படிங்க?”
“பேசாம சாருவை நம்ம கிருஷ்ணாவுக்கு கல்யாணம் செய்து வைத்து நம்ம வீட்டுக்கு மருமகளாக்கிடுவமா? இதுல உனக்கொன்னும் அப்ஜக்ஷன் இல்லையே?”
சட்டென்று கணவனின் தோளிலிருந்து விலகி அவரின் முகம் பார்த்தபடி,”நடந்தா நல்லாத்தான் இருக்கும்! ஆனால்… கிருஷ்ணாவுக்குத் தான் அவளைக் கண்டா ஏனோ பிடிக்கிறதில்லையே?”
அன்று,”நான் எல்லா விஷயங்களையும் பிறகு உங்களுக்கு சொல்லுறேன்” என்று கணவனிடம்  சொல்லியிருந்தபடியே, அவர்கள் இருவருக்குமிடையே இருந்த உரசல்களை தனக்கு தெரிந்த வரையில் கணவனிடம் சொல்லியிருந்தார் வேதவல்லி. 
“ஹஹஹ… அதெல்லாம் அந்தகாலம் ம்மா… இப்போ உன் பிள்ளை கிட்ட கேட்டுப்பாரு. அவன் சாருமதியை எனக்கு பிடிக்கலை ன்னு சொல்லட்டும் பாக்கலாம்” குரலில் சவாலிருந்தது.
“நிஜமாவாங்க!”
“ம்ம்…நிஜம்மா தான்” 
“வேதா உனக்கொன்னு தெரியுமா? சாரு டோனேட் பண்ணுறேன்னு சொன்னாலும் எனக்கு அவளை இந்த விஷயத்தில இழுத்து விட முதல்ல கொஞ்சம் யோசனையாத் தான் இருந்தது.”
“வயசுப்பிள்ளை…  அதோட எதிர்காலம்  இந்த விஷயத்தால பாதிக்கப்பட்டுற கூடாதேன்னு கவலையா  இருந்தது”
“அப்போ தான், நம்ம கிருஷ்ணா அவளை கல்யாணம் பண்ணிகிட்டா இதனால எந்த பிரச்சினையும் எதிர்காலத்தில் சாருவுக்கு   வராதுன்னு தோணிச்சு.”
 “ஆனால் என்னோட முடிவை கிருஷ்ணா மேல திணிக்காமல் என்னுடைய மனக்குழப்பத்தை மட்டும் அவன்கிட்ட சொன்னேன்”
“என் குழப்பத்தைப் பார்த்து அவனாவே சாருமதியை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுவான்னு நினைச்சேன்.”
“ஆனால் நம்மபுள்ள சொன்னான் பாரு…ஹஹஹ…”
“என்னங்க சொன்னான்?” வேதவல்லியின் குரலில் ஆர்வமிருந்தது. 
“அப்டி இப்டி ன்னு ஏதாவது சாரு கிட்ட சொல்லி அவன் அம்மாவோட சர்ஜரியை நான் தாமதம் பண்ணிடக்கூடாதாம். ஹஹஹ… அவனுக்கு மட்டும் தான் உம்மேல பாசம் அதிகம் என்கிற மாதிரி எங்கிட்டயே சொல்லுறான்”
அந்த நாளின் நினைவுகளிலேயே மூழ்கியவர் போல பேசிக் கொண்டிருந்த தன் கணவனையே விழிஅகற்றாது பார்த்துக்கொண்டிருந்தார் வேதவல்லி.
“அவன் பதில் உண்மையிலே அன்னைக்கு எனக்கு  ஏமாற்றத்தைத் தான் தந்தது. ஆனால் உன் மேல அவனுக்குள்ள பாசம் அவனை கண்டிப்பா மாத்தும்னு நான் நம்புனேன்”
“என் நம்பிக்கை வீண் போகலை வேதா! முற்று முழுசா எம்புள்ளை எப்படி இருக்கணும் னு நான் ஆசைபட்டனோ, அப்படியே இப்போ மாறி நிக்குறான் கிருஷ்ணா”  
“அப்படியே சாருமதி மேல அவனுக்கு ஒரு விருப்பமும், அக்கறையும் வந்துருக்கு. அதை எத்தனையோ நாள் ஹாஸ்பிடல்ல வைத்து கண்கூடா நான் அவனோட கண்கள்லயும், செயல்கள்லயும் பாத்துருக்கேன்’
“அப்போ இன்னும் இரண்டு மூனு மாசத்தில படிப்பை முடிச்சிட்டு சாருமதி ஊருக்கு வந்துடுவான்னு சொன்னீங்களே.  வந்த உடனே சாருமதியோட அம்மாகிட்ட பேசி கல்யாணத்தை முடிச்சிடலாமா ங்க” பேச்சில் பரபரப்போடு கூடிய துள்ளல் நிறைந்திருந்தது வேதவல்லியிடம்.
 
“எதுக்கு இந்த அவசரம்? வருவான்… எனக்கு சாருமதியை கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டு கிருஷ்ணா நம்ம கிட்ட வருவான். அப்போ பண்ணலாம்” என்று சொன்ன கணவனின் வார்த்தைகளில் அப்போதே மகனின் கல்யாண கனவுகளில் மிதக்க ஆரம்பித்தார் வேதவல்லி.
மறுநாள் மூவரும் சாப்பாட்டிற்காக டைனிங் டேபிள் முன் உட்கார்ந்திருக்க, எப்போதும் போல் முதல் வாய் உணவை தன் மனைவிக்கு ஊட்டினார் பண்ணையார்.
“ஏன்பா? உங்க வைஃப் க்கு மட்டும் தான் ஊட்டிவிடுவீங்களா? எங்களுக்கெல்லாம் கிடையாதா?” என்று கேட்டபடியே தகப்பனின் கையால் உணவை வாங்கிக் கொண்ட மகனிடம்,
“உன் கல்யாணத்துக்கப்புறம் என் மருமகளுக்கு நீ ஊட்டிவிடு இல்லை அவ கையால நீ வாங்கிக்கோன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் குட்டா. அதை விட்டுட்டு எங்க மேல ஏன்டா கண்ணுவைக்குற?”
எப்போதும் போல விளையாட்டாக சொன்ன அன்னையின் வார்த்தைகளில் இதழ்கடையோரம் வெட்கச் சிரிப்பு பூக்க, கண்கள் கற்பனையில் விரிய நின்ற மகனைக் கண்டு  அவனை பெற்றவர்களின் முகத்தில் ரகசிய சிரிப்பு விரிந்தது.
நிமிட நேர இடைவெளியில் தன்னை மீட்டுக் கொண்டவன், சிரித்தபடியே,”உங்க மருமகக் கையால வாங்கிக்கணுமா? எதை வாங்கணும்? இதையா?” என்று அடிப்பது போல தன் கையைக் காட்ட
“அதுவா இருந்தாலும் கூட எனக்கு‌ ஒன்னும் பிரச்சினை இல்லை. ஏன்னா வாங்கப் போறது நீ தானே” மலர்ந்து சிரித்த அன்னையோடு தானும் சிரித்தவன்,
“அப்பா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். சாப்பிட்டு முடிச்சதும் பேசலாமா? நீங்க ஃபீரியா?” என்று கேட்க
தன் மகனின் அணுகுமுறையில் அகமகிழ்ந்து போயிருந்த தந்தை,”பேசுவோமே” என்றார் உற்சாகமாக.
உண்டு முடித்து ஹாலில் வந்து உட்கார்ந்த உடன்,”நம்ம பிரைமரி ஸ்கூலை மிடில் ஸ்கூலா மாத்த அப்ளை பண்ணுவோமா ப்பா” என்று கேட்ட மகனின் கேள்வியில் மகிழ்ந்து தான் போனார் மனிதர்.
தன்னுடைய படிப்பு முடிந்த கடந்த ஆறுமாத காலங்களாக  தன்னை அதிகம் அங்கிமிங்கும் அலையவிடாமல் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு தன்மகனே செய்வதை அவரும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.
கேசவன் வேறு, ஃபோன் பண்ணும் போதெல்லாம்,”நம்ம கிருஷ்ணா முன்மாதிரி இல்லீங்க ய்யா… என்ன பொறுப்பு! என்ன பதவிசு! என்று அடிக்கடி சிலாகித்திருக்கிறான்.
‘இப்படியெல்லாம் பொறுப்புகளை தன் கையிலெடுத்து மகன் செய்ய மாட்டானா?’ என்று ஏங்கிய மனிதர் மகன் தானே கேட்கவும் உடனே சம்மதிக்க
தங்கள்  தொடக்கப்பள்ளியை, நடுநிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டுமென்றால் பள்ளியில் என்னன்ன வசதிகளை இன்னும் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
இதுநாள் வரையிலும் தகப்பனிடம் தன் மூலமே தனது காரியங்களை சாதித்துக் கொள்ளும் மகன், முதன்முறையாக ஒரு விஷயத்தை பற்றி எந்த தயக்கமுமின்றி அவரிடம் பேசிக்கொண்டிருப்பதை ஒருவித பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் வேதவல்லி.
************”

Advertisement