Advertisement

அத்தியாயம் – 17
சென்னையை நோக்கி சீரான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்க அலைபேசி சிணுங்கி ராகவ் காலிங் என்றது.
“கிளம்பும்போதே சொல்லிட்டு தான கிளம்பினேன், இப்ப எதுக்கு ராகவ் கூப்பிடறான்…” என யோசித்துக் கொண்டே “அம்மு, எடுத்து என்னன்னு கேளு…” என்றான் பிரம்மா.
“ஹலோ ராகவ், அவர் வண்டி ஓட்டிட்டு இருக்கார்… எதுவும் சொல்லனுமா…” என்றாள் ஓவியா.
“ஓ… ஓகே மேடம்…” என்றவன் சற்று தடுமாறினான்.
“என்ன விஷயம்னு உங்க தெய்வம் கேக்குறார்…”
“அ..அது, இன்னைக்குப் பேப்பர் படிச்சீங்களா…” தயக்கத்துடன் வந்தது அவன் வார்த்தைகள்.
“இல்லையே, கிளம்பற அவசரத்துல அதுக்கு நேரம் இல்ல… ஏன், அதுல என்ன…” என்றாள் குழப்பத்துடன்.
“அது… வந்து… வழியில் எங்காச்சும் கடைல தினக்கதிர் பத்திரிகை இருந்தா வாங்கிப் பாருங்க…”
“ஏன், அந்தப் பத்திரிகைல என்ன போட்டிருக்கான், ராகவ்…” அவள் புரியாமல் கேட்க வண்டியை ஓரத்தில் நிறுத்திய பிரம்மா அவளிடமிருந்து பேசியை வாங்கிக் கொண்டான்.
“ராகவ், என்ன விஷயம்னு தெளிவா சொல்லு மேன்…” என்றான் குரலில் சற்று எரிச்சலுடன்.
“தெய்வமே… உங்க ரெண்டு பேரையும் இணைச்சு அந்தப் பத்திரிகைல ஒரு நியூஸ் வந்திருக்கு… அதான் நீங்க பார்த்து இருப்பீங்களோன்னு கேட்டேன்…” என்றதும் திகைத்தனர்.
“எங்களைப் பத்தி என்ன நியூஸ், நாங்க யாருக்கும் எந்த விஷயமும் கொடுக்கலியே…”
“நீங்க கொடுக்கலேன்னா என்ன, வேண்டியதை அவங்களே எடுத்துப் போட்டுக்கறது தான பத்திரிகைக்காரங்க வேலை… உங்களைப் பத்தி அதுல ஒரு கிசுகிசு வந்திருக்கு…”
“கிசுகிசுவா…” முகத்தை சுளித்தபடி கேட்டான் பிரம்மா.
“ம்ம்… நீங்களே வாங்கிப் படிச்சுப் பாருங்க… எனக்கு வேற ஒவ்வொரு பத்திரிக்கை ஆபீசுல இருந்தும் பிரம்மா எங்கே, அதுல வந்திருக்க நியூஸ் உண்மையான்னு கேட்டு போன் வந்துட்டே இருக்கு…”
“சரி, நான் பார்க்கறேன்… நீ கட் பண்ணு…” என்றவன் ஓவியாவிடம் அதை சொல்ல அதிர்ச்சியோடு நோக்கினாள்.
“என்ன தேவ், நம்மளைப் பத்தி என்ன கிசுகிசு வந்திருக்கும்… அதைப் பார்த்து தான் அப்பாவும் கால் பண்ணிருப்பாரோ…”  
“ம்ம்… இருக்கலாம், கடைல பத்திரிகை பார்த்தா சொல்லு… வாங்கிப் பார்ப்போம்…” சொன்னவன் வண்டியை எடுத்தான்.
சிறிது நேரத்தில் ஓவியாவுக்கு ராதிகாவின் அழைப்பு வரவும், “தேவ், இவளும் அதை சொல்ல தான் கூப்பிடறான்னு நினைக்கிறேன்…” சொல்லிக் கொண்டே எடுத்தாள் ஓவியா.
“ஹலோ, சொல்லு ராதி…”
“ஓவி, தஞ்சாவூர்ல இருந்து வந்துட்டு இருக்கீங்களா…”
“ஆமா, பாதி வழியில இருக்கோம்… உனக்கு இப்ப தலைசுத்தல் பரவால்லியா…” தோழியை விசாரித்தாள்.
“அது இருக்கட்டும், உங்க ரெண்டு பேரையும் இணைச்சு தினக்கதிர் பத்திரிகைல போட்டோவோட நியூஸ் பார்த்தேன்… உங்களுக்கு தெரியுமான்னு கேட்க தான் கூப்பிட்டேன்…”
“ராகவ் கால் பண்ணி சொன்னார், நாங்க இன்னும் பார்க்கலை, அப்படி என்ன போட்டிருக்கான் ராதி…”
“வாட்சப்ல உனக்கு போட்டோ அனுப்பறேன் பாரு…” சொன்ன ராதிகா அழைப்பைத் துண்டித்தாள்.
வாட்சப் செயலியை ஓவியா திறக்கவும் மெசேஜ் ரிசீவ் ஆக ராதி அனுப்பிய போட்டோவைக் கண்டவள் அதிர்ந்தாள்.
“ஓவியரின் கரம் பிடிக்குமோ ஓவியம்…” கொட்டை எழுத்துகளின் வரிகளுக்கு கீழ் சின்ன எழுத்துகள் ஓடியது.
மும்மூர்த்திகளில் ஒருவரின் பெயர்கொண்ட, ஓவியங்களைப் படைக்கும் தொழிலைக் கொண்டவரின் வசமானதோ நாட்டிய ஓவியம்… கலைக்குப் பேர் போன ஊரில் எங்கெங்கு காணினும் ஜோடியாய் இவர்களின் தரிசனம்…
ஓவியரின் வசமான ஓவியத்தையும், ஓவியத்தில் மயங்கிய ஓவியரையும் காணவே கண் கொள்ளாக் காட்சி… இருவரின் ஜோடிப் பொருத்தம் பிரமாதம்… சீக்கிரமே இல்லறத்தில் இணையும் நாள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்…” என்ற வார்த்தைகளின் கீழே அவர்களின் போட்டோவும் இருந்தது..
பிரம்மாவும் கேட்பதற்காய் சத்தமாய் வாசித்த ஓவியா அதிர்ந்து பிரம்மாவை நோக்க அவன் இயல்பாய் இருந்தான்.
“தேவ், என்ன இப்படிப் போட்டிருக்காங்க…” அவள் கேட்க அமைதியாய் போட்டோவைப் பார்த்துவிட்டு,
“போட்டோ கிளாரிட்டி கொஞ்சம் கம்மி தான்… என்கிட்ட கேட்டிருந்தா நானே நல்ல போட்டோ கொடுத்திருப்பேன்…” எனவும் திகைப்புடன் நோக்கினாள் ஓவியா.
“தேவ், நான் என்ன சொல்லுறேன்… நீங்க என்ன பேசறீங்க…”
“போட்டோவோட நியூஸ் போட்டிருக்கான்.. இது எப்படி கிசுகிசு ஆகும்… நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன்… நாம கோவில்ல ஒரு பத்திரிகைக்காரனைப் பார்த்தோமே… கண்ணாடி கூட போட்டிருந்தானே… இது அவன் வேலையா தான் இருக்கும்…” என்றான் இயல்பாக.
“ஓ… இப்படி ஒரு நியூஸ் கேட்டு உங்களுக்கு அதிர்ச்சியா இல்லையா… சாதாரணமா இருக்கீங்க…” அவள் அதிசயமாய் கேட்க புன்னகைத்தான் பிரம்மா.
“எதுக்கு அதிர்ச்சி, அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை தானே… இல்லேன்னு உன்னால மறுக்க முடியுமா..” தலையை சாய்த்து புருவத்தைத் தூக்கி கேட்க சிரித்தவள்,
“இருந்தாலும் நமக்குத் தெரிஞ்ச உண்மையை அதுக்குள்ள அவன் ஊரு உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிருக்க வேண்டாம்… இனி எத்தனை பேருக்கு இதுக்கு பதில் சொல்லணும்…” என்றாள் அங்கலாப்புடன்.
“நமக்கு ப்ரீயா விளம்பரம் கொடுத்து நம்ம காதலை உலகத்துக்கே அறிவிச்சிருக்கான்… அதைப் பாராட்டாம பீல் பண்ணிட்டு இருக்க…” என்றவனை செல்லமாய் அடித்தாள்.
“உங்களால எப்படி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்க முடியுது தேவ்… எனக்கு இதெல்லாம் பார்த்தா சட்டுன்னு அதிர்ச்சி தான் வரும்… நீங்க எப்படி கூலா இருக்கீங்க…”
“இதை நான் எதிர்பார்த்தேன் அம்மு…” ஸ்டீயரிங்கை இயக்கிக் கொண்டே சொல்ல வியப்புடன் நோக்கினாள்.
“என்ன எதிர்பார்த்தீங்களா…” கண்கள் விரியக் கேட்டவளை நோக்கியவன், “இப்படில்லாம் கண்ணை விரிச்சுப் பார்க்காத ஓவி… அப்புறம் வண்டியை சைடாக்கி நிறுத்திட்டு உன் கண்ணோட ஆழத்தைப் பத்தி ஆராய்ச்சி பண்ணத் தொடங்கிருவேன்…” அவன் சொல்ல நாணத்தில் சிவந்தவள்,
“ச்சீ போங்க, சீரியஸா பேசிட்டு இருக்கும்போது எதையாச்சும் சொல்லிட்டு…” சிணுங்கியவளை ரசித்தான்.
“ஓவி, நீ சிணுங்கும்போது பார்க்க எப்படி இருக்க தெரியுமா…”
“ஹூம், எப்படி இருக்கனாம்…” சிணுங்கலாய் கேட்டாள்.
நான் வரைந்த ஓவியங்கள்
எல்லாம் உயிர் கொள்கின்றன
உன் நாணச் சிவப்பின் ஒளியில்…
பேசா சித்திரங்களும் எனை
நோக்கி கண் சிமிட்டி
உரையாடத் தொடங்குகின்றன…
அந்த சிமிட்டல்களில் எல்லாம்
நட்சத்திரத்தின் ஜொலிஜொலிப்பு…
உயிர்ப்பில் எல்லாம் உன்
உருவத்தின் பிரதிபலிப்பு…
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பிரமிப்புடன் பார்த்த ஓவியா, “நீங்க ஓவியன் மட்டுமில்ல தேவ்… அழகா கவிதை சொல்லும் கவிஞனும் கூட… என்ன, கவிதைக்குப் பொய் அழகு… நீங்க கொஞ்சம் கூடுதலா பொய் சொல்லிட்டீங்க…” சிரிப்பை சிதறவிட அவனும் சிரித்தான்.
“எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு… நாம இப்படி சிரிச்சிட்டு இருக்கோம்…” மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவளை கனிவுடன் நோக்கினான் பிரம்மா.
“ஓவி, நீ பீல் பண்ணிட்டே இருந்தா நான் வேற முடிவு எடுக்க வேண்டி வரும்…”
“என்ன முடிவு தேவ்…”
“நாங்க அப்படி இல்லை, எங்களுக்குள்ள வெறும் நட்புதான் இருக்குன்னு அந்த பத்திரிகைக்கு மறுப்பு தெரிவிச்சு ஒரு அறிக்கை கொடுத்துடட்டுமா…” அவன் கேட்க திகைத்தாள்.
“இங்க பாரு ஓவி… நம்ம வாழ்க்கையை யாரோ ஒருத்தர் முடிவு பண்ண முடியாது… இது பொய்யா இருந்தா கவலைப் படலாம்… உண்மைதான்னு நமக்குத் தெரியும்… தென் ஒய்… அதைத் தூக்கிப் போட்டுட்டு ப்ரீயா இரு…”
“இருந்தாலும் நம்மைத் தெரிஞ்சவங்க என்ன நினைப்பாங்க…”
“தெரியாதவங்க தான் ஏதேதோ நினைப்பாங்க… தெரிஞ்சவங்க நிச்சயம் நல்ல விதமா தான் நினைப்பாங்க… அதை நான் பார்த்துக்கறேன், சும்மா இதையே பேசிட்டு இருக்காம அத்தான் தோள் ப்ரீயா தான் இருக்கு… அப்படியே சாஞ்சுக்கலாம்ல…” என்றவனை ஒரு அதிசயப் பிறவி போல் பார்த்தவள், “ஹூம்… உங்களை எல்லாம் பெத்தாங்களா, செய்தாங்களான்னு தெரியல… எதுக்குமே அலட்டிக்காம, கூலா இருக்கற நீங்க ஒரு அதிசயப் பிறவி, தேவ்…” சொன்னவளை ஒரு கையால் வளைத்து அருகே இழுத்துக் கொண்டான் தேவ்.
“இன்னும் சில மணி நேரத்துல சென்னை போயிருவோம், அப்புறம் நீ ஒரு பக்கம் ஒடுவ, நான் ஒரு பக்கம் ஓடுவேன்… ஒண்ணா இருக்கிற நிமிஷத்தை சந்தோஷமா ரசிக்காம புலம்பிட்டே இருந்தின்னா, அப்புறம் அந்த உதட்டை லாக் பண்ணுறதைத் தவிர வேற வழியில்லை…” அவன் தனது இதழை நாவால் தடவிக் கொண்டே மிரட்டலாய் சொல்லவும், குப்பென்று சிவந்தவள் நாணத்துடன் அவனை உதறிவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதித்தாள்.
குறும்பாய் அவளைப் பார்த்தவன், “என்னாச்சு, ஷாக் அடிச்ச போல ஓடற… நமக்குப் பேச எத்தனை விஷயங்கள் இருக்கு… அதை எல்லாம் பேசுவோம்…” என்றான்.
“ம்ம்… சரி சொல்லு தேவ், நீங்க எங்களை விட வசதியானவங்க, உங்க வீட்டுல நம்ப கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா…” அவள் சட்டென்று கேட்க திகைத்தான்.
“என்ன ஓவியமே, எடுத்ததுமே அதிரடி கேள்வியா கேக்கற…”
“ப்ச்… சொல்லுங்க தேவ்… உங்க ஓவியத் திறமையையே மதிக்காதவங்க என்னை எப்படி ஏத்துப்பாங்க…”

Advertisement