Advertisement

“அதெல்லாம் என் பாடு… ஓவியத்தில் நான் எடுத்த முடிவு தான் நம்ம வாழ்க்கைக்கும்… அவங்க சம்மதிச்சா அரேஞ்சுடு மேரேஜ்… சம்மதிக்கலேன்னா லவ் மேரேஜ்… சிம்பிள்…”
“ஹூம்… அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்… நம்ம ரெண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கி, எல்லாரோட ஆசிர்வாதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கணும்… என் பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிட்டு சொந்தங்களே இல்லாம வாழ்ந்தவங்க… தனியா வாழ்ந்த எனக்கு நிறைய சொந்தங்களோட இருக்கணும்னு ஆசையா இருக்கு… அது உங்க மூலமா தான் நடக்கணும்…” என்றாள் கண்ணில் ஈரத்துடன்.
“ஹேய், என்ன ஓவி இது… இதுக்குப் போயி கண்கலங்கிட்டு… உன் ஆசை நிறைவேற நிச்சயம் முயற்சி பண்ணறேன்…”
அவனது தோளில் சந்தோஷமாய் சாய்ந்து கொண்டாள். அதற்குப் பின் ஏதேதோ குடும்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தனர். வழியில் இளநீர் மட்டும் குடித்தவர்கள் மதியம் இரண்டு மணிக்கு வீட்டை நெருங்கி இருந்தனர்.
அவர்களைப் புன்னகையுடன் வரவேற்ற சிவநேசன் அன்று விடுமுறை எடுத்திருந்ததால் சமையலை முடித்து அவர்களுக்காய் காத்திருந்தார்.
“அப்பா…” தந்தையைக் கட்டிக் கொண்டவளை மெல்ல அணைத்து உச்சியில் முத்தமிட்டவர், “அம்மு, நீ இல்லாம வீடே நல்லால்லடா…” என்றவரிடம், “நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் ப்பா…” என்று தேவ் நோக்கிக் கண்ணடிக்க, “அடி கேடி…” சிரித்துக் கொண்டான்.
“சரி, ரெண்டு பேரும் பசியோட இருப்பீங்க, சாப்பிடுங்க…”
“ஆமாப்பா, செமப்பசி… இந்த தேவ் சாப்பிட ஒண்ணுமே வாங்கித் தரலை, தெரியுமா…”
“அடிப்பாவி… வீட்டுல அப்பா கூட சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிட்டு இங்க வந்து என்மேல பழி போடறியா…” என்று தேவ் கேட்க, “வெவ்வவெவ்வே…” என அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அதை சந்தோஷத்துடன் பார்த்து நின்ற சிவநேசன், “அவ சும்மா வம்பிழுக்கிறா மாப்பிள்ள… நீங்க போயி பிரஷ் ஆகிட்டு வாங்க…” என்று டவலை நீட்ட புன்னகையுடன் சென்றான் தேவ் கிருஷ்ணா.
இருவரும் வந்ததும் தட்டை வைத்து பரிமாறியவர், “சாரி, நான் மாத்திரை போடணும்னு நேரமே சாப்பிட்டேன்… தப்பா நினைச்சுக்காதிங்க…” என்றதும், “என்ன மாமா, இதுக்குப் போயி எங்க கிட்ட சாரி சொல்லிட்டு… நமக்குள்ள என்ன பார்மாலிட்டீஸ்…” தேவ் சொல்ல, அவனைப் பெருமையுடன் நோக்கி கண் அடித்தவளை திகைப்புடன் நோக்கினான்.
சாம்பார், அவியல், கூட்டு என்று அவர் சமைத்திருந்ததை திவ்யமாய் சாப்பிட்டு எழுந்தனர்.
சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தவர், “அந்தப் பேப்பர் விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… என்னையே நாலஞ்சு பேர் கூப்பிட்டு விசாரிச்சாங்க… சட்டுன்னு உங்களுக்குத் தெரிஞ்சு சங்கடப்படக் கூடாதுன்னு தான் ராதிகா மூலமா பேச சொன்னேன்… பிரச்சனை இல்லையே…” என்றார்.
“எல்லாரும் கண்டிப்பா எனக்கும் கூப்பிட்டு விசாரிப்பாங்க… ஆமா, அப்படித்தான்னு நாம சம்மதிச்சுட்டா வாழ்த்து சொல்லிட்டுப் போகப் போறாங்க… சரிதானே மாமா…” என்றவனைத் திகைப்புடன் நோக்கியவர்,
“நீங்க இதுக்கு கோபப் படுவீங்கன்னு நினைச்சேன்… ரொம்ப கூலா இருக்கீங்க… உங்களோட இந்த சுபாவம் தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்றவர் மகளிடம் திரும்பி,
“அம்மு, தம்பி எல்லாம் சொன்னார்… உனக்கும் விருப்பம் தானே… இனி இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்ல மாட்டியே…” என்றதும் நாணத்துடன் புன்னகைத்தவள், “வேண்டாம்னு சொல்ல மாட்டேன் ப்பா… எப்ப பண்ணி வைப்பீங்கன்னு தான் சொல்லுவேன்…” என்றுவிட்டு அறைக்குள் ஓடிவிட, இருவரும் சிரித்தனர்.
“ஹாஹா பார்த்திங்களா, அப்ப இத்தனை காலமும் உங்களை மனசுல வச்சிட்டுதான் கல்யாணத்தை தட்டிக் கழிச்சிருக்கா… இப்பதான் எனக்கும் நிம்மதியாருக்கு மாப்பிள்ள… சீக்கிரமே உங்க வீட்டுல பேசிட்டா அடுத்து கல்யாண ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கிடலாம்…” என்றார் சிவநேசன்.
“மாமா, அடுத்தவாரம் நான் அப்பாவோட அறுபதாம் கல்யாணத்துக்கு ஊருக்குப் போறேன்… அப்ப இதைப் பத்தி பேசிட்டு வந்திடறேன்…” என்றான் தேவ் யோசனையுடன்.
“ம்ம்… சரி மாப்பிள்ள… மனசு ரொம்ப நிறைஞ்சிருக்கு… அந்தப் பேப்பர்ல வந்த விஷயத்தைப் பார்த்ததும் கொஞ்சம் கருக்குன்னு இருந்துச்சு… அதுக்கப்புறம் உங்களோட போன்ல பேசவும் தான் மனசு லேசாச்சு… இப்ப ரொம்ப நிறைவா இருக்கு…” என்றார் சந்தோஷத்துடன்.
“சரி மாமா, எனக்கு நிறைய பென்டிங் வொர்க் இருக்கு… நானும் கிளம்பறேன்…”
“ம்ம்… அம்முகிட்ட சொல்லிட்டுப் போங்க…” என்றதும் அவள் அறை நோக்கி நடந்தான் பிரம்மா.
அறையில் நாணப் புன்னகையுடன் கட்டிலில் அமர்ந்து எதையோ யோசித்து சிரித்துக் கொண்டிருந்தவளின் பின்னில் மெல்ல வந்து நின்றவன் அவளது பின் கழுத்தில் மென்மையாய் முத்தமிட, அதிர்ந்து திரும்பினாள் ஓவியா.
அவனைக் கண்டதும் நாணத்துடன் குனிந்து கொண்டவளின் கை பற்றி அருகே இழுத்தவன் அணைக்க முயல, திமிறி விடுபட முயன்றவள் தோற்று, “ப்ச்… விடுங்க தேவ், அப்பா பார்த்தா என்ன நினைப்பார்…” கொஞ்சலாய் சிணுங்கினாள்.
“மாமா என்ன நினைப்பார், சீக்கிரமே கல்யாணத்துக்கு நாள் குறிக்கனும்னு நினைக்கப் போறார்… சரி, கிளம்பட்டுமா…” அவள் தலையில் செல்லமாய் முட்டி கேட்டான்.
“நிச்சயம் கிளம்பத்தான் வேணுமா…”
“வேண்டாம்னா சொல்லு… இங்கயே இருந்துடறேன்…” அவன் சொல்லும்போதே அலைபேசி சிணுங்க, அவளை விட்டு அழைப்பை எடுத்தான்.
“அம்மா கூப்பிடறாங்க…” யோசனையுடன் கூறியவன்,
“ஹலோ அம்மா, நல்லாருக்கீங்களா… என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கீங்க…” அன்போடு விசாரித்தான்.
“ஒண்ணும் இல்லப்பா, நீ எப்ப ஊருக்கு வர்றேன்னு கேக்க தான் கூப்பிட்டேன்…”
“இங்க கொஞ்சம் வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு அடுத்த சனிக்கிழமை கிளம்பி வர்றேன் மா… திங்கள் தானே அப்பாவோட பிறந்த நாள்… அது முடிஞ்சு ரெண்டு நாள் இருந்துட்டு ரிட்டர்ன்க்கு பிளான் பண்ணிருக்கேன்…”
“ம்ம், உன் கூட அந்தப் பொண்ணையும் அழைச்சிட்டு வா…”
அன்னை சொல்லவும் திகைத்தவன், “எ..எந்தப் பொண்ணு மா…” திணறலுடன் கேட்க,
அவன் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓவியா என்னவென்று சைகையில் கேட்டாள்.
“இரு…” என்று கை காட்டியவன்,
“என்னப்பா, தெரியாத போல கேக்கற… உன்னோட போட்டோல சிரிச்சுட்டு இருந்தாலே, அந்த நாட்டியக்காரப் பொண்ணு… அவளை தான் சொல்லறேன்…” என்றதும் நிஜமாலுமே உள்ளுக்குள் அதிர்ந்தான் பிரம்மா.
“ம்ம்… அம்மா, அது வந்து…”
“இங்க பாரு தேவ், எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்… இதை உன்கிட்ட சொல்ல சொன்னது உன் அப்பா… அவர் மேல கொஞ்சமாச்சும் மரியாதை பாக்கி இருந்தா, அப்பா சொன்னபடி செய்…” அழுத்தமாய் அன்னை சொல்ல,
“அதில்லமா, அது என்ன விஷயம்னா…” என்று மீண்டும் பேசத் தொடங்கியவனை,
“தேவ்… நான்தான் எந்த விளக்கமும் எனக்குத் தேவை இல்லன்னு சொன்னனே… நீ வரும்போது அந்தப் பொண்ணையும் அழைச்சிட்டு வா… எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம்… இல்ல, எப்பவும் போல எல்லாமே உன் விருப்பம்தான்னு நினைச்சேன்னா, இப்பவே சொல்லிடு… எங்களுக்கு தேவ் கிருஷ்ணான்னு ஒரு புள்ளை இருந்தாங்கற விஷயத்தையே மறந்துடறோம்… என்ன, கூட்டிட்டு வருவ தான…” என்றார்.
அவர் குரலில் அதிகாரத்துடன், லேசாய் சிறு வருத்தமும் இழையோடியதை பிரம்மா உணர்ந்திருந்தான்.
“ம்ம்… சரிம்மா, நீங்க சொன்னபடியே செய்யறேன்…” அவன் சொல்லவும் அடுத்த வார்த்தை பேசாமல் அழைப்பு துண்டிக்கப்பட, ஒரு பெருமூச்சுடன் தன் முன்னில் தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவளை ஏறிட்டான் தேவ்.
“என்ன தேவ், அம்மா என்ன சொன்னாங்க… ஏன் ஒரு மாதிரி டென்ஷனாப் பேசினீங்க… எதுவும் பிரச்சனை இல்லையே…” ஓவியா பரபரப்புடன் கட்டிலில் அமர்ந்தவனின் தோளைத் தொட நிமிர்ந்தவனின் முகம் வாடியிருந்தது.
“கொஞ்சம் பிரச்சனைன்னு தான் தோணுது ஓவி…” என்றவனின் வார்த்தைகள் யோசனையைக் காட்டியது.
சித்திரப் பாவை நீயடி
நிதமும் நான் வரையும்
சிந்தனைகளின் வடிவம் நீயடி…
வரைகின்ற கோடெல்லாம்
உன் உருவத்தைக் காட்டிடும்…
எண்ணுகின்ற எண்ணமெல்லாம்
உன் நினைவை உணர்த்திடும்…
நான் உறங்கினாலும்
என்றும் என்னுள் உறங்கா
ஜீவஜோதி நீயடி…

Advertisement